Episode 3
அடுத்த நாள் விடியல் காலையிலேயே எழுந்து விட்டாள் ஆதினி. சின்ன விளக்கைப் போட்டுக் கொண்டு படித்தாள். படிப்பில் விளையாட்டுத்தனமிருக்காது, படித்தால் சிறப்பாக செய்வாள். அவளாக நினைத்து செய்ய வேண்டும். சிலர் அப்படித்தான்!! ஆயிரம் பேர் சொன்னாலும் அவளாக செய்தால் மட்டுமே உண்டு. படித்து முடித்து விட்டாள். குளித்து ரெடியாகி வெளியே வர, அவள் தோழி ஷெரின் அப்போதுதான் எழுந்தாள்.
“ஷெரினே! நீ ரெடியாகிட்டு கூப்பிடு, நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்” என்ற ஆதினி தயாரானபடியே படுத்தாள். என்ன உறக்கம் வரவில்லை. மாலை போல் அப்பா அழைக்க வருவார். வீட்டுக்குப் போக வேண்டும் என்ற யோசனை. அப்போது அரிச்சந்திரன்? என்று அவனிடமே போய் நின்றது ஆதினியின் மனம்.
படித்து முடித்த பின் அவனைப் பார்த்திருக்கலாம், இல்லை எனக்கு இன்னும் கொஞ்சம் காலம் போய் கல்யாணம் செய்திருக்கலாம் என்ற எண்ணம் மட்டும் மாறாது ஆறாது ஆதினியை ஆட்டி வைத்தது.
இந்த துயரம் இருக்கிறதே, அதன் தூரத்தை எல்லாராலும் ஒரே மாதிரி கடந்தோ, மறந்தோ விட முடியாது! சிலர் துயரத்தை கடந்து வாழ்க்கை நடத்துவார், சிலர் அதனோடு போராடி வாழ்வர். சிலருக்கு பல காலம் எடுக்கும் இழப்பில் இருந்து இயல்புக்கு மீள, அதனோடு பொருந்தி வாழ. எல்லாம் இருந்த ஆதினிக்கு அம்மா இல்லாமல் போனதும் எதுவுமே இல்லா நிலை!
ஆதினி கல்லூரி மூன்றாம் ஆண்டில் சேர்ந்த புதிதில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவளின் அம்மா எதிர்ப்பாராது இறந்துவிட, அது ஆதினி குடும்பத்துக்கு பலமான அடி! அவளின் தாத்தாவுக்கு சென்ற வருடம் முடியாமல் போக, அவசரமாக வரன் பார்த்து நடந்தேறியது ஆதினி- அரிச்சந்திரன் திருமணம்.
அந்த கோபத்தில் சில மாதங்கள் வீட்டினருடன் பேசாமல் இருந்தாள். அரிச்சந்திரனிடம் அவளால் குறையே சொல்ல முடியவில்லை. அப்படி தாங்கினான். ஒவ்வொரு செயலிலும் அக்கறை என்று ஆட்சி செய்தான். உடனிருந்த போது இந்த உண்மை புரியவில்லை. அம்மாவின் திடீர் இழப்பு, வீட்டினரின் திருமணப் பேச்சு, அம்மா இறந்து அதிலிருந்து மீள்வதற்குள் அவள் வீட்டிலிருந்து புகுந்து வீட்டிற்கு வந்தது எல்லாம் தீரா மன உளைச்சல் தந்தது.
துக்கம், துயரம் எல்லாம் தீரா கோபமாக மாறியது. புதிதாக கல்லூரியில் சேர்ந்தது , அந்த சூழல், தினமும் செய்த பயணம் எல்லாம் ஆதினியை தடுமாற வைத்தது. அதையெல்லாம் விட்டு விடுதி வந்த பின் சில மாதங்கள் நிம்மதியாக இருந்தாள், படிப்பில் மட்டும் கவனம் வைத்து என்று நாட்கள் போனது. மீண்டும் ஒரு வெற்றிடம், வீட்டில் ராஜ கவனிப்பு இந்த இளவரசிக்கு. அம்மா போன பின் இன்னும் அப்பா, தாத்தா, ஆத்தா என்று எல்லாரும் தாங்கினர்.
அரிச்சந்திரனும் அப்படியே!! இங்கு வந்து ஹாஸ்டல் உணவு பிடிக்காமல் போனது, அவள் வேலையை அவளே பார்க்க ஒரு சோர்வு. வீட்டு நினைவுத் தாக்கியது, கூடவே அரிச்சந்திரனின் நினைவும். ஆதினிக்கு எல்லாம் அவசரம். சட்டென்று முடிவினை எடுப்பாள். அந்த நேரம் மனம் என்ன சொல்கிறதோ அதுவே அவள் சொல், செயல் ஆகிவிடும்.
பிரிந்து விடலாம் என்ற போது கூட, பொறுமையாக பேசியவன் அவள் கணவன். தவறு, என்று மன்னிப்புக் கேட்ட போதுதான் கோபமாக நடக்க ஆரம்பித்தான். தவிர்க்க ஆரம்பித்தான், தயலினை தவிக்க விட்டான். விலகி செல்ல, இவளின் கர்வத்தில் அடி!! என்னை கண்டுக்க மாட்டியா? எனக்கு மட்டும் உன் நினைவு, உனக்கு ஏன் இல்லை என்ற கேள்வி, எதிர்ப்பார்ப்பு, ஏக்கம், ஏமாற்றம் எல்லாம் சங்கமித்து சஞ்சலமாகி ஆதினியை அரிச்சந்திரனை தவிர வேறு யோசிக்க விடாமல் செய்தது.
அவன் கவனத்தை தன் பக்கம் திருப்ப செய்த செயல்கள் எல்லாம் அவனை இன்னும் கோபம் கொள்ள வைத்ததுதான் மிச்சம்.
“என்னடி டூயட்டா?” ஷெரின் சிரிப்போடு வாசலை வெறித்திருந்த ஆதினியைக் கேட்க, “போடிங்!” என்று பல்லைக் கடித்தவள்,
“இன்னிக்கு ஒழுங்கா டெஸ்ட் எழுதலன்னா அட்வகேட் என்னை சும்மா விட மாட்டார். இந்த எச்.ஓ.டி வேற ஓவரா டோஸ் விட்டுட்டார் போல. படிக்கிற புள்ள மனசை கெடுக்காத ஷெரின். என் வீட்டுக்காரர் பெயரை காப்பாத்துற மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்த ஆதினிக்கு இருக்கு” என்று தோழியின் தோளில் கைப்போட்டபடி பேசிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்தனர்.
ஜம்பமாக பேசிவிட்டாலும் ஆதினிக்கு அரியின் நினைவே. காலையில் மெஸ் உணவினை உண்ண, மனமோ கணவனின் கைப்பக்குவத்துக்கு ஏங்கியது. முயன்று மனதை தேர்வின் பக்கம் திருப்பினாள்.
தேர்வு எழுதும் போது வேகமாக முடித்து விட்டாள். நன்றாகவே எழுதினாள். அன்று கல்லூரியில் பொங்கல் விழா இருக்க, ஆதினியும் அதில் பங்கேற்கிறாள். தேர்வு அரை நாளில் முடிந்து விட, விழாவுக்கு ப்ராக்டீஸ் சென்ற போது பொங்கல், கணவன், வீடு, தாரகை அழைத்தது என்று மீண்டும் மீண்டும் அதையே மனம் நினைத்தது.
‘நான் வேண்டாம் சொன்னதெல்லாம் நோட் பண்ணிட்டு இப்போ பாயிண்ட்டா போட்டு தாக்குறான் அந்த வக்கீல், நீ கூப்பிடாம நான் வர மாட்டேன் டா’ என்று மனத்தில் கறுவிக்கொண்டாள்.
கணவன் பற்றிய எண்ணமே சூழ, ஆதினிக்கு ‘என்னை அந்த அரிச்சந்திரன்கிட்ட இருந்து யாராச்சும் காப்பாத்துங்களேன்’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது.
“ஹே! ஈவினிங் ஃபங்க்ஷன் நம்ம டிபார்ட்மெண்ட் பிச்சு உதறணும். வா டி என்ன சும்மா உட்காந்திருக்க, நேத்து வேற மேடம் சாகசம் எல்லாம் பண்ணிட்டீங்க.” என்று ஆதினியின் தோழன் நிரஞ்சன் அழைத்தான்.
“அடேய் இருடா வரேன்” என்று ஆதினி எழுந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கினாள்.
ரவிக்குமார் காலையிலேயே மருமகனுக்கு அழைத்துவிட்டார்.
“சொல்லுங்க மாமா, நல்லாயிருக்கீங்களா? தாத்தா எப்படி இருக்கார்?” என்று நலம் விசாரிக்க,
“நல்லாயிருக்கோம் மாப்ள, நேத்து ஆதிகிட்ட பேசினேன். அவ பொங்கலுக்கு இங்க வரணும்னு இஷ்டப்படுறா, இன்னிக்கு சாயங்காலம் நான் அவளை அழைக்க போறேன். அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு, இரண்டு நாள் இங்க இருக்கட்டும், பொங்கல் அன்னிக்கு அங்க போகலாம், நீங்களும் இங்க வரணும்” என்று அழைத்தார்.
‘அப்பா, பொண்ணு எல்லாம் முடிவெடுத்துட்டு பேசுவாங்க’ என்று அரிச்சந்திரனுக்கு தோன்றினாலும்,
“ஆதினியை நான் ஈவினிங் போய் அழைச்சிட்டு வரேன் மாமா. இங்க தாராவுக்கு வரிசை கொடுக்கணும், அதுக்கு வேலை இருக்கு. பொங்கல் அண்னிக்கு நானே அவளை அழைச்சிட்டு வரேன். அப்படி வரலனு சொன்னா நான் அங்க வந்து விடுறேன்” என்றான்.
“இல்ல மாப்ள, ஆதி கோச்சுப்பா” ரவிக்குமார் தயங்க,
“அவளுக்குனு கொஞ்சம் பொறுப்பு இருக்கு மாமா, அவளை நான் பார்த்துக்கிறேன்” என்றான் அழுத்தமாக. ரவிக்குமாருக்கு மகளின் விருப்பம் தானே எல்லாம். அவள் வாடியது பொறுக்காமல் சொல்ல, இப்போது அரியும் இப்படி பேச அவருக்கு தயக்கம்.
“சரி மாப்ள, ஆதிக்கு நான் சொல்லிடுறேன்” என்றதும்,
“இல்ல மாமா, நானே சொல்லிக்கிறேன்” என்றான் அதற்கும். அரிச்சந்திரனுக்கு சர்ப்பரைஸாக போக எண்ணம்.
‘அந்த அரைடிக்கெட் வீட்டுக்குக் கூப்பிட்டாதான் வருமோ? பார்த்துக்கிறேன்’ என்று நினைத்தான்.
மாமனாரிடம் பேசி முடித்தவன் திருவாரூர் கிளம்பி சென்றான். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை, முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தன. எல்லாம் முடித்து பார்க்க மணி நாலாகியது. அவன் நண்பர்களிடம் பேசிவிட்டு காரை எடுத்துக் கிளம்பினான். அவன் எப்போதும் இருசக்கரம், இன்று மனைவியை அழைக்க தங்கையின் கார் எடுத்து வந்திருந்தான்.
அங்கே மனைவி படிக்கும் கல்லூரி செல்ல, பார்த்தால் பொங்கல் விழா களைக்கட்டியிருந்தது. இவன் சென்று மேடை தெரியும் வண்ணம் ஒரு இடத்தில் உட்கார, ஆதினி உற்சாகமாக பறையடித்துக் கொண்டிருந்தாள். அரிச்சந்திரன் கால் மேல் கால் போட்டு கொண்டு ஒரு ஓரமாய் மனைவியின் செயலை ரசித்து பார்த்தான்.
தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது.
திருவிழாக்கள், மங்கள இசை, துக்க நிகழ்வு என்று எல்லா இடங்களிலும் பறை இருக்கும். தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் அதற்கு மிகவும் பிரசித்தமான இடங்கள். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
“என்ன அடி அடிக்கிறா!” என்று மனம் மெச்சியது. ஆதினி வியர்க்க வியர்க்க, உற்சாகம் வடியாமல் சிரித்த முகத்தோடு முன்னேயும் பின்னேயும் அடியெடுத்து அதே தாளத்தோடு அடிக்க, இங்கே அரிச்சந்திரனின் தரையில் இருந்த ஒற்றைக்காலும் தாளம் போட்டது. சில நிமிடங்கள் அந்த கொண்டாட்டத்தை ரசித்தவன் போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினான்.
மாணவ மாணவியர் எல்லாரும் மிகுந்த உற்சாகமாக மேடைக்குக் கீழ் இருந்த அந்த மைதானத்தில் நின்று களியாட்டம் போட்டனர். துப்பட்டாவை எல்லாம் தூக்கி போட்டு, அட்டகாசம். வயது, இளமை, திருவிழா என்று எல்லாம் சங்கமித்திருக்க, சந்தோஷம் மட்டுமே அங்கே.
அரிச்சந்திரன் எடுத்த வீடியோவை தங்கைக்கு அனுப்பிவிட்டு, விழாவைப் பார்த்தான். ஆதினி ஆட்டம் முடிந்து பின்வரிசையில் வந்து காலை நன்றாக நீட்டி நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள். மனைவி உட்கார்ந்ததைப் பார்த்த அரிச்சந்திரன், மெல்ல எழுந்து அவளிடம் வந்து அமர்ந்தான்.
“அடி பின்னிட்ட! குட்!” என்ற குரலில் திரும்பிய ஆதினிக்கு ஆச்சரியம். பரவசத்தில் விழிகள் விரிய, அரிச்சந்திரனை பார்த்தாள். வெள்ளை சட்டை, கறுப்பு பேண்ட் என்று கோர்ட் சென்றவன் அப்படியே வந்திருந்தான். உண்மையில் களைத்துப் போயிருந்தான். ஆனால் ஆதினிக்கு அதனை ஆராய அவகாசமில்லை, அவன் வந்திருப்பதிலே மனதுக்குள் ஒரு உற்சாகம், கர்வம் அவளிடம்.
“தேங்க் யூ” என்று சொல்லி அவள் விழாவினை பார்க்க,
“இப்போ கிளம்பினாதான் வீட்டுக்குப் போகலாம் ஆதினி, லேட்டாகிடும். தாத்தா வெயிட் பண்ணுவார்” என்று அரி சொல்ல,
“நான் வரல, அப்பா வரேனு சொல்லியிருக்கார். நீங்க தாரா அத்தாச்சி சொல்லித்தானே என்னை அழைக்க வந்திருக்கீங்க?” என்று ஆதினி நன்றாக திரும்பி அவனை பார்த்து கேட்டாள். தங்கை சொன்னாள் என்றில்லை, முதல் பொங்கல் ஆதினி வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம். அதனால் ஆதினி மீது மனத்தாங்கல் இருந்தாலும் இறங்கி வந்தான்.
“ஓஹ், கூப்பிட்டாதான் மகாராணி வருவீங்களோ?” அரி நக்கலுடன் கேட்க,
“ஏன் அரிச்சந்திர மகாபிரபு கூப்பிட மாட்டீங்களோ? அயோடைஸ்டு உப்பு போட்டு சாப்பிடுறவ ஆதினி, கூப்பிடாம எல்லாம் வர மாட்டா” அவனை போலவே சொன்னாள் ஆதினி.
ஆதினியின் பேச்சில் லேசாக சிரித்த அரி, “அதான் இப்போ கூப்பிடுறேனே” என்று கைகளை நீட்டி நெட்டி முறித்தவன் எழுந்து கொண்டான்.
ஆதினிக்கும் மறுக்க முடியவில்லை. அவன் அழைக்க வேண்டும் என்று ஆவல், வந்துவிட்டான். அதனால் இன்று முரண்டுபிடிக்காமல் எழுந்தாள். அதுவும் வந்தவுடனே அவளை பாராட்டியிருக்க குளிர்ந்தது மனம்.
“டென் மினிட்ஸ், ஹாஸ்டல்ல போய் பேக் எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல,
“நானும் வரேன்” என்று அரிச்சந்திரனும் உடன் நடந்தான். இவன் ஹாஸ்டலில் கீழே நிற்க, ஆதினி தோழி மற்றும் வார்டனிடம் சொல்லிவிட்டு மேலே சென்று பையை எடுத்து வந்தாள். அரிச்சந்திரன் அவள் வரவும் பையை வாங்கிக் கொண்டான்.
அன்பின் செயல்கள் எல்லாம் சின்னஞ்சிறியவையே என்று தோன்ற வைத்தான் ஆதினியின் கணவன். அரி காரை எடுத்தான். ஆதினிக்கு வியர்க்க,
“ஏசி ஆன் பண்ணு” என்றான் அரி.
“இல்ல, விண்டோ ஓபன் பண்றேன்” என்ற ஆதினியிடம்,
“அப்புறம் எப்படி உனக்கு பறையில இண்டரஸ்ட்? பொண்ணுங்க பொதுவா பரதம் அது மாதிரிதானே போவாங்க” என்று கேட்டான் அரி.
“யுஜி படிக்கிறப்ப எங்க காலேஜ்ல கத்துக்கிட்டேன், பரத நாட்டியமா அதுக்கு மேக் அப் போடணும், எக்ஸ்ட்ரா நிறைய வேலை செய்யணும். இது நானாவே இருக்கலாம். அதனால் பிடிக்கும்” என்றாள்.
“ரொம்ப நல்லா அடிச்ச. எனர்ஜிடிக்!” அரிச்சந்திரன் மனதார புகழ்ந்தான். அதில் நனைந்தாள் ஆதினி, கடைசியாக அவள் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற போது பாராட்டியவன். இவளும் பாராட்டும்படி ஒன்றும் செய்யவில்லை.
ஆதினியின் முகம் களைப்பாக இருந்தாலும் பிரகாசித்தது. கணவனுடன் நீண்ட கார் பயணம், தழுவிய தென்றல் காற்று, புதிதாய் உணர்ந்தாள்.
“எக்ஸாம் எப்படி பண்ணின?” அரி கேட்க,
“சூப்பர்” என்றாள். வேறெதுவும் பேசாது அரி காரை ஓட்ட, ஆதினிக்கு அவனிடம் பேச வேண்டும் என்ற ஆசை. அதனால் சாதாரணமாக பேச்சு கொடுத்தாள்.
“எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்” என்று அவனை பார்க்க,
“சொல்லு” என்றான் சாலையில் கவனம் வைத்து.
“அது அத்தை மாமா அந்த காலத்துலயே லவ் மேரேஜ், அப்புறம் ராஜாண்ணா தாரகை அத்தாச்சி லவ் மேரேஜ். நீங்க தானே மைதிலி அக்காவுக்குக் கூட லவ் மேரேஜ் பண்ணி வைச்சீங்க, ஆனா நீங்க ஏன் லவ் மேரேஜ் பண்ணல” என்று கேட்டுவிட, அரியோ புன்னகையுடன்,
“ஊர்ல இருக்கவன் காதலுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணினா எனக்கு ஏது லவ் பண்ண நேரம். அதான் பண்ணல” என்றான்.
“நல்லது” என்று ஆதினி முணுமுணுக்க, அரி காதில் விழவில்லை. அதற்குள் தாரகையிடமிருந்து ஆதினிக்கு அழைப்பு.
“ஹே சூப்பர் ஆதி, செம ஆட்டம்” என்று எடுத்தவுடனே உற்சாகமாக பாராட்ட,
“என்ன அத்தாச்சி? நீங்க எப்போ பார்த்தீங்க?” என்று ஆதினி புரியாமல் கேட்க,
“அரி எனக்கு வீடியோ எடுத்து அனுப்பினானே, என் பொண்டாட்டி டான்ஸ் பாருனு” என்று தாரகை சொல்ல, ஆதினியின் பார்வை கணவனை அள்ளிக்கொண்டது. தன்னை அவனுக்குப் பிடிக்குமோ என்று தோன்றியது. தேவையில்லாமல் பேசி எல்லாவற்றையும் சிக்கலாக்கி விட்டோம் என்று புரிந்தது. இருந்தும் இத்தனை நாள் என்னை தேடவில்லையே என்ற கோபம் இருந்தது. இவள் அவனை தள்ளி வைத்ததை மறந்தாள்.
“தேங்க்ஸ் அத்தாச்சி, நாங்க ஊருக்குத்தான் வந்துட்டு இருக்கோம்” ஆதினி சொல்ல, தாரகைக்கும் மகிழ்ச்சி.
“சூப்பர் சூப்பர், நாளைக்கு வரேன் நான். பார்த்து வாங்க” என்று சொல்லி தாரா வைத்துவிட ஆதினி அமைதியாக கண்மூடி கொண்டாள். காலையில் சீக்கிரமே எழுந்தது, படித்து, பரீட்சை எழுதியது மதியம் முதல் பயிற்சி என்று உடல் வலியெடுத்தது.
கண்மூடியவள் அப்படியே, “வீடு வந்ததும் சொல்லுங்க, எனக்கு ரொம்ப தூக்கமா வருது” என்றாள்.
அரி தலையசைக்க, அவன் அமைதியாக வண்டி ஓட்டினான். ஒன்றரை மணி நேர பயணம். வீடு வந்ததும் ஆதினியை எழுப்ப, கண்கள் சிவந்திருந்தாலும் ஆதினிக்கு வெகு நாட்கள் கழித்து கணவன் வீடு வரும் உற்சாகம். கார் கதவை திறந்தவள், வேகமாக வீட்டினுள் ஓட,
“ஓய்! அரை டிக்கெட் வா டி இங்க” என்று காருக்குள் இருந்து அதட்டி அழைத்தான் அரிச்சந்திரன்.
“என்ன?” என்று அவள் அருகே வர,
“கேட் திற, காரை உள்ள விட வேண்டாமா?” என்றான் கடுப்பாக.
“ஓகே ஓகே” என்று சொன்னவள் காரை அவன் உள்ளே விடவும் கேட்டை சாற்றினாள். வீட்டுக்குள் நுழைந்து ஹாலில் அமர்ந்து டீவியில் ராஜபாட் ரங்கதுரை படம் பார்த்திருந்த ராமசாமியிடம் ஓடினாள்.
“தாத்தா” என்று உற்சாகமாய் குரல் கொடுத்து அவர் அருகே உட்கார,
“அடேடே ராஜாத்தி! வாடா” என்று வாஞ்சையாக சொல்லிய ராமசாமி ஆதினியின் கன்னத்தைத் தட்டி,
“சாப்பிட்டியா? படிப்பெல்லாம் எப்படி போகுது?” என்றார்.
ஆதினி பதிலுக்கு, “நீங்க சாப்பிட்டீங்களா தாத்தா?” என்று கேட்டு அவரிடம் அரட்டை அடிக்கத் தொடங்கினாள்.
அரிச்சந்திரன் அவள் பையை அறையில் வைத்தவன் கிச்சன் சென்று இருவருக்கும் தட்டு எடுத்து உணவு மேஜையில் வைத்தான். தண்ணீர் ஊற்றியவன் “சாப்பிட வா ஆதினி” என்று அழைக்க,
“போ போ, நேரமாச்சு” என்று ராமசாமி சொல்ல,
“அதான் நாங்க வந்துட்டோம்ல தாத்தா, போய் தூங்குங்க” என்று அரி சொல்ல தாத்தாவோ மறுப்பாக பார்த்தார்.
“இருடா, படம் ஓடுது” என்று பாவமாக டீவியை பார்க்க, “ஆஃப் பண்ணிட்டு வா ஆதினி” என்றான்.
“தாத்தா பார்த்திட்டு இருக்கார்ல, ஏன் இப்படி பண்றீங்க?” என்று ஆதினி அவனை முறைக்க, இட்லியை எடுத்து வைத்து உட்கார்ந்தவன் ஆதினியை முறைக்க,
“இது பனங்காட்டு நரி, உங்க சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது” என்று சிவாஜி கணேசன் வசனம் பேசவும் சரியாக இருக்க, ஆதினிக்கு பயங்கர சிரிப்பு. கிண்டலாக கணவனை பார்த்தாள். அரிச்சந்திரன் முறைத்தவன் அவன் பாட்டுக்கு உண்ண ஆரம்பித்தான்.
“போ போ, இந்த தடிபய அப்புறம் கத்துவான்” என்று ராமசாமி மெல்லிய குரலில் சொன்னவர்,
“நாளைக்கு இந்த படம் போன்ல எடுத்துக் கொடு” என்று பேத்தியிடம் சொல்லிவிட்டு உறங்க போக, ஆதினி உண்ண உட்கார்ந்தாள்.
“முகம் கழுவல, அப்படியே வந்தாச்சு. வந்ததுல இருந்து ஒரே அரட்டை” என்று பேச, அப்போதுதான் அரியை பார்த்தாள். அவன் ஸ்லீவ்லெஸ் டீஷர்ட், வேஷ்டி என்று இருந்தான்.
‘அதுக்குள்ள டிரஸ் மாத்திட்டான்’ என்று நினைத்தவள் அறைக்குள் போக எழ, “கை கழுவியாச்சுல, போதும். சாப்பிட்டு டிரஸ் மாத்தலாம்” என்றான்.
உணவை உண்டவளின் முகம் எதிர்ப்பார்ப்பிலிருந்து ஏமாற்றத்துக்கு மாறியது. அரியின் கைப்பக்குவத்தை எதிர்ப்பார்த்து வந்திருக்க, சமையல் செய்பவரின் சமையல் என்று புரிந்தது. உண்டு முடித்துத் தட்டைக் கழுவி வைத்து, அறைக்குள் சென்று ஆதினியும் ஒரு பெரிய டீஷர்ட், ஸ்கர்ட் அணிந்து அப்படியே மெத்தையில் சரிந்தாள்.
அரிச்சந்திரனுக்கு களைப்பாக இருந்த போதிலும் உடனே உறக்கம் வரவில்லை. உண்டு முடித்தவன் வாசற்படியில் போய் உட்கார்ந்தான். ஆதினி கணவனை காணாமல் வெளியே வர, அந்த இரவில் வாசல் தூணில் சாய்ந்து கண்மூடியிருந்தான் அரி.
ஆதினிக்கு அவன் இரவின் கவிதையாய் தெரிந்தான்! முட்டிப் போட்டு அவனருகே உட்கார, அந்த அசைவில் கண் விழித்தான் அரிச்சந்திரன்.
‘இரவின் கதைகள் ஆழமானது! இரவின் கதைகள் புதிரானது!’
✅ End of Episode 3
Nice
இருக்கும் போது தெரியாத