Episode 29

“ஓஹ், ஓஹ்! அண்ணனுங்க மெண்டாலிட்டியா? அப்போ இனிமே எங்க அண்ணா இருந்தா என் பக்கம் வர மாட்ட?” தாரகை அவனருகே நாற்காலியை நகர்த்திப்போட்டு மேஜையில் கை ஊன்றி கிண்டல் பாவத்தில் கேட்க

“இப்போதைக்கு வரமாட்டேன்” என்றான் ராஜதுரை.

தாரகை கேள்வியாகப் பார்க்க, “இப்போ அவன் தங்கச்சி, நாளைக்கு நீ ராஜதுரை பொண்டாட்டி. என் பொண்டாட்டி பக்கத்துல வர நான் ஏன் பெர்மிஷன் கேட்கணும்?” ராஜதுரை அவளைப் போலவே கன்னத்தில் கைவைத்து மேஜையில் கை ஊன்றி கேட்க

“என்னிக்கும் நான் ப்ர்ஸ்ட் என் அண்ணனுக்கு தங்கச்சிதான்! அப்புறம்தான் நீ! லவ் வந்துட்டா நீதான் உயிர் உலகம்ன்ற உருட்டெல்லாம் எங்கிட்ட எதிர்ப்பார்க்காத!.” என்றாள் தாரகை தெளிவாக.

“அடியே!” என்று அதிர்ந்தவன் “ஆனாலும் என்னோட சந்தோஷத்துக்காச்சும் பொய் சொல்லியிருக்கலாம். கிழக்கு சீமையில, பாசமலர் எல்லாம் பார்த்து கெட்டு போயிருக்க நீ!” என்று ராஜதுரை அருகே இருந்த அவள் நெற்றியில் செல்லமாக முட்ட,

“அய்ய, கடைசி சீன் வரைக்கும் ஒரு அரெகண்ட் புருஷனுக்காக அண்ணனை பாசம்ன்ற பேர்ல இம்சை பண்ணிட்டு சாவுறப்ப என் அண்ணன் தங்கச்சியா சாவுறேன்னு சொன்ன அந்த விருமாயி முன்னாடியே அதை செஞ்சிருக்கலாம். அப்புறம் சந்தோஷத்துக்கு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன் நான், அரிச்சந்திரன் தங்கச்சி சார் நானு! என்னை பொருத்தவரைக்கும் அன்புன்றது காதல்ன்றது உண்மைதான்! யார்கிட்ட அன்பா இருக்கோமோ அவங்ககிட்ட உண்மையா இருக்கணும்!” என்று பேச பேச ரசித்துக் கேட்டான் ராஜதுரை.

தாரகை ரசித்து சொல்லும்போதே அரியிடமிருந்து போன்.
“தாரா! உனக்காக நான் சாப்பிடாம உட்காந்திருக்கேன். நான் வெளியே வந்து அஞ்சு நிமிஷமாச்சு வரியா இல்லையாடி நீ?” என்று அரிச்சந்திரன் கத்த

“டூ மினிட்ஸ் இரு! வந்துட்டோம்” என்றாள்.

“வா போலாம்” என்று துரை எழ, அவன் கையைப் பிடித்து மீண்டும் நாற்காலியில் உட்கார வைத்தவள்

“முதல்ல உன் பெரியப்பா எப்படி உன் காதலுக்கு பச்சை கொடி காட்டினார். அதை சொல்லுங்க துரை, ஒரே ஆர்வமா இருக்கேன்”

“உங்க அண்ணன் அங்க கோவமா இருக்கான், ஏற்கெனவே நான் ஷையா ஃபீல் பண்றேன். வம்பு பண்ணாம வா, நான் போன்ல சொல்றேன்” என்று அவன் மீண்டும் எழுந்தான்.

“இருந்த குஷியில கண்டதையும் பண்ணிட்டு இப்ப ஷையாம் ஷை? போடா” என்று சொல்லி தாரகை முன்னால் நடக்க, துரையையும் வீட்டுக்கு சாப்பிட வர சொன்னாள்.

“இல்லை, நான் வீட்ல சாப்பிட போறேன்” துரை மறுக்க

“நானும் வீட்லதான் சாப்பிட கூப்பிடுறேன், ஓவரா பண்ணாம வா. இல்லை ஆட்டுக்கால்ல சாப்பிட்டு வந்து தெம்பா சண்டை போடுவேன்” என்று மிரட்டினாள்.

“நான் இன்னிக்கு நான்வெஜ் சாப்பிட மாட்டேன் தாரா” என்று துரை மறுத்துவிட

“போன் பண்ணு” என்றுவிட்டு கார் பார்க்கீங் போனாள்.

அரி காரில் உட்கார்ந்திருந்தவன் துரையிடம் “சாப்பிட வாங்க துரை” என்று அழைத்தான். அரியும் அழைக்க

“இல்லை! இன்னொரு நாள் வரேன்.” என்றதும் அரி காரை எடுத்தான்.

“டேய் அரி! கோவமா இருக்கியா?” என்று கேட்க அரி தங்கையை முறைத்தவன் சாலையைப் பார்த்தபடி வண்டியை ஓட்டினான்.

“ஜஸ்ட் ஒரு ஹக்தாண்டா! அதுவும் பெரியப்பா ஓகே சொன்னதும் அந்த கலாச்சார காவலனுக்கு கால் தரையில நிக்கல, ஒரு எக்சைட்மெண்ட்ல நடந்துபோச்சு” என்று விளக்கம் சொல்ல, அரிச்சந்திரன் வாய்விட்டு சிரித்தான்.

“ஹே எரும! அதெல்லாம் உங்களுக்குள்ள. எனக்கு ஏன் எக்ஸ்பளைன் பண்ற நீ?” என்று கேட்டு இன்னும் சிரிக்க,

“அப்புறம் ஏண்டா முறைச்சிட்டு வந்த?” தாரகை புரியாமல் கேட்டாள்.

“பின்ன காலையில இருந்து உனக்காக சமைச்சு வச்சிட்டு, டேஸ்ட் பார்க்க கூட தொடாம உன்னோட சாப்பிடணும்னு வெயிட் பண்ணிட்டு உன்னை கூட்டிட்டி போகலாம்னு வந்தா அப்படி ஒரு சீனைப் பார்க்கவும் ஒரு ஷாக்! வேறொன்னுமில்லை” என்ற அரி இன்னும் அடங்காமல் இருந்த சிரிப்புடன்

“மக்கு சிஸ்டரே! இதெல்லாம் எங்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ண கூடாது! ஆனாலும் பூமர் கிட்ட இதெல்லாம் நான் எதிர்ப்பார்க்கல” என்றான் கிண்டலுடன்.

“நானே எதிர்ப்பார்க்கல, அவங்க பெரியப்பா பெரிய பூமர் போன வாரம் திட்டிட்டார்னு ஒரே ஃபீலிங்க்ஸா இருந்தாரு துரை சார். இன்னிக்கு அவர் ஓகே சொல்லவும் வந்த குஷி!” என்றாள் தாரகையும் சந்தோஷமாக.

“பட் எப்படிடா அவர் உடனே ஓகே சொல்லிட்டார். பத்தே நாள்ல ப்ராக்ரசீவா மாறிடுவாங்களா என்ன? துரைக்கு காதல் வந்தது எட்டாவது அதிசயம்னா இது லிஸ்ட்லயே இல்லையே. நான் நினைச்சே பார்க்கல. துரை கூட பரவாயில்லை, அவங்க பெரிய பன்னீர்செல்வம் பழம்பெரும் பழமைவாதிடா அரி!” என்ற தாரகையின் பேச்சில்

“பழம்பெரும் பழமைவாதியா?!’ என்று சிரித்த அரிச்சந்திரன் “அவர் பழம்பெரும் பழமைவாதின்றதாலதான் ஒத்துக்கிட்டார்!” என்றான்.

தாரகை, “எப்படி?” என்று நன்றாக திரும்பி அண்ணன் பக்கம் பார்க்க, “இதே மைதிலி கேட்டிருந்தா கண்டிப்பா பன்னீர் சம்மதிச்சிருக்க மாட்டார். ஆணாதிக்கவாதம்தான் இது. இங்க பெண்கள் காதலிக்கிறதைதான் எல்லாரும் எதிர்ப்பாங்க. அது மட்டுமில்லாம அன்பு மாமாவை விட்டு பேச சொன்னேன்ல, அவர் சொல்லியிருப்பார் நீ வசதி, கூடவே தயாளன் ராஜலஷ்மிக்கு ஒரே பொண்ணு தாரகை டாக்கீஸோட ஓனரம்மா எல்லாம் சொல்லியிருப்பார். முக்கியமா துரை மேல அவருக்கு பாசம், அவன் உன்னை பிடிக்கும்னு ஸ்ட்ராங்கா சொல்லியிருப்பான். பொண்ணு கூட நம்மை மதிக்கல இவன் மதிக்கிறான்னே அவரோட ஈகோ சைடிஸ்ஃபை ஆகியிருக்கும்.. ஸோ ஓகே சொல்லியிருப்பார். இது என்ன பெரிய விஷயம் இருக்கப்போகுது?” என்று அரிச்சந்திரன் சொல்ல, அப்படித்தான் இருக்கும் என்று தாரகையின் மனதுக்கும் பட்டது.

அண்ணனும் தங்கையும் தாத்தாவிடம் விசயம் சொல்ல, “அப்போ டேய் அரி, சீக்கிரம் நல்ல மூகூர்த்தமா பாருடா. கமலா கிட்ட பேசி நம்ம ராஜத்திக்கு என்ன வாங்கணுமோ வாங்கிடு” என்று பரபரத்தார்.

“காலையில இருந்து சமைச்சு வச்சு டயர்டா இருக்கேன், சாப்பிட்டு உங்க பேத்தி கல்யாணம் பத்தி பேசுவோமா?” என்று கேட்டவன் தங்கைக்குப் பிடிக்கும் என்று ஆட்டுக்கால் குழம்பு, காடை வறுவல் எல்லாம் செய்து வைத்திருக்க, தாரகைக்கு உணவை பார்க்கவுமே உற்சாகம். ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.

அதனை பார்த்த அரிக்கு, ‘இன்னும் கொஞ்ச நாளில் இதையெல்லாம் மிஸ் செய்வேன்’ என்று தோன்றினாலும் அவன் இயல்பு போல் ‘எப்படியும் தோணுறப்ப வந்துட போறா, பக்கத்து தெரு தானே? என்று நினைத்து கொண்டான். இருந்தாலும் துரை வீட்டில் தங்கை எப்படி பொருந்தி போவாளோ என்ற கவலை மனதை உறுத்தியது.

எப்படி இருந்தாலும் துரை மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது, ஏதோ ஒருவகையில் அவன் நல்லவனாக இருக்கப்போய்தான் தங்கைக்கு அவன் மீது காதல் வந்திருக்கிறது, இல்லையென்றால் தாரகை நிச்சயம் தோற்றத்திற்கோ இல்லை வயதின் கோளாறிலோ காதல் வயப்படும் பெண் இல்லை. பதினைந்து வயதில் அப்பாவையும் அம்மாவையும் உலகமாக நினைத்தவள் ஒரே கணத்தில் இருவரையும் தொலைத்துவிட்டாள். அதிலிருந்து அரிச்சந்திரன் மீண்டது போல் தாரகை அவ்வளவு எளிதில் மீளவில்லை.

அதனாலேயே தங்கை திருமணமாகி போகும் வீட்டில் அவளுக்கு நிறைய அன்பு கிடைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டான்.

தாத்தா திருமணம் பற்றி பேச, அரிச்சந்திரன் தாரகையிடம் “துரை நம்பர் எனக்கு வாட்ஸப் பண்ணு” என்றான். தாரகை ராஜதுரையின் திருமண பேச்சுவார்த்தை தொடங்கியது.

உண்டு முடித்தவுடன் தாரகைக்கு உறக்கம் வர, நன்றாக தூங்கி எழுந்தாள். எழுந்தவுடன் போனை பார்க்க, ராஜதுரை இரண்டு முறை அழைத்திருந்தான். முகம் கழுவி, தாத்தாவுக்கும் அவளுக்கும் டீ போட்டவள் வீட்டின் முன் இருக்கும் இடத்தில் வந்து உட்கார்ந்தபடி டீயைப் பருகினாள். ஒற்றைக் கையால் போன் எடுத்து ராஜதுரைக்கு அழைத்தாள்.

“ஹலோ, என்ன கூப்பிட்டிருக்க?” துள்ளி வந்தது தாரகை குரல்.

“என்னமோ அப்போ அவசரமா பெரியப்பா எப்படி ஒத்துக்கிட்டார்னு கேட்ட, சாப்பிட்டதும் மறந்துட்டியா?” என்று ராஜதுரை கேட்க

“எங்கண்ணா சூப்பரா சமைச்சு வச்சிருந்தானா சாப்பிட்டதும் உறக்கம் வந்துடுச்சு. இப்போதான் எழுந்து டீ போட்டு குடிக்கிறேன். சொல்லு உன் கதையை” என்றாள் தாரகை.

“கதையா? எங்க பெரியப்பா ஓகே சொல்லணும்னு நான் எவ்வளவு தவிச்சேன் தெரியுமா?” என்று ஆரம்பிக்க, தாரகைக்கு அரிச்சந்திரன் பேச்சைக் கேட்டதுமே எல்லாம் ஓரளவு விளங்கியிருக்க, இப்போது துரை கொடுக்கும் பில்டப்’பில் சலிப்பாக இருந்தது.

ஆனால் அவன் ஆவல் மிகுந்த குரலுக்காக, அவனுக்காக கேட்டாள்.

“பெரியப்பா கிட்ட பெரியம்மாவும் பேசியிருப்பாங்க போல, அவருக்கு எப்பவும் என் மேல பாசம் ஜாஸ்தி. நானே கேட்கவும் அவர் யோசிச்சார் போல, கூடவே அன்பு சித்தப்பா அவர்தான் அடிக்கடி மீட் பண்ணி ப்ரைன் வாஷ் பண்ணினார் போல” என்றான் பெருமையாக. துரைக்கு இதெல்லாம் நடக்கவே நடக்காது என்ற நினைத்து விசயங்கள். அது நடக்கவும் ஆனந்தத்தினால் சூழப்பட்டிருந்தான்!

“அப்படி சார் என்ன சொல்லி பெரிய பூமரை இம்ப்ரஸ் பண்ணீங்க?” தாரகை நக்கலாகக் கேட்க

“எங்க பெரிப்பாவுக்கு பெரியம்மா எப்படியோ அப்படி நீ எனக்குனு சொன்னேன்” என்றான் துரை.

“என்ன?”

“நீ என் பொண்டாட்டினு சொன்னேன் டி” சிரிப்போடு அவன் கதை பேச,

“அடப்பாவி! லவ்வர்னு சொல்லாம இப்படி சொன்னியா?” அவள் ஆச்சரியத்தில் வாய் பிளந்தாள்.

“அது என்ன லவ்வர்? எனக்கு ஒரே பாஷைதான், என் மனைவியை மட்டும்தான் நான் நேசிப்பேன், நேசிக்கிறவதான் எனக்கு மனைவி” என்றான் காதலாக, அழுத்தமாக.

“போன மாசம் என்னை பார்த்து பயந்து ஓடின பூமரா இது? பொண்டாட்டினு பெரிய பூமர்ட்ட சொல்ற, நைட்டான கட்டிப்பிடிக்கிற, யாருமில்லனா தூக்கி சுத்துற, இந்த பூமருக்கு என்னதான் ஆச்சு? ” என்று தாரகை அவனை விடாது ஓட்ட

“அதுதான் போன மாசம்னு சொல்லிட்டியே, அப்ப உன்னைப் பார்த்து பயம்தான் எனக்கு. முன்னாடி சரி வருமா இதெல்லாம்னு ஒரு யோசனை, அப்பறம் சரி வரணுமேனு ஒரு தவிப்பு இப்போ.. சரியோ தப்போ அது தாரகையோடதுதான் நான் ஃபிக்ஸ் ஆக்கிட்டேன்” என்றான் ராஜதுரை.

“அப்புறம் உன் அண்ணன் என்ன சொன்னான்? உன்னை பேசினானா?”

“அடுத்த தடவ கதவ தட்டிட்டு வரேனு சொன்னான்” என்றதும் துரைக்கு இன்னும் வெட்கமானது.

“ப்ச், உன்னோட பேசிட்டே பாதி டீயை ஆற வச்சிட்டேன்” என்று தாரகை கையில் இருந்த டீயைப் பார்த்து சொல்ல,

“ஆறின டீயை அப்படியே தூர ஊத்திட்டு, நேரே ஆத்தங்கரை பக்கம் போ”

“ஆத்தங்கரையா?”

“ஆமா, ஆத்தங்கரை பக்கம் போன அங்க கண்ணன் டீ கடையில நல்ல டீ கிடைக்கும் வாங்கி குடி. உன் டீ உடம்புக்கு ஆபத்துடி” என்று துரை தாரகையைக் கிண்டல் செய்தான்.

“மவனே! மாட்டினா மாவிளக்குதான் டா உன்ன! என் டீயைக் கலாய்க்கிற, ராஸ்கல்” என்று தாரா திட்ட

“ஏய் உன் மேல இருக்க அன்புல சொல்றேன். நானாச்சும் உண்மையை சொல்றேன், அங்க உன் வீட்டு பெருசு என் ராஜாத்தி டீயைக் குறை சொல்லாம குடிச்சிட்டு போ’ன்னு வீட்டுக்கு வரவங்களை எல்லாம் மிரட்டிட்டு இருக்கார், தெரியுமா? முதல்வாட்டி உங்க வீட்டுக்கு வந்தப்பவே என் பேத்தி டீயைக் குறை சொல்லாம குடினு சொன்னார்” என்றதும் தாரகைக்கு தாத்தாவை நினைத்து பெருமையாக இருந்தது.

“அப்போ நீயும் இனிமே என் தாத்தா மாதிரி வீட்டுக்கு யார் வந்தாலும், என் பொண்டாட்டி டீயை குறை சொல்லாம் குடிங்க சொல்லு.”

“அடங்கொப்புரானே! ஆளை விடு!” என்று துரை சிரிக்க, அப்படியே இனிமையாக அவர்கள் பேச்சு சென்றது.

அடுத்து வந்த நாட்கள் திருமண பேச்சிலும் வேலையிலும் சென்றது. ராஜதுரையின் குடும்பத்தினர் முறையாக தாரகையைப் பெண் பார்த்து சென்றனர். பன்னீர் மட்டும் வரவில்லை, துரைக்காக ஒத்துக்கொண்டாலும் அவரின் கௌரவம் இவர்கள் வீட்டுக்கு வர அனுமதிக்கவில்லை. அவரின் விருப்பத்தை மீறியிருக்க, தம்பி இல்லையே என்ற கட்டாயத்தினால், அது தந்த கடமையினால் மட்டுமே நிச்சயத்துக்கு வந்தார். ஆனால் சித்தப்பாவாக அன்புசெல்வன் எல்லாம் செய்தார், கமலாவுக்காக செய்தார்.

திருமண பத்திரிக்கை அச்சடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ராஜதுரையை வீட்டுக்கு வர சொல்லியிருந்தான் அரிச்சந்திரன்.

ராஜதுரை வரவும் அவன் கண்கள் தாரகையை ஆவலாக தேடியது. அரி அதனை கண்டு,
“தாரா தியேட்டர்ல இருக்கா. இப்போ ஷோ டைம் முடிஞ்சதும் வந்துருவா” என்றதும் தலையசைத்தவன்

“பத்திரிக்கை டிசைன் எல்லாம் தாரகைக்கு என்ன இஷ்டமோ அதுவே பண்ணிடுங்க அரி” என்றான். தலையசைத்து மறுத்த அரிச்சந்திரன்,

“டிசைன் பிரச்சனையில்லை துரை. உள்ளே என்ன போடணும் சொல்லிடுங்க, இருவீட்டார் அழைப்பா இல்லை தனியா? அப்படி கேட்குறேன்” என்றான்.

“சேர்ந்தே பண்ணிடலாம். நான் வீட்ல, அன்பு சித்தப்பா கிட்ட கேட்டு யார் பெயர்லாம் போடணும் கேட்டுடுறேன். இரண்டு நாள்ல சொல்றேன் அரி”

அரிச்சந்திரன், “அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்” எனும்போதே தாரகை ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவள் துரையைப் பார்த்து,

“ஹலோ! என்ன மீட்டீங்?” என்றபடி அண்ணன் அருகே உட்கார,

“போய் டீ எடுத்துட்டு வா ரெண்டு பேருக்கும்” என்றான் அரிச்சந்திரன்.

“வேண்டாம் அரி, இப்போதான் குடிச்சிட்டு வந்தேன்” என்று ராஜதுரை மறுக்க, தாரகை அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் பார்வை உணர்ந்த துரை,

“நிஜமா குடிச்சிட்டேன்” என்றான்.

“சரி எனக்கு எடுத்துட்டு வா, ரொம்ப நேரமா போட சோம்பேறித்தனப்பட்டு உட்கார்ந்துருக்கேன். அப்படியே தாத்தாவை எழுப்பிவிடு, அவருக்கும் டீ கொடு” என்று அரி சொல்ல, துரை பாவமாக பார்த்தான்.

“டேய் அரி, தொரைக்கு என் டீ பிடிக்காதாம். இந்த தாத்தா கூட… ” என்று ஆரம்பித்து தாரகை கதை பேச எப்போதும் போல் அரி பொறுமையாகக் கேட்டான். அதனையே விழியெடுக்காது பார்த்தான் ராஜதுரை. அவர்கள் வீட்டில் இப்படி அக்காவுடனோ தங்கையுடனோ இவன் உட்கார்ந்து பேசியதே இல்லை. பாசத்திற்கு குறைவில்லை என்றாலும் இப்படி கருத்து பரிமாற்றமில்லை, இது சின்ன விஷயம்தான் ஆனால் அதனை கூட அவள் சொல்வதும், அரி பொறுமையாகக் கேட்பதும் புதுமையாக இருந்தது, பிடித்தும் இருந்தது!

“என்ன துரை? கண்ணன் டீ கடை விட தாரா டீ சுமார்தான். ஆனா அந்த குமார் கடையை விட பெட்டரா இருக்கும்!” என்று அரி சொல்ல, துரை மெல்ல புன்னகைத்தான். இன்னும் அரியிடம் துரைக்கு ஒரு இலகுத்தன்மை வரவில்லை, அதே நேரம் விலகவும் இல்லை. மரியாதையான இடைவெளி இருந்தது.

“என் டீ நல்லா இல்லைன்னா என்ன? தொரை நல்ல டீ போடுவார், இல்லைன்னா கத்துக்கட்டும்.” என்று சொன்ன தாரா அண்ணனுக்கும் தாத்தாவுக்கும் டீ வைத்தாள்.

இங்கு அரி பேச்சைத் தொடர்ந்தான்.

“அக்சுவலி இந்த ஐயர் வச்சு கல்யாணம் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்லை துரை. இப்ப உங்க சைட் செய்யணும்னா உங்க பெரியப்பா செய்வார். அது வேண்டாம்..” என்று சொல்லவுமே துரைக்கு ஏனோ சட்டென்று கோபம். அரி பேசி முடிக்கும் முன்னே துரை,

“ஏன் பெரியப்பா செய்யறதுல உங்களுக்கு என்னங்க பிரச்சனை?” என்றான் குரல் உயர்த்தி.

“நான் எப்போ பிரச்சனைனு சொன்னேன்?”

“உடன்பாடு இல்லைன்னா என்ன அர்த்தம்? என்னை வளர்த்தவர் எனக்காக செய்றார்” என்று துரை பேச, அவன் குரல் உயர்த்தியதில் தாரகை வந்துவிட்டாள்.

“எதுக்கு சத்தம் போடுறீங்க?” அவனிடம் அதட்டலாகக் கேட்க

“உன் அண்ணனை கேளு” என்றான் முறைப்பாக.

✅ End of Episode 29
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 weeks ago

Nice 

❤️ 1 more...
Radhi Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top