Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 5

“என்ன தாத்தா அழறீங்க?” என்று ஆதினி சோஃபாவில் சாய்ந்தபடி காலை நீட்டி தரையில் உட்கார்ந்திருந்தாள். மூங்கிலில் சாயும் வகையில் அமைந்திருந்த நாற்காலியில் உட்கார்ந்த ராமசாமியைப் பார்த்துக் கேட்க அவரோ கண்களை துடைத்தபடி,

“ராஜபார்ட் செத்துட்டாரே மா” என்றார். விடாமல் கண்ணீர் வழிந்தது.

“நிஜமாவே சிவாஜி செத்துட்டாரே தாத்தா” ஆதினி சொல்ல,

“ஆமா, அவர் என்ன இருந்தாலும் ராஜப்பார்ட் தான்!”

“நீங்க சிவாஜி ரசிகரா?” ஆதினி சம்மணம் போட்டு கொண்டு ஆர்வமாக தாத்தாவிடம் கதை கேட்டாள். ராமசாமியும் உற்சாகமாக, ரசனையான பாவனையோடு பசுமையான நினைவுகளைப் பகிர்ந்தார். ஒன்றிரண்டு பற்கள் தவிர எல்லாம் கொட்டிப் போயிருக்க, அவரின் பொக்கை வாயோடும் சுருக்கங்களை கூட அழகாய் காட்டும் புன்னகையோடும் கதை சொன்னார்.

“சாந்தினு ஒரு படம் சிவாஜி நடிச்சது, யார் அந்த நிலவுனு ஒரு பாட்டு! அதுல சிவாஜி இடது கையால சிகரெட் பிடிச்சிட்டு லேசா மேல பார்த்து புகையை விட்டு யார் அந்த நிலவுனு பாடுவார் பாரு. டி.எம். சவுந்தர் ராஜன் குரல்! அந்த ஸ்டைல் எங்க காலத்துல ரொம்ப ஃபேமஸு. இதுக்காண்டி நான் மெட்ராஸ் போய் அப்போ சிவாஜி போட்ட மாதிரியே சட்டை தைச்சுப் போட்டேன். நம்ம தியேட்டருக்குக் கூட சிவாஜி வந்திருக்கார் தெரியுமா?” என்று ஆரம்பித்து அவரின் வாழ்க்கை, அவர் திரையரங்கம், அவரின் ஒரே மகன் தயாளன், அவரின் ஜாதி மாறிய திருமணம் என்று எல்லாம் சொன்னார்.

“தயா கூட படிக்கிற புள்ளைய காதலிக்கிறேனு வந்து சொன்னான். எனக்கும் என் சம்சாரத்துக்கும் என்ன செய்றதுனு தெரியல, அதுவும் அந்த பொண்ணு நம்ம ஜாதி இல்லை. இப்பவே இந்த தற்குறிங்க என்ன ஆட்டாம் போடுறானுங்க! அப்ப பெரியார், அண்ணா எல்லாம் சுயமரியாதை திருமணம் செய்ய சொன்னாங்க! அண்ணாவோட சொற்பொழிவை ரேடியோவுல கேட்டு வாழ்ந்தவன், ஜாதி என்ன பொல்லாத ஜாதி? என் மருமக ராஜலஷ்மி இருந்தவரைக்கும் இந்த வீடே நிறைஞ்சு இருந்தது! கட்டு செட்டா குடும்பம் நடத்தினா, என் புள்ளையோட சந்தோசமே அவதான்!”

“சொந்தகாரனுங்க எல்லாம் விஷயம் தெரிஞ்சு ஒரே சண்டை! தயாளன் பிடிவாதமா நின்னான். எனக்கும் தோணிச்சு சொந்தகாரன் என்ன சொல்வானு யோசிச்சு என் சொந்த மகனோட சந்தோஷத்தை பறிக்க முடியல. அவன் விருப்பபடியே கல்யாணம் பண்ணி வைச்சேன். சீரும் சிறப்புமா சிங்கமாட்டம் ஒரு பேரன், தங்கமாட்டாம் ஒரு பேத்தினு சந்தோஷமா இருந்தோம். அப்புறம் அவன் சினேகிதன் வீட்டு விஷேஷம்னு ரயில்ல போனவங்க குண்டு வெடிச்சு…” என்றவரின் நடுங்கும் கரங்கள் மேலே காட்டியது. கன்னத்தைக் கண்ணீர் நனைத்தது.

“என் பேரன் காலேஜ் படிச்சான், பேத்தி ஒன்பதாம் க்ளாஸ் படிச்சா! என் பொண்டாட்டியும் போய் சேர்ந்துட்டா, எனக்குக் கொள்ளி வைக்க வேண்டிய மகனுக்கு நான்… நான் கொள்ளி வைச்சேன். என் பேரன், பேத்திக்காக இந்த உசுரை பிடிச்சி வச்சிருக்கேன். ஆனா, உன் புருஷன் பொறுப்பானவன், படிச்சு முடிச்சு நல்ல பெரிய வக்கீல்ட்ட சேர்ந்தான். தாரா சின்ன பிள்ளை இல்லையா? அவளை அப்படி கவனிச்சுப்பான்.” என்று பெருமிதமாக சொல்ல, ஆதினிக்கு கண்கள் கலங்கி போனது.

அரிச்சந்திரனின் பெற்றோர் இல்லை என்று தெரியும். ஆனால் தன்னை போல் அவனும் கல்லூரி படிக்கும் போதே பெற்றோரை இழந்தவன் என்று தெரியாது. எப்போது, எப்படி என்ற கேள்வி எல்லாம் அவளிடம் இல்லை. அம்மா இல்லாமல் இருக்க, பிறந்த வீட்டில் இருந்தும் விரட்டுகிறார்கள் என்ற விரக்தி! அதன் பின் நுழைவுத் தேர்வுக்குப் படிப்பதில் கவனம். அரிச்சந்திரனுக்கும் இப்படி ஒரு கஷ்டம், அதுவும் ஒரே நேரத்தில் இருவரும் என்று நினைக்க, நெஞ்சம் படபடபத்து.

“அவர் பாவம்ல தாத்தா!” அழுகையோடு ஆதினி கேட்க

அவளை கவனித்த ராமசாமி, “அட! என்ன ராஜாத்தி நீ? அழுதா உன் புருஷனுக்குப் பிடிக்காது. கண்ணைத் துடை நான் ஒருத்தன், பழசை எல்லாம் பேசி உன்னை அழ விட்டுட்டேன்” என்றார் வருத்தமாக.

சுமக்க முடியாத அழுத்தம் இருந்தது மனத்தில். அரிச்சந்திரனை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது, அந்த பத்தொன்பது வயது இளைஞனுக்குத் துணை நிற்க முடியாமல் போனதே என்று நினைத்தாள். கூடவே அம்மாவின் நினைவும், இந்த இழப்புகள் இப்படித்தான்! ஒன்றில் தொடங்கி இன்னொன்றோடு தொடர்பாகி அழுகையைக் கொடுக்கும்.

இந்த அழுகையில், இந்த கண்ணீர் ஈரத்தில் தான் பிரிந்து போன பிரியமானவர்கள் வாழ்கிறார்களோ? உணர முடியாத அவர்களை உணர்த்துவது இந்த ஈரமும் நினைவும் தானோ?!

தாத்தாவைப் பார்த்தவளுக்கு, இத்தனை வருடங்கள் ஓடி, இத்தனை வயதாகியும் கூட துக்கத்தை மறக்கவே முடியாதோ? என்று ஆதினிக்கு மனத்தில் இப்படியான எண்ணங்கள்.

தாத்தாவை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று வேறு பேச, அது வேலை செய்தது.

ஆதினி கண்களை துடைத்தாள். குரலை செருமியவள், “அப்போ உங்க பேத்தியும் பேரனும் பாசமலர் சிவாஜி சாவித்திரியா?” முயன்று சாதாரண குரலில் கேட்டாள்.

“அதெல்லாம் இல்லை! நல்லா கவனிப்பான். ஆனா, இரண்டும் அடிச்சுக்கும். என் பேரன் சொன்னா உடனே கேட்டுக்கிற ரகமில்லை எங்க ராஜாத்தி. அவ மனசுக்கு ஏத்தபடிதான் நடப்பா. அவ கல்யாணம் கூட அரி பய ஒத்துக்கலயே! இரண்டு பேருக்கும் சண்டை. ஆனா என் பேத்தி முடிவு சரி! அந்த துரை என் பேத்தியை நல்லா பார்த்துக்கிறான். இல்லைன்னா நானும் என் பேரனும் சும்மா விடமாட்டோமே” என்றவர் நரைத்த மீசையைத் தடவினார்.

இப்படி இவர்கள் பேச, சமையல் செய்யும் பொன்னி வந்தார். அவர் சமையல் செய்து விட்டு போக, தாத்தாவும் பேத்தியும் உண்டனர். மாலையில் ஆதினி டீ வைத்தாள். அவள் வீட்டுக்கு அழைத்து அப்பாவோடும் தாத்தாவோடும் பேசினாள். அரிச்சந்திரன் காலையில் உண்ணவில்லையே, மதியமும் வரவில்லை.

‘என்னவன்’ என்ற உணர்வை விட ‘என்னைப் போல் அவன்!’ என்ற உணர்வு அதிகமிருந்தது. அவன் இடத்தில் யோசித்தாள். நேற்று இருந்த மலர்ச்சி, உற்சாகம் எதுவுமில்லை. இப்போதும் அரிச்சந்திரன் ஆதினியை ஆட்டி வைத்தான்.

அரிக்கு அழைக்க, இரண்டாவது அழைப்பில் எடுத்தவன் “ஆதினி, ஸ்டேஷன்ல இருக்கேன். நைட் வந்துருவேன். எதாவது முக்கியமா?” என்று கேட்க,

“இல்லை, நீங்க சாப்பிட்டீங்களா அரி?” என்று கேட்க, அரிச்சந்திரனுக்குச் சட்டென்று புன்னகை.

‘அரைடிக்கெட் என்னை விசாரிக்குது?’ என்று தோன்றினாலும் இப்பொழுது பேச முடியாது.

“சாப்பிட்டேன், பை” என்று வைத்தான்.

ஆதினிக்கு பொழுது போகவில்லை. அவளின் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக போனில் சில தகவல்கள் தேடி எடுத்து அதனைக் குறித்து வைத்தாள். இரவுக்கு அவளே இட்லி செய்தாள். உண்டு முடித்து தாத்தாவுக்கு உறங்க ஏற்பாடு செய்து கொடுத்தாள். வெளிகேட்டைப் பூட்டியவள் தனது குறிப்புகளை எடுக்க தொடங்கினாள்.

அரிச்சந்திரன் காலையிலேயே காரைத் தங்கை வீட்டில் விட்டுவிட்டான். அவள் திரையரங்கம் செல்ல அதனை பயன்படுத்துவாள். இவன் பைக் எடுத்து போயிருந்தான். தொலைக்காட்சியில் இவளுக்குத் துணையாக பாடல்கள் ஒளிபரப்பாக, அவன் வந்த சத்தம் கேட்கவில்லை. கேட் பூட்டியிருக்க, அரி ஆதினிக்கு அழைத்தான். ஆதினி கதவைத் திறந்தவள் வெளிகேட்டையும் திறந்தாள். அரி பைக்கை உள்ளே நிறுத்த, ஆதினி அந்த இரும்பு கேட்டைப் பூட்டி வந்தாள். அரி அறைக்குச் சென்று உடைமாற்றி உண்ண வர, எல்லாம் எடுத்து வைத்திருந்தாள் ஆதினி.

உணவை உண்டபடி டீவி முன்னால் உட்கார்ந்திருந்த மனைவியிடம்,

“சாப்பிட்டாச்சா ஆதினி?” என்று கேட்க

“தாத்தா கூடவே சாப்பிட்டேன்” என்றாள்.

“என்ன டீவி பார்த்துட்டே பண்ற? அசைன்மெண்ட்?” அரி கேள்வியாக நிறுத்த,

“இல்லை, Dissertationக்கு(ஆய்வுக்கட்டுரை) நோட்ஸ் எடுக்கிறேன்” என்றாள்.

“குட்!” என்றவன் அதன் பின் பேசாமல் உண்ண,

“சட்டர்டே கோர்ட் லீவாச்சே, என்ன வேலை இன்னிக்கு?” என்று விசாரிக்க,

“சட்டர்டே கோர்ட் லீவ், குற்றங்களுக்கு இல்லையே! நான் ஒரு கொலை கேஸ்ல மாட்டின பரதேசிக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்தேன். வேண்டாம்டா, ரீமாண்ட்ல இருடானு சொன்னேன், கேட்காம வந்தான். செத்தவனோட குரூப் அவனை இன்னிக்குப் போட்டுட்டாங்க.” என்றான் சலிப்பாக.

“ஓகே, ஓகே!” என்று ஆதினி கூற, “ஜர்னலிஸ்ட் மேடம்! நம்ம வேலைக்கெல்லாம் லீவ் கிடையாது. இந்த லீவெல்லாம் காலேஜ்லயே எஞ்சாய் பண்ணிக்கோ!” என்றான் சிரிப்போடு.

அரி உண்டு முடித்து, பாலோடு அவள் அருகே வந்து உட்கார்ந்தான்.

“குடிச்சிட்டு நோட்ஸ் எடு!” என்றதும் பேப்பரை எல்லாம் பேப்பர் க்ளிப்பில் அடக்கிப் பேனாவை மூடி வைத்தாள்.

“இல்ல, நீங்க வரவைக்கும் செய்யலாம்னு நினைச்சேன். இப்போ தூக்கம் வருது” என்று சொல்லி பாலை வாங்கினாள். இருவரும் குடித்து உறங்க போனார்கள். ஆதினிக்கு அரியிடம் பேச வேண்டும் போல் இருந்தது, அவனின் துயரத்துக்கு ஆறுதல் சொல்ல ஆவல் கொண்டாள். இருந்தும் காலை முதல் வேலையாய் இருந்தவன், அதைவிட என்ன பேசுவது என்று தெரியவில்லை. அழுகை வந்தது. உறக்கமில்லாமல் அவள் மெல்ல கண்ணீர் வடிக்க, அரிக்கு அந்த சத்தத்தில் விழிப்பு. மனைவியின் தோள் தொட்டு திருப்பியவன்,

“ஓய்! ஏன் அழற? நேத்து விட்ட சண்டையை தொடரணுமா?” அரி கேட்க,

“இல்லை, நீங்க ரொம்ப பாவம் அரி” என்று தேம்பியவள், அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். அழுகை இன்னும் அதிகமானது.

✅ End of Episode 5
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 8 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 2 months ago

இழப்பின் வலியை உணர்ந்தவள்

இவனின் பக்கம் 
இப்ப தான் 
பார்க்க தோனிருக்கு....

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 2 months ago

❤️ 1 😮 1 more...
Pavithra Narayanan 2 months ago

Wowww. Nice image 😍😁😁😁

Mrs Beena loganathan Reader 2 months ago

Hey.....woww..... வருது மா.....

❤️ 1 more...
Pavithra Narayanan 2 months ago

ena app la paninenga ma, tamizh font nallarke

Mrs Beena loganathan 2 months ago

@Pavithra Narayanan 

Chat gpt kitta வாங்கினேன் 
❤️ 1 more...
Mrs Beena loganathan 2 months ago

@Pavithra Narayanan 

கொஞ்சம் கஷ்டம் தான்....letters தப்பா தான் வரும் but changes sollittee இருந்தா ஒரு 4,5 தடவைகள் சொல்லி மாற்றி விடலாம்😂😂😂😂 
Bold letters need, Tamil caliography style, கொஞ்சம் book cover pic style வேண்டும் இது போல சொல்லி சொல்லி வாங்கினேன்....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top