Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 14

வான்மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது‘ என்று வாணி ஜெயராமின் குரலில் வாலியின் வரிகளில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,

“வான்மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்..” என்று தாரகையின் குரலும் இணைந்து பாடியது அவ்விரவில்.

“பழைய பாட்டெல்லாம் தெரியுதே உனக்கு” என்று துரை கேட்க,

“ராமசாமி பேத்தி நான்! இந்த படம் எங்க தியேட்டர்ல ஓடியிருக்கு தெரியுமா? தாத்தா பழைய பாட்டு கேட்பார், அப்பா 70’ஸ் 80’ஸ் பாட்டு கேட்பார், அரி 90’ஸ் 2000’ஸ், நான் எல்லாமே கலந்து கேட்பேன். உங்ககிட்ட இந்த பாட்டெல்லாம் நான் எதிர்ப்பார்க்கல. வெரைட்டியா வச்சிருக்கீங்க” என்றாள் தாரகை.

“ட்ராக்டர் ஓட்டும்போது எப்பவும் கேட்டுட்டே இருப்பேன். ட்ராக்டர் பேட்டரி போயிடும்னு அதுல ஓடாம, மொபைல்ல கேக்கிறேன். ஸ்பீக்கர் செட் பண்ணியிருக்கேன். சில டைம் ரேடியோ ஆன் பண்ணிடுவேன், ஸோ எல்லா பாட்டும் கேட்பேன்” என்றான்.

“நீ எதுக்கு சென்னைக்குப் போற” என்று ராஜதுரை கேட்க,

“திரையரங்க உரிமையாளர் சங்கத்தோட வருடாந்திர கூட்டம், அதுக்காகப் போறேன். நாளைக்கு ஈவினிங்தான்” என்றாள் தாரகை. அவன் ட்ராக்டர் பற்றி சொல்லவும்,

“எப்படி உங்களுக்கு விவசாயத்துல இன்ட்ரஸ்ட், அறிவு மாமாவோடத்தானே படிச்சீங்க? அதுவும் ஐடி ஜாப் விட்டு பண்றதுன்னா அவ்வளவு ஆசையா விவசாயம் செய்ய? அதுக்கு அக்ரீ பண்ணியிருக்கலாமில்ல?” என்று தாரகை கேட்க

“தியேட்டர் ஓனரம்மா நிறைய படம் பார்த்து இருப்ப போல? எல்லாத்துலயும் ஐடி வேலையை விட்டுட்டு விவசாயம் செய்றவன் அடுத்த கோடீஸ்வரனா ஆகிடுறது மாதிரி காட்டுறாங்க. அதனால என்னை அப்படி எல்லாம் நினைச்சிடாத, இந்த வெளி நாட்டுல படிச்சிட்டு ஊருக்கு வந்து விவசாயம் செய்றது பார்த்து மனசு மாற ஹீரோ கதை எல்லாம் இல்லை.”

“படிச்சிட்டு பெரிய கம்பெனில ஏசில வேலை செய்யணும்னுதான் வேலைக்குப் போனேன். ஆனா எனக்கு ஐடி வேலை பிடிக்கல, அவன் சொல்றதை நான் பத்து மணி நேரம் செய்யணும், ப்ராஜக்ட் டெட்லைன் வந்தா பன்னிரெண்டு மணி நேரம் கூட வேலை இருக்கும். அதுக்குத் தகுந்த சம்பளம் உண்டு, அது கூட அந்த பணம் வர நிமிஷம்தான்! அப்புறம் மீதி நாள் எல்லாம் எப்போடா லீவ்னு வெறுப்போட செய்ற அந்த வேலை பிடிக்கல எனக்கு. நாள் முழுக்க வேலை செஞ்சாலும், அதுக்கு பணம் கிடைச்சாலும் எனக்கு சந்தோஷமே இல்லை.”

“இங்க நானே ராஜா! இது என் வயல், என் வயல்ல என்ன போடனும்னு நானே முடிவு பண்ணிக்கலாம். என்ன? அங்க ஒரு மாச சம்பளம் இங்க எனக்குக் கிடைக்க மூணு நாலு மாசம் ஆகும். மத்தபடி வேலை கஷ்டம்னாலும் ஏன் செய்றேன் தெரியும், என்ன செய்றேனு தெரியும்.” என்றான்.

“விவசாயத்துல கூட லாபம் பார்க்கலாமே? நிறைய பேர் பண்றாங்களே. நீங்க ஏன் இந்த ஆர்கானிக் ஃபார்மிங் எல்லாம் ட்ரை பண்ணக்கூடாது?” என்று தாரகை அவள் ஆலோசனையை சொல்ல,

“இந்த சீரியல் கதை, படம் எல்லாம் இப்படித்தான் ரீல்ஸ் சுத்துவானுங்க. அதெல்லாம் நடைமுறையில சாத்தியமில்லை.”

“என்ன சாத்தியமில்லை? சிக்கிம் ஒரு ஸ்டேட் முழுக்க ஆர்கானிக் ஃபார்மிங் பண்றாங்களே” என்றவளை கிண்டலாகப் பார்த்தான் ராஜதுரை.

“நீ கூட பூமர்தான் போலயே? என்று தாரகையைப் பார்த்து நக்கலாக சொன்னவன்,

“தியேட்டர் வச்சிருக்க நீ விவசாயத்தைப் பத்தி இவ்வளவு பேசும்போது அதை செய்றவன் எனக்குத் தெரியாதா? An Indian farmer is born in debt, lives in debt, dies in debt, and bequeaths in debt னு ஒருத்தர் சொல்லியிருக்கார்( ஒரு இந்திய விவசாயி கடனில் பிறக்கிறான், கடனில் வாழ்கிறான், கடனில் இறந்து விடுகிறான், கடனில் உயில் செய்கிறான்). நீ சொல்ற விவசாயி எல்லாம் மிராசுதார், ஜமீன்தார் கேட்டகரில வரவங்க. வெள்ளம், வறட்சி, காவேரிப் பிரச்சனை எல்லாம் அதிகமா பாதிக்கிறது சிறு குறு விவசாயிங்களைத்தான்”

“நான் ஸ்மால் ஸ்கேல் ஃபார்மர், எனக்கு மிஞ்சிப்போனா ஒன்றரை ஏக்கர். மீதி பெரியப்பாவுக்கு. நம்ம நாட்டுல சிறு குறு விவசாயிங்கதான் எண்பது சதவீதம் மேல இருக்காங்க, ஆனா அவங்களுக்கு உரிமையான நிலம் கம்மி. அண்ட் சிக்கிம் சொன்னீயே, அது இந்தியாவோட சின்ன மாநிலம். அதனால எல்லாரும் சேர்ந்து அந்த முடிவெடுத்து செயல்படுத்தினாங்க”

“இப்போ நான் அதை செய்யணும்னா, முதல் அஞ்சு வருஷம் எனக்கு விளைச்சலே இருக்காது, பிகாஸ் இது உரம் போட்டு விளைஞ்ச மண்ணு. அப்புறம் நான் மட்டும் இதை செய்ய முடியாது, எனக்கு இருக்கிறது ஒன்றரை ஏக்கர், பக்கத்து நிலத்துக்காரன் கெமிக்கல் உரம் போட்டா நிலத்தடி நீரோட கலந்து அது என்னோட வயல்ல கலந்திடும். ஆர்கானிக் ஃபார்மிங்ன்றது சும்மா பேப்பர்ல படிக்கிறதோ இல்லை படத்துல எடுக்கிறதோ இல்லை.”

“நீ சொன்ன எல்லாமே சாத்தியம்தான், ஆனா அதை செய்ய ஏக்கர் கணக்குல நிலம் வேணும். இல்லை எல்லாரும் ஒன்னா செய்யணும். அப்படியே இருந்தாலும் மண் கெமிக்கல் உரத்திலிருந்து மீண்டு இயற்கை உரத்தை ஏத்துக்கனும். ஸோ அதுவரைக்கும் சப்போர்ட்டுக்கு வேற தொழில் பார்க்கணும். விவசாயத்தை மட்டும நம்பி இருக்கவங்க இதுல ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியாது” என்று பேசி முடிக்க, பிரமித்து பார்த்தாள் தாரகை.

ராஜதுரை என்ற விவசாயியின் விரிந்த பக்கத்தை கண்டாள் தாரகை. வியந்து போனாள் அந்த தாரகை. இப்படிதானிருக்கும் அப்படித்தானிருக்கும் என்ற அவளின் அனுமானங்களை எல்லாம் உடைத்தான் அவன். இவள் தொழில் பற்றி இவள் அறிவது போல், அவன் தொழில் அவன் அறிவான். அதில் இவளென்ன கருத்து சொல்வது என்றில்லாமல் அவன் பொறுமையாக விளக்கியது பிடித்தது தாரகைக்கு.

“எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. ஆனா பூமி பத்தி பூமருக்கு நிறைய தெரிஞ்சிருக்கு. நான் இயற்கை விவசாயம் நல்லதுனு நினைச்சேன், இவ்வளவு விஷயம் இருக்குனு தெரியல. பட் இப்போ தெரிஞ்சிக்கிட்டேன், அர்த்த ராத்திரியில என் அறிவுக்கண்ணைத் தொறந்துட்டீங்க” என்று அவள் உணர்வை உவகையுடன் விளக்கினாள் தாரகை.

ராஜதுரை புன்னகையுடன் கேட்டுக்கொண்டான்.

“பரவாயில்லை உனக்கு சொல்லிக்கொடுக்கவும் எனக்கு எதாவது தெரிஞ்சிருக்கே” என்று சிரித்தான்.

காசை போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி‘ என்று கமல் உருகிப்பாட, அதுவரை பேச்சில் இருந்த துரை இதை கவனிக்கவில்லை. யாரோ ஒருத்தியோடு இணைந்து கேட்கும் பாடலா இது? அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. அவன் பெரும்பாலும் பாடல் கேட்கும் நேரம் அவனுக்கானது.

அவன் ஏகாந்தங்களை இசையால் லாளிதமாக்குவான். சில நேரம் இணையாய், சில நேரம் துணையாய், துள்ளலாய், ஆறுதலாய், அகமகிழ்வாய் என்று பல விதமாய் அவனுக்குப் பாட்டு துணை இருந்திருக்கிறது. வீட்டில் டீவியில் பாடல் ஓடினாலும் கூட அவன் காதல் காட்சியோ, இப்படி முத்தம் போன்ற பாடல் வந்தாலோ தனியாக இருக்கையில் கேட்பவன், யாராவது இருந்தால் மாற்றிவிடுவான்.

அப்படியானவன் எப்படி தாரகையோடு கேட்பான் கோடி முத்தத்தை? அதனால் சட்டென்று அடுத்த பாடல் வைத்தான். தாரகை இதனை கவனித்தவள்,

“கொஞ்ச நேரம் கூட உங்களை பூமர்னு நினைக்காம இருக்க முடியல, நல்ல பாட்டுத்தானே, ஏன் மாத்துனீங்க. அதுவும் முடியும்போது?” என்றாள் கடுப்பாக.

“அதெல்லாம் நீ சின்னப்பொண்ணு, உனக்குப்புரியாது” என்றான்.

“புரிஞ்சிக்கிட்டு கேட்கிற என்னை சின்னப்பொண்ணுன்னு சொல்றதை நினைச்சா சிரிப்பா வருது, சரி விடுங்க ரொமாண்டிக் சாங் எல்லாம் உங்களுக்கு வரப்போற ஆள் கூட கேளுங்க” என்றதும்,

“அப்போ நீ சின்னப்பொண்ணு இல்லைதான்” என்று சிரித்தவன்,

“மணி மூணாகப்போகுது, ஒன்றரை மணி நேரம் ஆச்சு. நான் போய் கேட்டுட்டு வரேன் எப்போ ரெடியாகும்னு” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அவன் செல்வதைப் பார்த்த தாரகையின் மனம் தணிந்த நிலையில் இருக்க, முகம் கனிந்த நிலையில் இருந்தது. தாரகையிடம் தன்மையாக அவன் பேசியிருக்க, அது தண்மையாய் அவளை உணரச் செய்தது.

‘இவன் ஒரு க்யூட் ஆனியன்’ என்று மங்கை மனம் சொன்னது.

“இன்னும் பத்து நிமிஷத்துல ஆகிடும் சொல்றாங்க, பார்ப்போம்” என்றான் அவளருகே வந்து நின்று.

குளிருக்கு இதமாக துப்பட்டாவைப் போர்த்திய தாரகை கிண்டலாக துரையைப் பார்த்து, “இந்த துப்பட்டா இதைத்தவிர வேற எதுக்கும் யூஸ் ஆகாது” என்றாள்.

“சரி விடு உன் துப்பட்டா, உன் இஷ்டம்” என்றான்.

“தெரிஞ்சா சரி” என்றாள்.

“இப்ப உங்ககிட்ட சொன்னா புரிஞ்சிப்பீங்கனு ஒரு தாட்! பிகாஸ் நீங்க பூமர்தான் பழுத்த பூமர் இல்லை” என்றதும் அவன் முறைத்தான்.

“ஓகே! சாரி, நீங்க சொன்னீங்க இல்லையா என்னால எல்லாரையும் திருத்த முடியாதுனு. ரைட்தான்! ஆனா உங்க ப்ரண்ட்ஸோ, சொந்தமோ அதை செஞ்சா தப்புனு சொல்லலாம். இப்போ ஒரு திருடன் இருக்கான், இல்லை ஒரு சிறுத்தைப் புலி இருக்கு, இவங்க இரண்டு பேராலையும் மக்களுக்குத் தொல்லைன்னா என்ன செய்வாங்க? திருடனை ஜெயில்ல போடுவாங்க, புலியைக் கூண்டுல அடைப்பாங்க.”

“ஆனா லேடீஸ்ட்ட கலாட்டா பண்ற பசங்களைக் கண்டிக்காம பொண்ணுங்களைக் கூண்டுல அடைக்கிறது என்ன நியாயம்? கேட்டா பொண்ணுதான் ஜாக்கிரதையா இருக்கணும், பசங்க அப்படித்தானு சொல்றீங்க. நியாயம்தானே நடைமுறையில இருக்கணும்! காட்டு அழிச்சு வீடு கட்டினோம், புலி அதோட இடத்துக்குத்தான் வருதுனு விடுறோமா என்ன, புலி புத்தி அது கடிச்சுத் தின்னட்டும் சொல்றோமா? அதை இல்லை அடைச்சு வைக்கிறோம்.”

“அக்சுவலி உங்களை சொல்லி தப்பில்லை, லேடீஸே டாக்சிக் ரிலேஷின்ஷிப், அப்யூஸ் எல்லாத்தையும் நார்மலைஸ் பண்ணிட்டாங்க. புருஷன் அடிச்சா தப்பில்லை, அடிக்கிற கை அணைக்கும், அத்திப்பழம்னா இனிக்கும்னு உருட்டிட்டுத் திரியறது! எதிர்த்துக் கேக்க தைரியமில்லாம எல்லாத்தையும் ஏத்துட்டு நியாயமில்லாத எல்லாத்தையும் நார்மலைஸ் பண்ணிட்டு வாழ்றாங்க! கேட்டா காதல், கண்றாவி அன்புனு உளறது! அன்பு காயப்படுத்தாது.. அவமரியாதை செய்யாது!” என்று பேசியவள் அவனைப் பார்க்க அமைதியாக இருந்தான்.

“அய்யோ நடுராத்திரியில இவ்வளவு பேசிட்டேன். தாகம் எடுக்குது” என்றதும் ராஜதுரைக்கு சிரிப்பு வந்துவிட, சத்தமாக வெளிப்பட்டது அவன் சிரிப்பு.

“தண்ணீ வேணுமா?” என்று கேட்டான்.

“இருக்கு, பஸ்ல” என்று சொன்னவள் குடித்துவிட்டு வந்தாள்.

“நான் பொண்ணுங்களை அடிக்கிறதை எல்லாம் ஏத்துக்கமாட்டேன் தாரக!” என்றதும்

“தெரியும், நான் சொல்றது என்னனா நீங்க பூமர், அவங்க எல்லாம் காட்டுமிராண்டிங்க, இரண்டுக்கும் டிஃப்ரனஸ் இருக்கு. நீங்க பொண்ணுங்களைப் பாதுகாக்கனும் நினைக்கிறீங்க இல்லையா? அதுவே ஒரு தப்பு, சக மனுஷியா உங்களுக்கு இருக்க எல்லா உணர்வும் இருக்கவங்களா எங்களைப் பார்த்தா போதும்.” என்றாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் வண்டி தயாராகிவிட, இருவரும் சென்று அமர்ந்தனர். தாரகைக்கு முன்னிருக்கை காலியாக இருக்க, ஜன்னல் இருக்குமிடம் வந்து உட்கார்ந்தாள்.

அது துரைக்கு நேர் எதிரில் இருக்க, “ஜன்னல் சீட் அதான்” என்றவள்,

“குட் நைட்!” என்று சொல்லி ஜன்னல் பக்கம் பார்த்தாள். கண்மூடிய காரிகையின் அகத்தினில் கழிந்த அந்த இரவு உலா போனது.

சிறு இரவு! நெடிய உரையாடல், நெகிழ்த்திய இசை அது இழுத்துச் சென்ற விசை என்று எதிர்ப்பாராமல் நிகழ்ந்த நள்ளிரவு அது! நிறைய கற்றாள், அவனுக்கும் கற்றுக்கொடுத்தாள். அந்தகாரத்திற்கு அர்த்தம் சேர்த்த உணர்வு!

‘மனுஷங்களை நல்லவிதமா புரிஞ்சிக்கிறதுல ஒரு சந்தோஷம் இருக்கு’ ஜெயகாந்தன் சொன்னதாக அரிச்சந்திரன் சொன்னதில் அர்த்தம் இருப்பதாகவே தோன்றியது.

யோசித்தபடியே உறைந்த புன்னகையுடன் தாரகை உறங்கிவிட, பேருந்தில் பாடல் ஒலித்தது.

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி‘ என்று பாடல் ஓட, ராமசாமியின் ராஜாத்தியின் மேல் படிந்தது ராஜதுரையின் பார்வை.

✅ End of Episode 14
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 3 months ago

Very nice.

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 months ago

தனிமை தரும் இதம்

திருத்தமாய் பதிய
தெரியாத பக்கம்
தெரிந்த விதம்
திருப்தியான சுகம்.....
❤️ 1 more...
Radhi Reader 2 months ago

Nice 

Kavi Natarajan Reader 2 months ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top