Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 16

வாழ்க்கை மாற்றங்கள் வருடங்கள் கழித்து வருவதில்லை, நொடிகள் போதும்! தலைகீழாக மாறிப்போக. அந்த இரவு சிலருக்கு அப்படியான ஒன்று!

ஆதினியும் அவள் அறைத்தோழி பூஜாவும் பேசியபடி நடந்து விடுதி படிகளில் ஏறினர். இடையே பக்கத்து அறைப்பெண் ஆதினியைப் பிடித்து வைத்து பேச, பூஜா அவர்கள் அறைக்கதவைத் திறந்தாள். கதவைத் திறந்த பூஜா, கண்ட காட்சியில்,

“ஆதினீயீயீயீய்!!!!!!!!!!!!!!!” என்று அலறிவிட்டாள். அலறியவள் அடுத்த நொடி அதிர்ச்சியில் மயங்கிவிட, பூஜாவின் அந்த குரலுக்கே வார்டனும் மற்ற பேராசிரியர்களும் மேலே ஓடி வர,

“பூஜா…” என்று பதறிய ஆதினி ஓடிவந்து அறையைப் பார்க்க ஒரு நொடி ஆதினிக்கு இருட்டிவிட்டது. அறையின் ஓரத்தில் இருக்கும் நாற்காலியில், ஷெரின் உட்கார்ந்த நிலையில் உயிரற்று இருந்தாள். ஒரு கையில் ரத்தம் சொட்ட கத்தி இருக்க, ரத்தம் வழிந்து அந்த அறையில் தேங்கியிருந்தது. ஷெரினின் உயிர் எப்போதோ பிரிந்திருக்க, பார்த்த ஆதினிக்கு உயிர் போன உணர்வு.

“ஷெரீயீயீயீயீயீயீய்ன்!!!!!!!!!!!” என்ற அவளின் கதறல் அடுத்த கட்டிடம் வரை கேட்டது. ஆதினி ஷெரினை நெருங்க போக, பேராசிரியர்கள் அவளைத் தடுத்து, உடனே முதல்வருக்கும் டீனுக்கும் தகவல் சொன்னார்கள்.

அடுத்த அரை மணி நேரத்தில், காவல்துறை, மருத்துவ ஊர்தி எல்லாம் வர, அந்த செய்தி எல்லாருக்கும் பரவியது. திடீரென்று ஏற்பட்ட இழப்பில், சக தோழியின் பிரிவில் மாணவ மாணவிகள் கலங்கி இருக்க, ஆதினி அவள் கண்ட காட்சி கண்ணில் நிற்க, கதறிக்கொண்டே இருந்தாள்.

நிரஞ்சனும், கிஷோரும் வார்டனிடம் சண்டையிட்டு அவர்களும் மருத்துவமனை செல்ல, அவர்களும் ஷெரின் இறந்துவிட்டாள் என்றே சொன்னார்கள். போஸ்ட் மார்ட்டம் செய்ய சொல்லியிருக்க, கேரளாவில் இருக்கும் ஷெரினின் பெற்றோருக்குத் தகவல் சொல்லப்பட்டது.

மயங்கிய பூஜா விழித்துவிட, ஆதினி மூச்சு வாங்க அழுதவள் மயங்கி போனாள். என்ன முயன்றும் அவள் எழாமல் போக, அவளை பல்கலைக்கழகத்தின் உள்ளே இருக்கும் கிளினிக் அழைத்து சென்றனர்.

அந்த செய்தி அரிச்சந்திரனுக்குத் தெரிவிக்கப்பட, பதட்டமாக கிளம்பி பல்கலைக்கழகம் சென்றான். அங்கே சென்றதும் ஷெரின் இறப்பு தெரிய, அரிச்சந்திரனுக்கு நம்ப முடியவில்லை. போன முறை வந்தபோது பார்த்த பெண் இன்றில்லை. அவனும் ஸ்தம்பித்து நின்றான். ஷெரினின் புன்னகை முகமும், ‘அண்ணா’ என்றழைப்பும் காதில் ஒலிக்க, கண்கள் கலங்கின.

ஆதினிக்கு மருந்து ஏற்றப்பட்டு இருக்க, சிறிது நேரத்தில் விழித்துவிடுவாள் என்றனர். அரி உடனே ஷெரினை வைத்திருக்கும் அரசு மருத்துவமனை சென்றான். கிஷோர் இவனை கண்டதும்,

“மாமா” என்றபடி கட்டிகொண்டு கண்ணீர் வழிய கதறினான்.

“ஷெரின், எப்படி மாமா இப்படி செய்வா?” என்று அரியைக் கேட்டு கேட்டு அழுதான்.

“அவ சூசைட் பண்ணிட்டா சொல்றாங்க மாமா, அவ ஏன் அப்படி செய்ய போறா? எங்களை விட்டு போக அவளுக்கு எப்படி மனசு வந்தது. இதெல்லாம் பொய்தானே மாமா?” என்று அரற்றினான். அவனால் இன்னும் தோழி இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.

அரி கிஷோரை அணைத்தபடி அமைதியாக நிற்க, நிரஞ்சன் அவன் பார்வையில் விழுந்தான். அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் சுவரை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான், கண்கள் சிவந்திருக்க கண்ணீர் கூட வரவில்லை.

அப்படியொரு அதிர்வு அவனிடம், மாலை ஹாஸ்டல் டே’ விழாவில் பார்த்த அவன் காதலி, இப்போது இல்லையா? பேரதிர்ச்சிக்கும் பெரிதான ஒன்று உண்டானால் அதுவே நிரஞ்சனின் நிலை!

டாக்டரிடம் பேசியபடி வந்த காவல்துறை அதிகாரியைப் பார்த்த அரி கிஷோரிடம்,
“ஒரு நிமிஷம்டா” என்றபடி நகர்ந்தான்.

அங்கு காவல் சீருடையில் கம்பீரமாக நின்றபடி தீவிரமாக பேசிக்கொண்டிருந்தவனை அரி அழைத்தான்.
“சக்தி!” என்றதும்,

“மாம்ஸ், நீங்க எங்க இங்க?” என்றபடி சக்திவேல் திரும்பினான். இன்ஸ்பெக்டர் சக்திவேல் அரிச்சந்திரனின் உறவினன். அவன் மச்சான் ராஜதுரைக்கு பங்காளி.

“ஷெரின், ஆதினியோட ப்ரண்ட் டா” என்ற அரியின் குரலில்,

“ஓஹ், சூசைட் மாமா” என்றான்.

“அவ சூசைட் பண்ண வாய்ப்பே இல்ல சக்தி” அரி யோசனையாக சொல்ல,

“ப்ரைமரி இன்வெஸ்டிகேஷன்ல அப்படிதான் தெரியுது மாமா. போஸ்ட் மார்ட்டம் பண்ண இப்போ டாக்டர் இல்ல, வரதுக்கு இரண்டு மணி நேரம் ஆகும். காலையில ஆகிடும் ரிசல்ட் தெரிய ” என்றவன்,

“இந்த பசங்களை எல்லாம் போக சொல்லிடுங்க. யாரும் இருக்க வேண்டாம்” என்று கான்ஸ்டபிளுக்கு உத்தரவிட்டான். அவர் மாணவர்களுடன் பேச, உடன் பேராசிரியர் ஒருவரும் வார்டனும் போனார்கள்.

முதல்வரும் டீனும் கமிஷனுருடன் பேச, அடுத்த நாள் மதியம் போல் உடல் கூறாய்வு அறிக்கை வரும் என்றனர். அரி சக்தியிடம் சொல்லிக் கொண்டு மீண்டும் ஆதினியைப் பார்க்க பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வந்தான்.

ஆதினி அப்போது விழித்திருந்தாள். உடன் ஒரு ஆசிரியர் மட்டும் இருக்க, அரி வரவும் அவர் வெளியே சென்றார். அரியைப் பார்த்ததும் ஆதினி,

“அரி! ஷெரின் நல்லா இருக்கா தானே?” என்று கேட்டாள். ஷெரினை தூக்கி சென்றபோது அவள் அசைவற்ற உடல் பார்த்தும் கூட ஒரு கடைசி நம்பிக்கை, நிராசை என்று தெரிந்தும் கேட்டாள்.

“இல்லம்மா, போஸ்ட் மார்ட்டம் பண்ண ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க” என்று அரி அமைதியான குரலில் சொல்ல, ஆதினி மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“கையெல்லாம் ரத்தம் அரி, கத்தியை வச்சு குத்திட்டு சாகுற அளவு என்ன பிரச்சனை அவளுக்கு. எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே?” என்று புலம்பியபடி அழுதாள். கண்ணீர் வற்றி, தொண்டையின் ஈரம் காய்ந்து, குரலே மாறிப்போனது.

ஆதினி அப்படியே அழுதழுது உறங்கிப்போனாள்.

ஷெரினை ஐந்து வருடங்களாக தெரியும். மிக மிக நெருங்கிய தோழி, ‘ஷெரினே..!’ என்ற அழைப்பில் தான் அவள் கல்லூரியில் நாளே தொடங்கும். அதுவும் ஒற்றை பெண்ணாய்ப் போன ஆதினிக்கு ஷெரின் உடன்பிறந்தவள் போல. அவளின் இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாது. இன்னும் இதனை யாராலும் நம்ப முடியவில்லை. அரிச்சந்திரனுக்கே அது மனத்தை வருத்தியது.

அப்படியே அந்த இரவு முடிந்து, விடியல் வர ஆதினி அரியிடம் ஷெரினை பார்க்க போக வேண்டும் என்றாள். அரி சக்திக்கு அழைத்துப் பேசியவன்,

“நம்மை அங்க அலோவ் பண்ண மாட்டாங்க ஆதினி, இன்னும் ப்ரோசீஜர் முடியல..” என்றவன் வீட்டுக்கு அழைத்து தாத்தாவிடம் பேசினான். தங்கைக்கு அழைத்து அவளை வீட்டுக்குப் போக சொல்லி தாத்தாவை பார்க்க சொன்னான்.

ஆதினிக்கு கழுத்தில் ரத்தம் வழிய, கத்தியோடு ஷெரின் இருந்த காட்சியே கண் முன்னே நிற்க, கண்களை மூட முடியவில்லை. ‘ஷெரின் நல்லா இருப்பா, இதெல்லாம் கனவு’ என்று சமாதானம் செய்ய பார்த்தாள். ஆனால் இல்லையே!!

ரத்த சொந்தமின்றி, திருமணம் போன்ற பிடித்து வைக்கும் உறவின்றி, மனத்தால் மட்டுமே உணர்ந்து, தானாகவே தேடிக்கொள்ளும் நட்பென்னும் உறவு மிக மிக சிறந்தது! உன்னதமானது அல்லவா? நல்ல நட்பு கிடைத்து விட்டால் பெரிய பேறே இல்லையே, அப்படியான ஒருத்தியை இழந்துவிட்டு, அதுவும் அவள் வாழ விரும்பாமல் தன்னுயிரை மாய்த்திருக்க, அது ஆதினியை இன்னும் வதைத்து.

என் தோழிக்கு ஏதோ பிரச்சனை இருந்தும் நான் கவனிக்கவில்லையே என்று நொந்து போனாள். ஹாஸ்டல் டே அன்று, ஷெரின் தலை வலியாக இருக்கிறது என்று ஆதினியிடம் சொல்லிவிட்டு சீக்கிரமே அரங்கில் இருந்து வந்துவிட்டாள். இப்போது அரியிடம் அதனை சொல்லி சொல்லி அழுது ஓய்ந்தாள்.

“அவ அன்னிக்கு டல்லா இருந்தா அரி, தலைவலி ரூம் போறேனு சொன்னா, நான் நா.. அவளை பார்க்காம விட்டுட்டேன். இங்க நான் எஞ்சாய் பண்ணிட்டு இருக்கிறதுல, அவளை மறந்துட்டேன். நான் மட்டும் சீக்கிரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது, நான் நல்ல ப்ரண்டே இல்ல… அய்யோ…. ஷெரின் இனிமே வரவே மாட்டாளா? என்னால பார்க்க முடியாதா? அவளுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும், ஏன் இப்படி செஞ்சா அரி” என்று கேட்டு கேட்டு கதறித் தவித்தாள்.

ஆதினியின் எத்தனையோ அவதாரம் கண்டிருந்தாலும், அதனை எல்லாம் சமாளிக்க முடிந்தாலும் இப்படி அரி பார்த்ததே இல்லை. அரிக்கே என்ன சமாதானம் செய்வதென்று தெரியவில்லை.

✅ End of Episode 16
How did you feel about this episode?
❤️ 2 😢 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

நல்லா இருந்த நட்பு 

நிமிடத்தில் மறைந்து போன மாயம் என்னவோ.....
தோழியிடம் பகிராத
துயரம் என்னவோ....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top