Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 32

அடுத்த மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் வருவதால் படிப்பு, அசைன்மெண்ட், இண்டர்னல்ஸ் என்று பரபரப்பாக நாட்கள் சென்றன. ஆதினிக்கு அந்த பரபரப்பே பிரச்சனையாக இருந்தது. காலையில் சீக்கிரமே எழுந்து கல்லூரி வர வேண்டியிருந்தது, மாலை வீடு செல்ல ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும்.

அங்கு தாத்தா மட்டுமே இருப்பார். இவளுக்கு உடல், உள்ளம் எல்லாம் அசதியாக இருக்கும். இத்தனைக்கும் ஒரு வேலை அவள் செய்ய வேண்டி இருக்காது. இரவில் அரி சில நாள் சீக்கிரம் வருவான், சில நாட்கள் தாமதாகி விடும், காலையில் எழுவதால் இரவில் சீக்கிரமே உறக்கம் வந்து விடும்.

அன்றும் ரவிக்குமார் மகளை வீட்டில் இறக்கி விட்டு அவர் ஊர் செல்ல, ஆதினி சோர்வாக வீட்டுக்குள் வந்தாள். வந்தவள் முகம் வீட்டில் இருந்தவர்களை பார்த்துவிட்டு மலர்ந்தாள்.

“அத்தாச்சி!” என்று தாரகையைக் கட்டிக்கொண்டாள். பல நாட்கள் கழித்து ஆதினி இருக்கும் நேரத்தில் தாரகையும் ராஜதுரையும் வீடு வந்திருக்க, அவர்களை பார்த்து மகிழ்ச்சி.

“ஏய்! பார்த்து பார்த்து” என்று பதறினான் ராஜதுரை.

“என்னண்ணா?” என்று ஆதினி முகம் சுருக்க, தாரகை கணவனை கண்ணால் மிரட்டினாள். அவன் முறைக்க,

“ஹலோ! அப்புறம் இரண்டு பேரும் லுக் விடுங்க, ஒரு பச்சப்புள்ளையை வச்சிட்டு என்ன பண்றீங்க?” என்று ஆதினி கேட்க, ராமசாமி சத்தமாக சிரித்தார்.

“என்ன தாத்தா? பயங்கர சிரிப்பா இருக்கீங்க?” என்று ஆதினி தாத்தாவை விசாரிக்க,

“இந்த பச்சப்புள்ள மாமியாக போகுது” என்றாள் தாரகை மலர்ந்த முகமாக. அந்த முகத்தின் மலர்ச்சியில் ராஜதுரையின் முகத்திலும் புன்னகை பரவியது. அவனுக்கு அவர்கள் நட்பாக பழகிய காலம் தொட்டே, தாரகையின் புன்னகை முகம் பிடிக்கும், அவளை புன்னகைக்க வைக்க பிடிக்கும்.

விஷயத்தைக் கேட்டதும் ஆதினிக்கு உற்சாகம்.

“அச்சோ! செம. கங்கிராட்ஸ் அண்ணா” என்று ராஜதுரையிடம் கை நீட்ட, அவனும் புன்னகையுடன் நீட்டினான்.

“எத்தன மாசம்? சீக்கிரம் நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போகுது” என்று உற்சாகத்தில் ஆதினியின் வார்த்தைகள் அருவியாய்க் கொட்டின. பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஒரு சந்தோஷ செய்தி. அதனை ஆதினி கொண்டாடவே செய்தாள்.

“இரண்டு மாசம்” என்றாள் தாரகை.

“உட்காருங்க அத்தாச்சி. உங்களுக்கு நான் சாப்பிட எடுத்துட்டு வரேன்” என்று ஆதினி பறந்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ போய் டிரஸ் மாத்திட்டு வா, காலேஜ் விட்டு வந்த நீ டயர்டா இருப்ப. நான் டீ போட்டு தரேன்” என்றதும் ஆதினி அவசரமாக வேண்டாம் என்றாள்.

“ஏன்? எதுவுமே குடிக்காம இருப்பியா?” என்று தாரகை கேட்க,

“நான் டீ, காஃபி எல்லாம் குடிக்கறது விட்டேன்” என்றாள்.

“எப்போ இருந்து இந்த பழக்கம்?” என்ற தாரகையின் கேள்விக்கு ராஜதுரை பதில் சொன்னான்.

“எப்போ நீ டீ போடுறேனு சொன்னியோ அப்போ விட்டிடுச்சு என் தங்கச்சி” என்றான் துரை கிண்டலாக. தாரகை அவனை முறைக்க, ராமசாமி கையில் இருந்த கைத்தடியால் துரையின் தோளில் அடிபோட்டார்.

“என் ராஜாத்தியை பேசுறியாடா நீ?” என்று திட்டினார்.

“உனக்கு நான் போடுற டீ பிடிக்கலன்னா சொல்ல வேண்டியதுதானே டி, உனக்கு பூஸ்ட் கலக்கி கொடுத்திருப்பேன்” என்றதும் ஆதினி பல்லைக் காட்டினாள்.

பின் அவள் உள்ளே சென்று உடைமாற்றி வந்து இவர்களோடு பேசிக் கொண்டிருக்க, அரிச்சந்திரன் வந்து விட்டான். தங்கையைப் பார்த்ததும் அவன் முகமும் மலர்ந்தது.

“நான்தான் சொல்லுவேன்” என்று ஆதினி முன்பே தாரகையிடம் சொல்லி விட்டாள். அரிச்சந்திரன் அறைக்குள் செல்ல, ஆதினியும் மெல்ல அவன் பின்னே சென்றாள். அவன் சட்டையைக் கழட்ட, அதற்குள்ளே அவனைக் கட்டிக் கொண்டவள்,

“உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!” என்றாள்.

“என்ன நியூஸ்?” என்று அரி திரும்ப ஆதினி அவனை பார்த்து கண்களில் பரவசத்தோடு,

“நம்ம வீட்டுக்குக் குட்டி பாப்பா வரப்போகுது” என்றாள் மெல்லிய குரலில்.

“எப்படி டி?” என்று அரிச்சந்திரன் அதிர்ந்து விட்டான். அவர்கள் இருவருக்குமான நேரமும் நெருக்கமும் குறைந்து பல நாட்கள் ஆகி விட்டன. பிரியத்தைக் காட்ட கூடாது என்றில்லை, காட்ட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்க, வேலை முடிந்து வந்தவன் களைப்பில் இருக்க ஆதினி சொன்னது சட்டென விளங்கவில்லை.

அவன் அதிர்வில் ஆதினிக்கு சிரிப்பு வர, உதட்டை சுளித்தவள்,
“அதுக்குள்ள அப்பாவாக ஆசை வந்துடுச்சா?” என்று எக்கி அவன் நெற்றியில் முட்டினாள். எக்கியவளை தன்னோடு சேர்த்தணைத்தவன் அவள் கழுத்தில் தன் முகத்தை வைத்து சில நொடிகள் கண் மூடினான்.

அப்போதுதான் தாரகை, ராஜதுரை, தாத்தா எல்லாரும் ஒன்றாக புன்னகையுடன் அமர்ந்திருந்து நினைவில் வர, ஆதினி சொன்னதும் விளங்கியது.

“ஹேய் அரைடிக்கெட்! மாமாவாக போறேனா டி?” என்றான் பரபரப்பாக. ஆதினி தலையாட்ட, அவளை அப்படியே நெஞ்சோடு அள்ளிக் கொண்டான். அரிச்சந்திரனின் சந்தோஷத்தின் அடர்த்தியை ஆதினி அவன் அணைப்பில் உணர்ந்தாள்.

“விட்டா ஒரே நேரத்தில் மாமாவும், அப்பாவும் ஆகிடுவீங்க போல, தள்ளுங்க” என்று ஆதினி அவனை பிடித்துத் தள்ள, உற்சாகமான சிரிப்பு அவனிடம்.

“ஆகிட்டா போச்சு” என்று ஆசையாக மனைவியின் கன்னம் கிள்ளியவன் வேகமாக பாத்ரூம் சென்று உடை மாற்றி வந்தான். அறையில் இருந்து இருவரும் ஒன்றாய் வெளியே வர, அரிச்சந்திரன் தாரகை அருகே வந்து உட்கார்ந்து கொண்டான்.

அவன் பார்வையே விஷயம் தெரியும் என்று சொல்ல, தாரகையும் அவள் ஆசைக்கு,
“மாமாவாக போறடா அரி” என்று சொல்ல, தங்கையைத் தோளோடு அணைத்து கொண்ட அரி,

“எங்க ராஜாத்தி அம்மாவாக போறா” என்றான் மென்மையான குரலில். இன்னும் தங்கை பிறந்த போது தூக்கியது ஈரமாய் அவன் நினைவில் நின்றது.

“பார்த்தியாடா? என் பேத்தி என்னை கொள்ளு தாத்தாவாக்க போறா” என்றார் ராமசாமி பெருமையாக. மகனும் மருமகளும் போன பின், இந்த பிள்ளைகளை வைத்து பரிதவித்த மனிதர் ஆகிற்றே, இப்படி அவர்களை குடும்பமாக பார்க்க அவரிடம் நிறைவு. பொக்கை வாய்த் திறந்து சிரித்தார்.

அரி, “ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை” என்று ராஜதுரையிடம் சொல்ல, தாரகை கணவனை பார்த்து கண்சிமிட்டினாள். ராஜதுரைக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. தலையசைத்து புன்னகைத்தான்.

“டாக்டர் என்ன சொன்னாங்க, தியேட்டருக்குப் பார்த்து போ. நீங்க இவளை ட்ராப் பண்ணுங்க துரை” என்று அரி பேசிக் கொண்டே போக,

“டேய் அரிச்சந்திரா! நான் ப்ரக்னெண்டா இருக்கேன், பேஷண்ட்டா இல்லை. ஓகே? நீயே இப்படி பேசி எனக்கு பயங்காட்டி, என் வூட்டுக்காரரையும் பயமுறுத்தாத” என்றாள் தாரகை.

“அவர் உன் நல்லதுக்குத்தானே சொல்றார் தாரக” என்று மனைவியிடம் சொன்னான் ராஜதுரை.

“நாந்தானே புள்ளையை சுமக்கிறேன், உங்க இரண்டு பேருக்கும் என்ன வாய் இருக்குனு பேசுவீங்க” என்று தாரகை அவர்களை பேசினாள்.

ராமசாமியும்,
“அதானே? என் பேத்திக்குத் தெரியாதா? நீங்க இரண்டு பேரும் தடிபசங்க இஷ்டத்துக்கு பேசுவீங்க, என் பேத்திதானே புள்ளையை பத்து மாசம் சுமக்க போகுது?” என்று இப்போதும் பேரன்களைப் பேசினார்.

“கிளம்புவோமா தாரக? எனக்கு உரம் வாங்கணும்” என்று ராஜதுரை எழுந்து கொண்டான்.

“சரி டா, அரி. நாளைக்கு வரேன்” என்று ராஜதுரையோடு தாரகை கிளம்பினாள். அவர்கள் சென்றதும் அரிச்சந்திரன் அப்பா, அம்மாவின் புகைப்படம் முன் கண்மூடி நின்றான்.

இன்பத்துக்கும் துன்பதுக்கும் இடைப்பட்ட ஒரு பரவச நிலையில் இருந்தான். சட்டென்று எல்லோரும் வளர்ந்த உணர்வு, பெற்றோரின் நினைவில் கண்களும் கலங்கி போக அதனை வெளிக்காட்டாது அப்படியே கண்களை திறக்காது நின்றான் அரிச்சந்திரன்.

ஆதினி அவனருகே சென்றவள், “அழறீங்களா அரி?” என்று கேட்க, அவன் இல்லை என்று தலையசைத்தான்.

அவன் பக்கம் நின்று ஒற்றைக்கையால் அவனை இடையோடு அணைத்தவள், முதுகில் தட்டிக் கொடுத்து,

“பேருதான் அரிச்சந்திரன், ஆனா பொய் பேசுவாரு” என்று கிண்டல் செய்தாலும்,

“அத்தை மாமா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. நீங்க அழுது, நான் உங்களை நல்லா பார்த்துக்கலனு நினைச்சிட போறாங்க, கண்ணைத் துடைச்சிட்டு போய் எனக்கு நல்லா காரச்சட்னி வச்சுக் கொடுங்க. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனாள்.

அறைக்கு சென்ற ஆதினி போனை எடுத்து, ஷெரினின் எண்ணுக்கு வழக்கம் போல் வாட்ஸப்பில்,
‘எங்க வீட்டுக்கு குட்டி பாப்பா வரப்போகுது ஷெரினே! ஐ அம் ஸோ ஹாப்பி, பாப்பா பொறந்ததும் உனக்கு போட்டோ அனுப்புறேன்’
என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அரிச்சந்திரனுக்கு வேலையில் இருக்கும் சோர்வு இருந்தாலும், பல நாட்கள் கழித்து அவனும் உற்சாகமாக இருந்தான். தங்கை தாயாக போகும் செய்தி அவனை தென்றலாக தாலாட்டியிருக்க, மனைவி கேட்டபடி காரச்சட்னி செய்தான். இரவு உணவு முடித்து காற்றோட்டமாக இருக்கும் என்று மொட்டை மாடிக்குச் சென்றான்.

அங்கிருக்கும் அறையில் இருந்து கயிற்றுக் கட்டிலை எடுத்து வெளியே போட்டு இரவினை ரசித்தபடி படுத்தான். ஆதினி பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள். பாலை குடித்தவன் ஆதினியும் பால் குடித்து விட்டு அங்கேயே கட்டிலில் உட்கார்ந்திருப்பதை பார்த்து,

“உனக்கு படிக்கிற வேலை இல்லையாடி? கீழ போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று ஆதினியிடம் சொல்ல அவளோ அவனை முறைத்தாள்.

“என்னடி?” என்று ஒற்றை கையை தலைக்குக் கொடுத்து சாய்ந்த வண்ணம் தன்னருகே இருந்தவளிடம் கேட்க,

“செமெஸ்டர் நெக்ஸ்ட் மந்த் தான், எனக்கு படிக்க தெரியும்” என்றவள் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். ஆதினி படுக்கவும் அரி இடம் விட்டு தள்ளி படுத்தபடி இரவினை ரசித்தான்.

நமக்கு பிரியமானவர்களுக்கு எது நடந்தாலும், நமக்கும் சந்தோஷமாகி விடுகிறது! அதுதானே பிரியம்? அடர்ந்த இருளும் அங்காங்கே கொட்டிக்கிடந்த நட்சத்திரங்களையும் அரிச்சந்திரன் கண்பார்க்க, ஆதினி அரிச்சந்திரனை கண்களவு செய்தாள்.

ஆதினி தன்னை பார்ப்பது உணர்ந்து “இந்த இரவு எவ்வளவு அழகா இருக்குல ஆதினி? அமைதியா, அடர்த்தியா எவ்வளவு பெரிய வானம்..?” என்று ரசித்து சொன்னான்.

இரவுகளை பற்றி இத்தோடு இரு நூறு முறை அவளிடம் பகிர்ந்திருப்பான். சொல்லி அவனுக்கு சலிக்காது, அவன் சொல்வதால் இவளுக்கு சலிக்காது.

“இரவு அழகு, அதை ரசிக்கிற அரிச்சந்திரன் இன்னும் அழகு, அரிச்சந்திரனை ரசிக்கிற ஆதினி பேரழகு” என்றதும் அரிக்கு சிரிப்பு வந்தது.

“செல்ஃப் டப்பா டி அரைடிக்கெட்.” என்று அவளை அணைத்துக் கொள்ள,

“இருந்துட்டு போறேன், என் வேல்யூ எனக்கே தெரியலன்னா எப்படி? அடுத்தவங்க சொல்றதுதான் நான்’னா இல்லையே? ஆதினிக்குத் தெரியும் அவ வேல்யூ” என்றாள் பெருமையாக.

அரிச்சந்திரன் “ஆதினி!” என்று ரசித்து உச்சரித்தான் அவள் பெயரை. அதில் ஆதினியின் உள்ளம் உன்மத்தமாக, அரியோ,

“உனக்கு ஆதினினு சரியாத்தான் பெயர் வச்சிருக்காங்க.” என்றான் அவளின் முன்னால் வந்து நிற்கும் முடிகளை ஒதுக்கி விட்டபடி.

“இது என்னை தொந்தரவு பண்றதை விடாதாடி” என்று சலித்தபடி அவள் கன்னத்தில் மீசையால் உரசினான்.

“என்ன மாமாவானதும் அப்பாவாக ஆசை வந்துடுச்சா, எனக்குத் தூக்கம் வருது” என்றாள் கொட்டாவி விட்டபடி.
அரிச்சந்திரனோ,

“ஏன் வரக்கூடாதா?” என்றான் ஆவல் குரலில்.

✅ End of Episode 32
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Mrs Beena loganathan Reader 4 weeks ago

பழைய காயங்கள் எல்லாம்

புது வரவில் காணாமல் போகட்டும்.....
Srichitra Reader 4 weeks ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top