Episode 5

தாரகை சென்று காவல் நிலையத்தில் புகார் சொல்ல, அது லோக்கல் ஸ்டேஷன். ஊர்க்காரர்களுக்குள் பிரச்சனை என்றால் உடனே வழக்குப்பதிய மாட்டார்கள். பேசி அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என்றுதான் நினைப்பார்கள். தாரகையிடம் புகார் எழுதி வாங்கினாலும் அதை பதியவில்லை.

தாரகை புகார் கொடுத்துவிட்டு மீண்டும் திரையரங்கம் வந்துவிட்டாள். அவ்வளவு வேலைகள் இருந்தன. ஏற்கனவே எல்லாவற்றையும் சுத்தம் செய்து, சரி பார்க்க சொல்லிவிட்டாள். ஆனாலும் அன்று காட்சிகள் எதுவும் திரையிடப்படவில்லை. எப்படியும் இரண்டு நாட்கள் ஆகும், முழுவதுமாக சரி செய்ய ஒருவாரம் கூட பிடிக்கும். பல லட்சங்கள் இழப்பு.

அரிச்சந்திரனுக்கு இந்த விஷயம் தெரியவர, தங்கையின் மன நிலை உணர்ந்தவன்,

“தாராம்மா, டென்ஷன் ஆகாத! இன்னிக்கு மட்டும் டிக்கெட்ஸ் கொடுக்காத, ஆன்லைன்ல புக்கிங் ரிஃபண்ட் பண்ணிடு.  நாளைக்குள்ள வேறு வழி ஏற்பாடு செஞ்சுடலாம். பார்க்கிங்லாம் டேமேஜ் பார்த்தேன், தியேட்டர் உள்ள எதுவும் சேதாரமில்லைதானே? அதனால் ஆளுங்க போக இன்னொரு சின்ன வழி ஏற்பாடு பண்ணிடலாம். நான் புவிகிட்ட சொல்லிட்டேன், அவர் டே அண்ட் நைட் வொர்க் பண்ணி நாளைக்கு ஷோ ரன் பண்ணிடலாம்னு சொல்லிட்டார். அண்ணா இரண்டு நாள்ல வந்துடுவேன்” என்றான்.

 “ஓகே அரி, ஐ வில் மேனேஜ்” என்றாள். அவள் பேச்சிலே கோபத்தினை உணர்ந்தான்.

“தாராம்மா, டேய் ராஜாத்தி!” தங்கையை சமாதானம் செய்ய பார்க்க, அவளோ

“என்ன நினைச்சிட்டு இருக்காங்க அவங்க? தப்பெல்லாம் அவனுங்க மேல வைச்சிட்டு முட்டாப்பசங்க, ப்ளடி நான்சென்ஸ்!” என்றாள் பல்லைக்கடித்து. இவளிடம் பேசும்போதே அறிவின் அப்பா அரிக்கு அழைத்தார்.

“நான் கூப்பிடுறேன், நீ சாப்பிடு முதல்ல” என்று சொல்லி வைத்தான்.

சிறிது நேரத்தில் அரிச்சந்திரன் மீண்டும் அழைத்தான். இவள் அறைக்கு மேனேஜர் புவியரசனும் வந்தார்.

“சொல்லுங்க புவிண்ணா” என்று இவள் புவியைப் பார்த்தபடி அரிச்சந்திரனின் அழைப்பை ஏற்றாள்.

அரி , “தாரா,  நீ கம்ப்ளையண்ட் கொடுத்திட்டு வந்தியா?” என்று கேட்க

“காலையிலே கொடுத்துட்டேன்” என்றதும் பெருமூச்சுவிட்டவன்

“எங்கிட்ட சொல்லியிருக்கனும் தாரா!” என்றான் கண்டிப்புடன்.

“என்ன சொல்லனும்? இதானே  நான் செய்ய முடியும்? இப்ப என்னாச்சு?” தாராவும் தியேட்டரின் நிலையில் எரிச்சலாகவே பேசினாள். அவளுக்குத்தானே நஷ்டம், மன உளைச்சல் எல்லாம்! அவள் உரிமையில் விரிசல் வந்திருக்க, தாங்கவே முடியவில்லை.

“தாரா, இதனால் பிரச்சனைதான் அதிகமாகும். அவங்க திரும்பி எதாவது செய்வாங்க. நம்ம நிம்மதியா இருக்க வேண்டாமா? இன்னும் மோகன் மேல கோவப்படுவாங்க?” என்றதும் தாரா அரியிடம் சீறினாள்.

“உன் ப்ரண்ட்தான் உனக்கு முக்கியமா? இங்க பாருடா அரி, இது என் இடம், இங்க என்ன செய்யனும் நாந்தான் முடிவு பண்ணனும்!” என்றாள் அதிகாரமாக.

“உன் இடத்துல நீ என்ன வேணும்னாலும் செய்யலாம் தாரா, ஆனா உன்னோட நல்லதை  நாந்தானே யோசிக்கனும். ஒழுங்கா என் பேச்சைக் கேளு, புவியோட நீ அறிவு வீட்டுக்குப்போ, காம்பேன்ஷேஷன் பேசுறாங்களாம். உன் கம்ப்ளையண்ட் வாபஸ் வாங்கிடு! லெட்ஸ் எண்ட் இட் ஹியர் மா” என்றான் பொறுமையாக.

“முடியாது!  நம்ம தியேட்டர் நீ நேர்ல பாரு, அப்போ தெரியும் உனக்கு. உன்னோட லாயர் கோட்’ல காயப்போடும்போது காக்கா கழிஞ்சா கூட  என்னமோ சட்டமே கெட்ட மாதிரி நடப்ப, எனக்கும் அப்படிதான் அண்ணா இருக்கு. இப்ப கொடுத்தா ஜஸ்ட் கலாட்டா செஞ்ச கேஸ்தான், இல்லைனா எனக்கு இருக்க ஆத்திரத்துக்கு அவன் மண்டையை உடைச்சு நான் கொலை கேஸ்லதான் உள்ள போவேன்” என்று ஆத்திரமாகப் பேச,

“என் பேச்சைக் கேளு, லீகலா வேண்டாம். எல்லாம் நம்ம அறிவோட சொந்தமா போய்ட்டாங்க, ஏதோ பொண்ணு போய்ட்ட ஆத்திரம்ல இப்படி செஞ்சுட்டானுங்க, இன்னும் அவங்களைத் தூண்டி விட வேண்டாம்டா ராஜாத்தி. அண்ணா சொல்றதைக் கேளுடா. கோர்ட் கேஸ்னு அலைஞ்சா எவ்வளவு கஷ்டம் எனக்குத் தெரியும்,  நான் அறிவு அப்பா கிட்ட பேசிட்டேன், நீ எஸ்டிமேட் போட்டுக்கொடு, அவங்களை செலவை ஏத்துக்க சொல்லுவோம்” என்று அவளைப் பேசியே கரைக்க, தாரகையும் நிதர்சனத்தைப் புரிந்தாள்.

நியாயங்கள் நிதர்சனங்கள் ஆகாதே!

அண்ணன் சொன்னது போல் புவியுடன் மீண்டும் திருவாரூரிலிருந்து ஊருக்குச் சென்றாள். அறிவின் வீட்டிற்கு செல்ல, இவள் அத்தை வரவேற்று உள்ளே அழைக்க, ஹாலில் பன்னீர், அன்புசெல்வன், ராஜதுரை, அறிவு இன்னும் அவளுக்குத் தெரியாத ராஜதுரையின் சொந்தங்கள் இருந்தனர்.

காலையில் தாரகை புகார் கொடுத்த விஷயம் அன்பு செல்வன் மூலமாக பன்னீர் வீட்டிற்குத் தெரியவர அருணா அழுதுத் தீர்த்துவிட்டார்.

“இப்படி போலீஸ் ஸ்டேஷன் போகவா உன்னைப் பெத்தேன்?” என்று அழ, சரோஜாவும்

“உன்னை யார்டா இப்படி செய்ய சொன்னது?” என்று அவனை கத்தினார்.

முதல் நாள் இரவு, ராஜதுரை அவன் உறவுக்கார இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்க, மைதிலி பற்றி பேச்சு வர, தாரகையிடமும் அரிச்சந்திரனிடமும் சென்று நின்றது. மற்றவர்கள் மோகனை என்னவாது செய்ய வேண்டும் என்று பேச, அவனைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையே.

அதுவும் ராஜதுரை எப்போதும் ஊரில் ஒரு மிடுக்கோடு வாழ்ந்துவிட்டான், பெரியப்பாவுடன் சென்று அவனுக்கும் ஒரு மரியாதை உண்டு! இப்போது மைதிலியால் அது மொத்தமாக கீழிறங்கிய உணர்வு, எல்லாரும் ஆறுதலாகப் பேசினாலும் அவர்கள் பார்வையில் ஒரு கேலி. எல்லாவற்றிற்கும் அரிச்சந்திரன் காரணம் என்ற எண்ணத்தில் அந்த நொடி ஆத்திரத்தில் அவர்கள் தியேட்டரின் மீது நள்ளிரவில் கல்வீசி கலாட்டா செய்து, கேட்டைத் தாண்டி குதித்து சேதப்படுத்திவிட்டனர்.

இப்போது பெரியம்மா கேட்க, “என்ன இப்போ? மைதிலிக்கு அதுங்கதானே வீட்டை விட்டுப்போற தைரியம் கொடுத்துச்சுங்க, அதான் தியேட்டரை உடைச்சேன்” என்றான் கடுப்பாக.

“ஏண்டா நம்ம பொண்ணு தப்பு செஞ்சா அடுத்து வீட்டுப்பசங்க கிட்ட கலாட்டா செய்வியா? போலீஸ் கேஸ்னு போனா உன் வாழ்க்கை என்னாவாகும்? அப்பா இல்லாத புள்ள, அதான் இப்படி ஆகிட்டான்னு பேச மாட்டாங்களா? ஏன் மாமா நீங்க ஒன்னும் பேசாம இருக்கீங்க? இவனை இப்படியே கொம்பு சீவிவிட்டு இவன் வாழ்க்கையைக் கெடுக்க போறீங்களா?” என்று அருணா பன்னீரைக் கத்தினார்.

அவர்கள் வீட்டுப்பெண் அவர்களை மீறியிருக்க, அடுத்தவரை குறை சொல்லி என்ன? ஆனால் அதுவே ராஜதுரையின் கோபத்துக்குக் காரணம். அடுத்த வீட்டுப்பெண்ணை ஆராய்ந்த எனக்கு என் தங்கையின் மனம் தெரியவில்லை என்ற ஏமாற்றம்! அதுவே இன்னும் கோபத்தைக் கிளற, அதைத் தீர்க்கும் வடிகாலாக ராமசாமி தியேட்டரை அடித்து நொறுக்கிவிட்டான்.

“அம்மா! பெரியப்பாவை ஏன் பேசுற? அவருக்குத் தெரியாது” என்று ராஜதுரை அம்மாவைத் தடுக்க,

“அப்போ அவருக்கும் தெரியாம எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்ட, ஆத்திரத்துல எதாவது செஞ்சு என் உயிரை வாங்காதடா” அருணா மகனை சத்தம் போட்டார்.

“இங்க பாருங்க! போனவ போய்ட்டா, அதுக்காக இருக்கிற புள்ளை வாழ்க்கைப் போகக் கூடாது! நம்ம வேண்டாம் போனவளுக்காக இவன் எதாவது செஞ்சு கெட்டப்பெயர் வாங்கவா? நீங்க அவங்க வீட்ல பேசி கேஸ்ல போடக்கூடாதுன்னு கேட்குறீங்க, அவ்வளவுதான்!” என்று சரோஜா கணவரிடம் கண்டிப்பாக சொன்னார்.

ராஜதுரை நின்றிருக்க, தாரகை நேராகச் சென்று அங்கிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாள். அந்த தோரணையே அவனுக்குப் பிடிக்கவில்லை. அறிவின் அப்பா கூட அதிருப்தியாக அவளைப் பார்க்க, தாரகையோ

“என்ன மாமா? பேசனும் கூப்பிட்டு என் டைம்ம வேஸ்ட் பண்றீங்க?” என்று கேட்டாள்.

அவர் உடனே, “தாரகை! ஏதோ பயலுவ நேத்து கோபத்துல செஞ்சுட்டானுங்க, நீ கேஸ் எதுவும் கொடுக்க வேண்டாம். இத்தோட இதை விட்டுடு புள்ள” என்றார்.

அறிவோ மனதில், “இவர் சொன்னதும் சரிங்க மாமான்னு கேட்க போறா பாரு. எங்கப்பனுக்கு ரொம்ப நம்பிக்கை” என்று நக்கலடித்தான்.

“அவங்க செஞ்சது தப்பு இல்லையா மாமா?”

“நீயும் உன் அண்ணனும் செஞ்சது தப்பில்லையா? அவங்க வீட்டுப்பொண்ணுக்கு அவங்களுக்குத் தெரியாம கல்யாணம் செஞ்சு வைச்சது நியாயமா? ஏதோ பசங்க வேகத்துல பண்ணிட்டாங்க, அரிச்சந்திரன் கூட பேசிட்டேன். நீ என்ன செலவு ஆகும் சொல்லு, பங்காளி கொடுத்துடுவான்” என்று பன்னீரைப் பார்த்தார் அன்புசெல்வன்.

“கொடுத்துட்டு இத்தோடு முடிச்சிடலாம். என் மகனால எந்த பிரச்சனையும் வராது” என்றார் பன்னீரும். ராஜதுரை இறுக்கமாக நின்றிருந்தான்.

தாரகை உடனே,

“இரண்டு லட்சம் ஆகும் மாமா” என்றாள்.

“என்ன இரண்டா?” என்று எல்லாரும் அதிர்ந்தனர்.

“பின்ன? தியேட்டர் போர்ட், கேட், பார்கீங் எல்லாம் உடைச்சாச்சு. இன்னிக்கு மார்னிங் ஷோவுல இருந்து நைட் வரை நாலு ஷோ கேன்சல், அதுக்கு டிக்கெட் காசு திருப்பிக் கொடுத்திருக்கேன், சீக்கிரம் சரி செஞ்சாதானே நாளைக்காச்சும் நான் ஷோ ரன் பண்ணலாம். இரண்டு நாள் ஷோ ரன் பண்ணாததை சேர்த்தா இன்னும் ஆகும்”

“கொஞ்சம் குறைச்சிக்கோ தாரா” அறிவு துரைக்காகக் கேட்க,

“இந்த அக்கறை, அறிவெல்லாம் ஜாலியா என் தியேட்டரை டேமேஜ் பண்றதுக்கு முன்னாடி இருந்திருக்கனும். இதுவே இனிஷியல் எஸ்டிமேட்தான், இன்னும் கூட ஆகலாம். சீக்கிரம் சரி செய்யாம போனா கோடி ரூபா கொடுத்து வாங்கின படமெல்லாம் எப்போ ரன் பண்றது?” என்றாள் கடுப்பாக.

பன்னீருக்கு அவளிடம் பேரம் பேச பிடிக்கவில்லை. அதனால்,

“அந்திக்கு அறிவு கிட்ட பணம் கொடுத்துடுவிடுறேன், நீங்க கொடுத்துடுங்க” என்றவர் எழுந்து சென்றுவிட, துரையும் பின்னால் போனான்.

தாரகை தியேட்டர் சென்றுவிட, அறிவிடம் துரை இவ்வளவு பணம் என்று புலம்ப,

“அறிவுக்கெட்டவனே! அவ என்ன கலாட்டா பண்ணினா பயப்படுவாளா? தயா மாமா பொண்ணு அவ! அதைவிட அவங்க அண்ணன் தங்கச்சிக்கு ஒன்னுன்னா என்ன வேணும்னாலும் செய்வான். தேவையில்லாம வேலை செஞ்சு இன்னிக்கு உனக்குத்தானே நஷ்டம்” என்று அறிவு திட்டினான்.

“பின்ன, அந்த மோகன் எங்கன்னு தெரியல. உனக்கு என்னடா? கேட்கிறவங்க பார்க்கிறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியல, அவமானமா இருக்குடா!” என்றான் துரை கசங்கிய முகத்துடன்.

“அந்த கடுப்புலதான் பாண்டி அண்ணனும் பயலுவளும் சொல்லவும் நானும் அடிச்சு உடைச்சேன்” என்றதும்

“டேய் துரை! கேட்கிறவன் பார்க்கிறவன் எல்லாம் பத்து நாள் கேட்பான், ஒரு வருஷம் கேட்பான். அப்பறம் அடுத்த சேதிக்குத் தாவிடுவான். இவ்வளவு பேசுறியே அன்னிக்குத் தாம்தூம் குதிச்ச எங்கப்பா கூட இன்னிக்கு உங்களைத்தானே பணத்தைக் கொடுக்க வைச்சாரு?”

“யாராச்சும் அன்னிக்குக் கௌரவம் காத்துல போச்சுனு சொன்னவனுங்க என் பங்காளி, என் ஜாதிக்காக செஞ்சான்னு பத்து பைசா பணம் கொடுத்தானா? உன்னைத் தூண்டிவிட்ட ஜாதிக்காரன் எவனாச்சும் வந்தானா?” என்று கேட்டான் அறிவு.

ஏற்கனவே பணம் போன ஆத்திரத்தில் இருந்தவன் அறிவின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாது, எழுந்து போய்விட்டான்.

 

*************

இரண்டு மாதங்கள் ஓடிவிட, அறிவு அலுவலகத்திற்காக சென்னை சென்றவன் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்க, அவனை ஆற்றங்கரையில் இருந்த டீ கடையில் சந்தித்தான் ராஜதுரை.

இருவரும் டீயும், மெது பக்கோடாவும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே கதை பேசினர்.

“அப்புறம் பங்காளி எப்போ பாரீன் போகப்போறார்?” அறிவை ராஜதுரை கிண்டலாகக் கேட்க,

“இன்னும் இந்த ப்ராஜக்ட் முடியலடா, அது முடிஞ்சா ஆன்சைட் கிடைக்கும். இல்லையா நான் வேற கம்பெனி பார்க்கலாம்னு இண்டர்வீயு போகப் போறேன்” என்றான்.

“அது சரி, நீ வரதுக்குத்தான்  நான் வெயிட் பண்ணினேன்” என்று ராஜதுரை சொல்ல, அவனை கண்கள் விரித்துப் பார்த்த அறிவு,

“பங்காளிக்கு என் மேல இவ்வளவு பாசமா?” என்று கேட்க,

“ஒரு மண்ணுமில்லை, எனக்கு உன் மாமா மகன், இல்லை மக யாராச்சும் பார்க்கனும்” என்றான்.

“எந்த மாமா?” என்று அறிவு கேட்க, துரை முறைத்தான்.

“டேய்! இந்த ஊர்ல தெருவுக்கு எங்கம்மாவுக்கு ஒரு அண்ணன் உண்டுடா, அதான் கேட்டேன்” என்றிட

“அரிச்சந்திரனை சொன்னேன், மைதிலி பத்திக் கேட்கனும்டா, மூணு மாசம் கிட்ட ஆச்சு. அவ எப்படி இருக்கா தெரியல” என்றான் கவலையாக.

ராஜதுரையை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி அரிச்சந்திரனுக்கு அழைத்துக் கேட்க, அவனோ

“உன்னை மாதிரி எல்லாரும் இல்லை அறிவு, நான் சொல்லவே மாட்டேன். உன் சொந்தக்காரங்க பத்து வருஷம் முன்னாடி,  கல்யாணம் செஞ்சு கர்ப்பமா இருந்த பொண்ணோட புருஷன் வேற ஜாதின்னு கொன்னவங்க, அந்த எஞ்சினியர் செஞ்ச வேலை எனக்குத் தெரியும்டா!” என்றான் குற்றம்சாட்டும் குரலில்.

“டேய், அவர் ஒன்னும் எங்களுக்கு நெருக்கமில்லை. ராஜாவுக்கு அவன் தங்கச்சி எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆசையாம்” என்று அறிவு மெல்ல கேட்க,

அப்போதும் அரிச்சந்திரன், “அவனும் இந்த ஜாதி ஜாதினு சுத்துற பசங்களோட இருக்கவன் தானே? I am not that mad! அப்படி உன் பங்காளிக்கு தங்கச்சி மேல அக்கறையினா  நான் சொல்றதை சொல்லிடு, மைதிலி ரொம்ப சந்தோஷமா பாதுகாப்பா அவ புருஷனோட இருக்கா. அவளுக்கு நான் பொறுப்பு! எனக்கா உங்க மேல நம்பிக்கை வந்தா சொல்றேன். இனியும் என்னைக் கேட்டா வேஸ்ட்தான்” என்று சொல்லி அரிச்சந்திரன் வைத்துவிட்டான்.

ஸ்பீக்கரில் இருக்க துரையும் எல்லாம் கேட்டான்.

“பார்த்தியாடா? அந்த ராமு மாமா அவர் அக்கா பொண்ணு, வயித்துல பிள்ளையோட இருக்கும்போதே ஆள் வைச்சு அவ புருஷனைக் கொன்னாரே, அதை சொல்றான்” என்றான் அறிவு.

“அப்போ நம்ம சின்ன பசங்கடா, நமக்கு என்ன தெரியும்?” துரை கேட்க,

“தெரிஞ்ச பின்னாடி ராமு மாமாவோட பேசாம இருக்கோமா? இல்லையே, அந்தாளும் ஒரு கொலைகாரன் தாண்டா” அறிவு கசப்பாக சொன்னான்.

“அவன் சொல்றதும் நியாயம்தான்! நீயும் சாதி சாதின்னு திரிவதானே? எங்கேயோ மைதிலி நல்லா இருக்கானு நினைச்சு விடு” என்றான் துரையிடம்.

“என்னடா பேசுற? நீயும்தானே அன்னிக்கு அப்படி பதறின?”

“அது பொம்பள புள்ள என்னாச்சோன்னு பயம். அப்போ வீட்டை மீறிட்டாளேன்னு ஆத்திரம். இப்போ அந்த கோவம் போச்சு. பத்தாங்க்ளாஸ் படிக்கிறதுங்க கூட காதலிக்குதுங்க! நீ என்னடான்னா?” என்று சலிப்பாக பேச,

“சும்மா சும்மா நான் மட்டும் சாதி பார்க்கிறேன் சொல்லாத, ஏன் உங்க வீட்ல உங்கப்பாரு எல்லாரையும் உள்ள விடுவாரா?” என்று கடுப்பில் கேட்க,

“அவர் வீடு அவர் உரிமைடா. நான் சென்னையில தங்கியிருக்க ரூம்ல யார் என்ன சாதின்னே தெரியாது.  நாங்க தெரிஞ்சுக்க விரும்பினதில்லை., நாங்க ப்ரண்ட்ஸ் அவ்வளவுதான்! ஏன் ஆபிஸ் லஞ்ச்ல கூட எல்லாரும் ஒன்னாதான் சாப்பிடுவோம்.”

“அப்போ நீ சாதி மாறி கல்யாணம் கட்டிப்பியா?  உங்கப்பா ஒத்துப்பாரா? அப்படி செஞ்சா என்ன மரியாதை இருக்கும், யார் நிப்பா உன்னோட?” என்று தன்னைக் குறை சொல்லிவிட்டானே என்ற உணர்வில் அறிவிடம் கேட்டான் ராஜதுரை.

“அப்படி எனக்கு ஒருத்தியைப் பிடிச்சா சாதியாவது மண்ணாவது. எங்கப்பா ஒத்துக்கிட்டா என்ன இல்லைனா என்ன? அதான் என் மாமன் புள்ளைங்க இருக்கே, அதுங்க ஹெல்ப்போட அழகா ரெஜிஸ்டர் பண்ணிப்பேன். டேய் நம்ம வாழ்க்கைடா, மரியாதை நம்ம செயல்ல இருக்கு, சும்மா உங்க பெரியப்பன் கூட சேராத, உன்னை நல்லா கெடுத்துவைச்சிருக்கு பெருசு” என்றான் கடுப்பாக.

“பெரியப்பாவைப் பேசின, தொலைச்சிடுவேன்” என்றான் துரை கோபத்துடன்.

“அட போடா! நீங்க சுத்துறீங்களே பாண்டியன் அண்ணன், அவனே வேற ஜாதி பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு ஜாதிப்பெருமை பேசுறான். எப்படிடா நீங்களாம் இவ்வளவு முட்டாளா சுத்துறீங்க?” பரிகாசமாகக் கேட்டான் அறிவு.

“உன்னை ஏத்திவிட்டு தாரகை தியேட்டரை உடைச்சு உனக்குத்தான் நஷ்டம், எவனாச்சும் அவங்கிட்ட நீ ஏன்யா வேற ஜாதி பொண்ணைக் கட்டின கேட்டுருக்கீங்களா? இதுல அவனுக்கு இனம் காக்கும் காவலனேனு கட் அவுட் ஒரு கேடு!” என்று வெறுப்பாகப் பேசினான் அறிவு.

ராஜதுரை அவன் அப்பா இறந்த பின் மொத்தமாக பன்னீரின் அரவணைப்பில் இருக்க, அவரின் கொள்கைகள்! அவரின் பழக்கங்கள் எல்லாம் அவனுள் மெல்ல ஊறிப்போயின. அவனின் படிப்பால் கூட உதவ முடியவில்லை.

இன்று அறிவின் பேச்சிலும் பெரிதாக அவன் அறிவுக்கண் திறக்கவில்லை. ஆனால் உள்ளே உறுத்தியது.  நாட்கள் நகர்ந்தாலும் மைதிலியின் செயல், தாரகை, அரிச்சந்திரன் செய்தது, தியேட்டர் பிரச்சனை எல்லாம் ராஜதுரையின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அடுத்த நாள் அவன் வேலை விஷயமாக மன்னார்குடி செல்ல, அங்கு வேறு பிரச்சனை அவனுக்காக காத்திருந்தது.

 

✅ End of Episode 5
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 6 Replies
Jeeona Reader 1 month ago

Ipavavathu mulichukonga Durai 😒

❤️ 1 more...
Srichitra Reader 1 month ago

Very nice.

❤️ 1 more...
Surya Palanivel Reader 1 month ago

துரையோட புத்திக்கூர்மைக்கு புரிஞ்சுக்க நேரமெடுக்குமே. 

😂 1 more...
Sathya Velusamy Reader 2 weeks ago

துரைக்கு சேர்க்கை சரியில்லை அதான் இப்படி

Radhi Reader 2 weeks ago

Nice 

Kavi Natarajan Reader 1 week ago

Very nice ud ma 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top