Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 31

அரிச்சந்திரன் அன்று காலை சீக்கிரமே நீதிமன்றம் சென்று விட்டான், சக்தி அவனிடம் ஆதாரங்களை எல்லாம் கொடுத்திருந்தான். கூடுதலாக சங்கர், நாகராஜன் மீதான போதை பொருட்கள் பதுக்கல், கடத்தல் வழக்குகள் இருக்க, ஷெரின் கொலை வழக்குக்கு அவையெல்லாம் பலம் சேர்த்தன.

ஆதினி, ஷெரினின் தந்தை தாமஸுடன் நீதிமன்றம் சென்றிருந்தாள். வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கிஷோர், நிரஞ்சனும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். ஷெரின் திரும்பி வரப் போவதில்லை. அதற்காக குற்றங்களை மன்னிக்க முடியாதே, ஒருவரின் இழப்பு எத்தனை பேரை, எத்தனை வருடங்களுக்கு மீளா துயரில் ஆழ்த்தும்.

பணத்தின் மீதான போதை, அரசியல் போதை எல்லாம் சேர்ந்து பெண்ணின் உயிரை வாங்கியிருக்க, ஷெரின் அப்பா தாமஸ் அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவதில் தீவிரமாக இருந்தார். ஆதினிக்கு எல்லாம் அவர்களுக்கு சாதகமாக இருந்தாலும் எதிர்த்தரப்பு சாதாரணமில்லையே.

மனிதர் மறையலாம், மனிதரின் கொள்கைகள் மறையாது, அவர்களின் கோட்பாடு மறையாது. அப்படித்தான் ஷெரின் மறைந்தாலும் எந்த போதை அவளை கொன்றதோ, எதை தடுக்க போராடினாலோ அது அவள் மறைந்தும் நடந்தது. எல்லாம் முடிந்தது என்று தற்கொலை என்று மூடப்பட்டு வழக்கு இன்று மறு விசாரணைக்கு வந்திருக்கிறது.

அரிச்சந்திரன் வாதாட தொடங்கினான். ஷெரினின் கொலையை டிஎஸ்பியும், எஸ்பியும் திட்டமிட்டு தற்கொலை என திரித்தது முதல் அர்ஜுனும், ஸ்ரேயாவும் கொன்றது என்று எல்லாம் சொல்லி, டி.எஸ்பி, எஸ்பி எல்லாரையும் விசாரிக்க கேட்டான். எல்லாருக்கும் எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால் அர்ஜுனுக்கும் ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தரப்பட்டது.

டி.எஸ்பி தினகரன், எஸ்பி சுரஜ் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டு அவர்களுக்கும் ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு வழியாக எல்லாம் முடிந்து அரிச்சந்திரன் வெளியே வர, கிஷோர் அவனை தூக்கி விட்டான்.

“டேய் விடுடா! கோர்ட் கிஷோர்” என்று அதட்டவும் மெல்ல இறக்கி விட, நிரஞ்சன் அவனை அணைத்துக் கொண்டான்.

சங்கர் மேல்மூறையீடு செய்வது பற்றி அவன் வக்கீலிடம் பேசிக் கொண்டிருந்தான். சக்திவேல் இதை பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை. எங்கு சென்றாலும் இவர்களின் சாட்சியங்களை உடைக்க முடியாது. அதை விட நாகராஜனின் குடோனில் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டிருந்தது. நிவாஸின் மரணத்தை அசாம் காவல்துறையினர் இன்னும் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

நிரஞ்சனை அரி தட்டிக் கொடுத்தான். தாமஸும் ஆதினியும் நிற்க, தாமஸ் அரிச்சந்திரனின் கையை பிடித்துக் கொண்டார். அவரின் கண்கள் கலங்கியிருந்தது.

“சூசைட் இஸ் சின் அப்படினு என் பொண்ணுக்கு சொல்லி வளர்த்திருந்தோம். அவ இப்படி செஞ்சிருக்க மாட்டானு நம்பினாலும் என்ன செய்றதுனு தெரியல, ரொம்ப தேங்க்ஸ், மை சைல்ட் வில் பீ அட் பீஸ் நவ் (My child will be at peace now)” என்றார் திடமான குரலில்.

“இது என் கடமை சார்” என்றான் அரிச்சந்திரன். ஆதினி ஒன்றுமே பேசவில்லை. தன் தோழிக்கு தன்னால் முடிந்த சிறு நியாயத்தை செய்து விட்ட திருப்தி அவளிடம்.

கிஷோரை அருகே அழைத்த அரி, “நீ ஆதினியை வீட்ல விட்டுடா, நான் இங்க இருந்து ஜட்ஜ்மெண்ட் பேப்பர்ஸ் எல்லாம் வாங்கணும். கொஞ்சம் வேலை இருக்கு, பார்த்து போங்க.” என்றான்.

“மாம்ஸ்! அந்த பரதேசி அப்பீல் பண்ணப் போறேனு பேசிட்டு இருக்கான்.” என்று கிஷோர் பதறி கேட்க,

“சுப்ரீம் கோர்ட் போனாலும் ஷெரினுக்கு நியாயம் கிடைக்காம விட மாட்டேன் கிஷோர். என் பொண்ணைக் கொன்னுட்டு இவங்க நிம்மதியா இருப்பாங்களா?” என்று பல்லைக் கடித்தார் தாமஸ்.

கிஷோரிடம் மறுப்பாக தலையசைத்த அரி, “கண்டிப்பா அப்பீல் பண்ணுவாங்க டா. பார்த்துக்கலாம், சுப்ரீம் கோர்ட் போனா என்னோட சீனியர் இருக்கார், அவரை வச்சு இவனுங்களை உள்ளே தள்ளிடலாம். இதையெல்லாம் இனி நினைக்காம உங்க படிப்புல கவனமா இருக்கணும். இப்போ கிளம்புங்க” என்று அறிவுறுத்தி அனுப்பினான்.

நிரஞ்சனுக்கு மனம் சரியில்லை. பல்கலைக்கழகத்தினுள் நுழையும் போதே ஷெரினை கடைசியாக பார்த்தது கண்ணுக்குள் நின்றது.

கிஷோரிடம்,
“எனக்கு மனசு சரியில்லடா. நான் வீட்டுக்குப் போய்ட்டு இரண்டு நாள் கழிச்சு வரேன்” என்று போனான்.

வீட்டுக்கு வந்த ஆதினி அவள் போனை எடுத்து ஷெரினோடு கடைசியாக பேசியதை வாட்ஸப்பில் எடுத்து பார்த்தாள். ஷெரின் எப்போதும் அவள் தோழி, இருந்தாலும் இறந்தாலும்!

“யூ வன் ஷெரின்!” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். ஷெரின் இந்த பிரபஞ்சத்தின் துகளாய் மாறியிருந்தாலும் இந்த பிரியத்தின் தூறல்கள் அவளை நனைக்கவே செய்யும்.

அரிச்சந்திரன் இரவு வீடு வரும் போது மணி பத்து. ஆதினியிடம் இரவு உணவு வெளியே சாப்பிடுகிறேன் என்று முன்பே சொல்லி விட்டான், ஆதினி அவன் வரும் போது வாசலில் உட்கார்ந்திருந்தாள். அதுவரைக்கும் கிஷோருடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள். அரி வந்ததும் போனை வைத்து விட்டு கேட்டைத் திறந்தாள்.

அரி பைக்கை நிறுத்திவிட்டு தன் பையை எடுத்துக் கொண்டு உள்ளே போக, ஆதினி கேட்டைப் பூட்டினாள். கதவையும் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

அரி தன் கோட்டை மாட்டியவன், சட்டையைக் கழற்றிக் கொண்டே ஆதினியிடம்,
“தாத்தா சாப்பிட்டாரா? எப்படி இருக்காரு?” என்று விசாரித்தான்.

“நல்லாயிருக்காரு, எட்டு மணிக்கே சாப்பிட்டுட்டார். நீங்க சாப்பிட்டீங்களா?” ஆதினி கேட்க,

“ஷெரின் அப்பாவோட சாப்பிட்டேன், அவரை ட்ரெயின் ஏத்திவிட்டு வந்தேன்மா.” என்றவன் குளிக்க போனான். வேஷ்டி பனியனுடன் வந்தவன் அப்படியே மெத்தையில் படுத்துக் கொண்டான். ஆதினி அவனருகே அமைதியாக படுத்திருந்தாள்.

அரி வந்து படுக்கவும் அவனை கட்டிக் கொண்டாள். அரியும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“அர்ஜுன் ஏன் இப்படி செஞ்சான்? ஷெரின் பாவம்தானே? மைக்ரேன் பெயினே அவளுக்கு அவ்வளவு வலிக்கும் அரி, அவ கழுத்த… எப்படி வலிச்சிருக்கும்..?” என்று கண்ணீர் வடிய கேட்டாள்.

அரிச்சந்திரன் ஆதினியின் முதுகில் தட்டிக் கொடுத்து, “ஆதினி! அழாதடி ப்ளீஸ்! நம்ம என்ன செய்ய முடியுமோ செஞ்சிட்டோம். முடிஞ்சது எதுவும் நமக்கு தெரிஞ்சு நடக்கல” என்றதும் ஆதினி சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள்.

“எங்க கேம்பஸ்ல நிறைய பேர் கேங்கா சரக்கு அடிக்கிறது, கஞ்சா போடுறது எல்லாம் செய்வாங்க அரி. சின்ன விஷயமா இருக்கும் போதே பிரின்சிபால் கிட்ட சொல்லியிருக்கணுமோ? அவங்க பழக்கம், அவங்க இஷ்டம்னு நாங்க நினைச்சோம்” என்று மறுகினாள்.

“சில விஷயங்கள் தனி மனித சுதந்திரம்னு ஒதுக்கிட முடியாது, எல்லா கெட்ட விஷயங்களும் தனி மனுஷங்கிட்ட இருந்து ஆரம்பிச்சு சமூகத்துல பரவுது.”

“அண்ட் உன் கேம்பஸ்னு இல்லை பஞ்சாப்’ல ஸ்கூல்ஸ் ட்ரக்ஸ் பழக்கம் ரொம்ப தீவிரமா இருக்கு, ஈவன் டெல்லி யுனிவர்சிட்டில அங்க இருக்கவங்களுக்கும் தெரிஞ்சு நடக்குது. பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் பசங்களுக்கு கஞ்சா சப்ளை பண்ணுவாங்க தெரியுமா?”

“பசங்களுக்கா தெரியணும், எது தேவை தேவையில்லனு. அப்படி தெரியலன்னா நாகராஜன், சங்கர் மாதிரியான ஆட்கள் அவங்க தேவைக்கு யூஸ் பண்ணிப்பாங்க.” என்று அரிச்சந்திரன் நிதர்சனம் சொல்ல ஆதினியின் கண்ணீர் ஈரம் அரியின் தோளை தொட்டது.

“எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு அரி, முதல்ல அம்மா, இப்போ ஷெரின்.. எனக்குத் தனியா இருக்க மாதிரி இருக்கு” என்று அழ,

“இப்போ கஷ்டமாதான் இருக்கும். எல்லாம் மாற கொஞ்ச நாள் ஆகும்.. இப்போ கஷ்டமா இருந்தா அழு… இதுவும் கடந்து போகும்” என்றான் அவள் தோளைத் தட்டிக் கொடுத்து.

இரவு நேரத்தில் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அப்படியே படுத்திருந்தான் நிரஞ்சன். மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரத்தில் அவன் ஷெரினை தேடினான்.

‘உன்னோட இருக்க முடியலன்னாலும் உனக்குப் பிடிச்ச மாதிரி இருப்பேன் ஷெரின்’ என்று மானசீகமாக சொன்னான். இதுவும் கடந்து போகும், இந்த சோகம், கண்ணீர், அழுகை, பிரிவின் ஆற்றாமை எல்லாம் கடந்து போகும்!

நடந்ததை ஏற்கின்ற பக்குவமும் ஒரு நாள் நிரஞ்சனுக்கு பிறக்கும். இந்த காதல் எல்லாவற்றையும் கடக்க வைக்கும்! ஒரு நாள் அவனும் நிறைவாய் வாழ்வான்!

நானும் மறக்கிறேன்
முடியலயே
கண்ணீர் வடிக்கிறேன்
கரை இல்லையே
இருந்தேன் உன்னால்
இருப்பேன் உன்னால்

ஷெரின் வழக்கின் தீர்ப்பு வந்து இரண்டு வாரங்கள் கடந்தன. இயல்பான வாழ்க்கை என்று சொல்லிவிட முடியாது, மாற்றங்களோடு, அந்த மாற்றங்களை இயல்பாக்கிக் கொண்டு எல்லாரும் வாழ்ந்தனர். நிரஞ்சன், கிஷோர், ஆதினி மூவரும் பழையபடி பல்கலைக்கழகம் செல்ல தொடங்கியிருந்தனர். படிப்பில் கவனம் செலுத்தினர்.

✅ End of Episode 31
How did you feel about this episode?
❤️ 2 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Mrs Beena loganathan Reader 4 weeks ago

நண்பர்கள் அருமை 

நட்புக்கு  போராடி 
நியாயம் வாங்கி தந்துவிட்டார்கள்
மன நிறைவு.....
மறைந்தவர்கள் 
மீள்வதில்லை 
மறையாத நினைவுகள்
மனதில் என்றும் நீங்காமல்...

❤️ 1 more...
Srichitra Reader 4 weeks ago

Very nice.

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top