Episode 17
“எனக்கும் ஸ்கூல் படிக்கும்போது மழை எப்படா வரும், லீவ் விடும்னு நினைச்சிருக்கேன். இப்ப நினைச்சா சிரிப்பாவும் இருக்கு சீப்பாவும் இருக்கு, இப்ப கஷ்டமா இருக்கு” என்றுவிட்டான். ஏற்கெனவே அப்பாவின் நினைவில் வாடிய மனது, மழையால் ஆத்திரம் கொண்ட மனது எல்லாம் அவனை மனம் திறக்க வைத்தது.
“நானும் இதெல்லாம் யோசிச்சதில்லை. ஒரு வேலை மாடி வீட்ல இருக்கிறதால் இந்த யோசனை வந்ததில்லை போல, மழைன்னா பாட்டு, நொறுக்குத் தீனினு வாழ்ந்தாச்சு” என்றாள் தாரகை.
“விவசாயிங்க எல்லாம் பாவம்ல” என்று அவள் கேட்க
“பரவாயில்லை என்னையெல்லாம் பாவம்னு சொல்ல மனசு வருதே..” என்று துரை சொன்னவன்
“எங்க உன் அண்ணன்?” என்று கேட்டான்.
“அவன் திருச்சில இருக்கான். வருவான்” என்றாள்.
“நீ அவனை அவன் இவன் சொல்றதெல்லாம் எனக்குப் பிடிக்காது, என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுதே நினைப்பேன். ஆனா அப்புறம் தான் புரிஞ்சது, ஒருத்தங்க பேச்சைக் கேட்கிறது வேற, மதிக்கிறது வேறன்னு” என்று மனம் உவந்து ஒத்துக்கொண்டான்.
தாரகை ‘எதற்கு இப்போது இதை சொல்கிறான்?’ என்ற விதத்தில் பார்க்க,
“இல்லை, மைதிலி நான் எது சொன்னாலும் கேட்டுப்பா, முடியாதுனு எல்லாம் சொன்னதே இல்லை. ஆனா எங்க பேச்சை மதிக்கவே இல்லை” என்றான் எப்போதும் போல் வருத்தமுடன்.
“எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. இதை இப்போ பேசக்கூடாது, அரி இருந்தா திட்டியிருப்பான். ஆனா ஆர்வம் யார விடும்?” என்றவள்
“இந்த பயாலஜி, தியாலஜி எல்லாம் புரியுது, பூமராலஜி புரியல. அக்சுவலி நீங்க எப்படியும் மைதிலிக்கு நல்ல பையனா பார்ப்பீங்க, படிச்சிருக்கனும். வேலைக்குப் போகணும், குட் கேரக்டர், கெட்ட பழக்கமில்லாம அண்ட் நல்ல குடும்பம். அப்படித்தானே மோகன் அண்ணாவும் இருக்கார்., ஓகே அவ சொல்லாம அப்படி செஞ்சிருக்கக் கூடாது. ஆனாலும் இன்னமும் அவங்களை ஏத்துக்க முடியாம என்ன தடுக்குது உங்களை?”
“ஒரே வீட்ல பொறந்த இரண்டு பசங்க, ஆனா ஒருத்தரோட கட்டுப்பாட்டுல இன்னொருத்தர், எது எப்படி நியாயம்? எனக்கும் என் அண்ணா அட்வைஸ் எல்லாம் செய்வான். எஸ் சொல்ல எந்தளவு உரிமை இருக்கோ, சுதந்திரம் இருக்கோ அதே அளவு நோ கூட சொல்லுவேன். நான் சொல்றதைக் கூட அவன் கேட்பான், தப்பா இருந்தா அதை திருத்துவான். உங்க வீட்ல அப்படியா? இத்தனை மாசம் ஆகிடுச்சு, இன்னும் அவ மேல உள்ள கோவம் போகலையா? அவ முடிவு தப்புன்ற கோவமா இல்லை அவ சொந்தமா முடிவெடுக்கிறதே தப்புன்ற கோவமா?” என்று கேட்டாள் தாரகை.
“இரண்டாவதா இருக்கும்னுதான் நினைக்கிறேன்” என்று ராஜதுரை பட்டென்று சொல்லிவிட, அதியசமாக உணர்ந்தாள் தாரகை.
“நீங்க ஹாஃப்-பூமர் போல, பூமர்ஸ் எல்லாம் இப்படி தப்பை ஒத்துக்கவே மாட்டாங்க” என்றாள் தாரகை கிண்டலாக.
அவள் கண்ணோரம் குறும்புடன் ஒரு குறுஞ்சிரிப்பு குமிழிட்டது. எப்போதும் அவள் பேச்சில் கோபம் வரும் அவனுக்கு. ஆனால் இன்று அப்படி இல்லை! அவள் பேச்சில் குறும்பில் குளிர்ந்துதான் இருந்தான். அவளின் நேர்மையோ பாசங்கற்ற பாங்கோ ஒன்று அவனை கவர்ந்தது.
“இப்படி நான் யோசிச்சதில்ல தாரக, ஆனா நீ கேட்டதும் அதான் ரீசனோ தோணுது. மைதிலி அவளா எதுவும் முடிவெடுத்ததில்லை” என்றவன் பெருமூச்சுடன்
“எடுக்க நாங்க விட்டதில்லையோனு இப்ப தோணுது. ஏன் நானுமே எதுவும் முடிவெடுத்தது இல்லை, எல்லாமே பெரியப்பாதான்.என்னோட முடிவு எதுனாலும் அவர் ஒத்துட்டு இருந்திருக்கார், நாலு லட்சம் கட்டி படிச்சு வேலை கிடைச்சு பாதியில விட்டப்போ கூட ஒன்னும் சொல்லல, உன்னிஷ்டம்னு தான் சொன்னார். அக்காவுக்கோ மைதிலிக்கோ இந்த ஆப்ஷன் இருந்த மாதிரி தெரியல”
“துரை சார்! ஒரே நாள் திருந்தி ஊரை காலி பண்ணிடாதீங்க, வெள்ளம் வந்துடும். உளுந்து வேற போட்டிருக்கீங்க” என்று தாரகை அவனை சீண்டினாள்.
போதும் இந்த பேச்சு என்ற நினைத்த தாரகை,
“மணி எட்டாகப் போகுது, சாப்பிடுங்க. இட்லி கோழி குழம்பு” என்றதும்
“இல்லை, வேண்டாம்” என்றவனுக்கு ஓரளவு தாரகையை கணிக்க முடிந்தது. அதனால் உடனே
“இன்னிக்கு நான் வெஜ் சாப்பிட மாட்டேன். நீ வேற நினைக்காத” என்றான் தெளிவாக.
“ஓகே” என்றாள் தாரகையும் சீண்டாமல்.
கிளம்பலாம் என்று நினைத்து அவன் பார்க்க, மழை தீவிரமாக இருந்தது. மழையை விட அதனால் விளையும் சேதம் குறித்து இப்போதே மனம் வேதனையுற்றது.
சில நிமிடம் கவலையுடன் ராஜதுரை வாசலில் பெய்த மழையை நோக்க,
“சாரி, உங்க அப்பா நினைவு நாள் தெரியாது. ஓவரா பேசி டென்சன் பண்ணிட்டேன்” என்றாள் தாரகை அவன் அப்பாவை நினைத்துக் கலங்குகிறானோ என.
“விடும்மா, உனக்குத் தெரியாதுதானே?” என்றவன்
“உங்கப்பா அம்மா போனப்ப உனக்கு என்ன வயசு?” என்று கேட்டான்.
“டென்த் படிச்சேன்” என்றாள்.
“என்னை விட சின்னப்புள்ள இல்ல நீ?” என்றவனின் குரலில் அவளுக்கான வருத்தமிருந்தது.
“இத்தனை வருஷம் ஆகியும் என்னால மறக்கவே முடியல, எத்தனை வருஷம் ஆனாலும் அந்த கஷ்டம் எல்லாம் நினைக்காம இருக்க முடியாதுனு இன்னிக்குத் தாத்தா பார்த்து தெரிஞ்சுது. சில சோகமெல்லாம் நிரந்தரம்னு” என்றான்.
“தாத்தாவை ஆறுதலா பேச சொன்னா அவர் அழுதார் போல. அவர் இப்பவெல்லாம் ரொம்ப ஃபீல் பண்றார். வயசாகிடுச்சு இல்ல” என்று விளக்கம் சொல்ல
“முன்னாடி அவருக்கு ஃபீல் பண்ண நேரமிருந்திருக்காது, உன்னையும் உன் அண்ணனையும் பார்க்கணும்னு மனசுல வச்சு அழுத்தியிருப்பார், இப்போ நீங்க பெரியவங்களாகிட்டீங்க அதனால அவர் மனசுல உள்ளது வெளியே வருது. என்ன இருந்தாலும் அவரோட துக்கம் பெருசுதான்!” என்றான் ராமசாமிக்காக வருத்தம் மேலிட.
அக்கணத்தில் மற்ற எதுவும் நினைவில் நில்லாமல் ஒருவருக்காக ஒருவர் வருந்தினர். இழப்புகள் சில நேரம் அல்ல, பல சமயம் அடுத்தவரை பற்றி யோசிக்க வைக்கும். அப்படித்தான் தாரகை அவனை விட சின்ன பெண், அதுவும் ஒரே நேரத்தில் அப்பா, அம்மாவை இழந்து நிற்பது எத்தனை கொடியது? என்று நினைத்தான் ராஜதுரை.
“சரி தாரகை, அரை மணி நேரம் மேல ஆகிடுச்சு, மழை விடுற மாதிரி தெரியல. நான் கிளம்புறேன். தேங்க்ஸ்” என்றான் எழுந்து நின்றபடி.
மழை இன்னும் விடவில்லை. தாரகை உடனே
“மழை நின்னதும் கிளம்புங்க, இப்போ போனா மட்டும் என்ன செய்ய முடியும்? இருட்டு வேற” என்றாள் கவலையாக.
“வீட்ல பெரியப்பா இருக்காரா தெரியல. போன் வேற லைன் போகல, அம்மா பெரியம்மா தனியா இருப்பாங்க. கிளம்புறேன், நனைஞ்சாலும் பரவாயில்ல” என்று வாசல்படியில் கால் வைக்க,
“குடையை எடுத்துட்டுப் போங்க” என்று வேகமாக ஓடி வந்து குடையை நீட்டினாள் அவள். அவனிடம் குடையை நீட்டி,
தாரகை “மழையால உங்க வயலுக்கு எதுவும் ஆகாது, கவலைப்படாம போங்க” என்றாள்.
நிச்சயம் இந்த மழைக்கு அவன் உளுந்தெல்லாம் அவ்வளவுதான் என்று தெரியும். இருந்தும் அவள் பேச்சினை மறுக்கவில்லை.
இன்சொல் என்றும் ஈரமே!!
தண்டலையென(மருத நில சோலை) தாரகை வார்த்தை இருக்க, தலையசைத்து கிளம்பினான் தலைவன்.
வீதியில் குடை பிடித்து நடந்தான் ராஜதுரை. அவன் குடைக்குள் மழை நிற்கவில்லை என்பதை அவன் உணரவில்லை. அவள் அறியவில்லை.
******************************************
இரண்டு நாள் கழித்து ராஜதுரை அறிவின் வீட்டில் இருந்தான். அவர்கள் வயலில் அன்று ட்ராக்டர் கொண்டு உழுதான். அதனால் அங்கேயே மதிய உணவுக்கு வர சொன்னார் கமலா.
“சீக்கிரம் சாப்பிட வா ராஜா, ஆட்டுக்கால் குழம்பு வச்சிருக்கேன்” என்று பரபரத்தார் அவர்.
“இன்னும் கொஞ்சம் ஓட்டனும் சித்தி, முடிச்சிட்டு வரேன்” என்றான்.
பதினைந்து நிமிடங்கள் கழித்து அவன் வீட்டினுள் பார்க்க, பேச்சு சத்தம் அங்கே. ஸ்வாதியுடன் உட்கார்ந்து பேசியபடி ஆட்டுக்கால்லை வாயில் வைத்திருந்த தாரகைதான் துரையின் கண்ணில் விழுந்தாள்.
வயல் அறிவு வீட்டின் பின்னால் இருக்க, துரை கொல்லைப்புறம் வழியே தான் உள்ளே நுழைந்தான். அங்கிருந்து பார்த்தால் நடுவீட்டில் உள்ளவர்கள் தெரிய, கை கால் கழுவினான்.
“வாடா ராஜா” என்று கமலா அழைக்க,
“என்ன விருந்தாடி எல்லாம் வந்திருக்காங்க போல” என்று துரை கேட்க
“ஏண்டா உன் சித்தப்பா வீட்டுக்கு நீ வர மாதிரி அத்தை வீட்டுக்கு அவ வந்திருக்க, அவ விருந்தாடியா?” என்று அவனைத் திருப்பிக் கேட்டார் கமலா.
“தீடீர்னு வந்திருக்காளேனு கேட்டேன் சித்தி” என்றான் அவன்.
“அது ஆட்டுக்கறின்னா அவளுக்கு இஷ்டம், அதுவும் ஆட்டுக்கால்னா ரொம்ப பிடிக்கும். அரிக்கு அவளுக்குப் பிடிச்ச மாதிரி வைக்கத் தெரியாது. சின்ன வயசுல அம்மாவை இழந்துட்டா இல்லையா, அதனால் அப்ப அப்ப அவளுக்குப் பிடிச்சதை நான் செஞ்சுக் கொடுப்பேன்.”
“அப்போ என்னடா சித்தி சாப்பிடக் கூப்பிடுதேன்னு நினைச்சேன், அண்ணன் மகளுக்கு விருந்து, ம்ம்” என்று துரை அவரை வம்பு செய்தான்.
“போடா ராஸ்கல்! நீயும் இங்க நம்ம வீட்ல சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேன்னுதான் இன்னிக்கு உன் சித்தப்பாரை ஆட்டுக்கறி எடுத்தார சொன்னேன்” என கமலா சொல்ல
“சரி சரி, சீக்கிரம் வா சித்தி. உன் அண்ணன் பொண்ணு சாப்பிடற வேகத்துக்கு வேற எனக்கு எலும்புதான் மிஞ்சும் போல” என்றான் கிண்டலாக.
அவன் தோளில் அடித்தவர் “கண்ணு வைக்காதடா என் அண்ணன் பொண்ணை” என்றபடி உள்ளே செல்ல, ராஜதுரை அவரை பின் தொடர்ந்தான். இவன் வரவும் தாரகையிடம் பளிச்சென்ற புன்னகை.
“உன் குடையை மறந்துட்டேன், அப்புறமா சித்திகிட்ட கொடுத்துடுறேன்” என்றவனிடம்
“வேலை செஞ்சிட்டு வந்திருக்கீங்க, முதல்ல சாப்பிடுங்க சார்” என்றாள்.
“எதவாது மிச்சமிருக்கா?” என்றான் கிண்டலாக.
“ரசம் இருக்கு” என்றாள் அவளும் கிண்டலாக.
“பேசாம இருடி! அவனே வெயில்ல வந்திருக்கான்” என்று அதட்டிய கமலா வாழை இலையில், சூட சூட சோறு போட்டு மணம் மிகுந்த ஆட்டுக்கால் குழம்பை ஊற்றினார். இன்னும் சூடாக இருக்க, கமகம தான்!!! இலையின் மற்றொரு பக்கம் ஆட்டுக்கறி மசாலாவை வைத்தார், கூடவே தயிர் பச்சடி.
“போதும் சித்தி” என்றவன் பசிக்கு வேகமாக உண்டான். ஸ்வாதியும் தாரகையும் பேசியபடி உண்ண, அவர்கள் பேச்சு காதில் விழுந்தாலும் பசி அதிகம் என்பதால் அதில் கவனம் வைத்தான் ராஜதுரை. ஓரளவு பசி அடங்கவும் இவர்கள் பேச்சைக் கவனிக்க, தாரகை ஸ்வாதியிடம்
“என்னதான் வீட்ல பயங்கரமா சமைச்சாலும் இந்த கிடா விருந்துல சாப்பிடுற மாதிரி வராது ஸ்வாதி” என்றாள் ரசித்து ஆட்டுக்காலை சுவைத்தபடி.
“அதுவும் அந்த குடலை, பருப்பு உருளைக்கிழங்கோட போட்டு வைப்பாங்களே, நினைச்சாலே செம” என்றாள் ஸ்வாதி.
“அதுவும் பிடிக்கும், நம்ம பழனி தாத்தா ரிட்டையர் ஆனப்போ ஒரு கறி பிரட்டல் வச்சாங்களே, செமையா இருந்ததுடி. அது மாதிரி யாருமே இன்னும் போடல” என்று தாரகை சொன்னவள்,
“ஆனா பாரேன் என் சொந்தக்காரன் எவனும் கிடா விருந்து வைக்க மாட்டேங்கிறான். தஞ்சாவூர் பக்கத்துல தெத்துவாசல்பட்டியில் ஆயிரம் கிடா வெட்டினாங்களாம். ஊரே வாசனையாம். நமக்கு அங்க சொந்தக்காரங்க இல்லையா அத்த?” என்று கமலாவிடம் கேட்டாள்.
அவளின் கேள்வியில் துரைக்கு சிரிப்பு வர புன்னகையுடன் உண்டான்.
“ஏன் கிடா விருந்து வேணும்னா நீ கல்யாணம் பண்ணிக்கோ, உன் அண்ணனை நம்ம சாமிக்குக் கிடா வெட்ட சொல்லுடி. இல்லைனா உங்கண்ணனுக்குக் கல்யாணம் பண்ணி கிடா வெட்டுங்க” என்றார் கமலா.
“கிடா வெட்டுக்காக கல்யாணமா போ அத்த” என்ற தாரகை ஸ்வாதியிடம்
“ஏட்டி, என் அண்ணனைக் கட்டிக்கிறியா? கிடா விருந்து வச்சிடலாம்” என்று கேட்க
“போ அத்தாச்சி! வக்கீல் மாப்பிள்ள எல்லாம் வேண்டாம்” என்றதும்
“சரிதான், போடி!” என்றாள் தாரகை.
“நீ என் புள்ளையைக் கட்டிக்கிறேன்னு சொல்லு, நான் இரண்டு கிடா வெட்டுறேன்” என்று கமலா பேரம் பேச,
“அய்யே! அறிவு மாமா ஜஸ்ட் மாமா, அவர் நல்ல ப்ரண்ட். அத்தை பையன், மாமா பையன் எல்லாம் வேற லிஸ்ட், அவங்க மேல எல்லாம் க்ரஷ்தான் வரும். நீ என்ன கிடா வெட்டுறது, நைட்டோட நைட்டா நானே தூக்கிருவேன் உன் ஆடுயெல்லாம்” என்று தாரகை அவரை மிரட்டினாள்.
“போடி வாயாடி” என்ற கமலா இன்னும் கறி வைத்தார்.
ஸ்வாதி மெல்ல தாரகையிடம் “ஆமா, நீயும் ராஜாண்ணனும் எப்படி பேச ஆரம்பிச்சீங்க?” என்று கேட்க
“வாயாலதாண்டி பேச ஆரம்பிச்சோம்” என்று தாரகை அவளைக் கடுப்பேற்ற பதிலே பேசவில்லை ராஜதுரை எதுக்கும். ரசித்தபடி அவள் பேச்சை பார்த்தான்.
உணவில் கவனமிருந்தாலும் சில நேரம் ரகசியமாகவும் பார்த்தான். அவளிடம் பேசவில்லை என்றாலும் அவள் பேச்சைக் கேட்பதே ஒரு இனிமையினை இந்திரஜாலத்தை அவனுள் நல்கியது.
“உன்னையெல்லாம் போ” என்று ஸ்வாதி கடுப்பானாள். எல்லாரும் உண்டு முடிக்க, ஸ்வாதி உணவை எடுத்து உள்ளே வைத்தாள்.
“உங்க வயல்ல உளுந்து என்னாச்சு?” என்று தாரகை கேட்க
“போச்சு, மறுபடி உழுதிருக்கேன்” என்றதும் அவள் முகம் வாடியது.
“இந்த முறை நல்லபடியா வரும்னு தோணுது” என்றான் நம்பிக்கையாக.
“கஷ்டமா இல்லையா?”
“கஷ்டமா நினைக்கல, இதான் செய்யணும்னு முடிவு பண்ணியாச்சு. எல்லாமே ரிஸ்கி பிஸ்னஸ்தான். இப்ப வந்த மழை அறுவடை அப்போ வந்திருந்தா மொத்தமா சேதாரம்தான்” என்றான்.
“கண்டிப்பா நல்லா வரும்” என்று தாரகை சொல்ல
“வரும், வந்தப்புறம் உனக்கு உன் வாய் மூகூர்த்தம் பலிச்சிடுச்சின்னா ஒரு மரக்கா உளுந்து தரேன்” என்று சொல்ல
“அப்போ மரக்காவை ரெடி பண்ணிக்கிறேன்” என்றவள்
“டைமாச்சு, அத்தகிட்ட சொல்லிட்டு கிளம்புறேன்” என்று தாரகை கிளம்பிவிட, ராஜதுரையும் வயலுக்குப் போனான்.
இரவு வீடு சென்றவன் அறையில் அப்படியே சாய்ந்துவிட, அங்கிருந்த தாரகையின் குடை கண்ணில் பட, குடைக்குள் இன்றும் மழை!!
அடுத்த சந்திப்பில் அவளிடம் கொடுக்க நினைக்க, அவள் விரும்பியபடி ஒரு கிடா விருந்தில் அவளைப் பார்த்தான். தாரகைக்கு உறவென்றாலும் இவனுக்கு நண்பனின் வீடு. ஆகையால் பந்தி பரிமாற அவன் இருக்க, தாரகையைக் கூடுதலாக கவனித்தான்.
“என்ன எக்ஸ்ட்ரா வைக்கிறீங்க?”
“நீதானே அன்னிக்கு ரொம்ப ஆசைப்பட்ட, சாப்பிடு” என்று சொல்ல, ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். இவளுக்குப் பரிமாறியவன் அடுத்தவரைக் கவனிக்க செல்ல, அவனை கவனித்தாள் தாரகை.
ஒரு கனிவான பாவனையில் அவனை பார்த்திருக்க, சட்டென்று மாறிப்போனது தாரகையின் பார்வை. பாண்டியனுடன் சேர்ந்து அவன் பேசியபடி வர, கண்டனம் அவள் கண்களில்.
அந்த கண்டனப் பார்வையை ராஜதுரையும் பார்க்க, எப்போதும் பாண்டியன் அண்ணனுடன் இருக்கும்போது பெருமையாக உணர்பவன், இன்று அப்படி உணரவில்லை.
‘இவனும் இவன் ஜாதிப்பற்றும்!’ என்று அவன் மீதான கோபம் தாரகையின் மனத்தில் மீண்டும் குடிவந்தது.
✅ End of Episode 17
Nice