Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 10

“நீ ஃபோன் பண்ணுவேன்னு தெரியும்டா பங்கு எனக்கு” அறிவு துரையிடமிருந்து போன் வரவுமே உற்சாகமாகப் பேச

“வாரக்கடைசி, போர் அடிச்சது. அதனால் கூப்பிட்டேன். நீ ஏண்டா இப்படி பறக்கிற?” என்று துரை கேட்க

“ஓ! காரியம் முடிஞ்சதும் எங்கிட்ட சொல்லக்கூட தோணல உனக்கு. போடா” என்றான் அறிவு கோபமாக.

“எரும, என்ன காரியம் என்ன சொல்லல நான்?” என்று துரை விஷயம் தெரியாது கேட்க

“தெரியாத மாதிரி எங்கிட்டவே உருட்டுறியாடா நீ? என்னை நம்பமாட்டேங்கிற” என்று இன்னும் அறிவு விஷயம் சொல்லாது பேச பேச ராஜதுரைக்கு இவன் பேச்சில் எரிச்சல் வந்தது.

“அறிவுக்கெட்டவனே! என் சித்தப்பனை சொல்லனும், எருமைக்குப் பேரு எலிசபெத்னு வைக்கிற மாதிரி உனக்கு அறிவழகன்னு பேரு!! விஷயத்தை என்னன்னு சொல்லாம அப்படி இப்படினு பேசுறியே, நீயெல்லாம் என்ன வேலை செஞ்சு வெட்டி முறிக்கிற?” என்று படபடவென்று பேசினான் துரை.

ராஜதுரை இவ்வளவு கடுப்புடன் பேச, அறிவும் ‘இவனுக்கு விஷயம் தெரியாதோ?’ என்று நினைத்தான்.

“சரோஜா பெரியம்மா மைதிலியோட பேசினாங்களாமே, அதை கேட்டேன்” என்று சொல்ல,

“என்னடா சொல்ற?” என்று அதிர்ந்தான் ராஜதுரை.

“உனக்குத் தெரியாதாடா நிஜமா? பெரியம்மா சொல்லாமத்தான் பேசிச்சா?” என்று அறிவு கேட்க,

“என்ன நடந்துச்சு அறிவு? ஒழுங்கா சொல்லு” என்று வேகமாகக் கேட்க,

“தங்கச்சி போன் பேசும்போது சொன்னாடா, நேத்து தாரா எங்க வீட்டுக்கு வந்தாளாம். சரோ பெரியம்மாவை மைதிலியோட பேச வைச்சாளாம். உனக்கு சொல்லியிருப்பாங்க நினைச்சேன்” என்று அறிவு சொல்ல, துரை பதில் பேசவில்லை.

பெரியம்மாவுக்காக நான் அந்த தாரகையிடம் என் மரியாதையை விட்டு பேசியிருக்கிறேன், ஆனால் அவர் மகளிடம் பேசியதை நேற்றிலிருந்து இன்றும் சொல்லவே இல்லை. அப்போது அவர் என்னை மகனாக நினைக்கவில்லையா? என்று ஏதேதோ எண்ணங்கள் தோன்ற வருத்தமாக இருந்தது. அம்மாவுக்குத் தெரியுமா இல்லையா? அவரும் மறைத்துவிட்டாரா? என்று அவன் தனியான உணர்வு.

“ராஜா?” அறிவு அவனை அழைக்க,

“எனக்குத் தெரியாதுடா, இவங்களுக்கு எல்லாம் நான் வேண்டாம போய்ட்டேன். அவங்க பொண்ணு கிட்ட பேசினதை ஏன் எங்கிட்ட சொல்லப்போறாங்க?” என்றவனின் குரலில் அவன் உணர்வு புரிந்தது. அறிவு பங்காளி என்றாலும் கூட ஒன்றாகப் படித்தவன் அதை விட அவர்களுக்குள் உடன்பிறப்பை போல் ஒரு ஒட்டுதல் உண்டு.

“விடுடா, நீ பெரியப்பா கிட்ட சொல்லிடுவ நினைச்சிருப்பாங்க” சமாதானமாக அறிவு பேச, அறிவின் பேச்சை எல்லாம் அகம் கேட்காது. அகம் கேட்பது போல் அறிவும் பேசாதே!

“நினைச்சா நினைக்கட்டும்! ஆனா அந்த மகாராணி எப்படிடா மனசு இரங்கினா?” என்று துரை சந்தேகமாகக் கேட்க

“கேட்டு சொல்றேன் நான்” என்ற அறிவிடம்

“நீ அவளைக் கேளு, நானும் கேட்டுக்கிறேன்” என்றான் துரை.

“டேய்! நான் பேசிட்டு சொல்றேன்” என்ற அறிவின் மனமோ ‘உன்னைப் பத்தி பேசுறதுன்னா அவ அன்சென்சார்டா பேசுவாளே’ என்றது.

“அது எதுக்கு இரண்டு வேலை? உன் மாமா மக என்னத்தான் சொல்றான்னு நானும் கேட்கனும். நான் இருக்கேன்னு சொல்லாம கான்ஃபிரன்ஸ் போடு” என்றான் உத்தரவாக. அறிவும் தயக்கத்தோடு அதை செய்தான். தாரகை என்ன சொல்வாளோ என்ற பயத்துடன் அழைத்தான். அழைக்கும் முன்

“இது தப்பு துரை, அவளுக்குத் தெரிஞ்சா உண்டில்லைனு ஆக்கிடுவா” என்று அறிவு துரை மனம் மாற்றுவதற்காக சொல்ல, துரையின் எண்ணமோ அப்படி எதனால் இவள் மனம் மாறியிருப்பாள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமாக, ‘அதே நேரம் நான் அவ்வளவு கேட்டும் செய்யாதவ எப்படி மனசு மாறியிருப்பா?’ என்று தெரிந்து கொள்வதில் முனைப்பாக இருந்தான்.

அறிவு தயங்கிக் கொண்டு இருக்க “டேய் அவ என்னை எதாச்சும் பேசினாலும் நான் லைன்ல இருக்கேன் சொல்ல மாட்டேன். நீ நம்பி பேசு” என்று வாக்குறுதி கொடுக்க, அறிவோ மனத்தில் ‘இவன் எப்போ பெரும மோட்ல இருந்து எரும மோட் போனான்?’ என்று கிண்டலடித்தாலும் வேறு வழியின்றி தாரகைக்கு அழைத்தான்.

“என்ன தாரா எப்படி இருக்க?”

“ஹாய் மாமா, நான் நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்க? ஜாப் எப்படி போகுது?” தாரா சாதாரணமாகவே விசாரிக்க,

“அதுக்கென்ன காசுக்கேத்த தோசை! அப்புறம் நீ ஏதோ சம்பவம் சமாதானமெல்லாம் பண்ணியாம், எனக்கு நியுஸ் வந்திச்சு” என்று கேட்டான் அறிவு.

“என்ன உன் தங்கச்சி சொன்னாளா? கண்டிப்பா அத்த சொல்லியிருக்காது” என்றாள்.

“அது எப்படி சொல்ற?”

“எங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கு எதை யார்கிட்ட சொல்லனும்னு விவஸ்தை இருக்கும். உன் தங்கச்சிக்கு அது இருக்காது” நக்கலாக சொல்ல

“ரொம்பத்தான், ஆமா எப்படி ஒத்துக்கிட்ட நீ?”

“எங்க அத்தை கேட்டாங்க, ஒத்துக்கிட்டேன்” என்றாள் தாரகை.

“அடிப்பாவி! நான் எத்தனை தடவ உன்னையும் உன் அண்ணனையும் கேட்டேன்? சரியான கொழுப்பெடுத்தவங்க ரெண்டு பேரும்” என்று திட்ட

“போதும் போதும்! கமலா அத்தை மைதிலி அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னாங்க, மைதிலியைக் கேட்டா அவளுக்கும் அம்மாவைப் பார்க்கணும் சொன்னா, ஆனா அவங்கப்பா அண்ணாவை நினைச்சு பயம். அதான் உங்கப்பா வீட்ல இல்லாத நேரமா பார்த்து கமலா அத்தை மைதிலி அம்மாவை அழைச்சிட்டு வந்தாங்க, வீடியோ கால்’ல பேசினாங்க” என்று விளக்கினாள் தாரகை.

“இதே விஷயம் தானே ராஜாவும் உன்னைக் கேட்டான். அப்பவே செய்றதுக்கு என்ன?” என்று அறிவு கேட்க

“நான் செய்றேன்னுதான் சொன்னேன். அந்த பூமர்தான் என் வீட்டுக்கு வரமாட்டேன்னு ஓவரா பண்ணினார். அதான் நான் முடியாதுன்னேன்” என்றாள் தாரகை கிண்டல் தொனியில்.

கேட்டிருந்த அறிவுக்கோ ‘அய்யோ இவ ஆரம்பிச்சிட்டாளே, அவன் வேற இருக்கானே?’ என்று கலக்கமாக இருந்தது.

“சும்மா நீயா ஒன்னு நினைக்காதன்னு பலவாட்டி சொல்லிட்டேன். அப்படி நினைக்கிறவன் உன் தியேட்டர்ல படம் பார்ப்பானா? அவங்க பெரியப்பாவுக்கு பெரியம்மா உங்க வீட்டுக்கு வந்தது தெரிஞ்சா அவ்வளவுதான்! அதனால அவன் யோசிச்சிருப்பான்” என்று அறிவு துரைக்காகப் பேச தாரகை அமைதியாகவே இருந்தாள்.

அவளுக்கு இன்று மனது சரியில்லை, அதனால் பேசவும் மனமில்லை.

“அதுவும் எப்ப பாரு அவனை மட்டு மரியாதை இல்லாம பேசுற? இதெல்லாம் தப்பு! உனக்கும் அவனுக்கும் மைதிலி பிரச்சனை தவிர வேற என்ன பகை?” என்று அறிவு கேட்க, தாரகைக்குக் கோபம் வந்தது. துரை மீது தவறே இல்லை என்பது போல் அறிவு பேச, அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.

“நான் ஒன்னும் அவரை முதல்ல மரியாதை இல்லாம நடத்தல, அன்னிக்குக் கார்ல வந்தப்ப கேஸுவலா கூட ஒரு வார்த்தைக் கூட பேசல. அந்தாள்தான் என்னை என் டிரஸ் வைச்சு ஜட்ஜ் பண்ணினார். அது கூட நீ சொல்லித்தானே எனக்குத் தெரியும்?” என்று அறிவையே கேட்க,

‘சிக்கிட்டேன்’ என்று அறிவு மனத்தில் புலம்பினான்.

“ப்ர்ஸ்ட் டைம் நான் லிஃப்ட் கொடுத்து ஒழுங்காதானே நடந்துக்கிட்டேன், ஆனா அவர் அந்த மரியாதை எனக்குக் கொடுக்கல, எனக்குக் கொடுக்காததால அவருக்குக் கிடைக்கல. மைதிலி விஷயம் கூட என்ன தப்பு என் மேல? அதுவும் அன்னிக்கு கார்ல, அமைதியா வந்துட்டு நான் விஷயத்தை மறைச்சேன்னு சொல்றார். அன்னிக்கு சகஜமா பேசக் கூட இல்லை, பேசிக் மேனர்ஸ் கூட இல்லை, அப்படிப்பட்ட ஆள்கிட்ட எப்படி அவர் தங்கச்சி லவ் பண்றேன்னு சொல்லுவா? தப்பெல்லாம் அந்தாள் மேல் வைச்சுட்டு என்னைக் கேள்வி கேட்குறான்? அந்த துரை டிகிரி வாங்கின தற்குறியா இருப்பான்னு எனக்கு அப்படி தெரியும்?” என்று எரிச்சலாகப் பொரிந்தாள்.

‘இந்த பேச்சுவார்த்தை முடியும்போது எனக்குப் பேச்சு வராது போல, பங்காளி பல்லைத் தட்டிடுவான்’ என்று பயந்தான் அறிவு. ராஜதுரைக்கோ ‘இவள் எவ்வளவு பேசுகிறாள்?’ என்று மனத்தில் கோபத்தோடு கேட்டுக்கொண்டிருந்தான். அதைவிட அவன் பெரியம்மா மீதுதான் அதீத கோபம், வருத்தம் அவனுக்கு.

“தாரா! போதும் அவனை ரொம்ப பேசாத” என்று அடக்கினான் அறிவு.

“உன் அண்ணன் ராஜதுரை பெரிய அறிஞர் அண்ணாதுரை. நான் அவரைப் பத்தி பேச ஆசைப்பட, நீயாதானே கேட்ட?” என்று அவனிடம் கடுப்பாகக் கேட்டாள் தாரகை.

“அப்புறம் மாமா, உன்னை நம்பி எல்லாம் சொல்லிட்டேன். மைதிலி பேசினது நீ உன் பங்காளிக்கிட்ட சொல்ல வேண்டாம். எதாவது பிரச்சனை ஆச்சுன்னா அரி என்னை சும்மா விட மாட்டான்”

“என்ன ரொம்ப பண்றீங்க? உனக்குக் கூடப்பொறந்ததால அரி மேல பாசம். ஆனா ராஜா வெளியே காட்டலனாலும் அவனுக்கும் அவன் அக்கா தங்கச்சி மேல எல்லாம் பாசம் இருக்கு. அவங்க அக்காவை அடிச்சார்னு அத்தானோட சண்டை போட்டான் தெரியுமா? அவனுக்கு அவ எங்க இருக்கான்னு தெரியறதை விட நல்லா இருக்கானு தெரிஞ்சாலே நிம்மதியா இருப்பான். உன் அண்ணன் என்ன பெரிய இவனா? சும்மா பயமுறுத்துற? நான் கண்டிப்பா ராஜா கிட்ட சொல்லிடுவேன்” என்று தாரகைக்கு சளைக்காது அறிவும் பேசினான்.

“உன் இஷ்டம் மாமா” என்று தாரகை சொல்ல, அறிவுக்கு ஆச்சரியம். தாரகை பேசும்போதே எப்போதும் அவளிடம் இருக்கும் துள்ளலும் நிமிர்வும் இல்லாது இருப்பதை அறிவு உணர்ந்து இருந்தான். அதுவும் தாரகையைப் பொருத்தவரையில் இன்று துரையைப் பேசிய பேச்செல்லாம் அரைப்பேச்சே, இன்னும் ‘ப்ளடி கேஸ்டிஸ்ட்’ எல்லாம் வரவில்லையே என்று நினைத்தான். அவன் நினைத்தது போலவே, தாரகையும் சட்டென்று அவன் இஷ்டம் என்று சொல்லிவிட

“என்னாச்சு தாரா? உடம்பு சரியில்லையா? நீ இப்படியெல்லாம் உடனே சரினு சொல்ல மாட்டியே?” என்று கேட்க,

“ஒன்னுமில்ல, மூட் அவுட்”

“என்ன பிரச்சனை தாரா? சொல்லும்மா” என்று அறிவு அக்கறையாகக் கேட்டான்.

“பிரச்சனை இல்லை. இன்னிக்கு அம்மா அப்பா எங்களை விட்டு போன நாள்” என்றாள் குரல் கமற. அறிவுக்குத் தாரகை சொல்லவும் அந்த நாள் நினைவில் வந்தது. தாரகை அரிச்சந்திரனின் தோளில் சாய்ந்து கதறி அழுத நாள். அரியும் அமைதியாக தங்கையின் தோளில் கைப்போட்டு அவளை ஆதரவாகப் பிடித்து கண்ணீரோடு நின்ற நாள். ராமசாமி தாத்தா மகன், மருமகளை ஒரே இரவில் பறிகொடுத்து கதறிய நாள். அறிவின் நினைவிற்குக் காரணம் அவன் விவரம் தெரிந்து முதன்முதலில் சென்ற துக்க நிகழ்வு அது.

“சாரி தாரா, இப்ப நான் இதைப் பேசியிருக்கக் கூடாது! எனக்கு ஞாபகமில்லை” என்றான் அறிவு.

“இத்தனை வருஷம் ஆச்சு மாமா, இது மாதிரி விஷயங்கள் மத்தவங்க ஞாபகம் வைச்சிக்கவும் மாட்டாங்க. எல்லா நாளும் கடந்து வாழ்ந்துதான் ஆகனும். ஸோ நோ ப்ராப்ளம்” என்றாள் தாரகை தெளிவாக.

“ஓகே! நான் அப்புறம் பேசுறேன்” என்று அறிவு சொல்ல

“அந்த பூமர் மட்டும் பிரச்சனை செய்யட்டும் உன்னை எங்க கமலா அத்தைக்கிட்ட சொல்லி உப்புக்கண்டம் போட்டிருவேன்” என்று அப்போதும் அவனை மிரட்ட,

“ரொம்பத்தான் தைரியம் உனக்கு, இப்படி இனிமே துரைக்கிட்ட பேசிவைக்காத, நேர்ல கேட்டான் உன்னை அடிச்சிருவான்” என்று அறிவும் மிரட்டினான்.

“எனக்கு என்ன பயம்? அந்த துரை நம்பர் கொடு, அவர்கிட்டவே சொல்றேன் நீ ஒரு வடிகட்டின பூமர்யான்னு” கொஞ்சம் புன்னகை மீள தாரகை சொல்ல,

‘ஆத்தாடி! அவன் லைன்ல கேட்டுட்டுத்தான் டி இருக்கான் என் மாமன் மவளே!’ என்று நொந்து போன அறிவு,

“எம்மா தாயே! அவனுக்கு மரியாதை கொடுக்கலனாலும் பரவாயில்லை இப்படி டேமேஜ் செய்யாத” என்றான்.

“எனக்கு ஒன்னு புரியல, அது என்ன இந்த ஜாதியைப் பிடிச்சுத் தொங்குற ஆளுங்ககிட்ட எல்லாம் நீங்க ஜாதிவெறியன்னு சொன்னா கண்ணு சிவக்குது? அவங்க அதைத்தானே செய்றாங்க?” தாரகை விடாது கேட்க,

‘அவளைக் கிளப்பிவிட்டுட்டேன் போல’ என்று நினைத்த அறிவு, “தாரா! எனக்கு டீம் மேனேஜர்கிட்ட இருந்து கால், இதை இன்னொரு நாள் நீயும் நானும் டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று பட்டென்று அவள் இணைப்பைத் துண்டித்தான்.

“பங்கு! இருக்கியா?” என்று கேட்க “இருக்கேன்” என்றான் துரை.

“கோவத்துல கட் பண்ணிட்டு போயிருக்கக் கூடாதா இவன்?” என்று முணுமுணுத்த அறிவு,

“அவ தெரியாம பேசிட்டா டா” என்று சமரசம் செய்ய,

“அவ தெரிஞ்சுதான் பேசினான்னு எனக்குத் தெரியும்டா. விடு” என்றான் துரை.

“என்னடா உனக்குக் கோவம் வரலையா?”

“சிலரோட நமக்கு எப்பவும் கிரகம் செட் ஆகாது, அப்படித்தான் அவளுக்கும் எனக்கும். அதோட அந்த புள்ள மேல என்ன தப்பு? நம்ம வீட்டு பொண்ணு நம்மை நம்பல, அவதான் அப்படின்னா இந்த பெரியம்மா கூட எனக்கு விஷயம் சொல்லல. அப்புறம் அந்த தாரகையைக் கோச்சுக்கிட்டு என்ன பிரயோஜனம் சொல்லு?” என்றான் துரை.

“டேய்! ஃபீல் பண்ணாத விடு. பெரியம்மா ஏதோ கவலையில இருந்திருக்கும்” என்று அறிவு சமாதானம் சொல்ல,

“எனக்கு இல்லையா கவலை? அந்த தாரகை எங்கிட்ட எதுவும் சொல்லாம இருந்தான்னு அவளை பேசினேன். வீட்ல உள்ளவங்களே என்னை நம்பல, அதுவும் பெரியம்மா என்னை சின்ன வயசுல இருந்து பார்க்கிற ஆள். அதுவே நம்பாத போது அடுத்தவங்க எப்படி நம்புவாங்க?” என்ற துரைக்கு தாரகைப் பேசியது எல்லாம் மனத்தில் பதியவே இல்லை.

முதலில் கோபமிருந்தாலும் அவள் அப்பா, அம்மா இறந்த நாள் என்று அவள் கலங்கிய குரலில் சொல்ல, இவனுக்கு அவள் வலி புரிந்தது. அப்பாவை இழந்த அவன் அவள் வலியை உணர்ந்தான். அதுவும் இருவரையும் ஒரே நேரத்தில் இழப்பது எத்தனை கொடுமை? நல்ல வேளை அவளுக்கு அண்ணன் என்ற ஒருத்தன் அதுவும் பாசக்காரனாக இருக்கிறான் என்று நினைத்து ஆறுதல்பட்டுக் கொண்டான். அதில் அவள் பேச்சில் விளைந்த கோபம் மட்டுப்பட்டது.

“அதை விடு அடுத்த மாசம் திருவிழா வருது, நீ ஊருக்கு வா. லீவ் இப்பவே கேளு” என்று வேறு பேச்சு பேசினான்.

அவன் அம்மா அருணாவிடம் கேட்க, முதலில் மறுத்தவர் பின்பு சரோஜா மைதிலியிடம் பேசியதை ஒத்துக்கொண்டார். அம்மாவை முறைக்க, அவரோ “டேய் உன் பெரியப்பார்கிட்ட சொல்லிடாதடா! நம்ம வீட்டு புள்ளை எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்” என்று மகனிடம் சொல்ல

“உனக்கும் அவ்வளவுதான் நம்பிக்கை இல்ல என் மேல” என்று அவரிடம் சீறினான். துரை வீட்டில் அதன்பிறகு மைதிலி பற்றி பேசவே இல்லை.

*********************

அந்த வாரம் வயலை அளந்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று பன்னீர் சொன்னார். அவரின் பெயரிலும் தம்பியும் பெயரிலும் இருப்பதை, தம்பியின் பங்கை அவர் நன்றாக இருக்கும்போதே துரையின் பெயரில் பதிய நினைத்தார். அதற்காக நிலம் அளக்க கேட்க வேண்டி கிராம நிர்வாக அலுவலரை(vao) சந்திக்க சென்றான் ராஜதுரை. இவன் அவர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்க, தாரகை வெளியே வந்தாள். அவள் வேறு ஏதோ வேலை விஷயமாக வந்திருக்க, இவன் எதிர்ப்பார்க்கவில்லை.

அவள் வெளியே வரும்போது இவனைப் பார்த்தாலும் பேசவில்லை. அதற்குள் அந்த விஏஓ “வாங்க ராஜா, சுப்பந்தி (விஏஓவின் அசிஸ்டெண்ட் ஐ பேச்சு வழக்கு) சொன்னாரு நிலம் அளக்கனும்னு”

“என்னைக்கு வரணும்?” என்று கேட்க

“இந்த மாசம் பண்ணிட்டா நல்லாயிருக்கும். வர வாரத்துல வரமுடியுமா சார்?” என்று கேட்டான்.

தாரகை வெளியே வந்து செருப்பு போட, அவர்கள் பேசுவது கேட்டது. அதிலும் துரையின் குரல் நன்றாகவே கேட்டது.

“சார்! மூன்றரை ஏக்கர்தான் சார், அதுக்கு ஆறாயிரம் அதிகம்” என்று பேரம் பேசினான். அவர் லஞ்சம் கேட்டிருக்க, இவன் குறைத்துக் கேட்டுக்கொண்டிருந்தான்.

உடனே செல்போன் எடுத்து வீடியோ எடுத்தவள் உள்ளே நுழைந்தாள்.

“எதுக்கு லஞ்சம்?” என்றாள் அவனிடம்.

“மேடம், இது உங்களுக்குத் தேவையில்லாதது” என்று விஏஓ சொல்ல

துரை தாரகையிடம் “வீணா ஏன் பிரச்சனை செய்ற? விடு தாரக. இது எப்பவும் வாங்குறதுதானே?” என்றான்.

“எப்போதும் வாங்குறதுக்கு இது என்ன பதக்கமா? பாவம்! எங்கிட்ட எல்லாம் இவர் கேட்டதில்லை. உங்களுக்கு ஆறாயிரம் அதிகம். இன்னும் நம்மை விட கீழ இருக்கவங்க எத்தனை பேர்? நீங்க நியாயமாதானே கேட்கிறீங்க? அதுக்கு ஏன் இவர் லஞ்சம் கேட்கிறார்?” என்றாள்.

விஏஓவோ துரையிடம் “என்ன துரை இதெல்லாம்? உங்களுக்கு வேலை ஆகனுமா இல்லையா? இவங்களை வெளியே போக சொல்லுங்க” என்றான்.

அந்த விஏஓவிடம் திரும்பிய தாரகை, “நான் வெளியே போக மாட்டேன். வேணும்னா உன்னை உள்ளே அனுப்புறேன்” என்றாள் அவனிடம் துணிச்சலுடன்.

“இவ என்ன எனக்கு வக்காலத்து வாங்குறா?” என்ற அதிர்ச்சியில் ஆச்சரியத்தில் நின்றான் ராஜதுரை. அவன் அவளை அதிர்ச்சியில் பார்த்திருக்க,

“இந்தாள நம்ம பார்த்துக்கலாம், நீங்க லஞ்சம் எதுவும் கொடுக்காதீங்க” என்று சொல்ல ‘என்ன நம்ம பார்த்துக்கலாமா?’ என்று இன்னும் அதிர்ந்தான்.

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 3 months ago

Nice 

Radhi Reader 2 months ago

Nice 

Kavi Natarajan Reader 2 months ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top