Episode 9

“டேய் என்னடா பண்ணிட்டு இருக்க?” எரிச்சலான குரலில் அறிவிடம் கேட்டான் ராஜதுரை. தாரகையைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு அவ்வளவு கோபம். அவளிடம் காட்ட முடியாத கனலைக் கொட்ட அறிவிற்கு அழைத்தான்.

“வெட்டி முறிச்சிட்டு இருக்கேன், ஏண்டா விளக்கெண்ண? ஆபிஸ்ல இருக்கேன். எதுக்குடா போன் செஞ்ச?” என்றான் கடுப்பாக.

“ஓஹ், அதான் உன் அண்டா குரல் அமைதியா இருக்குதா?” சிரிப்போடு கேட்டான் துரை.

“ஆபிஸ்ல இருக்கிறதால அடக்கி வாசிக்கிறேண்டா பங்காளி! மரியாதையா எதுக்குக் கூப்பிட்ட சொல்லு” என்று பல்லைக் கடித்தான் அறிவு.

“ஏண்டா உன் மாமங்காரன் இப்படி ஒருத்தியை பெத்து வைச்சிருக்கார்?” என்றபோது தாரகை மீதான கோபம் மீண்டும் தலைத் தூக்கியது.

“எந்த மாமா?” என்றான் அறிவு ஆபிஸ் டென்ஷனில். அந்த நேரம் தாரகை எல்லாம் அவன் நினைவில் இல்லை.

“நான் யாரை சொல்றேனு உனக்குத் தெரியலையா?” கோபத்தில் கேட்டான் ராஜதுரை.

“தெரிஞ்சா ஏண்டா எரும நான் கேக்கிறேன்? சட்டுன்னு சொல்றியா இல்லை வைக்கவா? எனக்குத் தெருவுக்கு ஒருத்தி மாமன் மக இருக்கான்னு முன்னாடியே சொல்லிட்டேன்”

அறிவு சொல்ல “இந்த பெருமைக்குக் குறைச்சல் இல்ல, எந்த மாமன் மவ தேரை இழுத்து தெருவுல விடுவா, அவதான்!”

“தாரகைன்னு முதல்லயே சொல்லித்தொலைஞ்சா என்ன? உனக்கு மதியம் வீட்ல நல்ல சாப்பாடு இருந்திருக்கும். இங்க நான் என் டெஸ்க்டாப்ல தலையை விட்டு, ஃபுட் கோர்ட் போனா வெறும் சாண்ட்விச்தான் மிஞ்சிச்சு. என் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதடா வெங்காயம். என்ன விஷயமோ சட்டுனு சொல்லு!”

“மாசம் எண்பதாயிரம்னா இதெல்லாம் செஞ்சுத்தான் ஆகனும் பங்காளி” என்ற துரை அவனுக்கும் தாரகைக்குமான பேச்சுவார்த்தையை சொன்னான்.

“பெரியம்மா ரொம்ப அழவும் அந்த ராங்கிகிட்ட போய் கேட்க வேண்டியாதாகிடுச்சுடா, ஏதோ சமாதானமா வரான்னு பார்த்தா என்னை ரொம்ப மோசமா பேசுறா? அப்படி அவளை நான் கீழா நினைச்சா ஏன் அவ தியேட்டர்ல படம் பார்க்க போறேன்? கொஞ்சமும் ஏன் சொல்றேன்னு புரிஞ்சிக்காம அவ சொல்றதுதான் சரின்னு நிக்கிறா!”

“தாரா உன்னைத் தப்பா புரிஞ்சிருப்பா விடு! அவ ஹெட்ஸ்ட்ராங்கானா பொண்ணு. அப்படித்தான் இருப்பா, விடு ராஜா” என்று அறிவு சொல்ல,

“இப்படி ஒரு அடங்காதவளை நான் பார்த்ததே இல்லை, எவன் அவளைக் கட்டிட்டுப் பாடுபட போறானோ?” என்று புலம்பிய துரை

“டேய் பங்காளி!! கூட பொறக்கலனாலும் அண்ணனுக்கு உன் மேல பாசம் அதிகம்டா! தியேட்டர் இருக்கு ஓசில படம் பார்க்கலாம், இல்லை சொத்து பத்து இருக்குன்னு சித்தப்பா சொல்றார்னு தயவு செஞ்சு மாமா மவனு அவளைக் கட்டிராத! என்ன பேச்சு பேசுறா ராங்கி!! ராங்கி!” என்றான் எரிச்சல் குறையாது.

“அதெல்லாம் அவ நொண்ணன் என்னையெல்லாம் மதிக்கவே மாட்டான். அதைவிட தாரகை எல்லாம் எனக்கு வேண்டாம் சாமி!!” என்ற அறிவு

“இப்ப அவளைக் கட்டிக்கப் போறவனைப் பத்தி நமக்கு என்ன பேச்சு? அந்த மகராசன் எங்க இருக்கானோ? என்ன இருந்தாலும் அவன் கொஞ்சம் பாவம்டா பங்காளி!!” என்றான் சிரிப்போடு.

“என்ன சிரிப்பு உனக்கு? எங்கிட்ட எந்த பொண்ணும் இப்படி பேசினது இல்லை, எனக்கு வந்த கோவத்துக்கு அவளை அப்படியே நாலு அப்பு அப்பியிருப்பேன். என்ன அக்கா தங்கச்சியோட பொறந்துட்டேனே” என்றான் துரை கோபம் தீராது. குறைந்திருந்தாலும் இன்னும் மிச்சம் இருக்கவே செய்தது.

“எங்கிட்ட சொன்ன மாதிரி நாலு அப்பு அப்புவேன்னு தாராகிட்ட எல்லாம் சொல்லி வைக்காத! இப்படி பேசினது தெரிஞ்சாலே அடிப்பா” என்றான். துரை உடனே கோபமாக

“அடிப்பா அடிப்பா” என்றான் ஒருவித நக்கல் தொனியில்.

“அதேதான் பங்கு சொல்றேன், கண்டிப்பா அடிப்பா” என்றான் அறிவு சிரிப்புடன்.

“சிரிச்ச கொன்றுவேன் உன்னை! நானே கடுப்புல போன் பண்ணினா என்னை கலாய்க்கிறியா நீ?” என்று துரை கேட்க

“நீ ஏன் டென்ஷன் ஆகுற? மைதிலி நல்லா இருப்பா. அப்படி எதாவது பிரச்சனைன்னா கூட அரி பார்த்துப்பான். அதுவும் தாரா பொண்ணுங்களுக்குப் பிரச்சனைன்னா யாரையும் பார்க்க மாட்டா! நீ கவலையை விடு! இனிமே அவகிட்ட பேச்சு வைச்சுக்காத”

“ஆமா பேச்சு வைக்கிறேன். உன் மாமன் மவ இனிக்க இனிக்க பேசுவா நான் அவகிட்ட பேச, போனை வைடா!” என்று துரை வைத்துவிட்டான்.

அறிவோ “என் மாமன் மக இவன் கிட்ட ஏன் இனிக்க இனிக்க பேசனும்?” என்று புலம்பியபடி போனை வைத்தான்.

தாரகை அன்றிரவு திரையரங்கில் இரவு பத்து மணி காட்சி தொடங்கியதும் வீடு வந்தாள். வழக்கம்போல் அரிச்சந்திரன் தங்கைக்காக கதவைத் திறந்து நின்றான். காரை உள்ளே விட்ட தாரகை, கார் சாவியை அண்ணனிடம் தூக்கிப்போட அரி சாவியைப் பிடித்தான்.

“பசிக்குதுண்ணா” என்றாள்.

“இட்லி, கோழி குழம்பு செஞ்சேன்” புன்னகையுடன் அரி சொல்ல,

“சூப்பர்” என்றபடி அவள் குளித்து உடைமாற்றி வர, வெளித்திண்ணையில் இருந்த பெஞ்சில் உணவை எடுத்து வைத்தான்.

“உன்னை லா படிக்க வைச்சதுக்குப் பதிலா செஃப் ஆக்கியிருக்கலாம்டா அரி” என்று சிலாகித்தபடி உண்டு முடித்தாள்.

“தாத்தாவுக்கு நைட் சிக்கனா கொடுத்த?”

“இல்லை, அவருக்கு சட்னி. காலையில சாப்பிட்டுக்கலாம்” என்றான். எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் திண்ணைக்கு வந்த தாரகை

“இன்னிக்கு அந்த பஞ்சாங்கம் பார்த்தேன் அரி” என்று ராஜதுரையை பார்த்ததை, பேசியதை சொன்னாள்.

எல்லாமே அவனிடம் விவரமாக சொல்ல,

“அவன் எதுக்கு உன்னைப் பார்க்க வந்தான்? இந்த புவி என்ன பண்றார்? ஏன் உள்ள விட்டார்” என்று கோபமாய்க் கேட்டான் அரிச்சந்திரன்.

“நான் தான் விட சொன்னேன்” என்றாள் தாரகை.

“எதுக்கு அவனோட பேச்சு வைச்சுக்கிற தாரா? பாரு உன்னைப் பேசிட்டான்” என்று அரி கோபமாகப் பேச,

“அவன் என்ன பேசினான்? அவன் பேசினதெல்லாம் எனக்கு ஒன்னுமில்லை. பதிலுக்கு நானும் பேசினேனே. ஆனா படிச்ச ஆளுங்க கூட இப்படி இருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்குடா அரி. காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது இதுக்கா?” என்றாள் வருத்தமாக.

“காந்தி வாங்கி கொடுத்தார் ஓகே? ஆனா அவரும் சாதிய பாகுபாடு பார்த்தாரே”

“என்ன சொல்ற நீ? அவர் எங்க பார்த்தார்? அவர் தாழ்த்தப்பட்டவங்களுக்கும் உதவி செய்யனும், அவங்களை ஆதரிக்கனும்னு சொன்னாரே. ஸ்கூல்ல நான் அப்படித்தானே படிச்சேன். He worked for the cause of untouchables, downtrodden and poor.. இப்படி வருமே..” என்று தாரகை யோசனை செய்ய,

“அவங்களை தாழ்ந்தவங்கன்னு சொல்றதே தவறான எண்ணம் தாராம்மா! யாரு உயர்ந்தவங்க யார் தாழ்ந்தவங்க? அடுத்தவங்களை ஏமாத்தறவங்க துன்புறுத்துறவங்க தாழ்ந்தவங்க. மத்தபடி அடுத்த மனுஷனுக்கோ உயிருக்கோ தீங்கு நினைக்காதவன் உயர்ந்தவன்!”

“நிறைய தலைவர்கள் அப்போ சுதந்திரப்போராட்டம்ல இருந்தவங்க கூட ஆங்கிலேயர்ட்ட அடிமையா இருக்கக் கூடாது நினைச்சாங்களே தவிர, நம்ம மக்களை நாம அடிமையா நடத்துறோம்னு உணரவே இல்லை. உணர்ந்தாலும் மாத்திக்கல! காந்தி உயர்வான இடத்துல இருந்துட்டு தாழ்ந்தவங்கனு ஒரு சமூக மக்களை நினைச்சார், அந்த அடிப்படை எண்ணமே தவறு இல்லையா? அவர் பிறப்பால் வர ஏற்றத்தாழ்வை நம்பினார். அதுக்கு இரண்டாயிரம் முன்னாடி வாழ்ந்த திருவள்ளுவரே ரொம்ப பெரிய பகுத்தறிவுவாதி! அவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு சொல்லிட்டாரே” என்று பேசிய அண்ணனை பெருமையாகப் பார்த்தாள் பெண்.

“நான் லா கோட் போட்டது காந்தியைப் பார்த்து இல்லை, அம்பேத்கரைப் பார்த்து. தனக்கு மறுக்கப்பட்ட எல்லாத்தையும் படிப்பால அடைஞ்சு மறுபடி தன்னோட மக்களுக்குத் திருப்பிக்கொடுத்தார், இந்த நாட்டுக்கே அரசியல் சாசனம் செஞ்சார்! ஆனா அவரையும் ஜாதிசங்க தலைவராக்கிட்டானுங்க, அரவேக்காடுங்க!” என்றான் எரிச்சலாக.

“ஏன் அரி அப்போ உன் ரூம்ல காந்தியோட கொள்கை எல்லாம் ஒட்டி வைச்சிருக்க?” தாரா அண்ணனின் நிலைப்பாடு தெரியாது கேட்க, தங்கையின் தலையைத் தடவிக் கொடுத்தவன்

“எனக்கும் காந்தியோட சில கருத்துகள் பிடிக்கும். ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ ராஜாத்தி! எந்த தலைவரோ பிரபலமோ அவங்களோட கருத்து, அதுவும் ஒன்னு இரண்டு மனசுக்கு சரிவரதை ஏத்துக்கனும். மத்தபடி ஒருத்தவங்களை ரொம்ப பிரமிச்சுப் பார்க்க ஆரம்பிச்சு, அவங்க வேற கருத்து சொல்றப்ப மனசு ஏற்காது.
ஒன்னு அவங்களை வெறுப்போம் இல்லையா அவங்களை குறை சொல்றவங்களை வெறுப்போம். இங்க யாரையும் முழுசா வெறுக்கவும் முடியாது, முழுசா நேசிக்கவும் முடியாது. அதான் உண்மை!
அதே போல நமக்குப் பிடிச்சவங்க என்ன சொன்னாலும் சரின்னு கிடையாது! எதையுமே ஆராய்ஞ்சு அறிவோட பார்க்கனும்! ” என்றான்.

“இதுல எனக்கு ஒரு பிரச்சனை என்னன்னா நீ, அப்பா, தாத்தா எல்லாம் இப்படி நல்லவங்களா இருக்கீங்க, நீயும் என்னை இப்படி ஓவரா ஃபெமினிஸ்டா, anti கேஸ்டிஸ்ட்டா வளர்த்துவிட்டுட்ட, நான் எனக்கு ஹஸ்பண்டா வரப்போறவனையும் அப்படி எதிர்ப்பார்க்குறேன். இப்படி இருந்தா இந்தியன்ஸ் யாரையும் நான் கட்ட மாட்டேன் போல, பேசாம விசா எடுத்து யூ.எஸ் போயிடவா?” என்றாள் கிண்டலாக.

“ஹாஹா! அங்க இப்படி மதம், ஜாதி இல்லை. ஆனா ரேசிஸம் உண்டே! இனப்பாகுபாடு உலகத்தோட பல நாடுகள்ல இன்னும் இருக்கு! எல்லாரும் ஒரே இனம் நினைச்சா அகதிகள்னு ஒருத்தங்க இருக்கமாட்டாங்களே. உனக்கு ஏத்த பார்ட்னர் கண்டிப்பா கிடைப்பான், அண்ணன் பார்ப்பேன். என் ராஜாத்தியைத் தாங்குற மாப்பிள்ளைதான் நாங்க தேடுவோம்” அண்ணனாக அரி பேச,

“அப்போ நானே தேடினா?” என்று கேட்டாள் தாரகை.

“நீ தேடினா கண்டிப்பா பெஸ்ட்தான்! ஆனாலும் நானும் விசாரிப்பேன்” என்றான் அரிச்சந்திரன்.

“என்னவோ பேசிட்டு எங்கேயோ போயிட்டோம், coming to point! அந்த துரைக்கு எது வேணும்னாலும் எங்கிட்ட பேச சொல்லு, தப்பித்தவறி மைதிலி நம்பர் கொடுத்திடாத தாரா! அண்ணா உன்னை நம்பிக் கொடுத்தேன். கெட்டவனைக் கூட ஒருவகையில் சேர்க்கலாம், முட்டாளை ஒன்னும் பண்ண முடியாது. பத்து பைசாக்குப் ப்ரோயோஜனமில்லாத ஜாதியைத் தூக்கிட்டு வந்திருவானுங்க.”

“ஒகே ஒகே, தூங்கலாமா அரி?” தாரா பேசியபடி உறங்குவதற்காக எழுந்தாள்.

“தாரா ஒன்னு சொல்றேன் கேளு!” என்றான்.

“என்ன?”

“அந்த துரையை இனி மரியாதையில்லாம பேசாத, வாங்க போங்கனு பேசு!” என்ற அண்ணனை விசித்திரமாகப் பார்த்தாள் தாரகை.

“அவன் எனக்கு மரியாதைக் கொடுக்கல, நான் கொடுக்கனுமா?” என்றாள் கோபத்துடன்.

“உனக்கு சில விஷயம் புரியலடா, நான் சட்டத்தை படிச்சவன் தான், ஆனா அதை அப்படியே கண்டிப்பா ஃபாலோ பண்ண முடியாது. இடம், பொருள்னு இருக்கு. அப்படித்தான் இதுவும், அந்த ராஜதுரைன்னு இல்லை பொதுவாவே பசங்க பொண்ணுங்க யார்னாலும் வயசுல சின்னவங்களை வா போன்னு பேசுறதுதான் இங்க வழக்கம்” என்ற அண்ணனிடம்

“நான் அப்படியில்லயே” என்றாள் பட்டென்று.

“ஏன்னா நீ தாரகை! உன்னை மாதிரி எல்லாரும் இருக்கனும் எதிர்ப்பார்க்காத, அதனால அவன் அறிவு உன்னை வா போன்னு சகஜமா பேசறதால அப்படியே பேசியிருப்பான். ஆனா ஒரு பையனை நீ இப்படி மரியாதையில்லாம பேசினா அது அவங்க எப்படி எடுப்பாங்கனு சொல்ல முடியாது! அவன் ஈகோவை ஹர்ட் பண்ணும், உனக்கே புரியும் நினைக்கிறேன். அவனோட பேச வேண்டி வராது, வந்தாலும் சொல்றேன், ஏற்கனவே கோபத்துல நம்ம தியேட்டர்ல கை வைச்சான்” என்று அரிச்சந்திரன் சொல்ல

“அவனை நான் பேசினதுக்கு இன்னிக்கு ஒன்னுமே சொல்லலயே, முன்னாடி ஒருதடவ மரியாதை இல்லையா கேட்டான். அப்புறம் நான் நீ என்ன கொடுக்கிறியோ அதான் உனக்கு சொன்னேன், அவன் அவ்வளோ வொர்த் இல்லைடா அரி” என்று தாரகை சிரிக்க

“ஒன்னும் சொல்லலயா?” என்றவனுக்கு சிரிப்பு வந்தது. தாரகை ஏன் என்று கேட்க

“இல்லை, அவன் ஒன்னும் சொல்லலன்னா அவனுக்குத் தெரிஞ்சிருக்கும் சொன்னாலும் கேட்கிற ஆள் நீயில்லைனு” என்றான் இன்னும் சிரிப்போடு.

“தெரிஞ்சா சரிதான், இனிமே தாரகைகிட்ட வம்பு வைச்சிக்க மாட்டான். அவன் இனிமே எங்கிட்ட வரமாட்டான், தியேட்டர் கூட வரமாட்டேன்னு சபதம் போட்டிருக்கான் அந்த பூமர் துரை” என்றாள் தாரகையும் சிரிப்புடன்.

அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல, சரோஜாவிற்குக் காய்ச்சல் கண்டது. அது சாதாரண காய்ச்சல் என்றாலும் கூட மகளை நினைத்து நினைத்து அழுது இன்னும் காய்ச்சல் விடவில்லை. சுமித்ரா அம்மாவைப் பார்க்க வந்துவிட்டாள்.

“ஏன் பெரியம்மா இப்படி பண்ற? ஓடிப்போனவளை நினைச்சு உன் உடம்பைக் கெடுத்துக்கிற? செத்த நேரம் அழாம இரேன்” என்று கத்தினான் துரை.

பெரியம்மாவுக்கு முடியவில்லை என்ற கவலை, அத்தோடு மைதிலி பற்றி தெரியவில்லை, தன்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை என்ற ஆத்திரம் எல்லாம் சேர அதை அவரிடம் காட்டினான்.

“பெரியப்பாவை நினைச்சுப் பார்த்தியா? அவளால நமக்கு எவ்வளவு அவமானம்? நீ இப்படி அழுதா அவ வந்துடுவாளா? நீதான் அவளை நினைச்சு அழற, அவ நம்மளை தலைமுழுகிட்டு எவனோடவோ போய் நல்லாதான் வாழ்றா” என்றான் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன்.

“அவளை சொல்றியே, உனக்கு அவ மேல அக்கறை இருக்கா? என் மக என்ன செய்றான்னு எனக்குத்தான் கவலையா இருக்கும், உனக்கென்ன? இதே உன் கூடப்பொறந்தவளா இருந்திருந்தா மன்னிச்சு விட்டிருப்ப தானே? இல்லன்னா எங்கன்னு தெரியாம இப்படி விட்டேத்தியா இருப்பியாடா ராஜா நீ?” என்று கேட்க

அருணா உடனே “அக்கா ராஜா அப்படி நினைப்பானா?” என்று மகனுக்காகப் பேசினார்.

சுமித்ரா கூட “என்னமா பேசுற நீ?” என்று அம்மாவை அடக்கினாள்.

ராஜதுரைக்கும் கஷ்டமாகிவிட்டாது. அவள் மீது எனக்கு அக்கறை இல்லையா? மைதிலிக்காக எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அந்த தாரகையிடம் போய் நின்றேனே என்ற எண்ணம். எதுவும் பேசாது அவன் அறைக்குப் போய்விட்டான் துரை.

‘ஆனால் இனி என்னா நடந்தாலும் தாரக கிட்ட போய் நிக்க கூடாது!’ என்ற முடிவில் மட்டும் மாறாது இருந்தான்.

✅ End of Episode 9
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Radhi Reader 2 weeks ago

Nice 

Kavi Natarajan Reader 6 days ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top