Episode 29
போதை!!!!
உள்ளூர் கள்ளில் தொடங்கி உலகில் தினம் தினம் புது புதிதாய் தயாராகிக் கொண்டிருக்கிறது போதைப் பொருள். பணம் இருப்பவன் என்றில்லாமல் வசதிக்கு தக்க அளவில் அனைவருக்கும் சமத்துவமாக கிடைக்கிறது போதை!!
மெத், எக்ஸ்டஸி, கோகைன், ஹெராயின் என்று இன்னும் பலவகை! புகையாய், தூளாய், ஊசி மருந்தாய், மாத்திரையாய், திரவமாய் என்று எல்லா வகையிலும் எல்லா இடங்களிலும் போதையின் ஆட்சி இருக்கிறது.
உயிரைக் காக்க உலகளவில் விஞ்ஞானிகள் புது மருந்துகள் கண்டுபிடிக்க முயல்வது போல், புதுவித போதை கொடுக்கவும், புதிதாய்ப் போதை பொருட்கள் தயாராகின்றன. ஆராய்ச்சிகள் நடக்கின்றன!
அத்தனைக்கும் காரணம் போதையே!!! பயன்படுத்துபவர்களுக்கு உலகை மறக்க போதை தேவையென்றால், பயன்பாட்டிற்கு கொண்டு வருபவர்களுக்கு உலகை ஆளும் போதை! பணத்தின் தேவை, அதில் கிடைக்கும் போதை!
அந்த போதை அது சார்ந்த இடத்தில் மட்டுமில்லாது, எல்லா இடங்களிலும் தடத்தினை பதித்து விடுகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் தஞ்சையின் துணை மேயராக நாகராஜனை ஆக்கியது அந்த போதையே! அதில் வந்த கோடிக்கணக்கான பணம். கோடி என்றால் ஒன்று, இரண்டு இல்லை நூறு, இரு நூறு என்று அவன் அளவு என்றால்… அவனுக்கு மேல் இருப்பவர்களுக்கு எல்லாம் ஆயிரம் கோடிகளில் வியாபாரம்!
உலகளவில் பல நாடுகளில், கடத்தல், தீவிரவாதம் என்று சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட பணத்தைக் கொட்டுவது போதை மருந்துகள். அதன் மூலம் கிடைக்கின்ற ஹவாலா பணம். வளர்ந்த நாடுகளின் அதிகார போதைக்கு, வளரும் நாடுகள் அடிமையாக்கப் படுகின்றன.
கட்சி கூட்டங்களுக்கு நாற்காலி, மைக் போன்றவை வாடகைக்கு விடுவதில் தொடங்கியது நாகராஜனின் கட்சிப்பணி. அப்படியே ஒரு கட்சியில் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் ஊரில் வளர ஆரம்பித்தான். மாவட்ட செயலாளரின் நம்பிக்கையோடு டாஸ்மாக் டெண்டர்கள் பெற்றான். அதில் வருமானம் ஈட்டினான். அப்படியே பணம் வளர, அது தந்த போதை பதவி கேட்டது. கட்சியில் சின்ன சின்ன பதவிகளில் இருந்தவனுக்கு போதை மருந்துகளை இந்தியாவிலிருந்து கடல்வழியாக இந்தோநேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கடத்தல் செய்யும் ஒருவனின் தொடர்பு கிடைத்தது.
முதலில் கொஞ்சமாக ஆரம்பித்தவனுக்குக் கோடிகளில் லாபம் கொட்ட, அதை யாருக்கும் தெரியாமல் திறம்பட செய்து வந்தான். வெளிமாநில மாணவர்களும் வந்து படிக்கும் அந்த பல்கலைக்கழகத்தில் போதை மருந்து தேவையான மாணவர்கள் நிறைய இருந்தனர்.
ஆண், பெண் பேதமின்றி, இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடின்றி, மூவாயிரத்திற்கு இருபது கிராம் முதல் ஒரு லட்சம் வரை போதை மருந்தினை வாங்கும் மாணவர்கள் இருந்தனர். நாகராஜன் நேரடியாக இதில் ஈடுபடவில்லை. அவனுக்குக் கீழ் சங்கர் இருந்தான். அவனின் மேற்பார்வையில் மாணவர்களுக்கு மருந்து சப்ளை நடக்கும்.
ஏற்கெனவே பழக்கமான மாணவர்கள் மூலமாக நடக்கும். சொல்லப் போனால் பல்கலைக்கழகத்தில் நிறைய பேருக்கு இது தெரியும். ஆனால் பெரிய பிரச்சனைகள் இல்லாததால் பெரிய விளைவுகள் இல்லை. இன்று ஷெரின் வழக்கில் எல்லாம் வெளியே வந்து விட்டது.
எஸ்.பியும் சக்திவேலை வந்து மிரட்டிக்கொண்டிருந்தார். அவனோ,
“சார், அவர் மேல கொலை கேஸ் போடல. அவர் மாட்டினது நார்கோடிக்ஸ்ல. அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமில்லை” என்றான் பணிவாக. ஆனால், சக்திவேல் இந்த கொலை வழக்கை விசாரித்த காரணத்தால் மட்டுமே நாகராஜன் சிக்கினான் என்பதை எல்லாரும் அறிவார்கள்.
“பார்த்தீங்களா சார், அமைதியா சல்யூட் அடிச்சிட்டு இருந்த சாதாரண இன்ஸ்பெக்டர் நம்மை எதிர்த்துப் பேசுறான்? எல்லாம் அந்த ஏடி.எஸ்பியும் நார்கோடிக்ஸ்ல டிரைக்டரா இருக்கிற அந்த தெலுங்குக்காரனும் கொடுத்த தைரியம்” என்று தினகரன் கத்தினான்.
நாகராஜனின் இந்த போதை சாம்ராஜ்ஜியம் கோடிகளில் எளிதாக, எந்த பிரச்சனையும் இல்லாமல் வளர்ந்து வியாபாரம் செய்கிறது என்றால் அதற்கு துணை நிறைய பேர். அதில் எஸ்.பி, டி.எஸ்.பியும் தங்களால் முடிந்ததை செய்தனர், சம்பளம் தவிர கோடிகளில் இருவரும் லஞ்சம் பெற்றிருந்தனர்.
இப்போது நாகராஜன் சிக்கியிருக்க, கொலை வழக்கென்றால் கூட அவன் நேரடியாக சம்மந்தப்படவில்லை, ஆதாரம் இல்லை என்று வெளியே எடுக்கலாம், மொத்தமாக நார்கோடிக்ஸ் வசம் வழக்கு சென்றிருக்க தினகரனும், எஸ்பி சுரஜும் எங்கே தாங்களும் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்தனர். மாட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இருவரும் யோசிக்க, சக்தியிடம் பேசி பயனில்லை என்று கிளம்பி விட்டனர்.
அர்ஜூனை சீரஞ்சிவி அடித்ததில் அடுத்து சக்தி உள்ளே சென்றதில் உண்மைகளை கொட்டினான். ஷெரினுக்கு இவர்கள் பல்கலைக்கழகத்தில் போதை பழக்கம் உண்டு என்று தெரியும். தெரிந்தாலும் அதை பெரிதாக எடுக்காமல் இருந்தாள். ஆய்வுக்கென ஒரு தலைப்பை எடுக்கும் போது கூட சாதாரணமாகவே,
‘Drugs and its effects, Drug abuse among students’ (போதை பழக்கத்தின் விளைவுகள், மாணவர்களிடையே போதை பழக்கம்) என்று சாதாரணமாக தொடங்கியது அவள் ஆய்வு. அவளுடன் படிப்பவர்கள் எல்லாம் போதைக்கு அடிமையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது.
ஒரு மாணவனோ, மாணவியோ,
‘புதுசா ஒரு தலகாணி வந்திருக்கு, ட்ரை பண்றியா?’ என்று அடுத்தவரிடம் சங்கேத மொழியில் கேட்பார்கள். சேர்த்து வைக்கும் காசில் கொஞ்சமாக வாங்கி, அந்த மாத்திரையோ, இல்லை crystal போல் இருக்கும் மருந்தையோ உடைத்து சில துகள்கள் வாயில் வைத்தால் போதும்! பல மணி நேர போதை, மொத்தமாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
ஷெரின் ஆய்வுக்காக போதை பழக்கம் இருக்கும் சில மாணவர்களிடம் இயல்பாக பேசி, நட்பு வளர்த்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டாள். அது அவளை இன்னும் தொடர வைத்தது. அவள் தாத்தா ஜோசப் மணப்புரம் எம்.எல்.ஏவாக இருந்தவர், நேர்மையான மனிதர், அதனாலயே சமூக பொறுப்பு என்பது இயற்கையாக அவளிடம் இருந்தது.
சில விஷயங்களில் எல்லாரும் ‘நமக்கெதுக்கு?’ என்று ஒதுங்க, அவளோ ‘அப்போ நம்ம எதுக்குத்தான் இருக்கோம்?’ என்று கேட்பாள். ஏதோ சின்னதாக புதிதான போதைக்கு ஆசைப்படுகிறார்கள் என்று நினைக்க, அதற்கு பின் பல கோடி மதிப்பிலான வியாபாரம், அதற்கான சூழ்ச்சிகள் இருப்பது அவளுக்குத் தெரிந்தது.
அவர்களின் சீனியர் மாணவனான அர்ஜுன் பி.எச்.டி செய்கிறான். அவன் இங்கே ஏழு ஆண்டுகள் முன்பு சேர்ந்த போது தொடங்கிய பழக்கம், இன்று வரை தொடர்ந்தது. அவன் முதலில் பழகி, இத்தனை ஆண்டுகளில் அவன் மூலமாக பழகியவர்கள் அனேகம் பேர். இப்படி கூட பயிலும் மாணவர்களுக்கு, ஜூனியர்களுக்கு என்று அவன் பங்குக்கு போதை மருந்தினைக் கொடுப்பதற்கு பணமாகவும் உயர்தர போதை மருந்துகளையும் அவன் பெற்றுக் கொள்வான்.
வெறும் எழுத்தளவில் பொதுவான தகவல்கள் அவளின் ஆய்வுக்குப் போதும். ஷெரினுக்குள் இருந்த பத்திரிக்கையாளர் தலை தூக்கினாள். இளங்கலை படித்த பின் ஓராண்டு கொச்சியில் இருக்கும் தேசிய நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய அனுபவமும் கை சேர, அர்ஜுனிடம் தனக்கும் போதை மருந்து வேண்டும் என்று சொல்லி, அவனோடு வாங்குவதற்கு சென்றாள்.
அங்கே பார்த்தால் அது நாகராஜனின் குடோன். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இந்த மனிதன் எப்படி துணை மேயரானான் என்று ஒரு நாள் அவர்களுக்குள் விவாதம் கூட நடந்தது, இப்போது அத்தனைக்கும் ஷெரினுக்கு விடை கிடைத்தது, அவள் நினைத்தது போல் சாதாரணமாக இல்லாது நாட்டையே சீர்குலைக்கும் வண்ணம் இந்த போதையின் வியாபாரம் நடக்கிறது என்று புரிந்து கொண்டாள். அத்தோடு ஆயுத கடத்தலும் நடந்தது. இதையெல்லாம் தனது பேராசிரியரான நிவாஸ் கோகாயிடம் சொல்ல, அவர் பாதுகாப்பின்றி அது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
ஷெரின் அதனை கேட்காது, மீண்டும் அர்ஜூனோடு போதை மருந்து வாங்க சென்றாள். அந்த சமயம் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, அவள் வீடியோ பதிவு எடுக்க, அங்கே தொடங்கியது அவளின் வில்லங்கம்.
சிசிடிவி காட்சியில் இவளின் நடவடிக்கை பதிவாகி விட, சங்கர் பார்வைக்கு வந்தது. அவன் அர்ஜுனை அழைத்து சத்தம் போட்டான். அர்ஜுன் அதிலிருந்து ஷெரினிடம் விலகியிருக்க, இந்த போதை விசயத்தை காவல்துறைக்கு எடுத்து செல்வதே சரியென, நிவாஸ் ஷெரின் அவரிடம் கொடுத்த வீடியோ ஆதாரத்தை எடுத்துக் கொண்டு நேரடியாக டி.எஸ்.பி தினகரனை சந்தித்தார். அவனோ அதை நாகராஜனிடம் காட்டி, இரண்டு கோடி பணம் பெற்றான். நாகராஜன், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அரசியலுக்கும் ஆபத்து, கோடிகளை கொட்டும் வியாபாரத்துக்கும் ஆபத்து என்று சங்கரை கடிந்தான்.
சங்கர் அர்ஜுனின் அஜாக்கிரதையால் அவர்கள் தொழிலே பாதிக்கப்பட்டிருக்கும் என்று கத்தினான்.
“உன்னை மாதிரி சில்லற பயலுங்களை நம்பி உள்ள விட்டிருக்கக் கூடாது, நீ கூட்டிட்டு வந்த அந்த பொண்ணு எங்க எல்லாரையும் உள்ள வச்சிருப்பா. இங்க போதை மருந்து வாங்குற மாதிரி நாடகமாடிட்டு சரக்கு சப்ளையாவறதை எல்லாம் வீடியோ எடுத்து அவ வாத்திக்கு அனுப்பி, அந்தாள் டி.எஸ்பியைப் பார்த்துருக்கான். அடுத்து உன்னைத்தான் நார்கோடிக்ஸ்ல தேடி வருவாங்க, இனி உனக்கு போதை மருந்து, பணம் ஒன்னும் கிடையாது” என்று சத்தம் போட்டான்.
“அண்ணா, அந்த பொண்ணு கேரளாவுல இருக்க அவ ப்ரண்ட்ஸுக்கும் வேணும்னு கேட்டானு தானே உங்ககிட்ட சொல்லிட்டு அழைச்சிட்டு வந்தேன்.” என்று அர்ஜுன் ஷெரினை அழைத்து வந்ததற்குக் காரணம் சொன்னான். அப்படியெல்லாம் எளிதாக நாகராஜனின் கோட்டைக்குள் யாரும் நுழைய முடியாது. காதலி ஸ்ரேயாவையே அவன் அங்கு அழைத்து வந்தது கிடையாது.
ஷெரினை அழைத்து சென்றது கூட கேரளாவுக்கும் போதை பொருள் அனுப்பலாம். தன் மூலமாக சங்கருக்கு பிஸினஸ் கிடைத்தால் இன்னும் பணம் வரும் என்ற எண்ணமே. அதைவிட அர்ஜுனுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்று ஷெரின் லட்ச ரூபாய் கொடுத்து போதை பொருட்கள் வாங்கியிருந்தாள். அது எல்லாம் அர்ஜுனுக்கு ஷெரின் மீது சந்தேகம் வரவிடவில்லை.
அர்ஜூன் வேலைக்குப் போகாமலே வசதியாக வாழ்கிறான். அவன் காதலி ஸ்ரேயாவிற்கு வைரத்தில் பரிசளிக்குமளவு பணமிருக்கிறது, அதைவிட போதை,… அது கிடையாதா? என்று ஷெரின் மீதான வன்மம் தலை தூக்கியது.
“இப்போ என்ன செய்யணும் சொல்றீங்க? எனக்கு ட்ரக் வேணும்ணே, என் ஆளுக்கு இந்த வாரம் பர்த்டே வருது. போன வாரம் பிரேசில இருந்து வந்ததே அந்த ஐட்டம் அது வேணும். ப்ளீஸ் இனிமே அந்த பொண்ணால பிரச்சனை வராது” என்று பேசி பார்க்க, சங்கருக்கு நாகராஜன் அவனை அடித்துத் திட்டிய கோபம். அதை விட கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும்.
இதில் எதிர்கட்சி வேறு. இந்த விஷயம் வெளியே வராமல் இருந்தால், பணத்தை வைத்து அடுத்து எம்.எல்.ஏவாக திட்டம் வைத்திருந்தான் நாகராஜன். அத்தனைக்கும் ஒரு பெண் அழிவை ஏற்படுத்துவதா?
அதுவும் பத்திரிக்கை துறைப்பெண், என்றானாலும் ஆபத்து என்று உணர்ந்து அர்ஜூனை வைத்தே ஷெரினை கொல்ல சொன்னான்.
“அந்த பொண்ணால பிரச்சன வராதா? அந்த பொண்ணு இருக்கிற வரை பிரச்சனை தான். இவ்வளவு பேசுறியே உன்னாலதான் பிரச்சனை. அவளை போட முடியுமா உன்னால?” என்று கத்தினான்.
இருபது லட்சம் பேரம் பேசினான். அர்ஜுனுக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியவில்லை. பணம் வேண்டும் அதுவும் லட்சங்களில், கூடவே அவனுக்கு விதவிதமான போதை பொருள். கூடவே ஷெரின் என்றாவது வெளியே சொன்னால், அவனின் டாக்டரேட் படிப்பு, எதிர்காலம் எல்லாம் அவளால் போவதா? வழக்கில் சிக்கி வாழ்க்கை முழுவதும் வீணானால் என்ன செய்வான்? தன்னிடம் நடித்து ஏமாற்றி, ஆதாரங்களை திரட்டியவள், ஏற்கெனவே நிவாஸ் மூலம் போலீஸுக்குப் போயிருக்கிறாள். இவன் வாழ்க்கை, டாக்டரேட் படிப்பு, காதலியின் படிப்பு எல்லாம் போய் விடும்.
சங்கரோ நாகராஜனோ மாட்டினால் அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இவனுக்கு? அவள் இருந்தால் தானே? பிரச்சனை. இல்லா விட்டால்?? மாட்டிக் கொள்வோமோ என்ற பயமே கொலை செய்ய தைரியம் கொடுத்தது.
அதுவே கொலை செய்ய தூண்டுவதாக இருந்தது. ஹாஸ்டல் டே நல்ல வாய்ப்பாக அமைய, அர்ஜுன் தன் காதலி ஸ்ரேயா மூலமாக நாகராஜனின் குடோனில் சில தகவல்கள் கிடைத்ததாக சொல்லி, ஷெரினின் பத்திரிக்கை மூளையைத் தூண்டி விட்டு அறைக்குத் தனியாக வரச் சொன்னான்.
தனியாக வந்த ஷெரினை கண்கள் சிவக்க, தன் காதலி ஸ்ரேயாவோடு கழுத்தறுத்து கொலை செய்தான். அர்ஜுன் தற்கொலை போல தெரியட்டும் என்று அவளை நாற்காலியில் உட்கார வைத்து, ரத்தக்கறையை எல்லாம் துடைத்தான். ஹாஸ்டல் டே உற்சாகத்தில் ஷெரினின் அலறல் எல்லாம் கேட்கவே இல்லை. ஷெரினின் போராட்டத்தில் அவன் கையிலும் கீறல் விழ, அதில் தெளித்த ரத்தமே அவனுக்கு எதிரான சாட்சியானது.
அந்த உதிரத்தின் சாட்சி ஷெரின் கொலைக்கான உண்மையின் சாட்சியாக மாறியது!
அர்ஜுனும், ஸ்ரேயாவும் குற்றத்தை ஒப்புக்கொள்ள அவர்களை தூண்டி விட்ட சங்கரும் கைது செய்யப்பட்டான்.
“என்ன சிங்காரம், கலக்குறீங்க போல” என்ற மனைவி கல்கியின் குரலில் சிரஞ்சீவிக்கு சிரிப்பு. அவள் விளிப்பில் வழக்கம் போல்,
“அஹம்பாவ அம்மடூ!” என்றான்.
“அதுக்குள்ள ஆந்திரா வரைக்கும் நியூஸ் வந்துடுச்சா?” வரப்ரசாத் கல்கியிடம் கேட்க,
“மீடியாவை என்னனு நினைச்சீங்க? அமெரிக்காவுல ட்ரம்ப் தும்மினா கூட இரண்டே செகண்ட்ல இங்க நியுஸ் வந்திடுது, தஞ்சாவூர்ல இருந்து நியூஸ் வராதா? தென்மண்டல நார்கோடிக்ஸ் சிறப்பு அதிகாரி சிரஞ்சீவி வரப்ரசாத் தலைமையில் நடைபெற்ற சோதனையில் பல நூறு கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்ல்ல்ல்! துணை மேயர் நாகராஜன் கைதூஊஊஊ!” என்று ஏற்ற இறக்கத்தோடு செய்தி வாசிப்பாளர் போலவே கல்கி பேசி காட்ட சிரஞ்சீவிக்கு சிரிப்பு.
“நேன் நின்னு மிஸ் சேஸ்துனானு” என்று பிரிவின் பிரியத்தால் அவன் வார்த்தைகள் வர,
கல்கியோ வேண்டுமென்றே, “சப் டைட்டில்ஸ் ப்ளீஸ்” என்றாள். கல்கி, சிரஞ்சீவியின் மனைவி. இப்போது குண்டூரில் குடும்பத்தோடு இருக்கிறாள். வேலை காரணமாக சிரஞ்சீவி தமிழகத்தில்.
“மீலாண்ட்டி சுந்தரமாயின அம்மாயித்தோ சுந்தர தெலுங்குலோனே மாட்லாடாலி” (உன்னை மாதிரி சுந்தரமான பொண்ணுக்கிட்ட சுந்தர தெலுங்குல தான் பேசணும்) என்று சீரஞ்சீவி வேகமாய் சொல்ல உண்மையாகவே அது கல்கிக்குப் புரியவில்லை. அவளின் தெலுங்கு இப்போதுதான் மகளோடு சேர்ந்து அ, ஆ என்ற நிலையில் இருக்கிறது.
“இதுக்கு முதல்ல சொன்னதே பரவாயில்லை.” கல்கி கடுப்பாக சொல்ல,
“அழகான பொண்ணு கிட்ட அழகான மொழியில தான் பேசணும்” என்றான். அதில் தமிழ்ப்பற்று தலைதூக்க,
“தாய்ப்பால் கொடுத்த எங்கத்த தமிழ்ப்பால் கொடுக்கலயே” என்று கிண்டல் செய்தவள் கண்டிப்பான மனைவியானாள்.
“வேலை இருக்குனு நடுராத்திரியில வீட்டுக்கு வரது, சாப்பிடாம இருக்கிறது எல்லாம் செய்யாம மன்ச்சி பிள்ளடாவா இருங்க ப்ரசாத்.” என்று அதட்டி போனை வைத்தாள்.
சிரஞ்சீவி மனைவியோடு பேசிய பின் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான். நார்கோடிக்ஸுக்கு அவன் மாற்றம் பெற்று ஒரு மாதம் ஆகிறது, அதற்குள் இது பெரிய விஷயம். முழு பாராட்டும் சக்திவேலுக்கு என்று அவனுக்கு தெரியும். ஒரு கொலை வழக்கின் பின்னணியில் புதைக்கப்பட்ட உண்மைகள் எவ்வளவு இருக்கின்றன என்று எப்போதும் போல் அவனுக்கு இப்போதும் ஆச்சரியமே. நாகராஜனை பெயிலில் எடுக்க அவன் விடவில்லை, எதிர்க்கட்சியாக போய்விட ஆளுங்கட்சியின் செல்வாக்கு சிரஞ்சீவியிடம் உண்டு.
நாகராஜனோடு சம்மந்தப்பட்ட பெரும்புள்ளிகளை விசாரிக்க தொடங்கி விட்டான், இனி அது தனி வழக்கு. அது சம்மந்தமாக என்.சி.பியின் (Narcotics Control Bureau, NCB- Director) இயக்குநரிடம் பேச வேண்டியிருந்தது, வெறும் மாவட்டம், மாநிலம் சம்மந்தமான பிரச்சனையில்லை இது. இந்தியா முழுவதும் இந்தியாவின் பாதுகாப்புக்கே உலை வைக்கும் பிரச்சனை.
எனவே அதற்குரிய உயர் அதிகாரியின் பார்வைக்கு எடுத்து சென்றான்.
✅ End of Episode 29
Very nice.
நம்ம ஆளு..... சிரஞ்சீவி காரு சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻
போதை பற்றி தெரியப்படுத்த போகி பாவம் ஷெரின்