Episode 21
‘கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு..
வந்து கைத்தாளம் போடு..
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது’
ஊரில் யார் வீட்டிலோ விசேஷம் நடக்க, ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலித்தது. தாரகையும் குஷியாகப் பாட்டு பாடிக்கொண்டிருந்தாள்.
“யார் வீட்ல விஷேஷம் ராஜாத்தி? பாட்டெல்லாம் கேட்குது” என்று ராமசாமி பேத்தியிடம் கேட்க
“நம்ம கமலாத்த பங்காளி வீடு தாத்தா, தியேட்டர்ல இருந்து வரும்போது கட் அவுட் பார்த்தேன்” என்றாள் தாரகை.
அந்த கட் அவுட்டில் ராஜதுரையின் பெயரையும் இருந்தது, இந்த முறை பெயர் மட்டுமே! அவன் ஜாதிப்பெயரை பின்னால் போடவில்லை, அதுவே தாரகைக்கு சந்தோஷமாக இருந்தது.
அவனிடம் அதனை சொல்லி பாராட்ட, “எப்பவும் நான் போட சொன்னதில்லை, இவனுங்க போடுவாங்க. சரி நம்ம அடையாளம்னு விட்டுட்டேன், இப்போ அது எதுக்குன்னு விட்டாச்சு” என்றான்.
“சூப்பர் துரை!” என்று தாரகை சொல்ல, புன்னகையுடன் அவள் பேச்சைக் கேட்டவன் வேலை இருக்கிறது என்று வைத்துவிட்டான். தாத்தா, பேத்தி, பேரன் எல்லாம் ஒன்றாய் உட்கார்ந்திருக்க,
“டேய் அரி, நான் இருக்கும்போது நம்ம ராஜாத்திக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணனும்டா, நம்ம வீட்லயும் ஆளுங்களா இருக்கணும். பாட்டு சத்தம் கேட்கணும்” என்று தாத்தா ஆவலாக சொல்ல,
“பார்த்திட்டு இருக்கேன் தாத்தா” என்றான் அரிச்சந்திரன்.
“உனக்கும் பார்க்கணும்டா, உனக்கும் வயசு ஆகுது” என்றதும் தாரகை சிரித்துவிட்டாள்.
“என்ன சிரிப்பு உனக்கு?” என்று தங்கையின் தலையில் கொட்டியவனிடம்,
“தாத்தா! நான் அப்பா அம்மா மாதிரி லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிப்பேன், இந்த வக்கீல் எதாவது லாயரைப் பார்ப்பான், இல்லை ஜட்ஜ்னு பார்ப்பான். எனக்கு வேண்டாம்” என்றாள் தாரகை.
“அப்போ எந்த வேலை செய்றவங்க வேணும்னு நீயே சொல்லு”
“வேலை எல்லாம் யோசிக்கல, பட் எனக்குப் பிடிக்கணும்.”
“அதாண்டி எப்படி இருந்தா பிடிக்கும் சொல்லு” அரிச்சந்திரன் தங்கை மனம் அறிய கேட்க,
“அது.. எப்படி இருந்தாலும் பிடிக்கணும். அட போடா! எனக்குத் தெளிவா சொல்ல தெரியல, யாராச்சும் பிடிச்சா சொல்றேன், இல்லை நீ பார்த்து சொல்லு. பிடிக்குதா பார்க்கிறேன். ஆனால் லாயர், போலிஸ் எல்லாம் வேண்டாம்” என்றாள்.
“கேட்டியா டா அரி? என் பேத்திக்கு ஏத்த மாதிரி ராஜாவாட்டம் மாப்பிள்ளை பாரு” என்று ராமசாமியும் உத்தரவிட்டார். இரவு உணவு முடிந்து வழக்கம்போல் அண்ணனும் தங்கையும் வாசலில் உட்கார, அரியின் கையில் சட்டப்புத்தகம்.
அவன் படித்துக்கொண்டிருக்க, தாரகை திருமண வீட்டில் ஓடிய பாடலை ரசித்துக் கேட்டாள். சில நிமிடங்கள் புத்தகத்தில் மூழ்கியிருந்த அரிச்சந்திரன் கவனம் பாடலில் நிலைத்தது.
“இது என்னது? எல்லாம் உனக்குப் பிடிச்ச பாட்டா வருது” என்று தங்கையிடம் கேட்டான்.
“சூப்பரா இருக்குல, என்னதான் நமக்குப் பிடிச்ச பாட்டை தேடி கேட்கிறதவிட எங்கயோ வர பாட்டு நமக்குப் பிடிச்சதா வரது சூப்பரோ சூப்பர்டா அரி” என்றாள் தாரகை.
“அடுத்து பாரு பார்த்த முதல் நாளே வரும்” என்று தாரகை சொல்லி கேட் அருகே நின்று வானையும் இசையையும் ரசிக்க,
“எப்படி உனக்குப் பிடிச்ச பாட்டா ஓடுது?” என்று தங்கையிடம் சென்று நின்றான் அரி.
“மியுசிக் போடுறவர் மை ப்ரண்ட்” என்றாள் பெருமையாக.
“என்ன?”
“அது துரையோட பங்காளி வீட்டு கல்யாணம்டா அரி, அவரும் அங்க மைக் செட் போட்ட இடத்துல உட்கார்ந்திருக்கார், அதனால அவரும் பாட்டு செலெக்ஷன்” என்றவள் பாட்டினை ரசிக்க, அரியின் அறிவு ரசனைக்கு இடம் கொடுக்கவில்லை.
‘இவன் என்ன பாட்டு மூலமா காதல் சொல்றானா?” என்று ராஜதுரையின் மேல் அரிக்கு சந்தேகம் எழுந்தது. அது வலுவாக இருப்பது போல், அடுத்த பாட்டும் வர, தங்கையின் மேல் கோபம் வந்தது. பாடலை பாவை ரசிக்க, பாவையை அவள் அறியாது, அவன் அறியாது ரசித்தான் ராஜதுரை!
‘உயிரினை காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா?’
தலைவனோ தலைவியை ரசித்து பாட்டில் திளைத்திருந்தான்.
ராஜதுரைக்கும் தாரகைக்கும் நடந்த இரவின் உரையாடல்களில் இசைதானே ஆதாரம்? அதனால் தாரகையின் ரசனை ராஜதுரைக்கு நன்றாகத் தெரியும். அதனாலயே அவளுக்குப் பிடித்த பாடலைப் போட்டு அவளை சந்தோஷப்படுத்தினான்.
அந்த பாடல் எல்லாம் காதல் சொல்லும் பாடல்கள் என்றெல்லாம் ராஜதுரையின் மனத்தில் பதியவில்லை. எல்லாம் தாரகைக்குப் பிடித்தது, தாரகையைப் பிடித்தது! அதனால் அந்த பாடல்கள்!
காதலை சொல்ல முடியாதா? அரிச்சந்திரனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ராஜதுரை ஒன்றும் எதார்த்தமாக அந்த பாடல்களை போடுவது போல் அரிக்குத் தெரியவில்லை. அப்படி ஒன்றை நம்ப அரிக்கு மனமில்லை. இந்த யோசனையில் அரி மூழ்கி இருக்க, அடுத்த பாடல் தலைவலி தந்தது.
‘எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது கண் மூடி கண்
மூடி காதோரம் பாடுது’ என்று நெஞ்சில் மாமழை பாடலில் இடையில் கேட்டவன் மனமோ
“கள்ள குரல் பாடுதா, எட்டி நின்று காய்றியா? மவனே எட்டி விடணும்டா உன்னை!” என்று பல்லைக் கடித்தவன் தலையைப் பிடித்தான். தாரகை இந்த பாடல் வந்த புதிதில் எத்தனை தடவை கேட்டிருக்கிறாள் என்று அரிக்குத் தெரியுமே. தங்கைக்காகவே போடுகிறான் என்று திண்ணமாக தெரிந்தது.
‘Music is a love language (இசை ஒரு காதல் மொழி!) என்று எங்கோ படித்தது நினைவு வர எரிச்சல் வந்தது. தங்கையைப் பார்க்க, அவளோ ரசித்து உட்கார்ந்திருந்தாள்.
“இவனோட!!” என்று கண்களை மூடி திறந்தவன் “தாரா! தலைவலிக்குது, ஒரு காஃபி கொண்டு வா” என்றான்.
“என்னாச்சுடா, தூங்குற நேரத்துல கேட்கிற?” என்று தாரகை அக்கறையுடன் கேட்க
“என்ன செய்றது? தலைவலி தந்திப் போட்டா வரும். ரொம்ப வலிக்குது ப்ளீஸ்” என்றான். தாரகையும் காஃபி போட செல்ல, அரிச்சந்திரன் மனத்தில் யோசனைகள்.
தாரகையை அவனால் கண்டிக்க முடியாது. சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்பட்டவள், அண்ணன் என்ற வகையில் அன்பு செலுத்தலாம், அதிகாரமெல்லம செல்லாது!
தங்கை மனத்தில் என்ன இருக்கிறது என்று கூட தெரியவில்லை, ஆனால் ராஜதுரை இருக்கக் கூடாது என்று மட்டும் மனம் விடாது வேண்டியது. அதுவும் தங்கையின் எண்ணங்களுக்கு அப்படியே எதிர்ப்பதம் அவன்! எதுவும் இருக்காது என்று வேண்டியவனுக்கு, எதுவும் இருக்கவே கூடாது என்ற பயம் கூட!
தாரகை காஃபியுடன் வந்தவள், அவன் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி திண்ணையில் இருந்த பெஞ்சில் வைத்தாள்.
“ஏண்டா டென்ஷன் ஆகுற? இப்ப தலைவலி வர அளவுக்கு என்னாச்சு?” என்று அண்ணன் முன் உட்கார்ந்து கேட்க
“அந்த பரதேசிதான் நிம்மதியா உட்கார விடாம பாட்டுப் போட்டு தொலைக்கிறான்” என்று துரையைப் பேச,
“டேய் கல்யாண வீட்ல பாட்டு போடுறாங்க, நம்ம வீட்ல கூட கல்யாணம் பண்ணினா போடுவோம் தானே? ஏண்டா எப்பவும் இப்படி போட்டா நீயும் தானே கேட்ப?” என்று கேட்டாள்.
அரிச்சந்திரனுக்கும் தாரகைக்கும் ஒரு விளையாட்டுப் போலவே இருக்கும். டீவியிலோ ரேடியோவிலோ பாடல் கேட்டால் அடுத்த வரும் பாடல் யாருக்குப் பிடித்ததாக வருகிறது என்பது அவர்களுக்குள் ஒரு போட்டி. அப்படியிருக்க அண்ணனின் தலைவலி அதனால் என்பதை தாரகை நம்பவில்லை.
“என்னடா எதாவது கேஸ் டென்ஷனா?” தாரகைக் கேட்க
“ஆமா” என்று பொய் சொன்னான் அரிச்சந்திரன்.
“சரியாகிடும் விடு!” என்று தாரகை சொல்ல
“இந்த துரை எப்படி உனக்குப் பிடிச்ச பாட்டெல்லாம் போடுறான்?” விசாரணையாகக் கேட்டான்.
“இத்தனை நாள் பேசுறோம், அவனுக்குத் தெரியாதா என்ன? பூமர் இஸ் மை ப்ரண்ட்!” என்றாள் சிரிப்புடன்.
“பூமரெல்லாம் ப்ரண்ட்னு பெருமையடிக்கிற நிலைமையாகிடுச்சு” என்று கிண்டல் செய்த அரிச்சந்திரன், தங்கையின் மனத்தில் என்ன இருக்கிறது என்றறிய,
“இந்த காலத்துல பாட்டை ஷேர் பண்றதுதான் ப்ரோபோஸல்னு ஒரு கூட்டம் சுத்துது தெரியுமா?” என்று அரி சொல்லவும், தரையில் உட்கார்ந்திருந்தவள் அப்படியே பெஞ்சில் சாய்ந்து சிரித்தாள்.
“ஹஹாஅ! இது என்னடா புதுசா இருக்கு?” என்று சிரித்தபடி கேட்டாள்.
அரி பதில் பேசும் முன், “டேய் துரை இப்போ அப்படினு சொல்றியா?” என்று கேட்டு இன்னும் சிரித்தாள்.
“நீதான் சொல்லணும், உன் ப்ரண்ட் பத்தி?” வக்கீல் என்று நிருபித்தான் அரி.
தாரகையோ இன்னும் சிரித்தவள், “ப்ரண்ட் அதுக்கு எல்லாம் சரிப்பட மாட்டார். அவருக்குக் காதல்னாலே கசக்கும், இதுல ப்ரோபோசல் பண்றாராம்” என்றாள் நக்கலாக. அரியின் தலைவலி கொஞ்சமாகக் குறைந்தது. இருந்தும்,
“எதுக்கும் துரைக்கிட்ட ரொம்ப பேச்சு வைக்காத டா ராஜாத்தி” என்றான். ஏன் என்பதாக தாரகைப் பார்த்தாள்.
“யாரையும் நம்ப முடியாது! அதுவும் அவன் நம்ம தியேட்டர் மேல எல்லாம் கை வச்சான், இப்ப உடனே எப்படி உங்கிட்ட நல்லா பேசுறான்? அதுக்குப் பின்னாடி எதாவது காரணம் இருந்தா? உன்னோட ப்ரண்ட் ஆகி மைதிலி மோகன் பத்தி தெரிஞ்சிக்க நினைச்சா?” என்று அண்ணன் பேசவும் அவனை கோபமாக முறைத்தாள்.
“டேய் ஆறு மாசமா அவரோட பேசுறேன் நான்!” என்றாள் பல்லைக் கடித்து பெருமூச்சு விட்டு. ஆறு மாதங்கள் ஓடிவிட்டது, அவர்கள் நட்பாகப் பேச ஆரம்பித்து. ராஜதுரையை அவளுக்குத் தெரிந்தது, சரியாகவே அவனை கணித்தாள். அதனால் அண்ணன் பேச்சு எரிச்சலூட்டியது.
“அது எப்படி டா அரி? நான் கழுவி ஊத்துறப்ப அன்னை தெரசா மாதிரி அன்புக்காட்டுனு சொல்ற, பேசினா உஷாரா பேசுன்னு உயிரை வாங்குற. இப்படி பேசி என்னையும் இன்சல்ட் பண்ற, என் ப்ர்ண்டையும் இன்சல்ட் பண்ற” என்றாள் எரிச்சல் மிகுந்த குரலில்.
“உன்னை என்னடி இன்சல்ட் பண்ணினேன்?” அரியும் கோபத்துடன் கேட்க
“பின்ன சும்மா மைதிலி மோகன்னு அதையே பேசுற? மைதிலியை எல்லாம் அவங்க தலை முழுகிட்டாங்க! அவரைப் பொருத்தவரைக்கும் மைதிலி ஏமாத்திட்டுப் போயிட்டா, அதனால் அவளைப் பத்தி பேச்சே கிடையாது! அப்படியே கேட்டாலும் துரை எதுனாலும் நேரா செய்வார், அந்த பீஸுக்கு இந்த தந்திரமெல்லாம் தெரியாது!” என்றாள் கடைசியில் கிண்டலாக.
“ரொம்ப வக்காலத்து வாங்குற?”
“ஏன் வாங்கினா என்ன? என் ப்ரண்ட் நான் பேசுவேன். அதை விட நான் என்ன குழந்தையா? என்ன பேசணும் எனக்குத் தெரியாது? சும்மா இவனோட பேசாத, அவனோட பேசாதன்னு ஏண்டா சின்னதம்பி அண்ணனுங்க மாதிரி பண்ற?” என்று திட்டினாள்.
“ஹே! நான் எப்போ அப்படி சொல்லியிருக்கேன்?”
“டேய் லாயர், லையரா இருக்காதடா! கழுதைக்குப் பேரு கத்ரீனா கைஃப்ன்ற மாதிரி உருட்டுற உனக்கு அரிச்சந்திரன்னு பெயரு. அறிவு மாமா கிட்ட பேசினா கூட அண்டாவுல அட்வைஸ் அள்ளிட்டு வருவதானே நீ? ஆனா துரை தங்கச்சின்னா மட்டும் உன் ப்ரண்டோட மேரேஜ் பண்ணி வைப்ப” என்று பொரிந்து தள்ளினாள்.
அரிச்சந்திரன் உடனே, “உனக்குத் தெரியல தாரா. நீ என்னோட பொறுப்புடா! எப்பவும் கவனமா இருக்கணும்டி. அதனால்தான் டென்ஷன் ஆகுறேன், துரையோட நல்லா பேசுன்னு சொன்னது நானே தான்! ஆனா இவ்வளவு நல்ல்ல்லாஆ நீங்க பேசி ப்ர்ண்ட் ஆகுவீங்கனு தெரியாதே எனக்கு. அவனோட ஹிஸ்டரி அப்படி இருக்கே, அதான் எனக்குப் பயம்” என்று விளக்கினான்.
“ஓகே ஓகே! ஆனா துரை நீ நினைக்கிற அளவு டெரர் இல்லைடா! சொல்லப்போனா நீ சொன்னதுதான், அவரோட சேர்க்கை சரியில்லை. இந்த கல்யாண போஸ்டர்ல அவர் ஜாதி பெயர் கூட போடல தெரியுமா?” என்று துரையைப் புரிந்து அவனுக்காகப் பரிந்து பேசினாள்.
“நல்ல விஷயம்தானே. நான் யார் தெரியுமா என்பதே வன்முறை, நான் இன்னார் தெரியுமா? என்பது மிகப்பெரிய வன்முறைன்னு தேவ தேவன் சார் கவிதை இருக்கும். இது நல்ல மாற்றம்தான்” என்றான்.
இந்த பேச்சு எல்லாம் அண்ணனாக அரிச்சந்திரனை அச்சமூட்டினாலும் தங்கைக்குக் காதல் என்று ஒன்று வந்தால் நிச்சயம் மறைக்க மாட்டாள் என்று தெரியும்.
ஆனால் அது துரை மீது வேண்டாம் என்பதுதான் அவன் ஆவல்! தானே துரையைப் பற்றி பேசி பேசி அவளுக்கு அவனைப் பிடித்துப் போனால் என்ன செய்வது என்ற கவலையில், அவன் வழக்கைப் பற்றி பேசி பேச்சை மாற்றினான். அந்த வாரத்தில் ஒரு நாள், துரையின் வீட்டிற்கு வந்திருந்தார் கமலா.
கமலா, அருணா, சரோஜா மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். வயல் வேலை முடித்து வந்த துரை நடுவீட்டில் படுத்திருக்க, இவர்கள் திண்ணையில் உட்கார்ந்து கதையளந்தனர். பேச்சு துரையின் திருமணத்தைப் பற்றி இருந்தது. அதனால் கமலாவும்,
“நானும் எனக்குத் தெரிஞ்ச வரன் வந்தா சொல்றேன் அருணா” என்றார் துரையின் அம்மாவிடம்.
“அறிவுக்கும் துரை வயசுதானே? அவனுக்கு ஒன்னும் பார்க்கலையா?” என்று சரோஜா கேட்க
“எங்க? அவன்தான் வெளி நாட்டுக்குப் போக நிக்கிறானே, இங்க அவன் அப்பாகிட்ட எல்லாம் இருக்க மாட்டானாம். கம்பெனில வெளி நாடு போக வாய்ப்புப் பார்க்கிறான், கிடைச்ச அப்புறம் பொறுமையா கல்யாணம் கட்டிக்கிறானாம்” என்று கவலையாக சொன்னார் கமலா.
“மொதல்ல நம்ம பொண்ணுக்குப் பார்க்கணும் கமலா, வீட்ல பொண்ணை வச்சிட்டு பையனுக்குப் பார்த்தா சரிவராது” என்றார் அருணா.
“அதுவும் சரிதான், அதனால்தான் உங்க கொழுந்தனார் பொண்ணுக்கு ஜாதகம் பார்க்கப் போயிட்டார். ஆமா ராஜாவுக்கு ஒன்னும் ஜாதகம் பார்க்கலையா?” என்று கமலா கேட்க
“என்னத்த சொல்றாங்க, அடுத்த தைக்குள்ள முடிஞ்சிரும்னு சொல்றாங்க. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க” என்று அருணா சொல்ல
“இந்த தாரகைக்கும் எங்க பெரியப்பா வரன் பார்க்கிறாராம். பெத்தவங்க இல்லாத பொண்ணு, அதனால என்னை ஜாதகம் பார்க்க சொல்லி கேட்டார், ரெண்டும் சின்னப்பசங்க” என்றார் கமலா கவலையுடன்.
“ஏன் கமலா? அந்த பொண்ணு அறிவுக்கு முறைதானே? கட்டினா என்ன?” சரோஜா கேட்க அதுவரை சுவாரஸ்யமாகப் பேச்சைக் கேட்ட துரைக்குப் பேச்சின் சாராம்சம் பிடிக்கவில்லை.
கசப்பாக உணர்ந்தான். ஏதோ தன்னை விட்டு நீங்கிய உணர்வு.
“அவனுக்கு இஷ்டமில்லைக்கா, அதைவிட புள்ளைங்க அப்படி பழகல.”
கமலா பதில் சொல்ல, “உன் மவளை அந்த வக்கீல் பையனுக்கு கேட்டா என்ன?” என்றார் அருணா.
“அவனுக்கும் பொண்ணுக்கும் ஒத்துவராது அருணா” என்றதும்
“எப்படியும் பெரிய இடமாத்தான் அந்த பிள்ளைக்குப் பார்ப்பாங்க, என்ன சொல்ற கமலா?” என்று சரோஜா கேட்க
“பின்ன? ஜில்லாவுல பெரிய இடமாத்தான் பார்ப்பான் அரிச்சந்திரன். போலீஸ், வக்கீல், இல்லை இன்னும் பெருசா பார்ப்பான். அவனுக்குத் தங்கச்சின்னா உயிர், தாரகை பேர்லதான் தியேட்டரே இருக்கு கா, அதனால் அதுக்குத் தகுந்த மாதிரிதான் பார்ப்பாங்க” என்றார்.
அதன் பின் அவர்கள் பேச்செல்லாம் அவன் காதில் வாங்கவே இல்லை. துரை எழுந்து மாடியில் இருந்த அவன் அறைக்குப் போனான்.
தாரகையின் அழைப்புகளை ஆவலாக எதிர்ப்பார்த்த கணம் நினைவில் வர, நெஞ்சம் கசந்தது! நேசம் புரிந்தது!
தாரகைக்குப் பிடித்ததை எல்லாம் செய்யத் தூண்டிய மனதை முழுமையாக அறிந்தான். தாரகையைப் பிடிக்கும் என்று தெரியும், ஆனால் கல்யாணம் செய்து எப்போதும் அவளுடன் இருக்குமளவு அவளைப் பிடிக்கும் என்பதை அப்போதுதான் அறிந்தான், தெளிந்தான்!
கூடவே கோபம் அதிகமாக வந்தது! காதல் எல்லாம் தேவையா என்ற கோபம். இது காதலா? என்ற கேள்வி??
யாரிடம் கேட்க முடியும் அதை? தாரகையிடமா? காதல் இதுதான் என்று இலக்கணம் இருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் அதை அவன் பின்பற்ற தயாராக இல்லை.
தாரகையைத் தேடிய மனதை தடுக்கப் பார்த்தான். இனி அவளிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்தான், அந்த முடிவு மிக மிக கடினமாக இருந்தது.
முதலில் அவளை விட்டு விலகி இருப்பதை அவ்வளவு கஷ்டம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. அன்று அவள் அழைக்க, வேண்டாம் என்று நினைத்தான். ஆனால் நினைக்க மட்டுமே முடிந்தது.
இன்று மட்டும் என்று மனதைத் தேற்றி அவளுடன் பேசினான். ஆவல்கள் கூடியதே தவிர குறையவில்லை. தாரகையிடம் காதல் சொல்லும் தைரியமில்லை, காதலிக்கும் தைரியம் முதலில் இல்லை அவனுக்கு!
காதல் பிடிக்கவில்லை! தாரகையைப் பிடித்தது!!
காதல் எல்லாம் திரைக்கும் கதைக்கும் சரி என்ற எண்ணம் அவனுக்கு.
சிறுவயது முதலே காதல் தீண்டாமை அவனளவில்! ஆனால் இன்று அவனைத் தீண்டிச் சென்ற காதல் காற்றை அவனால் தடுக்க முடியவில்லை.
அடுத்த வந்த நாள் எல்லாம் நிறைய யோசித்தான். பேசி பேசி ஆவலும் காதலும் கூடிப்போனால் கடைசியில் தனக்குத்தான் கஷ்டம் என்று நினைத்தவன் தாரகையிடம் பேச்சே வளர்க்கவில்லை. எப்போது அழைத்தாலும் வேலை என்றான், சில நேரம் அவள் அழைப்பினை எடுக்கவே இல்லை. முதலில் தாரகைக்குத் தன்னை தனக்குப் பிடித்தது போல் பிடிக்காது என்று நினைத்தான்.
துரை தாரகையைத் தேடாமல் அவளைத் தேட வைத்தான்.
✅ End of Episode 21
Nice
ஆவலாக தொடர்ந்த நட்பு ஆழமாக காதலாக மாறியதோ....
Nice