Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 22

“கிஷோர்! அப்போ அந்த சார் ப்ளட் குரூப் செக் பண்ணனும் இல்ல? நீ யுனிவெர்சிட்டில அந்த கேம்ப்’ல ப்ளட் கொடுத்தவங்க அத்தனை பேர் லிஸ்ட்யும் வாங்கிடு. ஷெரின் இறந்த அன்னிலிருந்து வரலன்னா அந்தாள் கிட்ட தப்பு இருக்குடா” என்றாள் பல்லைக் கடித்து.

“எம்மா தாயே! கொஞ்சம் பொறுமையா இருக்கியா? நீ என்ன உன்னை ஐஜி ஆதினினு நினைச்சிட்டு இருக்கியா? என்னை ஏதோ ஏட்டய்யா மாதிரி கேட்டதும் எல்லாத்தையும் கொண்டானு நிக்கிற” என்ற கிஷோர்,

“போலிஸ் கேட்டாதான் எல்லாம் உடனே கிடைக்கும். நான் போய் கேட்டா ஏன் எதுக்குனு ஆயிரம் கேள்வி வரும். எல்லாம் சமாளிச்சு வாங்கணும். இப்படி அவசரப்பட்டு ஆர்டர் போடாத” என்றான் கடுப்பாக.

ஆதினிக்கும் அவன் சொன்னதில் இருக்கும் நியாயம் விளங்க,
“சரிடா, நீ விசாரிச்சு சொல்லு. அந்த சார் ஏன் லீவுனு கூட ஆபிஸ் ரூம்ல கேளு” என்று ஆதினி சொல்ல,

“எனக்குத் தெரியும்டி, நான் பார்த்துக்கிறேன். நீ நாளைக்கு வந்து சேரு” என்று போனை வைத்தான்.

ஆதினி உடனே அரிச்சந்திரனிடம் போனாள். அறையில் உட்கார்ந்து லேப்டாப்பில் எதையோ படித்துக் கொண்டிருந்தான்.

“அரி, ஒன்னு சொல்லணும்” என்றதும் அரிச்சந்திரன் பார்வை ஆதினியைத் தொட்டது. கிஷோர் சொன்ன விஷயங்களை ஆதினி பகிர, அரி சில நிமிடங்கள் சிந்தித்தான்.
“சக்தி அண்ணா கிட்ட பேசுனீங்களா?”

“அவன் சென்னையில இருக்கானாம், நாளைக்கு வந்திருவான். பேசிட்டு சொல்றேன், நீ வேற எதுவும் செய்யாத ஆதினி!” என்றான் கண்டிப்புடன். ஆதினி தலையசைத்தாள்.

அரி வேறெதுவும் பேசாமல் அவன் வேலையில் மூழ்கிப்போனான். அடுத்த நாள் காலையில் ஆதினி கல்லூரி செல்ல சீக்கிரமாகவே எழுந்து விட்டாள். தயாராகி நிற்க, அரிச்சந்திரனும் வெள்ளை சட்டை, பேண்ட் என கோர்ட்டுக்கு செல்லும் உடையுடன் இருந்தான்.

“நான் ரெடி போலாமா?” என்று ஆதினி அரிச்சந்திரன் முன் நிற்க,

“நீ என்னோட வரியா?” என்று அரி கேட்க,

“நீங்கதானே என்னை எப்பவும் விடுவிங்க?” என்று ஆதினி அவனிடம் கேட்டாள். அரிச்சந்திரனுக்கு ஆதினியின் பேச்சில் காலையிலே கோபம் வந்தது.

“உன் இஷ்டத்துக்கு என்னை விட சொல்லுவியா? எனக்கு இன்னிக்கு மார்னிங் ஹியரிங் இருக்கு. உன்னை விட்டு எப்போ போய் கேஸைப் பார்க்குறது நான்?” என்று கத்த,

“நீங்க தானே அரி இத்தனை நாளா என்னை ட்ராப் பண்ணினீங்க? இன்னிக்கு வேலை இருக்குனு முன்னாடியே ஏன் சொல்லல?” என்று ஆதினியும் கோபமாகக் கேட்டாள்.

அரிச்சந்திரனோ அதுவரை காட்டாத ஆத்திரத்தையெல்லாம் கொட்டினான்.

“எதுக்கு சொல்லணும்? நீயா இஷ்டப்பட்டா வர, போற.. உன்னை வச்சு நான் என்னோட ப்ளானை எல்லாம் மாத்திட்டு இருக்கணுமா? இன்னிக்கு நீயே பஸ் பிடிச்சு போ, இல்லை உங்கப்பாவுக்குப் போன் போடு” என்றான்.

“அதை நீங்க சொல்ல வேண்டாம். இரண்டு நாளா நல்லாதானே பேசினீங்க, இப்போ ஏன் திடீர்னு கோவப்படுறீங்க?” அவன் கோபம் பொறுக்காது ஆதினி பொறுமினாள்.

“நல்லா பேசினேனா? அது உன் ஹஸ்பண்ட் இல்லை அட்வகேட் அரிச்சந்திரன். ஓகே?” என்று நக்கலாகக் கேட்க, ஆதினிக்கு அரிச்சந்திரனின் கோபம் புரிந்தது. அவனை மீறி ஹாஸ்டல் சென்றதால் இந்த கோபம் என்று தெரிந்தது.

“நான் சும்மா ஒன்னும் ஹாஸ்டல் போகல, காரணம் சொல்லிட்டேன் தானே?” ஆதினி வாதம் செய்ய,

“அதுதான் டி நானும் சொல்றேன். உன் காரணம், உன் இஷ்டம்! உன் இஷ்டத்துக்கு நீ செஞ்சதை நான் தடுத்தேனா இல்லையே, இப்போ என் இஷ்டப்படி என்னை விடு. அண்ட் நீ இது பழி வாங்குறது நினைச்சா, அப்படியே வச்சிக்கோ.” என்று சொல்லியவன் விரைவாகவே கிளம்பி விட்டான்.

அரிச்சந்திரன் கிளம்பிய பின், ஆதினி கல்லூரி செல்லாமல் அப்படியே இருந்தாள். அரிச்சந்திரன் புரிந்து கொள்வான் என்று நினைத்தாள், இரண்டு நாட்களாக இயல்பாக பேசியிருக்க, கோபமில்லை என்று எண்ணினாள். இப்போது யோசித்தால் ஷெரினை தவிர வேறெந்த பேச்சும் தாங்கள் பேசவில்லை என்று புரிந்தது.

‘ஓவரா பண்றான், அட்வகேட் அரிச்சந்திரனாம்.! ஆதினி கிட்டயா?’ என்று பல்லைக் கடித்தாள்.

காலையிலே கணவன் கடுப்படித்திருக்க, அன்று ஆதினி பல்கலைகழகம் செல்லவில்லை. கிஷோருக்கு வரவில்லை என்று ஆதினி செய்தி அனுப்ப, டீ கடையில் உட்கார்ந்திருந்தவன் வகுப்புக்கு செல்ல எழுந்து கொண்டான். நிரஞ்சன் முன்னே செல்வது தெரிந்தது.

“இந்தாங்க கா” என்று பணத்தை நீட்ட, வாங்கிக் கொண்ட டீ கடை உரிமையாளர்,

“என்னப்பா ஆதினி வரலையா?” என்று விசாரித்தார். அப்படியே பொதுவாக பேச,

“பாவம், இந்த புள்ள நிரஞ்சன். அன்னிக்கு அந்த ஷெரின் பொண்ணும் இவனும் சிரிச்சிட்டே டீ குடிச்சிட்டு இருந்ததுங்க. என்னை கூட அப்படி டீ போடு, இப்படி போடுனு வம்பு பண்ணினான். கடைசியா ஷெரினை அன்னிக்குத்தான் பார்த்தேன்” என்றார் சோகமாக.

“என்னைக்கு கா?” என்று கிஷோர் அவசரமாகக் கேட்க,

“ஹாஸ்டல் டே அன்னிக்கு” என்றார்.

“இரண்டு பேரும் சிரிச்சு பேசினாங்களா?” என்று மீண்டும் கிஷோர் கேட்க,

“அட ஆமாம்பா! கடைசியா பார்த்தது, அதனால நல்லா ஞாபகமிருக்கு. அந்த பொண்ணு போனதை பார்த்துட்டே நின்னான். பாவம், அதை நினைச்சு நினைச்சு வருத்தப்படுறான் போல” என்று நிரஞ்சனுக்காக வருந்தினார்.

கிஷோருக்கு ஏதோ ஒரு ஆசுவாசம் தோன்ற, பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைந்த நிரஞ்சனிடம் ஓடி சென்றான்.

“மச்சான்!” என்று மூச்சு வாங்க தன் முன் நின்றவனை பார்த்தான் நிரஞ்சன். நிரஞ்சனின் கண்கள் உறங்கியது போலவே இல்லை. முகத்தில் அவ்வளவு சோர்வு.

“நான் கேட்கிறதுக்கு உண்மையை மட்டும் சொல்லுடா, நீ கடைசியா ஷெரினை பார்த்தப்ப என்னாச்சு?” என்று தவிப்போடு கேட்டான் கிஷோர்.

ஷெரின் என்ற சொல் நிரஞ்சனின் உயிரைத் திருடியது. கண்கள் கலங்க, நேரே வெறித்தான். ஷெரின் அன்று வெண்ணிற ஆடையில் தேவதையாக நடந்து போனது கண்களில் தெரிய, பதில் பேசாமல் அப்படியே அசைவின்றி நின்றான்.

“மச்சி! பேசுடா” என்று கிஷோர் உலுக்க,

“என்னடா?” என்றான் நிரஞ்சன் சோர்வாக. ஷெரின் இல்லையென்பதே அவனின் உயிர்ப்பைக் கொன்றுவிட்டது. மொத்தமாக மனத்தில் வெற்றிடம்.

“மச்சி, ப்ளீஸ். சொல்லு” என்று கிஷோர் கெஞ்ச, அந்த நாளை நண்பனிடம் பகிர்ந்தான் நிரஞ்சன்.

‘ஹாஸ்டல் டே’ விழா நடக்க, தலைவலிக்கிறது என்று ஆதினியிடம் சொல்லிய ஷெரின் அரங்கத்தை விட்டு வெளியே வந்தாள். விடுதிக்கு போக நடந்து கொண்டிருந்தவள், டீ குடித்து விட்டு போகலாம் என்றெண்ணி பல்கலைக்கழகத்தின் வெளிவாசல் நோக்கி நடந்தாள். நிரஞ்சன் சரியாக இவள் வெளியே வருவதை பார்த்தவன், பின் தொடர்ந்தான்.

ஷெரின் பெண்கள் விடுதி பக்கம் போவதை பார்த்து,
“ஹாஸ்டலுக்குப் போறாளா” என்று முணுமுணுத்தான். அவளுடன் பேச முடியவில்லை என்று பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டான். இவன் அரங்கத்தை நோக்கி நடக்க, ஷெரின் வந்த வழி திரும்பி வெளியே செல்வதை பார்த்தவன், வேக நடையிட்டு ஷெரினிடம் போனான்.

தன் பக்கத்தில் ஆள் வரும் அரவம் உணர்ந்து, ஷெரின் திரும்பி பார்க்க, நிரஞ்சன் புன்னகைத்தான்.

“என்னடா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டியா?” கிண்டலாக ஷெரின் கேட்க,

“ஃபாலோவா, அதெல்லாம் நான் பண்ணலனு கெத்தா சொல்ல ஆசைதான். பட் நீ வரதை பார்த்துதான் வந்தேன்” என்றான் உண்மையாக.

“எப்படிடா இப்படி உண்மை பேசுற?” ஷெரின் அவன் நேர்மையாக பேசுவதை சுட்டிக் காட்ட,

“பொய் பேசினா ஞாபகம் வச்சுக்கணும் ஷெரின், உண்மை பேசினா அந்த கவலை இல்ல” என்று நிரஞ்சன் சொல்லவும்,

“உனக்கு ஒரு டிப்ஸ் சொல்லவா? உண்மையை கூட எல்லார்கிட்டவும் பேச கூடாது, ஆள் பார்த்து பேசணும். அதுவும் நம்ம எல்லாம் ஜர்னலிசம், மீடியானு போற ஆளுங்க, அப்போ பொய் சொல்லலாம். தப்பில்லை” ஷெரின் சொல்ல,

“ஓகேய்ய்ய் மேடம்” என்று ராகமிழுத்தான். ஷெரின் சிரிப்புடன் அவன் தோளில் அடி போட்டாள்.

நிரஞ்சன் ஷெரினிடம், “ஆமா, அங்க ஆதினி அதகளம் பண்றா. நீ என்ன எழுந்து வந்துட்ட” என்று கேட்க,

“தலைவலிக்குதுனு வந்துட்டேன்.” என்றாள் கண்களை சுருக்கி.

ஷெரினின் சிவந்திருந்த கண்களைப் பார்த்தபடி, “உனக்கு என்ன அடிக்கடி தலைவலிக்குது? டீ குடிச்சா சரியாகிடும், வா. ஆனாலும் இப்படி சத்தம் கேட்டதுக்கே தலைவலி வர ஆளு எல்லாம் ஹாஸ்டல் டே’காக சண்டை போட்டது தெரிஞ்சா அந்த எதிர் டிபார்மெண்ட்காரன் நம்மை என்ன நினைப்பான்?” என்று கிண்டலடித்தான்.

ஷெரினும் பேசியபடி நடந்தாள். இருவரும் டீ கடை சென்று நிற்க,

“அக்கா! எனக்கு லெமன் டீ. ஷெரினுக்கு இஞ்சி தட்டி, ஏலக்காய் போட்டு தலைவலி போற மாதிரி ஒரு ஸ்பெஷல் டீ போடுங்க” என்று சொல்ல அந்த அக்கா அவனை முறைத்தார்.

“ஏன் மா? ஃபங்க்சன் எப்படி போகுது?” என்று பேசியபடி அவர் தேநீர் தயாரித்தார். இருவரிடமும் நீட்ட, அந்த எட்டு மணி இரவில் லேசாய் பெய்த பனியில் சூடான தேநீர் இதமாக இருந்தது. அதுவும் ஷெரினுடன் மட்டும் தனித்து நின்ற தருணம் என்பதால் நிரஞ்சனுக்கு மனம் நிறைந்து போனது.

“என்னடா டீயை இப்படி சிரிச்சிட்டே குடிக்கிற?” ஷெரின் அவன் புன்னகை பார்த்து கேட்க,

“இல்ல, எப்பவும் இரண்டு கழுதைங்க கூட கழனித்தண்ணீ மாதிரி சேர்ந்து குடிப்போம். இன்னிக்கு நீயும், நானும். சோ ஸ்பெஷல் டீ” என்று கண்ணடித்தான்.

“பாருடா, இப்படி சொன்னதை ஆதினி கிட்ட சொன்ன உண்மையாவே எட்டி உதைப்பா” என்று சிரித்தாள் ஷெரின். நிரஞ்சன் அவளையே பார்ப்பதை உணர்ந்தவள்,

“நிரஞ்சன்! நிஜமாவே எனக்கு உன் மேல ப்ரண்ட்ஷிப் தாண்டி எந்த ஃபீலும் இல்லடா. பட் ஐ ப்ராமிஸ், எனக்கு யார் மேலயும் லவ் வரலன்னா அரேஞ்ச் மேரேஜ் பண்ணினா கண்டிப்பா நீதான். அதுக்காக அதையே நினைச்சுட்டு சும்மா காதல் வசனம் பேசக் கூடாது” ஷெரின் கண்டிப்பாக சொல்ல, அதுவே நிரஞ்சனுக்குப் போதுமானதாக இருந்தது.

“ஷெரினே! நன்றி! நன்றி!” என்று இடைவரை குனிந்து டம்ளருடன் நன்றி சொன்னான் நிரஞ்சன்.

அவன் தோரணையில் சிரித்த ஷெரின், “எதுக்கு நன்றி?” என்று கேட்க,

“இந்த இரவுக்கு நன்றி! நம்ம அக்கா கொடுத்த டீக்கு நன்றி! முக்கியமா உன்னை டீ குடிக்க வச்ச தலைவலிக்கு நன்றி!” என்று நன்றிகளாய் நவில, ஷெரின் முறைத்தாள்.

“எனக்கும் புரியுது ஷெரின். லவ் ஃபோர்ஸ் பண்ண முடியாது இல்லையா? எனக்கான அன்பு என்னை தேடி வரும். அதான் நான் நம்புறேன்.” என்று நிரஞ்சன் சொல்ல,

“ஆமீன்!” என்று ஷெரினும் சிரித்தபடி சொன்னாள். ஷெரினின் சிரிக்கும் கண்கள் நிரஞ்சனை கொள்ளையிட, அவள் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து காதல் பேசாமல் இருந்தான்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க, பேராசியர்கள் இருவர் டீ குடிக்க வர, ஷெரினும் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவசரமாக சொல்லிவிட்டு விடுதிக்குப் போனாள்.

அந்த பல்கலைக்கழக நுழைவாயிலில், ஷெரின் நடந்து போவதை புன்னகையோடு பார்த்து நின்றான் நிரஞ்சன். அன்றோடு அவன் புன்னகையும் நின்றது.!

எல்லாவற்றையும் சொல்லிய நிரஞ்சன் அழ, கிஷோரும் நண்பனை அணைத்துக் கொண்டான். இருவரும் லைப்ரரி வெளியே இருக்கும் மரபெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். நிரஞ்சனுக்கு அந்த இரவை, ஷெரினின் புன்னகையை மறக்க முடியவில்லை.

“அவ எப்படி டா சூசைட் பண்ணிப்பா? அந்த இடத்துல சிரிச்சிட்டே நடந்து போனா டா… இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்கிறா மச்சான்.” என்று வலியோடு நிரஞ்சன் சொல்ல, அது வரை யாரும் நிரஞ்சனிடம் ஆறுதல் சொல்லவில்லை என்பது கிஷோருக்கு உரைத்தது. அவன் தன் சோகத்தை மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறான் என்று புரிய, அவனை போய் சந்தேகப்பட்ட தன் மடத்தனத்தை நொந்தவன்,

“சாரி மச்சான்” என்றான். நிரஞ்சன் புரியாது பார்க்க, கிஷோர் ஆதினியோடு ஹாஸ்டல் அறை சென்றது, புதிதாய் ஒரு ஆணின் ரத்தம், நிவாஸ் என்று ஷெரின் மரணத்தின் மர்மங்களை சொல்ல, நிரஞ்சனின் கண்கள் சிவந்தன.

**************

மதிய நேரம் வழக்கம் போல் ராமசாமிக்கு அழைத்து அரிச்சந்திரன் பேசினான்.

அவரும், “நான் சாப்பிட்டேன் டா அரி, பேத்தி எங்கம்மா மாதிரி மீன் குழம்பு வச்சிருந்தது.” என்று பாராட்ட,

“தாரா அவ்வளவு டேஸ்டா சமைக்கிறாளா?” தங்கையின் சமையல் திறமை வளர்ந்து விட்டதா என்று வியந்து அரி கேட்க,

“தாரக இல்லடா. ஆதினி” என்றார்.

“என்னது ஆதினியா? அவ காலேஜ் போகலயா இன்னிக்கு?” என்று அரிச்சந்திரன் கேட்க,

“இல்லையேடா, லீவ் போல” என்று தாத்தா சொல்ல, அரிச்சந்திரன் அவரிடம் சாதாரணமாக பேசி வைத்தான். உடனே ஆதினிக்கு அழைக்க,

“சொல்லுங்க அட்வகேட்” என்று ஆதினி அழைப்பை எடுத்தாள்.

“அடியே அரைடிக்கெட்! ஏன்டி லீவ்?” என்று அரி எடுத்தவுடன் அதட்ட,

ஆதினியோ, “எனக்கு போக பிடிக்கல” என்றாள் அசட்டையாக.

“ஆதினி!!” என்ற அரிச்சந்திரனின் குரலில் அவ்வளவு கோபம்.

“நீ செய்றதெல்லாம் சரினு நினைக்காத, எதுக்கு லீவ் போட்ட. பிடிக்கலனு சொல்றதெல்லாம் ரீசனா? இப்படியே செஞ்சா அரியர் வச்சுட்டு உட்கார வேண்டியதுதான். எனக்கு இப்போ செம கோவம் வருதுடி. வந்தேனு வை..” என்றான் கடுப்பாக.

“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களை கேட்டு ஒன்னும் நான் கோர்ஸ் சேரல. காலையில என்னை அவ்வளவு பேசி அப்செட் பண்ணிட்டு இப்போ மட்டும் எதுக்கு அட்வகேட் அரிச்சந்திரன் எங்கிட்ட பேசுறார்? எனக்கு உங்களை விட அதிக கோவம் வருது” என்றாள் கோபத்துடன்.

“நான் பேசி நீ அப்செட் ஆன?” அரிச்சந்திரன் நக்கலாக இழுத்தான்.

ஆதினியோ, “நீங்க பேசினா நான் அப்செட் ஆவேன்தான்” என்று அழுத்தமாய் சொல்ல, அதற்குள் அரிச்சந்திரனுக்கு அழைப்பு வர,

“வீட்டுக்கு வந்து உன்னை பார்த்துக்கிறேன் டி, பை” என்று அதட்டி வைத்தான்.

மாலை போல், கிஷோரும் நிரஞ்சனும் அரிச்சந்திரன் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மதியமே வருகிறேன் என்று சொல்லியிருக்க, நண்பர்களுக்காக ஆதினி காத்திருந்தாள்.

ராமசாமி இருவரையும் வரவேற்க, ஆதினி எல்லாருக்கும் டீ எடுத்து வந்து கொடுத்தாள்.

“நீங்க பேசுங்க” என்று ராமசாமி அவர் அறைக்குள் போய்விட, மூவரும் நடுவீட்டில் இருந்த சோஃபாவின் கீழ் தரையில் உட்கார்ந்தனர்.
“எல்லாம் சொல்லிட்டேன்” என்று கிஷோர் ஆதினியிடம் முன்பே சொல்லியிருக்க, நிரஞ்சன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, ஆதினியே பேசினாள். கையில் இருந்த தேநீரை வெறித்தபடி இருந்தான் நிரஞ்சன். ஷெரினோடு பருகிய அந்த தேநீரின் சுவை அவனின் ஞாபகத்துளிகளில்.

“டேய், இப்படி இருக்காதடா. ஷெரினை நினைச்சு கவலைப்படுறதை விட, அவளுக்கு நியாயம் கிடைக்கணும். அதுதான் முக்கியம்.” என்று ஆதினி நண்பன் தோள் தட்டி சொல்ல, நிரஞ்சன் கண்களில் கண்ணீர்.

“எனக்கு என் ப்ரண்டை தெரியும்” ஆதினியும் கலங்கிய கண்களுடன் சொல்லிவிட்டு, கிஷோரை முறைத்தாள்.

“ஹேய்! என்னை ஏன்டி முறைக்கிற. அவனே என்னை கோச்சுக்கல.. நீ மாட்டி விடாத.” என்ற கிஷோர் நினைவு வந்தவனாக,

“அந்த ப்ரோபஸர் ப்ளட் குரூப் AB+” என்றான்.

“அப்போ அன்னிக்கு அந்த ரூம்’ல இருந்த இன்னொரு ஆள் அவர்தான். இல்லையா?” ஆதினி கேட்க,

“இருக்கலாம். அந்தாள் கூட ஷெரின் பேசுறப்ப பார்த்திருக்கேன். அவ டென்ஷனாவே பேசுவா..” நிரஞ்சன் அப்போதுதான் வாய் திறந்து பேசினான்.

“அந்தாள் நம்பருக்கு ட்ரை பண்ணீங்களா?” ஆதினி கேட்க,

“ஸ்விட்ச் ஆஃப், அசாம்ல இருக்கான் அவன்” என்று கிஷோர் கூற,

“எதாவது பண்ணனும் ஆதி, ஷெரின்.. ஷெரினை இப்படி செஞ்சவனை சும்மா விட கூடாது” விழிகள் கலங்கி இருந்தாலும், தன் காதலிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற வெறி நிரஞ்சனிடம்.

“செய்யணும்டா. ஆனா இதுக்கு மேல நம்ம செய்ய ஒன்னுமில்லை, லீகலா தான் ப்ரோசீட் பண்ணனும். அவர் போலீஸ்கிட்ட பேசுறேன் சொல்லியிருக்கார்” என்ற ஆதினி சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாக,

“ஒரு நிமிஷம்” என்று எழுந்து அறைக்குள் போனாள். கிஷோரும் நிரஞ்சனும் ஆதினி சென்ற திசையைப் பார்க்க, கையில் லேப்டாப்புடன் வந்தாள்.

“இது ஷெரின் லேப்டாப், அவங்க அம்மாவை அனுப்பி விட சொன்னேன்” என்றதும் நிரஞ்சன் உடனே,

“இதுல எதாவது இருக்கலாம்” என்றபடி அதனை வேகமாக வாங்கினான்.

“பாஸ்வர்ட்?” என்று ஆதினியைப் பார்க்க, அவள் டைப் செய்தாள். உள்ளே தேட, எதுவும் உபயோகமாய் இல்லை. நிரஞ்சன் சோர்வோடு, அதனை வைக்க ஆதினி ஒவ்வொன்றையும் திறந்து பார்த்தாள்.

மவுஸை தடவியபடி ஒன்றுமே இல்லை என்ற எண்ணத்தில் திரையைப் பார்வையிட்ட ஆதினியின் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தன.

அந்த கோப்புறையின்(folder) பெயரை பார்க்கவும் அலை அலையாய் யோசனைகள். நிரஞ்சனும் கிஷோரும் எட்டிப் பார்த்து அவர்களும் ஸ்தம்பித்தனர்.

‘My Drugs’ என்ற பெயரிடப்பட்ட ஒரு கோப்புறை (Folder) இருந்தது.

“ட்ரக்ஸ்?!” என்று ஆதினி அதிர்வோடு சொல்ல, நிரஞ்சனுக்கு ஷெரினின் தலைவலி, சிவந்த விழிகள் எல்லாம் இன்னும் பயம் கொடுத்தன. ஷெரின் ‘ட்ரக் அடிக்ட்’ என்ற எண்ணமே நிரஞ்சனை துவள செய்தது.

அதே நேரம் அரிச்சந்திரன் வீடு வந்தான். அவன் கையில் (autopsy report) பிரேத பரிசோதனை அறிக்கை இருந்தது. ‘Presence of drugs’ (போதை பொருளின் இருப்பு) என்று அதில் இருப்பதை அவர்கள் இன்னும் அறியவில்லை.

✅ End of Episode 22
How did you feel about this episode?
❤️ 2 👏 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

போதை மருந்து 

பிடியில் மரணம் கொண்டாயோ...
பேதை பெண்ணே.....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top