Episode 4

தன் தங்கையின் திருமணத்திற்குச் சாட்சி கையெழுத்துப் போட்டுவிட்டு, தன்னைக் கண்டும் அஞ்சாமல் எத்தனை திமிராய் நிற்கிறாள் இவள்? என்று அவ்வளவு ஆத்திரத்துடன் ராஜதுரை தாரகையை நெருங்க,  எதாவது பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்த அறிவு, துரைக்கு முன் தாரகையிடம் நின்றான்.

“தாரா, உனக்கு மைதிலி மோகனை லவ் பண்ற விஷயம் தெரியுமா?” என்று கேட்க

“என்னடா? இவகிட்ட பொறுமையா பேசிட்டு இருக்க? இவளும் இவ அண்ணங்காரனும் சேர்ந்துதானே இந்த வேலைப் பார்த்து இருக்காங்க” என்று கொந்தளித்தான் ராஜதுரை.

எத்தனை மரியாதை! எவ்வளவு நற்பெயர்! மொத்தமாகக் குடும்பத்தின் கௌரவம் வேரோடு சரிந்த நிலை. அதுவும் அவர்கள் வீட்டுப்பெண் வீட்டை மீறி, அவர்கள் சமமாக  நினைக்காத ஒருவனுடன் திருமணம், நினைக்க நினைக்க மனம் எரிந்தது!

“ஏன் தாரா இப்படி செஞ்ச? எவ்வளவு அவமானம் தெரியுமா இது? ஒருவார்த்தை எங்கிட்டவாச்சும் சொல்லியிருக்கலாமேம்மா நீ?” என்று அறிவு ஆற்றமாட்டாமல் கேட்க,

“சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப அறிவு மாமா?” என்று இருக்கையில் நன்றாக சாய்ந்து தோரணையாகக் கேட்டாள் தாரகை. அந்த தோரணை ராஜதுரைக்கு அவ்வளவு கோபத்தை உண்டு செய்தது.

“ஏய்! என்னடி திமிரா கேட்கிற? யாரைக் கேட்டு என் தங்கச்சிக்கு நீயும் உன் நொண்ணனும் சாட்சி கையெழுத்துப் போட்டு கண்டவன் கூட கல்யாணம் செஞ்சு வைச்சீங்க?” என்றான் அதட்டலாக.

“யாரைடா கேட்கனும்?” என்று அவனிடம் கேட்க,

“என்னடி வாய் நீளுது?” என்று கை நீட்டப்போக, அறிவு அவசரமாக தடுத்து நிறுத்தினான்.

“கீவ் ரெஸ்பெக்ட், கெட் ரெஸ்பெக்ட்!” என்று துரையிடம் கண்டிப்பான குரலில் மிடுக்காக சொன்ன தாரகை அறிவைப் பார்த்து

“உட்காரு மாமா” என்றாள். அவன் உட்கார,  கைகட்டி நிமிர்ந்தவள்,

“இங்க பாரு மாமா, மைதிலி மேஜர். மோகன் அண்ணா  நல்லவர்.” என்று பொறுமையாக அறிவிடம் விளக்கம் சொல்ல, துரைக்குப் பொறுமை இல்லை. எரிமலையாய்த் தகித்தான்!

“அவன் எவனா இருந்தா என்ன? கண்ட சாதிக்காரனுக்கு என் வீட்டுப்பொண்ணைக் கட்டி வைப்பியா? உங்கப்பா சாதி மாறி கட்டினா எல்லாரையும் அப்படி ஆக்கிவிடுவீங்களா?” என்று துரை தாரகையிடம் கத்தினான்.

“இதான் பிரச்சனை மாமா! மோகன் அண்ணா இவரைப் பொருத்தவரைக்கும் இவங்க கீழா  நினைக்கிற ஜாதி! அந்த ஒரு காரணத்துக்காக இவங்க அவரோட காதலை ஏத்துக்கமாட்டாங்க, அது கூட விடுங்க அவரையே உயிரோட விடுவாங்களா தெரியாது! ஷிட் கேஸ்டிஸ்ட்!” என்றாள் அருவருப்புடன்.

“படிச்ச ஆள் இவரே சாதி பார்க்கிறாரு, அதனால்தான் மோகன் அண்ணா ஹெல்ப் கேட்கவும் அரியும் நானும் செஞ்சோம்.”

“டேய் அறிவு! இவகிட்ட என்னடா வெட்டிப் பேச்சு? ஒழுங்கு மரியாதையா அவ எங்க இருக்கா சொல்லிரு, இல்லை என்ன செய்வேன்னே தெரியாது” என்று ராஜதுரை  ரௌத்திரத்துடன் சீற,

“கண்டிப்பா சொல்லமாட்டேன், சொன்னா என்ன செய்வீங்கன்னு தெரியும்.” என்றாள் இறுக்கமான முகத்துடன்.

மோகன் தாரகையின் அம்மா வழி உறவு, அவனும் மைதிலியும் ஒரே பள்ளிக்கூடம்தான், அப்போதிருந்த மையல், பெரியவனானதும் காதலாகி விட்டது. மைதிலியும் கல்லூரி சென்றதும் அவன் காதலுக்கு சம்மதித்துவிட்டாள்.  மைதிலிக்கு அவள் அப்பாவைப் பற்றி நன்றாகத் தெரியுமே, அவர் உயிரில் ஊறியிருந்தது உயர்ஜாதி வெறி!!

அதனால் பதிவுத் திருமணம் செய்துகொண்டாள். அரிச்சந்திரனும்  மோகனும் நண்பர்கள் வேறு, அரிச்சந்திரன் யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் பதிவுத்திருமண வேலைகளைப் பார்த்துவைக்க, தாரகையும் சாட்சியாகக் கையெழுத்திட்டு இருந்தாள்.

இவர்களுக்குத் தெரிந்த அதிகாரி அன்று பணிக்கு தாமதமாகவே சென்றிருக்க, அவர் சென்ற நேரம் திருமணம் முடிந்து மைதிலி மோகனுடன் சென்றுவிட்டாள். மைதிலியைப் பார்த்தவருக்கு எங்கோ பார்த்த நினைவு, மெல்ல யோசித்து அவளின் விவரங்களை வாங்கிப் பார்த்தவருக்குப் பன்னீரின் மகள் என்று தெரிய, உடனே ராஜதுரைக்கு அழைத்துவிட்டார்.

ராஜதுரையும் பதிவாளர் அலுவலகம் சென்று பார்க்க, அங்கு இருந்த கோப்பில் தாரகை, அரிச்சந்திரன் பெயர் இருக்க, மைதிலியைப் பற்றி அவர்களுக்குத் தானே தெரியும்? அதனால் உடனே ‘தாரகை டாக்கீஸ்’ வந்துவிட்டான்.

அரிச்சந்திரன் எங்கே என்று தெரியவில்லை.

“இவ கிட்ட பேசி வேலைக்காகாது, இவ அண்ணனை நாலு தட்டு தட்டினா தெரிஞ்சிடும்” என்ற ராஜதுரை

“மைதிலி மட்டும் கிடைக்காம இருக்கட்டும், அப்புறம் இருக்கு உனக்கு!” என்று மிரட்டுவிட்டுச் சென்றான்.

தாரகையோ அவனும் அறிவும் சென்ற பின் பெருமூச்சுடன் எழுந்தவள்,

“ஒரு லவ் மேரேஜுக்கு இவ்வளவு அக்கப்போர், ட்ராமா!” என்று சலித்துக்கொண்டாள். அண்ணனுக்கு அழைத்தவள், மோகன் மைதிலி பற்றி விவரம் கேட்க,

“அவங்களைப் பத்திரமா ஃப்ளைட் ஏத்திவிட்டுட்டேன்மா, போய்டுவாங்க” என்றான் திருச்சியிலிருந்து.

“அங்க எதாவது பிரச்சனையா?” என்று அரி கேட்க, தாரகை விவரம் சொல்ல,

“என்ன உன்னை மிரட்டினானா? அதுக்குள்ள எப்படி தெரிஞ்சது?” என்று கேட்க,

“அறிவு மாமா கூட வந்திச்சுண்ணா, எப்படியோ தெரிஞ்சாலும் சீக்கிரமே எல்லாம் முடிஞ்சது, பார்டா லாயர் சார் தங்கச்சியை நம்பி கூட ப்ரண்டை எங்க அனுப்பினேன் சொல்லவே இல்லை, இட்ஸ் ஒகே! நீ பார்த்து வாண்ணா” என்று தாரகையின் குரலில் அக்கறை நிறைய இருக்க

“ஹேய் ராஜாத்தி! அந்த துரை மிரட்டினதுல பயந்துட்டியா? பாப்பாவுக்குப் பயமா?” என்று கிண்டலாக கேட்டான்.

“நாந்தான் அவனை மிரட்டுனேன்” என்றவள் “டேய் அரி! மைதிலி கிடைச்சா அவளை என்ன செய்வாங்களோ, அதை விட அவளுக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு உன்னை எதாச்சும் செஞ்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு. நீ விளையாடாம சீக்கிரமே வீட்டுக்கு வா” என்றாள் அழுத்தமாக.

அவளுக்கு மனதோரம் அச்சம் இருக்கத்தான் செய்தது. படித்தவன் ராஜதுரையே இப்படி என்றால் அவன் பெரியப்பா, அவன் உறவுகள் நினைக்க  நினைக்க  பதட்டம்தான்.

தைரியம் என்பது என்ன? பயத்தைக் காட்டாமல் இருப்பதுதானே? அதைத்தான் செய்தாள் தாரகை. அவள் கொஞ்சம் தன் பயத்தைக் காட்டி இருந்தாலும் அவளை வைத்து அரியை மிரட்ட வாய்ப்புகள் அதிகம்.  இரண்டு மணி நேரத்தில் அரிச்சந்திரன் திரையரங்கம் வந்துவிட்டான்.

“என்ன அரி? வீட்டுக்குப் போகாம இங்க வந்துட்ட?” என்று தாரகையைக் கேட்க,

“உன்னைத் தனியா விட மனசில்ல தாரா, நீயும் என்னோட வீட்டுக்கு வா. அவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம், என்னை வைச்சு மட்டும்தான் மைதிலி மோகனைக் கண்டுபிடிக்க முடியும்.” என்றான் கொஞ்சம் டென்ஷனாக.

அண்ணனின் அருகே வந்து அவன் தோளில் சாய்ந்து கையை இறுகப்பிடித்துக்கொண்டாள் தாரகை.

“அவங்க மேஜர்தானே அரி? வேற என்ன ப்ராப்ளம் வரப்போகுது?”

“அதெல்லாம் அவங்களுக்குத் தெரியாமலா? மைதிலி கிடைச்சா அவளைக் கொல்லவும் தயங்க மாட்டாங்க, பொண்ணுன்றவ அவங்களைப் பொருத்தவரை ப்ரஸ்டீஜ்! அதுவும் மோகனோட போய்ட்டான்றதை ஏத்துக்கவே மாட்டாங்க, பொண்ணைக் காணும். மோகன் கடத்திட்டான்னு எஸ்பி ஆபிஸ்ல மனு கொடுத்திருக்காங்க” என்றவனின் கரங்கள் தங்கையை ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தது.

“அப்போ அவங்க வரனுமா என்ன?” என்று தாரகை அதிர்ச்சியாகக் கேட்க,

“தேவையில்லடா, நான் முன்னாடியே அவங்களை எஸ்பி கிட்ட பேச வைச்சிட்டேன். இப்படி செய்வாங்கன்னு தெரிஞ்சுதான் காலையில எடுத்த வீடியோ, ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்ச எவிடன்ஸ் எல்லாமே அவர்கிட்ட கொடுத்து மைதிலி விருப்பத்தோடத்தான் மோகனோட போறான்னு சொல்ல வைச்சிட்டேன்” என்ற அண்ணனை பெருமிதமாகப் பார்த்த தாரகை,

“டேய் அரி, உண்மையில நீ நல்ல லாயர்தான் போல” என்றாள் சிரிப்புடன். இப்போதுதான் அவளுக்கு இறுக்கம் தளர்ந்து அண்ணனின் தோளை விட்டாள். இருவரும் வீட்டிற்குச் செல்ல, அங்கே அறிவின் அப்பா அன்புசெல்வன்  தாத்தா ராமசாமியுடன் ஏதோ கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அண்ணனும் தங்கையும் காரை நிறுத்திவிட்டு தாத்தாவின் அருகே சென்று நின்றனர்.

“என்னாச்சு தாத்தா?” என்று அரி கேட்க,

“இந்தா உங்க அத்த வீட்டுக்காரனையே கேளுடா அரி” என்றார் ராமசாமி கடுப்பாக.

“அவனை என்ன கேட்க சொல்றீங்க? அப்பா அம்மா இல்லாத புள்ளைங்கன்னு சரியாதான் இருக்கு, பெருசு வளர்க்கிற புள்ள பெருமையா வளரனும்னா இதுங்க பெருமையைக் கெடுக்கனே இருக்குதுங்க! அப்பந்தான் சாதி சனத்தை மதிக்காம கல்யாணம் கட்டிக்கிட்டான்னா புள்ளைங்க அதுக்கு மேல” என்று சின்ன மாமனாரிடம் கோபத்தில் கத்தினார் அன்புசெல்வன்.

அப்பாவைப் பற்றி பேசவும் தாரகைக்கும் அரிக்கும் கோபம் ஏறியது.

“மாமா, என்ன விஷயமோ அதைப் பேசுங்க. சும்மா எங்கப்பாவை இழுத்தா பார்த்துட்டு இருக்க மாட்டேன் நான்” தாரகை முறைத்துக்கொண்டு சொல்ல,

“என்ன பண்ணுவ நீ? உங்கப்பன் நம்ம சாதி மானத்தை வாங்கின மாதிரி நீயும் உன் நொண்ணங்காரனும் இன்னிக்குப் பண்ணிட்டீங்க. யாரைக் கேட்டு என் பங்காளி மவளுக்குக் கண்டவனைக் கட்டி வைச்சீங்க? பெரியவங்க நாங்க ஏன் இருக்கோம்?” என்று அவர் சீற,

தாரகை, “நீங்க ஏன் இருக்கீங்கன்னு என்னைக் கேட்டா?” என்று முணுமுணுத்தாள்.

தங்கையின் பேச்சில் லேசாய் சிரித்த அரிச்சந்திரன்

“மாமா, அவங்க மேஜர். “ என்று அவன் ஆரம்பிக்க,

“உன் லா பாயிண்ட்லாம் எங்கிட்ட பேசாதடா. உன் தங்கச்சியை உனக்கே தெரியாம எவனாவது கட்டிட்டுப் போனா அப்ப தெரியும். பன்னீர் எவ்வளவு அருமை பெருமையா பொண்ணை வளர்த்தான் தெரியுமா?”  அன்பு செல்வன் கேட்கவும்,

“இங்க பாருங்க மாமா, உங்க வறட்டு கௌரவத்துக்கும் வெட்டி ஜாதி வெறிக்கும் அவங்க வாழ்க்கை, ஆசை பாழா போறதுல எனக்கு இஷ்டமில்லை. என் தங்கச்சி மாதிரி நினைச்சுத்தான் அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வைச்சேன். எதுனாலும் எஸ்பி ஆபிஸ் வாங்க. வீட்டுக்கு எங்க அத்த வீட்டுக்காரரா மட்டும் வாங்க.” என்று அழுத்தமாய்ப் பேசினான் அரிச்சந்திரன்.

“வராங்க இனி உன் வீட்டுக்கு, காசு பணமிருக்குன்னு ஆடாதடா! சொந்தம் சோலிதான் வந்து நிக்கும். என் பங்காளி மவ கிடைக்கட்டும், அப்புறம் இருக்கு கச்சேரி!” என்று மிரட்டுவிட்டுச் சென்றார்.

“யார்டா இவன் கற்காலத்துல கல்லுப் பொறுக்கிட்டு இருந்தவன் மாதிரியே பேசுறான், கிறுக்குப்பய!” என்றார் ராமசாமி எரிச்சலாக.

“நீ பத்திரமா அவங்களை அனுப்பி வைச்சிட்டதானே அரி?”

“அவங்க சேஃபா இருக்காங்க தாத்தா. லீகலாவும் எந்த ப்ராப்ளமும் வராது, எஸ்பி நமக்குத் தெரிஞ்சவர்தான்” என்றவன் தாத்தாவை அழைத்துக்கொண்டு வீட்டினுள் வந்தான். தாரகையும் பெருமூச்சுடன் ஹாலில் உட்கார்ந்தவள், தாத்தாவின் கையைப் பிடித்து,

“கையைக் கொடு ராமசாமி. இந்த காலத்துலயே டைனோசர் காலத்து ஜந்துவா ஜாதின்னு புலம்பிட்டு திரியறவங்க மத்தியில எங்கப்பாவோட காதல் தாஜ்மஹால்லுக்கு செங்கல் எடுத்துக்கொடுத்து அவரை வாழ வைச்சதுக்கு உனக்கு நம்ம மெயின் ரோடுல சிலை வைக்கலாம்” என்றாள்.

“ராஜாத்தியம்மாவுக்கு விளையாட்டுத்தாண்டா அரி” என்று சிரித்த ராமசாமியின் தோளைப் பற்றிய அரி,

“அவ விளையாட்டா சொன்னாலும் அவ சொல்றது உண்மை! நீங்க பரவாயில்லை தாத்தா” என்றான் பேரனும் பெருமையாக.

“டேய் ஆடெல்லாம் ஒரு ஜாதி, மாடெல்லாம் ஒரு ஜாதின்னா மனுஷனும் ஒரே ஜாதிதான்! ஆனா இவனுங்க ஜாதிக்குள்ள ஜாதி, அதுக்குள்ள ஒரு ஜாதின்னு பிடிச்சிட்டு தொங்குறானுங்க தற்குறிப் பயலுவ!” என்று கடிந்த ராமசாமி,

“என் பேரப்பசங்க இப்படி இருக்குறது எனக்குப் பெருமையா இருக்குடா! விட்டா செவ்வாய்க்கிரகத்துல குளம் வெட்டி குடித்தனம் பண்ணிடுவானுங்க அமெரிக்ககாரனுவ, இவனுங்க ஊர்க்குளத்துல எல்லாரையும் சமதையா நடத்தறதில்லை. நம்ம ஊர் பரவாயில்லை, இன்னும் தெக்க  நடக்கிறதெல்லாம் மோசம்டா” என்றார் வேதனையாக.

“இந்தியாவுல நிறைய இடத்துல நடக்குது தாத்தா, இனி இந்த விஷயத்தை இரண்டு பேரும் மறந்துடுங்க. மோகன் மைதிலி நல்லா இருக்காங்க, பத்திரமா இருக்காங்க. ஒன்னும் பிரச்சனையில்லை” என்று அந்த பேச்சை முடித்துவைத்தான் அரிச்சந்திரன்.

இங்கு பிரச்சனை இல்லை என்று அவன் சொல்ல, பன்னீரின் குடும்பத்தில் அது பிரளயமாக மாறியிருந்தது. அவரின் பங்காளிகள், மாமன் மச்சினன்கள் என்று எல்லாரும் அவர் வீட்டில் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். என்னவோ துக்கம் நடந்த வீடு போல் தோற்றம்.

சரோஜா அழுது கரைய, சுமித்ராவும் அருணாவும் ஆறுதல் சொல்லி அவரைத் தேற்றினர். ராஜதுரை மிகவும் இறுக்கமாக இருந்தான். இதில் பன்னீரின் சில அண்ணன் தம்பிகள் இன்னும் அவரை ஏற்றிவிட்டனர்.

“ஒரு புள்ளயை சும்மா விட்டா எல்லாரும் அதே பண்ணுவாங்க. அப்பறம் நம்ம ரோட்ல கௌரவதையா எப்படி போறது? கண்ட கண்ட பய கூட எல்லாம் இந்த காலத்து பிள்ளைங்க காதல் கண்றாவினு வந்து நிக்குது. இப்படியே போச்சுன்னா நம்ம ஜாதிக்கு என்ன மரியாதை இருக்கு? மத்த சாதிக்காரன் துப்ப மாட்டான்?” என்று கொந்தளித்தார் ஒரு பெரியப்பா.

“அந்த செறுக்கியை வெட்டி ஆத்துல வீசுனாதான் என் ஆத்திரம் தீரும்” என்று பன்னீர் கோபத்தில் எழ, சரோஜா ஓவென்று கதறினார்.

“எதுக்குடி கத்துற? வீட்ல தானே இருக்கீங்க? பொண்ணு என்ன செய்றான்னு பார்க்காம பொங்கி தின்னுட்டு இருந்தியோ? உன்னைக் கொல்லனும்டி” என்று அவரை அடிக்க பாய, ராஜதுரை பெரியப்பாவைப் பிடித்து நிறுத்தினான்.

அறிவுக்கே அவர்கள் பேச்சைக் கண்டு இவர்களிடம் மைதிலி சிக்கக் கூடாது என்றே நினைத்தான்.

“விடுடா ராஜா! இவளுங்க சமையல்கட்டுல இருந்துப்பாளுங்க, அந்த சிறுக்கி செஞ்ச வேலையால நாளை பின்ன நம்ம மரியாதையா வெளியே போக முடியுமா? ஓடுகாலி கழுத! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பால்டாய்ல் ஊத்தியிருப்பேன்” என்று மூச்சு வாங்கக் கத்தினார் பன்னீர்செல்வம்.

“அதானே பன்னீரு! நம்ம சாதிதானே நம்ம அடையாளம். தண்ணீ கூட வாங்கிக் குடிக்காத பய மக்க வீட்ல உன் மக மருமகளா போய்ட்டாளே” என்று ஒருவர் பேச

“அவ என் மகளே இல்லை, என்னைக்கா இருந்தாலும் அவளைக் கொல்லாம விடமாட்டேன். என் வம்சத்தோட பெயரைக் கெடுத்தவளை வெட்டிப்போட்டாதான் எனக்குக் கௌரவம்!” என்றார் கர்ஜனையாக.

ராஜதுரைக்கே அவர் பேச்சு பயம் கொடுத்தது., அவரின் அளவு அவனுக்கும் ரௌத்திரம் இருக்கத்தான் செய்கிறது. தங்கை ஏமாற்றிச் சென்றதைதான் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் வேற்று ஜாதிக்காரனுடன்.. நினைக்கவே கசந்தது. மரியாதை மண்ணோடு போன உணர்வு!!

அப்போது பார்த்து அறிவின் அப்பா, “எல்லாம் இந்த தயாளன் புள்ளைங்களை சொல்லனும் பன்னீரு, நம்ம பொண்ணுக்குக் கூட அவ்வளவு சூதுவாது தெரியாது, அந்த வக்கீல் பய, அவன் தங்கச்சி  எல்லாம்தான் கமுக்கமா கல்யாணத்தை முடிச்சு வைச்சிருக்குங்க” என்றார் ஆத்திரத்துடன்.

“அப்பா, சும்மா இரு” என்று அறிவு அவரை அடக்க, ராஜதுரை அறிவை முறைத்தான்.

அப்படியே பேச்சுவார்த்தை நீள, மைதிலி மோகன் எங்கே என்று தெரியவே இல்லை. எஸ்பியும் அவர்கள் சட்டப்படி கணவன் மனைவி, பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட இவர்களுக்கு வேறு வழியில்லை.

இரண்டு நாட்கள் இதனைப் பற்றிய பேச்சு கிசுகிசுப்பாக, ரகசியமாக, பகிரங்கமாக என்று ஊருக்குள் உறவுக்குள் பலவகையாகப் பரவி அப்படியே கரைந்து போனது.

அன்று, அரிச்சந்திரன் வழக்கு விஷயமாக சென்னை சென்றுவிட, தாரகைக்குக் காலையில் தியேட்டர் மேனேஜர் புவியரசனிடமிருந்து அழைப்பு. சாதி மாறி திருமணம் செய்து வைத்ததற்காக, மைதிலியின் உறவுகள், சாதி ஆட்கள் எல்லாம் தாரகையின் திரையரங்கை சேதப்படுத்திவிட்டனர்.

மோகன் வீட்டினர் எல்லாம் வேறு ஊரில் இருக்க, அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத ஆத்திரம் எல்லாம் சேர தாரகை, அரிச்சந்திரனை குறி வைத்தனர்.

‘தாரகை டாக்கீஸ்’ என்ற பெயரில் கல்லடி பட்டு அந்த டிஜிட்டல் போர்ட் உடைந்திருக்க, அதனைப் பார்த்த தாரகைக்கு மனதில் வலி! அதைத் தாண்டிய கோபத்தில் காவல் நிலையம் சென்று ராஜதுரை, பன்னீர் என்று மைதிலி சார்ந்தவர்கள் மீது புகார் கொடுத்தாள்.

தாரகை கோபத்தில் இருக்க, துரையோ இவள் புகாரில் கொந்தளித்தான்.

✅ End of Episode 4
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 7 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Sathya Velusamy Reader 1 month ago

இப்ப நான் என்னனனன சொல்லறதுதுதுது

❤️ 1 😂 1 more...
Pavithra Narayanan 1 month ago

@Sathya Velusamy 🤣🤣🤣🤣 என்னவோ தெரியல, ரெண்டு மராத்தான் கேஸ் at the same time கா 

Jeeona Reader 1 month ago

Ithu Nalla iruke ipadi thaan ivanga koopathai kattuvangala konjam kuda puthi illatha kootam 😒

❤️ 2 more...
Surya Palanivel Reader 1 month ago

🤩🤩

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

மானம் மரியாதை

மண்ணு மயி......என்று
முட்டாள் கூட்டம் 
முகத்தில் ரௌத்திரமாக
நடமாட....
நாயகனும் நாயகியும் முட்டிக்கொள்ள....
அசால்ட்டாக 
அந்த காலத்து மனுஷன்
அவர்களின் சாதி பெருமை
அறியாமையை
அரசியல் நையாண்டி செய்ய...
அற்புதம் 👍🏻 ராஜா தான் நீங்க....
❤️ 1 more...
Kavi Natarajan Reader 1 week ago

😍😍😍😍

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top