Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 18

அரிச்சந்திரன் ஆதினியின் சத்தத்தில் முறைக்க, அவள் அமைதியாகி விட்டாள். எதிர்ப்பாராமல் நிகழ்ந்த அந்த மரணத்தை ஏற்கவே முடியவில்லை. அந்த இயலாமை கோபமாக வெளிவந்தது.

இந்த சத்தம் வாசல் வரை கேட்க, ராஜதுரை தாரகையை அழைக்க அப்போதுதான் வந்தான். தாரகை சோகமாக அமர்ந்திருக்க, அதனை பார்த்தவன்,

“என்னாச்சு? ஏன் இந்த ஆதி இப்படி கத்துறா?” என்றான் நுழையும் போதே.

தாரகை உடனே, “இப்போ நீங்க ஏன் சத்தம் போடுறீங்க? அவ அப்செட்ல இருக்கா கத்துறா, அண்ணா சாப்பிட கூப்பிட்டான் போல..” என்று பதிலளிக்க, ராமசாமி துரையிடம்,

“பேத்தி சரியாவே சாப்பிடுறதில்லைய்யா” என்றார் வருத்தமாக.

ராஜதுரைக்கு ஆதினி மேல் கோபம் வந்தது. தோழியின் இறப்பு இழப்பே, அதற்காக வீட்டில் இருப்பவர்களை வருத்துவதா? இவ்வளவு சத்தம் வேறு என்று அவனுக்குக் கோபம்.

ராஜதுரையின் சத்தம் கேட்டு, அரி எழுந்து வந்தான். முகத்தைப் பார்த்தாலே களைப்பு தெரிய, ராஜதுரைக்கு வருத்தமாக இருந்தது. அரிச்சந்திரன் மீது ராஜதுரைக்கு மரியாதை அதிகம், அப்பா அம்மா இல்லாமல் வளர்ந்தவன், தங்கை, தாத்தாவை பார்ப்பவன் என்று ஒரு அபிமானம்.

அதற்காகவே தன் ஒன்றுவிட்ட தங்கை ஆதினியை அரிச்சந்திரனுக்குக் கட்டிவைத்தான். இப்போது ஆதினி அரியை மதிக்காமல் கத்த, ராஜதுரைக்குப் பிடிக்கவில்லை.

“வாங்க மாப்பிள்ளை, சாப்பிடுங்க” என்று அரி சொல்ல,

“நான் சாப்பிட்டேன் அரி, நீங்க சாப்பிடுங்க” என்றவன்,

“ஆதினி இங்க வா” என்று தங்கைக்கு குரல் கொடுத்தான்.

“அவ அப்புறம் வருவா” என்று தாரகை கணவனிடம் சொல்ல,

“நான் என் தங்கச்சியைக் கூப்பிட்டேன்” என்று மனைவியிடம் அழுத்தமாக சொல்ல, அரி தங்கையைக் கிண்டலாகப் பார்த்தான். தாரகை கணவனிடம்,

“போயா வெங்காயம்” என்று மெல்ல முணுமுணுத்தவள் தாத்தாவின் கால்களைப் பிடித்து விட்டபடி கீழே அமர்ந்தாள்.

“ஆதினி!!” என்று மீண்டும் ராஜதுரை சத்தம் போட, ஆதினி வெளியே வந்தாள்.

“வாங்கண்ணா” என்றாள்.

“ஏன்மா சாப்பிடுற நேரம் இன்னும் ஆகலயா?” என்று கேட்க,

“எனக்கு வேண்டாம்ணா” என்றவளின் பார்வை அரியிடம் போனது. அவன் இவளை கண்டுகொள்ளாது இட்லி உண்டான்.

ராஜதுரை, “இங்க வா” என்று தங்கையின் கையைப் பிடித்து வாசலுக்கு அழைத்து வந்தான்.

“என்னடி நடக்குது?” அரி சிரிப்போடு தாரகையிடம் கேட்க,

அவளோ, “அவர் தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணுவாரா இருக்கும்.” என்றாள்.

அவர்கள் சிரிப்பைப் பார்த்த ராமசாமி, “பாரு என் பேரன் தங்கச்சியை சமாதானம் பண்ணிடுவான். பொறுப்பான பய, நான் சொன்னதைக் கேட்டு உனக்குப் பொண்ணு பார்த்து கட்டி வச்சான்ல.. ” என்று ராஜதுரை புகழ் பாட,

“ஓஹ், நீ ராஜதுரை ரசிகர் மன்றமா தாத்தா?” என்று அரி கிண்டல் செய்தான். இவர்கள் இங்கே பேச, வெளியே வந்த துரை,

“என்ன நினைச்சிட்டு இருக்க ஆதினி?” என்றான் அதட்டலாக. ஆதினிக்கு சிறு வயது முதலே அவன் மீது பாசம் அதிகம், கூடவே அண்ணன் இல்லாத அவளுக்கு அவன் அண்ணன் வேறு, அதனால் மரியாதையும் இருக்க அதிகம் வாயாட மாட்டாள். இப்போதும் அமைதியாக இருக்க,

“உன் ப்ரண்ட் இறந்தது கஷ்டம், இல்லனு சொல்லல. அதுக்காண்டி வீட்ல இருக்கவங்களை நீ நினைக்க மாட்டியா? அரியைப் பார்க்கிற தானே? அவர் சின்ன வயசுல அம்மா, அப்பாவை ஒரே நேரத்துல இழந்தவர். எவ்வளவு பொறுப்பா இருக்கார்? அவரை பார்த்து நாம கத்துக்க வேண்டாமா? தாத்தா, அவ்வளவு வயசானவர் உன்னை நினைச்சு வருத்தப்படுறார். அங்க சித்தப்பா எங்கிட்ட புலம்புறார். இப்படி எல்லாருக்கும் உன் கவலை”

“நானும் உன்னை மாதிரி, என் அப்பா போன பின்னாடி அவரையே நினைச்சு இருக்கிற என் அம்மாவை கவனிக்கல, தாரக வந்த அப்புறம்தான் எனக்கு அம்மாவை இன்னும் புரிஞ்சிக்க முடியுது. இருக்கவங்களை பார்க்கணும் ஆதிம்மா, அதை புரிஞ்சிக்க. இறந்தவங்க வர மாட்டாங்க.” என்றான் அழுத்தமாக.

ஆதினிக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. இருந்தும் ஷெரினின் இறப்பு தந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ராஜதுரை சொல்வது புரிய, தலையசைத்தாள். ஆனால் கண்களில் நீர்.

“இப்ப நீ அழறதைப் பார்த்து தாரகை என்னை பேசணும், அதானே?” என்று ராஜதுரை மிரட்டலாகக் கேட்க, அப்போதும் ஆதினி பேசவே இல்லை.

“போய் சாப்பிடும்மா” என்று ராஜதுரை கொஞ்சம் பொறுமையாக சொல்ல, ஆதினி,

“நீங்களும் வாங்கண்ணா” என்றாள்.

“நான் சாப்பிட்டு வந்தேன், நீ போ.” என்றவன் உள்ளே சென்றான். ஆதினி சாப்பிட போக, அரி அவள் தட்டில் இட்லி வைக்க, அமைதியாக உண்டாள்.

ராமசாமி, ராஜதுரையை மெச்சுதலாகப் பார்த்தார். ராஜதுரை தாரகையை அழைத்து செல்ல, ராமசாமி உறங்க போனார். அரிச்சந்திரன் வாசல் கேட்டைப் பூட்டியவன் ஆதினி உண்டு முடிக்க, அவளை வெளியே அழைத்தான்.

ஆதினி கையைப் பிடித்து மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். இருள் அடர்ந்த வானம்! நாமும் நம் பிரச்சனைகளும் சிறியது என்பது போல் அந்த வானம் அத்தனை உயர்வாக, தூரமாக இருந்தது.

அரிச்சந்திரன் அவள் கையைப் பிடித்து அங்கே இருக்கும் சுவரில் சாய்ந்தான். கால்களை நீட்டியவன் ஆதினியைக் கையைப் பிடித்து நெட்டி முறித்தான்.

“நான் கொஞ்ச நாள் எங்க வீட்ல போய் இருக்கவா?” ஆதினி மெல்ல கேட்க,

“இது யார் வீடு?” என்று கேட்டு அவள் கை விரலை அழுத்தி நெட்டி முறித்தான்.

அவள் உடனே, “வலிக்குது” என்று கைகளை இழுத்துக் கொண்டாள்.

“இங்க இருந்தா உங்களை இன்னும் கடுப்பேத்துவேன், தாத்தாவும் பாவம். அங்க போய் கொஞ்ச நாள் இருக்கேன் அரி”

“அங்க போனாலும் இப்படியே இருப்ப, எனக்குத் தெரியுது ஆதினி, இதெல்லாம் கஷ்டம்னு. பட் வேற வழியில்லை” என்றான் அழுத்தமாக. உண்மையில் ஆதினிக்கு ஷெரின் இல்லாமல் எப்படி கல்லூரி போக போகிறோம் என்ற பயம், அவள் இல்லையென்பதை இன்னும் ஏற்க முடியவில்லை.

ரத்தம் சொட்ட, அவள் இருந்தது கண்ணில் நின்று உறக்கம் பறித்தது, அச்சம் கொடுத்தது.

“யோசிச்சு பாரு, நீ இப்படி இருந்தா ஷெரின் விரும்புவாளா?” என்று அரிச்சந்திரன் ஆதினியைத் தன் முகம் பார்க்கும்படி திருப்பிக் கேட்க, அந்த கேள்வியில் ஆதினிக்கு அழுகை வர, அப்படியே அவன் தோளில் முகம் மறைத்தாள். அரி அவளை ஒரு கையால் அணைத்துக்கொள்ள, ஆதினிக்கு பெரும் அழுகை.

பத்து நிமிடத்துக்கும் மேல் அழ, அரி அப்படியே விட்டான். ஆதினியாக கண்ணைத் துடைத்து நிமிர, அரி அவளையே பார்த்தான். ராஜதுரை பேசிய பின், ஆதினிக்கு அரியைத் தான் கஷ்டப்படுத்துகிறோம் என்று புரிந்தது, அதனால் அப்பா வீடு போகிறேன் என்றாள். இப்போது இவன் பார்வை ஆறுதலாய் வருடிக் கொடுக்க, அரி மெல்ல பேசினான்.

ஆதினியின் முதுகை வருடி தட்டிக்கொடுத்தான், தென்றலின் தலைகோதலாய் அவன் ஆறுதல் இருக்க, ஆதினி கண்மூடி தோள்சாய்ந்தாள். அரிச்சந்திரன் மனைவியைத் தோள் சாய்த்தபடி அந்த வானத்து இருளில் மின்னிய நட்சத்திரத்தில் பார்வை பதித்துப் பேசினான்.

“என் தாத்தாவும் அப்பாவும் சின்ன வயசுல அடிக்கடி என்னையும் தாராவையும் தியேட்டர் அழைச்சிட்டுப் போவாங்க. லீவ்னாலே படம் பார்ப்போம், தாராவுக்குப் படம், அதோட ப்ரோடக்ஷன்ல ஆர்வம்னா, எனக்கு அப்போ பார்த்த படத்துல வர அட்வகேட்’ கேரக்டர்ஸ் ரொம்ப பிடிச்சுப் போச்சு, அப்போ இருந்து லாயர் ஆகணும்னு தான் என் ஆசை. என் அப்பாவும் எனக்கு ரொம்ப சப்போர்ட், நான் முதன்முதலா கோர்ட் போற நாளை அவர் ரொம்ப அதிகமா எதிர்ப்பார்த்தார். பட் அந்த நாள் பார்க்க அவர் இல்லை”

“என்னோட சீனியர் அட்வகேட் ஒன்னு சொல்லுவார், கடமைக்கும் துயரத்துக்கும் முடிச்சிப் போடக் கூடாதுனு, எங்க அப்பா என்னை பார்க்க இல்லைன்றது நிஜம்! அதையே நினைச்சிட்டு வருத்தமா இருந்து என்ன ப்ரோயோஜனம் சொல்லு?”

“நமக்குப் பிடிச்சவங்க விட்டுட்டுப் போன வெற்றிடத்தை, அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்து நம்மோட இருப்பு மூலமாதான் நிரப்பணும். இதெல்லாம் சொல்ல ஈசின்னு அனுபவிச்ச எனக்கு நல்லா தெரியும். ஆனா கண்டிப்பா இதையும் கடந்திடலாம்.”

“ஷெரின் உன்னைப் பார்த்துட்டு இருப்பா, நீ அழுதா ஏன் அண்ணா என் ப்ரண்டை அழ வைக்கிறீங்க கேக்கிறவ இப்படி உன்னை பார்த்தா சந்தோஷப்படுவாளா சொல்லு? அவளோட ஆசை, கனவு சேர்த்து நீ நிறைவேத்தணும் ஆதினி! அதுதான் நீ அவளுக்காக செய்யக்கூடியது, வேற ஒன்னும் செய்ய முடியாது. நீ ஃபீல் பண்ண கூடாது சொல்லல, ஆனா அதுலயே மூழ்கிடாத.” என்றவன் கண்களை மூடிக்கொண்டான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ஆதினி,
“வாங்க அரி, தூங்கலாம். நாளைக்கு நீங்க கோர்ட்டுக்குப் போகணும்ல, நானும் காலேஜ் போறேன்” என்றாள் அவளாகவே.

ஷெரினை அவளுக்குப் பிடிக்கும், அது போல் கணவனையும் பிடிக்குமே. இருவருமே அவள் இப்படி இருப்பதை விரும்பமாட்டார்கள். அடியோடு மாற முடியாவிட்டாலும் ஒரு அடியாவது எடுத்து வைப்போம் என்று நினைத்தவள், கல்லூரிக்கு செல்ல முடிவெடுத்தாள்.

அரியும் சோர்வாக புன்னகைத்தவன் எழுந்து கொண்டான். இருவருக்கும் சொல்லாத சோகங்கள் இருந்தாலும் சொல்லவில்லை. அமைதியாக உறங்கிப்போனார்கள்.

அடுத்த நாள் அரியே அவளை பல்கலைக்கழகம் அழைத்து சென்றான். விடுதி போகாதே என்று அரி சொல்லவில்லை. அவள் போக்கில் விட்டான்.

எப்போதும் இறக்கி விடும் இடத்தில் விட, அந்த டீ கடையில் நிரஞ்சனும் கிஷோரும் நின்றனர். நிரஞ்சன் கல்லூரி செல்லும் நுழைவாயிலை வெறித்துப் பார்க்க, கிஷோர் ஆதினியைப் பார்த்து அருகே வந்தான்.

“நிரஞ்சன் எப்படி இருக்கான்?” என்று அரிச்சந்திரன் கேட்க, ஆதினி நிரஞ்சனின் அருகே சென்று உட்கார்ந்தாள். அவளை திரும்பி ஒரு நொடி பார்த்தவன், பேசவில்லை.

கிஷோர், “இவங்க இரண்டு பேரை நினைச்சா எனக்கு கவலையா இருக்கு மாமா” என்றான்.

“ஆதினி இப்ப பரவாயில்லை, நீ நிரஞ்சனை பார்த்துக்கோ.” என்ற அரி மனைவியிடம் தலையசைத்து விட்டு கிளம்பினான்.

ஷெரின் மறைந்து பத்து நாட்களுக்குப் பிறகு, இன்றுதான் ஆதினி கல்லூரி வருகிறாள். கடந்த நாட்கள் கனவென ஆகாதா என்ற கேள்வி இருந்தாலும், அரி சொன்னதை நினைவு கூர்ந்தாள். அமைதியாக வகுப்பில் சென்று அமர்ந்தாள். இவள் தனியாக இருப்பது பார்த்து, பூஜா உட்கார வர ஷெரினின் இடத்தில் யாரையும் உட்கார வைக்க பிடிக்கவில்லை.

“நான் தனியாவே உட்கார்ந்துப்பேன்” என்று ஆதினி சொல்லிவிட்டாள். வகுப்புகள் நடக்க, ஆதினிக்கு எண்ணங்கள் அலைபாய்ந்தாலும் முயன்று கவனித்தாள்.

இரவு ஆதினியும் பூஜாவும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வேறு அறையில் தங்கினார்கள். அதே தளத்தில்தான் அவர்கள் முன்னால் இருந்த அறையும் இருந்தது. எப்போதும் அறை வாசலில் நின்று எதிரே தெரியும் வெட்டவெளியில் நின்று தைரியமாக பேசும் ஆதினிக்கு ஒரு அலைப்புறுதல்.

அன்று இரவு சீக்கிரமே உண்டு, எட்டு மணிக்கே அரிச்சந்திரனிடமும் அவள் அப்பாவிடமும் சிறிது நேரம் பேசியவள், அறைக்குள் வந்து படுத்துவிட்டாள். கண்களை மூடி அரை மணி நேரம் உறங்கியிருப்பாள்.

ஆதினியிடம் தீடீரென ஒரு அலறல்!! அப்படியே உடல் தூக்கிப்போட சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். பூஜா அவள் கத்தியதில் பயந்து போனாள்.

ஆதினிக்கு வியர்க்க, அறைக்குள் இருக்க முடியாது வெளியே வந்துவிட்டாள். உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும் போல் இருக்க, தேவையானவை எடுத்துக்கொண்டு பூஜாவிடம் சொல்லிவிட்டு கீழே வார்டனை பார்த்து ‘கேட் பாஸ்’ வாங்கினாள். பத்து மணிக்கு மேல் விடுதியை விட்டு அனுமதி இல்லை என்பதால் வேகமாக யுனிவர்சிட்டியின் மெயின் கேட் வந்தவள் கிஷோருக்கு அழைத்தாள்.

“நான் ஊருக்குப் போறேன், கூட வரியா டா?” என்று கேட்க, ‘இந்த நேரமா?’ என்று நினைத்தாலும் கிஷோர் தோழியை தனியே விடாமல் அவளோடு கிளம்பினான். பேருந்தில் போகும்போது கிஷோர்,

“ஏன் எரும? ஒன்னு சாயங்காலம் கிளம்பியிருக்கணும். இல்லை நாளைக்குக் காலையில கிளம்பணும். இப்ப கிளம்பி பத்தரை மேல் ஆகிடும். அதுக்கு மாமா கிட்ட சொன்னாலும் உன்னை அழைக்க வருவாங்க தானே?” என்று திட்டினான்.

“எனக்கு ஹாஸ்டல்’ல தூங்கவே முடியலடா” என்றாள் பேருந்தின் ஜன்னலை திறந்துவிட்டபடி. சிலுசிலுவென காற்று முகத்தில் மோத, அந்த காற்று கூட அந்த நேரம் ஆறுதலாய் இருந்தது.

“சரி சரி விடு” என்றபடி போனை பார்த்த கிஷோர் அமைதியாகி விட்டான். பத்தரை மணி ஆகிவிட்டது இவர்கள் வீடு சேர, அரிச்சந்திரன் அப்போதுதான் உறங்க போனான். ஆதினியிடமிருந்து அந்த நேரம் அழைப்பு வர,

“என்னாச்சு ஆதினி?” என்றான் பதட்டமாக.

“அரி, நம்ம வீட்ல இருக்கேன். கதவை திறங்க” என்றதும் வேகமாக வந்து கதவையும் வெளி கேட்டையும் திறக்க, ஆதினியும் கிஷோரும் நின்றனர். ஆதினி வேகமாக வீட்டுக்குள் சென்று அறைக்குள் படுத்தாள்.

கிஷோரிடம், “என்னடா ஆச்சு?” என்று கேட்க,

“ஹாஸ்டல்’ல தூக்கமே இல்லைனு அலறி அடிச்சி எழுந்துட்டாளாம் மாமா, பூஜா மெசெஜ் பண்ணியிருக்கா. இவளே வீட்டுக்குப் போறேன், கூட வானு கால் பண்ணினா, அதான் வந்தேன். நான் கிளம்புறேன் மாமா” என்று கிஷோர் சொல்ல,

“ஏன் மகாராஜா சூட் ரூம்ல தங்க போறீங்களோ? ஒழுங்கா வாடா, நம்ம வீட்ல தூங்கிட்டு நாளைக்கு நீயும் உன் ப்ரண்டும் மரியாதையா காலேஜ் போறீங்க, வரதுக்கு முன்னாடி எனக்குக் கால் பண்ணா என்னடா?” என்று அரிச்சந்திரன் முறைத்தபடி கேட்டான்.

“இவ கிட்ட சொன்னா நீங்க டயர்டா இருப்பீங்கனு சொன்னா மாம்ஸ், டென்ஷனா இருந்தா சரினு நானும் கேள்வி கேட்கல” என்றான்.

“சரி, வா. இந்த ரூம்ல படுத்துக்கோ, என் லுங்கி இருக்கு மாத்திக்கிறியா?” அரி ஒரு அறையைக் காட்டி கிஷோரிடம் சொல்ல,

“இதுவே ஓகே மாம்ஸ், நீங்க போய் ஆதினியைப் பாருங்க” என்றான்.

அரிச்சந்திரன் அறைக்குள் வந்து ஆதினியின் அருகே படுக்க, ஆதினி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“சாரி அரி, இன்னிக்கே போய்ட்டு வந்துட்டேனு திட்டாதீங்க. நானும் காலையில் இருந்து மேனேஜ் பண்ணினேன், ஆனா இப்போ அங்க தூங்கவே முடியல. எனக்கு ஷெரின் ஞாபகமாவே இருக்கு. நான் ஹாஸ்டல் போகல” என்றாள் கலவரமாக.

மனைவியை அணைத்த அரியும், அவளின் முகத்தில் விழுந்த முடிகளை ஒதுக்கிவிட்டு, நெற்றியில் மெல்ல முட்டி,
“சரிடி, இதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற? இனிமே நோ ஹாஸ்டல்! இங்கயே இரு. இப்போ நீ நம்ம வீட்ல இருக்க, ரிலாக்ஸ்டா தூங்கும்மா” என்று சொல்ல ஆதினியும் மெல்ல உறங்கினாள்.

அரிச்சந்திரன் ஆதினி இப்படி கலவரமாக பேசவும் முடிவு செய்து விட்டான், இனி இவளை ஹாஸ்டல் போக சொல்லக்கூடாது என்று!

அடுத்த நாள் அரி வழக்கம்போல் எழுந்து, டீயை குடித்தபடி நாளிதழை புரட்ட, ஆதினி எழுந்து வந்து விட்டாள்.

அரிச்சந்திரன் கறுப்பு நிறத்தில் ஸ்லெவ்லெஸ் பனியனும், சாம்பல் நிற வேஷ்டியுமாக வாசலை பார்த்து, அந்த இதமான காலை வேளையில் பேப்பர் படித்தபடி படியில் உட்கார்ந்திருந்தான்.

அவனை பார்த்த ஆதினிக்குத் தானாக முகத்தில் புன்னகை மலர்ந்தது. நேற்றைய இரவெல்லாம் எங்கோ போனது.

அப்படியே அவனை உரசிக்கொண்டு தோளில் சாய, அரி, “டீ ரெடி, எடுத்துட்டு வா” என்றான்.

“ம்ம்” என்றபடி கண்மூட,

அரிச்சந்திரன், “இன்னிக்குக் காலேஜ் போக வேண்டாம், நாளைக்கு ஃப்ரைடே, அப்புறம் வீக்கெண்ட் தானே? லீவ் போடு.” என்றதும்,

“ஓகே” என்ற ஆதினி, “நான் போய் டீ எடுத்துட்டு வரேன்” என்று எழுந்து கிச்சன் சென்றாள். கிஷோர் எழுந்தவன், வாசலில் அரி இருப்பதை பார்த்து அங்கே வர, அரிச்சந்திரன் பழக்கத்தில்,

“ஏய் அரைடிக்கெட்! கிஷோருக்கும் டீ எடுத்துட்டு வா” என்றான். அதை கேட்ட கிஷோரோ,

“அரைடிக்கெட்டா??!!” என்று கேட்டபடி வாய்விட்டு சிரித்தான். அரிச்சந்திரன் சின்னதாய் சிரித்து,

“டேய், ஊரையே கூட்டாதடா. மெதுவா சிரி” என்று சொல்ல, அதற்குள் ஆதினி டீயை நண்பனிடம் நீட்டினாள்.

“நீ பெரிய அராத்துனு நாங்க நினைச்சிட்டு இருக்கோம், மாம்ஸ் என்னடி உன்னை பொசுக்குனு அரைடிக்கெட்னு சொல்லிட்டாரு, பரவாயில்ல மரக்கா சைஸ்ல இருக்க உன்னை அப்படித்தான் சொல்லணும்” என்று கிஷோர் வம்பிழுக்க,

“டேய், ஓவரா பேசாத.” என்று ஆதினி மிரட்ட,

“உங்கிட்ட எல்லாம் நான் பேசவே கூடாதுடி, நைட் ஃப்ரண்ட்டுனு ஒருத்தனை கூட்டிட்டு வந்தோமே, அவன் என்ன ஆனானு பார்த்தியா? ஃபிகரைப் பார்த்ததும் ப்ரண்டை கழட்டி விடுறதுல பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒன்னுதான் போல..” என்று டீயை பருகியபடி கிஷோர் புலம்பினான்.

“ஃபிகரா?” என்று ஆதினி அரிச்சந்திரனை பார்வையால் அளக்க, அவன் செல்லமாக முறைத்தான்.

“ஏன் நான் செஞ்சா என்ன? இவர் செஞ்சா என்ன? உன்னை நல்லா கவனிச்சிட்டு தானே வந்தார்” என்று ஆதினி சொல்ல,

“டீ நல்லா இருக்கே, நீயா இவ்வளவு சீக்கிரம் போட்ட?” டம்ளரை நீட்டியபடி கிஷோர் கேட்க,

“இவர் முன்னாடியே போட்டு வச்சிட்டார், நான் எடுத்துட்டு வந்தேன்” என்றாள் ஆதினி.

அரிச்சந்திரனை உட்கார்ந்தபடி தோளோடு அணைத்த கிஷோர்,
“மாம்ஸ், அடுத்த ஜென்மத்துல நான் பொண்ணா பொறந்தா, நீங்கதான் என்னைக் கட்டிக்கணும் சொல்லிட்டேன்.” என்று கொஞ்சி பேச, ஆதினி கிஷோரின் முதுகிலே அடித்தாள்.

“அவர் பக்கத்துல இருந்து தள்ளி உட்காருடா, ரொம்பத்தான் கொஞ்சுறான்” என்று ஆதினி முறைக்க, அரி சிரித்தபடி எழ,

“நான் காலேஜ் கிளம்புறேன் மாம்ஸ், நீ வரியா இல்லையா?” என்று ஆதினியைக் கேட்க,

“நான் நாலு நாள் லீவ்” என்றாள்.

“மாமா, என்ன இது?”

“லீவ் போட சொன்னதே அவர்தான், வெவ்வே” என்று வம்பிழுத்தாள்.

“நீ தாத்தாவை எழுப்பி டீ கொடு, நான் இவனை பஸ் ஏத்தி விட்டு வரேன்” என்ற அரி கிஷோரை அழைத்து கொண்டு போனான்.

“இனிமே அவ ஹாஸ்டல் வரமாட்டா கிஷோர். இங்க இருந்தா தனியா இருக்கணும் பார்த்தேன், எப்படியும் அந்த நேரம் காலேஜ்ல தானே இருப்பா, ஈவினிங் தாத்தா இருப்பார், இல்லை தாரா வீட்டுக்கு வருவா. அங்க வந்தா ஷெரினை நினைச்சிட்டே இருப்பா. எல்லாத்தையும் ஓவர்கம் பண்ணனும் இல்லையா? நீயும் நிரஞ்சனை பாரு” என்று கிஷோரிடம் போகும் வழியில் சொன்னான் அரிச்சந்திரன். கிஷோருக்கும் அதுவே சரியெனப்பட்டது, நேற்று அவ்வளவு கவலையாக இருந்தவள், அரியின் அருகாமையால் இயல்பாக இருப்பதை கவனித்தான் தானே?.

“கரெக்ட் மாம்ஸ், நான் பார்த்துக்கிறேன்” என்றவன்,

“ஆனா, அடுத்த ஜென்மத்துல ஆதினியெல்லாம் இல்லை, எனக்குத்தான் நீங்க” என்று கிண்டல் செய்தபடி பேருந்து நிலையத்தில் இறங்கினான்.

அரி வீட்டுக்கு வந்தவன் வழக்கம் போல் கோர்ட் கிளம்பினான். ஆதினியைப் பார்க்க,

“நானும் தாத்தாவும் படம் பார்க்க போறோம், மதியம் நான் சமைக்க போறேன்” என்று ஆதினி தன்னை இயல்பாக்க சொல்ல, அது அரிச்சந்திரனுக்குப் புரிந்து பிடிக்கவும் செய்ய, அவளை அணைத்தவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

“அப்போ உன் சமையலை டேஸ்ட் பண்ண, முடிஞ்சளவு சீக்கிரமே வர பார்க்கிறேன்” என்று புன்னகையோடு விடைப்பெற்றான்.

ஆதினி சமைத்து, தாத்தாவோடு படம் பார்த்து என்று பொழுது ஓட, மதியம் உண்ட பின் அறைக்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்தவள் பார்வை, அழுக்குத் துணிகள் இருக்கும் இடத்தில் விழுந்தது.

ஆதினி விடுதியில் முன்பு இருந்த அறை இப்போது பூட்டியிருக்கிறது. இடையே அவர்கள் பொருட்களை எல்லாம் மொத்தமாக அள்ளி காவல் துறை கொடுத்து விட்டனர். இவளின் பொருட்கள், உடைகள் எல்லாம் அரி சென்ற வாரம் எடுத்து வந்திருந்தான். அது எல்லாம் சேர்ந்திருக்க, இந்த நேரத்தில் சுத்தம் செய்து விடலாம் என்று எல்லாவற்றையும் எடுத்தாள் ஆதினி.

ஒவ்வொன்றாக எடுத்து போட, ஷெரின் அவளுக்கு பரிசளித்த அந்த புது பெட்ஷீட்டில் அவளின் பார்வை பதிந்தது. ஷெரின் ஞாபகத்தில் அப்படியே சில நிமிடம் அமர்ந்தாள்.

அதனை வாஷிங்மெஷினில் போடும் போது தான், பெட்ஷீட்டில் இருந்த செந்நிறம் அவளை உறுத்தியது. நன்றாக உற்றுப்பார்க்க, உதிரத்தின் துளி காய்ந்து இருந்தது. ஷெரின் மறைவுக்கு முந்திய தினம் புதிதாக அந்த பெட்ஷிட்டைப் போட்டிருந்தாள் ஆதினி. நல்ல பருத்தியில் ஆன துணி, ரத்தம் சொட்டாக சில இடத்திலும், சில இடங்களில் துளி துளியாகவும் தெளித்து இருந்தது.

புதிதாய் போட்ட துணியில், இந்த உதிரத்தின் துளி என்றால்? ஆதினியின் அறிவு வேகவேகமாக சிந்திக்க தொடங்கியது. அவளின் எண்ணங்களில் பரபரப்பு தொற்றியது. இந்த உதிரத்தின் துளி உண்மைக்கு வித்திடுமா?

நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆதினியின் எண்ணம் போக, துணியைக் கையில் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

‘You have to find your own Truth! (உனக்கான உண்மையை நீயே அறிய வேண்டும்) என்ற ஓஷோவின் கூற்று கண்ணில் பட்டது. ஆதினியின் கருத்தில் ஏறியது! உயிரினை திருடிய இரவின் காரணம் ஆதினி அறிவாளா??

✅ End of Episode 18
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 month ago

Very nice.

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago
இழப்புகளை நினைத்து
அழுதா மாண்டவர் மீள்வார்களோ...

இறந்தவர்களின் ஆசையை

ஈடு கட்டி அவர்களின் எண்ணங்களைகளை நிறைவேற்ற நினைப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் அன்பு....
அருமை....
சூடூ பிடிக்கிறது கதை...
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top