Episode 23

தாரகைக்கு அவளின் மன நிலையே புரியவில்லை. ராஜ துரையின் மீது மட்டும் கோபமாக வந்தது. அவனை திட்டினால் மட்டுமே மனம் ஆறும் என்ற நிலை. சந்தியா துரை தாரகையைக் காதலிப்பதாக சொன்னபோது கூட ஒரு கேள்வி, ஆச்சரியமே! ஆனால் கோபம் மட்டும் நிச்சயமில்லை.

விருப்பமிருக்கிறது என்பதற்கு ஏன் கோபம் என்ற எண்ணமே. அதை மீறி அவன் ஏன் என்னிடம் சொல்லவில்லை? சொன்னால் என்ன செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட கேள்விகள்.

இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது, இன்னும் தாரகைக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இன்றைய நிகழ்வு அதிகமான கோபத்தினைக் கொடுத்தது. ராஜதுரையைத் திட்டி தீர்க்காமல் அது தீராது என்று புரிந்தவள் அவனுக்கு அழைக்க, அவன் ட்ராக்டர் ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த சத்தத்தில் அவனுக்கு கேட்கவில்லை.

தாரகையின் தணியாத கோபத்திற்குக் காரணம் காலையில் கமலா வந்து சொன்ன செய்தியே. காலையில் தாரகையின் வீட்டிற்கு வந்த கமலா மல்லிகைப் பூ பறித்துக்கொள்கிறேன் என்று சொல்லி விட்டு வாசல் பக்கம் இருந்த மல்லிகை செடி அருகே சென்றார்.

தாரகை அப்போதுதான் எழுந்து வந்தவள், “இவ்வளவு வெள்ளனுமே எதுக்குத்த பூ பறிக்கிறா? யாருக்காச்சும் கல்யாணமா?” என்று கேட்டபடி அவளும் அவருக்குப் பூ பறித்துக் கொடுத்தாள்.

“கல்யாணமில்லடி, ஆனா அதுக்கான வேலை” என்றவர் சுற்றி பார்த்து விட்டு தாரகையின் காதில் ரகசியமாக, “ராஜதுரை இருக்கான்ல அவனுக்குப் பொண்ணு பார்க்க போறோம், அதுக்குத்தான் பூ” என்று சொல்ல தாரகை மனத்தில் காதல் ஒன்றும் அந்த கணம் தோன்றவில்லை.

தோன்றியது எல்லாம் கோபம். ராஜதுரையை அடிக்க வேண்டும் என்ற உணர்வு.

“துரையும் பொண்ணு பார்க்க வரானா?” என்று கேட்க, கமலா அவள் வாயில் பட்டென்று போட்டவர்

“அவன் அறிவை விட வே ஆறு மாசம் மூப்பு, அவன் இவன் சொல்ற? வாய் அதிகம்டி” என்று கண்டித்தார். தாரகை முறைக்க,

“அவன் வரல. அவங்க பெரியப்பா, சரோஜாக்கா, நான், அருணா, உங்க மாமா மட்டும் முதல்ல பார்த்து பேசி சரின்னா அவனையும் பொண்ணையும் கோவில்ல பார்க்க வைக்கலாம் பேசியிருக்கோம்” என்றதும் தாரகை தலையசைத்தவள் உள்ளே செல்ல

“அத்தைக்குப் பூ பறிச்சுக் கொடுத்தா என்னடி?” என்று சத்தம் போட்டார்.

“எனக்கு வேற வேலை இருக்கு” என்று சொன்னவளுக்கு அதன் பின் வேறு வேலைகள் ஓடவில்லை.

ராஜதுரையின் நினைவுகள் ராஜாங்கம் செய்தது அவளை. என்னைக் காதலிப்பதாக சந்தியா சொல்ல, இவன் வேறு பெண்ணைத் திருமணத்துக்குப் பார்ப்பானா?

என்னை மனத்தில் வைத்து, வேறு பொண்ணைப் பார்ப்பது தவறு! அதை செய்வானா அவன்? என்று நினைத்தவளுக்கு அதுதான் காலை முதல் மனத்தில் ஓடியது.

ராஜதுரை மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தவன் உண்டு முடித்து அவன் அறைக்கு சென்றான். அப்போதுதான் போனை பார்க்க,

“இவ எதுக்கு இத்தனை நாள் கழிச்சுக் கூப்பிடுறா?” கேள்வி இருந்தாலும் பதில் தேட விருப்பமின்றி அவளுக்கு அழைக்கவில்லை. ஆனால் அவளோ மீண்டும் அழைத்தாள். வாட்ஸப்பில் அத்தனை குறுஞ்செய்தி.

“மவனே போன் எடுக்கல, போன்ல பேச நினைச்சதை மைக் செட் போட்டு பேசுவேன்” என்று ஆடியோ செய்தி அனுப்பி மிரட்டியிருக்க,

“என்ன ஆச்சு இவளுக்கு?” என்று புலம்பலோடு அவள் அழைப்பை ஏற்க, “ஹலோ” என்று மட்டுமே துரை சொன்னான்.

அவ்வளவுதான்! அடுத்து அவன் பேச இரண்டு நிமிடங்கள் ஆனது. தாரகை விடாது பேசிக்கொண்டே இருந்தாள்.

“டேய் பெரிய இவனா டா நீ? போன் பண்ணீனா எடுக்க மாட்ட? என்ன என்னை இரிட்டேட் பண்றியா? என்ன தைரியம்டா உனக்கு? என்னைப் பிடிச்சிருக்குன்னு எங்கிட்ட சொல்ல முடியல. உன் ப்ரண்ட் கிட்ட சொல்ற. அதை விட எவ்வளவு திமிரு இருந்தா என்னை பிடிக்கும்னு சொல்லிட்டு பொண்ணு பார்க்க ரெடியாகுற? அவ்வளவு அதப்பாடா உனக்கு? ராமசாமி பேத்தியைப் பொண்ணு கேட்க துப்பில்ல, ஆனா வேற பொண்ணு பார்க்க ரெடியாக்கிட்டாரு துரை!” என்று திட்டினாள்.

தாரகை முதலில் திட்டவும், எதாவது ஊர்ப்பிரச்சனைக்குத் திட்டுவாள் என்று நினைக்க, அவளோ தனக்கு அவளைப் பிடிக்கும் என்பதை சொல்லிவிட அதிர்ச்சியில் அவனுக்குப் பேச்சு வரவில்லை. பேச வாயெடுத்த போது அவள் பேசவே விடாது பேசிக்கொண்டு இருந்தாள்.

ஒரு கட்டத்தில் துரைக்கு அவளின் கோபம் தொற்றியது. எரிச்சலானவன்

“ஏட்டி! என்னடி இப்போ? ஓவரா பேசுற? உன்னைப் பிடிக்கும்னு உங்கிட்ட சொன்னேனா நான்?” என்று கத்தினான்.

‘இந்த சந்தியாவை?’ என்று பல்லைக் கடித்தான். மனத்தின் சுமக்க முடியாது தோழி என்பதால் அவளிடம் ஒரு நாள் லேசாக சொல்லிவிட்டான், அறிவிடம் தாரகை குறித்து எப்படி பேசுவான்? அவள் இப்படி அறிவில்லாது தாரகையிடமே சொல்லுவாள் என்று நினைக்கவில்லை.

அதை விட இப்போது தாரகையை எப்படி சமாளிக்கவென்றே தெரியவில்லை.

“எங்கிட்ட சொல்ல தைரியமில்லாமதானே உன் ப்ரண்ட்கிட்ட சொல்லியிருக்க?” என்று தாரகை நக்கலுடன் கேட்க, அந்த வார்த்தைகள் துரையை சீண்டின.

“ஓவரா பேசாதடி, நான் உன்னைப் ப்ரண்டா பிடிக்கும்னு சொன்னேன். யாரோ ஏதோ சொன்னா நீ உடனே என்னை வந்து சண்டை போடாத தாரகை” என்றான் கண்டிப்பாக.

“துரை!” என்று பல்லைக் கடித்தவள்

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? யாரோ ஏதோ சொன்ன உடனே நம்பிடுவேனா நான்? அதுக்கு முன்னாடிதான் நீ காரணமே இல்லாம என்னை அவாய்ட் பண்ணியே, அதுல தெரியல” என்றாள்.

“என்ன தெரியல, எனக்கு உன்னோட பேச பிடிக்கல. அதான் பேசல” என்று பொய் சொல்ல

“மவனே என் முன்னாடி இருந்த மண்டையை உடைச்சு மாரியம்மனுக்கு மாவிளக்குப் போட்டிருவேன்” என்றாள் ஆத்திரமிகுதியில்.

“தாரகை!” என்று அழுத்தமாக அவளை அழைத்த துரை

“இப்ப என்னதான் வேணும் உனக்கு?” என்று அவனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

ஏன் இவ்வளவு கோபம் தெரியவில்லை. அவளும் இருவாரங்களாக யோசித்துப் பார்த்தாலும் காதலென்ற உணர்வு அவளுக்கு வரவில்லையா வந்தும் அவளுக்கு அது தெரியவில்லையா என்றே தெரியாத நிலை! அதில் இன்றைய நிகழ்ச்சி வேறு அவளை தெளிவுமில்லாமல் குழம்பவும் விடாது ஒரு விசித்திர நிலைக்குத் தள்ளியது.

அவன் வேறு பெண்ணைப் பார்க்கக் கூடாதென்ற தெளிவு, ஆனால் அவளைப் பார்க்கலாமா என்பதில் குழப்பம்.

“பொண்ணு பார்த்தியே, என்னாச்சு?” என்று கடுப்பை அடக்கி கேட்க

“நான் எங்கடி பார்த்தேன்? வீட்ல பார்த்து சொல்றதுதான்” என்றதும்

“அப்போ என்னை பிடிச்சிருக்குனு சொல்லிட்டு வேற ஒருத்தியை வீட்ல பார்த்தா கட்டிப்பியா?” என்று கேட்க, துரைக்கு இவள் என்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாளா என்ற குழப்பம்.

“உன்னை எப்போ பிடிச்சிருக்குனு சொன்னேன் நான்?” என்று துரை கேட்க

“ஏன் பிடிச்சிருக்குனு நீ எங்கிட்ட சொல்லல?” என்று எதிர்கேள்வி கேட்டாள். அவன் எண்ணத்தைப் பகிர விரும்பாத மௌனம். அந்த மௌனம் தாரகையிடம் இரைச்சலையும் எரிச்சலையும் ஒருசேர உண்டு பண்ணியது.

“பெரிய அந்த ஜாதி, இந்த ஜாதின்னு உருட்ட வேண்டியது. ஒரு பொண்னை பிடிச்சா பிடிச்சிருக்குனு சொல்ல முடியல. அப்புறம் வீரம், விவேகம்னு கட் அவுட் வைக்க வேண்டியது! பூமர்னு ப்ரூவ் பண்ணிட்டே இருக்கனுமா டா நீங்களாம்? ஆனா இப்ப புரியுது, எங்க ஒருத்தியைப் பிடிச்சு அவ நம்மளை பிடிக்கலனு ரீஜெக்ட் பண்ணிடுவாளோன்னு பயம் உங்களுக்கு, ஏன் ஒரு பொண்ணுக்கிட்ட இறங்கிப் போய் லவ் சொல்லணும்? அதனாலதான் அப்படி சொல்லி காதலிக்கிறவங்களை பிரிச்சு விடுறீங்க, ப்ளடி இடியட்ஸ்!” என்று திட்டினாள்.

“இப்ப உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா என்ன செய்வ நீ?” என்று தாரகையின் பேச்சு தாங்க முடியாது துரை கேட்டுவிட,

“பிடிச்சிருக்குனு நீ சொல்லாம இருந்ததானே? இனிமே நீ சொன்னா நான் ஏன் கன்சீடர் பண்ணனும்? ஆனா நீ வேற பொண்ணைப் பார்க்க போ இனிமே?” என்றாள் மிரட்டலாக.
துரைக்கு தாரகை பேச்சில் தலையே சுற்றியது. என்னதான் சொல்ல வருகிறாள் இவள் என்று அவனால் கிரகிக்க முடியவில்லை.

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை சொல்லு தாரா? ஏன் இவ்வளவு கோவம் உனக்கு?” என்று பொறுமையாகக் காரணம் கேட்டான்.

“என்னோட ப்ரண்ட்லியாத்தானே பேசின நீ? எவ்வளவு பேசியிருப்போம், ஆனா தீடீனு என்ன ஏதுன்னு ஒன்னுமே சொல்லாம என்னை அவாய்ட் பண்ணினவன் தானே நீ? ஏன்னு தெரியாம எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? உனக்கு ஏன் நான் காரணம் சொல்லணும்?” என்று கேட்டபோது அவன் மீதான அவள் அன்பு வெளிப்பட்டது.

“அப்போ உனக்கு என் மேல காதல் வந்திடுச்சா?”

“இல்லை, கோவம்தான் வருது!” என்றாள் பட்டென்று.

துரை பேசும் முன்னே, “ஏன் காதல் வந்ததும் உனக்கு வீரம் வந்து உடனே என்னைக் கட்டிப்பியா?” என்று நக்கலாகக் கேட்க,

“தாரகை!” என்று பெருமூச்சுவிட்டவன் “உன்கிட்ட காரணமே சொல்லாம பேசாம இருந்தது தப்பு. காரணத்தை சொல்ல எனக்குத் தைரியமில்லைதான். உன் அளவுக்கு எனக்குப் ப்ராக்ரசீவ் தாட்ஸ் கிடையாதுதான். நீ இவ்வளவு கேட்கிறதால சொல்றேன், எனக்கு உன்னைப் பிடிக்கும், ரொம்ப பிடிக்கும். ஆனா என்னால சொல்ல முடியாது! எப்படி முடியும் சொல்லு? உன்னோட எண்ணப்போக்கு வேற, என்னோடது வேற. எனக்கு சொல்லி காயப்பட தைரியமில்லை” என்றான்.

தாரகைக்கு என்னவோ செய்தது அவன் பேச்சு. கண்ணீர் கூட வரும்போல் இருந்தது, அதைவிட இத்தனை நாள் அவன் மீது காட்டாத அந்த ஆத்திரம் நிறைய இருந்தது. அதனால் பேசாமல் இருந்தாள்.

“ஆனா காரணம் சொல்லாம என்னை காயப்படுத்துவ?” என்று தாரகை கேட்டுவிட,

“சாரி” என்றான்.

“இங்க பாரு, இத்தனை நாள் நான் பேசாதது தப்பு. எனக்கு உங்கிட்ட எல்லாம் சொல்லணும் தோனுது, உன்னைப் பார்த்து பேசணும், எப்போன்னு சொல்லு?” என்று கேட்டான்.

“ஈவினிங் தியேட்டர்ல இருப்பேன். அங்க வா” என்றவள் போனை வைத்துவிட்டாள்.

தாரகை அவள் அறையில் இருந்தவள் வேகமாக எழுந்து சென்று அரியின் அறைக்கதவைத் தட்டினாள்.

“அரி” என்று குரல் கொடுக்க,

“வாடி” என்று அவன் சொல்லவும் உள்ளே போனவள், அவன் நாற்காலியில் உட்கார்ந்திருக்க அவன் பக்கத்தில் கீழே அமர்ந்தவள் அவன் கையைப் பிடித்துக்கொண்டு மடியில் சாய்ந்தாள். அவள் கண்ணீர் அவனை நனைக்க, நெஞ்சம் பதறினான் அரிச்சந்திரன்.

“என்னாச்சு தாரா? ஏன் டி அழற?” என்று கேட்க

தாரகை சந்தியா பேசியதில் இருந்து இன்று துரையிடம் பேசியது வரை எல்லாவற்றையும் சொல்ல, அரிச்சந்திரனுக்குத் திகைப்பு. துரையின் காதலை விட தங்கையின் பேச்சு திகைக்க வைத்தது.

“இவ்வளவு நாளா ஏன் டி நீ இதை எங்கிட்ட சொல்லல?” என்று கடுப்பாகக் கேட்க,

“அப்போ நீ ஊர்ல இல்லை, திருச்சி போய்ட்டியே” என்றவள் அண்ணனின் முறைப்பில்

“எனக்குக் கஷ்டமா இருக்குனு உங்கிட்ட பேச வந்தா நீ என்னைத் திட்டிடே இருக்க?” என்று அவனைக் கேட்டாள்.

“பின்ன, நீ என்ன செஞ்சாலும் தங்கம் தங்கம்னு கொஞ்சுவேனா? பாசமிருக்குன்னா இஷ்டப்படி நடக்க விடுறதுல்ல, நல்லது கெட்டதை சொல்லி வளர்க்கிறதுதான் பாசம்” என்றான் முறைப்பாக.

“என்னடா இப்போ கெட்டது பண்ணினேன்?”

“என்ன செஞ்சியா? இடியட்! அவன் யாரைப் பொண்ணு பார்த்தா உனக்கு என்னடி? எதுக்கு அவங்கிட்ட லூசாட்டம் பேசியிருக்க?” என்று கத்த

“எனக்கு அவன் வேற யாரையும் பார்க்கிறது பிடிக்கல, அதான் பேசினேன். என்னோட ஃபீலிங்க்ஸ் உனக்குப் புரியல” என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அவனை விட்டு தள்ளி முறைத்தபடி அங்கிருந்த மெத்தையில் உட்கார்ந்தாள்.

“அப்போ அவனை உனக்குப் பிடிச்சிருக்கா?”

“பிடிக்கும் ஆனா காதல் இருக்கான்னு தெரியல”

“ஐன்ஸ்டீன்னை வர சொல்லி ஆராய்ச்சி பண்ணுவோமா?” அரிச்சந்திரன் எரிச்சலில் கேட்க

“அதான் உன்னைக் கேட்க வந்தேன்” என்று அரியை வெறுப்பேற்றினாள்.

“தாரா! உனக்கும் அவனுக்கும் பாட்டு பிடிக்கலாம், படம் பிடிக்கலாம். அதுக்காக எல்லாம் கல்யாணம், காதல் செட் ஆகாது. இதெல்லாம் சாதாரண விஷயம். நீ யோசிச்சுப் பாரு, உனக்கும் அவனுக்கும் எப்படி ஒத்துப்போகும், நீ சொல்லுவியே பூமர் டி அவன். என்னால நீ சொன்னதை டைஜஸ்ட் கூட பண்ண முடியல. தினமும் இந்த டீபேட்ல சண்டைப் போடுற மாதிரிதான் அவனோட நீ போடணும். அட்லீஸ்ட் நீ அறிவை லவ் பண்றேன் சொல்லியிருந்தாலும் கூட பரவாயில்லை.” என்றவனின் கோபம் தணியாது இருக்க, வாயை ஊதி மூச்சை இழுத்தான்.

அரிச்சந்திரனை தாரகை அமைதியாகப் பார்க்க, “அண்ணன் உனக்கு நல்லதுதானே தாரா செய்வேன். டெய்லி அவனோட பேசிட்டு பேசாம இருந்ததால வர ஃபீல் இதெல்லாம். இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத” என்று சொல்ல அவளின் உணர்வினை அரிச்சந்திரன் அங்கீகரிக்காது பேசவே அதுவே அவளுக்கு அவள் உணர்வினை அழுத்தமாக நம்ப செய்தது.

“அது எப்படி டா அரி? உன் தங்கச்சியை ஒருத்தன் லவ் பண்றானு சொன்னதும் இப்படி டென்ஷன் ஆவுற? துடிக்கிற? ஆனா மைதிலி என்னை விட சின்னப்பொண்ணு, ஜஸ்ட் இப்போதான் காலேஜ் முடிச்ச பொண்ணு, வாம்மான்னு உன் ப்ரண்ட்க்கு கட்டி வச்ச? அப்போ துரைக்கு இருந்த அக்கறையைப் பேசின” என்று காரமாகக் கேட்க, அரிச்சந்திரன் அவன் மேஜை மீது இருந்த பேனாவைத் தூக்கி வீசினான்.

தன்னை ஒரு பிற்போக்குத்தனம் வாய்ந்தவனுடன் தங்கை ஒப்பிடுவதை நினைக்கவே பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்துடன்,

“அவனும் நானும் ஒன்னாடி? அவன் ஜாதியைப் பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கவன், you are comparing me with that casteist idiot?” கத்தினான்.

“அவன் கேஸ்டீஸ்ட்னு ஒத்துக்கிறேன், ஆனா எல்லா ஆண்களுக்கும் யுனிவர்சலா இருக்கிறது ஒரு பிரச்சனை, அது உனக்கும் இருக்குடா அரி” என்றவள் அவன் முறைப்பது கூட பொருட்படுத்தாது,

“பெண்களை உங்க அதிகாரத்துக்குக் கீழ கொண்டு வரது, அதை நீயும் செய்ற. அறிவு மாமாவை பிடிச்சா கூட தப்பில்ல, ஆனா துரையைப் பிடிச்சிட
1 கூடாது சொல்ற?” என்று கேட்டாள்.

“அவனுக்குச் சப்போர்ட் பண்ற நீ?” என்று எரிச்சல் பட்ட அரிச்சந்திரன் “உன்னோட முடிவை நான் தப்புன்னு சொல்லல, சாய்ஸ் இஸ் ராங்க்! நீ வேற மதம், ஜாதி, நாடுன்னு எங்க யாரை காதலிச்சாலும் அவன் என் தங்கச்சிக்கு ஏத்தவனான்னு தான் என் மனசு பார்க்கும். புரிஞ்சதா? வேற வேற கொள்கைகள் இருக்கவங்க ப்ரண்டா இருக்கிறது வேற தாரா, ஃபேமிலியா இருக்கிறது வேற, அதுவும் கணவன் மனைவியா வாழ்றது ரொம்ப ரொம்ப கஷ்டம்.”

“நம்ம வீட்ல உனக்குப் ப்ரீயட்ஸ் வந்தா கூட அது சாதாரண நாள், ஆனா அவங்க வீட்ல அப்படியா? எட்டு ஒன்பது மணிக்கே அவங்க எல்லாம் கதவை அடைப்பாங்க. நீ பன்னிரெண்டு மணிக்கு தியேட்டர் விட்டு போனா கதவு திறந்து விட அங்க யாரும் இருக்க மாட்டாங்க.” என்று நிதர்சனம் பேசியவன்

“நான் வேண்டாம்னு சொல்றேனா ஏன்னு யோசி! உன்னோட வாழ்க்கை, உன் முடிவு, உன் சந்தோஷம்! ஆனா யோசிச்சு எடு, என்னை கன்வீன்ஸ் பண்ணு. முதல்ல நீ தெளிவா இரு, அவனுக்கு உன்னைப் பிடிச்சா உனக்கும் பிடிக்கணும்னு என்ன?” என்றான்.

தாரகைக்கு அண்ணன் சொன்னதெல்லாம் ஓடியது. யோசனைகளில் இருந்தவள் ஒருவழியாக கிளம்பி தாரகை டாக்கீஸ் சென்றாள்.

பல மாதம் கழித்து தாரகையைப் பார்க்க, தாரகை டாக்கீஸ் வந்தான் ராஜதுரை. ஒவ்வொரு முறையும் அந்த இடத்திற்கு வரும்போது அவனுக்குப் புது புது உணர்வே, அவளைப் பிடித்த பின் வருகிறான். வந்தவன் தாரகைக்கு அழைக்க, அவள் உள்ளே வர சொன்னதும் போனான்.

பல நாட்கள் கழித்து அவனைப் பார்க்கிறாள் தாரகை. ஒரு அடர் பச்சை முழுக்கை சட்டை, கறுப்பு பேண்ட், நெற்றியில் வீபூதி என்று இருந்தவனை நன்றாகப் பார்த்தாள். இன்றுதான் அவனை நிறுத்தி நிதானமாக பார்க்கத் தோன்றியது பாவையின் மனதுக்கு.

கண்ணோடு மனம் நிறைந்தது அக்கணம்! இத்தனை நாள் இவனை நான் இவ்வளவு தேடியிருக்கிறேனா? என்ற கேள்வி. கூடவே இது போல் தானே என் நண்பர்களை, அண்ணனையும் கூட தேடுவேன் என்ற குழப்பம்.

வந்தவன் அவளுக்கு முன்னிருந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டான்.

“இதை நான் எப்பவும் உங்கிட்ட சொல்ல நினைச்சதே இல்லை தாரகை. எனக்கு உன்னைப் பிடிக்கும், ஆனா கல்யாணம் கட்டுற அளவு பிடிக்கும்னு எனக்கே கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரியும். நீ பேசுறது, செய்றது, தப்புன்னா யார்னாலும் விடாம சண்டைப்போடுறது, பொறுமையா சொன்னா கேட்கிறதுனு எல்லாமே பிடிக்கும். உன்னோட பேசும்போது இன்னும் பேசணும்னு மட்டும்தான் எனக்குத் தோணியிருக்கு. அந்த ஃபீல் வேற யார்கிட்டயேயும் வந்ததே இல்லை.”

இப்படி பேசிக்கொண்டே இருக்க தாரகை அவனை அமைதியாகப் பார்க்க,
“இவகிட்ட என்ன சொல்ல வந்து என்ன உளறிட்டு இருக்கேன் நான்” என்று நிதானித்தவன்

“உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்கனு கமலா சித்தி சொன்னப்பதான் இதெல்லாம் நிரந்தரமில்லைனு புரிஞ்சது எனக்கு. நம்ம பேசினோம், ப்ரண்டானோம், அவ்வளவுதான் நமக்குள்ள சாத்தியம்! நம்ம இரு துருவமெல்லாம் இல்ல, இரண்டு உலகம்! எனக்குப் பிடிச்சதை உங்கிட்ட சொல்ல முடியல, சொன்னா நீ என்ன சொல்லுவன்னு பயம், நீ ஒத்துக்கிட்டாலும் இது நடக்காது. என் குடும்பத்துக்கு இதெல்லாம் செட் ஆகாது” என்றவனை முறைத்தாள் தாரகை.

“இப்ப ஏன் நான் இதெல்லாம் சொல்றேன்னா என்ன சொல்லி உங்கிட்ட இருந்து பேசாம இருக்கிறது எனக்குத் தெரியல, அதான் பேசாமயே இருந்துட்டேன். சந்தியா உங்கிட்ட சொன்னப்புறம் நீ என்ன நினைப்பியோனு ஒரு கவலை. நானே அதுக்குத் தெளிவா உண்மையை சொல்லிடலாம் நினைச்சேன். நீ என்னை ப்ரண்டா நினைக்கிறப்ப நான் இப்படி நினைச்சிருக்கக் கூடாதுதான்! அதுக்கு சாரி! காரணமே இல்லாம உன்னை அவாய்ட் பண்ணி கஷ்டப்படுத்தினதுக்கு சாரி” என்று மன்னிப்புக் கேட்டவன் எழுந்து நின்றான் அவள் பதில் சொல்வாளா என்று எதிர்ப்பார்த்தபடி.

“நான் உன் குடும்பத்துக்கு செட் ஆக மாட்டேனு சொல்ற?” என்று கேட்டவள் அவனை பேச விடாது

“ஏன்னா நாங்க வேற ஜாதியில்லையா?” என்று கேட்க, துரை பட்டென்று பேசினான்.

“வாயை மூடு தாரா! எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத, உன்னை ப்ரண்டா நினைக்க ஆரம்பிச்சதுல இருந்து இந்த நினைப்பே எங்கிட்ட கிடையாது. இப்படி பேசாதடி” என்று அதட்டினான்.

“அப்போ உனக்கு ஈகோ?” என்றவளை முறைத்து

“புரியாம பேசாத, உனக்கு என் குடும்பம் செட் ஆகாது. நீ இன்னும் நல்லா இருக்கணும், யூ டெசர்வ் தி பெஸ்ட்” என்றான்.

“என் பெரியப்பாவுக்கு மட்டும் இது தெரிஞ்சா அவ்வளவுதான், ஏதோ கல்யாண வயசுல இருக்கேன். உன்னோட பேசி பிடிச்சிருச்சு. அதையே பிடிச்சுட்டு இருக்க முடியுமா? ஏற்கெனவே ஒரு காதல்னால எங்க குடும்பம் பட்ட அவமானம் போதும்” என்றதும் தாரகை சீறினாள்.

“என்னை அவமானம் சொல்றீயா?”

“ஏய், என்னடி என்னமோ உன்னை காதலிச்சு கை விட்ட மாதிரி பேசுற?” என்று ராஜதுரை இவள் பேச்சில் குழம்பிப் போய் கேட்க

“ஓஹ் ஓஹ்! அந்த ஐடியா வேற இருக்கா?” என்றாள் நக்கலாக.

இவளிடம் பேசாமல் போய்விடுவதே நல்லது என்று நினைத்தவன் இரண்டடி வைக்க,
உயிரினை காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா
என்று தாரகை அலைப்பேசியில் பாடலை ஒலிக்கவிட்டாள். துரையின் நடை அப்படியே நின்றது. தாரகையை நோக்கிப் பாயும் காதல் நதியை தடுக்கப் பார்த்தவனை தவிக்க விட்டாள் தாரகை. அவன் சட்டென்று திரும்பி பார்க்க, காதல் ஸ்பரிசம் தாரகையையும் தீண்டியது.

கண்கள் பேசியது காதல் பரிபாஷை!

✅ End of Episode 23
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Mrs Beena loganathan Reader 3 weeks ago

வேறுபாடுகள் பல இருந்தும் விரும்புதே மனம் உன்னை... விருப்பமே இல்லாமல் 

விலகி நின்றேன் 
விலகி நிற்கும்போதுதான் விரும்பி அழைக்கிறது 
வேகமாக உன் நினைவை....
❤️ 1 more...
Srichitra Reader 3 weeks ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top