Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 6

வீட்டிற்குள் கோபமாக அக்கா சுமித்ராவுடன் உள்ளே நுழைந்தான் ராஜதுரை. ஏன் இவ்வளவு ஆவேசம் என வீட்டுப்பெண்களுக்குத் தெரியவில்லை. சுமித்ராவைப் பார்க்க, அவள் கன்னங்கள் தடித்து கண்கள் சிவந்து இருந்தாள்.

 

“தண்ணீ கொண்டாமா” என்று கேட்டு வேகமாகத் தண்ணீரைப் பருகியவன் மூச்சு வாங்க, அந்த மர சோஃபாவில் உட்கார்ந்தான்.

 

“என்னடா ஆச்சு? ஏதோ மெஷின் வாங்கப்போறன்னு போன, சுமியோட வந்திருக்க?” அருணா மகனை விசாரிக்க, சரோஜா மகளைப் பார்த்தவர்

 

“என்னடி ஆச்சு? ஒரு மாதிரி இருக்க? இவனும் கோவமா இருக்கான்.” என்றார் பதட்டமாக.

 

“எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டைம்மா, அவர் என்னை அடிச்சிட்டார். அப்போனு பார்த்து இவன் வந்துட்டான், அவரைப் பேசிட்டு என்னை அழைச்சிட்டு வந்துட்டான்” என்ற சுமித்ராவைப் பார்த்த துரை,

 

“முதல்ல போய் மூஞ்சியைக் கழுவிட்டுவாக்கா, இப்படி இருக்காத, எனக்கு ஆத்திரமா வருது” என்றான் தன் கோபத்தைக் கட்டுப்படுத்துக்கொண்டு.

 

சரோஜா உடனே துரையிடம், “ஏண்டா அறிவிருக்கா உனக்கு? புருஷன் பொண்டாட்டி சண்டையில நீ ஏன் தலையிடுற? இப்படி அழைச்சிட்டு வந்துட்டா எல்லாம் சரியாப்போகுமா?” என்றார் கோபத்துடன்.

 

“அதுக்காக அந்தாள் அக்காவை அடிப்பான், நான் பார்த்துட்டு நிக்கனுமா பெரியம்மா?” என்றபடி எழுந்து நின்றான் ராஜதுரை.

 

“டேய்! நம்ம பொண்ணைக் கொடுத்துருக்கோம், அவங்ககிட்ட போய் சண்டைக்கு நிக்கலாமா?  நாலு நாள் ஆச்சுனா அவரே சமாதானம் ஆகியிருப்பார்” சரோஜா புலம்ப, அருணாவுக்கு மகனைப் பேசவும் கோபம்.

 

“உனக்கு ஏன் இந்த வேலை ராஜா? இப்ப உன் பெரியப்பாவுக்கு என்ன பதில் சொல்லுவ?” என்று அருணா கேட்க

 

“ஏற்கனவே ஒருத்தி ஓடிப்போய் மானத்தை வாங்கிட்டா, இவளும் வீட்டோட வந்து இருந்தா இந்த ஊர் உலகம் என்ன பேசும்?” சரோஜாவும் விடாது பேச, ராஜதுரைக்கு அவ்வளவு ஆவேசம்.

 

அவனைப் பொருத்தவரையில் பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும்தான், ஆனால் அடங்கி இருக்க வேண்டும்,  அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவனில்லை!  கட்டியவனாக இருந்தாலும் மனைவியை அடிப்பதா?

 

இன்னுமே அவன் கொதிப்பு அடங்கிடவில்லை.

 

இவன் மன்னார்குடியில் அவன் நண்பன் ஒருவனுக்காக உளுந்து அறுவடை செய்யும் இயந்திரம் பார்க்கப் போயிருந்தான். அப்படியே சுமித்ராவைப் பார்க்கலாம் என்று  நினைத்து அவள் வீடு சென்றான். பார்த்தது சுமித்ராவை கன்னத்தில் அறைந்த அவள் கணவன் கார்மேகத்தைதான்.

 

சுமித்ராவும் கோபமாக ஏதோ பேச, மீண்டும் அவன் அடிக்கும் முன்னே இடையில் புகுந்தவன்

 

“என் அக்காமேல கை வைச்சா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் அத்தான்” என்றவன் அக்காவை தன் பக்கம் பிடித்து நிற்க வைத்தான்.

 

“என்னடா செய்வ? அவ என் பொண்டாட்டி” என்று கார்மேகம் எகிற,

 

“பொண்டாட்டிதான் பொருள் இல்லை என் அக்கா, எட்டி உதைக்க! என்ன தைரியம் இருந்தா என் முன்னாடி அடிப்பன்னு சொல்றீங்களா நீங்க? என் அக்காவுக்குப் புருஷனா இருக்கிறதாலதான் இந்த மரியாதை, அது மேல இனி கை வைச்சா, என் கைதான் பேசும்” என்றவன்

 

“நீ என்னக்கா பார்த்துட்டு இருக்க,  நாங்களாம் இருக்கோம்தானே? இவர் அடிச்சா வாங்கிட்டு இருப்பியா? அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?” என்று கேட்டான்.

 

“டேய், விடுடா! நீ கிளம்பு. நான் பார்த்துக்கிறேன்” என்று சுமித்ரா சொல்ல,

 

“முடியாது! இப்படி அடிவாங்கி நீ இந்த வீட்ல இருக்க அவசியமில்லை” என்றவன் சுமித்ராவின் மறுப்பை ஏற்காமல் பிடிவாதமாக அவளை அழைத்து வந்துவிட்டான்.

 

இப்போது வீட்டிற்கு வந்த பன்னீரும் கூட,

“ஏண்டா புருஷன் பொண்டாட்டி விஷயத்துல தலையீடுற நீ? ஒன்னுதான் மானத்தை வாங்கிடுச்சு, இவளாச்சும் நல்லா வாழ்றா  நினைச்சா இப்படி மாப்பிள்ளை கிட்ட சண்டைப்போட்டு இவளை இழுத்துட்டு வந்திருக்க, முதல்ல இவளை நீ போய் அவ வீட்ல விடு” என்று அதட்டினார்.

 

“என்ன பெரியப்பா பேசுறீங்க? நம்ம அக்காவை அந்தாள் அடிக்கிறான் சொல்றேன், நீங்க போய் விடுன்னு அதுலயே நிக்கிறீங்க?”

 

பெரியப்பா சொன்னால் எப்போதும் ஒத்துக்கொள்பவன் எதிர்த்துப்பேச, பன்னீருக்குக் கோபம் வந்தது.

 

“வாயை மூடுடா! புருஷன்னா பொண்டாட்டியை அடிப்பான்தான். அது எல்லாம் அவங்களுக்குள்ள, நீ ஏன் தலையீடுற? இருக்க கொஞ்ச நஞ்சம் கௌரவத்தையும் கெடுக்காத ராஜா!” என்றார் அழுத்தமாக.

 

“என்ன பெரிய கௌரவம் பெரியப்பா? அக்காவை அடிக்கிறான், எங்காவது இடிச்சு அக்காவுக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆகியிருந்தா அப்போ என்ன செய்வீங்க? இவளுக்கு ஒன்னுன்னா நம்மதான் போய் நிக்கனும். அப்பறம் அப்பா, தம்பின்னு நம்ம என்னத்துக்கு இருக்கோம்?” என்று ராஜதுரையும் எகிறினான்.

 

“இதெல்லாம் பேச நல்லாயிருக்கும்? ஏய் சுமி நீ வா என்னோட, இவன் கெடக்கிறான்” என்று பன்னீர் மகளை அழைக்க, ராஜதுரையோ அக்காவைப் பார்வையில் அடக்கினான்.

 

“அக்கா எங்கேயும் வரமாட்டா பெரியப்பா! அத்தான் தப்புன்னு வந்து மன்னிப்புக் கேட்டாதான் அக்காவை நான் அனுப்புவேன். அக்கா நீ உள்ள போ! என்னை நம்புறதானே?” என்று கேட்டவன் அவனை பார்த்த பெரியவர்களிடம்,

 

“உங்களுக்குக் கஷ்டம்னா நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்,  நான் பார்த்துக்கிறேன்” என்றான் அதுதான் முடிவு என்பது போல்.

 

“வீட்ல ஒருத்தரும் பெரிய மனுஷன் பேச்சைக் கேட்கறதில்ல., எல்லாம் தலையெழுத்து!” என்று கத்திவிட்டு பன்னீர் வெளியே செல்ல, சரோஜாவோ அழுதபடி புலம்பினார்.

 

“இப்ப என்னத்துக்கு பெரியம்மா அழற? அக்காவை அந்தாள் அடிச்சு அவளுக்கு எதாவது ஆகியிருந்தா? அப்படியென்ன மானம் மயிருன்னு! அக்காவை விட வேற எதுவும் எனக்கு முக்கியமில்லை. புருஷன்னா அவன் என்ன வேணும்னாலும் செய்வானா, கேட்க யாருமில்லையா?” என்று ராஜதுரை மூச்சு வாங்கப் பேசினான்.

 

சுமித்ராவைப் பார்க்க, அவளுக்குத் தம்பிக்குத் தன் மீது பாசமென்று தெரியும், ஆனால் இப்படி குடும்பத்தை கூட எதிர்த்து, அதிலும் அப்பாவை எதிர்த்து அவன் முடிவெடுப்பான் என்று நினைத்தே பார்த்ததில்லை. அவளுக்கு தெளிவாக விளங்கவில்லை, அவள் மீதான பாசமே இப்படி அவனை செய்ய வைக்கிறது என்று!

 

“அக்கா! அவர் வந்து மன்னிப்புக் கேட்டு உன்னை அழைச்சிட்டுப் போகட்டும், பசங்களை நானே ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வந்துடுறேன். அப்படியென்ன அந்தாள் வீட்ல நீ அடிவாங்கி வாழனும்?” என்றான் இன்னும் பொறுமலுடன்.

 

“கோவம் வந்தா அவர் அப்படித்தான், மத்தபடி நல்லவர்தான் ராஜா” சுமித்ரா சொல்லவும்,

 

“கோவம் வரவரைக்கும் எல்லாரும் நல்லவந்தான், ஆனா அந்த கோவம் உன்னை எதாவது செஞ்சுட்டா?” என்று கேட்டவன்

 

“படிச்ச பிள்ளைதானே நீ? அண்ணன் தம்பிங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்? முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல நீ” என்று கடிந்தவன் சுமித்ராவின் பிள்ளைகளை அழைக்க வேண்டி மன்னார்குடி சென்றுவிட்டான்.

 

அக்கா மக்களை வீட்டில் கொண்டு வந்து விட்டவன் வயலுக்குச் சென்றான். வயலில் களையெடுத்தவனுக்கு  அக்காவை நினைத்து கவலை. தீடீரென தங்கை மைதிலியை நினைத்தும் கவலை.

 

அவனைப் பொருத்தவரை மைதிலி ஓடியே போயிருந்தாலும், இவனுக்கு மனம் கேளவில்லை. தங்களை மீறி சென்றுவிட்டால் என்ற ஆத்திரம் இருக்குமளவு தங்கையின் பத்திரம் குறித்த கவலையும் இருந்தது.

 

ஊர் பார்க்க திருமணம் செய்துவைத்த சுமித்ராவையே கேட்க ஆள் இருக்கிறது என்று தெரிந்தும் கணவன் என்பவன் அடிக்கிறான், . அப்படியிருக்க மைதிலி சென்று மாதமாகிவிட்டது, அவள் சின்னப்பெண் வேறு, எப்படி இருக்கிறாளோ என்ற கவலை அரித்தது.

 

ஆனால் யாரைக் கேட்க? அந்த அரிச்சந்திரன் மீதும் தாரகை மீதும் கோபமாக வந்தது.

என்னமோ அவர்கள் கொடுத்த தைரியம்தான்,  தங்கை தங்களை விட்டுப்போக காரணம் என்பது போல் ஒரு கோபம். அதே நேரம் அவர்களிடம் மீண்டும் கேட்கவும் தன்மானம் தடைப்போட்டது. இருந்தும் சுமித்ராவைப் பார்த்த பின், மைதிலியின் நிலைக்குறித்த கவலை இன்னும் வலுப்பெற்றது.

 

காதல் என்ற பெயரில் எத்தனை இளம்பெண்கள் ஏமாந்து போகிறார்கள்? எப்படி பெண்களைப் பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள், அதனை நினைக்க நினைக்க ஏற்கனவே வயல் வேலை செய்து வியர்த்து இருந்தவனுக்கு இன்னும் வியர்க்க, அணிந்திருந்த டீஷர்ட்டைக் கழட்டியவன் அவர்கள் வயலின் நடுவே இருந்த போர் செட்டில் இருக்கும் தொட்டியில் குதித்தான்.

 

ஒரு குளியல்போட்டவன், வண்டியில் புல் இருக்கும் சாக்கினை வைத்துக்கட்டிவிட்டு, அவன் வைத்திருந்த இன்னொரு டீஷர்ட் அணிந்து வீடு சென்றான். விளையாடிக்கொண்டிருந்த அக்கா மகள் சந்தியாவிடம்,

 

“சந்தியாம்மா, மாட்டுக்குப் புல் இருக்குன்னு ஆத்தாக்கிட்ட சொல்லிடு” என்று  மாடியேறியவன் உடனே அறிவுக்கு அழைக்க, அவன் அலுவலக வேலையில் இருக்க, வாட்ஸப்பில் வருமாறு செய்தி அனுப்பினான்.

 

ராஜதுரையும் உடனே ஆடியோவாக அக்காவின் பிரச்சனை, மைதிலி குறித்த கவலை எல்லாம் சொல்லியவன்,

 

“அந்த ராங்கிக்கிட்டவும் அவ அண்ணங்கிட்டவும் என்னால பேச முடியாது, நீயே பேசி எங்கிட்ட மைதிலியைப் பேச வைக்க சொல்லு. இல்லை  அவ வீட்டையே அடிச்சு நொறுக்கிடுவேன்” என்று அனுப்ப, அறிவு எல்லாம் படித்தவன் அரை மணி நேரம் கழித்து அழைத்தான்.

“ஏண்டா பங்காளி பேச முடியாதுன்னுதான் மெசெஜ் பண்ண சொன்னா, ஆடியோவா ரெகார்ட் பண்ற? பெரிய எஸ்.பி.பி ரெகார்டிங்தான் செய்வார்” என்று திட்டிய அறிவு,

 

“மவனே நீ அன்னிக்கு அவ தியேட்டரை லைட்டா டேமேஜ் செஞ்சதுக்கே உன்னை இரண்டு லட்சம் கப்பம் கட்ட வைச்சா, வீட்ல ஒரு கூழாங்கல்லு விழுந்தாலும் அண்ணனும் தங்கச்சியும் உன்னை காலி பண்ணிடுவாங்க. அரி ஒன்னும் சாதா லாயர் கிடையாது! வில்லங்கம் பிடிச்சவன்! அதைவிட தங்கச்சிக்கு ஒன்னுனா அவ்வளவுதான் டீ” என்றான்.

 

“அவன் தங்கச்சின்னா மட்டும் அவனுக்குக் கோவம் வருதுல்ல, என் தங்கச்சி மேல எனக்கு அக்கறை இருக்காதா?”

 

“டேய்! நம்ம மாப்பிள்ளை மோகன் நல்லவந்தானாம் டா, நம்ம பயலுவள கேட்டேன் நான்”

 

“வாயை மூடு! யாரு யாருக்கு மாப்பிள்ளை? எனக்கு என் தங்கச்சி நல்லா இருக்கனும் அவ்வளவுதான்! வீட்ல சொல்லாம பொண்ணை இழுத்துட்டுப் போன பரதேசி எனக்கு  மாப்பிள்ளையா? அந்த தராதரம் இல்லாதவன் என் வீட்டு மாப்பிள்ளையா?” என்று ராஜதுரை சீற

 

“கேட்டிருந்தா நீயும் உன் பெரியப்பனும் கேசரியும் பஜ்ஜியும் கொடுத்து நிச்சயம் பண்ணியிருப்பீங்களோ? போங்கடா!” என்று அறிவு அலுத்துக்கொண்டான்.

 

“இங்க பாரு துரை, அந்த பய நம்ம பொண்ணை விரும்பிக் கட்டியிருக்கான், நல்லா பார்த்துப்பான். நீ கவலையை விடு. சும்மா ஜாதி, கௌரவம்னு திரியாத!” என்று அறிவு சமாதானம் செய்ய,

 

“அறிவே இல்லாதவனே! எத்தனை பேரு காதல்னு சொல்லி ஏமாத்துறானுங்க, அதுவும் மைதிலி எல்லாம் விவரம் தெரியாத புள்ள” என்றதும் அறிவுக்கு சிரிப்பு வர அடக்கிக்கொண்டான்.

 

‘விவரமா விவகாரம் பண்ணிட்டு போனவளுக்கு விவரம் இல்லையாம், இதனாலதாண்டா உங்களுக்கு அவ அல்வா கடையே  கொடுத்துட்டுப்போனா’ என்று மனதில் நினைத்த அறிவு,

 

“இப்ப என்னதான் நான் செய்யனும்ங்கிற, என் மேனேஜரை விட உயிர வாங்குற நீ” என்று கடுப்பாகக் கேட்க,

 

“ஒழுங்கா அந்த தாரக, இல்லை அவ அண்ணங்காரங்கிட்ட கேட்டு மைதிலி எங்க இருக்கா சொல்லு” என்றான் ராஜதுரை.

 

அறிவு அரிச்சந்திரனிடம் ஏற்கனவே பேசிவிட்டான். அவன் நிச்சயம் சொல்லமாட்டான் என்று தெரியும். அவனை விடவும் தாரகை இவனிடம் கொஞ்சம் உறவுக்காரன் என்று நன்றாகப் பேசுவாள். அதனால் தாரகையிடம் பேசினான்.

 

அண்ணனுக்கு நண்பனாக இருக்கலாம். ஆனாலும் அறிவு சொல்வது சரியெனப்பட, அன்றிரவே அரிச்சந்திரனிடம் போய் இதுகுறித்துப் பேச, அவனோ போனை எடுத்து காணொளி ஒன்றைக் காட்டினான்.

 

“இது பார்த்தியா தாரா?  ஜாதிக்கயிறுன்னா என்ன தெரியுமா உனக்கு? இவனுங்களுக்குத் தெரியுது பாரு, ஜஸ்ட் லெவந்த் படிக்கிறவங்க. எல்லாம் ஏத்திவிடுறது இந்த அரசியல்வாதிங்க, அப்புறம் அந்த துரை பெரியப்பா போல பழமையான ஆளுங்க, நம்ம ஜெனரெஷன் ஏதோ கொஞ்சம் தப்பிடுச்சு.”

 

“ஆனாலும்  சின்ன பசங்க மனசுல ஜாதிதான் அடையாளம், பெருமைன்னு சொல்லி ஒரு பையனை எப்படி அடிக்கிறாங்க பாரு. இப்போ ஃபேஸ்புக் போ நம்ம ஊர்க்கார பசங்க எல்லாம் பெயருக்குப் பின்னாடி ஜாதி பெயர் போட்டு சுத்துறானுங்க, எல்லாம் இருபது வயசுக்குள்ள இருக்க பசங்க.., ஒரு அதிகாரப்போதையை அவங்களுக்குக் காட்டி உனக்குக் கீழ இருக்கவங்க உனக்கு அடிமைன்னு போதிக்கிறானுங்க”

 

“பன்னீர் பத்தி உனக்குத் தெரியாது, அந்தாள் எல்லாம் என்னைக்கும் மாற மாட்டாரு, அந்த துரை அவங்க பெரியப்பா என்ன சொல்றாரோ அதான் தட்டாம செய்வான். ப்ளடி கேஸ்டிஸ்ட்! அறிவு இவனை நம்பிக் கேட்கிற மாதிரி நீ கேட்காத தாரா” என்று அரிச்சந்திரன் தங்கையிடம் சொன்னவன்,

 

“குழந்தை வந்த பின்னாடி கூட கொல்ற ஆளுங்க, இதனால் மோகனுக்கும் மைதிலுக்கும்தான் பிரச்சனை ஆகும்” என்றான்.

 

“ஓகே அரி, ஆனா எனக்கும் மைதிலி  நல்லாயிருக்கா தெரியனும். நீ அப்புறம் கால் பண்ணி கொடு, வீடியோ கால் நான் அவகிட்ட பேசிட்டா நான் கன்வீன்ஸ் ஆகிடுவேன். மோகன் உனக்குப் ப்ரண்டா இருக்கலாம். ஆனா நாட் ஆல் மென் ஆர் குட், ஸோ நான் பேசனும். ஓகே?” என்று உத்தரவாக சொல்லியவள் அவள் அறைக்குப் போய்விட்டாள். அப்படியே பேசியவள் இந்த விஷயத்தை அறிவிடமும் சொல்ல, ராஜதுரை இவர்களை நம்பவில்லை.

 

அந்த வார இறுதியில் ராஜதுரையின் அக்கா மகள் சந்தியா சைக்கிள் பழக கேட்க, ஒன்பது வயதான அந்த சிறுமியோடு அதிக ஆள் நடமாட்டமில்லாத அவர்கள் தெருவில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தான் ராஜதுரை.

 

“இப்போ நீயே ஓட்டு சந்தியா” என்று அவன் சொல்ல,

 

“நீங்க பிடிச்சிக்கோங்க மாமா” என்று சந்தியா சொல்லவும் சைக்கிளைப் பிடித்துக்கொள்ள, மெல்ல சந்தியா மிதித்தாள்.

 

சில நிமிடங்களில் சந்தியா ஓரளவு ஓட்ட, “நீயே ஓட்டு புள்ள” என்றவனுக்கு போனில்  அழைப்பு வர,  தெருவில்  ஆட்களுமில்லை.

 

சந்தியாவும் உற்சாகமாக சைக்கிள் மிதித்தாள். இருமுறை அந்த தெருவில் முன்னும் பின்னும் சென்றுவர, துரையின் கவனம் இப்போது முழுவதும் போனில் இருக்க, சந்தியா ஒரு ஆர்வத்தில்  தெருவைத் தாண்டி இருபக்கம் பிரியும் சாலையில் வலப்பக்கம் திரும்பினாள். ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த தாரகை சின்ன கிளைச்சாலையில்   இருந்து சைக்கிள் திடுமென வருமென எதிர்ப்பார்க்கவில்லை.

 

சந்தியாவும் பெல் அடிக்காமல் இருக்க, சந்தியா சட்டென திரும்பிவிட ஸ்கூட்டியைப் பார்த்து சைக்கிளில் இருந்து கையைப் பயத்தில் எடுத்துவிட்டாள்.

 

தாரகையோ சிறுமி மீது மோதிவிட கூடாது என்ற எண்ணத்தில் சடன் ப்ரேக் அடிக்க, கீழே இருந்த கற்களினால் தடுமாறி சாலையில் விழுந்தாள். சைக்கிளை கீழே போட்ட சந்தியா வேகமாக தெருவின் முனையில் நின்று போன் பேசிய ராஜதுரையிடம் ஓடினாள்.

 

“மாமா, அங்க ஒரு அக்கா வண்டி வந்துச்சா? நான் பயத்துல சைக்கிளை விட்டுட்டேன். அவங்க என்னை மோதாம இருக்க, கீழே விழுந்துட்டாங்க” என்று பயத்தோடு சொல்ல,

 

“உன்னை நம்ம தெருவை விட்டுப் போக கூடாது சொன்னேன்ல, ஆத்தங்கரை ரோட்ல ஏன் போன?” என்று அதட்டியபடியே தெருவின் இன்னொரு முனை, ஆற்றங்கரை சாலையோடு இணையும் இடம் வந்தவன் தாரகையை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.

 

தாரகையோ பேலன்ஸ் தவறி கீழே விழுந்துவிட்டாள். அங்கிருந்த சிறு சிறு கப்பிக்கல் குத்தி தலையில் அடிப்பட்டு விட, ரத்தம் கசிந்தது. வலியில் அவள் இருக்க, என்ன செய்வதென தெரியாத ராஜதுரை நிற்க, அவனைப் பார்த்தவளுக்கு வலியை மீறிய கோபம். இவன் என்ன உதவாது நிற்கிறானே, வண்டி வேறு அவள் பக்கம் கிடக்க, வலி தாங்க முடியவில்லை.

 

‘ரோட்ல கல்லைப் போட்டிருக்கானுங்க பாரு’ என்று கடுப்பானவள் அவள் ரத்தம் துடைக்கப் பார்க்க கைக்குட்டை கூட இல்லை. நிமிர்ந்து ராஜதுரையைப் பார்த்து,

 

“யோவ்! எரும மாடு மாதிரி பார்த்துட்டு நிக்கிற? அந்த துண்ட கொடு” என்று அவன் தோளில் கிடந்த துண்டை கேட்டாள். ராஜதுரையோ அவள் பேச்சில் அசையாது அப்படியே நின்றான்.

 

✅ End of Episode 6
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 6 Replies
Srichitra Reader 3 months ago

Very nice.

❤️ 1 more...
Jeeona Reader 3 months ago

Uthavi pannama enna pathikittu irukinga durai 😒

😂 1 more...
Surya Palanivel Reader 3 months ago

 எருமைமாடா.. 

சரிதான்.. 
😂 1 more...
Sathya Velusamy Reader 2 months ago

ஏம்மா என்ன பொசுக்குனு எருமைமாடுங்கற...வருவான் இரு

😂 1 more...
Radhi Reader 2 months ago

Nice 

Kavi Natarajan Reader 2 months ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top