Episode 24
“இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்?” என்று போக பார்த்தவனை நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள் தாரகை.
துரைக்கு மனது வலித்தது. ஏனோ அவனால் சட்டென்று காதல் சொல்ல முடியவில்லை.
“சொல்லுங்க துரை சார், ஏன் அந்த பாட்டை அன்னிக்குக் கல்யாண வீட்ல போட்டீங்க? உண்மையை சொல்லணும்” என்று தாரகை அழுத்தி சொல்ல
“உனக்குப் பிடிக்கும்னு” என்றதும்
“எனக்குப் பிடிக்கும்னா இல்லை என்னை பிடிக்கும்னா?” என்று அடுத்து கேள்வி கேட்டாள்.
“இரண்டும்தான்” முணுமுணுப்பாக உண்மையை சொன்னான்.
அவள் பேச்சில் தாரகைக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்று புரிய, சட்டென ஒரு இளக்கம் மனத்தில், ஆனால் அவனின் மனத்தின் ஆவலை விட, பிற்போக்கு எண்ணங்களே முன் நின்று இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வருமா என்று பன்னீரின் குரலில் பின்னணியில் கேட்க அப்படியே நின்றான்.
“தாரக! ப்ளீஸ் இதை இத்தோட விட்டுடு, தேவையில்லாத பிரச்சனை மனக்கஷ்டம்தான் இந்த காதல், கண்றாவியால” என்று துரை சொல்ல அதனை தாரகை கேட்கவில்லை.
“நம்ம ப்ரண்ட்ஷிப் உண்மைதானே துரை?” என்று கேட்டவள் அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் பேசினாள்.
“ஒருத்தரோட கிட்டதட்ட ஆறு மாசம் பேசி பழகி சட்டுனு காரணமே சொல்லாம விலகிப்போனா எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு தெரியுமா?” தாரகையின் கண்களைப் பார்க்க பார்க்க துரைக்கு காதலின் ஆவல் கூடத்தான் செய்தது.
மனதெல்லாம் அவள் இருந்தும், அவளை சேர வேண்டும் என்று மனத்தில்லை. துரையிடம் பேச ஒன்றுமே இல்லையென்பதால் அமைதியாகிவிட்டான்.
“அதுவும் அதுக்கான காரணம்? என்னைப் பிடிச்சதால?”
“எல்லாமே உன் இஷ்டம்”
“இப்பவும் லூசு மாதிரி உன்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டு வேண்டாம்ங்கிற, உன் ப்ரண்ட் சொன்ன அன்னிலிருந்து இதை யோசிச்சு யோசிச்சு தலை வலிக்குது” என்றாள் கோபத்துடன்.
தாரகையை தடுமாற வைத்தான் ராஜதுரை!
இப்போது இவன் பிடிக்கும், ஆனாலும் வேண்டாம் என்பது எரிச்சல் தந்தது. ‘எப்படி இருந்தாலும் பிடிக்கும்’ ஒருத்தனாக தாரகைக்கு ராஜதுரை மாறிப்போனான். ஆனால் தாரகை அதனை வாய் விட்டு சொல்லவில்லை. சொல்ல முடியாமல் இல்லை, சொல்லக் கூடாது என்ற பிடிவாதம்!
துரை பேசாமல் இருக்க, தாரகை உடனே
“ஏன் துரைக்கு பேச்சு வரல” என்று அவனையே ஆழப் பார்த்துக் கேட்டவள் சிறு புன்னகையுடன் அவள் இருக்கையில் போய் உட்கார்ந்தாள். துரை அவளையே பார்க்க,
தாரகை இயல்பாக, “முதல் தடவ உன்னோட பேச்சை கேட்கிறேன், ஒகே? இதை இத்தோட விட்டுடுறேன். ரிலாக்ஸ்!” என்றாள் துரையிடம்.
துரைக்கு அதற்கும் அதிர்ச்சி. அதை விட ஏமாற்றம்! தலையசைத்தவனுக்குப் பேச்சு வரவில்லை. உள்ளே ஒரு அழுத்தம்.
ஆவலை கட்டுப்படுத்தினால் அவன் தானே காயப்படுவான்? அதை அறியாது இருவரையுமே காயப்படுத்தி உற்றாரை, உறவை திருப்திப்படுத்த நினைத்தான் ராஜதுரை.
“வரேன்” என்று முணுமுணுத்தவன் வேகமாக வெளியேறினான்.
மாலை காட்சி முடிந்த நேரம் அரிச்சந்திரன் தங்கையை அழைக்க திரையரங்கம் வந்துவிட்டான்.
“என்னடா வேலை ஓவரா?” என்று காலையில் அழுத தடமே இன்றி பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த தங்கையைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமே. அரியுடன் கிளம்பி வீடு சென்றாள். காரை அரி ஓட்டினான். தாரகை வேடிக்கைப் பார்த்தபடி வர,
“உனக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லை, நான் அப்பறம் பேசிக்கலாம் சொல்லியும் கூட நீ துரையோட இன்னிக்குப் பேசியிருக்க?” என்று கேட்டான்.
தாரகையோ அலட்டிக்கொள்ளவில்லை.
“பேசணும்னு நினைச்சேன், பேசிட்டேன்” என்றாள் பட்டென்று.
“என்னதான் முடிவு பண்ணியிருக்க?”
“அன்னிக்கு சொன்னேனே எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கணும்னு, அக்சுவலி சொல்லணும்னா ஒருத்தரோட நிறைகள் பார்த்து நம்ம ப்ரண்ட்ஷிப்போ, காதலோ வச்சிக்கிட்டாலும் அவங்க குறையை ஏத்துக்கிறதுலதான் அந்த ரிலேஷின்ஷிப்பை நம்மாள மெயிண்டெய்ன் பண்ண முடியும்!” என்று தாரகை சொல்ல
“அப்போ சுயமா சிந்திக்கிற ஒரு பொண்ணு, சுயமரியாதை பார்க்கிற ஒருத்தி பொண்ணை அதிகாரம் பண்ற ஒருத்தனோட குறையை ஏத்துக்க முடிவு பண்ணிட்டா? ரைட்?” என்ற அரிச்சந்திரன் கேள்வியை அளந்திருந்தால் அதன் சூடு தெரிந்திருக்கும்.
தெர்மாமீட்டர் தெறிக்கும் அளவுக்கு சூடாக இருந்தான் அரிச்சந்திரன்.
தாரகை உடனே, “எனக்கும் துரைக்கும் இந்த ஆறு மாசத்துல ஆயிரம் வாட்டி கருத்து வேறுபாடு வந்திருக்கு, என்னைக்கும் அவன் என்னை அதிகாரம் பண்ண நினைச்சதே இல்லை. தன்னை முற்போக்குவாதின்னு நினைச்சிட்டு அறிவு வாளின்னு நினைச்சிட்ட சிலருக்குத்தான் அப்படி எண்ணமிருக்கு” என்றாள் தாரகை அண்ணனுக்குக் கொஞ்சமும் குறையாது.
“அது எப்படி காதல் வந்துட்டா பொண்ணுங்க எல்லாம் வக்கீலா மாறி வக்காலத்து வாங்க ஆரம்பிச்சிடுறீங்க?”
அரிச்சந்திரன் அக்மார்க் நக்கலுடனே கேட்டான். என்ன இருந்தும், எப்படி யோசித்தும் தாரகையின் விருப்பத்தை விரும்பவில்லை அவன்.
“அரி, எங்கிட்ட இவ்வளவு திமிரா பேசாத!” என்றாள் தாரகை. கொஞ்சமும் தன் உணர்வினை புரியாமல் அதைத் தடுத்தும் குறைத்தும் பேச தாங்க முடியவில்லை அவளால். இருவருமே சண்டையிட்டபடி வீட்டினுள் நுழைந்தனர். காரை கூட உள்ளே விடாது வாசலில் விட்டவன் அவளிடம் பேசியபடியே உள்ளே நுழைந்தான்.
கத்தியபடி பேரப்பிள்ளைகள் வீட்டில் நுழைய, ஒன்றும் புரியாமல் பார்த்தார் ராமசாமி.
“உண்மையை சொல்லணும்னா உன்னை பிடிக்கும்னு சொல்லிட்டு அவன் வேற பொண்ணை பார்க்கிறது உன்னோட ஈகோவை ஹர்ட் பண்ணிடுச்சு! அதனாலதான் அவனை பிடிக்கும்னு சொல்ற” என்ற அரியை சீற்றத்துடன் பார்த்தாள் தாரகை.
அழுத்தமாக அவனை பார்த்தவள் அண்ணனிடம் பதில் பேசாமல் வேகமாக சமையல்கட்டுக்குப் போனாள்.
இட்லியும் சட்னியும் சமையல் செய்பவர் செய்து வைத்திருக்க, வேகவேகமாக நான்கு இட்லிகளை தட்டில் போட்டவள் ஹாலுக்கு வந்து சாப்பிட்டாள். அரியோ தங்கையை முறைத்தபடி உட்கார்ந்திருந்தான்.
“என்னடா சண்டை போட்டே வரீங்க? என்ன பிரச்சனை?” ராமசாமி இருவரையும் பார்த்து கவலையாகக் கேட்க,
“நீ சாப்பிட்டியா தாத்தா? மாத்திரை போட்டாச்சா?” என்று அவரிடம் கேட்டாள் தாரகை.
“என்னடா ராஜாத்தி ஆச்சு?” ராமசாமி மீண்டும் கேட்க,
“உங்க பேத்திக்குக் கொழுப்புக் கூடிப்போச்சு தாத்தா” என்றான் அரிச்சந்திரன் உணவில் கவனமாக இருந்த தங்கையை முறைத்தபடி. அரிக்குத்தான் மனதே பொறுக்கவில்லை. தாத்தாவிடம் எல்லாவற்றையும் சொல்ல, அவரோ
“ராஜதுரைன்னா நம்ம கமலாவுக்குப் பங்காளியா? அன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்த பைய தானே?” என்று யோசித்தபடி கேட்க
“அவனேதான்” என்றான் அரி.
“அவனுக்கென்னடா, நல்ல பையலாட்டம் தான் இருக்கான். ஊர்ல எல்லாரையும் தெரிஞ்சு வச்சிருக்கான்”
“தாத்தா! உன்னோட சேர்ந்த பெருசையெல்லாம் சொன்னா அவன் நல்ல பயலா? ஒரு பயலை பல மாசம் முன்னாடி கழுவி ஊத்தினாளே உன் பேத்தி அவன் தான் இவன், இப்ப அவனையே பிடிக்குதுனு சொல்றா” என்று அரி தங்கையை முறைத்தபடி பேசினான்.
“ஏன் பேத்திக்குப் பிடிச்சிருக்குன்னா அவன் மோசமா இருக்க மாட்டாண்டா, எங்கிட்ட கூட நல்லா பேசினான். ரோட்ல பார்த்தா கூட மதிச்சுப் பேசுவான்” என்று ராமசாமியும் ராஜதுரையை புகழ, தாரகை மௌனமாகவே உண்டாள்.
அரி தலையில் அடித்துக்கொண்டு வாசல்படியில் போய் உட்கார்ந்துவிட்டான். தாரகை உண்டு முடித்தவள் தாத்தாவிடம்,
“அவன் கொஞ்சம் கோபமா இருக்கான். நான் பார்த்துக்கிறேன்” என்றதும்
“அவன் சாப்பிடாம இருக்கான் ராஜாத்தி, அண்ணன்ட்ட சண்டை போடாம அவனை சாப்பிட வை” என்று சொல்லிவிட்டு அவர் அறைக்குள் போனார்.
தாரகை அண்ணனிடம் வந்து உட்கார்ந்தாள். அரி பக்கவாட்டில் திரும்பி தங்கையைப் பார்த்தவன் கேட்டை வெறித்தபடி இருக்க, தாரகை அவனிடம்,
“ஃப்ர்ஸ்ட் இந்த குறுக்கு விசாரணை பண்ணாம நான் சொல்றதைக் கேட்டு முடிவு எடுக்கிறதுன்னா கேளுடா, இல்லை முடிவு பண்ணிட்டு கேட்கிறதுன்னா வேண்டாம்” என்றாள்.
“சரிடி சொல்லு” என்று தங்கையைப் பார்த்து அவன் திரும்ப,
“தாத்தாவுக்குக் கூட தெரிஞ்சிருக்கு, நான் ஒருத்தரை பிடிக்கும்னு சொன்னா காரணமிருக்கும்னு. ஓகே அதுல காதலிருக்குனு உனக்குத் தெரியல. ஆனா காரணம்?? அது கூட யோசிக்காம….ஹ்ம்ம் என்ன சொன்ன? ஈகோ ஹர்ட் ஆச்சு! ரைட்?! ஈகோ ஹர்ட் ஆகுதுனு சொல்லி எனக்கு செட் ஆகாத ஒருத்தரோ லைஃப் லாங் வாழ நினைக்கிற அளவு நான் முட்டாள் இல்லை!” என்றாள் தெள்ளத்தெளிவாக.
“அந்த பஸ் இன்சிடெண்ட் பின்னாடி எங்களுக்குள்ள ஒரு நல்ல கெமிஸ்ட்ரீ” என்றதும் தாரகையின் மண்டையில் கொட்டினான் அரிச்சந்திரன்.
“அண்ணங்கிட்டயே வந்து கெமிஸ்ட்ரீ பயாலஜினு, வெறுப்பேத்தாம விஷயத்தை சொல்லுடி” என்றான்.
“ஆ…” என்று வலியில் தலையைத் தேய்த்துக் கொண்டவள்,
“கெமிஸ்ட்ரீ மீன்ஸ் நல்ல ஒரு vibe இருந்தது சொல்றேன் டா, ரொம்ப சண்டை இல்லை. இப்ப நம்ம இரண்டு பேரும் பேசிக்கிறோமில்ல, அப்படி பொறுமையா ஒரு கான்வேர்சேஷன் எங்களுக்குள்ள சாத்தியமாச்சு.”
“நம்ம பேசிக்கிற மாதிரின்னா அவனை அண்ணன்னா ஏத்துக்கோ” என்றதும் அண்ணனை முறைத்தவள்
“எரும! அவன் முன்னாடி பேசுறதையே கேட்கமாட்டான், இப்ப அப்படியில்லை. ஒரு சகஜமா பேச முடியுது சொல்ல வந்தேன், எரும எரும” என்று இன்னும் திட்டினாள்.
“இப்போ யோசிச்சா தெரியுது, எனக்கு ராஜதுரை மேல ஒரு ஈர்ப்பு இருந்திருக்கணும், அதனாலதான் அவன் எனக்குப் பிடிக்காத விஷயம் செய்யும்போது என்னால அதை டைஜஸ்ட் பண்ண முடியல, சில பேரை எப்படியோ போன்னு விட்டிருக்கேன். ஆனா துரை செஞ்சா இவ்வளவு நல்லவன் இப்படி ஏன் செய்றான்னு எரிச்சல் ஆகி இன்னும் அவன் மேல கோவம் வந்திருக்கு! அன்னிக்கு அவனோட பெயர் கட் அவுட்ல ஜாதியோட இல்லைன்னதும் எனக்கு அவ்வளவு சந்தோஷம்.”
“உன்னால அவன் மாறியிருக்கான்ற சந்தோஷம், இது காதலா?” என்று அரி கேட்க
“அட வக்கீல் இருடா! பேச விடாம கேள்வியா கேட்கிற?” என்று அலுத்துக்கொண்டாள் தாரகை.
“இதுதான்னு இல்லாம எனக்கு இப்ப துரையை ரொம்ப பிடிக்குது”
“உன்னை பிடிக்கும்னு கூட சொல்லாத ஒருத்தன், அவங்க ஃபேமிலி பத்தி தெரியும்ல? எப்படி டி அவனை நம்புற நீ? தேவையில்லாம ஆசை வளர்த்து உன்னைக் கஷ்டப்படுத்திக்காத தாரா. எனக்கு உன்னை அழ வச்சு எல்லாம் பார்க்க முடியாது, இன்னிக்கு அவன் காதல் சொல்லலனு வந்து அழற, எனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்ததுடி.” என்றான் அரிச்சந்திரன் வருத்தமாக.
“டேய் அது ஏதோ டென்ஷன்ல அழுதுட்டேன். சிரிச்சா சந்தோஷம் அழுதா துக்கம்னு எல்லாம் இல்லை. அது எப்படி சொல்ல, ரொம்ப நாளா விடை தெரியாத கேள்விக்கு பதில் கிடைச்ச விடுதலை! எனக்கும் துரையைப் பிடிக்கும்னு நினைக்கிறப்ப வந்த ஃபீல், அதை ஒத்துக்க இத்தனை நாள் ஈகோ தடுத்துச்சு, நீ சொன்னியே உனக்கு எப்படி அவனை பிடிச்சதுனு, அதே கேள்வி என்னை போட்டு படுத்தி எடுத்தது. இன்னிக்குத் தெளிவாகிட்டேன்” என்றாள் முகம் கொள்ளா புன்னகையுடன்.
“சரி, இன்னிக்கு என்ன சொன்னான்?”
“இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராத தாரக! விட்டுடுன்னு சொன்னான்” என்றதும் அரியிடம் பெருமூச்சு.
“அல்பமே” என்று அண்ணன் முதுகில் அடித்தவள்
“சந்தோஷப்பட்டுக்காத! துரையை ஏன் நம்புற கேட்ட இல்லையா? துரைக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் எல்லாமே கொடுத்தாலும் அவன் செஞ்ச வேலை பிடிக்கல. அதுல அவனுக்கு ஒரு கனெக்ட் வரல, இங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் விவசாயம் செய்றான். வேலைக்கே பிடிக்காத ஒரு விஷயம் செய்யாத ஒரு ஆள் எப்படி வாழ்க்கைக்கு செய்வாங்க? அதை விட துரையை எனக்கு நல்லா தெரியும், அவனால பொய்யா எதையும் செய்ய முடியாது. தியேட்டர் பிரச்சனை, அவங்க பெரியம்மா ப்ராப்ளம் எல்லாம் நடந்தப்பவும் அதுல எங்கேயும் பொய் இல்லை.”
“அண்ட் பெண்களை ஈகுவளா நினைக்காத ஆளா இருந்தாலும் கீழ நினைக்கிற ஆள் இல்லை! நான் யாரோவா இருந்தப்ப, ஏன் சண்டை போட்டு போலீஸ் பிரச்சனை ஆன ஒருத்தின்னா வேற ஒருத்தர்னா போடினு போவாங்க. பஸ் ரிப்பேர் ஆகி நான் தனியா நின்னப்ப, சுத்தி ஜெண்ட்ஸ் இருக்காங்கனு எனக்கு பிடிக்கலைனாலும் துணையா நின்னான். அதை நான் விரும்பல, எனக்குப் பிடிக்கல, இப்பவும் பிடிக்காது! ஆனாலும் துரைக்கு ரொம்ப நல்ல மனசு.”
“முக்கியமான விஷயம் ஈகோ கிடையாது! பாசம் வச்சிட்டா அவங்களுக்காக எல்லாம் செய்ற ஆள் துரை! பிடிக்காத எங்கிட்ட வந்து அவங்க பெரியம்மாவுக்காகப் பேசினார். அதே நேரம் ஏமாத்தினா பிடிக்காது, ஜாதி, கௌரவம்னு ரீசன் எல்லாம் சொன்னாலும் மைதிலி ஏமாத்திட்டு போனதுதான் அவனால தாங்க முடியாத விஷயம். அவன் பெரியப்பா, சித்தப்பா, பாண்டியன் எல்லாம் ஏத்திவிட்டு இப்படி இருக்கான். சொன்னா புரிஞ்சிக்கிற ஒரு ஆளு” என்றாள் தாரகை.
“அது எப்படித்தான் லவ் பண்ணின உடனே அவனைப் பத்தி பி.எச்.டி பண்றவ மாதிரி இவ்வளவு விஷயம் சொல்ற?” என்றான் ஆச்சரியமாக. தாரகையிடம் குறுஞ்சிரிப்பு!
“அக்சுவலி நான் அவனைப் பத்தி நல்லவிதமா சொல்லி, நல்லவிதமா பாருன்னு சொன்னதால அவனை உனக்குப் பிடிச்சிப்போச்சோ?” என்று அரி ஆராய,
“நீ சொன்னதால அவனை நான் திறந்த மனசோட பார்த்தேன். எந்த ஜட்ஜ்மெண்ட்டும் இல்லாம பழகினேன்.பிடிச்சது உன்னால இல்லை! அவன் பழமைவாதிதான், கெட்டவன் இல்லை. நமக்கே தெரியும்ல எத்தனை பேர் வெளியே பெண்ணியம் பேசிட்டு உள்ள கண்ணியமே இல்லாம நடக்கிறவங்க இருக்காங்க.”
“துரை முழுசா எல்லாம் மாறல எனக்குத் தெரியும், ஆனா ப்ரண்ட்லியா பழகுற எனக்காகவே இவ்வளவு மாறியிருக்கான். நம்ம பாசமா இருப்போம், ஆனாலும் எமோஷன், செண்டிமெண்ட் எல்லாம் துரைகிட்ட ஜாஸ்தி, அதனால என்னை அவன் மறக்கவே மாட்டான், அது முடியாது!” என்றாள் மிகவும் அழுத்தமாக.
“இவ்வளவு பேசுறவ அவங்கிட்ட உன்னை லவ் பண்றேன்னு ஏன் சொல்லல? எல்லாத்துக்கும் ஈகுவள் ரைட்ஸ் பேசுவ?”
“ஏன் சொல்லணும்? எனக்கு முதல்ல பிடிச்சிருந்தா நான் சொல்லியிருப்பேன், அவனுக்குப் பிடிச்சதை அவன் சொல்லணும். அதை விட்டு வேற பொண்ணு பார்ப்பானா ராஸ்கல்?” என்று எழுந்து நின்றாள் கோபமாக.
“ஒருவேளை பார்த்துட்டா?”
“கிழிப்பான்! நீ சொன்னியே ஒரு நாள் அவன் பாட்டுல காதல் சொல்றான்னோன்னு? அந்த விஷயத்துல எல்லாம் நீ நிஜமாவே அறிவாளிடா அரி! அது உண்மைதான். காதலை சொல்ல முடியாதான்னு பாட்டு போடுறேன் போறவன் அப்படியே ஜெர்க் ஆகி என்னை பார்த்துட்டே நிக்கிறான், வெட்டி வெங்காயம்!” என்றாள் எரிச்சலாக.
“சரி பார்த்தான், அப்புறம்?”
“பார்த்துட்டே ஃபீலிங்க்ஸோட இதெல்லாம் வேண்டாம், மன்னிச்சிடுன்னு போய்ட்டான். ஒரு பாட்டு கேட்டு வர என்னோட ஞாபகத்தையே மறக்க முடியல, என்னை மறப்பானாம். நல்லா மறப்பான்.. இப்ப எனக்கும் பிடிக்கும்னு தெரிஞ்சிடுச்சுல, இன்னும் ஃபீல் பண்ணுவான். நல்லா பண்ணட்டும்” என்றாள் பல்லைக் கடித்து.
‘இந்த பொண்ணுங்க எல்லாம் டேஞ்சர் போலயே’ என்றுதான் அரிச்சந்திரனுக்கு அபாய மணி அடித்தது.
“என்னடி இப்படி பண்ற? நீ அவனை பிடிக்கும்னு எங்க சொன்ன? சண்டைதானே போட்ட” அரி புரியாது கேட்க
“தாரகையோட காதல் துரைக்குப் புரிஞ்சா போதும். அவனுக்குப் புரிஞ்சிருக்கும்! அவனுக்கு நான் இப்படி அரை மணி நேரம் விளக்கம் கொடுக்கணும்னு இல்லை. சரி வக்கீல் சார், விளக்கம் கொடுத்தாச்சு, நீங்க என்ன சொல்றீங்க?”
“நிஜமா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில. சாரி தாரா, உன்னோட ஃபீலிங்க்ஸ் புரியுது, ஆனாலும் என்னால ஏத்துக்க முடியல. இதெல்லாம் நடைமுறையில ரொம்ப கஷ்டம்” என்றான் உண்மையாக.
“ம்ம், அவன் தங்கச்சிக்கு மட்டும் ரிஸ்க் எடுத்து ரெஜீஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்க முடியும் லாயருக்கு, எனக்குன்னா மட்டும் கசக்கும்” என்று நொடித்த தாரகை,
“தாரா” அரிச்சந்திரன் மென்மையாக அழைக்க திரும்பினாள். அவன் ஏதோ சொல்ல வர, தாரகை
“டேய்! ஓவரா சீனைப் போடாத. நீ ஒத்துக்கணும்னு நான் இதை சொல்லல, நீ எனக்கு முக்கியம். உன்னை மீறி இந்த முடிவை எடுத்தாலும் அதுக்கான காரணம் நான் சொல்ல வேண்டியது என் கடமை” என்றாள்.
அரிச்சந்திரன் தங்கையைப் பார்க்க, கொட்டாவி விட்ட தாரகை
“ஆனா அவன் அன்றே கணித்தான் டா. உன் அண்ணனுக்குப் பிடிக்காத எதாவது விஷயம் நீ செஞ்சா அப்போ உனக்கு அவன் சப்போர்ட் பண்ணுவானான்னு, நான்தான் சீன் போட்டு அதெல்லாம் எனக்கும் என் அண்ணனுக்கும் அப்படி கிடையாதுனு எல்லாம் பேசினேன். சரி போ எனக்குத் தூக்கம் வருது” என்று தூங்க போனாள்.
ராஜதுரையோ அவன் வீட்டில், தாரகை சொன்னது போல் இருந்தான்.
தாரகையை தவிர்த்தவனை, தடுமாற வைத்தவனை அவள் தவிக்க வைத்தாள். தாரகையின் பேச்சில் அவளுக்கும் தன் மீது விருப்பம் இருக்கிறது என்று புரிந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. வேண்டாம் என்று அவளிடம் பேசிவிட்டு வந்தாலும் அதை செயலாக்க முடியாமல் துடித்தான்.
‘அவளோட பேசியிருக்கவே கூடாது!’ ஆயிரம் முறையாக சொல்லியிருப்பான்.
இன்று பார்த்தது வேறு தவறாகப் பட்டது. கண்ணுக்குள் நின்றாள்! காதல் என்று சொல்லி அவனை ஆட்டி வைத்தாள்!
என்ன செய்வது என்று தெரியவில்லை. நாலைந்து நாள் ஓடிவிட்டது.
பார்க்காமல் பேசாமல் பேசியது காதல்!
தாரகை மீதான ஆவல் தீரவே தீராது என்பது போல் தெரிய, தன்னுடனே போராடினான் ராஜதுரை.
அன்று இரவு உணவு முடித்து, மாடியேறியவன் அந்த நேரத்தில் அம்மாவை எதிர்ப்பார்க்கவில்லை.
“என்னம்மா? இந்த நேரத்துல மாடியேறியிருக்க? மாடு கட்டலையா?” என்று எதையாவது மறந்தோமா என்று அவன் யோசித்தபடி பால்கனியிலிருந்து எட்டிப்பார்க்க, மாடு கொட்டகையினுள் இருந்தது.
“மாடுதான், நான் பெத்த எருமை மாடு!” என்றார் அருணா ஆற்றாமையுடன்.
“அம்மா! என்னாச்சு சொல்லு” என்று துரை புரியாது கேட்க
“சொன்னதும் கிழிச்சிருவியா டா நீ? பொசுக்குனு கோவம் மட்டும் வரும். ஆனா ஒரு மண்ணும் செய்யாத” என்று திட்டிக்கொண்டே இருக்க ராஜதுரைக்கு எரிச்சல் வந்தது. இப்போதெல்லாம் அவனிடம் அதிக கோபம். தாரகையை மறக்க நினைக்க, அது முடியாத எரிச்சலை மற்றவரிடம் காட்டினான்.
“உன்னோட சண்டை போட எனக்கு நேரமில்லை. தூக்கம் வருதுமா ” என்றான் அம்மாவிடம்.
“ஏண்டா ராஜா இப்படி பண்ற? உனக்கு அந்த தாரகையை பிடிச்சிருந்தா எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே? என்ன இல்லை அந்த பொண்ணுக்கிட்ட, வேண்டாம்னு சொல்லியிருக்க?” என்றதும் அதிர்ச்சியாக அம்மாவைப் பார்த்தான் ராஜதுரை.
“அம்மா! அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று தடுமாறினான்.
“ஒன்னுமில்லைன்னா இப்படி பம்ம மாட்டா டா நீ. இன்னேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்ப” என்ற அருணா
“இங்க பாரு உன் பெரியப்பா சித்தப்பா கதையெல்லாம் சொல்லிட்டு அவளை வேண்டாம்னு சொன்ன அவ்வளவுதான்!”
“உனக்குப் பெரியப்பா மேல இருக்க காண்டுல பேசாத மா, முதல்ல யார் சொன்னா இதை?” என்று கடுப்பாகக் கேட்டான்.
ஏற்கெனவே சந்தியாவைக் கத்தி விட்டிருந்தான். இவன் கத்தி அவள் அழ, அவள் கணவன் சமாதானம் செய்தான். அவள் இல்லையென்றால் என்று யோசித்தான்.
“ராமசாமி பெரியப்பா கூப்பிட்டு கல்யாணம் பேசுறார் எங்கிட்ட. அவர் சொல்லித் தெரியுது, நீ என்னை ஒன்னுத்துக்கும் மதிக்க மாட்டேங்கிற” என்று அருணா கோபத்துடன் சொல்ல,
ராஜதுரையோ தீவிரமாக, “எனக்கு தாரகை மேல அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது” என்றான்.
✅ End of Episode 24
Very nice.
Nice