Episode 13
அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்
இரவு உணவு முடியவும் ராஜதுரை அம்மாவை அழைத்தான்.
“அம்மா, இன்னும் இரண்டு நாள் கழிச்சு நான் சென்னை போறேன். என் ப்ரண்ட்கு கல்யாணம்” என்றான்.
“உங்கூட படிச்சவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது, உனக்கும் ஒன்னு பண்ணிட்டா நான் சந்தோஷமா இருப்பேன்” என்று அருணா புலம்ப
“அது பொண்ணும்மா, பசங்களுக்கு எல்லாம் இன்னும் பண்ணல. சும்மா நீ கவலைப்படாத” என்றதும் அவனை முறைத்த அருணா
“கவலைப்படாதனு சொல்லிட்டு செய்றதெல்லாம் கவலைப்படவைக்கிற வேலைதான், என்னடா உன் பெரியப்பா உன்னைப் பேசினாரே? உன்னை பஞ்சாயத்துக்கு எல்லாம் போகாத சொல்லியிருக்கேன் தானே?” என்று திட்டினார்.
“அம்மா, அது படிக்கிற பசங்க விஷயம். நீதானே படிப்பு முக்கியம்னு சொல்லுவ, அதான் பேசப்போனேன்” என்று விளக்கமாக அவரிடம் சொல்ல அருணா
“அதுவும் சரிதான்! நீ ஊருக்குப் போறதுக்கு முன்னாடி உன் போட்டோ ஒன்னு எங்களுக்குக் கொடுத்துட்டு போ. நாங்க உன் ஜாதகத்தை தரகர்ட்ட கொடுக்கப்போறோம்” என்றார். இவர்கள் பேசும்போது அங்கு வந்த சரோஜாவும்
“ஆமாடா, நல்ல பளிச்சின்னு சட்டை போட்டு நல்ல படமா எடுத்தாந்து தா” என்றார்.
“சரி பெரியம்மா” என்றதும் அவர் போய்விட அருணா உடனே மெல்லிய குரலில் “இங்க பாருடா, நான் சொல்ற பொண்ணைத்தான் நீ கட்டனும். உன் பெரியப்பா சொல்றாருனு கேட்கக் கூடாது” என்றார் கட்டளையாக.
“இந்த காலத்துல மாமியார் பேச்சைக் கேட்கிற பொண்ணெல்லாம் கிடைக்கிறது கஷ்டம். அப்படியே கிடைச்சா பிடிச்சு வை, நான் கட்டிக்கிறேன்” என்றான் கிண்டலாக.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உன் பெரியப்பாவை நாட்டாமை பண்ற மாதிரி ஒருத்தியைத்தான் நான் பிடிப்பேன்” என்று அருணா சொல்ல
“பெரியப்பா நம்ம நல்லதுக்குத்தானே எல்லாம் செய்றார், நமக்கு என்ன குறை வச்சிருக்கார் மா? ஏன் இப்படி பேசுற?” என்று கேட்டான் ராஜதுரை.
“நான் ஒன்னும் அவரைத் தப்பா சொல்லலையே, எனக்கு வரப்போற மருமக என் பேச்சைக் கேட்கனும்னு நினைக்கிறது தப்பாடா?” என்று அருணா கேட்க
“சரி சரிமா, விடு” என்று அந்த பேச்சை விட்டுவிட்டு மாடிக்குப் போனான். அங்கு போனால் அறிவிடமிருந்து அழைப்பு,
“டேய்! உனக்கு ஓகேதானே? டிக்கெட் புக் பண்ணிடவா?” என்று துரை சென்னை செல்வதற்காக கேட்டான் அறிவு.
“ஓகேடா, புக் பண்ணிட்டு எனக்கு அனுப்பு” என்றவன் “ஜன்னல் சீட்டா போடுடா” என்றான்.
“ம்கும், போடுறேன் டா” என்று அறிவு சொல்ல, வெகு வருடங்களுக்குப் பிறகு அவன் சென்னைப் போகும் பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்தான். ஆனால் ஆவலுக்கு மீறிய அனுபவத்தை அப்பயணம் தருமென அப்போது அவனுக்குத் தெரியாது.
ஊருக்குப் போகும் முன் பன்னீரிடம் சென்று சொல்ல, அவரும் “பார்த்து பத்திரமா போய்ட்டு வா ராஜா, உன் பெரியம்மா போட்டோ கேட்டாளே, கொடுத்திட்டியா?” என்று கேட்டார்.
உடனே அவன் பெரியம்மாவைப் பார்த்தபடி “இப்போ என்ன அவசரம் பெரியப்பா?” என்றதும் பன்னீர் உடனே
“என்னடா அவசரம்? வீட்ல அடங்கி இருக்க வேண்டியதுங்களே அடங்காம இஷ்டத்துக்கு நடக்குறாளுங்க, உனக்கு ஒரு நல்லதைப் பார்த்துப் பண்ணிட்டா என் கடமை முடிஞ்சது.” என்று ஆரம்பித்தார்.
“சரி பெரியப்பா, பெரியம்மாகிட்ட கொடுத்துட்டுப் போறேன்” என்றான்.
அம்மாவிடம் சொல்ல அருணா, “நல்லா ஒரு வாரம் ஜாலியா இருந்துட்டு வாடா, இங்க இருந்தா வேலை இருந்துட்டே இருக்கும்” என்றார் மகனிடம் வாஞ்சையாக.
“ஜாலியா இருந்தா இங்க வேலையெல்லாம் யார் பார்ப்பா?” என்று துரை கேட்க
“படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி வேலைப் பார்த்தா இப்படி வெயிலையும் மழையிலையும் கஷ்டப்படுவியா நீ? உன்னை நல்லா இந்த அறிவு பைய மாதிரி ஐடி கம்பெனில வேலைப் பார்ப்பனு படிக்க வச்சா இப்படி வயல்ல நின்னு கஷ்டப்படுற” என்று எப்போதும் போல் அவர் மனத்தில் இருப்பதை வருத்தமாகப் பேசினார் அருணா.
“என்ன நான் அவனை மாதிரி ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கல்லன்னா சொல்லிக் காட்டுறியாம்மா?” என்று துரை கோபமாகக் கேட்க
“நீ சம்பாரிச்சா உனக்கு நல்ல வரனா பார்க்கலாம். எல்லா பொண்ணும் படிச்சிருக்கு, வேலைக்குப் போகுது. நீ படிச்சிட்டு விவசாயம் பார்க்கிறன்னா பொண்ணு கொடுக்கிறவங்க யோசிப்பாங்கதானே?” என்று அருணாவும் கோபத்துடன் கேட்டார்.
“உன்னை அப்பவே ஐடி வேலை விடாத சொன்னேன் கேட்டியா நீ? உன் பெரியப்பாரும் உன்னை வச்சு வேலை வாங்கலாம்னு இங்கேயே வச்சிட்டார். என் பேச்சை எங்க மதிக்கிற?” என்று திட்டினார்.
ராஜதுரை முகம் அதில் வாடிவிட இன்னும் பேசினால் சண்டையாகுமென்று அமைதியாக நின்றான். அருணாவும் ஊருக்குப் போகும் நேரத்தில் அவனைப் பேச வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
“சரிடா, பார்த்து ஜாக்கிரதையா போய்ட்டுவா” என்று வழியனுப்பினார்.
சரோஜா வாசலுக்கு வந்தவர் வேப்பிலையை அவன் பேண்ட் பாக்கெட்டில் வைக்க சொன்னார்.
“என்ன பெரியம்மா காமெடி பண்ணிட்டு?” என்று துரை கேட்க
“ஊர்த் தாண்டி போற, பேய் பிசாசு எல்லாம் அண்டாம இருக்கும்டா ராஜா. மெட்ராஸ் போய்தான் இதை எடுக்கனும். அங்க இருந்து வரும்போதும் வேற பறிச்சி வச்சிட்டு வா” என்றார் அவர்.
ஒருவழியாக சென்னை செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தான். முதலில் இருந்து இரண்டாவது இருக்கையில் ஜன்னல் அருகே வேறு ஒரு நபர் இருக்க, இவன் அதற்கு அடுத்த இருக்கை. பயணிகள் ஏறியவண்ணம் இருக்க ராஜதுரை கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
தீடீரென அவன் அருகே யாரோ நடந்து செல்வது போல் இருக்க, பார்த்தால் தாரகை.
டீஷர்ட்டில் அவன் இருக்க, தாரகைக்கு சட்டென்று அடையாளம் தெரியவில்லை. பார்த்தவுடன் மனம் தானாகவே ‘பூம் பூம் பூமர்ர்ர்ர்ர்ர்ர்ர்!’ என்று கிண்டலாகப் பாடியது.
ஒன்றும் பேசாமல் ஒரு பார்வையுடன் தாரகை அவனுக்கு எதிர் திசையில் மூன்றாவது இருக்கையில் உட்கார்ந்தாள். ராஜதுரை ஒன்றும் பேசவில்லை என்றாலும் அவள் பார்வையில் பதிந்திருந்த கிண்டலைக் கண்டுகொண்டான். அவளைப் பற்றி தெரிந்தது தானே? அதனால் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
‘கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்னப்பெண் தானா?’ என்று அருண்மொழி குரலில் பாடல் ஒலிக்க, அந்த பேருந்தின் பயணம் திருவாரூரிலிருந்து சென்னைக்குத் தொடங்கியது.
நள்ளிரவு ஒரு மணி இருக்கும். ஏதோ ஒரு சத்தம். வண்டி நின்றுவிட, நல்ல தூக்கத்தில் இருந்து எழவே முடியாது கண்திறந்தாள் தாரகை. பேருந்து பழுதாகிவிட, எல்லாரையும் இறங்க சொன்னார்கள்.
மெக்கானிக்கை அந்த நேரத்தில் அழைத்து வந்து பழுது பார்க்கத் தொடங்கினர். அவசர வேலை இருந்தவர்கள் அந்த வழியே வந்த வேறு பேருந்தில் ஏறினார்கள். சிலர் சாலையில் காத்திருந்தார்கள்.
ஒரு மளிகைக் கடைக்கு வெளியே இருந்த பெஞ்சில் தாரகை போய் உட்கார்ந்து கொண்டாள். துரையும் இதே பேருந்தில் போக நினைத்தவன் அது சரியாக காத்திருந்தான். தாரகையைப் பார்க்க அவள் சுடிதார் ஷாலைப் போர்த்தியவாறு பெஞ்சில் கண்மூடி உட்கார்ந்திருந்தாள்.
தாரகை அருகே நின்றிருந்த ஒருத்தன், புகைப் பிடித்தபடி அருகே இருந்தவனிடம் பேசிக்கொண்டு இருந்தான். அவன் விடும் புகை தாரகை வரை வந்தது, அவள் முகம் பார்க்க உறங்கிக்கொண்டிருந்தாள்.
என்ன இருந்தாலும் தனக்குத் தெரிந்த பெண் என்பதால் தனியே விட மனமில்லாது இவனும் அவளருகே போய் உட்கார்ந்து கொண்டான். யாரோ அருகே உட்காரும் அரவத்தில் தாரகை விழித்துக்கொண்டாள்.
விழித்தவள் துரையைப் பார்த்து,
“என்ன பாடிகார்டா?” என்றாள் கிண்டலாக. இவன் ஒன்றும் பேசாமல் இருக்க, அந்த சிகரெட் புகை தாரகைக்குப் பிடிக்கவில்லை. கோபத்துடன் எழ,
“தாரக! உனக்கு ஒத்துக்கலன்னா தள்ளிப்போகலாம். அவனை எதுவும் பேசிடாத” என்றதும் துரையை முறைத்தாள்.
“அவன் பப்ளிக்ல ஸ்மோக் பண்றது தப்பில்லை, கேட்டா நான் தப்பா?” என்று துரையிடம் கேட்க
“தப்புனு தெரிஞ்சு செய்றவன்ட்ட நீ கேட்டு என்ன ஆவப்போகுது? தொடைச்சு விட்ரனும்” என்றான் எளிதாக.
அந்த புகையில் உட்காரவும் முடியவில்லை. வேறு இடமுமில்லை. உறக்கம் வேறு வர,மெல்ல பேருந்து இருக்குமிடம் சுற்றியே அந்த சாலையில் நடந்தாள் தாரகை.
தாரகையின் துணிச்சல் அவனுக்கு வியப்பைத்தான் தந்தது.
‘நடுராத்திரியில இவ என்ன ஜாலியா வாக்கீங் போறா?’ என்று பார்த்தவன் அவளோடு இணைந்து நடந்தான்.
“அடடா! பூமர் சார் பொண்ணுங்களுக்கு அவங்களைப் பாதுக்காக தெரியும். எனக்கு ஒன்னும் பயமில்லை. நீங்க போய் ஜாலியா உட்காருங்க” என்றாள் தாரகை.
“அங்க பாரு!” என்று அவன் காட்டிய திசையில் ஒரு பாம்பு ஓடியது. ஒரு பக்க சாலையில் இருந்து மறுப்பக்கம் இருந்த வயலில் நுழைந்தது அந்த பாம்பு.
“பாம்பு!!” என்ற அவள் குரலில் பயம் இருந்தது.
“இப்படி நடுராத்திரி வாக்கிங் போகும்போது கவனமா போகணும். நீ பாட்டுக்கு ஜாலியா பெஞ்சில்ல உட்கார்ந்து தூங்குற, சுத்தி நாலு பேர் உன்னைப் பார்க்கிறானுங்க, பஸ் ரெடியானதும் விட்டுப்போனா கூட தெரியாது போல உனக்கு. அப்படி தூங்குற” என்று திட்டியவன்
“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க, தெரிஞ்ச பொண்ணோ தெரியாத பொண்ணோ இந்த மாதிரி தனியா இருக்கும்போது என்னால கண்டுக்காம போக முடியாது.” என்றான்.
“அய்யோ! அரி மாதிரி பேசாதீங்க நீங்க” என்றாள் சலிப்பாக.
“அரிச்சந்திரனா? அப்போ உன் அண்ணனும் பூமரா?” என்றான் ராஜதுரை கிண்டல் சிரிப்புடன்.
“அடங்கேப்பா! அவனும் இப்படித்தான் சில டைம் சொல்லுவான். விழித்திரு, தனித்திருன்னு! ஆனா உங்களவு பூமர்லாம் கிடையாது.” என்றதும்
“என்னை மாதிரி இருந்துட்டுப் போயிடலாம். பெண் சுதந்திரம் முக்கியம்னு பேஸ்புக்ல போஸ்ட் போட்டு, இன்பாக்ஸ்ல போய் தப்பா பேசுற ஆள் இல்லை நான்” என்றான் ராஜதுரை கடுப்பாக.
“நான் உங்களைத் தப்பான ஆள்னு சொல்லவே இல்லையே. இன்பாக்ஸ்ல போய் டோலிஸ்க்கு ஹாய் சொல்றதுக்கு எல்லாம் நீங்க சரிப்பட மாட்டீங்க” என்றாள் சிரிப்புடன். அவள் சொன்ன பாவனையில் துரைக்கும் சிரிப்பு வர
“அப்படியா சொல்ற? நான் இப்போ என் டோலியோட கல்யாணத்துக்குத்தான் சென்னை போறேன் தெரியுமா?” என்று கேட்டு தாரகைக்கு அதிர்ச்சிக் கொடுத்தான் ராஜதுரை.
முதல்முறையாக இருவரும் புன்னகையுடன் இருக்க, அவனும் கிண்டலாகப் பேச, அவளிடம் நல்லவிதமாக துரை பேச, தாரகையும் சகஜமாகப் பேசினாள்.
“என்ன கிண்டல் பண்றீங்களா?” என்று தாரகை கேட்க,
“அம்மாடி! நீ என்ன என்னை நினைச்ச?” என்று சிரித்தான் துரை. சட்டென அவள் அகத்தில் அழகாய் ஒரு நினைவுத்தூறல் பொழிந்தது. அவள் அப்பாவின் குரல் ‘அம்மாடி!’ என்று காதில் கேட்டது. இனித்த கணமே கனக்கவும் செய்தது அந்த நினைவு!
“என் காலேஜ் ப்ரண்ட் சந்தியாக்குக் கல்யாணம். அதுக்குத்தான் போறேன்” என்றதும் தன்னை திடப்படுத்தியவள்
“நான் நீங்க பொண்ணுங்க கிட்ட எல்லாம் பேச மாட்டீங்க நினைச்சேன். இல்லைன்னா உங்க ப்ரண்டும் உங்களை மாதிரி கலாச்சார காவலாளியா?” என்று கேட்டாள் தாரகை.
துரை அவளை முறைத்தவன் “அவ போல்டான்னா பொண்ணுதான், படிச்சிட்டு வேலைப் பார்க்கிறா. ஆனா நாங்க சொன்னா நல்லதுக்குனு புரிஞ்சிப்பா, சும்மா எல்லாரையும் நம்பிட்டு இப்படி நடுராத்திரியில சிகரெட் பிடிக்கிறவன்ட்ட சண்டை போட மாட்டா” என்றான் கடுப்பாக.
“ஓஹ், என்னதான் படிச்சு வேலை செஞ்சு தைரியமா இருந்தாலும் உங்க பேச்சை கேட்டா, அதாவது ஆண் பேச்சை கேட்டு நடந்தா நல்ல பொண்ணு, இல்லைன்னா கெட்ட பொண்ணா. அப்போ நான் கெட்ட பொண்ணாவே இருக்கேன்” என்றாள் தாரகையும் கோபத்துடன்.
ராஜதுரைக்கு எரிச்சல் வந்தது.
‘இவகூட எப்ப பேசினாலும் பஞ்சாயத்துதான்!’ என்று எண்ணம் எழுந்தது.
அந்த எண்ணத்தில் “தாரக! நைட் மணி ஒன்றரை ஆகுது. இப்ப போய் சண்டை போடனுமா? நீ கெட்டப்பொண்ணுன்னு நான் எங்க சொன்னேன்? கொஞ்சம் ப்ராக்டிலா இருனு சொன்னேன். அவ்வளவுதான்!” என்றான் பொறுமையாகவே.
அவன் சொல்வது சரிதானே, நள்ளிரவு ஒன்றரை மணிக்கு அவனுடன் சண்டை தேவையா? ஏற்கெனவே பஸ் ரிப்பேர், உறக்கம் வேறு கெட்டிருக்க, இதில் இவனுடன் சண்டை எதற்கு என்று நினைத்தவள்
“நீங்க கல்யாணத்துக்குப் போகணும்னு சொன்னீங்க, வேற பஸ்ல போயிருக்கலாமில்ல” என்று சாதாரணமாக விசாரித்தாள்.
“நாளைக்கு சாயங்காலம் ரிசப்ஷன், அதாவது இப்போ விடிஞ்சிருச்சுல, இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு மேல. கல்யாணம் அடுத்த நாள். அதான் வெயிட் பண்ணியே போயிக்கலாம்னு. வேற பஸ்ல சீட் கிடைக்காது. அதான்”
“அதனாலதானா? நான் கூட உங்க ஊர்க்கார பொண்ணு தனியா நிக்கிறா, அவளுக்குத் துணையா இருக்கீங்க நினைச்சேன்” என்றாள் தாரகை குறும்பாக.
“அப்படி சொன்னா அந்த பொண்ணுக்குப் பிடிக்காது, அதான் சொல்லல” என்றான் ராஜதுரை.
“ஏன் பூமர் சார்? பொண்ணுங்களைப் பாதுகாக்கிறதை விட்டு அவங்ககிட்ட தப்பா நடக்காதனு பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்கலாமில்ல” என்று தாரகை கேட்க
“பூமர்னு தான் சொல்லிடுறியே, அப்புறம் என்னதுக்கு ஸார்லாம்? அப்புறம் என்ன அதிசயம் மரியாதையா வருது உன் பேச்சு?” என்று கேட்டான் துரை.
“சரி உங்களுக்குக் கொடுக்கத் தெரியல, எனக்குத் தெரியுது கொடுக்கிறேன்” என்றாள் கெத்தாக.
“மத்த பசங்களை என்னால திருத்த முடியாது! ஆனா நான் ஒழுங்கா இருப்பேன். எனக்குப் பையன் பொறந்தான்னா அவனை நல்ல புத்தி சொல்லி வளர்ப்பேன். அவ்வளவுதான் என்னால முடியும்” என்றான்.
அவன் அப்படி சொன்னதே தாரகைக்குப் பிடித்தது.
“ஆனா அவனை ஜூனியர் பூமரா வளர்த்துவிடாதீங்க ப்ளீஸ். ஒழுக்கமா இருக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். அது மாதிரி கொஞ்சம் பெரிய மனசோட இருக்கணும்ல.” என்றாள் தாரகை பொறுமையாக.
“ரொம்ப பெரிய மனசோடவே வளர்க்கிறேன்” என்றான் துரை சிரிப்புடன். இருவரும் பேருந்து அருகே சென்று எப்போது தயாராகும் என்று கேட்டுவிட்டு, சாலையின் ஓரத்தில் நின்றனர்.
சில பேருந்துகள் அந்த சாலை வழி போக, மிகவும் நிசப்தம். சிலர் தாமதம் என்பதால் வேறு பேருந்தில் மாறி சென்றிருக்க, பதினைந்து பேர் இருப்பார்கள். அதில் சிலர் குடும்பமாக, தனியாக நின்றிருக்க, இவர்கள் ஜோடியாக நின்றார்கள்.
தாரகை “கால்வலிக்குது, நான் போய் உட்காரேன்” என்று மீண்டும் அந்த மளிகை கடை வெளியே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தாள். துரையும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தவன், போனை எடுக்க அவன் பெரியம்மா கொடுத்த வேப்பிலை கீழே விழ,
“ஏதோ விழுந்துச்சு” என்று தாரகை சொல்ல, துரை குனிந்து அதனை எடுக்க, பேருந்தின் வெளிச்சத்தில் வேப்பிலை நன்றாகத் தெரிந்தது.
“அது எங்க பெரியம்மா நடுசாமத்துல பேய் பிசாசு தொல்லை இருக்கும்னு வச்சிக்க சொல்லி கொடுத்தாங்க” என்று பேச்சுவாக்கில் சொல்லிக்கொண்டே தாரகை முகம் பார்க்க
“அப்போ உங்களை விட அதான் எனக்கு சேஃப்டி தரும்” என்றாள் சிரிப்புடன்.
“எங்க பெரியம்மாவுக்கு இதெல்லாம் நம்பிக்கை. சொன்னாலும் கேட்காது” என்றான்.
“எங்க ஆத்தா கூட இப்படித்தான்” என்று தாரகை சொல்ல தலையசைத்தவன்
“பாட்டு போட்டா டிஸ்டர்ப் ஆகுமா உனக்கு?” என்று கேட்க,
“போடுங்க, இல்லனா தூங்கிடுவேன்” என்றாள்.
‘பூமர் ப்ளேலிஸ்ட் எப்படி இருக்கப்போகுதோ?’ என்று நினைத்தபடி செவியைத் திறந்து வைத்திருக்க,
‘பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா’ என்று ஜெயச்சந்திரன் குரல் ஒலிக்க, தாரகையின் பார்வை தணிந்த நிலவின் மேல் தன்னால் சென்றது. அந்த இருள், பேருந்து வெளிச்சம், அமைதி! கூடவே மக்களின் கிசுகிசுப்பான பேச்சுக்குரல் அந்த நேரம், அதில் தவழ்ந்த இசை. புது அனுபவம் அவளுக்கு!
இதில் அவளுக்குப் பிடித்த பாடல் வேறு.
“எனக்குப் பிடிச்ச பாட்டு!” என்றாள் ஒரு துள்ளலுடன். அவன் வைத்த பாட்டு கூட பிடிக்கிறதே என்ற நினைத்தவளுக்கு அவனை அதிகமாய் தன் அகத்திற்குப் பிடிக்க போகிறது என்று அந்த நேரம் கொஞ்சமும் யோசனை இல்லை. ஜெயச்சந்திரன் பாடிக்கொண்டே இருந்தார்.
‘புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா!’ என்று பாட தாரகை துரை இருவரின் மனமும் இன்னிசையில் லயித்து இருக்க, அந்தகாரத்தில் அந்த நேரம் லாளிதம்!
✅ End of Episode 13
Very nice
பூமர் சார்
Nice