Episode 3
ராஜதுரை ட்ராக்டரை மெல்ல நிறுத்த, தாரகையின் ஸ்கூட்டியும் நின்றது. ‘எதுக்கு நிக்குறா?’ என்று துரையின் பார்வை அந்த பக்கம் பார்க்க, மைதிலி இவனுக்காக டீ எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
மைதிலியைப் பார்க்கவும் தாரகை வண்டியை நிறுத்தி, இருபக்கமும் கால் ஊன்றி, சிரித்தபடி ஏதோ பேச மைதிலியும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். தாரகையின் கார்கூந்தலும் காற்றில் பறந்துகொண்டிருந்தது. ‘தலைமுடி கூட அடங்கியிருக்கா பாரு’ என்று மெல்ல முணுமுணுத்தவன், வயலில் இருந்தபடியே
“மைதிலீ!!” என்று கத்தினான்.
“அய்யோ, அக்கா அண்ணா கூப்பிடுது. நான் வரேன்” என்று அவள் தாரகையிடம் சொல்லிவிட்டு வேகமாக ரோட்டோரம் இருந்த தட்டியைத் திறந்து வயலில் இறங்கினாள்.
தாரகையோ அண்ணன் என்றதும் வயல்பக்கம் பார்த்தவள், ராஜதுரை ட்ராக்டரில் இருப்பதைக் கண்டாள்.
“ஓஹ், பஞ்சாங்கம்!” என்று முகம் சுளித்தவள் வேகமாக வண்டியை எடுத்தாள்.
மைதிலி அண்ணன் என்ன சொல்வானோ என்று பயந்தபடியே வர, அவள் கையில் இருந்த டீயை வாங்கியவன் ஊதியபடி குடித்தான்.
“உனக்கு அந்த பொண்ணுகிட்ட என்ன பேச்சு?” என்றதும் திக்கென்றது அவளுக்கு.
“அது அந்தக்கா நம்ம ஸ்கூல்லதான் படிச்சாங்கண்ணா, என் சீனியர். அதான் பேசினேன்”
“சீனியர்னா பேசலாம் தப்பில்லை, ஆனா யார்கூட பழகனும்னு ஒன்னு இருக்கு மைதிலி. பெரியப்பாவுக்கு இந்த பொண்ணோடலாம் உனக்குப் பழக்கம்னு தெரிஞ்சா அவ்வளவுதான்!” என்றதும் மைதிலிக்கு துரையின் இந்த பேச்சு பிடிக்கவில்லை.
“நம்ம அறிவுண்ணாவுக்கு சொந்தம்தான், அதான் பேசினேன்” என்றாள் மெல்ல.
தங்கை வேறாகப் புரிந்து கொண்டாள் என்று துரைக்குப் புரிய,
“நான் ஆளுங்களுக்காக சொல்லல மைதிலி, கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லாத பொண்ணு இவ, நம்ம அறிவை வா போன்னு பேசுது, அவங்கண்ணனை வாடா போடாங்குது. இருக்க இடத்துக்குத் தகுந்த மாதிரி டிரஸ் பண்றது கூட இல்லை, தலையைப் பாரு, காட்டேரி மாதிரி விரிச்சிட்டு” என்றான் எரிச்சல் மிகுதியில்.
“அவங்கம்மா அப்பா காதலிச்சு கல்யாணம் பண்ணிவங்க, அவங்க பழக்க வழக்கம் வேற, அதுவும் தாய் தகப்பன் இல்லாத பொண்ணு. அதான் இப்படி சுத்துது. நீ அது கூடலாம் சகவாசம் வைச்சிக்காத” ராஜதுரை கண்டிப்பாக சொல்ல,
மைதிலிக்கு அண்ணனுக்கு என்ன தாரகை பற்றி இவ்வளவு தெரிந்திருக்கிறது, அப்போ என் விஷயமும் தெரியுமா என்ற பயம் நெஞ்சை அடைத்தது. கேளாமல் விட்டால் இன்னும் பயம் அதிகமாகும் என்று நினைத்தவள்,
“உனக்கு எப்படிண்ணா அந்த அக்காவைப் பத்தி இவ்வளவு தெரியுது?” என்று முயன்று கேட்டுவிட்டாள்.
மைதிலி கேள்வி கேட்கவும், அவளை ஒரு நொடி உற்றுப்பார்த்தவன்,
“வீட்ல இருக்க பொண்ணுங்களை தெரியாம இருக்கலாம், அந்த பொண்ணுதான் ரோட்ல பறக்குதே. பயலுவோ சொல்வானுவ, அறிவுக்கும் சொந்தம்ல. அது மட்டுமில்லாம ராமசாமி தியேட்டர் விட்டு பொண்ணு. அதனால தெரியும்” என்றான் சாதாரணமாகவே. அவன் தங்கை மனதை அறியாதவன், அடுத்த வீட்டுப் பெண்ணைப் பற்றி ஆராய்ந்து அறிந்து வைத்ததுதான் விந்தை.
“சரி நீ இங்க நிக்காத, வீட்டுக்குப் போ” என்று துரத்தியும் விட்டான்.
அடுத்த நாள் காலை பத்து மணி போல் சுமித்ரா, பன்னீரின் பெரிய மகள் வீடு வந்தாள். சுமி, சரோஜா, அருணா மூவரும் பின்வாசலில் உட்கார்ந்து மதிய சமையலுக்குத் தேவையானவற்றை செய்தனர். துரையும் முற்பகல் நேரத்தில் வீட்டிற்கு வந்தான். வந்தவனிடம்,
“இந்தாடா கோழிகால் சூப்” என்று சுமித்ரா நீட்ட, இளம் நாட்டுக்கோழியின் காலை வேகவைத்து சூப் செய்திருக்க, அம்மியில் இடித்த மிளகோடு சேர்த்து குடிக்க, காரமாக இருந்தாலும் அவனுக்கு மிகவும் பிடித்தது.
“பொறந்த பொண்ணு வந்தாதான் என்னை கவனிக்கிறீங்க” என்றான் விளையாட்டாக.
“டேய், போன வாரம் உனக்குன்னுதானே காடை அடிச்சேன்” சரோஜா கேட்க,
“சும்மா பெரியம்மா, அக்கா உனக்கு நுங்கு வேணுமா? நம்ம சக்ரவர்த்தி அண்ணா வயல்ல நுங்கு இறக்குறாங்க” என்று சுமியிடம் கேட்டான்.
“இப்ப வேண்டாம்டா, போகும்போது வாங்கிட்டு வா. பிள்ளைங்க சாப்பிடும்” என்றாள் சுமித்ரா.
“பசங்களையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமில்லக்கா, நீயும் ஒரு மணி நேரத்துல வர வீட்டுக்கு, மாசத்துல ஒருக்கத்தான் வர”. துரை அக்கா வருவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டான்.
“அதுங்களுக்கு ஸ்கூல்டா, லீவ்ல கொண்டு வந்து விடுறேன். வீட்ல வேலை இருக்கேடா, மாடு பால் கறக்குது, ஆடு கிடக்கு.” என்று சுமி சொல்ல,
“என்னக்கா இவ்வளவு வேலைன்னா ஆடுங்களை வித்துரலாம், நான் வந்து பார்க்கவா? உனக்கு முடிஞ்சத செய். அத்தான் எதாவது சொல்றாரா என்ன?”
“என்ன சொல்லுவார், வீட்டு வேலைக் கூட செய்ய முடியாதா சொல்வார்.” என்று சலித்த சுமி,
“அவரை விடு, அம்மா என்னமோ சொல்லுதே என்ன சங்கதி?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“என்ன சொல்லிச்சு?” என்று கோழி காலை உறிஞ்சிக்கொண்டே கேட்க,
“உனக்கு லவ் மேரேஜாமே” என்றதும் காரம் தலைக்கேறி இருமினான். அவன் அதை மறந்தே போயிருக்க, அக்கா கேட்கவும் முறைத்தான்.
“உங்களை என்ன சொன்னேன் பெரியம்மா?” என்று அவரைக் கோபத்துடன் கேட்க,
“அம்மாவை ஏண்டா முறைக்கிற? கல்யாணமாகி போய்ட்டா நான் எதுவும் கேட்டுக்க கூடாதா? என் அம்மா எங்கிட்ட வீட்டு சேதி ஒன்னும் சொல்லக் கூடாதா?” என்று சுமி சண்டை போட,
“என்னக்கா நீ? அந்த ஜோசியர் என்னத்தயோ சொல்லிட்டாருன்னு இவங்க நம்பினா நீயுமா?” என்றான் எரிச்சலுடன்.
“இந்த பேச்சை இத்தோட விடுங்க, மைதிலியை எல்லாம் கேட்டு வைக்காத” என்று சுமியிடம் கண்டிப்புடன் சொல்ல,
“டேய், அவளைப் போய் கேட்பேனா? உன்னை சொல்லவும் எனக்கு சிரிப்புத் தாங்கல, அதான் உன்னை வம்பிழுக்கக் கேட்டேன்” என்றாள்.
“அது சரி!” என்று எழுந்தவன் “நீயாச்சும் பெரியம்மா கிட்ட சொல்லிவை க்கா, அதை நினைச்சு கவலைப்படுது” என்றான் ராஜதுரை.
“இதுல கவலைப்பட என்ன இருக்கு? அப்படி காதலிச்சா கட்டி வைக்க வேண்டியதுதானே?” என்றவளை மூவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“உளறாம இரு கா” என்று சீறினான் ராஜதுரை.
“இதுல என்னடா இருக்கு? எல்லாரும் இப்ப செய்றதுதானே? நல்ல பையனோ பொண்ணோ இருந்தா யார் பார்த்தா என்ன?” என்றாள் எதார்த்தமாக.
“அதுக்குன்னு பழக்கவழக்கம்னு ஒன்னு இல்லையா? நம்மாளுங்களா இருக்க வேண்டாமா? இந்த சினிமா எல்லாம் பார்த்து கெட்டுப்போய்ட்டக்கா நீ”
ராஜதுரை குற்றம் சுமத்தி சுமித்ராவைப் பேச,
“என்னடா பேசுற நீ? உனக்குப் புரியல ராஜா. கல்யாணம்ன்றது மனசு சம்மந்தபட்ட விஷயம். பெரியவங்க பார்த்து கட்டி வைச்சாதான் நல்லதுனு இல்லை” என்ற மகளை முறைத்த சரோஜா
“இப்படி உங்கப்பாரு முன்னாடி பேசி வைக்காத, அந்த மனுஷன், வேற ஆளுங்க வீட்ல பச்சத்தண்ணீ கூட குடிக்க மாட்டாரு. உன்னை நல்லபடியா கட்டிக்கொடுத்த மாதிரி மைதிலியும் கட்டிக்கொடுத்தாதான் எனக்கு நிம்மதி” என்றார் நெஞ்சில் கைவைத்து.
“அப்போ நான்?” முறைத்தபடி துரை கேட்க,
“டேய், உன்னை யாருக்குக் கட்டி வைக்க, நீதானே ஒருத்தியைக் கட்டிட்டு வரனும். உன்னைப் பத்தி கவலையில்ல, நீ உங்க பெரியப்பாரு பெருச்சாளியைக் காட்டி பொண்ணுன்னாலும் அவளத்தான் கட்டுவ” என்று நொடித்துக்கொண்டார்.
சுமித்ராவும் அருணாவும் வாய்விட்டு சிரிக்க, துரையோ
“பெரியப்பா இல்லைனா உங்க எல்லாருக்கும் வாய் அதிகமாகிடுது, பார்த்துக்கிறேன். மோட்டர் போட்டு வரேன்” என்றவன் வயலுக்குப் போனான்.
வயலுக்குப் போய் மோட்டர் போட்டவன், சக்ரவர்த்தியின் தோட்டம் சென்று நுங்கு வெட்டிக்கொண்டிருந்தான் அப்போது பார்த்து அறிவும் வந்தான். இருவரும் பேசிக்கொண்டு நுங்கை வெட்டி அந்த நீரைப் பருகி, சாப்பிட்டுக்கொண்டிருக்க, துரையின் முகத்தில் புன்னகை.
“என்ன பங்காளிக்கு மூஞ்சி பளிச்சினு இருக்கு?” என்று அறிவு கேட்க,
“அது ஒரு காமெடிடா” என்று வாய்விட்டுவிட்டான். பின் இவனிடம் சொல்லலாமா என்ற எண்ணம் எழ, அறிவு அவனையே பார்க்க மைதிலி விஷயத்தை மறைத்தான்.
“அந்த ஜோசியர் எனக்கு லவ் மேரேஜ் ஆகும்னு சொன்னாராம்டா” என்று துரை சிரிக்க, அவனுக்கு மேல் சிரித்தான் அறிவு.
“டேய் இதுக்கு இப்படி கத்தி சிரிக்கிற, கம்முனு இரு” என்று துரை அதட்ட, அவனோ
“அவன் பாமணி ஜோசியன் இல்லைடா பேமாணி ஜோசியன், ஹாஹா. உன்னை ஒருத்தி லவ் பண்ணிட்டாலும். சத்தியமா நடக்காதுடா பங்காளி. நடக்கவே நடக்காது!” என்று கிண்டல் செய்தவன்,
முறைத்துக்கொண்டு இருந்த துரையின் தோளில் கைப்போட்டு, “ஆனாலும் டா ஆளு, உன் குடும்பத்தோட கடமையுணர்ச்சி எனக்குப் பிடிச்சிருக்கு. எங்க வீட்ல எங்கம்மா சீரியல்ல கல்யாணம் ஆகலனு அழுவுதே ஒழிய மகனுக்கு ஒன்னை செய்வோம்னு நினைக்கலயே” என்று பாவமாக சொல்ல,
“அலையாதடா! நடக்கிறப்ப நடக்கும்” என்று துரை சொல்ல,
“எதுவேணும்னாலும் நடக்கும்டா, ஆனா உனக்கு லவ்… ஹாஹா.. அது மட்டும் நெவர். அதுவும் நீ காலண்டர் மகாலஷ்மியைத்தானே கேட்ப, கஷ்டம்டா துரை” என்றான் அறிவு.
“உனக்கு ஏண்டா எரியுது? அப்படியே கஷ்டம்னாலும் நான் இஷ்டப்பட்டபடி பொண்ணைத்தான் கட்டுவேன்” என்ற ராஜதுரை நுங்கை எடுத்துக்கொண்டு வீடு சென்றான்.
****************
ஒரு மாதம் ஓடியிருந்தது. ராஜதுரை ட்ராக்டர் சாமான்கள் வாங்கி வேண்டி அறிவுடன் பட்டுக்கோட்டை வந்திருந்தான். அறிவுக்கு சென்னையில் ஐடி வேலை என்றாலும், இப்போது வீட்டில் இருந்தே வேலை செய்கிறான்.
அவன் வீட்டுக்கும் பட்டுக்கோட்டையில் மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டி இருக்க, ராஜதுரையுடன் காரில் சென்றான். பொருட்களை வாங்கிக் கொண்டு பதினொரு மணி போல் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், பட்டுக்கோட்டை டவுனில் அறிவு அவன் தங்கைக்கு பலகாரம் வாங்கினான், துரையும் கொஞ்சம் வாங்கினான்.
இருவரும் காரில் போகும்போது, “வீட்டுக்குப் போனதுமே என்ன வாங்கிட்டு வந்திருக்கேனு பறப்பாடா என் தங்கச்சி” என்று அறிவு அங்கலாய்க்க,
“பரீட்சை எழுதிட்டு வர பொண்ணு, பசியெடுக்கும்தானே?” துரை சாதாரணம் போல் சொன்னான்.
“இப்போ பரீட்சை எழுதி முடிச்சு வீட்ல இருக்கும்போதும்தானே தின்னுட்டே இருக்கா”
“பரீட்சை முடிஞ்சிருச்சா? டேய் இன்னிக்கு மைதிலி பரீட்சை எழுத போச்சே” என்று துரை யோசிக்க,
“அரீயர் பேப்பரா இருக்கும்டா, ஸ்வாதி ஆல் க்ளீயர். அவளுக்கு எல்லாமே முடிஞ்சதுடா” என்று அறிவு சொல்ல, துரையின் முகத்தில் தீவிர யோசனை.
“என்னடா? மைதிலி அரீயர் எல்லாம் க்ளீயர் பண்ணிடும்” என்று துரையின் தோள் தொட,
“அவளுக்கு அரீயர் இருக்க வாய்ப்பில்லையே, இருந்தாலும் சொல்லியிருப்பா..” பதட்டமாகச் சொன்னான். மனதில் இனம் காண முடியாத ஒரு இன்னல், பயம். கற்பனை தாறுமாறாக ஓடியது.
“உங்க பெரியப்பா எதாச்சும் சொல்லுவார்னு சொல்லாம இருந்திருப்பாடா”
“அப்படித்தான் இருக்கும்” என்ற ராஜதுரை தஞ்சாவூர் பக்கம் வண்டியை விட்டான். அங்குதான் மைதிலி படிக்கும் கல்லூரி உள்ளது. நண்பனின் பதட்டத்தைப் புரிந்த அறிவும் ஒன்றும் சொல்லவில்லை.
அறிவு சொன்னதையே அறிவில் ஏற்றி அகத்தை சமாதானம் செய்தான் துரை. கல்லூரிக்குச் சென்றதும் அறிவு துரையிடம்,
“நீ இரு, நான் விசாரிச்சுட்டு வரேன். ஓவரா யோசிக்காத” என்று சொல்லிவிட்டுப் போனான். மீண்டும் அறிவு வந்தபோது அவன் முகத்தில் குழப்பம்.
“இன்னிக்கு அரீயர் எக்சாம் எதுவுமே இல்லையாம்டா. நான் சொன்ன மாதிரி போன வாரமே மைதிலிக்கு எல்லா பரீட்சையும் ஓவர்” அறிவுக்கும் மைதிலி தங்கை முறைதானே, அவனுக்கும் மனதில் பயம் பரவியது.
“பொய் சொல்லிட்டு எங்கடா போயிருப்பா?” என்ற ராஜதுரையிடம் அவ்வளவு ரௌத்திரம்.
“டேய், துரை! பதறாத. ஒருவேளை ப்ரண்ட்ஸோட எங்காச்சும் சுத்தப்போயிருப்பா. எங்க வீட்ல ஸ்வாதி கூட இப்படி வேலை செய்வா, என்ன எங்கிட்ட சொல்லிடும்” என்றதை எல்லாம் துரை ஏற்கவே இல்லை.
“அறிவு, மைதிலி யாராச்சும் லவ் பண்ணியிருப்பாளோ?” தயங்கினாலும் துரை கேட்க,
“உளறாதடா!” என்றான் அறிவு.
“இல்லைடா, அன்னிக்கு அந்த ஜோசியர்..” என்று அவன் நிறுத்த, அறிவு அவனைப் பார்த்த பார்வையில் எல்லாம் சொல்லிவிட்டான். துரையின் முதுகில் தட்டிக்கொடுத்தவன்,
“எனக்குப் புரியுது, ஆனா நீ அப்படி இல்லைதானே? மைதிலியும் அப்படி நம்ம குடும்ப மானத்தை வாங்குற புள்ள இல்லைடா. நான் சொன்ன மாதிரிதான் இருக்கும்” என்று அறிவு ஆறுதல் சொல்ல வீட்டிற்கு அழைத்து மைதிலி வந்தாளா என்று கேட்க, அவர்கள் பரீட்சை முடிந்துதானே வருவாள் என்றனர். அவர்களை சமாளித்து முடித்தவனுக்குப் பெரியப்பாவிடம் என்ன சொல்வதென்ற கவலை.
“பெரியப்பா கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டாம், மைதிலி ஒருவேளை சும்மா ப்ரண்ட்ஸோட போயிருந்தா, உன் பெரியப்பாரு பெரிய ப்ரச்சனையாக்கிடுவாருடா துரை. நம்ம முதல்ல ஊருக்குப் போகலாம். நீ மைதிலிக்குப் போன் போடு” என்று சொல்லவும்
“அதை மறந்துட்டேன் பாரு” என்று தங்கைக்கு அழைக்க, ஸ்வீட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது அவள் எண். துரை டென்ஷன் ஆக, அறிவு சமாதானம் செய்து, ஊருக்கு வண்டியை விட்டான்.
போகும் வழியில் துரைக்கு அழைப்பு. எடுத்துப் பேசியவன் முகத்தில் இறுக்கம்.
“மைதிலி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாளாம் அறிவு” என்று சொன்னவனின் குரலில் அவ்வளவு கோபம்.
“என்னடா சொல்ற?”
“ரெஜிஸ்டர் ஆபிஸ்ல நம்ம ஆள் ஒருத்தர் இருக்கார், இப்போதான் விஷயம் தெரிஞ்சு எனக்கு சொல்றார்” என்றதும் அறிவுக்கும் அதிர்ச்சிதான்.
“அவளை கொல்லாம விடப்போறதில்லைடா, என்ன தைரியமிருந்தா ஏதோ ஒரு ஜாதிக்காரனைத் திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணியிருப்பா? அவ்வளவு நெஞ்சழுத்தமா அவளுக்கு?” என்று உறுமியவன் அந்த ரெஜிஸ்டர் ஆபிஸில் இருந்தவரிடம் விசாரித்து, நின்ற இடம் ‘தாரகை டாக்கீஸ்’.
தாரகை அவளின் அறையில் வேலையாக இருக்க, அந்த நேரம் சீற்றத்துடன் தாரகையின் அறைக்குள் உள்ளே நுழைந்தான் ராஜதுரை.
✅ End of Episode 3
எனக்கு future ராஜதுரை கண்ணுக்கு தெரியறானே..
ஏய் பொண்ணே என்ன வீட்டுக்கு கம்பி நீட்டற எபியாவே போட்டு நம்மளை பொங்க வைக்கிற.....
Nice
Vasama mattikittangaley 😱
ஜோசியம் பலித்து விட்டது....
Nice