Episode 25

அருணாவுக்கு மகனை பார்க்க பார்க்க கோபம் அதிகமானது.

“ஏண்டா அறிவு இருக்கா உனக்கு?” என்று திட்டினார். துரை பதில் பேசவில்லை.

 

“இந்த பேச்சை விடும்மா” என்று அதட்டினான்.

 

அருணா சட்டென்று அவன் கையை எடுத்து தன் தலையில் வைத்தவர்,

“சத்தியமா அந்த பொண்ணை நீ நினைக்கல சொல்லுடா” என்று கேட்க

 

“சின்ன புள்ளையாம்மா நீ? சத்தியம் கித்தியம்னுட்டு” என்று கையை விலக்க அவர் விடவில்லை.

 

“என்னம்மா இப்போ? அவளை பிடிக்கும்தான். ஆனா தாரகைக்கும் நமக்கும் ஒத்துவராதும்மா, அவ சாதாரணமா செய்ற ஒரு விஷயம் கூட நமக்கு மரியாதை குறைவா இருக்கும் மா. நீ எதிர்ப்பார்க்கிற மாதிரியான மருமகளா அவ இருக்கமாட்டா” என்றவனை தீவிரமாக  பார்த்த அருணா

 

“மொதல்ல நான் எதிர்பார்க்கிற மகனா நீ நடந்துக்கிறியா ராஜா?” என்று கேட்டார்.

 

துரை உடனே அம்மாவை முறைத்தவன்,

“அப்படி நான் என்ன நீ எதிர்ப்பார்க்கிற மாதிரி நடக்கல?” என்றான் கோபமாக.

 

“நான்   நீ படிச்ச படிப்புக்கு ஏத்த  வேலைக்குப் போகணும்னு நினைச்சேன், செஞ்சியா டா? கேட்டா கோவம் வரும்.  பணத்துக்கு சொல்றேன்னு நினைப்ப. என்ன இந்த வாழ்க்கையில் நான் எதிர்ப்பார்த்த மாதிரி நடந்தது? உங்கப்பா நட்டாத்துல விட்டுட்டுப் போய்ட்டாரு. நீயும் சொல்றதைக் கேட்டு நடக்கிறதில்ல. மருமக மட்டும் என்னோட எதிர்ப்பார்ப்பாம்” என்று எரிந்து விழுந்தவர் அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்தார்.

 

“இங்க பாருடா, மைதிலி உன்னை விட சின்ன பொண்ணு. என்ன செஞ்சாவது எல்லாரையும் எதிர்த்து எப்படி துணிச்சலா விரும்புனவனைக் கட்டிக்கிட்டா? நீ என்னடான்னா வீட்டுக்கு ஆவாது நாட்டுக்கு ஆவாதுனு கதையளக்கிற?” என்றார் எரிச்சலாக.

 

“அவ செஞ்சது பத்தாதா? தாரகையை பெரியப்பாவுக்கு சுத்தமா பிடிக்காதும்மா. இப்ப நானும் அப்படி அவரை மீறி கல்யாணம் பண்ணினா அவர் தாங்கமாட்டார். அப்பறம் எனக்கும் மைதிலிக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?” துரை பெரியப்பாவை யோசித்துப் பேச, அருணாவுக்கு சுர்ரென்று ஏறியது.

 

“எரும மாடா டா நீ? அவர் பொண்ணே அவருக்குப் பிடிக்குமா பார்க்கல, அவன் அவன் அப்பனுக்கே பிடிக்கலனாலும் பிடிச்சதை செய்றாங்க, நீ பெரியப்பனுக்குப் பிடிக்கல, சித்தப்பனுக்குப் பிடிக்கலனுட்டு” என்று படபடவென திட்டியவர்

 

“அப்போ உனக்குப் பிடிச்சிருக்கு” என்றார் அழுத்தமாக.

 

“சரி அதை விடு. உங்கிட்ட எப்படி ராமசாமி தாத்தா பேசினார். எப்போ நடந்தது இது?” என்று ராஜதுரை ஆராய்ந்தான்.

 

“கமலா வந்து கூப்பிட்டு போனா, அந்த பெரியப்பா உன் பையனுக்கும் என் பேத்திக்கும் பிடிச்சிருக்கு. கல்யாணம் எப்போ வச்சுக்கலாம்னு கேட்கிறார். உனக்குப் பிடிச்சதை நீ எங்கிட்ட சொல்லவே இல்ல. அப்புறம் பெத்தவனு  நான் ஏன் இருக்கேன்டா? உன் பெரியப்பாவை யோசிக்கிற, என்னை நினைக்கல” என்றவரிடம் ஆற்றாமையும் ஆத்திரமும் கலந்தே இருந்தது.

 

“இப்ப என்னை என்ன செய்ய சொல்றம்மா?” என்று ராஜதுரை ஆயாசத்துடன் கேட்க

 

“என்னை கேட்டா? எந்த பொண்ணைக் கட்டிட்டு வந்தாலும் பிரச்சனை வரத்தான் செய்யும். எவ்வளவு நல்ல சீமாட்டியா இருந்தாலும் உன் பெரியப்பாவுக்குப் பிடிக்காது. எனக்கு கமலா தாரகைக்கு வரன் பார்க்கிறாங்கன்னு சொன்னப்பவே ஆசைதான். ஆனா அவங்க பெரிய இடமா பார்க்கிறாங்கன்னு சொன்னதால ஆசை ஆசையாவே போயிடுச்சு. இப்ப பார்த்தா அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்காம், அதிசயமாத்தான் இருந்துச்சு.” என்றதும் அம்மாவைக் கடுப்பாக  நோக்கினான்.

 

“உன் பெரியப்பா பார்க்கிற வரனெல்லாம் பொண்ணை வச்சு இல்ல, பொண்ணோட அப்பா இவர்கிட்ட எப்படி நடந்துகிறார்னு அதைத்தான் யோசிக்கிறார். பொண்ணு நல்லவளா, உனக்குப் பிடிக்குமான்னு எல்லாம் நினைக்க மாட்டார்.  நீ ஏண்டா இப்படி கீழா பையலாட்டம் வேண்டாம்னு நிக்கிற?” என்று அருணா மனது ஆறாது மீண்டும் திட்டினார்.

 

“அம்மா, நீ நினைக்கிற மாதிரி இல்லை. அவ தியேட்டர் விட்டு வீடு வர பதினொரு மணிக்கு மேல ஆகிடும். அவ வீட்டு வேலை ஒன்னும் செய்ய மாட்டா” என்றதும் அருணா அவனை அடிக்க முடியாது கையைக் கட்டுப்படுத்தி இருந்தார்.

 

“இந்த காலத்துல பொண்ணு கிடைக்கிறதே பெருசு. இதுல உனக்கு வீட்டு வேலை வேற செய்யணுமா? ஏன் அவ பத்து மணிக்கு வந்தா நீ கதவைத் திறந்து வச்சு காத்திருடா. ஆம்பள பசங்க எல்லாம் எல்லா வேலையும்தான் செய்றானுங்க. உன்னைத்தான் உன் பெரியப்பா விடறதில்லை, சும்மா சும்மா என்னை யோசிக்கிறவன் மாதிரி  நடிக்காதடா!” என்று மகனை அதட்டியவர்

 

“உனக்கு அவளை பிடிச்சிருக்குதானே? உண்மையை சொல்லு” என்று ஆவலுடன் கேட்க, மென்னகையுடன் தலையாட்டினான். அவனையும் மீறி அவளைப் பற்றி பேசினான்.

 

“உன்னை மாதிரிதான் என்னை அதட்டிட்டே இருப்பா அவ” என்று தாரகையைப் பத்தி பேச துவங்கியதுமே துரையிடம் துளிர்விட்டது ஒரு தூங்காத புன்னகை. மகன் முகத்தை அப்படி பார்க்கவே அருணாவுக்கு ஆனந்தமாக இருந்தது.

 

“எத்தனை நாளாடா நடக்குது இது?” ஆர்வமாக அவர் கேட்க

 

“அம்மா! நீ நினைக்கிற மாதிரி இல்லை. நான் அவ கிட்ட கூட பிடிக்கும்னு சொன்னதில்லை. சரிவராதுனு நான் அவளோட பேசறதே இல்லை” என்றான் பெருமூச்சுடன்.

 

“இன்னிக்கு உன் பெரியப்பாவுக்காக பிடிச்ச பொண்ணை விட்டுட்டா காலமெல்லாம் வருத்தப்படனும்டா. உன் பெரியப்பாவுக்கு உன் மேல பாசமிருந்தா அவர் உனக்காக ஒத்துக்கட்டும் என்ன?” என்று அருணா மகனிடம் கேட்கவும், ராஜதுரையோ கவலையுடன்,

 

“அம்மா! ஏற்கெனவே எனக்கும் அவளுக்கும் பிரச்சனை ஆனது. மைதிலி விஷயம் எல்லாம் எல்லாருக்கும் தெரியும். இப்ப அந்த வீட்ல பொண்ணு எடுத்தா எல்லாரும் கண்டபடி பேசுவாங்க. பணம் இருக்குனு போறாங்க சொல்லுவாங்க, பெரியப்பாவே அப்படி நினைப்பார்” என்றான்.

 

அருணா மகன் பேச்சைக் கேட்டவர், “ஏண்டா, இந்த காலத்து பய தானே  நீ? ஊர் பேசும் உலகம் பேசும்னு உங்கப்பா காலத்து ஆள் மாறி பேசுற, இதுக்குத்தான் போற வார இடமெல்லம் உன் பெரியப்பாவோட திரியாதனு தலைபாடா அடிச்சிக்கிட்டேன். கேட்டியா? கௌரவம் மண்ணாங்கட்டினு” என்றார் எரிச்சல் மிகுந்த குரலில்.

 

அவனை பேச விடாமல்,

“என்ன இப்போ நீ காதலிச்சனு சொன்னா பவுசு குறைஞ்சிருமோ?  நான் பேசிக்கிறேன் உன் பெரியப்பனை. நீ இந்த விஷயத்துல ஆச்சும் என் பேச்சைக் கேளுடா” என்று அருணா அழுத்தமாக சொன்னார்.

 

அம்மாவின் பேச்சில் ஊஞ்சாலடியது மனது!

 

துரை, “பெரியப்பாவுக்குப் பிடிக்காத பொண்ணு, அதனால உனக்குப் பிடிச்சுப்போச்சு” என்றான் நக்கலாக.

 

“அதே பொண்ணைத்தான் டா உனக்குப் பிடிச்சிருக்கு” என்று அருணா சொல்ல ஒரு நொடி அதிர்ந்த துரை சட்டென்று சிரித்துவிட்டான்.

 

மகனின் சிரித்த முகம் பார்த்தவருக்கு மனது நிறைந்தது.

 தாரகை நித்தமும் அவளை நினைக்க வைத்தாள்! அம்மாவின் பேச்சில் துரைக்கு விடுதலை உணர்வே! அவன் யோசித்தபடி உட்கார்ந்திருக்க, அருணா விடவில்லை.

 

“என்னடா? ராமசாமி பெரியப்பாவுக்கு சம்மதம் சொல்லிடவா? இல்லை என் பையனுக்கு இஷ்டமில்லைனு சொல்லிடவா?” என்று நக்கலாக கேட்டவர்

 

“யாரோ கூட்டாளிக்கு உளுந்து வேணும்னு சொல்லிட்டு தாரகைக்குக் கொண்டு போய் கொடுத்திருக்க, களவாணி பய” என்று மகனை கிண்டல் செய்தார்.

 

அந்த நிமிடம் துரையிடம் வெட்கம் என்ற உணர்வுதான்! இடக்கையினால்  நெற்றியைத் தேய்த்து முகத்தை மறைத்தவன் முகமெல்லாம் புன்னகையே!

 

தாரகை என்ற பெயரே மகனிடம் இவ்வளவு புன்னகையைக் கொண்டு வருமானால், அந்த பெண் மகனின் வாழ்க்கையில் நிச்சயம் வேண்டும் என்று முடிவெடுத்தார் அருணா.

 

“டேய் சொல்லுடா, தாரா தாத்தா கிட்ட என்ன சொல்ல?”

 

“சம்மதம்னே சொல்லு” என்றான் சுவரை பார்த்தவண்ணம்.

 

“என்னடா அதை மூஞ்சியை சுருக்கிட்டு சொல்ற?”

 

“பெரியப்பாவோட சம்மதமில்லாம நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்மா. என்னால அது முடியாது” என்று மகனை நினைத்து பெருமை கொள்வதா இல்லை வருத்தம் கொள்வதா என்று அருணாவுக்குத் தெரியவில்லை.

 

“சரிடா. நீ இதையெல்லாம் நினைச்சு மனசை போட்டு குழப்பாத. அறிவு அப்பாவை விட்டு உன் பெரியப்பா கிட்ட பேச சொல்லுவோம்.” என்று அருணா  சொல்லிவிட்டு செல்ல, துரைக்கு பெரும் பாரம் இறங்கிய உணர்வு.

 

கை மீறிய காதல் மீண்டும் கை சேர்ந்த உணர்வினை உள்ளம் அனுபவித்தது. தாரகை இனி அவனின் தாரகை! தாரகையிடம் பேச வேண்டும் என்ற ஆவல், காதல் எல்லாம் ஒன்றாய் சங்கமிக்க போனை எடுத்தான்.

 

தாரகைக்கு அழைக்க, அவள் எடுக்கவில்லை. மணி பார்க்க பதினொன்றரை, உறங்கியிருப்பாளோ என்று நினைத்து குறுஞ்செய்தி அனுப்பினான். பார்த்தாள், பதிலில்லை.

 

“கோவம் போல” என்று நினைத்தான். அதுவும் ஆறு மாதம் பேசிவிட்டு என்னை மொத்தமாக நீ விலக்கி வைத்து, வலிக்க வைத்தாய் என்ற தாரகையின் பேச்சும் கண்ணில் தூறலாய் தேங்கியிருந்த நீரும் கண்முன்னே வந்து போனது.

 

வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைக்க நினைத்தவனுக்கு சட்டென்று எந்த பாடலும் தோன்றவில்லை. சில நிமிட யோசனைக்குப் பின், பாடலின் சில வரிகளை கட் செய்து ஸ்டேட்டஸ் வைத்தான்.

 

அப்போதுதான் தாரகை இரவு உணவினை உண்டு கொண்டிருந்தாள்.

 

“என்னடி டொக் டொக்னு சத்தம்? சாப்பிடும் போது பார்க்காத. முக்கியம்னா சாப்பிடுறேனு ரிப்ளை பண்ணு.” என்று அரிச்சந்திரன் தங்கையை அதட்டினான்.

 

“முக்கியமானவங்கதான், ஆனா ரிப்ளை பண்ண மாட்டேன்” என்றதும் அரிச்சந்திரன் முறைத்தான்.

 

“யாரு அந்த துரையா?” என்ற அரியின் குரலில் எரிச்சல். இப்போதுதான் தாத்தா அருணாவிடம் பேசிய விஷயத்தை சொல்லியிருக்க, தாத்தாவை கத்தி விட்டான்.

 

“தாத்தாவும் பேத்தியும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்கனு எனக்குத் தெரியல. இவர் என்னடான்னா இஷ்டத்துக்கு சம்மந்தம் பேசுறாரு?  நீ அவனோட பேசுற. அவன் தான் சரி வராதுனு சொன்னான்ல” என்று அரி கத்த,

 

“சும்மா எதுக்குடா கத்துற? உன்னை விட என் பேத்தி மேல எனக்கு அக்கறை அதிகம். கமலா கிட்ட சொன்னேன், அவளும் அவனை நல்ல மாதிரியாதான் சொன்னான். என் பேத்தியைக் கத்துற வேலை வச்சுக்காத நீ!” என்று ராமசாமியும் பதிலுக்குக் கத்தினார்.

 

“தாத்தா! ஏன் இவ்வளவு சத்தம்?” என்று தாரகை இருவரையும் சமாதானம் செய்தாள். இருவரும் அவள் போட்ட சத்தத்தில் அமைதியாகி  விட்டனர். துரையிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருக்க, முதலில் சத்தத்தில் என்ன பாடல் என்று ஸ்டேட்டஸை சரியாகப் பார்க்கவில்லை. இப்போது சத்தம் கூட்டி வைத்தாள்.

 

‘என் வானிலே
ஒரே வெண்ணிலா என்
வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்

என் வானிலே
ஒரே வெண்ணிலா’ என்று கேட்டவளுக்கு அதுவரை வீட்டில் இருந்த இரைச்சல் நீங்கி, இசை நிறைத்த உணர்வு.

 

இதனை கேட்ட அரிச்சந்திரனுக்கு

“கவிதை தாரகையா?” என்று சிரிப்பை அடக்கமுடியவில்லை.

 

அண்ணன் சிரிப்பில் தாரகையின் சின்ன சிரிப்பு பெரிதாக விரிந்தது.

 

“டேய் அரி” என்று அவளும் சிரிக்க

 

“இந்த காதல் வந்துட்டா கான்செப்ட்லாம் மறந்துடுவாங்களா? எல்லார் வானத்துலையும் ஒரே வெண்ணிலா தான் டா வெண்ண!” என்றான் அரி நக்கலாக.

 

“உனக்கு ரசனை இல்லைடா வக்கீல்” என்ற தாரகையின் மேல் பேப்பரை தூக்கி எறிந்த அரி

 

“என்னோட ப்ளேலிஸ்ட் ஐ வச்சிருக்க எரும மாடு நீ, எனக்கு ரசனை இல்லை சொல்றியா  நீ?” என்றதும் சிரித்தாள்.

 

“ஏண்டி வேண்டாம்னு சொல்லிட்டு போனான், இன்னிக்கு பாட்டு போடுறான். என்ன நடக்குது? நீயும் வெட்கமே இல்லாம சிரிக்கிற?” என்று கடுப்பில் கேட்டான் அரி.

 

“தெளிஞ்சிருக்கும், தெரிஞ்சிருக்கும்” என்றாள் தாரகை.

 

“என்ன தெரிஞ்சிருக்கும்?”

 

“அதான் அன்னிக்கே சொன்னேனே, அவனால என்னை மறக்க முடியாது” என்றதும் அரிச்சந்திரனுக்கும் தங்கையின் விருப்பம் புரிந்தது.

 

“சரிதான்! எல்லாம் ராமசாமியும் அவர் பேத்தியும் முடிவு பண்ணியாச்சு. நான் என்ன செய்யணும்?” என்று கேட்டான் அரிச்சந்திரன்.

 

“என்னடா இவ்வளவு  நேரம் கத்தின?” ராமசாமி பேரனை கிண்டலாகக் கேட்க

 

“கத்தினா கேட்கவா போறீங்க,  நல்லா இருந்தா சரிதான். எப்படினாலும் நான் இருக்கேன் என் தங்கச்சிக்கு, அவளை  நாளைக்கே அவன் பேசினா சும்மாவா விடுவேன்?” என்று அரி சொல்ல

 

“டேய் அரி லவ் யூ டா!” என்றாள் தாரகை அண்ணன் மீதான பாசத்தில்.

 

சிரித்த அரி தங்கையின் தோளில் தட்டி “தயவு செஞ்சு மியுட்ல போடு இல்லை அவங்கிட்ட பேசு. சும்மா டொக் டொக்னு” என்றான் சத்தமிட்ட போனை காட்டி.

 

தாரகை உடனே, “எங்கிட்ட பேச இப்போதானே தோணியிருக்கு, உடனே பேசிட்டா எனக்கு என்ன மரியாதை இருக்கு? என்னை அவாய்ட் பண்ணினான்ல. அப்படியே இருக்கட்டும்” என்றதும்

 

“அவனை நினைச்சுத்தான் கவலைப்படணும் போல” என்று சொல்லி அவன் தாத்தாவோடு உறங்கப்போனான்.

 

அடுத்த நாள் தாரகை ராஜதுரை மீண்டும் அழைப்பான் என்று நினைக்க அழைக்கவே இல்லை. இரவு அவனை தாரகை நிச்சயம் தியேட்டரில் எதிர்ப்பார்க்கவில்லை. நேரே இவள் அறைக்கு வந்துவிட்டான். தாரகையின் கண்கள் பளிச்சென்று ஒளிரத்தான் செய்தது.

 

“ஸ்கீரின் இங்க இல்லையே சார், படம் பார்க்கணும்னா இங்க வரக்கூடாது” என்றாள் தாரகை.

 

“நான் ராமசாமி பேத்தியை எப்போ பொண்ணு கேட்கலாம்னு கேட்க வந்தேன்” என்றான் ராஜதுரை புன்னகை முகமாக.  காதல் தந்த உரிமைக்கோறலில் வந்திருந்தான்.

 

தாரகையோ, “நான் ரொம்ப பிஸி, வேலை இருக்கு” என்றாள்.

 

“சரி வேலை முடிச்சிட்டு வா. ஒன்னாவே போலாம்” என்றதும் தாரகையிடம் சிறு அதிர்ச்சி. 

 

“இத்தன நாள் கண்டுக்காம இருந்துட்டு இப்போ என்னமோ டெய்லி பிக் அப் பண்றவன் மாதிரி சீனைப் பாரு” என்று முணுமுணுத்தவள் ராஜதுரையை நிமிர்ந்து பார்த்து,

 

“துரை, நிஜமாவே வேலையா இருக்கேன்” என்றாள் தாரகை.

 

“நீ உன் வேலையைப் பாரு, நான் சும்மா உட்கார்ந்திருக்கிறேன்” என்றான் துரை.  

 

பல நாள் கழித்து அவளை சந்தித்த உணர்வு, அவளை சேர்ந்த சுதந்திர உணர்வு. தளை இல்லை! தடை இல்லை! சந்தோஷமாக இருந்தான்.

 

தாரகை வேலை முடிந்து துரையைப் பார்க்க, எழுந்து அவளுடன் வந்தான்.

 

“இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” ராஜதுரை கொஞ்சம் கோபத்துடனே கேட்டான்.

 

“இத்தன நாளும் இப்படித்தான் சாப்பிட்டேன், தொர சார் சாப்பிட்டாச்சோ?” தாரகை கேட்க

 

“நான் எட்டு மணிக்கே சாப்பிட்டுத்தான் உன்னை பார்க்க வந்தேன், இனிமே சீக்கிரம் சாப்பிட வச்சுடுறேன்” என்றதும் ஒரு பார்வை பார்த்தாள். தாரகை அவனிடம் பதில் பேசாமல், புவியிடம் இரவு காட்சி முடிந்ததும் முடிக்க வேண்டிய வேலையை சொன்னவள் காரை எடுக்க வந்தாள். பார்க்கிங்கில் அவள் காரைத் திறந்தவள் சட்டென்று துரையைப் பார்த்தாள்.

 

முதல் ஞாபகம்! காரில் சாய்ந்திருந்தவள் முகத்தில் கிண்டல் தவழ ஒரு சிரிப்பு.

 

தாரகையைப் பார்த்த துரைக்கும் அந்த நினைவுகள். அவனுக்கு வெட்கமாக இருந்தது, கூடவே ரசனையாக தாரகையைப் பார்த்தான். அவனுக்குத் தாரகையிடம் நிறைய பேச வேண்டும் என்று தோன்றினாலும் எதையும் அப்போது பேச முடியவில்லை. தாரகை இன்னும் கிண்டலாகவே பார்க்க,

 

“அம்மாடி! உன்னை நம்பி நான் பஸ்ல வந்தேன், விட்டுப்போயிடாத!” என்று ராஜதுரை சிரித்தபடி சொல்ல,

 

தாரகை , “விடவே மாட்டேன்” என்று அழுத்தி சொல்லியதில் அது வாழ்க்கைப் பயணத்திற்கும் சேர்த்து என்று புரிந்தது. ராஜதுரை நிற்கவும்,

 

“வாங்க” என்று சொல்லி காரை எடுத்தாள்.

 

ராஜதுரைக்கு இன்னும் ஆச்சரியம் நீங்கவில்லை. இவளுடன் ஒரு நாள் பயணம் செய்யவே யோசித்த  நான் இன்றைக்கு வாழ்க்கை முழுதும் இவளோடு பயணம் செய்ய ஆவல் கொண்டிருக்கிறேன், எப்படி இந்த ஈர்ப்பு என்றே தெரியவில்லை. ஆனால் அந்த ஈர்ப்பு எப்படி அவனை இழுத்திருந்தாலும் கொஞ்சமும் வருத்தமில்லை அவனிடம்.

 

காதல் கொண்ட பின் அவளுடன் ஒரு பயணம், ஆவலுடன் எதிர்கொண்டான் ராஜதுரை.

 

‘இது மாய வலை அல்லவா?

புது மோக நிலை அல்லவா?’

✅ End of Episode 25
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 3 weeks ago

Very nice.

Radhi Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top