Episode 20
பேருந்தில் வரும் போது அரிச்சந்திரனை சுற்றியது ஆதினியின் உள்ளம். அரி பேசாமல் இருப்பது கஷ்டமாக இருந்தது. எப்படியும் அரி புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.
ஆதினி ஏழு மணி விடுதிக்கு வந்துவிட்டாள். விடுதி வந்ததும், எடுத்த காரியம் நினைவில் வர கிஷோருக்கு அழைத்தாள்.
எட்டாயிரம் கிட்ட ஆதினி அவனுக்கு பணம் அனுப்பியிருக்க, “பேசாம கல்யாணம் பண்ணிட்டா நல்லா கல்லா கட்டலாம் போலயே டி” கிஷோர் போனில் ஆதினியிடம் கிண்டல் செய்தான்.
“அது எங்கப்பா காசுடா எரும, சொன்னதெல்லாம் வாங்கினியா இல்லையா?” ஆதினி பல்லைக் கடித்து கேட்டாள்.
“வாங்கியாச்சுடி, இந்த புர்க்கா எதுக்கு? எதாவது ட்ராமாவா?” என்று கிஷோர் கேட்க, பெருமூச்சு ஆதினியிடம்.
“டேய்! கேள்வியா கேட்காம நான் சொல்றது மட்டும் செய்!” என்று அதட்டியவள்,
“அந்த புர்க்காவை மாட்டிட்டு லேடீஸ் செப்பல் போட்டு, எட்டு மணிக்கு மேல எல்லாரும் மெஸுக்குப் போறப்ப எங்க ஹாஸ்டல் வா. அப்புறம் இந்த கையில எதாவது காப்பு மாட்டியிருந்தா கழட்டிடு, இல்ல மாட்டிப்ப” என்றாள்.
“ஏண்டி லூசு உளறுற? நான் ஏன் லேடீஸ் ஹாஸ்டல் வரணும்? என்னை வச்சு எதாவது ப்ராங்க் பண்ண போறியா? முதல்ல நீ ஏன் இன்னிக்கு ஹாஸ்டல் வந்த? மாம்ஸ் நீ இனிமே வர மாட்டேனு சொன்னாரு” கிஷோர் கடுப்பாகக் கேட்டான்.
“இங்க பாரு இப்ப ஒன்னும் கேட்காத, எனக்காக நீ ஒரு மண்ணும் செய்ய வேண்டாம். ஷெரினுக்காக செய்!” என்றாள் மிகவும் அழுத்தமான குரலில்.
‘ஷெரின்’ என்ற சொல் கிஷோரை வாய்மூட வைக்க, மறு வார்த்தை பேசாது ஆதினி சொன்னதை செய்தான். ஆதினி இன்று ஹாஸ்டல் வந்தது, இப்போது செய்ய சொல்வது, எல்லாம் யோசிக்க அவள் செயலுக்கு எதாவது காரணம் இருக்கும் என்று நண்பனால் உணர முடிந்தது.
எட்டு மணி போல், கூட்டமாக எல்லாரும் ‘மெஸ்’ செல்ல புர்க்கா அணிந்து தட்டுத் தடுமாறி கிஷோர் பெண்கள் விடுதி வர, ஆதினி கீழே வந்துவிட்டாள். சிசிடிவி இருந்தாலும் கிஷோர் மாட்டாமல் இருந்தான்.
“வாடி ரிஹானா” என்று இயல்பாக பேசியபடி கிஷோரின் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்து சென்றாள். அறைக்கு சென்றதும் ஆதினி கதவை அடைத்தாள்.
“அப்பாடா! ஏய் அடிவாங்காம என்னை இங்க இருந்து அனுப்பிடுவ இல்ல?” கிஷோர் முகம் மறைத்த துணியை எடுத்து கேட்க, ஆதினி வீட்டில் இருந்து எடுத்து வந்த பெட்ஷீட்டைக் காட்டினாள்.
“இதுல என்ன ப்ளட் ஸ்டேய்ன்ஸ்? பீரியட்ஸா?” கிஷோர் யோசித்தபடி உற்றுப் பார்த்தான்.
ஆதினி பொறுமையாக, “அதில்லடா, இது என்னோட பெட்ஷீட், ஷெரின் இறக்குறது முன்னாடி நாள் நைட் போட்டது, ஒரு நாள் மட்டுமே யூஸ் பண்ணினது. அப்புறம் ரூம்’கே போகல, ஷெரின் இறந்து கிடந்த சேர் பெட் விட்டு தள்ளி இருக்கும். நான் பார்த்தப்ப சேர் கிட்ட மட்டும்தான் ப்ளட் இருந்தது. புது பெட்ஷீட்ல ப்ளட் எப்படி வந்திருக்கும்? ” என்று கேட்க, கிஷோரின் விழிகள் விரிந்தன. கூடவே கோபமும்.
“ஒரு வேளை ஷெரின் சூசைட் பண்ணாம, அவளை வேற…யாராவது கொன்னு, சூசைட் மாதிரி செட் அப் பண்ணி பெட்’ல இருந்து நகர்த்தி சேர்ல உட்கார வச்சிருந்தா?” என்று கிஷோர் கேட்க,
“எஸ் அது சரியா இல்லையானு, இப்போ நம்ம க்ளீயர் பண்ண போறோம். சூசைட் பண்ணியிருந்தா அந்த இடத்துல மட்டும்தான் ப்ளட் இருக்கும், இல்ல பெட் கிட்ட கட் பண்ணிட்டு சேர்’ல வந்து உட்கார்ந்திருப்பாளா? அதுவும் டீப் கட் இன் த்ரோட், எப்படி மூவ் பண்ணியிருக்க முடியும்? அப்படி செஞ்சிருந்தா வழியில இருந்த ரத்தம் எப்படி மாயமாச்சு? இங்க தான் எனக்கு டவுட்!!” என்று தன் எண்ணத்தை ஆதினி பகிர்ந்தாள்.
“நீயே இவ்வளவு யோசிச்சா, போலீஸ் இன்வெஸ்டிகெட் பண்ணினப்ப இதெல்லாம் பார்த்திருக்க மாட்டாங்களா?”
“போலீஸ் சூசைட்’ன்னு நெனச்சதால ரத்தம் இருந்த இடத்துல உள்ள பிளட் மட்டும்தான் டெஸ்ட்’க்கு எடுத்திருப்பாங்க. இந்த பெட்ஷிட்ல இருக்க ரத்தம் மாதிரி, நம்ம அந்த ரூம் போய், வேற எங்க ரத்தம் இருந்திருக்கும்னு டெஸ்ட் பண்ண போறோம்.” என்று ஆதினி தீவிரமான குரலில் சொல்ல,
“இத்தனை நாள் கழிச்சு போய் பண்ணினா இருக்குமா?” கிஷோர் சந்தேகமாய்க் கேட்க,
“ஹைட்ரஜன் பெராக்சைட் போட்டு சுத்தம் பண்ணியிருந்தா கூட லூமினால் டிடெக்ட் பண்ணிடும். நாலஞ்சு வருஷம் அப்புறம் கூட இது வேலை செய்யும், நம்ம ரத்தத்தில் இருக்க ஹீமோக்ளோபின்’ல ஐயர்ன் இருக்கும்(Iron- Fe) அது லூமினால் ஸ்ப்ரே பண்ணினா கேட்டலிஸ்டா வேலை செய்யும். இதை வச்சு ரொம்ப கம்மி ட்ரேஸ் ப்ளட் (trace of blood) இருந்தா கூட கண்டுபிடிக்கலாம்”
(cataylst- வினையூக்கி: வேதியயலில் ஒரு வினையை வேகப்படுத்த உதவும் பொருளை வினையூக்கி என்பர். a substance that makes a chemical reaction happen faster)
“பதினொரு மணிக்கு மேல ஹாஸ்டல்’ல எல்லாரும் ரூம் லாக் பண்ணி தூங்கிடுவாங்க. அண்ட் அந்த ரூம் பக்கத்துல இருக்க இரண்டு ரூம்லயும் ஆளுங்க இல்ல. என் ரூம் மேட் பூஜாவும் கீழே ரூம்ல இருக்கா” என்று ஆதினி சொல்ல கிஷோர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான்.
இருவரும் பதினொரு மணி வரை அமைதியாக இருந்தனர். பதினொரு மணிக்கு ஆதினி வெளியே வர, எங்கும் நிசப்தம்! காற்றில் மரங்கள் ஆடும் சத்தம் மட்டுமே. சில இடங்களில் தெருவிளக்கின் வெளிச்சம் இருந்தது. ஒரு சில மாணவர்கள் தூரத்தில் நடை பயில்வது தெரிந்தது.
பெண்கள் எல்லாரும் அறைக்குள் அடங்கியிருந்தனர். ஷெரினின் மறைவுக்குப் பின் யாரும் இரவில் பெரிதாக நடமாடுவதில்லை. ஆதினி கிஷோரிடம்,
“க்ளவுஸை போட்டுக்கடா, மாஸ்க்கையும் மாட்டு. அந்த பேக்கை எங்கிட்ட கொடு” என்று அவனோடு அவர்களின் பழைய அறையை நோக்கி நடந்தாள். இருவருக்கும் இதயம் தடதடத்தது. உள்ளே அச்சமிருந்தாலும் உண்மையைத் தேடிடும் உள்ளுறுதி உந்தியது.
“ரூம் பூட்டியிருக்கேடி? உடைச்சிடவா?” கிஷோர் கேட்க,
“உடைச்சா மாட்டிக்க மாட்டோமா? இந்த ரூம் எங்க ரூம்டா, அதே பூட்டு சாவிதான், முதல்லயே செக் பண்ணிட்டேன்.” என்றதும் தோழியைப் பெருமையாக பார்த்தான்.
மெல்ல கதவைத் திறந்து இருவரும் உள்ளே போனார்கள், கிஷோர் லைட்டை ஆன் செய்ய போக,
“எரும, போன் டார்ச் ஆன் பண்ணு” என்ற ஆதினி கதவை சாற்றினாள்.
“என்னடி லாக் பண்ணிட்ட?” என்று கிஷோர் பயத்துடன் பார்த்தான். ஒரு உயிர் போன இடமல்லவா?
“மூடிட்டு டார்ச் அடி, பேசாத” என்றவளுக்கு, ஷெரின் உயிரறற்று கிடந்தது நினைவில் வர, கண்களில் நீர் சேர்ந்தாலும், தோழிக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தாள். அவளின் நண்பர்களை யாராவது சும்மா சீண்டினாலே விடாதவள், உயிரைப் பறித்திருக்க, அவர்களை விடவே கூடாது என்ற உறுதியும் பகையும் அவளிடம்.
அறைக்குள் நுழைந்ததும் இடப்பக்கம் மூன்று சிறிய கட்டில்கள் இருக்க, அதற்கு எதிரில் வலப்பக்கத்தில் படிக்க டேபிளும் ஒரு நாற்காலியும் உண்டு. கட்டில்கள் முடிவடையும் இடத்தில் சிறிது இடமுண்டு, அதன் அருகே பாத்ரூம். இதற்கிடையே பால்கனி செல்ல வழி. சிறிய பால்கனி.
கிஷோர் டார்ச் ஆன் செய்ய, ஆதினி பெட் அருகே நின்று,
“பெட்ஷீட்டை இப்படி விரிச்சிருந்தேன், குத்துமதிப்பா இங்க ப்ளட் இருந்தது.” என்று யோசித்தாள்.
கிஷோரிடம், “டார்ச்சை ஆஃப் பண்ணிடு” என்று உத்தரவிட்டாள்.
“இருட்டுல நீயே தெரியலடி”
“பயப்படாம அதே இடத்துல இரு. இருட்டுலதான் இது நல்லா தெரியும்” ஆதினி சொல்ல, கிஷோரும் அமைதியாக இருந்தான்.
பெட்’டின் அருகே தரையில் சரியான அளவில் லூமினால் திரவத்தை ஸ்ப்ரே செய்தாள். ஆனால் ஒரு மாற்றமும் இல்லை. ஆதினிக்கு புரியவில்லை.
“என்னடி? அப்போ இது ஷெரினோட ப்ளட் இல்லையோ? சூசைட் தானா?” கிஷோர் குழம்ப, ஆதினியும் அவன் பேச்சில் குழம்பினாள்.
ஆதினியின் பெட் அருகே ரத்தம் இருந்த தடயம் இல்லை, அப்படியென்றால்.? ஆதினி அப்படியே கட்டிலில் உட்கார்ந்தாள். கிஷோர் ஷெரினுடைய கட்டிலில் அமர்ந்தவன், ஆதினி கட்டில் மேல் வைத்திருந்த லூமினால் பாட்டிலை எடுத்து பார்த்தான்.
“இந்த கெமிக்கல் சுத்தமா துடைச்ச ரத்தத்தைக் கூட காட்டிக் கொடுத்துடுமா? இல்ல உன் கெமிஸ்ட்ரி அறிவுல தப்பு இருக்கா?” என்று பேச்சுவாக்கில் அந்த ஸ்ப்ரேயரை அழுத்தி விட, கீழ் நோக்கி இருந்த அதன் மூடியில் இருந்த துளிகள் ஷெரினின் கட்டிலுக்கும் பாத்ரூமுக்கும் இடையில் இருந்த இடத்தில் தெளிக்கப்பட்டது.
“அச்சோ, தெளிச்சிட்டேனே” என்று கிஷோர் பதற,
ஆதினி எரிச்சலுடன், “எரும, வாய்ல கண்ல பட்டா அலர்ஜி” என்று திட்டினாள்.
“ஆதினி, இங்க பாருடி” என்று சட்டென கிஷோர் கத்த,
“மெதுவா பேசு பரதேசி” என்று ஆதினி அதட்டினாலும் என்னவென்று பார்த்தாள்.
அவ்வறையில் அடர்த்தியான இருட்டு. குறு வெளிச்சமும் இல்லாத இருள். சில நொடிகளில் கிஷோர் தவறுதலாக லூமினால் ஸ்ப்ரே செய்த இடம் நீல நிறத்தில் ஒளிர்ந்தது. நீல நிறத்தில் ஒரு இரசாயன ஒளிர்வு தெரிய (chemiluminescence) சட்டென போனை எடுத்த ஆதினி அதனை வீடியோவாக பதிவு செய்தாள்.
“என்னடி ப்ளூவா மாறிடுச்சு? இவ்வளவு நேரம் ஒன்னுமே தெரியல, அப்போ இந்த இடத்துல தான் ஏதோ நடந்திருக்கு” என்று கிஷோர் சொல்ல,
“ஆமா கிஷோர், சரி வா போகலாம், ரூம்ல போய் பேசுவோம்” என்று ஆதினியும் கிஷோரும் வந்த தடம் தெரியாமல் அறையை பூட்டி வெளியேறினார்கள்.
அறைக்குள் சென்றதும்,
“எந்த பொறம்போக்குடி நம்ம ஷெரினை இப்படி செஞ்சது? அந்த நாயை வெட்டிப் போடணும். பட் போலீஸ் எப்படி சூசைட்னு சொன்னாங்க, எனக்குப் புரியலயே” என்றான் தலையைப் பிடித்துக்கொண்டு.
“நம்ம ஷெரினை கொன்னவனை சும்மா விட போறதில்லை கிஷோர்” என்ற ஆதினியின் விழிகள் ரௌத்திரத்தில் சிவந்தன.
“இது சூசைட்னு போலீஸ் க்ளோஸ் பண்ணீயிருக்காங்கன்னா ஏன்? யார் அங்க இருந்த ரத்தத்தை மறைச்சது? அப்ப கண்டிப்பா இது தற்கொலை இல்லை. அண்ட் லூமினால் போட்டதால அந்த ப்ளட்’ல இருக்க டி.என்.ஏ டெஸ்ட் பண்ண முடியாது.”
“நீ என்ன செய்ற இந்த பெட்ஷீட்’ல இருக்க ப்ளட்டை லேப்’ல கொடுத்து டெஸ்ட் பண்ண சொல்லு” என்றதும்,
“அது ஷெரின் ப்ளட்தானே, ஏன் டெஸ்ட் பண்ணனும்?” என்று கேட்டான் கிஷோர்.
“ஷெரின் ப்ளட்’னு நம்ம சொன்னா நம்பிடுவாங்களா? பெட்ல அவ ப்ளட்தான் இருந்ததுனு நம்ம ரிப்போர்ட் காட்டணும்டா, சேர்’ல செத்தவ ரத்தம் அங்க எப்படி போச்சுன்னு நம்ம கேட்கலாம். பாத்ரூம்கிட்ட என்னவோ நடந்திருக்கு, எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ செய், பணம் கேட்டாலும் கொடுத்திடலாம். பாத்ரூம் கிட்ட அவளைக் கொன்னுருக்காங்க” என்று ஆதினி சொல்ல,
“அதெல்லாம் நான் தெரிஞ்சிவங்களை வச்சு டெஸ்ட் பண்ணிடுறேன் டி. சீக்கிரமே அந்த கல்ப்ரீட்டை பிடிக்கிறோம்” என்றான் கிஷோர் வேகமாக.
“ஹாஸ்டல் ரூம்ல போய் இதை செஞ்சதால, நம்ம ஷெர்லாக் ஹோம்ஸ்’னு நினைச்சிட்டியா டா? போலீஸ் ஹெல்ப் இல்லாம நம்ம ஒன்னும் செய்ய முடியாது, நிறைய எவிடன்ஸ் அவங்க கிட்டதான் இருக்கும். முதல்ல நம்ம கிட்ட இருக்கிறதை பார்ப்போம். இந்த விஷயம் யார்கிட்டயும் சொல்லாத” என்று ஆதினி கூறவும்,
“சரிடி, அந்த பெட்ஷீட்டைக் கொடு. இப்ப என்னை எப்படியாச்சும் வெளியே அனுப்பு” என்றான் கிஷோர் பதட்டமாக.
“டேய், புர்க்கா போட்டிருக்க தானே? நம்ம லைப்ரரி பக்கத்துல இருக்க பாத்ரூம்கிட்ட சிசிவிடி இருக்காது, அங்க போய் மாத்திடு” என்றாள் இலகுவாக.
“திமிருடி” என்று திட்டிய கிஷோர், எப்படியோ தப்பிப் பிழைத்து பத்திரமாக அறைக்கு சென்றான்.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. அன்றே ப்ளட் டெஸ்ட் கொடுத்தான். சனிக்கிழமை மாலை போல் ரிசல்ட் வந்தது.
“ரிசல்ட் வந்துடுச்சுடி” என்று கிஷோர் ஆதினிக்கு அழைத்து சொல்ல, விடுதியில் இருந்த ஆதினி உடனே தனியே வந்தாள்.
“சொல்லுடா?” என்றாள்.
கிஷோர் அவளிடம், “நம்ம டெஸ்ட் கொடுத்த ப்ளட் ஷெரினோடது இல்லை” என்றான். ஆதினிக்கு அவன் சொன்னதில் அதிர்ச்சி.
“வாட்? அவளோடது இல்லையா? ஒழுங்கா விசாரிச்சியா?” என்று ஆதினி திட்டினாள்.
“இது ஒரு பொண்ணோட ப்ள்ட் டைப் இல்லை” என்று கிஷோர் கூற,
“என்னடா சொல்ற? அப்போ யாரோடது?” என்று ஆதினி பரபரப்பாகக் கேட்டாள்.
“அந்த ப்ளட் ஒரு male blood, AB+ ப்ளட் குரூப்” என்றவன் குரலில் தடுமாற்றம்.
கிஷோரின் யூகம் பயமாக இருந்தது.
“என்னடா பேசாம இருக்க?” என ஆதினி போனில் கத்தவும்,
“நம்ம நிரஞ்சன் ப்ளட் குரூப் கூட AB+” என்ற கிஷோரின் குரலில் தவிப்பு, தடுமாற்றம், பயம் எல்லாம் இருக்க, நண்பர்கள் இருவரிடமும் அடுத்த நொடி பேச்சில்லை.
✅ End of Episode 20
Very nice
நிரஞ்சனா????