Episode 28
சக்திவேலுக்கு நிவாஸின் இறப்பு செய்தி கேட்டதிலிருந்து தலைவலித்தது. கழுத்தை பின்புறம் சாய்த்து, வலக்கையால் அழுத்தி விட்டவன் கண்களை மூடி யோசித்தான்.
பேராசிரியர் நிவாஸ் கோகாயின் இறப்பு தற்செயலான விபத்தா இல்லை திட்டமிட்டதா என்று அவன் போலிஸ் மூளை கேள்வி கேட்டாலும் ‘தமிழ் நாட்டுல இருக்க கேஸை பார்க்கவே தலை சுத்துது, இதுல அசாமா?’ என்ற எண்ணம் வேறு.
ஆதினியின் லேப்டாப்பில் ஷெரினின் கோப்பைப் படித்தவனுக்கும், அரியின் சந்தேகம் வரத்தான் செய்தது.
இப்படியும் இருக்கலாம் என்ற எண்ணமே, நிவாஸிடம் பேசிய பின் அது இன்னும் வலுப்பெற்றது. நிவாஸிற்கு காவல்துறையின் மீது இருந்த நம்பிக்கையில்லாத தன்மை, கான்ஸ்டபிள் சொல்வது போல் டி.எஸ்.பியினால் விளைந்ததாக கூட இருக்கலாம்.
நிவாஸ் ஏன் டி.எஸ்.பியை சந்திக்க வேண்டும்? என்ன காரணம்? அதுதான் ஷெரினின் மரணத்திற்கான விதையோ?
நிரஞ்சனிடம் பேசியதில் நிவாஸின் மீது சந்தேகம் இருந்தாலும், அவர் அன்று ஊரில் இல்லை என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருந்தன. சென்னையில் இருந்து புறப்பட்டதுக்கும் குவாஹத்தி சென்றதுக்கும் விமான நிலைய சாட்சியங்கள் இருந்தன.
தனது நண்பன் கண்ணனுக்கு அழைத்த சக்தி,
“டேய், நான் ஒரு மெயில் ஐடி தரேன். அதை ஹேக் பண்ணி தரியா? நான் சொல்ற நேம்ல, இல்லை கீவர்ட்ல (keywords) மெயில்ஸ் இருக்கா பார்க்கிறியா?” என்று கேட்டதும் அவன் கடுப்பாகி விட்டான்.
“சக்தி! என்னடா நினைச்சிட்டு இருக்க? உன் டி.எஸ்.பிக்கு நான் செய்ற வேலை தெரிஞ்சா என்னோட வேலைக்கே வேட்டு டா” என்று கத்த,
“இது டி.எஸ்.பி மெயில் இல்லை. இந்த மெயில் ஐடி காரன் செத்துட்டான். ஸோ தாராளமா ஓபன் பண்ணு” என்றதும் கண்ணன் தேடி தருகிறேன் என்றான்.
“நேத்து கேட்ட போன் லோகேஷன் டீடெய்ல்ஸ்?” சக்தி தயக்கமாக இழுத்தான். அவன் வேலைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்ப அதிகாரத்தில் இதெல்லாம் அவனுக்குக் கிட்டாது, அதற்கு மேலதிகாரியின் அனுமதி வேண்டும். அவனே ஊழல்வாதியாக இருக்க, சக்திக்கு நண்பனிடம் கேட்பதை தவிர வேறு வழியில்லை.
“அது ரெடியா இருக்குடா. நீ சொன்ன ரெண்டு நம்பர்ஸும் வேற வேற நாள்ல ஒரே லோகேஷன் காட்டுச்சு. same coordinates” என்றதும் சக்திக்கு அதிர்ச்சி.
ஷெரினின் எண்ணும், டி.எஸ்.பி’இன் எண்ணும் ஒரே இடத்தை வெவ்வேறு நாட்களில் காட்டியதா? உண்மை அவனை வழி நடத்தி செல்வது போல் உணர்ந்தான். நாம் தேடுவதுதான் நம்மை தேடி வருமல்லவா?
கண்ணனிடம் கேட்க, “ஆமாடா, போன மாசம் இந்த டேட்’ல விக்டிம் நம்பர் அதே லோகேஷன்ல ஒரு பதினைஞ்சு நிமிஷம் காட்டுது. டி.எஸ்.பி நம்பர் அதுக்கு முன்னாடி ஒரு தடவ, அதுக்கு அப்புறம் இரண்டு தடவ அதே இடம் காட்டுதுடா” என்றான்.
“எந்த இடம்?” என்ற சக்தியின் கேள்விக்கு கண்ணன் சொன்ன பதிலில்,
சக்திக்கு, “அந்த இடத்துல டி.எஸ்.பிக்கு வேலை இருக்கு, சரி. ஷெரின் ஏன் போகணும்?” என்ற சிந்தனை.
சக்தி அடுத்து நிரஞ்சனை தேடி போனான். நிரஞ்சனிடம் நிவாஸின் மரணம் பற்றி சொல்ல, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“நீ நிவாஸ் ஷெரின் கிட்ட சண்டை போடுற மாதிரி பேசினாருனு சொன்னதை வச்சும், அவரோட ப்ளட் குரூப் மேட்ச் ஆகுறது வச்சும் அவரை நான் சந்தேகப்பட்டேன் நிரஞ்சன். பட் கோவமா பேசினா கொலை செஞ்சிருப்பார்னு அர்த்தமில்ல. ஷெரின் இறந்ததா அட்டாப்ஸீ ரிப்போர்ட்ல சொல்ற டைம்’ல அவர் ஊர்லயே இல்லை. ரொம்ப க்ளீயர் alibi (அலிபி-அயலிட சான்று, ஒரு சம்பவம் நடந்த போது வேறு இடத்தில் இருந்ததற்கான சாட்சி) இருக்கு. அண்ட் ஷெரினோட ப்ராஜக்ட், ஐ மீன் அவளோட dissertation (ஆய்வுக்கட்டுரை) எதை பத்தி தெரியுமா?” என்று கேட்க, நிரஞ்சனுக்கு அது தெரியவில்லை. சக்தி சொன்னதும் நிரஞ்சனுக்கு சட்டென்று மின்னலாய் ஒரு எண்ணம்.
“இதை நான் ஏன் சொல்றன்னா எனக்கு நான் எதையோ மிஸ் பண்ணிட்டேன் தோணுது. நீ ஷெரினை லவ் பண்ணியிருக்க, கண்டிப்பா அவ யாரோட பழகுறானு உனக்குத் தெரிஞ்சிருக்கும். நான் சொல்ற இந்த எட்டு பேர்ல, ஒன்னு நீ, இன்னொன்னு நிவாஸ். குமரன் சாரை விட்டுடு, அவருக்கும் அலிபி இருக்கு… ” என்று ஷெரினோட சம்மந்தப்பட்டவர்களில் ரத்த மாதிரி பொருந்தியவர்களை சக்திவேல் சொன்னான்.
சக்தியிடம், “ஏன் இந்த எட்டு பேர்?” என்று நிரஞ்சன் கேட்டான்.
“யுனிவர்சிட்டில AB+ இருக்கவங்க 30 பேர். அதுல 17 பேர் லேடீஸ். அப்போ மீதி இருக்க 13 பேர்ல ஒருத்தன்….” என்ற சக்திக்கு அப்போதுதான் எதை விட்டோம் என்று புரிந்தது.
“நான் ஷெரினோட சம்மந்தப்பட்டவங்கனு யோசிச்சேன். அவ க்ளாஸ்மேட்ஸ், அவளோட டிபார்ட்மெண்ட்னு..” என்ற சக்தி தலையில் அடித்துக் கொண்டான்.
“அப்போ நீ சொல்லு, நான் விட்ட இந்த அஞ்சு பேர்ல யாரு மேல உனக்கு டவுட்? ஷெரின் இவங்க யார் கூடவாச்சும் பேசி பார்த்திருக்கியா?” என்று பரபரப்பாகக் கேட்க, நிரஞ்சனுக்கு சக்தி காட்டிய பேப்பரில் இருந்த பெயர்களை பார்த்ததுமே பொறி தட்டியது.
“இவங்க ரெண்டு பேரையும் பார்த்திருக்கேன். ஷெரின் பேசியிருக்கா, இதுல ஒருத்தன் மேத்ஸ் டிபார்ட்மெண்ட் சீனியர், இன்னொருத்தன் பி.எச்.டி ஸ்டூடண்ட்” என்றான் நிரஞ்சன்.
“ஆனா, ஷெரின் ஏன் இதெல்லாம் செய்யணும்? ஏன் அவளை கொல்லணும்?” என்ற நிரஞ்சனின் கேள்வியில் ஆதங்கம் ஆத்திரம் என்று உணர்ச்சி கொந்தளித்தது.
”அதை அவனுங்களை சொல்ல வைக்கிறேன் நிரஞ்சன்” என்று சக்தி விடைபெற்றான்.
ஷெரினோடு சம்மந்தப்படாதவர்கள் என்று ஐந்து பேரை அவன் ஒதுக்கிவிட்டு, மீதம் எட்டு ஆண்கள் மீதுதான் கவனம் வைத்தான். நிரஞ்சனிடம் பேசிய பின் அந்த ஐவரின் மீதும் சந்தேகம் வந்தது.
இப்போது அவர்களை விசாரிக்க பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். எப்படியும் இந்த தினகரன் மோப்பம் பிடித்து விடுவார். என்ன செய்வது என்று தெரியாமல், பக்கத்திலிருக்கும் கான்ஸ்டபிளிடம் புலம்பினான்.
அவரோ, “டி.எஸ்.பி கிடக்குறான் தம்பி, நம்ம ஏ.டி.எஸ்.பியை பார்ப்போம். அவர் ரொம்ப நல்ல மாதிரி.” என்றார்.
“அட போங்கண்ணன், அவருக்கு மேல அந்த எஸ்.பி இருக்காரே. ஏ.டி.எஸ்.பியும் எஸ்பி பேச்சுதானே கேட்கணும்” என்றான் சலிப்பாக.
“ஏன் தம்பி, யார் என்னவா இருக்காங்கன்றதை விட அவங்க என்ன செய்ய முடியும்ன்றது முக்கியமில்லையா? இப்போ நான் இந்த யோசனை சொல்ற மாதிரி ஏ.டி.எஸ்.பி வேற யோசனை சொல்லலாமில்ல, அவருக்கு யாராச்சும் தெரியலாமே?” என்று கேட்க,
“நல்ல நேரம் பார்த்து பல்ப் கொடுக்கிறீங்கண்ணே, சரி அவரை பார்ப்போம். உங்களுக்கு அவரை எப்படி தெரியும்?” என்று விசாரித்தபடி யாருக்கும் சொல்லாமல் கான்ஸ்டபிளோடு ஏ.டி.எஸ்.பியைப் பார்க்க சென்றான் சக்திவேல்.
அவரை பார்த்தவனுக்குப் புது நம்பிக்கை பிறக்க, பல்கலைகழகம் சென்று, விட்டுப்போன அந்த ஐந்து பேரையும் விசாரிக்க அழைக்க, பி.எச்.டி செய்யும் அந்த மாணவன் போலிஸ் வளாகத்தில் நுழைந்து விசாரிப்பது தெரிந்து தப்பி ஓடிவிட்டான்.
சக்தி கையில் தப்பிய ஓடிய அர்ஜுன் சிக்கினால் தோலை உரித்திருப்பான். அவ்வளவு கோபம், எவ்வளவு சுற்ற விடுகிறான். விசாரித்ததில் அந்த அர்ஜுன் ஒன்றும் பெரிய ஆளாக தெரியவில்லை, பெரிய பின்புலம் இல்லை. இவனை காப்பாற்றவா அந்த எஸ்.பி, டி.எஸ்.பி எல்லாம் நிரஞ்சனை பலிகடா ஆக்க பார்க்கிறார்கள் என்று தோன்றியது.
ஜீப்பை வேகமாக செலுத்திக் கொண்டே யோசித்தவனுக்கு, ஷெரினும் டி.எஸ்.பியும் சென்றதாக அவன் நண்பன் கண்ணன் சொன்ன இடம் ஞாபகத்தில் வர,
“கண்டுபிடிச்சிட்டேன் அண்ணே!” என்று பக்கத்தில் இருந்த ஏட்டய்யாவிடம் கத்தி சொல்ல,
“என்ன தம்பி?” என்றார் அவரும் ஆர்வமாக.
“டி.எஸ்.பியை யுனிஃபார்ம் கழட்ட வைக்கிற வழி” என்றான் பல்லைக் கடித்து.
“அண்ணே, அந்த தப்பிச்சு போன பரதேசி நம்பர் பார்த்து ஏன் நம்பருக்கு வாட்ஸ்ப பண்ணுங்க” என்று உத்தரவிட்டவன், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தான்.
“ரொம்ப அர்ஜெண்ட்! நான் சொல்ற நம்பரோட கரெண்ட் லோகேஷன் சொல்லுங்க, ஏடி.எஸ்.பி ஆர்டர்” என்று அடித்துவிட, அவர்களும் உடனே சொல்ல அந்த இடம் தஞ்சையின் துணை மேயர் நாகராஜனின் டைல்ஸ் ஃபாக்டரிக்குப் பின்புறம் உள்ள ஒரு குடோன்.
அர்ஜூன் தப்பி சென்று நாகராஜனிடம் தன்னை காப்பாற்றும்படி கெஞ்சிக் கொண்டிருக்க, சக்தி ஏ.டி.எஸ்.பி பரத்வாஜுக்கு அழைத்து எல்லா விவரமும் சொல்ல அவரும் அந்த இடம் வந்துவிட, ஷெரினின் கொலை வழக்கில் தஞ்சையின் துணை மேயர் நாகராஜன், அவள் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பயிலும் மாணவன் அர்ஜூன், அவனின் காதலி ஸ்ரேயா உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்து, தனியே எல்லாம் வைக்கவில்லை. ஸ்டேஷன் அழைத்து வந்து முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயார் செய்தான்.
இந்த செய்தியறிந்து டி.எஸ்.பி தினகரன் நேரடியாக ஸ்டேஷன் வந்து விட்டான். வந்தவன் சக்தியை மிரட்ட,
“என்ன தினகரன்? நீங்க ஏன் அக்யூஸ்டுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க?” என்று பரத்வாஜ் கேட்க,
“விஷயம் புரியாம பேசாதீங்க சார், செத்துப்போன பொண்ணும், அரெஸ்ட் ஆகியிருக்க பையனும் சக்திவேலோட சொந்தக்கார பொண்ணோட ப்ரண்ட்ஸ், இவனை காப்பாத்த என்னமோ பண்றான் இவன். அப்படியே அரெஸ்ட் பண்ணினாலும் டெபுடி மேயரை அரெஸ்ட் பண்ண என்ன காரணம்? இவரை அரெஸ்ட் பண்ண சாலிட் எவிடன்ஸ் இருக்கா? என்னை கேள்வி கேட்கிற மாதிரி உங்களால எஸ்.பியை கேட்க முடியுமா?” என்று தினகரன் சீறினான்.
“அது நான் பார்த்துக்கிறேன், பக்கா எவிடன்ஸ் இருக்கு. அவங்களுக்கு மட்டுமில்லை, கொலையை சூசைடா மாத்த நீங்க ஹெல்ப் பண்ணினதுக்குக் கூட சூடா எவிடன்ஸ் இருக்கு, அதை கோர்ட்ல தரோம்” என்றான் பரத்வாஜ். பரத்வாஜுக்கு அழைப்பு வர, அவன் வெளியே சென்று பேசிய நேரத்தில் தினகரன்,
“டேய் இன்ஸ்பெக்டர், என்ன ஆடுறியா? முதல்ல நாகராஜனை ரீலிஸ் பண்ணு. அந்த பையன் அர்ஜுன் மேல என்ன ஆக்ஷன் வேணும்னாலும் எடு. தேவையில்லாத வேலை பார்க்காத, எஸ்பிக்கு தெரிஞ்சு இங்கதான் வந்துட்டு இருக்கார்.” என்றான் ஆத்திரத்துடன்.
சக்தி தினகரனை கண்டுகொள்ளவே இல்லை.
“அண்ணே, ஸ்ட்ராங்கா எஃப்.ஐ.ஆர் போடுங்க.” என்று காவலரிடம் சொல்ல, தினகரன் சக்தியை அடிக்க கை ஓங்க, ஒங்கிய கையை ஒரு கை பிடித்தது. தினகரனின் கன்னம் எரியும் வகையில் காரமாக ஒரு அடி விழுந்தது. யார் என்று சக்திவேல் பார்க்க, காவல்துறை சீருடையில் கம்பீரமாக நின்றிருந்தான் அந்த அதிகாரி.
அவன் பெயரை சக்தி பார்த்தான்.
சிரஞ்சீவி வரப்ரசாத்! த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத் ஆந்திரா கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. சில வருடங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் வெங்கட கிருஷ்ணனின் மகன் கொலை வழக்கை விசாரிக்க தமிழகம் வந்து, அதை சிறப்பாக செய்தவன். அவன் அப்பா சூர்ய நாராயணன் ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ். அப்பா குண்டூர் என்றால், அம்மா கும்பகோணம். பரத்வாஜ் முன்பு சிரஞ்சீவியின் கீழ் பணிபுரிந்திருக்க, இந்த வழக்கை பற்றி சக்திவேல் கூறவும், பரத் வரப்ரசாத்தின் உதவியைக் கேட்டான்.
தினகரனை பார்த்த வரப்ரசாத்,
“போலிஸ் யுனிஃபார்ம்ல இருக்க ஆளை அடிப்பியா நீ?” என்று கோபமாக கேட்டான்.
“யார் நீங்க? எந்த ஸ்டேஷன்? எஸ் பி வரட்டும். என் மேல கை வைக்கிற? பரத், சக்திவேல்… இருக்கு உங்களுக்கு” என்று அவர்களை முறைத்தான். அதே நேரம் நாகராஜனின் வக்கீல் வந்து ஜாமீன் கேட்டார். சக்தியும் பரத்வாஜும் வரப்ரசாத்தை பார்த்தனர்.
“எந்த பேசிஸ்ல என் க்ளையண்ட் மேல கொலை கேஸ் போட்டிருக்கீங்க? முதல்ல ரீலிஸ் பண்ணுங்க” என்று அவர் எகிற,
“மர்டர் லேது லாயர் சார், வேற டிபார்ட்மெண்ட். 100 கேஜிஸ் ஆஃப் ட்ரக்ஸ் வச்சிருந்த காரணத்துக்காக அரெஸ்ட் பண்ணியிருக்கோம். இன்ஸ்பெக்டர்!..” என்று வரப்ரசாத் குரல் கொடுக்க, ஒருவன் நாகராஜனுக்கு விலங்கிட்டு அழைத்து போனான்.
“எங்க எங்க கொண்டு போறீங்க? அவர் யார் தெரியுமா?” என்று டி.எஸ்.பியும் வக்கீலும் பதற,
“என் ஆபிஸுக்கு அழைச்சிட்டு போறேன், ரீலிஸா? உங்க நாகராஜனுக்கு இனி பெயிலே இல்ல ரா.” என்றவன் இன்ஸ்பெக்டரை பார்க்க, நாகராஜனை ஏற்றிக்கொண்டு அந்த ஜீப் சென்றது.
லாக் அப்பில் இருந்த அர்ஜூன் கத்த, சக்தியைப் பார்த்தான் சீரஞ்சிவி. அவன் திறந்துவிட உள்ளே சென்றதுதான் தெரியும். அர்ஜுனின் அலறல் காதை கிழித்தது.
“அவுட் வித் ட்ரூத்! நீயெல்லாம் ஒரு ஸ்டூடண்ட். ப்ளடி” என்று அவனை போட்டு விளாசிவிட்டு கையை உதறியபடி வெளியே வந்தான் வரப்ரசாத்.
“சக்தி! நீங்க போய் இப்போ கேளுங்க, உண்மையை சொல்லுவான். இல்லன்னா என் ஆபிஸுக்கு அழைச்சிட்டு வாங்க” என்றவன் பரத்வாஜை பார்த்து,
“செர்ச் பண்ணினதுல ஃபிஃப்டி க்ரோர்ஸ் மணி, அண்ட் 100 கேஜி ஆஃப் கொகைன், மெத், எக்ஸ்டஸி கிடைச்சது பரத். அந்த கொங்கன்னா கொடுக்கா எல்லாத்தையும் செப்டிக் டேங்’ல புதைச்சு வச்சிருக்கான். நீங்க கொடுத்த இன்ஃபர்மேஷன் வச்சு தீடீர்னு ரெய்ட் பண்ணினதுல எல்லாமே மாட்டிடுச்சு. இட்ஸ் எ பிக் நெட்வர்க். தேங்க்ஸ் ஃபார் தி இன்ஃபோ” என்றான் புன்னகையோடு.
“நான் ஒன்னுமே செய்யல சார், எல்லாம் சக்திவேல்தான்” என்று சக்தியைப் பார்க்க, சக்திவேலை அருகே அழைத்த வரப்ரசாத் அவன் தோளில் கைப்போட்டு,
“குட் வர்க் சக்தி! கிப் இட் அப்! இப்படி ஒரு ஆஃபிசருக்கு சப்போர்ட் பண்றது நம்ம கடமை பரத். நீங்க அதை பண்ணியிருக்கீங்க. ஐ அம் ப்ரவுட் ஆஃப் யூ!” என்றது பரத்வாஜுக்குப் பூரித்து போனது. எதையுமே சொல்லாத அதிகாரி அவன், அவன் பாராட்டும் போது குளிர்ந்தது.
அடுத்த சில மணி நேரங்களில் பரபரப்பு செய்தியாக ஷெரினின் கொலைவழக்குப் பேசப்பட்டது.
‘பல்கலைகழக மாணவி ஷெரின் கொலைவழக்கில் மற்றொரு திருப்பம்! சக மாணவர்களின் போதை பழக்கம் பற்றி தெரிந்த ஷெரின் பேராசிரியரிடம் அதனை பகிர்ந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் அர்ஜுன் போதை பழக்கம் வெளியே தெரிந்தால் மாட்டிக் கொள்வோம் என்பதாலும், போதை மருந்து டீலர்களிடமிருந்து மருந்து கிடைக்காத ஆத்திரத்தாலும் தன் காதலியோடு சேர்ந்து கொடூரமாக ஷெரினை கொன்றிருக்கிறான்’ என்று ஒரு பக்கம் செய்தி வந்தது.
‘இந்த வழக்கில் தஞ்சையின் துணை மேயரும், எதிர்கட்சியின் டெல்டா மாவட்டங்களின் தலைவருமான நாகராஜன் நார்கோட்டிக்ஸ் சிறப்பு அதிகாரி சிரஞ்சீவி வரப்ரசாத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களின் மூலமே, கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது.
கோடிக்கணக்கான போதை மருந்தும், ஹவாலா பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என்று அடுக்கடுக்காக குற்றங்களின் பின்னணி வெளியே வந்தன.
✅ End of Episode 28
Super.
பங்காரம் மாஸ்.😍