Episode 7
தாரகை விழுந்து கிடப்பதே அதிர்ச்சி ராஜதுரைக்கு. சந்தியா வந்து சொல்லவும், ஏதோ சிறு பெண் இன்று நினைத்திருக்க, இவளை எதிர்ப்பார்க்கவே இல்லை. அந்த அதிர்வில் அவன் நிற்க, தாரகை வலி தாங்காது எரிச்சலில் அவனை பேசிவிட அவளை கடுமையாக முறைத்தான். முறைத்தாலும் அவள் அருகே கிடந்த வண்டியை அவள் மேல் படாதவாறு ஓரமாய் நிறுத்தினான்.
சந்தியா பயந்தபடி மாமன் அருகே நின்றவள், “அக்கா இந்தாங்க” என்று வேகமாக மாமனின் தோளில் இருந்த துண்டை எடுத்து தாரகையிடம் நீட்டினாள்.
சந்தியாவைப் பார்த்த துரை, “முதல்ல உன் சைக்கிளை எடுத்துட்டு வீட்டுக்குப் போ” என்றான்.
“அக்கா, சாரிக்கா” சந்தியா தாரகை நெற்றியில் வலிந்த குருதி கண்டு பயத்தில் சொல்ல,
“விடும்மா” என்றாள் தாரகையும்.
“நான் கூட சைக்கிள் ஓட்டும்போது இப்படி விழுந்திருக்கேன். ஆனா பயத்துல சைக்கிளை விடாத. கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணிட்டு அப்புறம் இந்த ரோட்ல ஒட்டு. அதுவும் தார் ரோடான பின்னாடி ஓட்டு. கப்பிக்கல் கிடக்கிற மண் ரோட்ல கஷ்டம்” என்று பொறுமையாக சொல்ல,
“அட்வைஸ் நிறுத்திட்டு ரத்தத்தைத் துடை” என்றான் ராஜதுரை தாரகையிடம்.
தாரகை அவனை கண்டுகொள்ளாது, ரத்தம் வந்த இடத்தில் துண்டை வைத்து அழுத்த, வலியில் கண்களில் இருந்து கண்ணீர். சந்தியாவைப் பார்த்த துரை,
“சைக்கிளை ஓட்டாம தள்ளிட்டுப்போ” என்றான் அதட்டலாக.
“ஒழுங்கா அவ ஓட்டும்போதே கவனிச்சிருந்தா இதெல்லாம் தேவையா? இது யாரு பொண்ணு?” என்று கேட்டாள் தாரகை.
“அக்கா பொண்ணு” என்றவன் அவள் லேசாகவே துண்டை வைத்திருக்க, இன்னும் ரத்தம் வர,
“தையல் போடனும் போல, என்ன துணியை வைச்சிருக்க நீ” என்று திட்டியபடி அவள் தலையில் வைத்து இறுக்கமாக ரத்தம் வராதவண்ணம் கட்டினான். தாரகை சாலை ஓரம் அப்படியே வலியில் இருக்க, துரை சந்தியா வீட்டிற்குச் சென்றாளா என்று தெரு முனையில் நின்று பார்த்தபடி யாருக்கோ போன் செய்தான்.
தாரகையோ அவன் செயலில் கோபத்தில் இருந்தாள். விழுந்து கிடக்கும் என்னை கண்டுகொள்ளாது போய் யாரிடம் பேசுகிறான் என்ற எரிச்சல் அவளிடம். அவள் போன் கூட எடுத்துவரவில்லை. மயக்கம் வருவது போல் இருக்க, கடுமையான தலைவலி வேறு. இவன் போன் பேசியபடி நடந்து வர,
“துரைஐஐஐ!!!!!” என்று கத்தினாள். ராஜதுரையோ போனில் இருந்து கையெடுத்து பதட்டமாய் அவளைப் பார்த்தான். அவளருகே செல்ல,
“ஒருத்தி விழுந்து கிடக்கிறேன், ஒரு பேஸிக் மேனர்ஸ் இல்லை உனக்கு? ப்ளாட் லாஸ் ஆகுது, வண்டி கூட ஓட்டமுடியாது. ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போகாம யார்ட்ட கடலை போடுற? என்ன மனுஷன் நீ?” என்றாள் கோபமாக.
முடிந்திருந்தால் யார் உதவியும் எதிர்ப்பார்க்க மாட்டாள், அதுவும் துரையிடம் கேட்டிருக்கவே மாட்டாள். ஆனால் இப்போது முடியவே இல்லை. அதுவும் அவன் அக்கா மகளால் தானே என்ற எண்ணம்.
துரைக்கு தாரகையின் மரியாதையற்ற பேச்சு பிடிக்கவில்லை. அறிவிடம் பேசுவது போல் அவனிடம் என்ன உரிமையில் பேசுகிறாள்? ‘நான் இவளுக்கு மாமன் மவனா இல்லை அத்த மவனா?’ என்று இவனுக்கும் எரிச்சல்.
“என்ன என் பெயரை எல்லாம் சொல்ற? உன்னை விட பெரியவன் நான். நான் ஒன்னும் உன்னிஷ்டத்துக்குப் பேச உன் அத்தை மவன் அறிவு இல்லை” என்றான் கண்டிப்போடு.
“நீ அறிவும் இல்லை, உனக்கு அறிவுமில்லைனு எனக்கு தெரியும்” என்றாள் தாரகையும் முறைப்போடு.
“என்னடி சொன்ன?” என்று ராஜதுரை சத்தமிட, “என்னடா பிரச்சனை?” என்றபடி அறிவு வந்துவிட்டான்.
“டேய்! தாரா என்ன இது இவளோ ரத்தம்? வா வா, எழுந்திரு” என்று பதறியவன் அவளைக் கை கொடுத்து தூக்கிவிட்டான்.
“இதுக்குத்தான் என்னை கூப்பிட்டியா?” என்று அறிவு துரையைப் பார்க்க,
“ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போ” என்றான் துரை.
ராஜதுரை அவசரமாக அறிவை வர சொல்லியிருக்க, உடனே வந்துவிட்டான்.
“எப்படி ஆச்சு தாரா?” என்று அறிவு தாராவை பிடித்தபடி கேட்க,
“இப்போ ஆராய்ச்சி முக்கியமா? இவளை அழைச்சிட்டு போய் டிரிட்மெண்ட் பாரு” என்ற ராஜதுரை அறிவு பதில் சொல்லும் முன்னே, வேகமாக அவன் வீடு நோக்கி நடந்தான்.
“நீ முதல்ல பார்த்து வண்டியில உட்காரு” என்ற அறிவு தாரகையோடு அவர்கள் ஊரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் வந்தான்.
தாரகைக்கு வலியில் ஒரு எரிச்சல் என்றால், ராஜதுரையின் செய்கை அதைவிட கோபம் தந்தது. இவன் என்ன மாதிரி மனிதன், நான் யாராக இருந்தால் என்ன? அடிப்பட்டு இருக்கும் என்னை அவனே இங்கு அழைத்து வந்திருக்கலாமே? அறிவிடம் ஏன் சொன்னான் என்று அவள் அறிவு கேள்வி கேட்க
‘அவனுக்கு ரொம்ப ஜாதிவெறி! அதைவிட அவன் தங்கச்சி விஷயம்னால இப்படி செஞ்சிருப்பான்’ என்று பதிலை அவளே யோசித்தாள். கொஞ்சமும் மனிதமே இல்லை என்ற ஆதங்கம்.
ராஜதுரை சொன்னது போல தாரகைக்கு இரண்டு தையல் போட வேண்டியதாகிவிட்டது. வலிக்கு ஊசியும் போடப்பட்டிருக்க, அறிவு அவள் அருகே உட்கார்ந்தவன்
“எப்பா எவ்வளவு ரத்தம்?” என்று தாரகையைப் பார்த்தான். அவள் அங்கிருந்த ராஜதுரையின் துண்டை அவனிடம் நீட்டி,
“அந்த தண்டத்தோட துண்டு, கொடுத்துடு அறிவு மாமா” என்றாள்.
“தாரா! என்ன இது பேச்சு? அவன் தான் நீ அடிப்பட்டிருக்கவும் எனக்கு உடனே கால் பண்ணி வர சொன்னான். சும்மா மரியாதை இல்லாம பேசாத, உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை” என்று அறிவு கூற,
“எஸ், எனக்கு நீ சொல்ல வேண்டியது இல்லை. யாருக்கு என்ன மரியாதை தரனும்னு! உனக்கு போன் செஞ்சு வர சொல்ற நேரம் இங்க இருக்க ஹெல்த் செண்டருக்கு அவனே என்னை அழைச்சிட்டு வந்திருக்கலாமே” என்றாள் எரிச்சலுடன்.
“முதல்ல என்னாச்சு சொல்லு?” என்று அறிவு கேட்க, தாரகையும் எல்லாம் விளக்கினாள்.
“நீ எனக்கு சொந்தம்னால அவன் எனக்கு சொல்லியிருக்கான். அதுவும் வீடு பக்கம். இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்?” என்று அறிவு கேட்க,
“சும்மா சப்பைக்கட்டு கட்டாத! அவனுக்கு நாங்கன்னா கீழதான். அதான் என்னை ஹாஸ்பிட்டல் கூட அழைச்சிட்டு வரல. ஜாதி வெறி அவனுக்கு!” என்றாள் குரலில் ஒரு அருவருப்புடன்.
அந்த பாவனையே அறிவை சுட்டது.
“நீ சொல்ற மாதிரி அவன் ஜாதி பார்ப்பான், ஆனா இப்படி அடிப்பட்டிருக்கும்போது பார்க்கிற அளவு அவன் மனிதாபிமானம் இல்லாதவன் இல்லை தாரா. இவ்வளவு ஜட்ஜ் பண்ணாத அவனை”
“அதைவிட அவன் எனக்கு முறைக்கு அண்ணன் வேணும். வயசுக்கு மரியாதை கொடு” என்றான் அதட்டலாகவே.
“அது என்ன வயசுக்கு மரியாதை? அவன் முன்னாடி பொறந்த ஒரே காரணத்துக்காக எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது! யார்னாலும் எப்படி நடக்கிறாங்கன்னுதான் மரியாதை!”
தாரகை அவள் உறுதியில் பேச, அறிவு இவள் கேட்க மாட்டாள் என்று புரிந்து அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டான். ராமசாமி பேத்தி தலையில் கட்டோடு வரவும் பதறினார். அறிவு பின்னால் வர,
“டேய்! கமலா மவனே என்னடா செஞ்ச என் ராஜாத்தியை?” என்று அவனை தன் வாக்கிங் ஸ்டிக் வைத்து அடிக்க,
“சரியான ரவுடி குடும்பம்!” என்று சத்தமாக சொன்னவன்,
“உன் பேத்தி போய் ரோட்ல விழுந்தா நானா பொறுப்பு? பொறுப்பா மாமன் மவளை டாக்டர்க்கிட்ட அழைச்சிட்டு போய்ட்டு வந்ததுக்கு எனக்குத் தேவைதான்!” என்றான் கோபத்துடன்.
தாரகை தாத்தாவின் அருகே வந்தவள், “ஒன்னுமில்ல தாத்தா, ஒரு சின்ன ஆக்சிடெண்ட், எனக்குத் தலைவலியா இருக்கு. தூங்குறேன்” என்றாள். அறிவைப் பார்த்து
“தேங்க்ஸ் மாமா” என்று சொல்லி அறைக்குள் புகுந்தாள். அறிவும் ராமசாமி தாத்தாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப நினைத்தான்.
“நீ எங்கடா சரியா என் பேத்தி விழுந்தப்ப வந்த? நீதான் இடிச்சியாடா ராஸ்கல்?” என்று அவன் இடுப்பில் வாக்கிங் ஸ்டிக்கை குத்திக்கொண்டு கேட்க,
“ரொம்பத்தான் பெருசு உனக்கு ஏத்தம்! ஏதோ பாவமேன்னு செஞ்சா என்னையே குத்துற நீ? உன் பேத்தி வண்டி ஓட்ட தெரியாம விழுந்தா, நான் இடிச்சேனா சொல்ற?” என்று முறைத்தான்.
“போடா! என் பேத்தி ப்ளேன் கூட நல்லா ஓட்டுவா” என்ற ராமசாமி
“கூகுள்!” என்று போனை எடுத்து அழுத்தி சொல்ல,
“வணக்கம்! உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?” என்று கேட்டது கூகுளின்
voice assistant. ‘ஒரு கால் பண்ணு’ என்று சொல்லி அரிச்சந்திரனுக்கு அழைத்து அவனிடம் தாரகைக்கு அடிப்பட்ட விஷயம் சொன்னார் ராமசாமி.
“ஓஹ், டெக் குடும்பமா நீங்க?” என்று அறிவு கிண்டலாகக் கேட்டவன்
“யாருமில்லனா பரவாயில்லை, நான் பக்கத்துல நிக்கிறேனே, என்னைக் கேட்டா என்னவாம் தாத்தா?” என்றான்.
“உன்னை விட கூகுளுக்கு அறிவு அதிகம்டா அறிவு!” என்று ராமசாமி கிண்டலாக சொல்ல,
அறிவோ, “அந்த கூகுளை நம்பி போ ஒரு நாள் உன்னை எங்காச்சும் தள்ளி விடும், அப்போ தெரியும் யாருக்கு அறிவு அதிகம்னு” என்று கடுப்பாக கிளம்பிப் போனான். அரை மணி நேரம் சென்று அறிவுக்கு அழைத்தான் ராஜதுரை.
“அந்த புள்ள எப்படிடா இருக்கு?” என்று கேட்க, துரையை நினைத்து பெருமையாக இருந்தது.
“நல்லா இருக்காடா, என்ன கல்லு குத்தி காயம் அதிகம். இரண்டு தையல் போட்டாங்க. வீட்ல விட்டுட்டேன்” என்ற அறிவு
“டேய் பங்கு! எனக்குப் போன் செஞ்சு வர சொன்னதுக்கு அவளை உடனே ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போயிருக்கலாமே டா?” என்று மனதை குடைந்த கேள்வியைக் கேட்டுவிட்டான் அறிவு.
“அதான் அஞ்சே நிமிஷத்துல நீ வந்துட்டியே டா?” என்று துரை சொல்லவும்
“நான் ஊர்ல இருந்தேன், வந்தேன் சரி. ஆனா இல்லைன்னா? உனக்கு தாரகையோட பிரச்சனை சரிதான். அடிபட்டு ரத்தம் வடிய இருக்கப்ப உடனே ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போயிருக்கலாம்ல? தப்பு ராஜா” என்றான் அறிவு.
“என்னடா நீ? அப்படியா விடுவேன்? சந்தியா மேலதான் தப்பு, இவ அவ மேல மோதக்கூடாதுன்னு ப்ரேக் அடிச்சு கல்’ல மோதி விழுந்துட்டா. ரொம்ப சீரியஸ்னா நான் எதையும் யோசிச்சிருக்க மாட்டேன். அவ அந்த வலியில கூட என்னை பேசிட்டுத்தான் இருந்தா, நான் அழைச்சிட்டு போனா ஊர்ல பேச்சாகும். எப்படி நான் அங்க வந்தேனு கேட்பாங்க, நீன்னா அவ அத்தை மகன். அதைவிட எங்களுக்கும் அவங்களுக்கும் ஆகறதில்ல, பெரியப்பாவுக்குப் பிடிக்காது! இதெல்லாம் யோசிச்சுத்தான் நான் அவளை அழைச்சிட்டுப் போகல. அதை விட அந்த பொண்ணு பேசுற பேச்சுக்கு அத்தை மவன் நீ சொரணைக் கெட்டு வாங்கிப்ப, நான் கடுப்பில மறுபடி தள்ளி விட்டிருப்பேன்” என்றான் தாரகையை நினைத்தபடி.
“அவ்வளவு மோசமில்லடா உன் பங்காளி, ரொம்ப சீரியஸ்னா கேள்வி வராது. அவ நல்லா பேசிட்டு தெளிவா இருக்கவும்தான் உனக்குக் கூப்பிட்டேன்” என்ற துரை தாரகை அவனை பேசியது அத்தனையும் சொல்லிவிட்டான்.
“நான் ஷாக்ல நின்னா, அவ என்னை எருமைன்றா. ரொம்ப பேச்சு! எனக்குப் பிடிக்கல” என்று துரை சொல்ல
“சரிதான்! அவ ஒரே பொண்ணு, அம்மா அப்பா இல்லைனு அவங்க அண்ணா, தாத்தா இரண்டு பேரும் ரொம்ப செல்லம். ஆனா நல்ல பொண்ணு, அவங்க அண்ணா அந்த அரி இருக்கானே சரியான வில்லங்கம்!” என்றான் அறிவு கிண்டலாக.
“என்னமோ போ! அவ எப்படி இருக்கான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன். வைக்கிறேன்” என்று துரை வைத்துவிட்டான்.
அறிவு அவன் வேலை முடியவும் மாலை போல் தாரகைக்கு அழைத்தான்.
“என்ன தாரா? இப்போ ஓகேவா?” என்று அவள் நலம் விசாரித்தவன், அவள் பதில் சொல்லவும்
“என்னமோ என் பங்காளியை பாகிஸ்தான் தீவிரவாதி போல பாசமில்லாதவன்னு என்ன பேசின நீ? அவன் நீ எப்படி இருக்கன்னு கேட்டான் தெரியுமா?” என்று அறிவு பெருமையாகப் பேசினான்.
“ஓஹ், அந்த மனித நேய மாணிக்கம் என்னை ஏன் ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகலயாம்?” என்று நக்கலாக தாரகை கேட்க,
“அவன் ஜாதி பார்ப்பான், ஆனா அவங்க பெரியப்பா போல் மோசமில்லை. அதை விட அவன் அவரோடவே இருக்கிறதால அப்படி இருக்கான். அடிப்பட்டவளைக் காப்பாத்த எல்லாம் ஜாதி பார்க்கிற மோசமான ஆள் இல்லை அவன்! சும்மா இஷ்டத்துக்கு அவனைப் பத்தி கமெண்ட் பண்ணாத” என்றான் அறிவு.
“உன் பங்காளியோட பெருமையை சொல்லத்தான் கூப்பிட்டியா?” தாரகையைத் தலையைப் பிடித்தபடி சலிப்போடு கேட்டாள்.
“தாரா! நீ அவனை பேசினது டூ மச்! அவன் வீட்ல இப்போவரை மத்த ஆளுங்களை எல்லாம் திண்ணையில நிக்க வைச்சுத்தான் பேசுவாங். அப்படியிருக்க வீட்டு பையன் எப்படி இருப்பான்? ஆளாளுக்கு ஒரு கொள்கை! ” என்று அறிவு பங்காளிக்காக வாதாட,
“வீட்ல எப்படி இருந்தாலும் படிச்சவன் தானே உன் பங்காளி? அவனை எஞ்சியனிரிங் படிக்க வைச்சத்துக்கு ஒரு எருமையைப் படிக்க வைச்சிருக்கலாம். அது கூட அறிவா இருக்கும்” என்றதும் அறிவுக்குப் பக்கென்றது.
“ஏய்! என்னை எருமைன்றியா?” என்று அவன் அவசரமாகக் கேட்க
“ஹாஹா! அப்படி போய் சொல்லி எருமையை இன்சல்ட் பண்ணி ப்ளூ க்ராஸ்ல உள்ள போகவா நான்?” என்றதும்
“உனக்கு ரொம்ப பேச்சு அதிகம்” என்றான் அறிவு கோபத்துடன்.
“இருந்துட்டு போகுது! என்ன கொள்கை? UNTOUCHABILITY(அண்டச்சபிலிடி- தீண்டாமை) அஹ் ஃபாலோ பண்றானுங்க, என்னமோ ஐ நாவுல அவார்ட் வாங்கின ரேஞ்சுக்குப் பேசுற, எல்லாரும் செய்றாங்கன்னு மட்டும் சில விஷயம் சரியாகிடாது! சாதி வைச்சு கீழா பேசக்கூடாதுன்றது வள்ளுவர் காலத்துல இருந்து வாட்ஸப் காலம் வரை சொல்லிட்டே இருக்க விஷயம்! அதை செஞ்சுட்டு நல்லவன்னு செர்டிஃபிகெட் வேற” என்ற தாரகை
“எனக்கு ஹெல்ப் பண்ணின உன் பங்காளிக்கு ஒரு நோபல் ப்ரைஸ், உனக்கு ஒரு பாரத ரத்னா சொல்லிடுறேன். போனை வை” என்று கடுப்பாக வைத்துவிட்டாள்.
அறிவு என்னதான் சொன்னாலும் முதல் சந்திப்பில் ராஜதுரை அவளிடம் நடந்த விதத்தினால் அவனைப் பற்றி நல்லவிதமாக கேள்விப்பட்டாலும் கூட நம்ப முடியவில்லை.
***************
அன்று ஞாயிறு. துரை வயல் வேலைகள் முடிந்து வீட்டிற்கு வர, கார்மேகம் வந்திருந்தான். மனைவியை இரு நாட்களாக போனில் அழைக்க, அவள் வரமாட்டேன் என்றுவிட்டாள். அதனால் இன்று நேரே வந்திருக்க, பன்னீர் மருமகன் வரவுமே மகளை கிளம்ப சொல்லிவிட, சுமித்ரா துரையிடம் சொல்லிக்கொண்டு போக காத்திருந்தாள். துரை வர, பிள்ளைகளும் சுமித்ராவும் அவனிடம் பேச, கார்மேகம் அமைதியாக இருந்தான்.
சுமித்ராவும் கார்மேகமும் வாசலில் நிற்க, சுமித்ரா துரையிடம்
“டேய் ராஜா! அந்தப்பக்கம் வரப்ப வீட்டுக்கு வா” என்றாள். தம்பி எங்கே கோபத்தில் வராமல் இருந்துவிடுவானோ என்ற கவலை அவளுக்கு.
“கண்டிப்பா என் அக்கா வீட்டுக்கு வராம இருப்பேனா? அக்கா! இனிமே எந்த பிரச்சனைனாலும் யார் வம்பு செஞ்சாலும் எனக்குப் போன் போடு” என்றான் கார்மேகத்தைப் பார்த்துக்கொண்டே.
கார்மேகம் மனைவி, மக்கள் மீது பாசமுள்ளவன் என்றாலும் கூட ஆண் என்ற வகையில் மனைவியை அதிகாரமாக நடத்துவான். இப்போதும் கூட எத்தனை நாள் அவள் வராமல் இருக்கிறாள் என்று பார்க்க நினைத்தாலும் அவன் அப்பாவும் அம்மாவும் திட்டியதால் வந்துவிட்டான். துரை மீதும் கோபம் அவனுக்கு.
“அதுக்கு ஒன்னும் அவசியம் வராதுன்னு அவனுக்கு சொல்லுடி” என்றான் மனைவியிடம். சுமித்ரா கண்களில் சிரிப்புடன் தம்பியைப் பார்க்க,
“அவசியம் இல்லைன்னா சந்தோஷம்தான் கா” என்றான் துரை.
“என்னக்கா அத்தான் பேச மாட்டேங்கிறார்? மச்சான் வந்தான் கவனிப்பாரா இல்லையானு கேளு” என்று அக்காவைக் கேட்க
“அதெல்லாம் கவனிப்போம்” என்றான் கார்மேகம். அக்காவும் தம்பியும் கண்களால் சிரித்துக்கொண்டனர்.
✅ End of Episode 7
Very nice
😍😍😍
Nice