Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 21

நிரஞ்சன் என்று கிஷோர் சொல்லவும் ஆதினிக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. ஆதினி அமைதியாக இருக்க, கிஷோர் அவளிடம்,

“என்னடி? அமைதியா இருக்க? உன் ப்ரண்ட் பத்தி சொன்னதும் உண்மை கசக்குதா?” என்று பல்லைக் கடித்தான்.

“நிரஞ்சனை சந்தேகப்படுறியா? அவன் நம்ம ப்ரண்ட் டா. அவன் ஷெரினை லவ் பண்ணினான், இப்படி கொலை… அதுவும் கழுத்தறுத்துக் கொடூரமா நெவர்” என்று ஆதினி மறுத்து பேச,

“ஒருவேளை இவன் கொல்லாம அவளை அந்த நிலைமைக்குத் தள்ளியிருந்தா? இவன் சரியான சைக்கோ டி, நம்ம ப்ரண்டா இவன் நல்லவன். நீயே யோசி, எல்லா கொலைகாரனும் அவன் குடும்பத்துக்கு நல்லவனா இருந்திருப்பாந்தானே? இவன் ஷெரின் விஷயத்துல ரொம்ப மோசம் ஆதி, நான் பேசினா கூட தாங்காதவன். ஷெரின் இறந்த அன்னிலிருந்து அவனை பார்த்தியா? ஆளே சரியில்லை” என்று கிஷோர் அவன் யூகங்களை சொல்ல, ஆதினியிடம் பதில் இல்லை.

நிரஞ்சன் அவளுக்கு ஆண் நண்பன் என்ற அடையாளத்துக்குள் எல்லாம் வரமாட்டான். ஆண் பெண் பேதம் தெரியும் முன்னரே மூன்றரை வயதில் தொடங்கியது அவர்கள் நட்பு. இவளிடம் அன்பு காட்டினாலும் உரிமையோ ஆதிக்கமோ செலுத்தியதில்லை. ஷெரின் விஷயத்தில் அப்படி இல்லை, எப்போதும் ஒரு உரிமைகோறல் இருக்கும்.

“ஊர்ல காதலிச்ச பொண்ணுங்களை கொலை பண்ணினவன் எல்லாம் காதல்னுதான் காரணம் சொல்லுவானுங்க, எனக்கும் நிரஞ்சன் ப்ரண்ட். அண்ட் ஹாஸ்டல் டே ஃப்ங்க்ஷன் அப்போ நிரஞ்சன் கொஞ்ச நேரம் காணும். இப்போ யோசிக்கும்போது இதெல்லாம் தோணுது ஆதி” என்ற கிஷோருக்கும் நிரஞ்சனாக இருக்கக் கூடாது என்ற வேண்டுதலே.

“ப்ளட் குரூப் வச்சு மட்டும் நம்ம என்ன செய்ய முடியும் கிஷோர்? முதல்ல நம்ம யுனிவர்சிட்டில இரண்டு மாசம் முன்னாடி ஒரு ப்ளட் டோனேஷன் கேம்ப் நடந்தது இல்லையா? அந்த லிஸ்ட் வாங்கு. வேற யாரு AB + குரூப்னு தெரிஞ்சுக்கலாம்” என்றாள் ஆதினி.

“நீ சொல்றதும் சரி, ப்ளட் குரூப் லிஸ்ட் NSS ஹெட் கிட்ட நான் விசாரிச்சு பார்க்கிறேன்” என்றான்.

“வேற என்ன செஞ்சு அந்த கொலைகாரனை பிடிக்கிறது ஆதி?” என்று கொலை செய்தவன் மீது அடங்காத ஆத்திரமும் கண்டுபிடிக்க வேண்டுமே, அவன் தப்பி விட கூடாதே என்ற கவலையும் சேர கிஷோரின் கேள்வி வந்தது.

“இதுக்கு மேல என்ன செய்றது தெரியலடா, போலீஸ் கேஸை சூசைட்’னு க்ளோஸ் பண்ணீட்டாங்க, இதை ஒபன் பண்ணனும்னா என்ன செய்யணும்னு அரி கிட்ட கேட்க போறேன்” என்றாள் ஆதினி.

“ஹே! சூப்பர்டி, மாம்ஸ் இருக்கார்ல. இன்னொரு விசயம், நம்ம ஷெரின் கேஸ் ஹாண்டில் பண்ணின இன்ஸ் மாம்ஸ்க்குத் தெரிஞ்சவர்டி. அன்னிக்கு அவங்க பேசினதை பார்த்தேன்.” என்று கிஷோர் சொல்ல,

“இப்போ இவ்வளவு யோசிக்கிறோம், அன்னிக்கு ஷெரினை நம்ம காப்பாத்தாம விட்டுட்டோமே டா” என்று சொல்லிய ஆதினியின் குரல் கமறியது. வெட்டவெளியினை வெறித்த அவள் கண்களில் நீர் திரையிட்டது. எப்போதும் இந்த வளாகத்தில் இணை பிரியா பறவையாய் அவளுடன் சுற்றிய அவள் பிரியமான தோழி இன்று காற்றாகி விட்டாளே.

ஆதினி இப்படி பேச, கிஷோர் உடனே,
“நமக்குத் தெரிஞ்சு இப்படி நடக்கலயே டி, அட்லீஸ்ட் அவளுக்கு நியாயம் கிடைக்கணும். நீ முதல்ல மாம்ஸ் கிட்ட சொல்லு. ஓகே? இப்படி நம்ம டைம் வேஸ்ட் பண்ணினா எவிடன்ஸ் இல்லாம போயிடும்” என்றான்.

“சரிடா, நான் ஊருக்குக் கிளம்புறேன். நீ அந்த ப்ளட் குரூப் டீடெய்ல்ஸ் வாங்கி வை” என ஆதினி கூற,

கிஷோர், “ஆனாலும் உனக்குத் தைரியம்தான், இஷ்டத்துக்கு ஹாஸ்டலுக்கு வர, போற. மாம்ஸ் கிட்ட அன்னிக்கு சண்டைப் போட்டு வந்துட்ட, இன்னிக்கு பூசை கன்ஃபார்ம்! அடி வாங்கினா போட்டோ எடுத்து அனுப்புங்க டோலி. அடி வலிச்சாலும் அழுதுடாதீங்க, நம்ம ப்ரஸ்டீஜுக்கு இழுக்கு ஆகிடும்” என்று பேசி அவளை சகஜமாக்கினான்.

*****************

சனிக்கிழமை மாலை அரிச்சந்திரனுக்கு வழக்கு சம்மந்தமாக நிறைய வேலை இருக்க, வீட்டிற்கு சீக்கிரமே வந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். வந்தவுடன் டீ போட்டு அறைக்குள் நுழைந்தவன் சட்டப்புத்தகத்தில் கவனம் வைத்து, யோசனையில் மூழ்கியபடி டீயைப் பருகினான்.

வழக்கின் யோசனையில் இருக்க, தாரகையிடமிருந்து அழைப்பு.

“டேய் அரி, என்னடா நேத்து ஆதினி வரலையாம், தாத்தா சொல்றார்?” என்று எடுத்தவுடனே கேட்க, ஆதினி மேல் கோபத்தில் இருந்தவன் எரிச்சலனான்.

‘இந்த தாத்தாவுக்கு நான் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்’ என்ற கடுப்பு.

“அவ வரலன்னா அவளை கேளுடி, என்னை ஏன் கேட்கிற? இல்லை தங்கச்சினு கட்டி வச்சானே உன் புருஷன் அவனை கேளு.” என்று கத்தினான்.

தாரகைக்கு அண்ணன் கோபமாக இருக்கிறான் என்று புரிந்தது.

“சரி, நான் அவளையே கேட்கிறேன்” என்று தாரகை சொல்ல,

“போடி, அவ கிட்ட நீ ஒன்னும் கேட்க வேண்டாம். எல்லாம் நான் கொடுக்கிற இடம், அந்த மகாராணிக்கு என்ன இஷ்டமோ செய்யட்டும்” என்றான் சலிப்பாக.

“டேய் அரி, என்னடா ஊடலா? பொண்டாட்டியை மிஸ் பண்றியா” தாரா கிண்டலாக கேட்க,

“வந்தேனு வை பிச்சிடுவேன் உன்னை. வேலை இருக்கு, நீ போனை வைடி” என்று அதட்டியவன் போனை வைத்துவிட்டான். டீயை வேகமாக குடித்து முடிக்க, தாரா ஆதினிக்கு அழைத்து பேசியவள்,

‘உன் மகாராணி வீட்டுக்கு வந்துட்டே இருக்காளாம்’ என்று அண்ணனுக்கு செய்தி அனுப்பினாள்.

அரிச்சந்திரன் பார்த்துவிட்டு பதில் அனுப்பவில்லை. வேலையில் மூழ்கிப்போனான். ஆதினி வருவதும் போவதும் அவள் விருப்பமாக இருக்க, அரியிடம் ‘நான் சொல்லியும் கேட்காது போனாள்’ என்று கோபம் மட்டுமே.

ஆதினி ஏழு மணி போல் வந்துவிட்டாள். ராமசாமிக்குப் பேத்தியைப் பார்க்கவும் சந்தோஷம்.

“என்னடா ராஜாத்தி நீ சொல்லாம போய்ட்ட, இந்த தடிப்பய உன்னை பேசினானா?” என்று கேட்க,

“தாத்தா! அவர் ஒன்னும் சொல்லல, எனக்கு காலேஜ்ல நிறைய வேலை. அதான் போய்ட்டேன், பாருங்க லீவுக்கு வந்துட்டேன். அதுக்குள்ள என் புருஷனை பேசுனீங்களா நீங்க?” என்று அவரை முறைத்து நிற்க,

“அட என் பேத்திக்குக் கோவம் வருதா?” என்று ராமசாமி பொக்கை வாயோடு சிரிக்க, ஆதினியும் சிரித்துவிட்டாள்.

மெல்ல அறைக்குள் போக, அரிச்சந்திரன் கைகள் நோட்டில் எதையோ எழுதிக்கொண்டிருக்க, கண்கள் லேப்டாப் ஸ்கீரினில் இருந்தது. அவன் மேஜையில் நிறைய காகிதங்கள், கோப்புகள்.

அரிச்சந்திரனின் அருகே சென்று ஆதினி நிற்க, அவன் திரும்பியும் பார்க்கவில்லை. வேலையாக இருக்கிறான் என்று புரிந்த ஆதினி பாத்ரூம் சென்று, உடை மாற்றி தாத்தாவோடு பேசிக்கொண்டிருந்தாள். இரவு உணவு ஏற்கெனவே தயாராக இருக்க, ஆதினி தாத்தாவுக்கு எடுத்து வைத்தாள். அரியை சாப்பிட அழைக்க, சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலையில் மூழ்கினான். ஆதினி கேட் பூட்டி அறைக்குள் வந்தாள். மெத்தையில் உட்கார்ந்தபடி அரிச்சந்திரனை பார்த்துக் கொண்டு இருக்க, பதினொரு மணி போல் வேலை முடித்து வந்து சோர்வோடு படுத்தான்.

அரிச்சந்திரன் வரவும் ஆதினி அவன் அருகே படுத்துக்கொண்டு,
“அரி..” என்று அழைத்தாள்.

அவன் அசையவில்லை என்றதும் மீண்டும், “அரி… கேட்குதா?” என்று அவனை பார்த்தபடி படுக்க, அரிச்சந்திரன் கண்களை மூடியிருந்தான். இவள் குரல் கேட்டாலும், பதில் பேசவில்லை.

கடுப்பானவள் அவனை குறுகுறுவென பார்த்தாள், சட்டென்று அவன் இடையில் அழுத்தி கிள்ளி வைக்க, கண்களை மூடியிருந்த அரிச்சந்திரன் துள்ளி எழுந்தான்.

“அடியே! உன்னை” என்று பல்லைக் கடித்தவன் அவளை பிடித்து முதுகிலே அடி வைத்தான். ஆதினி முதுகைத் தேய்த்துக் கொண்டு வலியில் கண்களை சுருக்கினாள். அரிச்சந்திரனோ முறைத்தான்.

“அதான் கிள்ளினதுக்கு அடிச்சீட்டிங்களே, அப்புறம் என்ன முறைப்பு? இப்போ எனக்குப் பேசணும்.” என்றாள்.

“எல்லாம் உன் இஷ்டத்துக்கு பண்ற, இப்போ என்ன பேசணும். எனக்கு இஷ்டமில்லை, தள்ளி படுடி” என்று அரிச்சந்திரன் அதட்ட,

“ஆமா, என் இஷ்டம்தான்! நீங்களும் என் இஷ்டம்” என்றபடி முகத்தை அவன் தோளில் அழுத்தி வைத்தாள். அரிச்சந்திரனுக்கு மிகுதியான கோபம்.

“ஆதினி! தள்ளி படு. நைட்ல என்னை கத்த விடாத” என்றான் கோபத்தை அடக்கிய குரலில். அந்த குரல் ஆதினியை விலக வைக்க, அவளுக்கும் கோபம் வந்தது.

சட்டென்று விலகிவிட்டாள். அரியின் ஒதுக்கம் பிடிக்கவில்லை, அதே நேரம் ஷெரின் விஷயம் பேசியே ஆக வேண்டும்.

அதனால் “ஓகே! நான் என் ஹஸ்பண்ட் அரிச்சந்திரன் கிட்ட பேசல, அட்வகேட் அரிச்சந்திரன் கிட்ட முக்கியமான விசயம் பேசணும்” என்றாள் மிடுக்காக.

“அர்த்த ராத்திரியில எந்த அட்வகேட்டும் பேச மாட்டான், எதுனாலும் ஆபிஸ்ல வந்து பேசு” என்ற அரி கண்களை மூட,

ஆதினியோ, “ஷெரின் சூசைட் பண்ணிக்கல, அது மர்டர்” என்று நேராக விஷயத்தை சொன்னாள். அப்படி சொல்லவும் அரி கண்களை பட்டென்று திறந்தான். திரும்பிப் படுத்து ஆதினியைப் பார்க்க, அந்த பார்வை புரிந்து ஆதினி எல்லாவற்றையும் சொன்னாள்.

“வாட், ஹாஸ்டல்’ல அந்த ரூம் போனியா? லூமினால்’ அது என்ன கெமிக்கல்?” என்று அரி படுத்திருந்தவளை கையைப் பிடித்து எழுப்பி விட்டான்.

“எனக்கு ஷெரின் இறந்த இடத்துக்கும் பெட்’டுக்கும் டிஸ்டன்ஸ் இருக்கும்போது, அங்கிருந்து ரத்தம் எப்படி தெறிச்சிருக்கும்னு சந்தேகம். அதான் அதை டெஸ்ட் பண்ணி கன்ஃபார்ம் பண்ண ஹாஸ்டல் ரூம் போனேன். லூமினால் ரத்தமிருந்த தடயத்தை அழிச்சா கூட கண்டுபிடிக்கிற ஒரு organic compound. ஃபாரன்ஸிக்ஸ்’ல யூஸ் பண்ணுவாங்க” என்று ஆதினி சொல்ல, அரிச்சந்திரன் மனைவியின் முகத்தையே பார்த்தான்.

“201, 204” என்று அரி சொல்ல,

“அப்படின்னா?” ஆதினி முகம் சுருக்கிக் கேட்க,

“ஐபிசி 201, 204 Tampering of evidence, bailable தான் பரவாயில்லை. காப்பாத்திடுறேன்” நக்கலாக சொன்னவனை ஆதினி முறைத்தாள்.
(IPC- 201, 204 சாட்சியங்களை கலைத்தல், அழித்தல், பொய்சாட்சி)

“என்னடி முறைப்பு?” என்று ஆதினியின் தலையில் கொட்டியவன்,

“உனக்கு இப்படி சந்தேகம் வந்தா எங்கிட்ட சொல்லணும், இல்லை ஷெரின் வீட்ல சொல்லி போலிஸ் எங்கொயாரி பண்ண சொல்லணும். நீயா போய் இப்படி பண்ணியிருக்கியே, இந்த ஜர்னலிஸ்ட் எல்லாம் இப்படித்தான்” என்றான் கடுப்பாக.

“போலீஸ் ஒழுங்கா எங்கொயரி பண்ணியிருந்தா அன்னிக்கு க்ரைம் சீன்ல இருந்த ப்ளட்டை அழிச்சிருக்காங்க, அதை ஏன் கண்டுபிடிக்கல? இவங்களுக்கு சூசைட்னு சொல்லி ஈசியா கேஸை முடிக்கணும். உங்ககிட்ட சொல்ல கூட எனக்கு எவிடன்ஸ் தேவைப்பட்டுச்சு, என்னோட கெஸ்தானே அது?” என்று ஆதினி கேட்க, அதுவும் அரிச்சந்திரனுக்கு சரியென பட்டது.

தன் தாடியை ஒற்றைக்கையால் தடவிய அரி,
“ஸோ தி பாயிண்ட் இஸ், ஷெரின் சூசைட் பண்ணியிருந்தா அவ்வளவு தள்ளியிருந்த பெட்ல, ரத்தம் தெறிக்க வாய்ப்பில்லை. சூசைட் மாதிரி செட் அப் பண்ணியிருக்காங்க சொல்ற, கரெக்ட்?” என்று கேள்வி எழுப்பினான்.

“ஆமா, அந்த ப்ளட் டெஸ்ட் பண்ணினா அது ஷெரினோட மேட்ச் ஆகல, அது ஒரு Male, அண்ட் AB+ குரூப்” என்று ஆதினி அதையும் சொல்ல அரிச்சந்திரன் புலன்கள் கூர்மையடைந்தன.

“க்ரைம் சீன்’ல கிடைக்கிற பயலாஜிகல் எவிடன்ஸ் கொலை செய்யப்பட்டவங்க, செஞ்சவன், இல்லை சாட்சி இவங்களோடதா இருக்கும். பட் ஷெரின் இறப்பு மர்டர்னா மோடிவ் இருக்கணுமே? ஷெரின் மேல யாருக்கு கொலை பண்ற அளவுக்குக் கோவம் இருக்கும்?” என்ற அரி யோசனையாக மனைவியைக் கேட்க,

“காலேஜ்ல, ஹாஸ்டல்ல என் மேல காண்டா இருக்கவங்க நிறைய பேர் இருக்காங்க. பட் ஷெரின் எல்லாரோடவும் நல்லா பேசுவா. கிஷோர் ஒன்னு சொன்னான்…” என்றாள் ஆதினி தயக்கத்துடன்.

“என்ன சொன்னான்?” அரி கேட்க,

“நிரஞ்சன் ப்ளட் கூட AB+, கிஷோருக்கு அவன் மேல டவுட்” என்றாள். நிரஞ்சன் பற்றி சொன்னதும்,

அரிச்சந்திரன் லேசாய் சிரித்தபடி, “அடியே! ஜான் கென்னடி, ஜாக்கி சான் கூட AB+. வெறும் ப்ளட் குருப் மேட்ச் வச்சு சொல்ல முடியுமா?” என்றான் இலகுவாய்.

“அதைத்தான் நானும் சொன்னேன், பட் ஷெரின் தலைவலிக்குதுனு ஹாஸ்டல் போன கொஞ்ச நேரத்துல நிரஞ்சனும் ஆடிட்டோரியம்ல இல்ல, அவன் அவளை ரொம்ப லவ் பண்ணினான் அரி. கண்டிப்பா இப்படி செஞ்சிருக்க மாட்டான்” ஆதினி தவிப்போடு சொல்ல, இதை கேட்டதும் அரி மறுப்பாக தலையசைத்தான். அவன் அட்வகேட் அறிவும், அனுபவமும் அவனை ஒரே பக்கம் சாயவிடவில்லை.

“விசாரணைனு வந்துட்டா எல்லாரையும் சந்தேகப்படணும் ஆதினி, வேற என்ன பண்ணி வச்சிருக்க அதையும் சொல்லு” என்று கேட்க,

“வேற ஒன்னும் பண்ணல அரி. இப்போ போலீஸ் மறுபடியும் அந்த ரூமை டெஸ்ட் பண்ணி என் பெட்ஷீட்ல இருந்த மாதிரி வேற இடத்துல அக்யூஸ்ட் ப்ளட் இருந்தா, அதை வச்சு DNA Test பண்ணலாம்.”

“உன் பெட்ஷீட்ல இருந்த ப்ளட் வச்சே பண்ணலாமே?” அரி கேட்க,

“இல்லை, இவ்வளவுதான் அந்த ப்ளட் சாம்பிள் வச்சு கண்டுபிடிக்க முடிஞ்சது. அதுவும் அது ப்ரைவேட் அவ்வளவு வசதி இல்லை. இதுக்கே நாங்க ரொம்ப செலவு பண்ணி ரிஸ்க் எடுத்தோம்” என்றதும்,

“நீயும் கிஷோரும் பெர்மிஷன் இல்லாம அந்த ரூம் போனது தப்பு, க்ரைம் சீன்ல இருந்த ப்ளட்டை ப்ரைவட் லேப்ல டெஸ்ட் பண்ணவே கூடாது. இல்லீகல் எல்லாமே!” என்று திட்ட,

“பெட்ஷீட்ல ரத்தம் இருக்கிறது ஒழுங்கா பார்க்காம, க்ரைம் சீன்ல இருந்த ஒரு பொருளை எங்கிட்ட கொடுத்துட்டாங்க தானே? அப்புறம் என்ன?” என்றாள் ஆதினி கடுப்பாக.

“சிசிடிவி இருக்குனு சொன்னியே, அப்போ ஷெரின் இறந்த அன்னிக்கு மாடிக்கு யார் போனாங்கனு ரெகார்ட் ஆகியிருக்குமே?”

“சிசிடிவி பழசு வர்க் ஆகலனு எடுத்துட்டாங்க, ஷெரின் இறந்தப்ப ஹாஸ்டல்’ல சிசிடிவி இல்ல” என்றாள்.

“ஒகே, வேற யார் மேல சந்தேகம் நிரஞ்சன் தவிர?”

“ஆஹ்ன்! அரி ஷெரினுக்கு லாஸ்ட் மந்த் கையில் அடிப்பட்டதுல அது நார்மல் ஆக்ஸிடெண்ட் இல்ல, வேணும்னே செஞ்சது” என்றவள் சொத்து விவகாரத்தை சொன்னாள்.

“சொத்துக்காக கொலை செய்ய வாய்ப்பிருக்கு, பட் அவங்க ஊர்ல செய்யாம இங்க ஏன் செய்யணும்?” என்று ஆதினியிடம் கேட்க,

“அவங்க ஊர்ல செஞ்சா சந்தேகப்படலாம், இங்க செஞ்சா அதுக்கு வாய்ப்பில்லயே? ஆள் வச்சு செஞ்சிருப்பாங்களோ” என்றாள். மனைவியின் அறிவுக்கூர்மை புரிந்தாலும்,

“நீ சொல்ற மோடிவ் சரி, மத்த விஷயம் இடிக்குதே. உன் ஹாஸ்டல் டே’னு அவங்களுக்கு எப்படி தெரியும், அப்படியே தெரிஞ்சாலும் ஷெரின் அந்த நேரம் தலைவலிச்சு ரூம் போவானு எப்படி தெரியும்? முக்கியமா ஹாஸ்டல் சிசிடிவி வொர்க் ஆகலனு எப்படி தெரியும்?”

“சொத்துக்காக ஆதினி ரிலேடிவ்ஸ் மர்டர் செய்யணும்னா கண்டிப்பா ப்ளான் பண்ணி பண்ணியிருப்பாங்க. ஹாஸ்டல்’ல நடந்திருக்குன்னா கொலைகாரன் உங்க யுனிவர்சிட்டில உள்ள ஒருத்தர்..” என்றான் அரிச்சந்திரன் உறுதியாக.

“நிரஞ்சனை சொல்றீங்களா?” ஆதினி ஐயமும் அச்சமும் போட்டியிட்ட விழிகளுடன் கணவனை கேட்க,

“அவனா இருக்கவும் சான்ஸ் இருக்கு.” என்றான்.

சில நிமிடங்கள் அமைதி நிலவ,

“நான் தேவையில்லாம இதெல்லாம் செய்றேன் நினைக்கிறீங்களா அரி?” என்று கணவனின் கருத்து அறிய கேட்டாள்.

அரியும் பொறுமையாக, “செய்றது தப்பில்லை, கொஞ்சம் நிதானமா செய்யலாம்” என்றான்.

“இதையெல்லாம் செஞ்சா ஷெரின் திரும்ப வரமாட்டானு எனக்குத் தெரியும். பட் அவ சாவுக்கு ஒரு நியாயம் வேண்டாமா? அவளை இல்லாம ஆக்கிட்டு சுதந்திரமா சுத்துறவங்களை எதாவது செய்யணும்.” என்று கண்கள் சிவக்க, ஆதினி ரௌத்திரமாக சொல்ல, அரி மெல்ல புன்னகைத்தான்.

“கண்டிப்பா செய்யலாம்! லட்சுமணன் தாத்தா பேரன் சக்திவேல் இருக்கானே, அவன்தான் இந்த கேஸ் ஹாண்டில் பண்ணினான். ஃப்ர்ஸ்ட் அவன் கிட்ட Inquest Report (விசாரணை அறிக்கை), Autopsy Report(பிரேத பரிசோதனை அறிக்கை) இரண்டும் வாங்கி பார்க்கணும் ஆதினி, அப்போதான் எனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.”

“சக்திவேல் கிட்ட நீயும் உன் ப்ரண்டும் செஞ்ச வேலையும் சொல்லணும். ஷெரின் பேரண்ட்ஸ் திரும்ப விசாரிக்க சொல்லி கம்ப்ளையண்ட் பண்ணணும்” என்று கைகளை கோர்த்து என்ன செய்வதென்று அரிச்சந்திரன் யோசிக்க, ஆதினி அவன் என்ன சொல்வான் என்று பார்த்தபடி இருந்தாள்.

ஆதினி முகம் பார்த்தவன், “உடனே எல்லாம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. சூசைட் இல்லன்ற ஆங்கிள்’ல போலீஸ் யோசிக்க ஆரம்பிச்சா கண்டுபிடிச்சிருவாங்க, தூங்குடி” என்றான்.

அடுத்த நாள் ஞாயிறு, அரிச்சந்திரன் அவன் வழக்கு விசயமாக அலுவலகம் சென்றான். சக்திவேலை பார்க்க வேண்டும் என்று சொல்ல, சென்னையில் இருப்பதாக சொன்னவன் மறுநாள் பார்க்கலாம் என்றான்.

ஆதினியிடம் பேச அரிக்கு நேரமில்லை. வீடு வந்த பின்னும் அவன் வேலையில் மூழ்கிவிட்டான். ஆதினிக்கு அரியோடு இணக்கமாக இருந்துவிட்டு விலகியிருப்பது பிடிக்கவில்லை. அதே நேரம் ஷெரின் விஷயம் அவளை உறங்கவிடாமல் யோசனையில் வைத்தது.

மாலை நேரம் ஆதினி கிஷோரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“ப்ளட் குரூப் டீடெய்ல்ஸ் கிடைச்சதா?” என்று கேட்க,

“அந்த என்.எஸ்.எஸ் ஹெட் ஊருக்குப் போயிருக்கான். அவன் நாளைக்குத்தான் வருவான்” என்ற கிஷோரிடம் அரிச்சந்திரனிடம் சொல்லியதை சொன்னாள்.

“ஹேய்! என்னடி சொல்ற? இதை விசாரிச்சா நம்ம பெர்மிஷன் இல்லாம ரூம் போனதை நோண்டுவாங்களா?” என்றான் அதிர்வோடு.

“அரி பெயில் வாங்கித்தருவார்டா, கவலைப்படாத” என்று ஆதினி சமாதானம் சொல்ல,

“என்னமோ பரோட்டா வாங்கித் தருவார்ன்ற மாதிரி சொல்ற, உன்னையெல்லாம் ஷெர்லாக் ஹோம்ஸ்’ ரேஞ்சுக்கு நினைச்சு வந்தேன் பாரு, என்னை சொல்லணும்” என்று சண்டையிட்டான்.

“டேய்! நம்ம ஜர்னலிஸ்ட், இப்படி வழக்குக்கு எல்லாம் பயப்படக்கூடாது.” என ஆதினி சொல்ல,

“இப்படி சொல்லியே சமாளி, அப்புறம் நாளைக்கு காலேஜ் வருவியா? இல்லை ஷெர்லாக் ஹோம்ஸ் வேலையா” என்றான் கிஷோர் கடுப்பாக.

“வருவேன், பத்து மணிக்குத்தானே க்ளாஸ்” ஆதினி சலிப்பாக இழுத்தாள்.

“பத்து மணியா? எரும மாடே, எட்டு மணிக்கு புவனேஸ்வரி மேம் க்ளாஸ் இருக்கு, அட்டெண்டன்ஸ் இல்லன்னா மேம் உண்டு இல்லனு ஆக்கிடுவாங்க” கிஷோர் கத்த,

“டேய் தடிமாடே! மண்டே நிவாஸ் சார் க்ளாஸ் தானே?” ஆதினியும் பதிலுக்குக் கத்தினாள்.

“நிவாஸா? அந்த சார்..” என்றவனின் பேச்சு சில நொடிகள் அப்படியே நின்றது.

“என்னடா?” ஆதினி எரிச்சலில் கத்த,

கிஷோரோ, “ஆதி! அவர் ரொம்ப நாளா லீவ்டி, சரியா சொல்லணும்னா அந்தாளை ஷெரின் இறந்த அன்னிக்குத்தான் நான் கடைசியா பார்த்தேன்.” என்றான் பரபரப்பான குரலில்.

“நிஜமா சொல்றியா? நல்லா தெரியுமா? அப்போ அவரா இருக்குமா?” என்ற ஆதினியிடமும் பரபரப்பு.

✅ End of Episode 21
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago
எல்லோரிடமும் சகஜமாக பேசி சிரித்து விட்டு 

எல்லோரையும் சந்தேகிக்க வைத்து விட்டு போய் விட்டாயே ஷெரின்.....

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top