Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 32

ராஜதுரை தாரகைக்குத் தலை தீபாவளி சீர்வரிசை அன்று வருவதாக இருந்தது. அரிச்சந்திரன், அறிவு, கமலா இன்னும் சில சொந்தங்கள் எல்லாம் தாரகைக்கு வரிசை கொண்டு வந்தனர். சரியாக இவர்கள் வரும் நேரம் பன்னீர் வீட்டை விட்டு போனார். அரிச்சந்திரன் அவரிடம் நலம் விசாரிக்க, அவர் பதில் சொல்லவில்லை.

அதை பார்த்த தாரகைக்குக் கோபம். ராஜதுரை அப்போதுதான் வயலில் இருந்து வந்து மாடியில் அவன் அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்தான். தாரகை வந்தவர்களை வரவேற்றாள். கூடவே சுமித்ரா, சரோஜா, அருணா எல்லாரும் இருந்தனர். சமையல் வேலை நடந்து கொண்டிருக்க, பெண்கள் எல்லாம் சமையல்கட்டிலும் ஆண்கள் திண்ணையில், நடுவீட்டில் என்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அருணாவிடம்

“நான் மாடிக்குப் போய்ட்டு வரேன்த்த” என்றவள் படிகளில் தடதடவென ஏறிய சத்தம் ராஜதுரைக்குக் கேட்டது.

“அம்மாடி! வந்துட்டே இருக்கேன்” என்று துரை குரல் கொடுக்க,

தாரகை வேகமாக சென்று மெத்தையில் உட்கார்ந்தாள்.

“நீ ஏன் மேல வந்த, வந்தவங்களை பாரு” என்றவனை கண்கள் சிவக்க முறைத்தவள்

“எனக்குப் பார்க்க தெரியும். நீயும் உன் பெரியப்பாவும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என்று கத்தினாள்.

“என்னடி? நாந்தான் டிரஸ் மாத்த வந்தேன்ல. இப்போதானே வயல்ல இருந்து வரேன்” என்று துரை கேட்க

“ஏன் ஒரு அஞ்சு பத்து நிமிஷம் முன்னாடி வந்தா? உன் பெரியப்பாவை அரி நல்லாயிருக்கீங்களா கேட்கிறான், பதிலே சொல்லாம வான்னு கூட சொல்லாம போறார். இதான் பெரிய மனுஷனுக்கு அழகா?” என்று இன்னும் திட்ட, அவளருகே வந்தவன் “மெதுவா பேசு, கீழதக்க( கீழ வரைக்கும்) கேட்கும்” என்று அதட்டினான்.

தாரகை இரு கைகளையும் மடக்கி கோபத்தை அடக்க, ராஜதுரையோ “இதுக்குத்தான் அன்னிக்கு பெரியப்பாவோட சண்டை போடாத சொன்னேன், நீ கேட்கல. அந்த கோவத்தை பெரியப்பா காட்டுறாரு. அரி அதெல்லாம் கண்டுக்க மாட்டார், நீ பெருசு பண்ணாம வா” என்று அவள் கையை பிடிக்க,

“கையை விடு!” என்று உதறியவள் “அப்போ உன் பெரியப்பாவுக்குத்தான் சப்போர்ட், நான் அன்னிக்குப் பேசினது தப்பு சொல்ற? நீயும் அவரை மாதிரி ஆணாதிக்கவாதிதான்! உன்னைப் போய் கட்டினேன் பாரு, என்னை சொல்லணும்” என்று எரிச்சலாக பேசினாள் தாரகை.

ராஜதுரை தாரகைக்கு திருமணமாகி ஆறே மாதங்கள்தான் ஆகியிருந்தன. அந்த வீட்டில் மாமியார்-மருமகள் சண்டையெல்லாம் இல்லை. ஆனால் பன்னீருக்கும் தாரகைக்கும் முட்டிக்கொண்டே இருக்கும். அதுவும் பன்னீர் வீட்டுப்பெண்களை நடத்தும் முறை கண்டு தாரகைக்கு மனம் கொதிக்கும்.

சென்ற வாரம் தாரகை சரோஜாவையும் அருணாவையும் அவள் தியேட்டருக்குப் படம் பார்க்க அழைத்து சென்றாள். மதியம் இரண்டரை மணி காட்சி, முடிந்து வீடு திரும்ப ஏழாகிவிட்டது. வந்தவர்களை பன்னீர் கத்தி விட்டார்.

“என்ன ஆட்டம் போடுறீங்களா? குடும்ப மானம் என்னாகுறது? விளக்கு வச்ச அப்புறம் பொம்பளைங்க ஊரை சுத்திட்டு வரதா? வீட்டை இப்படிதான் போட்டு போறதா?” என்று எகிற, தாரகை கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்தவள்

“ஏன் விளக்கு வச்சா போக கூடாதா மாமா? காலையில நாலு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சு கண்ணன் கடையில ஒரு டீ குடிச்சிட்டு நாட்டைக் காப்பாத்துறீங்க? வெட்டி கதைதானே பேசுறீங்க? வீட்டை போட்டு போய்ட்டாங்கனு கத்துறீங்க? வீட்டைத் தூக்கிட்டா போக முடியும்?” என்று பன்னீரை பேச

“உங்கிட்ட நான் ஒன்னும் பேசல.. ” என்று பன்னீர் தாரகையிடம் சொன்னவர் சரோஜாவை முறைத்தார்.

ராஜதுரை உரம் வாங்கிவிட்டு அப்போதுதான் வீடு வந்தான். சத்தம் கேட்டு வாசலில் உரத்தைப் போட்டு உள்ளே வர, பன்னீர் அவனை கத்தினார்.

“என்னடா நடக்குது? வீட்டுக்கு வந்தா ஒருத்தருமில்லை. இதோ இவங்க இரண்டு பேரும் காலம் போன கடைசியில சினிமா பார்க்க போயிருக்காங்க, டீ கடையில சொல்றானுங்க! மானமே போவுது, உன் பொண்டாட்டியை அடக்கி வைப்பியா இல்லையா நீ?” என்று ராஜதுரையைத் திட்ட

“தாரக! என்ன ஆச்சு?” துரை கேட்க,

“அவளை என்னடா கேட்குற? அதான் நான் சொல்றேன்ல” என்று அதட்டியவர் சரோஜாவிடம் “அதான் வீட்ல இவ்வளவு பெரிய டீவி இருக்கே, அப்பறம் என்னத்துக்குடி சினிமாவுக்கு போன? ஏன்மா உனக்கு என்ன மருமவ வந்ததும் அறிவில்லாம போச்சா?” என்று அருணாவையும் அவரை பேச தாரகைக்குப் பொறுக்கவில்லை.

“வருஷமெல்லாம் உங்களுக்கு வடிச்சு கொட்றாங்கதானே? ஏன் ஒரு நாள் இரண்டு மணி நேரம் சினிமா பார்த்ததுல என்ன உலகம் தடுமாறி போச்சு? அவங்க உங்க மனைவியா இல்லை அடிமையா?” என்று தாரகை பன்னீரை கேட்க

“தாரா விடும்மா! அவர் என்னைத்தானே பேசுறார்” என்று சரோஜா சண்டையை நிறுத்த நினைக்க, அவரை முறைத்தாள் தாரகை.

“தாரகை! வா நீ” என்று துரை அவளை அழைக்க,

“நீங்களும் பேச மாட்டீங்க, பேசுறவளையும் பேச விட மாட்டீங்க.” என்று அவனை கத்த “தாரகை!” என்று பல்லைக் கடித்தான்.

“ஓஹ், உங்க வீட்டுக்காரர் உங்களை பேசட்டும். இவங்களை ஏன் பேசுறார், எங்க போறாங்க இவங்க? கல்யாணம், காரியம்னு எல்லாத்துக்கும் நீங்க இரண்டு பேர்தானே போறீங்க? இவங்க என்ன வாட்ச்வுமனா?” என்று கோவமாகக் கேட்க, அருணாவுக்கு கண்கள் கலங்கியது.

அவர் மகன் கேட்க வேண்டிய கேள்விகள், மருமகள் கேட்கிறாள். மகனுக்கு பாசமில்லை என்றில்லை, இதனை எல்லாம் பகுத்தறியும் பக்குவம் அவனிடம் இல்லை.

“என்ன தாரா? என்ன பேசுற நீ? பெரியவங்களை மதிக்கிறது இல்லையா? பேசாம போ” என்று சரோஜா அதட்ட, தாரகை பேசும் முன்

“என்னடா ராஜா? உன் பொண்டாட்டியைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கிறியா நீ?” என்று பன்னீர் கேட்க,

“அவ தெரியாம பேசிட்டா பெரியப்பா” என்றவன் “வா” என்று தாரகையை மாடிக்கு இழுத்துப் போனான்.

“உன்னை பேசாதனு சொன்னாலும் பேசுவியா நீ?” என்று துரை மனைவியை முறைக்க,

“ஆமா பேசுவேன்” என்றாள் தாரகை.

“உன்னால வீணா வீட்ல சண்டைடி, இப்ப பெரியம்மாவுக்கும் அம்மாவுக்கும் பிரச்சனை வரும்.” என்று எரிச்சலாக சொன்னவன் அப்படியே தரையில் சரிந்து உட்கார்ந்தான்.

“பிரச்சனை வந்தா என்ன இப்போ? உனக்கு பிரச்சனை வரக்கூடாது வீடு அமைதியா இருக்கணும், ஆனா உன் அம்மா மேல அக்கறை இல்லை” என்று கடுப்பாக சொல்ல,

“என்னடி எனக்கு எங்கம்மா மேல அக்கறை இல்லைனு நீ கண்டியா?” பொறுமையிழந்து துரை கத்தினான்.

இருவரும் கணவன் மனைவி என்பது மறந்தது போல், முன்பெல்லாம் எப்படி சண்டை போடுவார்களோ அப்படி ஒரு சண்டை, அவரவர் நிலையில் நிலைத்து நின்றனர்!

“இல்லைதான். கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு உன் வீட்ல உள்ளவங்க மேல ரொம்ப பாசம் நினைச்சேன். அதெல்லாம் உன் ரத்தமா இருக்கணும், உங்க அக்காவை அத்தான் பேசினார்னு கேட்ட, உன் பெரியப்பாவுக்கு ஒன்னுன்னா சண்டைக்கு நிக்கிற? உன் அம்மாவை யோசிக்கவே மாட்டேங்கிற, எனக்கு பிடிக்கவே இல்லை துரை! நான் எக்ஸ்பெக்டே பண்ணல” என்று தாரகை சொல்ல சொல்ல துரைக்கு கோவம்தான் வந்தது. துரைக்கு புரியவில்லை, அம்மாவை அம்மாவாகவே பார்த்தான். எல்லாம் இயல்பு என்ற எண்ணம். அவரும் ஒரு பெண், அவருக்கும் ஒரு மனம் என்று எண்ணவில்லை!

ராஜதுரை முறைக்க,
“உங்கம்மாவை எதுக்குமே இந்த வீட்ல மதிக்கிறதில்லை, விசேஷம்னாலே சரோஜாத்த தான் போறாங்க, உன் அப்பா இல்லைனா உன் அம்மாவுக்கு மதிப்பே இல்லையா? சும்மா சாப்பாடு போட்டா அவங்களை நல்லா பார்த்துக்கிறது ஆச்சா?” என்று கத்திய தாரகை அவன் பதிலை எதிர்ப்பார்க்காது கீழே இறங்கி போனாள்.

அன்றிலிருந்து துரைக்கும் தாரகைக்கும் சரியான பேச்சுவார்த்தை இல்லை. துரை தாராவை சமாதானம் செய்ய நினைத்தாலும், தாரகைக்கு கோபம். அவள் இரங்கவே இல்லை. துரையும் கடுப்பில் விட்டுவிட, இன்று மீண்டும் வெடித்தாள்.

துரைக்கு எப்போதும் போல் தாரகையிடம் சண்டையிட்டு விட்டு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவன் வீட்டில் இயல்பாக நடப்பதை அவள் ஏற்காமல் இருப்பது பிடிக்கவில்லை. ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் விரும்பியபடி போகலாம், விருப்பம் என்பதெல்லாம் ஆணினத்தின் வரம் என்று நினைத்திருந்தான்.

அரிச்சந்திரன் முன்பு சொன்ன நிஜத்தை ஏற்க முடியாமல் தாரகை தடுமாறினாள். அதனால் துரையுடன் சண்டை! கோபம் எல்லாம்.

“நமக்கு தலை தீபாவளி இந்த வாரம்தானே? அதுக்குள்ள ஏன்டி அணுகுண்டா வெடிக்கிற?” என்று மனைவியை நெருங்கி நின்று முழுக்கை சட்டையை மடித்து விட்டபடி ராஜதுரை கேட்க, நிமிர்ந்து அவனை பார்த்தாள் தாரகை. இருபக்கமும் அணை கட்டி நின்றிருந்தான்.

“என்ன சொன்ன? என்னை ஏண்டா கட்டினேனா சொல்ற? என் தம்பி அப்பவே சொன்னான், பங்காளி உஷாரா இருடான்னு, நான் கூடத்தான் கேட்கல” என்று விளையாட்டாக துரை சொல்ல தாரகை இன்னும் சமாதானமாகவில்லை.

“அம்மாடி! நம்ம இங்க சண்டை போட்டு இருக்கோம், உன் அண்ணன், என் தம்பி எல்லாம் நம்ம கொஞ்சிகிட்டு இருக்கோம்னு நினைச்சுப்பாங்கடி, வா போகலாம். டிரஸ் ஓகேவா பாரு” என்று ராஜதுரை தாரகையின் முகத்தை நிமிர்த்தினான்.

✅ End of Episode 32
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

Radhi Reader 2 months ago

Nice 

Kavi Natarajan Reader 1 month ago

💞💞💞💞💞💞💞

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top