Episode 10

அவள் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல், “தாரா வீட்டுக்குப் போகணும், போய் குளி” என்றான்.

ராமசாமியும், “எல்லாம் எடுத்து வைச்சீட்டீங்களானு பார்த்துக்க ஆதினிம்மா.” என்றார். தாத்தாவிடம் தலையசைத்தவள் அறைக்குள் சென்றாள். எப்போதும் இயல்பாக பேசுபவன் காலையிலிருந்து பார்க்கவோ சரியாக பதில் பேசவோ இல்லை என்பது வருத்தம் கொடுத்தது. ஒருவழியாக குளித்து முடித்தவள் புடவைக் கட்டினாள்.

மடிப்பெடுக்காமல் ஒற்றையாய் முந்தானையை விட்டவள், அவளின் உடைக்கு ஏற்றது போல் ஆக்சிடைஸ்ட் ஜிமிக்கி அணிந்துகொண்டாள். ஜிமிக்கியை போட்டுவிட்டு ஆசையாக அதன் கீழே உள்ள முத்துக்களை ஒற்றை விரலால் தட்டிவிட்டு கண்ணாடியில் தன்னை ரசித்துப் பார்த்தாள். அரிச்சந்திரனும் குளித்து முடித்து வந்தவன், சட்டையை எடுத்துக் கொண்டிருந்தான்.

“அரி” என்று ஆதினி அழைக்க, அவன் திரும்பிப் பார்த்தான்.

“ஏன் பேச மாட்டேங்கிறீங்க?” என்று கேட்க, அவனோ முகம் திருப்பினான். அரி சட்டையை எடுத்துத் திரும்ப, ஆதினி அவன் முன்னே நின்றாள். அவள் ஈர முடியில் இருந்து நீர் சொட்டி புடவையில் விழ, சிறிய துண்டை எடுத்து அவள் தோளின் மேல் புடவை நனையாத வண்ணம் போட்டவன்,

“தலையைப் ஃப்ர்ஸ்ட் தோட்டிட்டு அப்புறம் பேசு” என்றான். அரியின் அக்கறை புரிய, ஆதினி நேற்றிரவெல்லாம் யோசித்த முடிவை அவனிடம் சொல்ல நினைத்தாள்.

ஓற்றைப் பக்கம் முடியை ஒதுக்கியவள், துண்டை எடுத்து தலையைத் துவட்டிக் கொண்டே,

“அரி, எனக்கு உங்க கூட இருக்க முடியலன்ற கோவம். அதான் பேசிட்டேன். நான் ஹாஸ்டல் போறேன், இந்த வருஷம் அங்கேயே இருக்கேன்” என்றதும் அரிச்சந்திரன் சட்டையைப் போடாமல் ஆதினியைப் பார்த்தான்.

முகத்தை உம்மென்று வைத்து, கண்கள் தரையை நோக்க அவள் பேச கைகளைக் கட்டிக் கொண்டு ரசித்தான் கணவன்.

“குடிகாரனுக்கே டஃப் கொடுக்கிற டி நீ?” என்றதும் ஆதினி படக்கென்று நிமிர்ந்து அரியை முறைத்தாள்.

“மாறாம இருந்தா திட்டுறது” என்று பல்லைக் கடித்தவள்,

“உங்களுக்காக நான் ஒன்னுமே செஞ்சதில்லை, அதான் நீங்க சொன்ன மாதிரி கொஞ்ச நாள் ஹாஸ்டல்ல இருக்கலாம் நினைச்சேன். உங்களுக்காக உங்க பேச்சைக் கேட்க நினைச்சா என்னை அதுக்கும் பேசுறீங்க” என்றாள் முறைப்பாக.

சமாதானமாக பேச வந்தாலும் எங்களுக்குள் முட்டிக்கொள்கிறதே என்ற கவலை அவளிடம்.

அரியோ, “நேத்து நான் பழி வாங்குறதா சொன்ன, ஸ்டேட்மெண்ட் மாறியிருக்கே கேட்டேன்.” என்றான்.

“உங்களுக்கு என்னை பிடிச்சும் சொல்றீங்க, அந்த கடுப்புல பேசிட்டேன். இருந்தாலும அரிச்சந்திரன் சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு ஆதினிக்குத் தோணுது.. அதான் ரீசன். என்னோட முடிவை எப்பவும் நீங்க அக்செப்ட் பண்றீங்க, இந்த முறை அரிக்காக, நான் ஒத்துக்கிறேன்” என்றதும் இன்னும் மெச்சுதலாகப் பார்த்தான். கூடவே அவன் காலையில் எடுத்த முடிவை நினைத்து சிரிப்பு.

“என்ன சிரிக்கிறீங்க?” என்று ஆதினி முறைக்க, அரி பதில் பேசாமல் கண்களை மூடி இன்னும் சிரித்தான். ஆதினி கோபமாகப் போக பார்க்க, அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

“அடியே ஆதினி! நில்லு” என்று அவளை நிறுத்தினான்.

அரிச்சந்திரன் ஆதினி ஹாஸ்டல் போக வேண்டாம் என்று நினைத்தான். எனக்குப் பிடித்தும் ஏன் கொஞ்சம் கோபத்திற்காக விலகி இருக்க வேண்டும், போதும் எங்கள் தனிமை. அவளை அனுப்பிவிட்டு நானும் சந்தோஷமாக இல்லையே, என்று பலவாறு யோசித்து அவனின் பழைய மனநிலையை அப்படியே ஆதினிக்காக மாற்றிக்கொண்டான்.

ஆதினி அரிச்சந்திரனுக்காக தன் முடிவை மாற்றியது போல.! ஒரே விஷயத்துக்கு இருவரும் வெவ்வேறு முடிவெடுத்திருந்தாலும் அடிப்படை என்னவோ அன்பு!

அரி, “நீ ஒரு முடிவெடுத்த மாதிரி, நானும் எடுத்தேன்” என்று சிரிப்பை அடக்கியவன் பேச்சிலே ஆதினிக்குப் புரிந்து விட, அவளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி. இருந்தும் இப்போதும் எங்களின் இரு மனம் ஒரு மனதாகாதா என்ற கேள்வி ஆதினியிடம்.

“அப்பவும் இப்படி எக்ஸாட் ஆப்போசிட்டா தான் யோசிக்கிறோம்” ஆதினி வருத்தமாக சொல்ல,

“அது சந்தோஷம்தானே? எனக்காக நீ யோசிக்கிற, உனக்காக நான் யோசிக்கிறேன்” என்று அரி சொன்னாலும்,

“இந்த வாட்டி நீங்க சொல்றதை நான் கேட்கிறேன் அரி. அதுக்கு என்ன ரீசனோ நம்ம இப்ப பேச வேண்டாம், இன்னும் நாலே நாள் லீவ், நமக்கு முதல் பொங்கல். ஸ்பெஷல் தானே? சந்தோஷமா இருப்போம். நான் நிஜமா சந்தோஷமா ஹாஸ்டல் போக சம்மதம் சொல்லிட்டேன். உங்க முடிவு சரியா இருக்கும்” என்றாள் உறுதியாக.

தீபாவளி சமயம் தேர்வுகள் இருக்க, ஆதினி படிப்பில் கவனமாக இருந்தாள். அதனால் இந்த முறை பொங்கலை இணைந்து சந்தோஷமாக கொண்டாட நினைத்தான்.

“அப்புறம் பேசிக்கலாம் விடு” என்ற அரியும் இயல்பானான்.

“உனக்கு ரொம்ப அதப்புடி, நைட் அவ்வளவு பேசிட்டு காலையில காஞ்சனாவா வாணிஸ்ரீயானு கேக்கிற நீ” என்று அவள் காதைப் பிடித்து மெல்ல திருக,

“ஏன் அதுக்கென்ன? சரி சொல்லுங்க காஞ்சனாவா வாணிஸ்ரீயா?” என்றாள் சகஜமாக.

அரியை ஆகர்ஷிக்கும் ஆதினியின் குணத்தில் இதுவும் ஒன்று. மனத்தில் எதையும் வைத்துக் கொள்ளமாட்டாள், பாசங்கற்ற பெண்! அதற்காக எல்லோரையும் மனத்தில் தோன்றுவதை பேசி வதைக்கும் பழக்கமும் இல்லை. ஆதினிக்குப் பிடிக்காதவர்கள் பற்றி கவலையே இல்லை. அவர்கள் வேறு உலகம் என்று ஒதுக்கி விடுவாள். பொய்யாக கூட பேச்சு இருக்காது. அவளையும் மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமிருக்காது.

ஆதினிக்கு பிடித்தால் மட்டும் அபாயம், படுத்திவிடுவாள். அதுவும் காதல் சுழல் ஆதினியை ஆட்டி வைத்தது.

“எங்க தாத்தா கிட்ட கேட்கிற கேள்வியை எங்கிட்ட கேட்பியா?” என்றான் அரி கிண்டலாக.

அவனை திருப்தியற்ற பார்வை பார்த்தவள், “அழகை ரசிக்கணும் அரிச்சந்திரன், காஞ்சனாவுக்கும் வாணிஸ்ரீக்கும் என்ன குறை?” என்று சண்டைக்கு வர,

“ரசிச்சிட்டா போச்சு!” என்று அவளின் முகத்தை அருகே இழுக்க,

“கனவெல்லாம் காண கூடாதுனு உங்களுக்கு ஆர்டர் போட்டிருக்கேன். படிக்கிற புள்ளை மனசை கலைக்க கூடாது” என்று சொல்லியவளின் கரங்களோ அரிச்சந்திரனின் வெற்று தோளில் ஜம்மென்று உலா போயின. கண்கள் கணவனை சுவாரசியமாய் ரசித்தது. அதில் அரிக்குக் கூச்சமானது, உணர்வுகள் தாறுமாறாய் எகிற, கடினப்பட்டு கட்டுக்குள் வந்தான்.

“ஏன்டி அரைடிக்கெட்! நீ மட்டும் கனவு காணலாமா? உன் மனசை நான் கலைக்கிறனா?” என்று கடுப்பானவன் நங்கென்று அவள் தலையில் கொட்டினான். ஆதினி தலையைத் தேய்த்தபடி கணவனை முறைக்க, தாத்தா அழைத்தார்.

“டேய், ரவி வந்திருக்கான்” என்று குரல் கொடுக்க,

“அப்பாவா?” என்றபடி ஆதினியும் அரியும் வெளியே வந்தனர்.

“என்ன மாமா? காலையிலயே” என்று கேட்க,

“பொங்கலுக்கு உங்களை முறையா அழைக்கணுமில்ல மாப்ள” என்றார்.

“போன்ல சொல்லிட்டீங்களே மாமா” என்று அரி கேட்க,

“இல்லை ஆதினியைப் பார்த்துட்டு போலாம்னு, ஒரு வாரம் ஆச்சு புள்ளையைப் பார்த்து” என்றார் மகளை வாஞ்சையாகப் பார்த்தபடி. அரி புன்னகைத்து அறைக்குள் சென்று விட, ஆதினி தாரா வீட்டுக்குப் போவதை எல்லாம் கதையாக அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ரவிக்குமார் சிறிது நேரத்தில் கிளம்பி விட, ஆதினியும் அரியும் தாரகை வீட்டிற்கு பொங்கல் வரிசை கொண்டு சென்றனர். அங்கேயே மதிய உணவை முடித்தனர்.

அடுத்த நாள் ‘போகி’. ஆதினி வீட்டிலிருந்து அரி வீட்டிற்கு சீர் வந்தது. பொங்கலன்று வீட்டில் பொங்கல் வைத்து, கடவுளை வணங்கி விட்டு மனைவியுடன் மாமனார் வீடு சென்றான் அரிச்சந்திரன். அடுத்த நாள் மாலையில் மாட்டு பொங்கல் விழாவுக்காக தாரகை வீட்டிற்கு அரியும் ஆதினியும் சென்றனர். இரவு ஏழு மணி போல் வீடு வந்தனர். வந்ததுமே ராமசாமி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். ராமசாமியும் இருவரையும் வாழ்த்தியவர், தனது சட்டைப் பையில் இருந்து இரண்டாயிரம் தாளினை எடுத்து ஆதினியிடம் கொடுத்தார். அரியிடம் ஒரு நூறு ரூபாயைக் கொடுக்க, அவன் முறைத்தான்.

“என்னடா ராஸ்கல் முறைக்கிற? பொம்பள புள்ளைக்குக் கொடுத்தா பொறுப்பா வச்சுக்கும், நீதான் சம்பாரிக்கிறியேடா தடிமாடு, தாத்தனுக்கு என்ன செஞ்ச?” என்று அவனை வம்பிழுத்தார்.

ஆதினி சிரித்தாள். அவளுக்கு போன் வர, அவள் நகர்ந்து போய்விட, பேரனை உட்கார வைத்து பேசினார் ராமசாமி.

“டேய் அரிச்சந்திரா! புள்ள வீட்ல இருக்கறப்பதான் டா நல்லாயிருக்கு. நம்ம ராஜாத்தி போனதும் உன் மொகரையே பார்த்துட்டு கிடந்தேன். ஆதினி வந்துதான் வீடு நல்லாயிருக்கு, இங்க இருந்தே படிக்க சொல்லு” என்றார்.

அரி அமைதியாக இருக்க,
“என்னடா அமைதியா இருக்க? சந்தோஷமா இருக்கீங்க தானேடா? நீ ஓரிடம், அவ ஓரிடம்னு இருக்கீங்க. எனக்கு மனசே கேக்கல” என்று வருத்தப்பட,

“தாத்தா! அதெல்லாம் கவலைப்படாத, நாங்க நல்லாயிருக்கோம். உன் கொள்ளுப்பேரன், பேத்தியை எல்லாம் நீ சீக்கிரம் பார்க்கத்தான் போற. உன் பேத்தி வீட்ல இருந்து பாயாசம் கொடுத்தா, இரு எடுத்துட்டு வரேன்” என்று தாரகையின் வீட்டிலிருந்த பாயாசத்தை எடுத்து வந்து கொடுத்தான்.

அறைக்குள் நுழைந்து சட்டையைக் கழட்டி விட்டு, பனியனுடன் மெத்தையில் உட்கார, ஆதினி மெத்தையில் காகிதங்களைப் பரப்பி வைத்திருந்தாள். ஸ்பீக்கரில் போட்டு போன் பேச, இவன் வந்த பின்னும் மாற்றவில்லை.

“ஏன்டா, அவ உனக்கு ஓகே சொல்லாதப்ப உரிமை எல்லாம் தேவையா எரும? இப்படியே செஞ்சா செருப்படி டா உனக்கு” என்றாள் ஆதினி கடுப்பாக.

“பின்ன என்னடி? அந்த கிறுக்கு கிஷோர்ட்ட போய் பேசுறா, எங்கிட்ட பேச டைம் இல்லைன்றா” என்றான் எரிச்சலாக.

“நிரஞ்சன் பேசுறான்” என்று ஆதினி கணவனிடம் சொல்ல,

“மாம்ஸா? அவர்ட்ட கொடுடி. நீ தண்டம்!” என்று தோழியைத் திட்டினான் நிரஞ்சன்.

“சொல்லுடா நிரஞ்சா!” அரி உற்சாகமாகப் பேச,

“மாம்ஸ், என் காதலை நீங்கதான் சேர்த்து வைக்கணும்” என்றான் கோரிக்கையாக.

ஆதினி தலையணையை முதுகில் வைத்து சாய்ந்தபடி, பேனாவைக் கையில் சுற்றி கொண்டு இவர்கள் பேச்சைக் கேட்டாள்.

“நான் தண்டமா? என் ரேஞ்ச் தெரியாம பேசுறான். ஐடியா கேக்கிற ஆளை பாரு” என்று முணுமுணுக்க, அரி அவள் கன்னத்தில் கிள்ளினான்.

“சொல்லுடா, யாரை லவ் பண்ற? என்ன ப்ராப்ளம்?” அரி விசாரிக்க,

“எல்லாம் அந்த ஷெரினைத்தான், இந்த பொண்ணுங்களை புரிஞ்சவே முடியல மாம்ஸ், பார்த்தவுடனே எப்படி லவ் வரும் சொல்லுங்க. பார்க்க பள பளனு இருந்துட்டு பாய்சனா இருந்தா, பேசி பழகினாதானே தெரியும்? இந்த ஷெரின்ட்ட ப்ரண்டா இருந்தேன், இப்போ பிடிச்சிருக்கு லவ் சொன்னா, ப்ரண்ட் கிட்ட லவ் சொல்றனு திட்டுறா.”

நிரஞ்சன் ஷெரின் தன் காதலை ஏற்கவில்லை என்று புலம்ப,
“ஏண்டா, பொண்ணுக்கே ஓகே இல்லைனா நான் எப்படி ஹெல்ப் பண்றது. நான் பெத்தவங்களுக்கு ஓகே இல்லைனா கட்டி வைப்பேன் டா, பொண்ணுக்கே இல்லைனா எப்படி டா நிரஞ்சா!” என்றான் அரி.

“இவ அவ ப்ரண்ட் தானே? எனக்காக பேசுன்னு சொன்னா என்னை மட்டும் மானவாரியா பேசுறா உங்க பொண்டாட்டி” என்றான் கடுப்பாக.

“உனக்கு பிடிச்சது நீ சொல்லிட்ட, அவளுக்கும் பிடிச்சா சொல்லுவா. அவசரப்படாதடா! முதல்ல படிச்சு முடிடா” என்று அரி அறிவுரை சொல்ல,

“என்ன ஜோடியா வெறுப்பேத்துறீங்களா? அவளும் இதையே சொல்றா, போங்க மாம்ஸ்” என்ற நிரஞ்சன் சலித்துக் கொள்ள,

“டேய், முதல்ல போய் அசைன்மெண்ட் எல்லாம் முடிடா. அப்புறம் இதெல்லாம் பேசிக்கலாம், இல்லை நிவாஸ் சார் நம்மை துரத்தி அடிப்பாரு” என்ற ஆதினி நண்பனிடம் பேசி போனை வைத்தாள். இருவரும் சென்று சாப்பிட்டு கதவடைத்து வர, ஆதினி அவள் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து,

“நீங்க தூங்குங்க அரி, நான் அசைன்மெண்ட் முடிக்கணும். ஹால்ல உட்காரேன்” என்றாள்.

“நாளைக்கு பண்ணிக்கலாம், மணி பத்தாச்சு. தூங்கலாம் வா” என்றதற்கு,

“நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு, நிறைய முடிக்க இருக்கு. முடிக்காம காலேஜ் போனா கஷ்டம். நான் போறேன்” என்றாள்.

‘நாளைக்கு ஒரு நாள் தானா?’

அரியின் மனத்தில் ஏக்கம். இந்த ஒரு வாரமாக ஆதினியுடன் இருந்து விட்டு இப்போது மீண்டும் தனியாக இருக்க வேண்டும். ஆதினிக்கும் சொல்லிய பின், ‘ஒரே நாள், அப்புறம் காலேஜ்’ என்று மனம் அதில் உழன்றது.

அரியோ, “இப்ப தூங்கும்மா. காலையில எழுப்பி விடுறேன், ஹெல்ப் பண்றேன். முடிச்சிடலாம்” என்றான். ஆதினிக்கும் சோர்வாக இருக்க, அவன் அருகே படுத்தாள்.

“உனக்கு ஹாஸ்டல் போக ஓகே வா?” அரி கேட்கவும், அரி பக்கம் திரும்பியவள்,

“என்னை ஹாஸ்டல் போக சொன்னீங்க இல்ல, ஆறு மாசம் தனியா இருங்க, அப்போ தெரியும் ஆதினி அருமை.” என்று மிடுக்காக சொன்னாள்.

“அடியே! அரைடிக்கெட், அப்போ உன் அருமை தெரியணும்னு தான் ஹாஸ்டல் போறியா? உனக்கு என் அருமை தெரிஞ்சதா டி?” என்ற அரிச்சந்திரன் ஆதினியைக் கண்களால் களவு கொண்டான்.

“இந்த கண்ணை காட்டி கவுக்குறது எல்லாம் செல்லாது!” என்றபடி அருகே இருந்த அரிச்சந்திரனை கை வைத்து ஆதினி தள்ள, அரியோ அவள் பேச்சில் சிரித்தவன் ஆதினியை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

‘என்னடி விளையாட்டு என்று
சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
காலையில் கனவுகள் எங்கே?’

Read and share your thoughts friends

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 day ago

Very nice.

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 17 hours ago

எண்ணம் வேறென்றாலும் 

என்னில் உன் நினைவு தான்
என்றும் அது மாறாதது....

அர டிக்கெட்🤩😂😂😂
அடிக்கடி மனசு மாறுது
அரி _ நல்ல பேர் வச்ச....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top