Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 31

முரணான கொள்கை உள்ள இருவர் இணைவது எளிது! மாற்றிக்கொள்வதை விட மற்றவர் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமே முதலடி. அதனை துரை திறம்பட செய்தாலும், முரணான கொள்கை உள்ள இரு குடும்பம் இணைவது மிக மிக கடினம்! ராஜதுரை தாரகை விஷயத்தில் அதுதான் நடந்தது.

பத்திரிக்கையில் பெயருக்குப் பின் ஜாதி பெயர் போட வேண்டும் என்பதில் அன்புசெல்வனே திட்டவட்டமாக இருந்தார். அவரே அப்படியென்றால் பன்னீருக்கு இது தெரிந்தால் அவ்வளவுதான் என்ற கவலை துரைக்கு.

இத்தனை நாள் இந்த மாறா மரபில், தீரா தீண்டாமையில் ஊறிப்போனவனுக்கு அதிலிருந்து முழுதாய் மீளவே முடியவில்லை. மீள முடியாமல் சுற்றம் அவனை சுற்றி இறுக வளைத்தது. அதில் திணறிப்போனான் துரை.

“சரி, பெரியவங்க பெயர்ல மட்டும் ஜாதிப்பெயர போட்டு அடிக்கலாம்” என்று அரிச்சந்திரன் சூழலோடு பொருந்த, தாரகை எந்த சுழலுக்கும் சூழலுக்கும் சிக்காதவள்! கொள்கைகளை பிடித்துக் கொள்ள வாழ்க்கை அவளுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்க, அதில் என்றுமே வளைந்து கொடுக்காத வைராக்கியம் தாரகைக்கு உண்டு.

“என் கல்யாண பத்திரிக்கைபயில் ஜாதிப்பெயர்லாம் இருக்க கூடாது!” என்று அரியிடமும் துரையிடமும் பிடிவாதமாக சொல்லிவிட்டாள்.

துரையோ, “நம்ம பசங்க கல்யாண பத்திரிக்கை வேணும்னா அப்படி அடிச்சுக்கலாம் தாரக, ப்ளீஸ் என்னால எங்க பெரியப்பாவ எல்லாம் ஓவர் நைட்ல பெரியாரா மாத்த முடியாது. புரிஞ்சிக்கோ” என்று கெஞ்சிப் பார்த்தும் தாரகை கேட்கவில்லை.

இதில் அன்பு செல்வன் வேறு அரியிடம் எகிறினார். கடைசியில் அரிச்சந்திரன் வேறு முடிவு எடுத்தான்.

“தனியா பத்திரிக்கை அடிக்கிறதுதான் பெட்டர் துரை. தாரகையை இந்த விஷயத்துல எல்லாம் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவ அப்படித்தான்!” என்று அரி நிறுத்திய விதமே துரைக்குப் புரிந்தது.

தாரகைக்கு அதிலும் கோபம்.

“பெரிய பாரத் ரத்னா, இல்லை நோபல் பரிசு பெயருக்குப் பின்னாடி போட்டாதான் இந்த பூமர்ஸ்ங்களுக்குக் கௌரவம் ” என்று அரிச்சந்திரனிடம் தாரகை கத்த

“அக்சுவலி படிக்காதவங்க, பல வருஷமா ஊரை கூட தாண்டாதவங்க அவங்களாம். உன் கூட, என் கூட படிச்ச பொண்ணுங்க கூட இன்ஸ்டா பேஸ்புக்ல ஜாதி பெயர் பின்னாடி போடுறாங்க, அதை என்ன சொல்லுவ. அது ஒரு கெத்துனு நினைச்சு வைக்கிறாங்க. வயசானவங்கதானே விட்டுடு” என்றான்.

“போடா” என்று சொல்ல, அரிச்சந்திரன் தங்கையின் தோளில் கைப்போட்டு ஆதுரமாக அரவணைத்தவன்

“சும்மா எல்லாத்துக்கும் டென்ஷன் ஆவக்கூடாது ராஜாத்தி! நம்ம ஊர்ல கல்யாணம்ன்றது ஒரு கனவு! எல்லாரும் சந்தோஷமா இருக்க பண்டிகை. அதனால நீயும் சந்தோஷமா இரு, உனக்கு பிடிச்சவனைக் கட்டிக்க போற, துரையையும் அதை எஞ்சாய் பண்ண விடு. மத்தவங்க எல்லாரையும் அவுட் ஆஃப் போகஸ் வை. ஜஸ்ட் எஞ்சாய் தி மொமண்ட்ஸ்! எல்லாரையும் எப்பவும் மாத்த முடியாது.” என்று சொல்ல அண்ணன் தோளில் சாய்ந்தவள் சில நிமிடங்கள் கண்மூடி அப்படியே இருந்தாள்.

தாரகை மனது அப்பா, அம்மாவை அதிகம் தேடியது, அண்ணனை தாத்தாவை பிரிய வேண்டுமே என்ற தவிப்பு மனதை ஆட்கொண்டது. தைரியமாக இருந்தாலும் இனி இங்கே தான் நிரந்தரமாக இருக்க முடியாது என்ற எண்ணம் வலிமையைக் குறைக்க, மனத்தில் பாரம். அது ஏக்கமாய், கோபமாய் சின்ன சின்ன விஷயத்திலும் வெளிப்பட்டது.

எப்படியோ சலசலப்புகள், பேச்சுகள் என்று எல்லா திருமணம் போல, தாரகை துரையின் திருமண நாளும் விடிந்தது. முதல் நாள் பெண் அழைக்கும் வைபவம் நடைப்பெற்றது, நேராக தாரகை ராமசாமி வீட்டிலிருந்து மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டாள். சுமித்ரா, துரையின் தோழி சந்தியா, அறிவு, அவன் தங்கை ஸ்வாதி எல்லாம் கூடிட ஒரே கலாட்டா.

சுமித்ரா துரையிடம்,
“டேய் அன்னைக்கு காதல் கல்யாணம்னு சொன்னதுக்கு என்னை என்ன பேச்சு பேசுன நீ? கடைசியில அந்த ஜோசியர் சொன்னதுதான் உண்மையாகிடுச்சுல” என்று வம்பிழுக்க

“அந்த ஜோசியர்கிட்டதான் என் ஜாதகத்த கொண்டு போய் கொடுக்கணும்” என்றான் அறிவு கிண்டலாக.

“உங்களை ஆச்சும் பரவாயில்லக்கா, புள்ளதாச்சினு கூட பார்க்காம என்னை மூச்சு திணற திணற அறிவிருக்கா அப்படி இப்படினு திட்டித் தீர்த்தான். இதுல இவன் போன் எடுக்க நான் பயந்திருந்தா என் வீட்டுக்காரருக்கு கால் பண்ணி என்னைப் பேசுறான்.” என்று சந்தியா முறைக்க

“எம்மா தாயே! நீதான் என் வாழ்க்கையில ஒளி ஏத்தின தெய்வம் சரியா? அப்போ ஏதோ தெரியாம பேசிட்டேன். உன் புள்ளையா நினைச்சு மன்னிச்சிருமா” என்று துரை கையெடுத்து கும்பிட,

“என்னது என் புள்ளையா? கொய்யால! ஏதோ உனக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சுனு என்னை கிண்டல் பண்றியா? மாப்பிள்ளையா போய்ட்டியேனு விடுறேன் டா உன்னை” என்று சந்தியா திட்டினாள்.

அதற்குள் சரோஜா வந்தவர், “என்ன கலாட்டா? எல்லாம் போய் தூங்குங்க. சுமி, நீ போய் தாரக கூட இரு!” என்று அதட்டி அனுப்பினார்.

அறிவு மட்டும் துரையோடு இருக்க, போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் துரை. தாரகையிடமிருந்து மெசெஜ் வந்திருந்தது.

“ஊரான் வீட்டு கல்யாணத்துல எல்லாம் எனக்கு பிடிச்ச பாட்டை போட்டுட்டு நம்ம கல்யாணத்துல எனக்கு பிடிச்ச பாட்டு ஓடல. ஒழுங்கா மாத்த சொல்லு” என்று ஆடியோ அனுப்பியிருந்தாள்.

சட்டென போனை எட்டி பார்த்த அறிவு, தாரகை பெயரினைப் பார்த்துவிட்டு
“ஏண்டா என்னால நம்பவே முடியலடா. என் மேனேஜர் எனக்கு ப்ரோமோஷனும் ஹைக்கும் கொடுத்தா கூட ஈசியா நம்பிடலாம். ஆனா இதை…! என்னால தாங்கவே முடியலே. பட் பங்காளி! தாரகை கிட்ட மாட்டுறதுக்குதான் அந்த பேச்சு பேசி, அவ்வளவு பில்டப் கொடுத்தியாடா?” என்று கேட்க துரையிடம் புன்னகை மட்டுமே.

“இருந்தாலும் உன் மேல எனக்குக் கோவம் டா எரும.! சந்தியா கிட்ட எல்லாம் சொல்லியிருகக், எங்கிட்ட சொன்னியா நீ?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த மெத்தையில் சென்று அறிவு உட்கார

“உங்கிட்ட சொன்னா உடனே நீ தாரகை கிட்ட சொல்லிடுவ, இல்லை என்னை கன்வீன்ஸ் பண்ணுவ. உண்மையை சொல்லணும்னா எனக்கு தெரியும், உங்கிட்ட சொன்னா என்னோட ஃபீலிங்க்ஸை நீ வளரவிட மாட்ட. எப்படி சொல்றது, எனக்கு அது பிடிச்சிருந்தது, கூடாதுனு ஒரு எண்ணம். மனசு கேட்காம சந்தியா கிட்ட சொன்னேன். அவ இந்த தாராகிட்ட சொல்லுவான்னு எனக்கு என்ன தெரியும்?” என்றதும்

“அப்ப கூட பங்காளி, உன் நண்பன் எங்கிட்ட சொல்லலதானே. நானும் ஒரு ஃபிகரை உஷார் பண்ணி உங்கிட்ட சொல்லாம இருக்கேன். ரிவெஞ்ச் எடுக்கிறேன் பாருடா” என்றான் கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னான். துரை அவன் பாவனையில் சிரித்துவிட்டான்.

“எப்படியோ? உனக்குக் கல்யாணம் முடிஞ்சா எனக்கும் ரூட் க்ளீயர். அண்ணனின் வழியில் நானும் லவ் மேரேஜ் பண்ணி நாட்டை சீர்த்திருத்திருவேன்” என்றான் அறிவு.

அடுத்த நாள் ராஜதுரை தாரகையின் திருமணம் தமிழ் நெறிப்படி தமிழ் வாழ்த்தோடு அவர்கள் திருமணம் இனிதே நடைப்பெற்றது.

நீல வானின் உயரத்தை
நெஞ்சம் கவரும் நிலப்பரப்பைக்
கோலக்கடலின் ஆழத்தைக்
குன்றத் தமைந்த பேருரத்தைச்
சாலத் துளிக்கும் பனிநீரைச்
சாந்தில் தொடுத்த தீந்தேனை
மூலச் சொல்லாய் முகிழ்ந்தோங்கும்
முன்னைத் தமிழே வாழியவே…!’

திருமணக் கரணத்திற்கு வந்துள்ள பெருமக்கள், பெற்றோர், உற்றார், உறவினர், உறவு, அன்று, நண்பு ஆகிய அனைவரையும் வணங்கி அவர்கள் இனிய இசைவுடன் மங்கல விழா நிகழ்த்துவதாகக் கூறி, பெரியவர் தாலி எடுத்துக் கொடுக்க சொல்ல, பன்னீரையும் சரோஜாவையும் முன்னிறுத்த பன்னீரோ ராமசாமியைக் கொடுக்க சொன்னார்.

அன்பு செல்வன் கூட “என்னண்ணன் நீ கொடு, உன் கோவத்தை இதுல காட்டாத” என்று சொல்ல,

“டேய்! என் மகன் டா அவன், உன் மாமனார் நல்லா சீமானா செழிப்பா வாழ்றவர். இருக்கிறதுல அவர்தான் பெரிய மனுஷன். அவர் கொடுத்தா ராஜா நல்லா இருப்பான்” என்று சொல்ல அரிச்சந்திரனுக்கு அவ்வளவு நிம்மதி.

பன்னீர்செல்வம் அப்படி சொல்ல, தாரகையின் முகத்திலும் பெரிய மலர்ச்சி. ராமசாமி வான் நோக்கி வணங்கி, தாலியை எடுத்து துரையிடம் நீட்ட, தாரகை திருமதி ராஜதுரையானாள்.

இணைவு விழா இனிதாய் நிகழ்ந்தேறியது. பத்து கிடா வெட்டி பெரிய பந்தல் போட்டு சிறப்பாய் நிகழ்ந்தது ராமசாமியின் ராஜாத்தி திருமணம்.

எல்லா முறைகளும் முடிந்து இரவில் தாரகை ராஜதுரையின் அறையில் இருந்தாள். மாடியறை என்பதால் எந்த தொந்தரவுமில்லை. பால்கனி கதவைத் திறந்துவிட்டு, தாரகை மெத்தையில் உட்கார்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

துரை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மேலே வர, தாரகையின் பார்வை வெளியில் இருந்தது. தாரகையைப் பார்த்ததும் பளிச்சென்றது அவன் விழிகள். திருமண வேலைகளை அவனும் அரிச்சந்திரனும்தான் பார்த்தனர். என்னதான் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களை வேலை வாங்க முடியவில்லை. அதில் களைத்திருந்தாலும் தாரகை கண்டதும் உல்லாசம், உற்சாகம் எல்லாம் உள்ளத்தில் உலா போனது.

துரை வரவும், தாரகை மெத்தையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தவள் போனில் பாடலை ஓட விட்டாள்.
இரு விழி
இரு விழி இமை கொட்டி
அழைக்குது உயிர் தட்டி
திறக்குது
ரெக்கை கட்டி
பறக்குதம்மா .
இரு மனம் இரு
மனம் விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா
என்றவளின் கண்களில் கேலி நிறைந்திருந்தது.

“கேட்டியா?” என்று துரை சொல்லி அவள் அருகே உட்கார,

“கேட்கணும்னுதானே வச்ச?” என்று எதிர்கேள்வி கேட்டாள் தாரகை.

“வேற யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க? ராஸ்கல்” என்று சொல்லி அவன் தோளில் அடிக்க

“இந்த ஸ்டேட்டஸ் நீ பார்க்கிற மாதிரி மட்டும்தான் வச்சேன்” என்று கண்ணடித்தான்.

“அடப்பாவி!” என்று சிரித்த தாரகையும் “சின்ன வயசுல அர்த்தம் தெரியாம அதிக டைம் பாடியிருக்கேன்” என்றாள்.

“இப்ப தெரிஞ்சிருச்சா?” என்ற துரையின் குரலில் அர்த்தம் தெரிய வைக்கும் ஆவல்.

“கொஞ்சம் தெரியும்” என்று குறும்பாக அவள் சொல்ல,

“எனக்கும் கொஞ்சம் தெரியும், சேர்ந்து மொத்தமா கத்துப்போமா?” என்று அவள் கரம் பற்றி கேட்டவன் தாரகையை சட்டென்று இறுக அணைத்தான்.

“எத்தனை நாள் கனவு தெரியுமா? இல்லைவே இல்லைனு நினைச்சு… என்னோட மனைவியா நீ இருக்க…. ” என்றதும்

“கனவில்லை நிஜம்தான்” என்று அவன் இடையை தாரகயைக் கிள்ளி விட,

“உன்னை!” என்று அவனும் கிள்ள தாரகை சட்டென்று எழுந்தே விட்டாள். அத்தனை கூச்சம்! தாரகையின் கூச்சம் பார்த்தவனுக்குத் தாளாமல் சிரிப்பு.

“ஓஹ், உன்னோட கன்ட்ரோல் அங்க இருக்கா?” என்று கேட்டவன் அவளை இறுக அணைத்தான். தாரகையும் அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள, உள்ளத்தின் உறவுக்கு உரிமை கிடைத்த திருப்தி இருவரிடமும். நெருக்கத்தில் இருவரின் தயக்கங்களும் விடைபெற,

“எப்பா, இந்த நாளுக்காக எவ்வளவு போராட்டாம்! சண்டை, பேச்சு” என்று சோர்வாக சொன்னவன் அவளோடு மெத்தையில் சரிந்தான்.

“இந்த கண் எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?” என்று கேட்டவனின் ஆவல்கள் அணையை உடைத்தன. எங்கே என்ற இடமில்லாது, எண்ணிக்கை இல்லாது ஆவல் காதல் போட்டி போட முத்தமிட தொடங்கினான் துரை. வார்த்தையால் வடிக்க முடியாத, மொழியால் கடத்த முடியா உணர்வுகளை தொடுகையால் உணர்த்தினான்.

முத்தத்தில் தொடங்கி மொத்தமாய் மோகத்தின் வழியில் மெய்தொட்டு பயிறல் அரங்கேறியது. தீரா ஆவல் எல்லாம் தீயாய்ப் பற்றியது. பாடலின் அர்த்தத்தை பாவையிடம் தெரிந்து கொண்டு, அவளுக்கும் தெரிய வைத்தான் துரை.

அந்த இரவில் இருவரிடையே ஸ்ருங்காரத்தின் சந்தங்கள் இசைக்கத் தொடங்கின.

சிந்தி விழும் முதல் மழை
வந்து விழும் முதல் அலை
எந்திரிக்கும் முதல்வரை
சுந்தரிக்கு சொந்தமாகவே..!

✅ End of Episode 31
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Srichitra Reader 2 months ago

Very nice.

❤️ 1 more...
Sathya Velusamy Reader 2 months ago

❤️

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 2 months ago

Sorry sorry ....vacation leave 🤧🤧🤧.    .

ஊருக்கு போயிட்டு வரதுக்குள்ள கல்யாணம் கச்சேரி முடிந்து விட்டது 🤩🤩🤩🤩💐💐sweet எடு கொண்டாடு🍫🍫🍫
❤️ 1 more...
Radhi Reader 2 months ago

Nice 

Kavi Natarajan Reader 1 month ago

💞💞💞💞💞💞💞💞💞

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top