Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 2

“ஏன் அறிவு மாமா, இங்க ரோட்ல இறக்கி விடுறதை, அவர் வீட்ல விட்டிருந்தா நம்ம அப்படியே ஆத்தங்கரை வழியா சுத்தி நம்ம வீட்டுக்குப் போயிரலாமே, ஏன் வேண்டாம் சொன்ன?” என்று தாரகை விடாது கேள்வி கேட்டாள்.

 

“உன் ப்ரண்ட் பார்வையே சரியில்லை” என்றாள் பட்டென்று.

 

“ஹே! அவன் அக்கா தங்கச்சிங்க கூட பொறந்தவன் டி, அப்படியெல்லாம் தப்பா பார்க்க மாட்டான்” என்று அறிவு அலறினான்.

 

“ஷ்! நான் கூட அண்ணனோட பொறந்துருக்கேன், அதுக்காக சைட் அடிக்காமவா இருக்கேன்?”  என்று கிண்டலாகக் கேட்டவள்,

 

“அப்படி உன் ப்ரண்ட் சைட் அடிச்சிருந்தா கேசுவலா எடுத்திருப்பேன், அவர் என்னை ஏதோ வித்யாசமா பார்த்தார்” என்று அடித்து சொன்னாள் தாரகை.

 

“அட, அவன் கொஞ்சம் கன்சர்வேடிவ்! இப்படி பொண்ணுங்க டிரஸ் பண்றது,  நடு ராத்திரில கார் ஓட்டுறது எல்லாம் பிடிக்காது. நீ கண்டுக்காத” என்றான் அறிவு.

 

“அது பேர் கன்சர்வேடிவ் இல்லை மாமா, பஞ்சாங்கம், பழமைவாதம், குறுகிய மனப்பான்மை இப்படி சொல்லலாம்! இல்லை இப்போ இருக்க பாஷையில பூமர்னு சொல்லலாம்” என்றாள் சிரித்தபடி.

 

“ஈகோயிஸ்ட்ணு கூட சொல்லலாம், ஓஹ் அதான் என்னோட கார்ல வரலன்னு சொன்னவரை தாஜா பண்ணி வண்டியில ஏத்தியிருக்க, ரைட்?” என்று கேட்க, அவள் கேட்ட தோரணையில் அவனை மீறி தலையசைத்தான் அறிவு.

 

“அப்படி என்ன உன் ப்ரண்ட் பெரிய இவன்? என் கார்ல வர மாட்டேன் சொல்றவனை நீ கஷ்டப்பட்டு வர வைக்கிற?” என்று அறிவு நினைத்தது போலவே எகிறினாள் தாரகை.

 

“ஹேய்! நம்ம ஊர்ல நிறைய பேர் அப்படித்தானே? மத்தபடி அவன் நல்லவன்” என்று அறிவு நண்பனை விட்டுக்கொடுக்காது பேசினான்.

 

“அவன் நாளைக்குக் காலையில எந்திரிச்சு வெள்ளனுமே சோளம் விதைக்கனும் சொன்னான். இனி பஸ்ஸுக்கு வெயிட் பண்ணி எப்போ வருவான், அதான் கூப்பிட்டேன். என்னாலதான் இப்படியாகிடுச்சு, என் பைக்ல பெட்ரோல் செக் பண்ணல”

 

“ஓஹ், விவசாயம் பண்றாரா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

 

“நீ நினைக்கிற மாதிரி ஆசையா எல்லாம் செய்யல, அவன் கொஞ்சம் வேற மாதிரி! என்னோடதான் சென்னையில எஞ்சினியரிங் படிச்சான், ஒரு கம்பெனில ப்ளேஸ் கூட ஆனான். ஆனா நம்ம பயலுக்கு ஒருத்தருக்குக் கீழ வேலைப் பார்க்கிறது பிடிக்கல, அத்தனை பேருக்குப் பதில் சொல்லி நான் சம்பாதிக்க வேண்டாம்னு இங்க அவங்களுக்கு இரண்டு ஏக்கரா இருக்கு. அதைப் பார்த்துட்டு இருக்கான்” என்று ராஜதுரை பற்றி சொல்லி முடித்தான்.

 

“எப்போ தொரைக்கு செம ஈகோதான்” என்று தாரகை சொல்ல,

 

“துரைதான், ராஜதுரை! அவன் பெயர்” என்று சிரித்தான் அறிவு.

 

அறிவை அவன் வீட்டில் இறக்கி விட்டவள், அதே தெருவில் இருக்கும் அவளின் வீட்டிற்கு சென்றாள். இவள் வரவும் அவள் உடன்பிறப்பு அரிச்சந்திரன் வாசல் கேட்டினைத் திறக்க,

 

“கேட்ச்!” என்று கார் சாவியைத் தூக்கிப் போட, முறைத்தபடி வாங்கினாலும் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

 

தாத்தாவின் அறையை எட்டிப் பார்த்தவள், அவர் உறக்கத்தில் இருப்பது கண்டுவிட்டு மெல்ல கதவை சாற்றினாள். சமையல்கட்டுக்கு சென்று பாத்திரத்தில் இருந்த கிச்சடியைப் பார்த்தவள் ரசித்து நுகர்ந்தாள்.

 

இளமஞ்சள் சாமந்தி போல் அழகாய் நிறமாய் இருந்த கிச்சடியை வாசம் பிடித்தாள். பசு நெய் கமகமத்தது, தேங்காய் சட்னியும் இருக்க, தட்டில் போட்டுக்கொண்டவள், வாசலில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அரிச்சந்திரனும் தங்கையின் அருகே வந்து உட்கார போனவன், தண்ணீர் இல்லாதது கண்டு அதனை எடுத்து வந்தான்.

 

“டேய் அரி, உன்னைக் கட்டிக்கப் போறவ கொடுத்து வைச்சவடா” என்று சிலாகித்தபடியே கிச்சடியை வாயில் போட்டாள் தாரகை.

 

“பேசாம சாப்பிடுடி, மணி பதினொன்றரை ஆகுது, இப்படி லேட்டா சாப்பிடாதன்னு எவ்வளவு தடவ சொல்றது?” என்று அதட்டினான் அரிச்சந்திரன்.

 

“விடுப்பா விடுப்பா, ஒரு இளம் தொழிலதிபர்னா அப்படித்தான்” என்ற தங்கையைப் பார்த்து புன்னகைத்தவன், அங்கிருந்த பெஞ்சில் சாய்ந்தபடி தரையில் கால் நீட்டி உட்கார்ந்தான். அண்ணனைப் பார்த்தவள், கிச்சடியை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட,

 

“நீ முதல்ல தின்னுடி” என்று அதட்டினாலும் வாங்கிக்கொண்டான்.

 

“டேய் அரி, இன்னிக்கு அறிவு மாமாவை ட்ராப் பண்ணினது நாந்தான், அவர் பைக்ல பெட்ரோல் தீர்ந்து போச்சாம்” என்றதும் ஆட்காட்டி விரலைத் தாடையில் வைத்து யோசித்த அரி,

 

“ஏன் தாரா? அவன் ஒருவேளை உன்னோட வரனும்னே பொய் சொல்லியிருப்பானோ?” என்று கேட்டான். அண்ணனைப் பார்த்து சிரித்த தாரகை,

 

“டேய், அப்படி வரவர் கூட ஒரு ஆளையுமா அழைச்சிட்டு வருவார்? அறிவு மாமா ஜஸ்ட் பேசும். மத்தபடிலாம் ஒன்னுமில்லை. ரொம்ப யோசிக்காதடா அரி” என்றாள்.

 

“நீ சொல்லிடுவ, பொண்ணு மனசு பொண்ணுக்குத் தெரியற மாதிரி ஆம்பள மனசு ஆம்பளைக்குத்தான் தெரியும். ஒரு ஆவ்சம் தங்கச்சிக்கு இருக்க அண்ணனா  நான் எல்லாத்தையும் தொலை நோக்குப் பார்வையுடந்தான் பார்க்கனும்” என்றான் தோளைக் குலுக்கிக் கொண்டு.

 

“ஸ்ப்பா! டிசைன் டிசைனா இருக்கீங்கடா நீங்க?” என்றாள் சலித்தபடி.

 

“யாரு என்ன டிசைன்?” என்று அரி ஆர்வமாகக் கேட்க,

 

“எல்லாம் உனக்கு வேண்டப்பட்டவங்கதான்” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.

 

“யாருடி?” என்று மீண்டும் கேட்க,

 

“மைதிலி அண்ணன்” என்றதும் “வாட்?” என்றான் அதிர்ச்சியாக.

 

“அந்த ஆளைப் பார்த்தாலே தெரியுது, காதல் கல்யாணம் எல்லாம் ரொம்ப கஷ்டம்டா அண்ணா, ப்ளான்படி ரெஜிஸ்டர் மேரேஜ்தான் பெஸ்ட்!” என்றாள்.

 

“என்ன சொல்ற தாரா? தெளிவா சொல்லு” என அரி படபடக்க,  அவன் தன்னைப் பார்த்த பார்வை, இவளின் புரிதல், அறிவின் பேச்சு எல்லாம் சொன்னாள். அரிச்சந்திரன் முகம் யோசனையைக் காட்டியது.

 

“என்ன அரி?” என்று அவன் தோள் தொட

 

“ஒருவேளை நம்ம அம்மா அப்பா இண்டர்கேஸ்ட் மேரேஜ் பண்ணினவங்கன்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கும், அந்த துரைக்கு அவன் எல்லாம் மேல, நம்ம கீழன்னு ஒரு தாட் இருந்திருக்கலாம். இருக்கும்!”

 

“என்னைப் பத்தி அவனுக்கு எப்படி தெரியும்? அப்படியே தெரிஞ்சாலும் அப்பா, அம்மா பத்தியெல்லாம் எப்படிண்ணா தெரியும்? ஒருவேளை நம்ம அப்பா, அம்மா பெரிய லெஜண்ட் காதல் ஜோடியோ?” என்று கிண்டலாக இழுக்க,

 

“அதில்ல ராஜாத்தி! அவன் பெரியப்பா ஐ மீன் மைதிலி அப்பா இங்க ஜாதி சங்கத்துல இருக்கார், இவனும் அவரோடவேதான் சுத்துவான். அவங்க எல்லாம் ஆள் பார்த்து பழகுவாங்க, புரியுதுதானே உனக்கு? யார் கூட பழகக் கூடாதுன்னு தெரிஞ்சுவைச்சிருப்பாங்க” என்றான் ராஜதுரையை ஆராய்ந்தவனாக.

 

“அடப்பாவி! இப்படியாப்பட்டவன்னு தெரிஞ்சிருந்தா நான் கார்ல ஏத்தியிருக்க மாட்டேன், காரை அவன் மேல ஏத்திருப்பேன். பஞ்சாங்கம்!” என்று ராஜதுரையைத் திட்டினாள் தாரகை.

 

“ஹாஹா, வேற என்ன நினைச்ச?”

 

“சரி, சைட் அடிக்கிறான் போலன்னு நினைச்சேன்” என்றதும் அரி முறைத்தான்.

 

“என்னடா முறைக்கிற? நானும் அண்ணன் கூட பொறந்திருக்கேன், சரி பாவமே அறிவு மாமா பங்காளின்னா சைட் அடிச்சிக்கட்டும் நினைச்சேன். அவனோ என்னை ஆராய்ச்சியாவே பார்த்தான். ஆனா இப்படி இருப்பான் நினைக்கவே இல்லை” என்ற தாரகையின் முகத்தில் ஒவ்வாமை.

 

அவள் அப்பா ராஜதுரையின் ஜாதி, அம்மாவோ அவர்களால் கீழ் என சொல்லப்படும் ஜாதி.  பிடித்துப் போய் திருமணம் செய்துகொள்ள, ராமசாமியும் ஒற்றை மகனின் ஆசைக்குக் குறுக்கே நிற்கவில்லை. தயாளன் ராஜலஷ்மியின் மீது ப்ரியம் கொண்டவர், ஜாதி பேதங்களைத் தாண்டி அப்பாவின் விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

 

தாரகையின் அப்பா, அம்மா இருவரும் ஒரு ரயில் விபத்தில் இறந்து போய்விட்டனர். கிட்டதட்ட பத்து ஆண்டுகள் ஆகிற்று. ஆனால் அவள் வீட்டில் ஆண், பெண். ஜாதி, மதம் என்று எந்த பாகுபாடும் கிடையாது. அரிச்சந்திரன் செய்யும் அத்தனை வேலையும் தாரகை செய்வாள், ஒன்றைத் தவிர அவன் வழக்கறிஞர். இவள் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தாள். திரையரங்கை இவள் பார்க்க, அவன் அவனது தொழில் பார்த்தான். 

 

அதற்கு ராமசாமியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை. அவரின் வளர்ப்பு, பேத்தி, பேரன் எல்லாம் ஒன்றுதான். அதிலும் தாரகை என்றால் தாத்தாவிற்கும் அண்ணனுக்கும் அதிக செல்லம்.

 

தங்கையின் பேச்சில் சிரித்தவன், “அவன் என்ன நினைச்சா நமக்கென்ன விடு தாரா” என்றான்.

 

“இவன் இப்படி இருக்கானே எப்படி மைதிலி லவ்வுக்கு ஒத்துப்பான், தாரகை சொல்றேன் ப்ரதர் ரெஜிஸ்டர் மேரேஜ்தான் ரைட்! சாட்சி கையெழுத்து கூட போடுறேன் டா” என்றாள்.

 

“நம்ம மட்டும் முடிவு எடுத்தா போதாது, மைதிலி ஒத்துக்கனும்” என்றான் அழுத்தமாக.

 

“ஒத்துக்கிட்டாதான் காதல் கைகூடும்னு சொல்லு, எங்கண்ணா பேச்சைக் கேட்டா காதல், கல்யாணம். இல்லையா அவங்கண்ணா அந்த பஞ்சாங்கம் பேச்சை கேட்டா அவ்வளவுதான். என்ன ஹெல்ப் வேணும்னாலும் நீங்க கூச்சப்படாம கேளுங்க” என்றதும் அவள் முதுகில் தட்டியவன்

 

“வாலு, லாயருக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சு வைக்க ஹெல்ப் பண்றியா நீ?” என்ற அரி,

 

“அதை அப்புறம் பார்த்துக்கலாம்டா, அவ படிச்சு முடிக்கனும். நீ ஏன் அந்த ஆளை இப்படி திட்டிட்டு இருக்க?” என்றதும்

 

“பின்ன என்னடா? அப்படி ஒரு ஆட்டிட்யூட்! தெருமுனை வரை நம்ம கார்ல வந்துட்டு வீடு வர முன்னாடி இறங்கிப்போறான். கர்டசிக்காக கூட ஒரு பேச்சு இல்லை, ஒருவேளை நம்ம அம்மா வேற கேஸ்ட்னு அப்படி பார்த்திருப்பான் நீ சொல்றதுதான் சரியாயிருக்கும்” என்று அண்ணனின் பேச்சை ஒத்துக்கொண்டாள் தாரகை.

 

“அதைவிட அவங்களுக்கு அவங்க வீட்டு பொண்ணுங்க வெளியே வந்து உலகத்தைப் பார்க்கிறதே பிடிக்காது, கௌரவம்ன்றது பொண்ணுங்களாலனு நினைக்கிற  மெண்டாலிட்டி, அப்படி இருக்கும்போது எங்க வீட்டு ராஜாத்தி ராமசாமி பேத்தி, அரிசந்திரனின் அருமை தங்கச்சி தனியா ஒரு தியேட்டர் மேனேஜ் பண்றான்னா அவனுக்கு எரியும்தானே? அவனைப் பொருத்தவரை கீழா அவங்க நினைக்கிறவங்க கீழேதான் இருக்கனும்” என்று அரிச்சந்திரன் அவர்களைக் கணித்து சொல்ல,

 

“ஆனாலும் படிச்சிருக்க ஒரு ஆள் இப்படி… சைக்” என்று முகம் சுளித்தாள் தாரா.

 

“படிப்பா? அதைத் தாண்டி வளர்ப்புன்னு ஒன்னு இருக்கு ராஜாத்தி, அவங்க பெரியப்பாவோட குணம்! அவரோட தாட்ஸ், அவங்க ஃபேமிலி, சின்ன வயசுல இருந்து பார்க்கிறது கேட்கிறது. நீ அவனை சொல்றியே காலேஜ் போற பசங்களே எங்க ஜாதி பொண்ணை அவன் ஏன் லவ் பண்றானு சண்டை போடுறானுங்க, கலர் கலரா கயிறு கட்டிட்டு கட் அவுட்ல போஸ் கொடுத்து, புல் ஷிட்!” என்றான் அரிச்சந்திரன்.

 

“பரவாயில்ல ராஜி புள்ளையை ஒழுங்கா வளர்த்து வைச்சிருக்குலடா? என் அண்ணன் அந்த பஞ்சாங்கம் மாதிரி இல்லை” என்று சொல்லி அண்ணனை வம்பிழுத்தாள்.

 

“அது சரிதான்” என்று சிரித்த அரி

 

“நீ தப்பித்தவறி அறிவு கிட்ட கூட மைதிலி பத்தி பேசிடாத, கொஞ்சம் விஷயம் போச்சுனாலும் பெரிய இஷ்யூ ஆகிடும் தாரா” என்றான் எச்சரிக்கும் தொனியில்.

 

அது தாரகையை எரிச்சல்படுத்தியது, “எனக்கு என்ன யார்கிட்ட சொல்லனும்னு தெரியும் அரி” என்றவளின் குரலிலே அவளைக் கண்டுகொண்டவன்

 

“நம்ம எல்லாரையும் மனுஷங்களா சரிசமமா பார்ப்போம் தாரா, அறிவு நல்லவந்தான். ஏன் துரை கூட அப்படிதான், எல்லாம் தாண்டி அவங்களுக்குள்ள ஜாதினு ஒரு விஷயம் ஓடுது! அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க. நான் சொல்றது புரியும் நினைக்கிறேன்மா. சரி விடு, மைதிலி ஃபைனல் எக்சாம் முடியவும் பார்த்துப்போம். நான் உன்னை குறையா சொல்லலம்மா” என்று தங்கையை சமாதானம் செய்தான் அரி.

*************

ராஜதுரைக்கு அன்று நல்ல வேலை, வயலில் உரம் போட்டுவிட்டு மதிய உணவுக்கு வீடு வந்தான்.  நடுவீட்டில் பெரியம்மா புலம்பிக்கொண்டிருக்க அம்மா சமாதானம் செய்வதைப் பார்த்தவன்

 

“என்னாச்சு இரண்டு பேரும் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்கவுமே சரோஜா அழ ஆரம்பித்துவிட்டார்.

 

“என்ன பெரியம்மா? அம்மா?” என்று கைகளைக் காட்டி கேள்வியாக நிறுத்தியவன் சட்டென அவர்களை கண்டுகொண்டான்.

 

“பாமணி ஜோசியரைப் பார்க்க போனீங்களே, என்ன தோஷம்னு சொல்லிட்டாரா, அதானே அழுகை?” என்று கேட்க,

 

“அது இல்லைடா, தோஷம்னா கூட சரி பண்ணிரலாம். அவரு புள்ளைங்க இரண்டுமே பெத்தவங்களை மீறித்தான் கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு சொல்லிட்டார்” பெரியம்மா அளவில்லை என்றாலும் சிறிய வருத்தமுடன் சொன்னார் அவனின் அம்மா.

 

“மீறின்னா?” என்று துரை யோசனையாகக் கேட்டான்.

 

“மீறினா, அதான்  டா இந்த லவ்வு” என்று அருணா மெதுவாக சொல்ல, ராஜதுரை சத்தமாக சிரித்துவிட்டான்.

 

“அய்யோ, கடவுளே! இதுதானா?” என்று இன்னும் அவன் சிரிக்க,

 

“ஏண்டா  நானே குலை  நடுங்கி இருக்கேன், சிரிக்கிற?” என்று சரோஜா கோபமாக ராஜதுரையைக் கேட்டார்.

 

“பின்ன, நான் யாரையாச்சும் லவ் பண்ணுவேனா? ஏன்மா நீயாச்சும் சொல்லக் கூடாது, நம்ம மைதிலி அவ பொண்ணுங்ககிட்ட பேசவே யோசிப்பா. இதுல இருந்து என்ன தெரியுது? அந்த ஜோசியர் ப்ராடுன்னு தெரியுது” என்றான் நக்கலாக.

 

“இல்லைடா, அவர் சொல்லி நிறைய நடந்திருக்கு” என்று சரோஜா கலக்கமாக சொல்ல

 

“நிறைய நடந்திருக்கலாம், எல்லாம் நடந்ததில்லைதானே பெரியம்மா?” என்று கேட்டான்.

 

“அவன் சொல்றதும் சரிதானேக்கா? இவனே முறைப்பொண்ணுங்க கிட்ட கூட பேசாதவன்., முசுட்டுப்பய” என்றதும் அம்மாவை முறைத்தான் துரை.

 

“எல்லார்கிட்டவும் போய் நான் ஏன் பேசனும்? எனக்குப் பொண்டாட்டியை வரப்போறவ கிட்ட மட்டும்தான் நான் பேசுவேன்” என்றான் அழுத்தமாக.

 

“இங்க பாரு பெரியம்மா, சும்மா எவனோ ஒரு ஜோசியர் சொன்னதுக்கு எல்லாம் அழுது வீணா பிரச்சனை பண்ணாத, வேணும்னா வேற ஆள் பார்ப்போம், முதல்ல மைதிலி படிச்சு முடிக்கட்டும், ஒரு மாசம்தானே? பெரியப்பா கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்க வேண்டாம்” என்று சொல்ல, சரோஜா விழித்தார்.

 

“அவரு கேட்பாரேடா”

 

“கேட்டா படிச்சு முடிச்சதும் அமையும்னு சொன்னார் சொல்லுங்க, மைதிலி கிட்டவும் இது பத்தி பேசவே கூடாது பெரியம்மா. அவளுக்குத் தெரியும் நம்ம குடும்பத்துக்கு எது கௌரவம்னு. நீங்களா ஒன்ன சொல்லி அவ மனசைக் கெடுக்காதீங்க” என்றான் ராஜதுரை மிகவும் கண்டிப்பாக.

 

“இல்லைடா ராஜா, வயசுப்பொண்ணு” என்று பெரியம்மா இழுக்க,

 

“எனக்கும் அதேதானே சொன்னார் அவர். என்னை நம்புறீங்க, அப்படியே தங்கச்சியையும் நம்புங்க. நான் லவ் பண்றேன்னு சொல்லும்போதே தெரியல, அந்தாள் எப்படிப்பட்டவர்னு” என்று சிரித்து,

 

“நான் குளிச்சிட்டு வரேன், யாராச்சும் சாப்பிட எடுத்து வைங்க” என்றுவிட்டு குளிக்கப்போனான்.

 

தவறியும் காதல் திருமணம்தானே, அதில் என்ன பிழை? என்ற எண்ணம் ராஜதுரைக்கு எழவில்லை.

 

அன்று மாலை அவன் அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் வயலில் ட்ராக்டர் கொண்டு உழுதுகொண்டிருக்க, சத்தமான பேச்சுக் குரலில் அந்த சின்ன சாலையினைப் பார்த்தான்.

 

தாரகை ஸ்கூட்டி ஓட்டியபடி சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, பின்னால் ஒரு ஆடவன். ராஜதுரை முகச்சுளிப்புடன் அதனைப் பார்த்தான். அவனை மீறி அனிச்சையாக அவள் உடையைப் பார்க்க, துப்பட்டா போடவில்லை என்பதைக் கண்டுகொண்டான்.

 

‘இந்த பொண்ணுக்கு அடக்கமே இல்லை பேச்சுல, டிரஸ்ல’ என்று  நினைத்தது அவன் மனம்.

✅ End of Episode 2
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 8 Replies
Sathya Velusamy Reader 3 months ago

அடேய் சிரிக்காதடா.....உன் பொழப்பு சிரிப்பா சிரிக்க போகுது.....

😀😀😀
❤️ 1 😂 1 more...
Srichitra Reader 3 months ago

Very nice 

❤️ 1 more...
Surya Palanivel Reader 3 months ago

😍😍

❤️ 1 more...
Jeeona Reader 3 months ago

rajadurai yaaru pa nee 40 years munadi poraka vendiyavan late poranthu iruka 😂

❤️ 1 more...
Pavithra Narayanan 3 months ago

🤣🤣🤣🤣🤣🤣🤣

😂 1 more...
Mrs Beena loganathan Reader 3 months ago

பெண்ணை கட்டுப்படுத்தினால்

பிறக்கும் சுதந்திரம்…
பெண்ணை நம்பினால்
பிறக்கும்  சரித்திரம்… ✨
பெண் ஆண் பேதமில்லை பார்க்கும் பார்வை ஆணுக்கு
புரியவில்லை....
❤️ 1 more...
Radhi Reader 2 months ago

Nice 

Kavi Natarajan Reader 2 months ago

😍😍😍😍😍

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top