Episode 9

அரி கால்களைப் படியில் நீட்டியபடி,
“என்ன டிரஸ் எல்லாம் வாங்கிட்டீங்களா?” என்று விசாரிக்க,

“வாங்கியாச்சு, ரூம்ல இருக்கு. பார்க்கிறீங்களா? ஆதினி கேட்க, அவன் வேண்டாம் என்றான்.

“நாளைக்கு நம்ம தாராவுக்கு வரிசை கொடுக்கப் போகணும் ஆதினி” என்றதும்,

ஆதினி, “ஒகே, போலாம்” என்றாள். குளிராக இருக்க, அரியைப் பற்றியிருந்த கைகளை இன்னும் இறுக்கிப் பிடித்தாள். மார்கழி பனி ஊசியாய்க் குத்தியது. வெண்புகையாய்க் காதில் கூசியது. அதில் அரிச்சந்திரனை இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள்.

“குளிருதா, உள்ள போவாமா?” அரி கேட்க, “இல்ல, இதுவே நல்லாயிருக்கு” என்றாள் வானை பார்த்து.

அரியோ, “நல்லாதான்..இருக்கு” என்றவன் ” பட், குளிருது குளிருது..” என்று விசில் அடித்தான். காலை போல் உல்லாச பாவனை.

ஆதினியோ, “அரி, நான் பேசணும். அப்புறம் தூக்கம் வருதுனு திட்டுவீங்க” என்றாள்.

“நீதான் பேசல” அரி சொல்ல,

“ஏன் அரி என்னை அவாய்ட் பண்றீங்க?” என்று நேராக அவனிடம் கேட்டாள்.

“நான் உன்னை அவாய்ட் பண்றேனா? என்னடி அநியாயம் பண்ற?” என்று அரி வாதம் செய்ய,

“பின்ன இல்லையா? நான் உங்ககூட இருக்கிறேன் சொல்றேன் வேண்டாம்னா என்ன அர்த்தம்? இப்போ எல்லாம் என்னை திட்டுறீங்க?” என்று ஆதினியும் முகம் சுருக்கினாள்.

“திட்டுற மாதிரி நடந்துக்கிற. அட்டகாசம் பண்ணி என்னை வரவைக்கிற? டென்ஷன் பண்ற! திட்டாம என்ன செய்வேன்?” என்றான் அவனும் அதட்டலாக.

“அதெல்லாம் நீங்க என்னை அவாய்ட் பண்ணினதால, அது உங்களுக்கும் தெரியும். ஓகே! இனி அப்படி செய்யல. சாரி சொல்லிட்டேன்தானே அரி?” என்று சோகமாகக் கேட்டவள்,

“உங்களுக்கு என்னை பிடிக்காம இல்லை, என் மேல கோவம்னா நான் ஹாஸ்டல் போகும் போதே வேண்டாம் சொல்லியிருக்கணும். எங்கப்பா கூட வேண்டாம் சொன்னார், நீங்க என்னை அனுப்பிட்டு நான் மனசு மாறி வந்தா, என்னை வராதன்னு சொல்றீங்க? அப்போ இருந்த டென்ஷன்ல போன் பண்ணாதீங்கனு திட்டிட்டேன், அதுல இருந்து எங்கிட்ட சரியா பேசுறதில்லை.”

“என் விருப்பப்படி போக வீட்டீங்க, என்னை புரிஞ்சிக்கிட்டீங்க நினைச்சேன். இப்போ நானே வரேன் சொல்றேன், வேண்டாம்ன்றீங்க.” குற்றங்களை கொட்டினாள். அரி சளைக்காது பார்த்தான்.

“இந்த செமெஸ்டர் மட்டும் முடி, ஆறு மாசம் அப்புறம் வீட்ல இருந்து போகலாம். ஓகே?” என்றான் அரி. ஆதினி ஒத்துக் கொள்ளவில்லை.

இப்படி உன்னை விட்டு இருக்க முடியவில்லை என்று நேரடியாக சொல்கிறேன். இவனுக்குப் புரியவில்லையா என்ற ஆதங்கம்!

“ஆறு மாசத்துல என்ன மாறிட போகுது? முடியாது” என்று பிடிவாதம் பிடிக்க,

“கல்யாணத்தப்ப எக்ஸாம்க்குப் படிக்கணும் சொன்ன, எக்ஸாம் கிளியர் பண்ணட்டும்னு நான் உன்னை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ணல. மூணே மாசத்துல அடம் பிடிச்சு ஹாஸ்டல் போன, உனக்கும் ஒரு சேஞ்ச் வேணும்னு ஒகே சொல்லிட்டேன். அடுத்த மூணே மாசத்துல.. வீட்டுக்கு வரேனு நிக்கிற..” அரி பேச, ஆதினி உடனே,

“ஏன் மனசு மாறக் கூடாதா? அப்படி நான் போக இஷ்டமில்லைனா வேண்டாம் சொல்லியிருக்கலாம், என் விருப்பம்னு விட்டுட்டு..” என்றாள் கோபமாக.

“வேண்டாம்னு சொன்னா நீ கேட்க மாட்ட, அதை விட உன்னோட சூழ்நிலை எனக்குப் புரிஞ்சது”

“அப்போ இப்போ மட்டும் என்ன?” ஆதினி கடுப்பாகக் கேட்டாள்.

“உன் விருப்பம் நீ செய்ற ஓகே, ஆனா அந்த விருப்பத்தை நானும் ஒத்துக்கணும் நினைக்கிறது, அதுவும் நீ நினைச்ச நேரத்துக்கு நானும் மாறணும் நினைச்சா அது நியாயமா?”

“உங்களுக்கு நான் கூட இருக்கிறது பிடிச்சிருக்குதானே? இல்லைனு சொல்லாதீங்க அரி!”

“இல்லைனு சொல்ல மாட்டேன், ஆனா நீ இல்லாதப்ப நான் எப்படி ஃபீல் பண்ணினேன் கேட்டியிருக்கியா நீ?” என்று அரியும் கேட்க, இவனும் என்னைத் தேடியிருக்கிறான் என்று ஆதினிக்குப் புரிய, அதுவரை பொங்கிய மனத்தில் பொய்கையின் குளிர்ச்சி.

“அதுக்கு சாரி! இனிமே அப்படி செய்ய மாட்டேன்” என்றாள் உடனே. இந்த அவசரம் தான் அரிக்குப் பிடிக்கவில்லை. அவன் பேச வருவதற்குள் ஆதினியே,

“பழசையே பிடிச்சிட்டு மாற மாட்டேன்னா என்ன அர்த்தம் அரி? வேணும்னே உங்க ஈகோவை சேடிஸ்ஃபை பண்றீங்க நீங்க” என்றாள் பட்டென. அரிச்சந்திரனுக்கு அந்த வார்த்தைகள் கோபம் கொடுக்க, கையை அவளிடமிருந்து விலக்கினான்.

அரிச்சந்திரனின் பார்வை அப்படியே மாறியது. கையை விலக்கியதும் ஆதினிக்கு சுருக்கென்றது. அந்த செயல் ஆதினியை இன்னும் பேச வைத்தது.

“எனக்கு ஈகோ? ஸோ வாட்ஸ் யுவர் பாயிண்ட்?” அரி கையைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து அழுத்தமாகக் கேட்டான்.

“நீங்க தேடினப்போ நான் இல்லைனு, இப்போ நான் தேடுறப்ப, உங்களுக்குப் பிடிச்சும் என்னை பழிவாங்குறீங்க” என்றாள்.

‘பழிவாங்குறீங்க’ இந்த வார்த்தை அரியை ஆழமாகக் காயப்படுத்தியது.

அன்பு கொண்டவர்களிடமிருந்து வரும் அன்பற்ற வார்த்தைகள் அன்பினை கேள்வியாக்கி விடுகிறது! அரியின் அன்பினை ஒற்றை சொல்லால் காயப்படுத்தினாள் ஆதினி.

ஆதினிக்கு அரிச்சந்திரன் வார்த்தையால் சொல்லா விட்டாலும் அவனுக்கு அவளைப் பிடிக்குமென நன்றாகவே புரிந்தது. அவன் பார்வை, பேச்சு, அருகாமை எல்லாம் அவளுக்கு அதையே உணர்த்தியது. அப்படியிருக்க இவனுக்கு ஈகோ தானே என்ற எண்ணமே.

இந்த பிரியத்தின் சூழ்ச்சி பெரிது! தனக்குப் பிடித்தவர்களுக்கு தன்னை பிடிக்கக் கேட்கும், பிடித்தால் தன்னை போல் பிடிக்குமா என்று கேட்கும்.. அத்தோடு நிற்காது எனக்குப் பிடித்ததை விட அதிகம் பிடிக்குமா என்று பேராசைக் கொள்ளும்! அப்படியொரு நிலையில் இருந்தாள் ஆதினி!

“நான் உன்னை பழிவாங்குறேன் நினைச்சா, அப்படியே நினைச்சிக்கோ டி!” என்ற அரிச்சந்திரனின் வார்த்தைகள் மிகையான கோபத்துடன் வந்தன.

இருவரின் வார்த்தைகளால் மார்கழி சட்டென சித்திரையாகிப் போக, நித்திரை தூரமானது!

கோபத்தில் கத்திவிட்டு அரி அறைக்குள் போய்விட்டான். ஆதினியும் கதவை மூடிவிட்டு பின்னால் போனாள். ஆதினி அவனிடம்,

“ரீசன் சொல்லுங்க, பேசாம வந்துட்டா என்ன அர்த்தம்?” என்று கேட்க,

“உன்னை பழி வாங்குறதுதான் டி காரணம்” என்றான் பல்லைக்கடித்து. கண்களை மூடி அரிச்சந்திரன் படுத்து விட்டான். ஆதினிக்கு அவனை கோபம் கொள்ள வைத்து விட்டோம் என்று புரிந்தது. ஆதினி அருகே படுத்தும் அரி கண்கள் திறக்கவே இல்லை.

அரிச்சந்திரனுக்கு ஆறவே இல்லை. மனைவியை பழி வாங்குகிறவனா நான்? என்று ஆற்றாமை, ஆதங்கம் எல்லாம் பொங்கியது.

ஆதினி வேண்டுமென்றே பேசவில்லை, கோபத்தில் யோசிக்காமல் விட்ட வார்த்தைகள் என்ற புரிதல் அப்போதும் அவனுக்கு இருந்தது.

‘பாயின்ட்லெஸ் ஆர்கியுமெண்ட்!’ இப்படித்தான் அரிக்கு ஆதினியின் பேச்சு இருந்தது.

அரிக்கு, ‘இவளுக்கு என்னை பிடிச்சுத் தொலக்கிற அளவுக்குப் புரிஞ்சு தொலைஞ்சா என்ன?’ என்று கடுப்பாக வந்தது. ஆதினியின் பிரியம் அவனுக்குப் புரிந்தது. இருந்தும் அவளின் உடனடி முடிவுகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘என்னையும் கொஞ்சம் யோசிக்கலாமே இவள்’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

‘இவளை எனக்குப் புரிஞ்சதால பிரச்சனை, இவளுக்கு என்னைப் புரியாததால பிரச்சனை’ என்று மனம் வாதம், எதிர்வாதம் எல்லாம் செய்தது.

ஆதினிக்கு அரி பேசாமல் இருக்க, வருத்தமாக இருந்தது. அதே நேரம் அரிச்சந்திரனிடம் காட்ட முடியாத அன்பு அவளை படுத்தியது.

அன்பினை காட்டாமல், இருப்பது கூட காதலின் கனம் அல்லவா?! காட்டாத பிரியத்தின் பெருமழையின் கனம் கண்ணீர்த் துளியாய்க் கன்னம் நனைத்தது.

அவனோடு இருந்தால்தானே நான் அவனை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும். அந்த அன்பினைக் காட்ட வேண்டுமே, இத்தனை நாள் என்னால காட்ட முடியவில்லையே என்ற காதல் அவளிடம். காட்ட விடவில்லை என்பதே ஆதினியை கோபம் கொள்ள வைத்தது.

ஆதினிக்கு அரியின் எண்ணங்கள் தெரியவில்லை, பொறுமையாக இருந்திருந்தால் சொல்லியிருப்பான். இவளின் வார்த்தை அதனைப் பேசவிடவில்லை. அரிச்சந்திரன் மிகுந்த மரியாதை எதிர்ப்பார்ப்பவன், அதுவும் தன்னை அவள் சொன்ன சொல் பொறுக்கவே இல்லை. பொறுமலோடு உறங்கி போனான்.

ஆதினிக்கோ அருகிலிருந்தும் தூரமாய் அவளின் அரிச்சந்திரன்.

அடுத்த நாள் காலையில் எப்போதும் போல் எழுந்துவிட்டான் அரிச்சந்திரன். டீ போட்டு தாத்தாவுக்குக் கொடுத்தவன் காலைக்கு மட்டும் இட்லி செய்தான். பொங்கலை முன்னிட்டு வேலைக்கு ஆளை வர சொல்லவில்லை. இன்று தாரகைக்கு வரிசை கொடுக்க வேண்டும். காலை உணவை முடித்துவிட்டு சென்றால், மதிய உணவு முடிந்து வர வேண்டும்.

யோசித்தபடி டீபாயின் மீதிருந்த பேப்பரை எடுத்து உட்கார்ந்தான். அதற்கு முன் டீவியை ஆன் செய்து செய்தியில் வைத்திருக்க, ராமசாமி டீயை உறிஞ்சியவர்,
“ஏண்டா, இதுல வைக்கிற. முரசுல வை அவன் பாட்டு போடுவான். அந்த பேப்பர்லயும் அதே கொலை, கொள்ளை, ஊழல். இந்த நியூஸ்லயும் அதேதான். காலையில அதை பார்க்கணுமா?” என்று எரிச்சலாக சொல்லவும், பாட்டு சேனலில் வைத்தான்.

‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்று ஜானகியம்மா காதல் பாட, ராமசாமி தாத்தாவின் கால்கள் தரையில் தாளம் இட்டன.

“அரி, சவுண்ட் வை டா” என்று சொல்ல,

“என்னாச்சு காதுல விழலயா? செக் அப் பண்ணுவோமா?” அரி அக்கறையாகக் கேட்டான்.

“படவா ராஸ்கல்! என் காதுக்கென்னடா? நீ சத்தத்தை இவ்வளவு குறைச்சு வச்சிருக்க.” என்று திட்டினார்.

“ஆதினி தூங்குறா” என்று சொல்லும் போதே “ஐய்! இந்த பாட்டா?” என்று ஆதினி வெளியே வந்துவிட்டாள்.

“வாடா ராஜாத்தி” என்றவர் “பேத்திக்கு டீ கொடுடா” என்றார்.

“நானே எடுத்துக்கிறேன் தாத்தா” என்றவள் ஃப்ளாஸ்கில் இருந்த டீயை எடுத்துக் கொண்டு தரையில் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்தாள். தாத்தாவோடு ஆதினியும் பாட,

“உனக்கு எப்படி தெரியும்?” என்று தாத்தா கேட்க,

“அங்க தாத்தாவும் இதே தானே கேப்பாரு.. எனக்கு இதுவும் பிடிக்கும் இன்னொரு பாட்டும் பிடிக்கும், ஒரே பட பாட்டு தானே?” என்று சொல்லிக்கொண்டே டீயைப் பருகினாள்.

அரிச்சந்திரன் இவர்கள் பேச்சினை காதில் வாங்கியபடி, பேப்பரில் கண்ணை வைத்தான்.

‘மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லை கலைவாணி
என்னுயிரே யுவராணி!’ என்று எஸ்.பி.பி காதலை ரசித்து பாடிட, இந்த வயதிலும் ராமசாமி தன் பொக்கை வாயில் மெல்ல முணுமுணுக்க, ஆதினி உற்சாகமானவள்,

“தாத்தா, என்ன இருந்தாலும் காஞ்சனா பாட்டி ரொம்ப அழகுல…?” என்று திரையில் இருந்த காஞ்சனாவை ரசித்து சொல்ல,

அவரோ, “காஞ்சனா அழகிதான்! ஆனா பத்மினி பேரழகி, அந்தம்மா கண்ணு போதுமே. மோகனாம்மா மோகனாம்மாதான்!” என்று ராமசாமி மறைந்தாலும் மறவாமல் இருக்கும் பத்மினியம்மாவை புகழ்ந்தார்.

“அவங்க அழகு, வாணிஸ்ரீ கண்ணு கூட ரொம்ப அழகு தாத்தா..” என்று ஆதினியும் அவரும் கலந்து ஆலோசிக்க, அரிச்சந்திரன் கண்கள் என்னவோ ஆதினியின் கண்களைத்தான் பார்த்தன.

“நேத்து என்னை வெறுப்பேத்திட்டு காஞ்சனாவா வாணிஸ்ரீயானு பட்டிமன்றத்தைப் பாரு இவளுக்கு” என்று முணுமுணுத்தான். ஆதினியோ மிகவும் இயல்பாக,

“உங்களுக்கு யார் பிடிக்கும் அரி? நீங்க சொல்லுங்க” என்று கேட்க, அரிச்சந்திரன் ‘அடிப்பாவி, அதப்புதான்!’ என்று முறைத்தான்.

✅ End of Episode 9
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 days ago

Very nice.

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 17 hours ago

நேற்றைய சண்டை 

நேற்றோடு போயாச்சு
நன்றாக பொழுது விடிஞ்சாச்சு
நாளும் உன்னோடு 
நான் மல்லுக்கு 
நின்னச்சு கணக்கா இருக்கு....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top