Episode 22

ராஜதுரையின் பிற்போக்கு எண்ணங்கள் இப்போது அவன் மனதுக்கு முன்னே சென்றன, காதல் என்பது காதில் கூட கேட்க கூடாத வார்த்தை அவன் அகராதியில்.

அதனால் அந்த வார்த்தையை வைத்து அவனுக்கும் தாரகைக்குமான பந்தத்தை பெயரிட துரைக்குப் பிடிக்கவில்லை. வலிந்து, முயன்று எல்லாம் இருவரும் நேசம் வளர்க்கவில்லையே, எல்லாம் இயல்பாக நடந்தது.

கடல் அலை, காற்றின் மழை என்பது போல் மிக மிக இயற்கையான ஒரு நட்பு உருவாகி, பேரன்பாக பெயர் பெற்று நின்றது. முயன்று நேசம் வளர்த்திருந்தால், முயற்சியைக் கைவிட்டால் காதலும் கை விட்டிருக்கும், ஆனால் அது இயல்பில் இசைக் கூடிப்போன உணர்வாகிற்றே!!!

தமிழ் போல் இனித்தவள் அல்லவா அவன் தாரகை??!! மறக்க நினைத்தவனுக்கு நினைக்க மட்டுமே முடிந்தது. துரைக்கு இசைத்த இனித்த இரவுகள் எல்லாம் இப்போது இருளே!!

எத்தனையாக மனது தவித்தாலும் தாரகையை தவிர்ப்பதை மட்டும் துரை தடை செய்யவில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தபோதும் அதை செய்தான். மனதை அடக்கினான்! பிடித்தவள் என்று செய்த செயல் எல்லாம் இப்போது செய்ய பிடிக்கவில்லை.

தாரகை அவனை கிண்டல் செய்வது போல் ‘பூமராகவே’ இருந்தான் ராஜதுரை.

தாரகையைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு ஆவல் இருந்தது, மனத்தில் அவளுக்கான தேடல் இருந்தது. ஆனால் எதையும் செய்யவோ துவங்கவோ மனமில்லை துரைக்கு. பெரியப்பா, உறவு, கௌரவம் என்று எல்லாம் அவன் முன் நின்றது. ஏற்கெனவே ஒரு காதலில் குடும்பம் மிகப்பெரிய அவமானத்தைத் தாங்கியிருக்க, தானும் அப்படி செய்தால்..??

இப்படி நினைக்கவே நெஞ்சம் அதிர்ந்தது! எப்படி செய்வான் அப்படி ஒரு செயலை? அதுவும் தாரகையுடன் ஒரு திருமணம் எட்டாவது அதிசயம்?? எட்டாத அதிசயமும் கூட!

முதலில் தாரகைக்கு அவனைப் பிடிக்குமா? அவனுக்குப் பிடித்த மாதிரி பிடிக்குமா? அறிவிடம் பேசுவது போல் தன்னிடமும் நட்பாக நடக்கிறாள். அதனை உடைத்து காதல், கல்யாணம் என்று எப்படி பேச முடியும்? அப்படி பேசினாலும் இருவருக்கும் இருப்பது எல்லாம் முற்றிலும் முரணே!

இந்த பிடித்தம், நெருக்கமெல்லாம் நித்தமும் வரும் பேச்சினால் என்று தெளிந்தவன் பேசாமல் இருக்க முடிவு செய்தான். ஆனால் அவன் மௌனத்தில் துரையைத் தேடுவாள் தாரகை என்று நினைக்கவில்லை.

தினமும் ஒரு குறுஞ்செய்தி, இவன் சில நாட்கள் அதற்கு ‘வேலை இருக்கிறது’ என்று பொய் சொன்னான். பின் பொய் சொல்லும் வேலையைக் கூட விட்டுவிட்டான். தவிர்க்க வேண்டும் என்று நினைத்தவன் அதில் ஏன் குறை வைக்க வேண்டும் என்று நினைத்து முழுமையாக தவிர்த்தான்.

தாரகையினை நினைத்து தவிக்கும் மனத்திடம், “அவ என்ன பெரிய இவளா? அவளைப் பார்க்காமல் பேசாமல் தானே ஆறு மாதம் இருந்தேன்?” என்று அதட்டி அடக்கி வைத்தான்.

வேலை செய்யும்போது எப்போதும் டிராக்டரில் பாடல் ஓடவிடுபவனுக்கு எந்த பாட்டைக் கேட்டாலும் அவள் நினைவாக இருக்க, பாடல் கேட்பதை கூட நிறுத்திவிட்டான்.

விவசாயி அல்லவா? காதலை களையென நினைத்தான். அது செழித்து வளரும் நெற்கதிர் என்று அறியாது போனான். துரை வீட்டிலும் அவனுக்குத் தீவிரமாகப் பெண் தேட, அவனைத் தேட வைத்த பெண்ணை அவன் தேடவில்லை. ஆனால் அவள் தேடினாள்.

தாரகையும் ஒரு மாதமாகப் பார்க்கிறாள், துரை அவளிடம் பேசவே இல்லை. சில நாட்கள் வேலை இருக்கிறது என்றவன் இப்போது அதனை கூட சொல்வதில்லை.

இயல்பாகத் தோன்றிய உணர்வல்லவா? அது இயல்பை மீறி விட இடராகியது.

“ஏன் பேசல? என்ன பிரச்சனை அவனுக்கு?” என்று எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. யாரிடமும் கேட்க பிடிக்கவில்லை.

‘எந்த பிரச்சனையும் அவனுக்கு இருக்கக் கூடாது” என்று வேண்டியது மனம்.

இதற்கிடையில் ஒரு நாள் துரை தாரகையின் வீட்டின் வழியே சென்றான். மெதுவாகவே சென்றான் அவள் வீடு வரும்போது. மனதை போல் கண்களும் தாரகையைத் தேடின, வீட்டின் வெளிப்பக்கம், மாடி என்று என்று மெல்ல பார்த்தவனுக்கு அந்த நேரம் அவள் திரையரங்களில் இருப்பாள் என்று பெருமூச்சுடன் வண்டியை செலுத்தினான்.

அவன் ஏங்கி பார்த்து செல்ல, அவன் பார்வையை பார்த்து கோபமுற்று நின்றாள் தாரகை. ராஜதுரை வண்டியை மெதுவாக நிறுத்தி தாரகையின் வீட்டினைப் பார்த்தது, அவன் கண்ணில் இருந்த தேடல் எல்லாம் பார்த்தவளுக்குப் பயங்கர கோபம். வீடு வரைக்கும் வந்தவன் எட்டிப் பார்க்கக் கூட இல்லை. என் அழைப்புகளை ஏற்கவுமில்லை என்று ஆத்திரத்தில் அவனுக்கு உடனே அழைத்தாள்.

ராஜதுரை இப்போதும் எடுக்கவில்லை. தாரகை விடவில்லை. ராஜதுரைக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள். கிட்டதட்ட விடாது அழைப்பு, தொடர்ந்து பத்து முறை அழைக்க, துரைக்குப் பதற்றமானது.

“ஹலோ! என்னாச்சு தாரக?” என்று துரை அவசரமாகக் கேட்டான். ஒரு மனம் இன்னும் பேசு என்று காதல் கொண்டு ஆவல் தூண்ட, மறுமனமோ பேசாதே என்று எச்சரித்தது.

தாரகை உடனே பதில் சொல்லவில்லை. பெயர் சொல்லா உணர்வில் ஒரு நிமிடம் தத்தளித்தாள். இத்தனை நாள் கழித்து பேசுகிறான் என்ற ஆசுவாசம், இத்தனை நாள் பேசவே இல்லை என்ற ஆவேசம் என்று இருமுக உணர்ச்சியில் தவித்தாள்.

“தாரக! என்னாச்சு?” என்று மீண்டும் துரை பதறி கேட்க,

“ஏன் இத்தனை நாள் பேசல துரை?” என்று கேட்டாள்.

“வேலை இருந்துச்சுன்னு சொன்னேனே?”

“என்ன வேலை? ஒரு மேசெஜ் கூட ரிப்ளை செய்ய முடியாத அளவு வேலை செஞ்சிட்டே இருக்கீங்களோ?” நக்கலாகக் கேட்டாள்.

“ஏய்! என்ன நாட்டாமை பண்ற? வேலை இருக்கு, பேசல. என்ன இப்போ?” என்றான் எரிச்சலாக.

உண்மையில் நிறைய வேலையோ என்ற கவலையில், “ஓகே, ஓகே! ஆளையே காணும்னு கேட்டேன். இன்னிக்கு எங்க வீட்டு வழியா போனீங்க, வந்திருக்கலாமில்லை?” என்று தாரகைக் கேட்க

தாரகை பார்த்துவிட்டாள் என்று புரிய, தலையில் அடித்துக்கொண்டான் ராஜதுரை.

“வேலை இருந்துச்சு, ஏன் உங்க வீட்டு ரோட்ல கூட வரக்கூடாதா?” அவன் இடக்காகக் கேட்க, தாரகைக்கு அவன் பேச்சே புரியவில்லை.

“எதுக்கு இப்போ இப்படி பேசுற நீ? என்ன பிரச்சனை தெரியலயே, ப்ரண்டைக் காணும்னு கேட்டா ஓவரா பண்ற” என்று தாரகையும் எரிந்து விழுந்தாள்.

தாரகையை திருமணம் செய்ய ஆவல் இருந்தாலும், அதை காதலாய் சொல்ல மனமில்லை. அவளை விட்டுவிலகி இருக்க நினைக்க அவளாகவே வந்து பேச, அதுவும் நண்பன் என்று பேசிவிட உள்ளே மனம் வருந்தவே செய்தது. தாரகை மனத்தில் தன்னை நண்பனாகவே நினைக்க, தான் மட்டும் ஆவல் வளர்த்து ஏன் வருந்த வேண்டும் என்று நினைத்தவன், அந்த ஏமாற்றத்தை அவள் மீதான ஏக்கத்தை கோபமாகக் கொட்டினான்.

“நீதான் பிரச்சனை போதுமா? வேலை இருக்குன்னு சொல்றேன், சும்மா போன் போட்டு உயிர வாங்குற. உன் ப்ரண்ட்ஷிப்பே வேண்டாம் போடி” என்றான்.

தாரகைக்கு ஒரு நொடி அதிர்ச்சி. ஆறு மாதத்தில் இப்படி அவளை அவன் பேசியதில்லை. கருத்து வேறுபாடு இருந்தாலும் வார்த்தையின் வாஞ்சை குறைந்ததில்லை.

ராஜதுரை கோபம் காட்ட, “என்ன நான் நான் பிரச்சனையா?” என்றாள் தாரகை.

“ஆமா, உனக்குத்தான் வேலை வெட்டி இல்லை, என்னோட பேசுவ. எனக்குமா இல்லை.? போனை எடுக்கலைன்னா விடாம ஏன் போன் பண்ணிட்டே இருக்க?” என்று கத்தினான்.

இப்போதெல்லாம் தாரகையைக் கடிந்து பேச மனமில்லை அவனுக்கு. அப்படி பேசிய பின் அவனிடம் இருக்கும் அமைதி போய்விட, தாரகையிடம் அமைதி உணர்ந்தான். இன்று அப்படியில்லை, வேண்டாம் என்று முடிவு செய்து பின் எப்படி பேசினால் என்ற நிலைக்குச் சென்றவன் மொத்தமாக விலக நினைத்தான்.

தன்னால் தாரகையைத் தேடும் மனதை கட்டுப்படுத்த வேறு வழி அவனுக்கு இருக்கவில்லை. காதல் சொல்லி, அவளை சம்மதிக்க வைக்கும் சாமர்த்தியமும் இல்லை அவனிடம். காதல் என்பதே அவனுக்கு அவச்சொல்லாக இருந்தது.

“இனிமே பண்ணமாட்டேன் டா” என்று தாரகையும் கோபமாகச் சொன்னவள் போனை வைத்துவிட்டாள்.

தாரகை மனம் தணலாகக் கொதித்தது! ‘என்னை பிரச்சனை’ என்றுவிட்டானே என்று கோபமுற்றாள்.

தாரகைக்கு துரையிடம் பேசிய பின் மனத்தின் அமைதி எங்கோ தூரம் போனது. எத்தனையோ முறை அவனிடம் சண்டை போட்டிருக்கிறாள், ஏன் அவனைப் பற்றி புகார் அளிக்க காவல் நிலையம் வரை சென்றிருக்கிறாள். அப்போதெல்லாம் ஒன்றுமே தோன்றியதில்லை.

அதற்கெல்லாம் ஒரு அர்த்தம் இருந்தது. இன்றைய அவன் செயல், சொல் எல்லாம் அர்த்தமில்லாதவையாகவே தாரகைக்குப் பட்டது. இன்று ஒன்றும் அவர்கள் பேசவில்லை. கிட்ட தட்ட ஆறு மாதமாக தொடர்ந்த நட்பு, அதற்கு முன்னும் இருவருக்கும் அறிமுகம் இருந்தது.

இந்த ஆறு மாதத்தில் அவன் வருத்தங்களை கூட மறைவின்றி தாரகையிடம் பகிர்ந்திருக்கிறான், அப்படியானவன் இன்று அர்த்தமின்றி கோபம் கொள்ள என்ன காரணம் என்று தாரகைக்கு எப்படி யோசித்தும் புரியவில்லை.

இரவு வெளித்திண்ணையின் வாசப்படியில் தூண் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தவளுக்கு காரணமின்றி கோபம். துரையின் காரணம் என்ன என்று தெரியாத கோபம், தன்னைப் பேசிய கோபம் என்று கோபத்தின் தசாவதாரத்தில் இருந்தாள் தாரகை.

“என்னாச்சுடி?” என்று தங்கை அருகில் உட்கார்ந்து அரி கேட்கவும் தாரகைக்கு அண்ணனிடம் மறைக்க என்னவிருக்கிறது? எல்லாவற்றையும் சொன்னாள்.

அரி மனம் துள்ளியது! பெருமூச்சுடன் தங்கையிடம்,

“அவன் பேசலன்னா நம்ம வீட்டு இட்லிக்கு சட்னி இல்லாம போகப்போவுதா என்ன? அவன் கிடக்குறான்னு விடுவியா?” என்று கேட்க

”முன்னாடின்னா நானும் அப்படித்தான் இருந்திருப்பேன்” என்று அரியை பேச்சில் அச்சமூட்டினாள்.

“முன்னாடின்னா? அப்போ இப்ப என்னடி?” என்று அவசரமாகக் கேட்க

“முன்னாடி அவனை எனக்குத் தெரியாது. இப்போ ஹி இஸ் மை ப்ரண்ட் டா அரி. நிஜமா நல்ல பையன் தெரியுமா? ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா பேசினது இல்லை. தப்பா பேசினதில்ல, எவ்வளவு பார்க்கிறோம் ஆளு பூமர்னாலும் he is wholesome!” என்றாள் சிறு புன்னகையுடன்.

“உன்னோட ப்ரண்ட் தீடீர்னு பேசலன்னா போடான்னு போயிடுவியா? துரை வேற ஓவர் சீன், அந்த லூசு மனசுல கஷ்டம் இருந்தாலும் சொல்லாம வெட்டி பந்தா காட்டுவான். என்ன பிரச்சனைன்னு சொல்லாம என்னை பிரச்சனைனு சொல்றான் அறிவுக்கெட்டவன்!” என்று அப்போது துரையைத் திட்டாததை எல்லாம் இப்போது திட்டினாள்.

“உன்னை பிரச்சனை சொல்லி உன் ப்ரண்ட்ஷிப் வேண்டாம்னு சொல்றான், உனக்கு சுயமரியாதை இல்லை? இதுக்கு மேல எப்படி ஒருத்தன் மூஞ்சில அடிச்ச மாதிரி எங்கிட்ட பேசாதனு சொல்லுவான்?”

அரி தங்கையின் குணமறிந்து அதற்குத்தக்கவாறு பேசினான்.

“அவன் சொல்றதெல்லாம் புரியுது. ஆனா அந்த வேஸ்ட் வெங்காயம் தீடீர்னு ஏன் அப்படி சொல்லணும்? நான் அவனை முன்னாடி எவ்வளோ பேசியிருக்கேன், சண்டைப் போட்டிருக்கேன். அதுக்கு அப்புறம் பேசினவன் ஒரு மாசமா என்னை அவாய்ட் பண்றான்.” என்று தாரகை அண்ணனிடம் சொல்ல, அரியைப் பொருத்தவரை அவனுக்குக் காரணம் தேவையில்லை.

இனி தங்கையிடம் அவன் பேச மாட்டான் என்பதே போதுமானதாக இருந்தது.

“விடு தாராம்மா! ஏன் இவ்வளவு யோசிக்கிற? அவன் பெரியப்பா எதாவது சொல்லியிருப்பார், சேர்க்கை சரி கிடையாது தெரியும்ல, எலெக்ஷன் வருது. அந்த பாண்டியன் எதாவது சொல்லிக்கொடுத்திருப்பான். நீ அவனை ப்ரண்டா நினைச்ச மாதிரி அவன் உன்னை நினைக்கல, நினைச்சிருந்தா காரணம் சொல்லியிருப்பான்ல”

“சும்மா அதை யோசிச்சு என் தங்கச்சி மூஞ்சி இப்படி டல்லாகக் கூடாது! தாரகைன்னா ஸ்டார் போல இருக்கணும்” என்று பேசி தங்கையின் மனதைத் தேற்றினான்.

அடுத்து சில நாட்கள் கடந்தன. ஆனால் துரையால் தாரகையைக் கடக்கமுடியவில்லை. தாரகைக்கும் அப்படியே!

துரை தாரகை நட்பு மிக மிக இயற்கையான ஒன்று! பெருமுயற்சியின்றி பேச்சால், இசையால் இணைந்த ஒன்று. கருத்துகள் ஒத்து இல்லாவிட்டால் ஒருவர் பக்கம் கேட்கும் அளவு ஒரு பொறுமை இருவருக்கும் இருந்தது.

வெற்றிடம் ஒன்று இருவர் உள்ளத்திலும் உருவானது. நித்தமும் பேசி பழகிய இரவுகளை இருவரும் இழந்தனர்.

தாரகைக்குத் துரையை நினைவூட்ட நிறைய விஷயங்கள் இருந்தன. எதாவது பாடல் கேட்டால், அவன் அந்த பாடலைப் பற்றி சொன்னது நினைவு வரும், கூடவே அவன் நினைவும். அதை விட கூடியது அவன் மீதான கோபம். துரைக்கு தாரகையை நினைவூட்ட எதுவுமே தேவைப்படவில்லை. மறக்காமல், நினைத்துக் கொண்டே இருந்தான்.

ராஜதுரைக்கு எல்லார் மீதும் கோபம் வந்தது, அவன் மீதே அதிக கோபம். திருமண வயதில் இருப்பதால் ஒரு பெண் மீது ஈர்ப்போ என்று நினைத்தவன் அம்மா திருமணத்திற்குப் பெண் பார்க்க முழு ஒத்துழைப்பு தந்தான். அவன் நேரம் ஒன்றும் அமையவில்லை.

அருணாவும் சரோஜாவும் ராஜதுரைக்குப் பெண் அமையவில்லை என்று புலம்ப, பன்னீர் உடனே

“ஜோசியர் கிட்டஎதாச்சும் பரிகாரம் பண்ணினா சரியாகிடுமா கேட்கணும். நம்ம பைய வயசுல இருக்கவனுங்களுக்கு எல்லாம் கல்யாணம் முடிவாகுது” என்று அவரும் வருத்தப்பட்டார்.

ஜோசியர் என்றதுமே பாமணி ஜோசியர் இவனுக்குக் காதல் திருமணம் என்று சொன்னது நினைவில் வந்து நிம்மதி பறித்தது. இதில் மைதிலி வேறு அதனை நிஜமாக்கியவள் அல்லவா?

அவன் நிம்மதி கெடுப்பது போல் அருணா கூட மகனிடம், “டேய் எந்த புள்ளையாவது பிடிச்சா சொல்லுடா, உன் மனசுக்குப் பிடிச்ச மாதிரி அமையணும்னு பாமணி ஜோசியர் சொன்னார்ல” என்றதும் அம்மாவை முறைத்தான் துரை.

“புள்ள பெத்தா ஒழுங்கா அவனுக்குப் பொண்ணு பார்த்து கட்டிவைக்கணும். என்னையே எனக்குப் பொண்ணு பார்க்க சொல்லுவியா? அப்பறம் நீ எதுக்கு இருக்க?” என்று அம்மாவிடம் கோபம் கொண்டான்.

“ஏண்டா ஜோசியக்காரர் சொன்னாரேனு கேட்டேன். நான் பார்த்துக் கட்டிவைக்கணும்னு வக்கணையா சொன்னா பத்தாது. அம்மா பேச்சைக் கேட்டு நடந்திருக்கணும். சென்னையில் படிச்சுட்டு அங்கயே ஒழுங்கா வேலைப் பார்த்திருக்கணும். பையன் படிச்சிட்டு என்ன பண்றானுதான் பொண்ணு வீட்ல கேட்குறாங்க, ஒன்னு அக்ரீயாச்சும் படிச்சிருக்கணும். எதாச்சும் விவசாயம் சம்மந்தமா கவர்மெண்ட் வேலைக்குப் போயிருக்கலாம்.”

“நீ என்னடா செய்ற? விவசாயம் நம்ம பரம்பரையா செய்றதுதான். அதுக்காண்டி படிச்சிட்டு இதை மட்டும் செய்யணுமா? நமக்கு என்ன ஏக்கர் கணக்குல நிலமிருக்கா? அறிவெல்லாம் வெளி நாடு போக ப்ளான் பண்றானாம். ஊர் பக்கம் கூட வராம அதுக்குப் படிக்கிறான்” என்று அருணா வெகு நாட்கள் கழித்து தன் ஆற்றாமையை மகனிடம் கொட்ட, ராஜதுரைக்குக் கோபம் வந்தது.

“அப்போ உனக்கும் நான் வெளி நாடு போய் சம்பாரிச்சுக்கொட்டணும். அதானே? பெத்த மகன் கண்ணு முன்னாடி இருக்க வேண்டாம். அதானே?” என்று கத்திவிட்டு சென்றான்.

அம்மாவின் மனதை நோகடித்து விட்டோமே என்று வருத்தமிருந்தாலும் அவன் கோபம் விடவில்லை. இதற்கிடையில் ஒரு நாள் சந்தியாவிடமிருந்து தாரகைக்கு அழைப்பு வந்தது. எப்போதாவது அழைப்பாள்தான்.

“சந்தியாக்கா எப்படி இருக்கீங்க? பேபி எப்படி இருக்கு? செக் அப் போனீங்களா?”” என்று உற்சாகமாக அவளிடம் பேசினாள் தாரகை.

“எல்லாம் நல்லாயிருக்கோம். நீ என்ன பண்ற? தியேட்டர்ல என்ன படம் ஓடுது?” என்று பொதுவாகப் பேசியவள்

“தாரா, உங்கிட்ட இதைப் பேசற ரைட்ஸ் எனக்கில்லை. ஆனா என்னால பேசாம இருக்க முடியல” என்று முன் ஜாமீன் வாங்கினாள்.

“என்னக்கா சொல்லுங்க” தாரா கேட்க

“அது வந்து துரை உங்கிட்ட பேசுறதில்லை ஏன் தெரியுமா?” என்று அவளைக் கேட்டாள்.

“ஏன்னா என்னைக் கேட்டா எப்படி தெரியும்?”

“எனக்குத் தெரியும். அதுக்கு நீதான் காரணம்” என்றதும் தாரகை பொங்கிவிட்டாள்.

“அந்த பூமர் கூட சேராதீங்க கா, சும்மா என்னை பிரச்சனை சொல்றீங்க இரண்டு பேரும்” என்று கோபத்துடன் கேட்க

“நீன்னா, உன்னால அந்த பூமருக்கு வந்திருக்க காதல்” என்றதும் தாரகைக்கு அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. தாரகைப் பற்றி துரை சொல்லி கேள்விப்பட்டிருந்த சந்தியாவும் பயத்தில் வேகவேகமாகப் பேசினாள்.

“அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சதாலதான் பேசல, இன்னும் பேசினா ரொம்ப ரொம்ப பிடிச்சிரும்னு பயம். அவன் எங்கிட்டனு இல்லை யார்கிட்டவும் சொல்லல, கொஞ்ச நாளாவே அவன் ரொம்ப அப்செட், நான் கேட்டுட்டே இருக்கவும் சொல்லிட்டான். பட் அவனுக்கு உன்னைத்தான் பிடிக்கும், காதலை இல்லை! நீ சொல்லுவியே பூமர்னு அப்படித்தான் இருக்கான். அவனுக்கு உன்னைப் பிடிச்சாலும் அவன் சொல்ல மாட்டான். வீட்டை மீற மாட்டான், அதைவிட அவனுக்கு அவன் போட்டிருக்க கலாச்சார கோட்டைத்தாண்ட மாட்டான்.”

“இப்ப எதுக்கு இதை எங்கிட்ட சொல்றீங்க கா?” என்று தாரகை எந்த உணர்வுமின்றி கேட்டாள்.

“சொல்லாம இருக்கறது தப்புனு தோனுச்சு. உனக்கும் அவனை பிடிச்சிருந்தா?”

“பிடிக்கலைன்னா?” தாரகை பட்டென்று கேட்க

“பிடிக்கலைன்னா நான் சொன்னதை மறந்துடு! பிடிச்சிருந்தா என்ன செய்யணும்னு நான் தாரகைக்கு சொல்லத்தேவை இல்லை” என்ற சந்தியா போனை வைத்துவிட்டாள்.

தாரகை சந்தியாவின் கேள்வியைத் தனக்குள் கேட்க தொடங்கினாள்.

✅ End of Episode 22
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Mrs Beena loganathan Reader 3 weeks ago

பேசாமல் இருக்கும்போது தான் பல விஷயங்கள் மனதிற்கு

புரிய வருகிறது
பிரிதல் தான் 
புரிதலுக்கு வழி வகுக்கும்.....
❤️ 2 more...
Srichitra Reader 3 weeks ago

Nice 

❤️ 1 more...
Radhi Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top