Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 12

ஆதினிக்கு அரியைப் பிடித்தாலும் புரிந்து கொள்ள முடியவில்லை, இந்த அன்பிற்கு கொஞ்சம் அவகாசம் தேவையல்லவா? அது இன்னும் கிடைக்கவில்லை.

“சரி ஓவரா பீல் பண்ணாதீங்க, வேணும்னா இங்கேயே இருந்திடவா?” விளையாட்டாக ஆதினி கேட்க, அரிச்சந்திரன் சட்டென்று தெளிந்தான்.

ஆதினியின் தலையில் நன்றாகக் கொட்டியவன், “எப்படா எஸ் ஆகலாம் பார்க்கிறியா நீ?” என்று காதையும் சேர்த்துக் கிள்ள,

“பின்ன, பார்த்துட்டே நின்னா? சரி நம்ம ஆளுக்குப் பசலை நோய் வந்திருமோனு நினைச்சேன். இப்ப கொட்டினீங்க இல்ல, நீங்களா என்னை வந்திரு ஆதினினு ஒரு நாள் கெஞ்சுவீங்க பாருங்க. அப்போ பார்த்துக்கிறேன்” என்று ஆதினியும் கிண்டலாக சொல்ல,

“நோ சான்ஸ்!” என்று அரிச்சந்திரன் சிரித்தான். உண்மையில் அது நடக்கப் போகிறது என்று தெரியாமல்.

“ஒழுங்கா சாப்பிடு, பழமெல்லாம் வாங்கி வச்சிருக்கேன். உங்க காலேஜ் வெளியே இருக்க டீ கடையில டீ நல்லாயிருக்குனு டெய்லி நாலு வாட்டி குடிக்க கூடாது.” என்று அக்கறையாக அவன் பேச பேச ஆதினிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் அன்பு அடைத்தது. அவள் தேடிய, தொலைத்த, தொலைந்து போன அம்மாவின் அன்பினை கணவனிடம் உணர முடிந்தது.

ஆதினிக்கு இப்போது கேள்விகளே இல்லை. இத்தனை மாதம் அரிச்சந்திரனுக்கு ஆதினி முக்கியமில்லையா என்ற கேள்வி அவளைத் துரத்தியிருக்க, இந்த ஒரு வாரத்தில் கேட்காமலே அதன் பதில் தெரிந்தது. தன் அருகாமையை அவன் எவ்வளவு விரும்புகிறான் என்று ஆதினியால் உணர முடிந்தது.

சட்டென்று அவனை எக்கிக் கழுத்தோடு கட்டிக்கொண்டாள். அரியும் ஆதினியை அணைத்துக் கொள்ள,

“நீங்க சொல்றதால ஹாஸ்டலே போறேன், இதெல்லாம் கேட்க மாட்டேனா? ஆனா டீ மட்டும் நாலு வாட்டி இல்ல, மூணு வாட்டி குடிச்சிக்கிறேன் ப்ளீஸ்” என்று அவன் காதில் சொல்ல, அரியோ,

“அப்புறம் உன் உடம்புல ப்ளட் இருக்காதுடி, ப்ளாக் டீ தான் இருக்கும்.” என்று சிரித்தான்.

ஆதினியின் முகத்தைப் பிடித்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்ட அரிச்சந்திரன், வாஞ்சையாக முதுகில் தட்டிக் கொடுத்தான். அவனுக்குப் பிரிவாற்றாமையை ஆற்றும் வழி தெரியவில்லை.

மனைவியைக் கல்லூரியில் விட்டவன் வீடு வந்து, கோர்ட் கிளம்பினான். இரண்டு நாட்கள் வழக்கம் போல் சென்றன, ஆதினி இரவில் அழைத்து அரியிடம் பேசுவாள், அது மட்டுமே மாற்றம்.

************

அன்று வியாழக்கிழமை, அந்த பல்கலைக்கழகம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கியது. கல்லூரிக்கு எதிரே இருக்கும் கடையில் ஆதினியும் நிரஞ்சனும் இடைவேளையின் போது டீ பருக வந்தனர்.

“வரான் பாரு, பரதேசி” அவர்களை நோக்கி வந்த கிஷோரை திட்டினான் நிரஞ்சன்.

“டேய்! நீ ரொம்ப பண்ற. அவனும் நம்ம ப்ரண்ட்”

“ப்ரண்டா அவன், எனக்கு ஷெரினைப் பிடிக்கும் தெரிஞ்சும் இந்த நாய் அவ கிட்ட ஏன் பேசுறான்?” நிரஞ்சனின் குரலில் அவ்வளவு கோபம். நிரஞ்சன் ஆதினியுடன் பள்ளியில் படித்தவன், இளநிலை படிப்பை அவன் பாண்டிச்சேரியில் முடித்திருந்தான். ஆதினி, ஷெரின், கிஷோர் எல்லாரும் இளநிலை படிக்கும் போது நட்பானவர்கள்.

இப்போது நிரஞ்சனும் இங்கே சேர்ந்திருக்க, நால்வரும் ஒரு அணி. கிஷோர் வரவும், நிரஞ்சன் முறைத்தபடி பேசாமல் நிற்க, அவன் கண்டுகொள்ளவில்லை.

கிஷோர் பொங்கல் விடுமுறை முடிந்து இன்றுதான் வந்தான். அதனால் ஆதினியிடம் பேச வந்தான்.

“என்ன ஆன்டி? என்ன விட்டுட்டு வந்துட்ட?” என்று ஆதினியைக் கேட்க,

“கும்பகோணம் குசும்பா உனக்கு? பிச்சிடுவேன் படவா! யார்டா ஆன்ட்டி? உன்னை விட நாலு மாசம், ஆறு நாள், பத்து மணி நேரம் கழிச்சு பொறந்த நான் உனக்கு ஆன்ட்டியா டா?” என்று ஆதினி மூச்சைப் பிடித்துக் கொண்டு பேச,

“புள்ளி விவர புலிதான்மா நீ! ஆனாலும் கல்யாணம் ஆகிட்டாலே எங்களுக்கு நீ ஆன்ட்டிதான்” என்று விடாது வம்பிழுத்தான்.

“அப்புறம் நைட்டெல்லாம் ஒரே சங்கீத ஸ்வரமாமே, மாம்ஸ் என்ன சொல்றார்? எப்பவும் லீவ்வுக்குப் போக மாட்ட, இந்த வாட்டி ஒரு வாரம் டேரா போட்ட?” என்று விசாரித்தான்.

“நான் போனது இருக்கட்டும், நீ என்ன வெட்டி முறிச்ச, தலை பொங்கலுக்குப் போன மாப்பிள்ளை மாதிரி பத்து நாள் கழிச்சு வர?” ஆதினி டீயை ஊதியபடி கேட்க,

“நீ பொறுமையா கதையளந்துட்டு வா, நான் போறேன்” நிரஞ்சன் கத்திவிட்டு போனான்.

போகும் நிரஞ்சனை பார்த்தபடி, “ஊர்ல அறுவடை டி, அப்புறம் உன் ப்ரண்ட் என்னை ஏன் முறைச்சிட்டே இருக்கான்” என்று கிஷோர் கேட்க,

“ஷெரினோட நீ பேசுறது அவனுக்குப் பிடிக்கல” என்றாள் ஆதினி.

“நாங்க ப்ரண்ட்ஸ்தான் ஆதி, இவனா லூசு பக்கியாட்டம் கற்பனை பண்ணினா நான் என்ன செய்றது? அவ எங்கிட்ட பேச வந்தா பேசாதனு சொல்ல முடியுமா? இவன் இப்பவே இப்படி இருந்தா அவ எப்படி இவனுக்கு ஓகே சொல்லுவா?” கிஷோர் கேட்க,

“எனக்குத் தெரியும்டா, அவன் காதல் வந்த காட்ஸில்லாவாகிட்டான், அவனா மாறினா ஆச்சு. நீ வா, பூபால கிருஷ்ணன் சார் க்ளாஸ், வெளியே நிக்க வைப்பார்” என்று டீ க்ளாஸை வைத்து விட்டு நடக்க, கிஷோரும் உடன் நடந்தான்.

நிரஞ்சன் முன்பே வந்தவன் வழியிலேயே நின்றான். அவர்கள் வகுப்புக்கு போகும் வழியில் இருக்கும் மரத்தின் அருகே நிவாஸ் சார் கோபமாக ஷெரினிடம் பேசிக் கொண்டிருந்தார். ஷெரின் முகமும் அவர் பேச்சைக் கேட்டு கோபத்தில் சிவந்தது. ஆனால் பதில் பேசாது நின்றாள்.

இது நிரஞ்சனின் பார்வையில் பட, அருகே செல்லும் முன் ஆதினியும் கிஷோரும் வந்து விட்டனர். கிஷோரின் ‘எலெக்டிவ்’ வேறு என்பதால் அவன் வேறு வகுப்பு சென்று விட, ஆதினி நிரஞ்சனின் தோள் தட்டினாள்.

“அந்த நிவாஸ் சாருக்கு என்னவாம்டி? ஷெரின் கிட்ட ரொம்ப க்ளோஸா பேசுறார். என்னமோ சரியில்லை” என்றான் எரிச்சலாக.

ஆதினி அவன் பேச்சை பெரிதாக எடுக்கவில்லை.

“அவர் ‘பெட்’ ஷெரின், அவ கொடுத்த வேலையைக் கரெக்டா செய்வானு அவ மேல நல்ல ஒபினியன், அதனால அவகிட்ட நல்லா பேசுவார். சும்மா இப்படி அட்வாண்டேஜ் எடுக்க நினைக்காத நிரஞ்சன். அரி கூட என்னை இப்படி கன்ட்ரோல் பண்றது இல்ல, இவ உனக்கு ஓகே சொல்லாதப்பவே உனக்கு ஏன் இவ்வளவு உரிமை, கோவம்?” ஆதினி நண்பனைத் திட்ட,

“பொண்ணுனு அவளுக்கு சப்போர்ட் பண்றியா நீ? நான் அவ மேல இருக்க அக்கறையில பேசுறேன், இது கன்ட்ரோல் இல்லை” என்று நிரஞ்சன் பல்லைக் கடித்து கையை இறுக மடக்கி வேகமாக வகுப்புக்குள் நுழைய, ஆதினியும் அவன் பின்னே போனவள்,

“அது என்ன பொண்ணு, பையன்? எனக்கு ப்ரண்ட்னா எல்லாரும் பொது! இப்படி பேசி எங்கிட்ட வாங்கி கட்டாதடா நிரஞ்சா.” கோபமாக சொல்லியபடி ஆதினி அவள் இடத்தில் உட்கார, ஷெரின் சிறிது நேரத்தில் வகுப்புக்கு வந்தாள்.

“நிவாஸ் சார் எதுக்குடி உன்னைத் திட்டினார்?” என்று ஆதினி கேட்க,

ஒரு நிமிடம் யோசித்த ஷெரின், “ஏய், அவர் திட்டலாம் இல்லை, ஜஸ்ட் பேசினார்.” என்றாள் இயல்பாக. ஆதினியும் அத்தோடு பேச்சை விட்டாள்.

**********

அன்றிரவு ஒன்பது மணி போல், அரிச்சந்திரன் வீடு வந்தான். இன்னும் ஒரு நாள், நாளை மாலை ஆதினி வந்துவிடுவாள் என்று மனத்தை உற்சாகமாக வைத்தான். ராமசாமி இவன் வரவும்,

“தூக்கம் வருதுடா, நான் போறேன்” என்று சொல்லி அறைக்குள் போக,

“சரி தாத்தா” என்றவன் சட்டையின் பொத்தானைக் கழட்டியபடி, கொட்டாவி விட்டவன், வாயருகே கை வைத்து சொடக்கிட்டான்.

சட்டையைக் கழட்டியவன், டீவியில் சேனலை மாற்றிவிட, அவன் பார்வை வெளியே ஒரு நொடி பார்க்க, சட்டென்று ஒரு துள்ளல் அவனிடம்.

வேகமாக அவன் அறைக்கதவைத் திறக்க, ஆதினி முகம் கழுவிட்டு துண்டை வைத்து துடைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய்! ஆதினீயீயீய்!!!!!!” என்றவனிடம் அவ்வளவு உற்சாகம். சந்தோஷத்தை வெளிக்காட்ட அவனிடம் வார்த்தையே இல்லை. சட்டென்று இழுத்து அவளைக் கட்டிக்கொண்டான். என்னவோ ஓடி களைத்தவன் போல் நெடிய மூச்சு.

“எப்ப டி வந்த?” என்று இறுக்கமாக அணைத்து கேட்க,
அரி மகிழ்வான் என்று தெரியும், இந்த உற்சாகக் குரல், அன்பு கரத்தின் ஆசை மொழி எல்லாம் ஆதினி எதிர்ப்பார்க்கவில்லை.

எதிர்பாரா அவன் எதிர்ப்பார்ப்பு அல்லவா? காத்திருப்பு காதல் கொடுத்தாலும், எதிர்ப்பார்ப்பு நிறைய ஏக்கம் கொடுத்தது.

“அது நாளைக்கு இரண்டே க்ளாஸ் தான், ஸோ கட் அடிச்சிட்டு ஃப்ர்ஸ்ட் பஸ்ல சிட்டா பறந்து வந்துட்டேன்” ஆதினிக்கும் அரியின் உற்சாகம் தொற்றிக்கொள்ள, அவனின் வெற்றுத்தோள் பற்றியபடி சொன்னாள்.

“சொல்லியிருந்தா நான் வந்திருப்பேன்ல” அரி அவளை இழுத்தபடி மெத்தையில் சரிந்து கேட்க,

“சொல்லியிருந்தா இவ்வளவு சந்தோஷம் பார்த்திருக்க முடியாதே?” இவன் என்னை இவ்வளவு எதிர்ப்பார்த்திருக்கிறானா என்று ஆதினிக்கு அவ்வளவு ஆனந்தம். குரலில் கர்வத்தோடு சொல்ல, அரியிடம் மெல்லிய வெட்கம்.

“அதுவும் ரைட்!” என்றவன் பார்வையில் ஆவல் வழிந்தோடியது. ஆதினியின் நெற்றியில் சின்னதாக அரக்கு நிறத்தில் வட்டப்பொட்டு, அதனை அரியின் விரல் வருட, ஆதினி கண்கள் விரிய, அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அரிக்கு வார்த்தை வரவில்லை, நல்ல வேளை உணர்வினை சொல்லிட மொழியை தவிர மௌனமும் முத்தமும் பிரபஞ்சத்தில் இருக்கிறதே!

‘இவ என்னை கவுத்துட்டா!’ என்று மனத்தில் நினைத்தவன் ஆதினியின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான். இதழ் பிரியாது ஒரு பிரிய முத்தம்! பிரிவைத் தீர்க்கும் பெரிய முத்தம்! ம்! ம்ம்!

ரசித்துப் படிக்கும் கவிதையில், காற்புள்ளி கூட குறுக்கீடு! அப்படித்தான் ஆதினி ஸ்டைலுக்காக முன்பக்கம் வெட்டி இருந்த கற்றை முடி இருப்பக்கமும் பறந்து விழ, அது அரி முகத்தில் மோதியது.

அரிச்சந்திரன் கடுப்போடு ஆதினியின் முடியை ஒற்றை விரலில் பிடித்து,
“என்னடி இது ஸ்டைலா?” என்று கேட்டான். ஆதினி சிரித்தாள். சிரிப்பில் விரிந்த கன்னங்களைத் தட்டியவன், மெல்ல எழுந்து உட்கார்ந்தான். சில நிமிடங்களுக்குப் பின்,

“வா டி சாப்பிடலாம்” என்று அவள் கையைப் பற்றி இழுத்தான்.

ஆதினியும் எழுந்து வர, அரி சாப்பாடு எடுத்து வைக்க, இட்லியைப் பார்த்து ஆதினி முகம் சுருக்கினாள். இட்லி மட்டும் இருக்க, ஆதினிக்காக அரி ஆஃப் பாயில் செய்தான்.

கணவனை கன்னத்தில் கை வைத்து கண்களவு (சைட் அடிப்பது- சங்கத்தமிழ்) செய்தாள் ஆதினி.

வெளியே டீவியில் பாடல் ஓடிக்கொண்டிருக்க,

“நாளைக்குத்தான் வருவனு நினைச்சேன் டி” என்று அரி சொல்ல,

“நினைத்தால் போதும் வருவேன், தடுத்தால் கூட தருவேன்..” என்று பின்னணி குரலோடு பாடியவள் பின்பக்கமாய்க் கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

‘உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளித் தெளித்தேன்’

✅ End of Episode 12
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

எதிர்பார்க்கும் வேளை 

எதிர் பாக்காத  மனைவி
எதிரில் நின்றாள் 
எப்படி உணர 
என்று தெரியவில்லை .....
எதிர்பாரா முத்தமும்
என்னில் நீயடி என்ற
எண்ணமும் இருவரையும்
எளிதில் கரைத்து விட்டது...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top