Episode 37
“அரைடிக்கெட்!” என்று ஆசையாக அழைத்த அரி,
“அந்த டோபமைன் பரவசம் எல்லாம் கொஞ்ச நேரம்தானே? இவ்வளவு சலிப்பா இருந்தாலும் என் நெஞ்சில் சாஞ்சிட்டு எங்கிட்ட கதை பேசிட்டு இருக்கியே, அதுதான் எனக்கு வேணும். பிடிச்சாலும் சலிச்சாலும் முறைச்சாலும் இப்படி என்னோட இருக்கணும். ” என்றவனின் குரல் பிரியத்தை மட்டுமே உரியவளிடம் உதிர்த்தன. அந்த இரவின் குரல் ஆதினிக்கு கொடுத்த இதம் அலாதியானது.
‘எனக்கு வேணும்’ என்ற அவன் குரல், அதில் நிலவிய பிரியத்தின் அடர்த்தி எல்லாம் இன்னும் வேண்டும் என்று ஆதினிக்குத் தோன்றியது. சில நாட்களாக இருந்த சஞ்சலம், சலிப்பு எல்லாம் கொஞ்சம் கலைந்தது. ஆனால் அது கலைவதற்குள் அரி இன்னும் பேசினான்.
“அது எப்படி மேடம் உங்க வீட்ல ‘நோ’ சொல்லாம வளர்த்து வச்சிருக்காங்க?” அரி நக்கலாகக் கேட்க, ஆதினி முகத்தில் பெருமை மட்டுமே.
“ஆதினிக்கு யாரும் ‘நோ’ சொல்லமாட்டாங்க” என்றாள்.
அரியின் விழிகள் இன்னும் வம்பாக ஆதினியைப் பார்த்தன.
“உங்களை தவிர!” என்று உதடு சுழிக்க, இருவிரல்களால் அவள் உதட்டை வலிக்க பற்றிட, ஆதினியோ சட்டென அவன் விரல்களை கடித்தாள்.
“ப்பா! எரும மாடே!” என்று அரி திட்ட, அவளோ உதடுக்குள் சிரிப்பை அடக்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அதப்பெடுத்த கழுத!” என்று கோபமாக சொன்னாலும், கொஞ்சம் ஆசை மேகம் அவன் முகத்தில் எட்டிப் பார்த்தது.
“உனக்கு உன் பேச்சை எல்லாரும் ஒத்துக்கணும், எனக்கும் அப்படித்தான்” என்றவனிடம்,
“அரிச்சந்திரன்னு பெயர் வச்சதால பொசுக்குனு உண்மையை ஒத்துக்கிட்டீங்களோ?” என்று நக்கலாகக் கேட்டாள் ஆதினி.
அவள் கேள்வியில் சிரித்தாலும், மனைவியிடம் உண்மையை ஒத்துக்கொள்ள அவனுக்கு தயக்கமில்லை.
“தெரியல, வீட்டுக்குப் பெரிய பையன். அப்பா அம்மா இல்லாம போனதுல இருந்து எல்லா முடிவும் நாந்தான் எடுக்கிறேன், தாரா கூட என்னை கேட்டு செய்வா, ஸோ என் பேச்சை கேட்கிற ஆளுங்களைப் பார்த்துட்டு, இப்படி எல்லாத்துக்கும் எதிர்க்கேள்வி கேட்டு என்னை டென்ஷன் பண்ற ஆளைப் பார்க்கவும் நானும் டென்ஷன் ஆகிடுறேன் போல” என்றான் அரி.
“நீ வீட்டுக்கு ஒரே பொண்ணு, உங்கப்பா ரொம்ப செல்லம், நோ சொல்லாம வளர்த்துட்டார், அதனால நமக்கு முட்டிக்குது. வேற வழியில்லை, நம்ம இப்படித்தான்னு பழகிக்கணும். எத்தனை வயசானாலும் நம்மை திருத்த முடியாது!” என்றதும்,
“அரிச்சந்திரனுக்கு ஆராய்ச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று ஆதினி நொடித்தாள்.
அரி, “இன்னொன்னு சொல்லட்டுமா? ரகசியம்” என்று ரகசியக் குரலில் அவள் பக்கம் திரும்பிப் படுத்து, அவள் காதில் கேட்க, கூச்சத்தில் காதை கழுத்தோடு சேர்த்து அரியின் தோளில் நன்றாக சாய்ந்தாள் ஆதினி.
“சொல்லுங்க” என்றவளின் குரலோடு, தென்னங்கீற்றின் ஓசை சேர்ந்தது. ஆதினி பார்வை வானத்தில் நிலைத்திருந்தது.
“எனக்கு நீ தனியா ஒரு விஷயம் செஞ்சா பெருமை, ஒத்துக்கிறேன். அதே நேரம் எனக்கு என் மனைவியை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது, கடைசி வருஷம் ஜாலியா போய்ட்டு வரட்டும்னு நினைச்சேன். அப்புறம் உன்னை மாதிரியே எனக்கும் நீ ‘நோ’ சொன்னா பிடிக்கல” என்றான் அரி.
ஆதினியும் கொட்டாவி விட்டபடி, அரி பக்கம் திரும்பினாள். உறக்கக் கலக்கம் இருக்க, அது ஆதினி விழிகளில் நன்றாக பிரதிபலிக்க, அந்த உறக்கத்தின் வாயிலில் இருக்கும் விழிகளையும் ரசித்தான் அரி. பார்வையால் அவளை ஸ்பரிசித்தான்.
“எனக்கு ரொம்ப கடுப்பா இருந்தது, எதாவது வேலை செஞ்சு இன்வால்வ்டா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா நீங்க முடியாதுனு சொன்னப்ப இதை செய்யணும்னு எனக்கு ஒரு வேகம்” என்றாள் அவனை முறைத்தபடி.
“அதே வேகத்துல செய்ய வேண்டியதுதானே மேடம்?”
“இதுக்குக் காரணம் முன்னாடியே சொல்லிட்டேன்”
“வாழ்க்கையில வேலிடேஷன் எதிர்ப்பார்க்கிறது ரொம்ப இயல்பான விஷயம் ஆதினி! நம்ம நம்புற விஷயத்தை, நமக்கு பிடிச்சவங்களும் நம்பணும், அவங்களுக்குப் பிடிக்கணும்னு நினைக்கிறது எல்லாம் சகஜம்.”
“அது நம்ம முடிவை திணிக்கிறது இல்லையா?” ஆதினி கேட்கும் போதே படபடவென தூறல்.
“அவங்க கருத்தை மதிச்சா போதும், அதுக்கான சுதந்திரம் கொடுத்தா எல்லா உறவும் ஸ்ட்ராங்கா இருக்கும்”
அரி பேசிக் கொண்டிருக்க காற்றின் துணையோடு மழை இருவரையும் நனைத்தது.
“ஹே! எந்திரிடி, மழையில நனையாத” என்று அரி வேகமாக எழ, ஆதினி உடனே எழுந்து மாடியில் இருக்கும் அறைக்குள் புகுந்தாள். அரி கட்டிலைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் வர, ஆதினி லேசாக நனைந்திருக்க, அரியை முழுமையாக நனைத்திருந்தது மழை.
ஈர சட்டையைக் கழட்டி விட்டு, அங்கு காய்ந்த துண்டை எடுத்து அவன் தலையைத் துவட்ட, ஆதினி அவனை ஓர விழியால் பார்த்தபடி நின்றாள். வெளியே மழை வேகம் எடுத்திருந்தது.
இரவின் மழைக்குக் கொஞ்சம் சத்தம் அதிகம் போல! ஆதினிக்குக் குளிரெடுக்க, போர்வையை போர்த்தியபடி கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
“ஆதினி! கீழ கதவைப் பூட்டியாச்சு, இன்னிக்கு இங்கயே தூங்கலாம், மழையில கீழ போக வேண்டாம். இந்த பக்கம் கதவை சாத்திடுறேன்” என்று ஒரு பக்க கதவை சாற்றினான். பால்கனி கதவினை திறந்து வைத்திருக்க, சாரல் மட்டும் இவர்களை சந்தித்து போனது.
அரி அவளருகே வந்து படுக்க, அரியின் குளிர் இவளையும் தொற்றியது. தன்னருகே உரசிக் கொண்டிருந்த அரியின் தோளில் இருந்த குளுமையை ஆதினியால் உணர முடிந்தது. அந்த இதம் இன்னும் கேட்டது உடல். ஆதினி சட்டையில்லாத அரியின் மேனியை அணைத்துக் கொண்டு, அவன் தோளில் தலைசாய்த்திருந்தாள்.
மழை பேசியதால் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்த இருவரிடமும் அமைதி.
அரிச்சந்திரனுக்கு ஆதினியின் இந்த நெருக்கம் தாங்கவில்லை. அதே நேரம் குறைக்கவும் பிரியமில்லை. பிரியாமல் இன்னும் கேட்டது அவன் பிரிய மனம்.
உள்ளுக்குள் ஒரு ரசவாதம்!
“ஆ..ஆதினீ..என்னடி பண்ற?” அரியின் குரல் கரகரத்தது.
“நீங்க ஜில்லுனு இருக்கீங்க, எனக்கு இப்படி பிடிச்சிருக்கு” என்றாள்.
“நீயும் மழையில நனைஞ்சா ஜில்லுன்னு இருப்ப” என்று அரி சொல்ல, ஆதினியிடம் குறும்பாக ஒரு புன்னகை. என்ன அரி பார்க்க முடியாமல் இரவின் இருள் அந்த சிரிப்பை திருடியது.
“ஏன் நீங்க மழையா இருக்க மாட்டீங்களா?” கவிதையாய்க் கேட்டாள் ஆதினி. கேட்டதோடு இல்லாமல் அவனை இன்னும் இடைவெளியின்றி கட்டிக்கொண்டாள், அவன் குளிரை இவள் உணர, அவன் உணர்ந்தது தேகத்தின் வெப்பத்தை. காதல் கனல் மூட்டியது!
ஆதினியின் கதகதப்பைக் கேட்டது அரியின் தேகம். அவள் பேச்சில் அதுவரை பேசியதெல்லாம் மறந்து போக,
“உன்னை!” என்று வேகமாக அவளையும் காதலின் சுழிக்குள், ஆவலின் வேகத்திற்குள் இழுத்தான் அரிச்சந்திரன்.
மழையாக மட்டுமின்றி, காற்றாக, மூச்சாக, முத்தங்களாகப் பேசினான். அவன் தீடீர் செய்கையில் திணறியவள்,
“அரி” என்றழைத்து அவனை தன்னிடமிருந்து இழுத்தாள்.
அரியோ, “நீதானே கேட்ட” என்றான் சிரிப்போடு. இடைவெளியின்றி அவளை தன்னோடு இட்டு நிரப்பி விழித்திருந்த இரவினை விஷேஷமாக்கினான். அவன் உணர்ந்த ரசவாதம் அவள் உணரச் செய்தான் அந்த ரசவாதி!
மழையாக அவன் பேச, வெளியே இரவோடு நிதானமாக பேசிக் கொண்டிருந்தது பெருமழை!
***************
நேற்று பெய்த மழையின் தடம் இன்று இன்னும் காயாமல் இருக்க, தாரகை பிறந்த வீட்டிற்கு வந்திருந்தாள். வீட்டில் இருக்கும் மருதாணி செடியில் மருதாணி இலைகளைப் பறித்துக் கொண்டிருக்க, அவளோடு கதை பேசியபடி ஆதினியும் மருதாணி இலை பறித்தாள்.
இலைகளில் மழைத்துளி இருக்க, ஆதினி விளையாட்டாக அதனை ஆட்டி தாரகை மேல் தெளிக்க செய்தாள்.
“அடியே! ஒழுங்கா இரு” என்று தாரகை மிரட்ட,
“ஹாஹா” என்று சிரித்தாள் ஆதினி.
“என்ன நீயும் வக்கீலும் சமாதானம் ஆகிட்டீங்களா, அவன் ஒத்துக்கிட்டானா?” என்று தாரகை கேட்க, ஆதினிக்கு சிரிப்பு வந்தது.
“அரிச்சந்திரனோட பாசமலரே! உங்க அண்ணன் அவர் பேச்சைத்தான் நம்மை கேட்க வைப்பார். அவர் கேரக்டரையே புரிஞ்சிக்கலையே நீங்க” என்றாள் கிண்டலாக.
“ஓஹோ! அப்படியா? ஆனா நீ ஏன் ஒத்துக்கிட்ட? எங்கிட்ட அவ்வளவு கோவமா பேசின, அவனும் எங்கிட்ட உனக்கு ஓகே சொல்றேன் சொன்னானே?” தாரகை விரல்கள் இலையைப் பறித்தாலும் விழிகள் ஆதினியைக் கிண்டலாகப் பார்த்தன.
தாரகையின் கண்களைப் பார்த்த ஆதினி,
“உங்களுக்கும் அவர் மாதிரியே கண்ணு” என்றாள் ரசனையாக.
“அம்மாடி!” என்று தாரகை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“அதெல்லாம் இருக்கட்டும், அன்னிக்கு அவன் பெரிய இவனா கேட்ட நீ? அவன் சொன்னதும் உடனே உன் முடிவை மாத்திட்டியா?” என்று தாரகைக் கேட்டாள்.
“அவர் சொன்னாருனு எல்லாம் இல்லை, நானே யோசிச்சேன், எனக்கு வேற வேலையில கவனம் வைக்கணும். அதனால நிரஞ்சன் ஒரு என்.ஜி.ஓ’ல சேர்ந்திருக்கான், அதுல சேரலாம் முடிவு பண்ணிட்டேன் அத்தாச்சி. எப்படியும் எலெக்ஷன்னா பிரச்சனை வரும், லாஸ்ட் இயர் அதெல்லாம் வேண்டாம் தோணுச்சு” என்று ஆதினி பேச, தாரகை பார்வை அவளிடம் இல்லை.
“எங்க பார்க்கிறீங்க?” என்று கேட்டவள் அவளை நெருங்கி நின்று,
“மாடியில நிக்கிற உங்க அண்ணன் என்னை சைட் அடிக்கிறாரா?” என்றாள் மெல்லியக் குரலில். அரி வலக்கையைக் கழுத்தில் வைத்து தேய்த்தபடி, இடக்கையால் போனைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தான், அவன் கண்களோ கீழே தாரகையோடு கதை பேசிய ஆதினியை ரசித்தது. பசுமையான இலைகளுக்கு நடுவே கொன்றைப் பூ நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தவளை கண்களால் கொஞ்சினான் கணவன்.
ஈரம் சொட்டிய மருதாணி இலைகளை அவள் பறித்துக்கொண்டிருக்கும் லாகவம் கூட அவனுக்கு லாளிதாகமாக இருந்தது.
“அடிப்பாவி! உனக்குத் தெரியுதா?” என்று தாரகை ஆச்சரியமாகக் கேட்டாள்.
“நான் ஆதினி! எனக்குத் தெரியாதா? நீங்க பார்த்தா உடனே வேற பக்கம் பார்ப்பார், தங்கச்சி பார்த்தா ஷையா ஃபீல் பண்ணி சைட் அடிக்கிறத நிறுத்திடுவார், ஸோ பார்க்காதீங்க” என்று வேறு கிண்டல் செய்ய, தாரகை விழியகல பார்த்தாள்.
“ஷாக் ஆகாதீங்க அத்தாச்சி, உங்களுக்கு எங்க அண்ணன் உங்களை லவ் பண்ணினதே தெரியல, உங்க தியேட்டர்ல கொஞ்சம் ரொமான்ஸ் படமா பாருங்க, அப்போதான் இதெல்லாம் தெரியும்” என்றதும்,
“உன்னை!” என்று செல்லமாக அவள் தோளில் அடி போட்டாள்.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்க, தாரகையின் கண்கள் மின்னின.
“அரி மாதிரி கண்ணு” என்று ஆதினி மனம் ரசிக்கும் போதே, ராஜதுரை புன்னகையோடு இவர்களிடம் வந்தான்.
✅ End of Episode 37
Very nice.
இகழ்ச்சி இல்லா வார்த்தைகள்,
இரவின் குளுமை,