Episode 18

தாரகைக்கு ராஜதுரையின் மீது சமீபத்தில் வந்திருந்த நல்ல எண்ணம் எல்லாம் காற்றில் போனது அந்த நொடி.

‘அன்னிக்குப் பெரிய இவன் மாதிரி பேசினான், எல்லாம் ட்ராமா! அந்த பாண்டியனைப் பார்த்ததும் பல்லைக் காட்டிட்டுப் போறான் பாரு’ என்று அவனை கடிந்தவளுக்குக் காரம் குறையவில்லை.

‘எப்படி இப்படி பண்ணலாம் இவன்?’ என்ற நினைப்பில் உணவு கூட உள்ளே இறங்கவில்லை. கோழி கறி பிரட்டல் கப்பில் வைக்கப்பட, அந்த வாசம் கொஞ்சம் அவளை நிதானிக்க வைத்தது. ஒரு அமைதியைக் கொடுத்தது.

ரசமும் சோறும் அற்புதமாக சங்கமித்திருக்க, காரமாய்க் கோழி கறி பிரட்டல் கூட சேர்ந்திருக்க, அந்த சங்கமத்தில் மனம் கொஞ்சம் சாந்தமானது.

“அவன் ஒர் வேஸ்ட் வெங்காயம்! அவனுக்காக சாப்பாடை மதிக்காம இருப்பியா? ரிலாக்ஸ்! எவ்வளவு ஆசையா எதிர்ப்பார்த்த கிடா விருந்து இது, எஞ்சாய் பண்ணனும்” என்று தாரகை தன் மனதுக்குக் கட்டளை பிறப்பித்து உணவினை ரசித்து உண்டாள்.

அதன் பின் அவள் பார்வை ராஜதுரையின் மேல் விழவே இல்லை. ராஜதுரைக்கு அவள் பார்வை முதலில் புரிய சில நொடி சஞ்சலமாக இருந்தாலும் பின் கோபம் வந்தது.

‘என்ன இவ தொட்டத்துக்கெல்லாம் மூஞ்சு காட்டுறா, விருந்துக்கு வந்தவரை வான்னு சொல்றது குத்தமா? பெரிய இவளாட்டம் சீன் போடுறா, பார்க்கலன்னா போடி. நீ முறைச்சா உன் பேச்சைக் கேட்கனுமா? இவ என்ன எனக்கு ஒட்டா உறவா?’ என்று அவன் மனதை கடிவாளமிட்டு பாண்டியனை பந்தியில் உட்கார வைத்தான்.

ராஜதுரையின் நண்பன் வீடு, அந்த கட்சி சார்ந்தவர்கள் என்பதால் பாண்டியனுக்குக் கிடா விருந்திற்கு அழைப்பு வைத்திருந்தார்கள்.

அதுதான் அவனுக்குக் கோபம்.

‘இவ பங்காளி அவனைக் கூப்பிடுவான், அவன் வீட்டு விருந்துல தின்பா, ஆனா என்னை மட்டும் முறைப்பா, லூசு!’ என்று மனத்தில் வறுத்தான்.

என்னவோ நினைத்துக் கொள் என்று நினைத்தாலும், நினைவினை ஒதுக்கினாலும் அவளால் ஒரு கோபம் மனத்தில் கனன்றது.

தாரகை வீட்டுக்கு வர ராமசாமி பேத்தியிடம் “என்னடா ராஜாத்தி! இன்ஸ்பெக்டர் வீட்டு விருந்து நல்லா இருந்ததா?” என்று கேட்க

“சூப்பர் தாத்தா, இன்னும் கையில் வாசம் வருது” என்றாள் அவள் கையினை வாசம் பிடித்தபடி.

அரிச்சந்திரன் அறையில் லைட் எரிய,

“அந்த தடியன் வந்துட்டானா?” என்று கேட்டபடி அவன் அறை வாசலில் நின்று கதவைத் தட்டினாள்.

“வக்கீல் சார் வரலாமா?” என்று கேட்க

“வா தாரா” என்றவள் அண்ணனிடம் அன்று நடந்த அத்தனையும் ஒப்பித்து வழக்கம்போல் ராஜதுரையை வறுத்தெடுத்துவிட்டு அண்ணன் முகம் பார்க்க, அவனோ அவளுக்குப் பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன அரி முறைக்கிற?” என்று கேட்க

“நாட்டுவெறி, மதவெறி, இனவெறி மட்டும்தான் கேடு தரும் கிடையாது, அன்புவெறி, நியாயவெறி எல்லாம் அதனிலும் அதிகமான அழிப்புகளை ஏற்படுத்தும்னு ஜெயகாந்தன் சொல்லியிருக்கார்.” என்று அரிச்சந்திரன் சொல்லவும்

“இதை ஏண்டா எங்கிட்ட சொல்ற?” என்று கேட்டாள் தாரகை.

“பின்ன அவனுக்கு ஜாதிவெறின்னா, உனக்கு நியாயவெறி இருக்கே!”

“அதுல என்ன தப்பு இருக்கு? நியாயமா நடக்கிறது தப்பா?”

“தப்பில்லை, ஆனா அது உன்னோட இருக்கணும்! உன் லிமிட்ல நீ இரு தாரா. கொஞ்சமாச்சும் ப்ராக்டிகலா யோசிக்கிறியா? பாண்டியனை சாப்பிட சொன்னா என்ன தப்பு? அவன் சொன்னாலும் உனக்கு என்ன வந்துச்சு?”

“ஒருத்தனுக்கு எங்க பார்க்கணும்னு சொல்லலாம், எதைப் பார்க்கணும்னு அவன்தான் முடிவு பண்ணனும்னு அலெக்ஸான்ட்ரா ட்ரன்ஃபோர் சொல்லியிருக்கார். அதையே உனக்கு சொல்றேன் தாரா! அவனை எங்காச்சும் பார்த்தா நார்மலா பேசிட்டு இருந்த, அப்படியே இரு. பிடிக்கலைன்னா பேசாத! அவன் என்ன செய்யணும்னு நீ ஏன் டிக்டேட் பண்ற?”

“இப்ப நீ மட்டும் என்னை டிக்டேட் பண்ற?” என்று தாரகை முகம் சுருக்கி அண்ணனைக் கேட்க

“ஏன்னா நீ என் தங்கச்சி டி” என்று அவள் தலையில் குட்டியவன்

“அவன் யாரு உனக்கு? இந்த மைதிலி, மோகன், துரை எல்லாரையும் தள்ளி வை. அந்த பிரச்சனை ஆரம்பிச்சதிலிருந்துதான் நீ இப்படி டென்ஷன் ஆகி அவனைப் பத்தி பேசுற, அவனோட நார்மலா பேச முடியலன்னா, பேசாத! கொள்கை ரீதியா எதிர் எதிரா இருக்கவங்க கூட சிலருக்கு நட்பு வச்சுக்க கஷ்டம்! உனக்கு அது வரலைன்னா வச்சிக்காத.”

தாரகையை அரிச்சந்திரன் நன்றாகத் திட்ட,

“போடா! ஏதோ எனக்குப் பிடிக்கலன்னு உங்கிட்ட சொல்ல வந்தா ஓவரா பண்ற” என்றவள் அவள் அறைக்குச் செல்லப் போனாள்.

“ஏய்! ஒன்ற ஜான்! இங்க வாடி! நீ நல்லா கிடா வெட்டுல வெட்டிட்டு வந்துட்ட, எனக்கு சாப்பாடு எங்க? போய் தோசை சுட்டு வா” என்றதும் முறைத்தாலும் அண்ணனுக்காக தோசை சுட்டுக் கொடுத்தாள்.

ராஜதுரை விருந்து முடிந்து வீட்டுக்குச் சென்றான். அறைக்குச் சென்றவன் போனை சார்ஜில் போடும்போது அங்கே மேஜைக்கு அருகே இருந்த குடையைப் பார்த்தவனுக்கு ஓய்ந்திருந்த கோப மழை மீண்டும் அகவானில் பொழிந்தது.

‘இந்த குடையை முதல்ல அவகிட்ட கொடுக்கணும், அப்புறம் அவ வீட்டு சொத்தை எடுத்த மாதிரி லா பாயிண்ட் பேசுவா’ என்று கடுப்பாக நினைத்தவன் அன்று முழுவதும் வேலை செய்த அலுப்பினால் மெல்ல கண்ணயர்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து, ஆற்றங்கரை வழியே வந்து கொண்டிருந்தான் ராஜதுரை. ராமசாமி அவர்கள் வீட்டு வாசலில் இருந்து சில அடி தூரத்தில் நடந்துகொண்டிருந்தார், ராஜதுரை அவரை பார்த்தவன் மரியாதைக்காக வண்டியை நிறுத்தி

“எப்படி தாத்தா இருக்கீங்க?” என்று நலம் கேட்டான்.

“நல்லாயிக்கேன் டா, நீ எப்படி இருக்க? அன்னிக்கு ஏண்டா மழையில போன, ராஜாத்தி அப்புறம்தான் சொல்லிச்சு” என்றதும்தான்

‘குடையை விட்டு வந்துட்டேனே, இருந்திருந்தா அந்த வாயாடிக்கிட்ட மாட்டாம தாத்தா கிட்ட கொடுத்திருக்கலாம்’ என்று அவன் மனத்தில் நினைக்க,

“என்னடா பகல்லயே சொப்பனம்மா(கனவா?” என்று ராமசாமி தாத்தா விளையாட்டாக அவர் வாக்கிங் ஸ்டிக் வைத்து துரையின் முதுகில் அடித்ததில் அவன் கவனம் திரும்பியது.

“ஒன்னுமில்ல தாத்தா! ஆமா நீங்க ஏன் ரோட்டுல நிக்கிறீங்க?” என்று அவரிடம் கேட்க

“சும்மா வீட்லயே இருக்கேன்ல, அதான் அந்தியான்னா இப்படி கொஞ்ச தூரம் நடக்கிறது” என்றார்.

“இந்த அஞ்சக்காரமூட்டு கணேசன் எப்படி இருக்கான்?” என்று அவரின் நண்பரை விசாரித்தார்.

“யாரை சொல்றீங்க?” என்று கேட்டான்.

அவர் விளக்கிக் கொண்டிருக்க, கிட்டதட்ட பத்து நிமிடம் ஊரில் உள்ள பெருசுகள் அத்தனை பேரையும் விசாரித்துத் தகவல் பெற்றுக்கொண்டிருந்தார் ராமசாமி. எல்லாரையும் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் வயது காரணமாக முடிவதில்லை. இப்படி போவோர் வருபவரிடம் அவர் காலத்து ஆட்களைப் பற்றி பேசுவது அவருக்கு ஒரு அலாதி திருப்தி!

தாரகை வீட்டில் இருந்தவள் தாத்தா வழக்கமாக வரும் நேரத்திற்கு வராது இருக்க, வாசலில் வந்து எட்டிப் பார்த்தாள். துரையுடன் அவர் பேசிக்கொண்டிருக்க,

“இந்த தாத்தா யாரைப் பார்த்தாலும் கூப்பிட்டு வச்சுப் பேசும்” என்று நினைத்தவள்

“தாத்தா!!!!!!” என்று கத்தினாள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் ராமசாமிக்குப் பேத்தியின் அழைப்பு காதில் விழவில்லை. துரை அவள் வாசலில் வந்து நின்றதுமே கவனித்து விட்டான். அவள் உடையினைப் பார்க்க, நைட்டிப் போட்டிருந்தாள்.

தாத்தா காதில் விழவில்லையென்றதும் அவள் அவர்களை நோக்கி நடந்தாள்.

“நைட்டியோட வரதைப் பாரு” என்று துரைப் பல்லைக் கடித்தான்.

“உங்க பேத்தி கூப்பிடுறா பாருங்க தாத்தா” என்று ராமசாமியிடம் சொல்ல, அவரோ

“இந்த சிங்கப்பூர்க்காரன் என்ன பண்றான்?” என்று வேறு உலகில் இருந்தார். தாரகை அருகே நெருங்கி வர, இவன் பார்வையும் பார்த்தாள்.

“வா தாத்தா” என்று அவள் அழைக்க ராமசாமி

“வரேண்டா” என்று சொல்லி முன்னால் நடந்தார். அவனைக் குற்றவாளி போல் பார்க்கும் பாவையின் அந்த பார்வை பிடிக்கவில்லை அவனுக்கு. சரிதான் போடி என்று சமாதானம் ஆன மனது இப்போது சரிய தொடங்கியது. அவளிடம் பேச நினைத்தான்.

“தாரக நில்லு” என்று தாரகையை அழைத்தான் ராஜதுரை. தாத்தாவைப் போக சொன்ன தாரகை என்ன “என்று?” கேட்டு அவனிடம் சென்றாள்.

“எவன் விருந்துக்கு பாண்டியன் அண்ணனைக் கூப்பிட்டானோ அவன் வீட்டு விருந்துல நல்லா கட்டு கட்டுவா, என்னைப் பேசுவா. லூசு!” என்று முணுமுணுத்த துரை வண்டியை ஸ்டார்ட் செய்ய,

“என்னை லூசுன்னு சொல்லுவியா?” என்று அவனிடம் சண்டைக்குப் போனாள் தாரகை.

“உன்னைத் தாண்டி சொன்னேன்” என்றான் துரை நக்கலாக.

தாரகை முறைக்க “இப்படி முறைச்சா நான் பயப்படுவனா? உன் பங்காளி வீட்டு விருந்துதானே அது? அவனுங்க தானே எல்லாரையும் அழைச்சிருப்பாங்க. என்னமோ என் வீட்டு விருந்து மாதிரி என்னை முறைக்கிற, பாண்டியண்ணன் பண்றது முழுக்க அரசியல்னு எனக்குத் தெரியுது. அதுக்காக வரவனை வராதனு சொல்ல முடியுமா?” என்று எரிச்சலாகக் கேட்டவன்

“சில நாள் நல்லா பேசுற, நீ சொல்றதைப் பொறுமையாய்க் கேட்டு நானும் சரி நம்ம தப்பு போல மாறலாம் நினைச்சா, ரொம்ப ஓவரா பண்ற. இந்த முறைக்கிறது நக்கல் பேச்சு எல்லாம் எங்கிட்ட வேண்டாம்” என்றான் அழுத்தமாக.

“ஏதோ ப்ரண்டா உங்களை நினைச்சதால அப்படி நடந்துக்கிட்டேன், இனிமே நீங்க பாண்டியன் என்ன பாகிஸ்தான் டெரரிஸ்டோட கூட்டு நாட்டு வச்சாலும் நான் கேட்க மாட்டேன்” என்றதும் ராஜதுரையும் குளிர்ந்து போனான்.

“சரிங்க ப்ரண்ட்! ஆனா கொஞ்சம் டைம் கொடுங்க! ஒரே நாள்ல திருந்திட்டா வெள்ளம் வரும், உளுந்து போட்டுருக்கேன்” என்று சொன்னவன் புன்னகையுடன் வண்டியை செலுத்தினான். அதற்கு மேல் பேசினால் சண்டை வரும் என்ற பயம் அவனுக்கு.

துரைக்கு தாரகையிடம் பேசும்போது ஒரு இதமான உணர்வு இருந்தது, அது இசையினை பொழிந்தது. ஆனால் அவளுடன் சண்டை வந்தால் இப்போதெல்லாம் அதனை கடக்க முடியாது ஒரு சஞ்சலம். அதனால் அவள் கொஞ்சம் நன்றாகப் பேசியதும் பேச்சை வளர்க்காமல் கிளம்பினான். தாரகையும் அவன் பேச்சில் மனம் லேசானவள் வீடு நோக்கி நடந்தாள்.

அவளைப் பற்றி நினைத்தால் இனித்தால் போதும் என்ற எண்ணமே துரைக்கு. ராஜதுரை அவளை சந்திக்கக் கூடாது என்று தவிர்த்தாலும் ராஜகோபாலன் விடவில்லை!

ராஜதுரை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி செங்கமலத் தாயார் ஆலயத்திற்கு வந்திருந்தான். தாரகையும் அங்கே ஒரு தோழியை சந்திக்க வந்தவள் அப்படியே கோவிலுக்கு சென்று வரலாம் என்று நினைத்து வந்திருக்க, ராஜதுரையை எதிர்ப்பார்க்கவில்லை.

“துரை! இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டாள் தாரகை.

துரை தாரகையை எதிர்ப்பார்க்கவில்லை. அவளைப் பார்த்து தலையசைக்க

“யாரைப் பார்க்கிற?” என்று வந்து நின்றாள் சந்தியா, ராஜதுரையின் தோழி.

“அது சொந்தக்கார பொண்ணு” என்று அவளிடம் சொல்ல தாரகை அதற்குள் அவர்கள் பக்கம் வந்துவிட்டாள்.

“இவங்க யாரு?” என்று துரையிடம் கேட்க

“சந்தியா, என் ப்ரண்ட்” என்று அவளை அறிமுகம் செய்தான்.

“நான் தாரகை, நானும் இவருக்குப் ப்ரண்ட்” என்று புன்னகையுடன் சந்தியாவிடம் சொன்னவள்

“உங்களுக்கு ரிசண்டாதானே மேரேஜ் ஆச்சு, மை விஷஸ்” என்று தாரகை சொல்ல

“ஓஹ், அப்போ இவனை பூமர்னு சொன்ன பொண்ணு நீதானா?” என்று தாரகையிடம் கேட்டுவிட, துரை முறைத்தான். சந்தியா அத்துடன் விடாது நண்பனைக் கேலி செய்ய

“உன்னைக் கூட வாயாடி சொன்னான் இந்த பூமர்” என்று துரையை மேலும் கோர்த்துவிட,

தாரகை உடனே “நான் இதைவிட அவரை பேசுவேன், சோ நோ ப்ராப்ளம்” என்றாள் கிண்டலாக.

“உன்னைப் பத்திதான் துரை ஓயாம பேசுவான்” என்று வேறு சந்தியா போட்டுக்கொடுக்க, துரை சந்தியாவிடம்

“வாயை மூடிட்டு போய் ஜகன் அண்ணா எங்கனு பாரு” என்று அதட்ட

“இருடா! உன்னை தைரியமா பூமர்னு ஒரு பொண்ணு சொல்லியிருக்காங்க, நான் தாரகையைப் பாராட்ட வேண்டாமா?” என்று கேட்டு வெறுப்பேற்ற, தோழி என்று இவளிடம் பேசியது தவறு என்று ராஜதுரை நன்றாக உணர்ந்தான்.

“இவங்க கும்பகோணத்துக்கு ஏதோ பூஜையா வந்தாங்க, அப்படியே இந்த கோவிலும் பார்க்கணும்னு சொன்னதால அழைச்சிட்டு வந்தேன் தாரக, நீ போய் சாமி கும்பிடு” என்று அவளை அனுப்ப பார்க்க,

“டேய்! நீ ஜகனோட பேசிட்டு இருப்ப. எனக்குத் தாரகைக் கம்பெனி கொடுக்கட்டும், உனக்குப் ப்ராப்ளம் இல்லையே?” என்று சந்தியா கேட்க, தாரகை மறுக்கவில்லை.

ராஜதுரைதான் ‘இரண்டும் ஓவர் வாய், என்னை ஓட்டப்போதுங்க’ என்று மனத்தில் புலம்பியபடி அவர்களுடன் சாமி தரிசனம் செய்ய சென்றான்.

✅ End of Episode 18
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 4 weeks ago

Very nice. 

Mrs Beena loganathan Reader 4 weeks ago

புரியாததெல்லாம் 

புரியும்போது 
பாவை பக்கம் மனம் சாயத் தானே செய்யும்
Radhi Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top