Episode 23
அரிச்சந்திரன் வீட்டினுள் நுழையும் போது மூவரையும் பார்த்தான். ஆனால், அவர்களோ அதிர்ச்சியில் உறைந்து அசையாது இருந்தனர்.
“என்னாச்சு?” என்றபடி அரி அவர்களிடம் போனான். ஆதினியின் பின் நின்றவன் பார்வையில் அவள் முன் இருந்த லேப்டாப் பட்டது.
“மை ட்ரக்ஸ்” என்று முணுமுணுத்தவன் அந்த ஃபோல்டரை ஆதினியின் பின் குனிந்து நின்றவாறே, சொடுக்கினான். ஆதினியும், நிரஞ்சனும் அச்சத்தில் கணினித் திரையை வெறிக்க, கிஷோரோ என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தில் பார்த்தான்.
அரிச்சந்திரன் சட்டென அந்த ஃபோல்டரை திறந்து பார்க்க, அதில் பதிவு செய்யப்பட்ட கோப்புகள் அத்தனையும் எம்.பி 3 வகை. அதில் ஒன்றை சொடுக்கி விட்டான். அப்போதுதான் ஆதினிக்கும், நிரஞ்சனுக்கும் உயிரே வந்தது.
‘நீ கவிதைகளா
கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்தது வா
பதில் மொழியா?’
என்று ப்ரதீப் குமார் குரலில் பாடல் ஓடவும் நிரஞ்சன் கண்களில் கண்ணீர். ஆசுவாசத்தோடு தலை குனிந்து கண்ணீர் வடித்தான்.
“என்னடா பாட்டு கேட்கிறீங்களா?” என்று அரிச்சந்திரன் சாதாரணமாகக் கேட்க, கிஷோர் பதில் சொன்னான்.
“அட நீங்க வேற மாம்ஸ்! இந்த ஆதினி ஷெரின் லேப்டாப்’ல எதாவது தகவல் கிடைக்குமானு தேட எடுத்து பார்த்தா ‘மை ட்ரக்ஸ்’னு இந்த ஃபோல்டர் பார்க்கவும் பக்குனு ஆகிடுச்சு. அதான் டென்ஷனா இருந்தோம். நல்ல வேளை ஓபன் பண்ணா நம்ம ப்ரதீப் பாட்டு” என்றபடி சோஃபாவில் தலையை சாய்த்தான். அவன் தோளில் அடிப் போட்ட அரி,
“அறிவுக்கெட்டவங்களா? ட்ரக்ஸ் யூஸ் பண்றவங்க இதான் ட்ரக்ஸ்னு ஃபோல்டர் போட்டு சேவ் பண்ணுவாங்களா? அதுவும் ஷெரின்? நீங்களாம் ஜர்னலிசம் படிச்சு.. பாக்குறது எல்லாத்தையும் நம்ப கூடாது, பகுத்தறிவு வேணும்” என்று மூவரையும் அதிருப்தியாக பார்த்தான்.
கிஷோர் உடனே,
“ஷெரின் அப்படி செய்யமாட்டானு தெரியும் மாமா. இருந்தாலும் நாங்க எதாவது கிடைக்குமானு தேடுற நேரம் இது கண்ல பட, பயந்துட்டோம்” என்றான்.
“அதான் பேயறைஞ்ச மாதிரி இருந்தீங்களா? மை லைஃப்னு போன்’ல நம்பர் சேவ் பண்ணி வச்சிருந்தா உயிரா இருக்கு அதுல… உங்களோட..” என்ற அரி சலித்தபடி நிரஞ்சனின் தோள் தொட்டான்.
“இல்ல மாமா, இருக்கவங்களை விட இல்லாதவங்க பத்தின வதந்திகள் எப்பவும் அதிகம் தானே? டக்குனு பார்க்கவும் டென்ஷன் ஆகிடுச்சு. ஷெரினுக்கு அடிக்கடி தலைவலி, கண்ணு சிவந்து இருக்குமா, எனக்.. எனக்கு… பயமாகிடுச்சு” என்று குரலடைக்க சொன்னான் நிரஞ்சன்.
நேசித்தவள் மீது சிறு களங்கமும் வந்து விடக் கூடாதே என்ற தவிப்பு அவனிடம். ஆதினிக்கும் தோழி மீது நம்பிக்கை இருந்தது, ஆனாலும் ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் அறிவு வேலை செய்யவில்லை.
“இரும மருந்து குடிச்சாலே சொக்கி விழுறவளை போய் ட்ரக் அடிப்பா நினைச்சீங்களே டா..” என்று கிஷோர் கடுப்பாக பேச,
“இப்போ பேசுறவன் அப்பவே சொல்ல வேண்டியதுதானே? நீயும் ஷாக் ஆகி பார்த்த தானே?” என்று ஆதினி திட்ட,
“ஷாக்’ல பேச்சு வரல. இந்த பக்கி பாட்டை ட்ரக்ஸ்னு போடும்னு எனக்கு எப்படி தெரியும்?” என்றான் கிஷோர் கடுப்பாக.
“டேய், யுவன் பாட்டை ட்ரக்ஸ்னு சொல்றதில்லையா? அப்படி போட்டிருப்பாடா” என்று ஆதினி சொல்ல,
“கரெக்ட்தான்! இந்த பக்கி செஞ்ச வேலையால, ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிட்டேன் நீ வேற…” என்று நெஞ்சை தடவினான் கிஷோர்.
தன் நண்பர்களிடம் பேசிய கணவன், தன்னிடம் பேசவில்லை என்பதை ஆதினி உணர்ந்து திரும்பி அரியைப் பார்க்க, அவன் எழுந்து கொண்டான்.
“டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று சொல்லி அறைக்குள் புகுந்தவன் தன் பையில் இருந்து சக்திவேலிடம் வாங்கி வந்த விசாரணை அறிக்கையையும், பிரேத பரிசோதனை அறிக்கையையும் எடுத்து தன் மேஜையின் ட்ராயரில் வைத்தான். பொறுமையாக எடுத்து பார்க்கலாம் என்று முடிவு செய்து, குளித்து உடை மாற்றி வந்தான்.
மணி ஏழு ஆக,
“என்னடா சாப்பிடுறீங்க?” என்று அரி கேட்க,
“பசிக்கல மாமா, நாங்க கிளம்புறோம்” என்று நிரஞ்சன் சொல்ல அவனை பார்த்த அரி கிஷோரிடம் கண் காட்டிவிட்டு, நிரஞ்சனை தன்னோடு வாசலுக்கு அழைத்துப் போனான். அங்கிருக்கும் பெஞ்சில் இருவரும் அமர,
“எப்படி இருக்க நிரஞ்சன்?” என்று விசாரிக்க, அவனிடம் பதில் இல்லை. கண்களை மூடி கீழே பார்த்தான். ஷெரின் அன்று புன்னகைத்து சென்றதே உலா வர, கண்ணீரை அடக்கினான்.
அதை பார்த்த அரி, “நமக்குப் பிடிச்சவங்க இல்லைன்றது கொடுமையான விஷயம் நிரஞ்சன், என் அப்பா, அம்மா போனப்போ உலகமே இல்லன்ற நிலைமை எனக்கு. உன்னோட நிலைமை எனக்குப் புரியுது, பட்.. நீ..” என்று அரிச்சந்திரன் தவித்தபடி ஆறுதல் சொல்ல, நிரஞ்சன் அவனை பார்த்து உயிர்ப்பின்றி புன்னகைத்தான்.
“ஷெரினே சூசைட் பண்ணியிருக்க மாட்டானு நம்புறவன் மாமா. கண்டிப்பா அந்த மாதிரி எந்த முடிவும் எடுக்க மாட்டேன்” என்றதும் அவன் தோளில் கைப் போட்டு அணைத்த அரி,
“தெரியும்டா, உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு. ஷெரின் நீ சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பா” என்றான். அந்த பெயர், அது தனக்கு தருகின்ற உணர்வு நிரஞ்சனை எப்போதும் போல் தவிக்க வைத்தது.
கண்களில் ஈரத்தோடு அவனை பார்த்தான் நிரஞ்சன். பிரியமானவர்களை பிரிவதே கொடுமை என்றால், இழப்பது அது இன்னும் கொடுமையானது. நிரஞ்சனுக்கு தன் இழப்பை உணர, அதிலிருந்து மீள இன்னும் நாட்கள் தேவைப்படும் என்று அரிக்குப் புரிந்தது.
அரி, “சரியாகிடும்” என்று வேறெதுவும் பேசாது, நிரஞ்சன் முதுகில் தட்டிக் கொடுத்தான். சில நேரம் ஆறுதல் என்பது அனாவசியம்! துயரத்தை கடக்க, அதனை உணர்தல் அவசியமாகி போகிறது. கொஞ்ச நேரம் அமைதியில் கழிய,
நிரஞ்சன் அரிசந்திரனின் கைப்பிடித்து, “மாமா, ஷெரினை கொன்னவங்களை சும்மா விடக் கூடாது. நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்” என்று கேட்க,
“கண்டிப்பா. நான் பார்த்துக்கிறேன்” என்றான் அரிச்சந்திரன்.
ஆதினியும் கிஷோரும் வெளியே வர, நிரஞ்சனின் தோளில் கைப்போட்டிருந்த அரி பார்வையில் விழுந்தான்.
கிஷோர் ஆதினியிடம், “இவன் எல்லாத்தையும் மனசுல வச்சு தவிச்சிருக்கான். அது தெரியாம..” என்று தலையில் தட்டிக் கொள்ள,
“விடுடா” என்று ஆதினி சமாதானம் செய்தாள். ஆதினி இருவரையும் சாப்பிட சொல்ல, ஷெரின் இழப்பின் தாக்கம் அப்போது அதிகமிருக்க மறுத்து கிளம்பி விட்டனர்.
ஆதினியும் அரியும் வீட்டினுள் நுழைந்தனர்.
மதியம் வைத்த மீன் குழம்பு இருக்க, ஆதினி இட்லி ஊற்றி வைத்தவள், தாத்தாவுக்கு டீவி போட்டு விட்டு, அறைக்குள் புகுந்தாள். அரி கையில் இருந்த ரிப்போர்ட்டை தீவிரமாக பார்த்தான்.
“இது என்ன ரிப்போர்ட் அரி?” என்று ஆதினி அவன் கையில் இருந்த கோப்பை பார்க்க,
“Inquest report (விசாரணை அறிக்கை). இயற்கையில்லாத மரணம்னு சந்தேகம் இருந்தா போலீஸ் விசாரிச்சு அறிக்கை தரணும். அதை மாஜிஸ்ட்ரேட் சைன் பண்ணணும்.” என்றவனின் பார்வை அந்த அறிக்கையில் இருந்தது.
“இதுல எதாவது இருக்கா? நீங்க கேட்டதும் கிடைச்சிடுச்சா?” ஆதினி ஆர்வத்தில் கேட்க,
“கேட்டா எல்லாம் கொடுக்க மாட்டாங்க. விக்டிமோட சொந்தக்காரங்க கேட்கணும், இது சக்தி எனக்காக கொடுத்தான். இதுல பெருசா ஒன்னுமிருக்காது. எப்படி இறந்தாங்க, என்னாச்சுனு இருக்கும். நீ வெளியே இருடி. எனக்கு வேலை செய்றப்ப தொந்தரவு செஞ்சா பிடிக்காது” என்றதும் ஆதினியும் புரிந்து வெளியே சென்றாள்.
அரிச்சந்திரன் விசாரணை அறிக்கையினை வைத்து விட்டு, பிரேத பரிசோதனை அறிக்கையைப் பார்த்தான். பார்த்தவனுக்கு அதிர்ச்சி, கோபம் எல்லாம் வந்தது.
‘Presence of drugs’ என்று ஓரிடத்தில் இருக்க, அரிக்கு நிறைய கேள்விகள். ஷெரின் பயன்படுத்திய டிப்ரஷன் மாத்திரை பற்றிய செய்தியும் அதில் இருந்தது. இன்று நிரஞ்சன் சொன்ன அவளின் சிவந்த விழிகள், தலைவலி எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகத்தில் வர, அத்தனையும் குறித்து வைத்தவன் சக்திவேலுக்கு அழைத்தான்.
“வீட்டுக்கு வந்ததும் என்னை பார்க்க வாடா, உன்னோட பேசணும்” என்று சொல்ல, சக்திவேலும் இரவு ஒன்பதரை போல அரியின் வீட்டுக்கு வந்தான். ராமசாமி உறங்கியிருக்க, ஆதினி அவள் அப்பாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
சக்திவேல் வரவும்,
“சக்திண்ணா!” என்று வரவேற்க, அந்த சத்தத்தில் அரிச்சந்திரன் எழுந்து வந்தான்.
“எப்படி டி இருக்க? ஊர்ல இருந்தாலும் நீ எங்க வீட்டுக்கு எல்லாம் வர மாட்டியா?” என்று சக்தி அவளை பேச,
“நீங்க அப்புறம் நலம் விசாரிக்கலாம். என் கூட வா” என்று அரிச்சந்திரன் சக்திவேலை மாடிக்கு அழைத்து சென்றான். அவன் கையில் இரண்டு அறிக்கைகளும் இருந்தன. மாடிக்கு சென்றதும் பிரேத பரிசோதனை அறிக்கையை சக்தியிடம் நீட்டினான்.
“என்ன மாமா?” என்றபடி சக்தி வாங்கி அதனை திறக்க,
“இதுல ட்ரக்ஸ் பத்தி போட்டிருக்குனு ஏன் நீ சொல்லல?” என்றான் அரி கோபமாக.
அரிச்சந்திரன் அப்படி கேட்க, சக்திவேலுக்கும் கோபம் வந்தது.
“முன்னாடியே சொன்னேனே மாமா” என்றான் கடுப்பாக.
“சக்தி! பொய் சொல்லாத! அந்த பொண்ணு சூசைட் பண்ணலனு தெரிஞ்சும் நீங்க இன்வெஸ்டிகேட் பண்ணல. வெக்கமா இல்ல உனக்கு? பொங்கலுக்கும் தீபாவளிக்கும் போனஸ் வாங்கிட்டு அரசியல்வாதிக்கு சல்யூட் அடிக்கத்தான் யூனிஃபார்ம் போட்டிருக்கீங்களா டா?” என்றான் அரி ஆத்திரத்துடன்.
முதலில் தற்கொலை என்று நினைத்திருக்க, இப்போது பார்த்தால் கொலையாக இருக்கலாம் என்று அத்தனை சந்தேகங்கள் இருக்க, எப்படி விட்டார்கள் என்று அரிக்கு ஆவேசம்.
சக்தியைப் பேசி விட, அவனும் கடுப்பாகி விட்டான்.
“என்ன ரொம்ப பேசுறீங்க? உங்களுக்கு என்ன நாங்க நாயா பேயா நின்னு குற்றவாளியைப் பிடிச்சுக் கொண்டு வந்தா, ஈசியா பொய் சொல்லி கேஸை உடைச்சு வெளியே கொண்டு வருவீங்க. நான் ஐஜில இருந்து கமிஷனர் வரைக்கும் பதில் சொல்லணும். மேலிடத்தில என்ன சொல்றாங்களோ அதைத்தான் நான் செய்யணும்” என்று சக்தியும் குரல் உயர்த்த இந்த சத்தம் கேட்டு ஆதினி மாடிக்கு வந்தாள்.
“ஏன் இரண்டு பேரும் சண்டை போடுறீங்க?” என்று ஆதினி கேட்க, சக்தி உடனே,
“உன் வீட்டுக்காரருக்கு அவர் மட்டும்தான் சத்தியத்தைக் காப்பாத்துறோம்னு நினைப்பு. நாங்க எல்லாம் நீதியையும் நேர்மையையும் கூறு பத்து ரூபானு வித்திட்டு இருக்கோமாம்” என்றான் எரிச்சலாக.
அரிச்சந்திரன் சக்திவேலின் நக்கலில் முறைக்க, ஆதினி சக்தியிடம்,
“அண்ணா! ப்ளீஸ். என் ப்ரண்ட் ரொம்ப நல்ல பொண்ணு. அவ நிச்சயம் சூசைட் பண்ணல, நீதான் ஹெல்ப் பண்ணணும்.” என்று அவனிடம் கெஞ்சலாக சொல்ல,
“சரி, நான் பார்த்துக்கிறேன்” என்றான். அரிச்சந்திரன் ஆதினியிடம்,
“நான் பேசிக்கிறேன், நீ போ ஆதினி” என்றதும் ஆதினி சக்தியிடம்,
“சண்டை போடாம பேசுண்ணா” என்றாள். ஆதினி அப்படி சொல்ல,
“பல்லைக் காட்டிட்டே பேசுறேன்டி போதுமா?” என்று சக்தி பல்லைக் கடிக்க, அரியிடம் மெல்லிய சிரிப்பு.
ஆதினி இறங்கி சென்று விட, சக்திவேலின் கோபம் அரிக்கும் புரிந்தது. அவன் மேலதிகாரி சொல்வதை தானே கேட்டாக வேண்டும்.
ஆகையால், பொறுமையுடன் அங்கிருக்கும் படியில் உட்கார்ந்து சக்தியையும் உட்கார சொன்னான்.
“சாரிடா, டென்ஷன்ல பேசிட்டேன். நீ சொல்லு, ஏன் இந்த கேஸை சூசைட்னு க்ளோஸ் பண்ணீங்க?” என்று அரிச்சந்திரன் கேட்டான்.
“அங்க வேற எவிடன்ஸ் ஒன்னுமில்லை, அந்த பொண்ணு டிப்ரஷன் டேப்லட்ஸ் எடுத்திருக்குனு டாக்டர் சொன்னார்.” என்றதும் அரிக்கு வேறு ஒன்று உரைத்தது. மருந்தையும் கூட drug என்பார்களே.
“டேய்! நீ ட்ரக்ஸ்னு இந்த டிப்ரஷன் மாத்திரையா சொல்ற?” என்று அவசரமாகக் கேட்க சக்தி தலையாட்டினான்.
“அதில்லடா சக்தி, மெடிசின் இல்லாம ஸ்லைட் ட்ரேஸ் ஆஃப் ட்ரக்னு இந்த ரிப்போர்ட்ல போட்டிருக்கு பாரு. அதுவும் LSD (lysergic acid diethylamide) இருக்க வாய்ப்புனு இருக்கு” என்று வெளிச்சத்தில் காட்ட, சக்தியும் இப்போது கவனமாக படித்தான்.
“சூசைட் வெப்பன்ல ப்ரசன்ஸ் ஆஃப் ட்ரக்ஸ்னு இருக்கு பாருங்க.”
“சூசைட் இல்லடா மர்டர்” என்று திருத்தினான் அரி.
“என்னடா புதுசா ரிப்போர்ட் படிக்கிறவன் மாதிரி பண்ற? அப்போ என்ன இன்வெஸ்டிகேஷன் பண்ணின?” அரி அதிருப்தியுடன் கேட்க,
“சும்மா இதையே சொல்லாதீங்க, அன்னிக்கு என் கண்ல அட்டாப்ஸி ரிபோர்ட் கூட காட்டல. கமிஷனர் கேஸை பார்த்துக்கிறேனு சொல்லிட்டார். எனக்கு என்ன இது மட்டும்தான் கேஸா? அவர் பார்க்கிறதால நானும் இதை விட்டுட்டேன்” என்று நிகழ்ந்ததை சொன்னான்.
“கமிஷனரா?” என்ற அரியின் புருவங்கள் சுருங்கின.
“எனக்குப் புரியலடா, மர்டரா இருக்க அதிக வாய்ப்பு இருக்க ஒரு கேஸை சூசைட்’னு ஏன் க்ளோஸ் பண்ணினாங்க.?” என்று அரி கேட்க,
“மாமா, அது சென்ட்ரல் கவர்மெண்ட் கீழ வர யுனிவர்சிட்டி, இறந்தது இன்னொரு ஸ்டேட் பொண்ணு. எவ்வளவு அரசியல் பிரச்சனைகள் இதுல இருக்கு? அதனால அந்த டீனும், பிரின்சிபாலும் முடிஞ்சளவு உடனே கேஸை க்ளோஸ் பண்ண சொன்னாங்க. அந்த பொண்ணோட பேரன்ட்ஸும் பொண்ணே போய்ட்டா, இனிமே விசாரிச்சு என்னனு மைண்ட்செட்ல எந்த பிரச்சனையும் செய்யல. என் லிமிட்’ல வர ஏரியானாலும் கமிஷனர் டேக் ஓவர் பண்ணிட்டா நான் என்ன செய்ய முடியும்?” என்று சக்தி சொன்னது அத்தனையும் நியாயம் என்று அரியும் உணர்ந்தான்.
“பொதுவாவே ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்டன்ட்ஸ் கேஸ் எல்லாமே சூசைட்னு க்ளோஸ் பண்ணிடுவாங்க. இல்லையா இருக்கவே இருக்கு எக்ஸாம் ப்ரஷர், லவ் ஃபெயிலியர்னு. இங்க விசாரிக்க போலீஸுக்கு நேரமும் பவரும் இருக்கிறதில்லை. எப்படி பிரச்சனையில்லாம மீடியா அட்டென்ஷன் இல்லாம முடிக்கிறதுனு மட்டும்தான் எங்களால பார்க்க முடியும்” என்று சக்தி சொல்லிக் கொண்டிருக்க, ஆதினி மாடியேறினாள்.
அவள் கையில் டீ இருக்க, சக்தி, “எனக்கு வேண்டாம்” என்றான்.
“என் பொண்டாட்டி நல்லா டீ போடுவா, குடிடா” என்று அரி சொல்ல, ஆதினி முகத்தில் புன்னகை.
“இதே தான் எங்கண்ணனும் சொன்னான். நம்பி உங்க தங்கச்சி போட்ட டீயைக் குடிச்சேன், ரொம்ப சுமார்” என்றதும் அரிக்கும் ஆதினிக்கும் சிரிப்பு.
“என் தங்கச்சி டீ விட, உன் தங்கச்சி டீ நல்லா போடுவா” என்றவனிடமும் ஆதினி டீயைக் கொடுத்தாள்.
ஆதினி அங்கேயே நிற்க, அரி, “நாங்க வரோம், நீ போ” என்று அவளை அனுப்பி வைத்தான்.
“சூப்பரா இருக்கே மாமா” என்று சக்தி டீயைப் பருகியபடி சொல்ல,
“உன் தங்கச்சி உன் மேல உள்ள பாசத்துல டீ கொடுத்ததா நினைக்கிறியா?” என்று அரி கிண்டலாகக் கேட்டான்.
“இல்லையா?” சக்திவேல் விழிக்க,
“நம்ம என்ன பேசுறோம்னு கேக்க வந்திருப்பா” என்று சொன்ன அரி மெல்ல எழுந்து கீழே செல்லும் படிக்கட்டுகளைப் பார்க்க, ஆதினி நின்றாள்.
“உள்ள போ” என்று ஆதினியிடம் விரல் நீட்டி மேலிருந்து சொல்ல, அவளும் முகம் சுருக்கியபடி போனாள்.
சக்தி அரிச்சந்திரன் பின்னால் வந்து நின்றவனும் இதை கண்டு, “அடிப்பாவி” என்றான்.
“நீ வா” என்ற அரி, “உங்கிட்ட இந்த கேஸ்ல எனக்கு டவுட் இருக்குனு சொன்னேனே, ஏன் தெரியுமா?” என்று கேட்டவன் ஷெரின் இறந்த அறைக்குள் ஆதினியும் கிஷோரும் போனது, இவள் பெட்ஷீட்டில் இருந்த ரத்தம். அங்கே இறந்த இடத்தை தவிர வேறு இடங்களிலும் ரத்த தடம் இருந்தது எல்லாம் சொல்ல சக்திவேல் ஆச்சரியத்தோடு எல்லாம் கேட்டாலும் கூட அவனுக்கு மிகுதியான கோபம்.
“என்னை அவ்வளவு பேசினீங்களே, இதெல்லாம் பெர்மிஷன் இல்லாம செய்யலாமா? அவளுக்கு டவுட் வந்தா எங்கிட்ட சொல்லியிருக்கணும். போலீஸ் நாங்க என்ன புடுங்கவா இருக்கோம்?” என்றான் பல்லைக் கடித்து.
“நீ ஒழுங்கா புடுங்கியிருந்தா ஆதினி ஏன் அப்படி செய்ய போறா?” அரி நக்கலாகக் கேட்க, சக்தி வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
“அப்படியா? சரி உங்க பொண்டாட்டி மேல ஆக்ஷன் எடுக்கவா?” என்று கேட்க,
“பெயிலபல் டா, அரை மணி நேரத்துல வெளியே எடுத்திடுவேன்” என்று டீஷர்ட்டின் காலரை அரி தூக்கி விட,
“மாமா, நீங்க லாயர்னு காட்ட எங்க தங்கச்சியை உள்ள வைக்க ப்ளான் பண்றீங்க.. ம்ம்” என்று கேலி செய்தாலும் ஆதினியின் அறிவுத்திறமை சக்திக்குப் பிடித்தது.
“இண்டலிஜன்ட்ல மாமா” சக்தி கேட்க,
“ஆமா, என்ன எதையும் உடனே செய்யணும்னு நினைப்பா.” என்றான் பெருமையாக.
“இப்போ என்ன செய்றதுனு சொல்லு சக்தி?”
சக்திவேல் கழுத்தை வளைத்து, கையால் அழுத்தியபடி யோசித்தான்.
“ஆதினி ப்ரண்டுக்காக செய்யலாம், நீங்க ஆதினிக்காக செய்ய நினைக்கலாம் மாமா. பட், நான் இந்த கேஸை எடுக்கணும்னா அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் இன்னொரு தடவ விசாரிக்க சொல்லணும். அப்போதான் என்னால எதையும் யோசிக்கவே முடியும். அதுக்கு என்ன வழியோ செய்ங்க” என்றான்.
சக்திவேல் சொல்வது சரியெனப்பட, அரியும்,
“ஓகேடா, நான் பேசிட்டு சொல்றேன்” என்றான்.
“கிளம்புறேன் மாமா” என்று சொல்லி எழுந்தவன்,
“இந்த வாரம் கெடா வெட்டு இருக்கு, கண்டிப்பா வந்திடுங்க” என்றான்.
“ஏன்டா நான் வீட்டுக்குக் கூப்பிட்டா இதை சொல்லுவியா?” அரி முறைக்க,
“எப்படியும் அப்பா வீட்டுக்கு வந்து கூப்பிடுவார் மாமா, நீங்க அப்போ இருக்க மாட்டீங்கனு சொன்னா, ரொம்பத்தான்” என்று கடுப்பானவன் படிகளில் இறங்கினான்.
சக்திவேல் ஆதினியிடம் சொல்லிக் கொண்டு செல்ல, அவன் சென்றதும் அரிச்சந்திரன் கேட்டை பூட்டி விட்டு வீட்டுக்குள் வந்தான். அறைக்குச் சென்றவன் பின்னே ஆதினியும் போனாள்.
ஷெரின் பிரேத அறிக்கையில் போதை மருந்து இருந்ததைப் பற்றி எல்லாம் சொல்லாமல், மேலோட்டமாக ஷெரின் பெற்றோர் சம்மதம் வேண்டும் என்று சக்திவேல் சொன்னதை மட்டும் ஆதினியிடம் பகிர்ந்தவன், அப்படியே மெத்தையில் படுத்தான். எப்படியும் ஷெரினுக்கு நியாயம் கிடைக்கும் என்று ஆதினிக்கு நம்பிக்கை வர, அமைதியாக கண்மூடினாள்.
படுத்து சிறிது நேரம் கழித்தே, அன்று ஆதினி கல்லூரி செல்லவில்லை என்பது அரிக்கு நினைவு வர,
“ஏன் டி இன்னிக்கு லீவ் போட்ட?” என்று கேட்க,
“அதான் காலையிலேயே சொல்லிட்டேனே” என்று ஆதினி சொல்ல அரிக்குக் கோபம், அமைதியாகி விட்டான்.
“நான் ஏன் ஹாஸ்டல் போனேனு சொல்லிட்டேன், அப்புறம் என் மேல கோவமா இருந்தா என்ன அர்த்தம்? நிஜமா பழி வாங்குறீங்க” என்றாள் ஆதினி.
“உன் முடிவுகளை நீ எடுக்கிற சுதந்திரம் உனக்கிருக்கு, அதே மாதிரி அந்த முடிவுக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்ன்ற சுதந்திரம் எனக்கு இருக்கு. உன் இஷ்டப்படி நீ செய்றதை, நீ விரும்பினபடியே நானும் ஏத்துக்கணும் நினைக்காதடி” என்றவன்,
பின் நிதானமான குரலில், “நம்ம இப்படியே சண்டை போட்டு இருக்கப் போறதில்லை. கொஞ்ச நாள்ல நான் சமாதானம் ஆகிடுவேன். அதுவரைக்கும் என்னை வெறுப்பேத்துற வேலை செய்யாத” என்றான்.
ஆதினிக்கு அரிச்சந்திரன் இப்படி முகம் திருப்பி இருப்பது பிடிக்கவில்லை. அப்போதும் அவசரமாக,
“அப்போ நான் என்ன செஞ்சா சமாதானம் ஆவீங்க அரி?” என்று கேட்க அரிச்சந்திரன் ஆதினியைப் பார்த்து திரும்பினான்.
“இதான் பிரச்சனை, உடனே என்னை சமாதானம் பண்ணனும் நினைக்கிற. ஒருத்தங்களுக்கு நம்மை பிடிக்க வைக்கிறது பெருசு கிடையாது ஆதினி, புரியணும். ஆனா அது தன்னால நடக்கணும். கொஞ்சம் ஆதினியா இல்லாம அரிக்காக யோசி” என்றவனின் வார்த்தைகள் ஆதினியின் இரவை திருடின.
✅ End of Episode 23
Nice
தோண்ட தோண்ட