Episode 4

ஆதினி அருகே அமர, அரிச்சந்திரன் எழுந்தவன், “தூங்கலையா?” என்று கேட்டான்.

“உங்களை காணும்னு வந்தேன்” என்று ஆதினி சொல்ல, “சும்மா உட்கார்ந்திருந்தேன்” என்று சொல்லி முன்னே சென்று கேட்டைப் பூட்டியவன்,

“வா தூங்கலாம்” என்று அவளோடு உள்ளே போனான். கதவினைப் பூட்டி வரவும் அரிச்சந்திரன் ஆதினிக்கு மறுபக்கம் படுக்க, அரியின் கண்கள் சோர்வில் மூடின. நேற்று காலையும் ஆதினி கல்லூரி சென்றது, இன்று மீண்டும் காலையிலிருந்து வேலை என்று உடல் சோர்வு அதிகம் அவனுக்கு.

ஆதினிக்கும் சோர்வு, ஆனாலும் வரும்போது ஒரு மணி நேரத்துக்கும் மேல் உறங்கியதில் இப்போது அவ்வளவு தூக்கமில்லை. அதை விட அருகே அரிச்சந்திரன். பேச வேண்டியது நிறைய இருந்தது, நிறைய பேசவும் தோன்றியது.

ஆதினிக்கு அவனிடம் தயக்கங்கள் கிடையாது, தயங்கும் வகையில் தலைவனும் நடந்ததில்லை!! அவளுக்கான மரியாதையை, உரிமையை முதல் நாள் இருந்து கொடுப்பவன், முக்கியமாக அவளின் விருப்பத்தை. அந்த துணிவில்,

“அரி!” என்று மெல்ல அழைத்தாள்.

“சொல்லும்மா” அவன் திரும்பி ஆதினி பக்கம் படுத்தபடி கேட்க, ஆதினி விட்டத்தைப் பார்த்தாள்.

“நான் என்ன தப்பு செஞ்சேன்? உங்கள பிடிக்காம நான் பிரியணும்னு சொல்லல, எனக்கு அப்போ எதுவும் பிடிக்கல. எனக்கு சொல்லத் தெரியல, உலகமே பிடிக்கல! ஹாஸ்டல் போகணும்னு கேட்டேன். மறுபடி அங்க போய் ரிலாக்ஸ் ஆனேன். உங்ககிட்ட சாரி கேட்டேன், ஆனாலும் ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க?” என்று ஆதினி குரல் மெல்லியதாய் இருந்தாலும் அழுத்தமாக கேட்டாள்.

“உனக்குப் பிடிக்கலனு போன, பிடிச்சிருக்குனு சாரி சொன்ன. ரைட்! அப்ப உன்னோட விருப்பம் மட்டும்தான் இல்லையா?” என்று அரி கேட்க,

“உங்களுக்குத்தான் என்னை பிடிக்குமே, இல்லை பிடிக்கலையா?” அவன் புறம் வேகமாய்த் திரும்பி ஆதினி கேட்டாள். நிச்சயம் பிடிக்காது என்று சொல்ல மாட்டான் என்று மிகப்பெரிய உறுதி, இல்லாவிட்டால் ஆதினிக்கு அந்த கர்வமிருக்காதே!

“உனக்கு என்ன தோணுதோ அதான்!” கொஞ்சம் புன்னகையோடு அவன் சொல்ல,

“அப்புறம் ஏன் என்னை ஹாஸ்டல்ல வந்து பார்க்கல, போன் பண்ணல… நான் உங்ககிட்ட சாரி சொல்றதுக்கு முன்னாடி வரை அடிக்கடி கால் பண்ணுவீங்க தானே?” என்று அத்தனை கேள்வியையும், ஆதங்கத்தையும் அரிச்சந்திரனிடம் கொட்டினாள் ஆதினி.

அரிச்சந்திரனின் ஒதுக்கம் அவளை ஓயவிடவில்லை.

“டயர்டா இருக்கு ஆதினி, நாளைக்குப் பேசலாம்” அரி கொட்டாவி விட்டபடி சோர்வாக சொல்ல, அதுவும் கூட ஆதினிக்கு அந்த நேரத்தில் தவறாகப்பட்டது. அவ்வளவு பிரியத்தைக் கொட்டத் தாத்தாவும் அப்பாவும் இருக்க, மனம் என்னவோ அரிச்சந்திரனை சுற்றியே வந்தது.

‘பிடிக்கலன்னா பிடிக்கல, பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு. அதானே சொல்ல முடியும்.?’ அவள் மனம் இதையே நியாயமென நினைத்தது. அவள் நியாயம் அவளுக்கு! அரிச்சந்திரனுக்கு? அவனுக்கென்று ஒரு மனம். அதிலும் ஆசைகள் இருக்கும் என்று அவன் இடத்தில் இருந்து ஆதினியால் யோசிக்க முடியவில்லை.

“இப்பவும் அவாய்ட் பண்றீங்க?” ஆதினி ஆதங்கமாக சொல்ல, அரிச்சந்திரனுக்கு ‘நைட்ல பஞ்சாயத்தா’ என்று கடுப்பாக வந்தது.

“ஏன் செய்யல, அந்த கேள்வி விடு. உனக்கு என்னை பிடிச்சது, ஓகே! நான் பார்க்கல, பேசல. நீ என்ன செஞ்சிருக்கணும்? பிஸியா இருக்கீங்களா? ஏன் வரலனு நீயா ஒரு கால் பண்ணியிருக்கலாம். செஞ்சியா? அதுக்கு பதிலா ஹாஸ்டல்ல நைட் கலாட்டா பண்ணின, க்ளாஸ் கட் அடிச்ச, வேணும்னே படம் பார்த்து வம்பு பண்ணின. இதெல்லாம் செஞ்சிட்டு என்னை உன் ஹெச்.ஓ.டி முன்னாடி நிக்க வைச்ச. இதுக்கெல்லாம் காரணம் என்ன?” என்று பொறுமையாகக் கேட்டான் அரிச்சந்திரன்.

காரணம்? என்னைத் தேடவில்லை என்ற ஏக்கம், ஆதங்கம். அதை எல்லாம் விட ஆதினி அரிச்சந்திரனுக்கு முக்கியமில்லையா என்ற கேள்வி.

‘இந்த அட்வகேட் எல்லா குற்றத்தையும் என் மேல சுமத்துறான் யுவர் ஹானர்’ என்று மனத்தோடு சொல்ல, அரி இவள் மௌனமாக இருக்கவும்,

“காரணம் உன் ஈகோ. உனக்கு பிடிச்சதுதான் நடக்கணும்” என்றான் குற்றச்சாட்டாக. ஆதினிக்கு சுருக்கென்றது, கூடவே கோபம் வந்தது.

“உங்களுக்கு ஈகோ இல்லையா? நான் ஏன் இதெல்லாம் செய்றேனு தெரிஞ்சும் என்னை அவாய்ட் பண்ணினீங்கதானே? சாரி சொல்லியும் என்னை இப்படி பண்றீங்க” என்று வருத்தமும் கோபமும் கலந்த பாவனையில் அவனிடம் ஒற்றை விரல் நீட்டி குற்றமாய்க் கேட்க, அரிக்கு இரவில் வாக்குவாதம் செய்ய எண்ணமில்லை.

அவனுக்கு இரவுகள் பிடித்தவை!

அரிச்சந்திரனுக்குக் கோபத்தில் பேசிவிடுவோம் என்று தோன்ற, அவளின் விரலை பிடித்தவன் அவள் வாய் மீது கொண்டு வைத்து,

“ஷட் அப் அண்ட் ஸ்லீப்!” என்றான் ஆணையாக. சொன்னவன் உடனே திரும்பிப் படுத்துவிட்டான். ஆதினிக்கும் அவன் அப்படி சொல்லிய பின் பேச மனமில்லை. இருவரும் நன்றாக உறங்கினார்கள். அடுத்த நாள் காலையில் அரிச்சந்திரன் சீக்கிரமே எழுந்து விட்டான். ஆதினியைப் பார்க்க அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். இரவில் அவனைக் கேள்வி கேட்டுவிட்டு இப்போது தூக்கத்தைப் பார் என்று எண்ணம் வந்த போதிலும்,

‘எக்ஸாமுக்குப் படிச்சு டயர்டாயிருப்பா, பொழச்சு போட்டும்’ என்று நினைத்தான். சிரிப்போடு அறையை விட்டு வெளியேறினான். தாத்தாவுக்கும் அவனுக்கும் டீ போட்டு விட்டு பேப்பரை எடுத்தபடி வாசலில் உட்கார்ந்தான். பேப்பரை படித்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு போனில் அழைப்பு வந்தது.

“என்னது? எந்த ஸ்டேஷன்? வரேன்” என்று அவசரமாய் சொல்லி வைத்தான். அவன் ஜாமீன் வாங்கிக் கொடுத்திருந்த ஒருத்தனை இன்று காலையில் கொலை செய்திருந்தனர். அது சம்மந்தமான அழைப்பு. இவன் சென்றாக வேண்டிய கட்டாயம். பேப்பரை அதன் இடத்தில் வைத்தவன், குளிக்க போனான். குளித்து முடித்தவன் தாத்தாவிடம்,

“ஒரு முக்கியமான வேலை தாத்தா, நான் போயாகணும். நீங்களும் ஆதினியும் சாப்பிடுங்க. நான் வர லேட்டாகும்” என்று அவசரமாக சொல்லி கிளம்பிப் போனான்.

ஆதினி எட்டு மணிக்கு எழுந்தாள். அறையை சுற்றி பார்க்க, ஹாஸ்டல் இல்லை என்று விளங்கியது. அவள் கண்கள் அறையை வலம் வர,

“ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும், மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருதினால் அது மதம் அல்ல.” என்று சுவரில் மாட்டியிருந்த அம்பேத்கரின் படத்திற்கு கீழ் இருந்த வாசகத்தைப் படித்தாள்.

“மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்று பெயர் கிடைக்குமென்றால் அந்த பெயர் உனக்கு தேவையில்லை.” இதுவும் இன்னொரு அம்பேத்கரின் படத்திற்கு கீழ் இருந்த வாசகம்.

அடுத்து இராணுவ உடையில் ஒருவர் இருந்தார். உற்றுப் பார்க்க ஃபிடல் காஸ்ட்ரோ! க்யூபா நாட்டின் புரட்சியாளர், ஆட்சியாளர்.

“நம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும் போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல.” படிக்கும்போதே மனத்தில் ஒரு உத்வேகம் தோன்றியது.

“உண்மைதான் இல்ல” வாய் விட்டு சொன்னவள் காந்தியின் புகைப்படத்தையும் கண்டாள். எல்லாம் ஒரு பக்க சுவரில் மட்டும் அடைத்தபடி இல்லாது அங்காங்கே தேவையான இடைவெளியில் ஓட்டியிருந்தது.

இதற்கு முன் இந்த அறையை அவள் உன்னிப்பாக கவனித்ததில்லை. ஆதினி அப்போதிருந்த மன நிலையில் இந்த அறைக்கு உறங்க மட்டுமே வருவாள். தனிமை, தனிமை அதை மட்டுமே தேடி ஓடினாள். இப்போது பார்க்க, ஜன்னலோரம் ஒரு ‘மணிப்ளாண்ட்’ செடி இருந்தது.

அங்கே ஒரு மர மேஜை இருக்க, அதன் மேல் ஒரு வெள்ளை போர்ட், அதன் கீழே அதில் எழுதுவதற்கு ‘மார்க்கர்’ மற்றும் எழுதியதை துடைக்க ஒரு துணி. அந்த வெள்ளைப் போர்ட்’ பக்கத்திலேயே அதனுடன் இணைத்தபடி ‘ஸ்டிக்கீ நோட்ஸ்’ ஓட்டி வைக்க ஒரு கறுப்பு சட்டம் இருந்தது. சின்னதாய் ஒரு மாத நாள்காட்டி.

“நீட்!” என்று கணவனை மெச்சிக்கொண்டாள் ஆதினி. இன்னொரு பக்கம் முழுவதும் அவனின் சட்டப்புத்தகங்கள். மெல்ல எழுந்தவள் அந்த தலைவர்களின் படத்தை பார்த்து,

“அட்வகேட் அரிச்சந்திரனுக்கு பிடிச்சது எல்லாமே லாயர், காந்தி, ஃபிடல் காஸ்ட்ரோ, அம்பேத்கர்… ம்ம்” யோசித்தவள் பாத்ரூம் சென்றாள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் ஹாலில் உட்கார்ந்திருந்த ராமசாமியைப் பார்த்தாள்.

“தாத்தா! டீ போட்டுத் தரவா?” ஆதினி ராமசாமி முன் நின்று கேட்க,

“அரி அப்பவே கொடுத்துட்டான்மா, நீ குடி. ஃப்ளாஸ்கில் வச்சிருக்கான்” என்றார்.

“அவர் எங்க தாத்தா?” ஆதினிக்கு இன்று சனிக்கிழமை. கோர்ட் விடுமுறை. எங்கே போனான் என்ற கேள்வி. அவனுடன் இருக்க, பேச அவ்வளவு ஆவல் கொண்டு இருக்க காணோம் என்றதும் சட்டென்று ஏமாற்றம்.

“ஏதோ அவசர வேலைனு போய்ட்டான்மா. வர லேட்டாகுமாம். நம்ம பொன்னி சமைச்சு வச்சிட்டா பாரு. போய் சாப்பிடு” என்றார்.

ஆதினியும் உண்டு முடித்து தாத்தாவோடு வந்து உட்கார்ந்தாள். நேற்றையப் படத்தை மீண்டும் யூடியூப்பில் போட்டு டிவியில் கனெக்ட் செய்தாள். என்றோ நிஜத்திலே இறந்துபோன சிவாஜி கணேசனுக்கு இன்று கண்ணீர் வடித்தார் ராமசாமி.

✅ End of Episode 4
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 6 days ago

Nice 

😂 1 more...
Mrs Beena loganathan Reader 6 days ago

ஆத்தங்கமும் இருக்கு 

ஆசையும் இருக்கு...
அரியுடன் பேசும் 
ஆவலும் இருக்கு
ஆனாலும் மனதிற்கு தயக்கம்
ஆதினி பக்கம்  கொஞ்சம் 
அளவு தான் புரிதல்...
அதிக அளவு ஈகோ....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top