Episode 27

தெருவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டு, சட்டென துரை தாரகையிடமிருந்து விலகினான். அவன் வாசம் உணர்ந்து அணைத்திருந்தவள் அவன் விலகவும் குறுகுறுப்புடன் அவனை பார்க்க, அவன் அவளை நேர்கொண்டு பார்த்தால் தானே?

அவளைப் பார்க்காது சாலையைப் பார்த்தபடி,
“நேரமாச்சு பனியில நிக்காம உள்ள போ தாரா” என்றான்.

“அப்புறம் பூமருக்குக் கட்டி பிடிக்கவெல்லாம் தெரியுது? இப்படியெல்லாம் செஞ்சா நம்ம கலாச்சாரம் என்னாகுறது?” குறும்பாக தாரகைக் கேட்க,

“பேசாம போடி” என்று சிரிப்புடன் சொன்னவன் வேகமாக நடக்கத் தொடங்கினான்.

குளிர் காற்றோடு காதில் அவன் காதல் பேச்சும் சிலிர்ப்பைத் தந்தது. கண்முடி காதல் கணங்களை அனுபவித்து கரைந்து நின்றாள்.

தங்கையைக் காணாமல் வெளியே வந்த அரிக்குக் காட்சி தந்தது தாரகையின் புன்னகை நிரம்பிய முகம்தான்.

“வீட்டுக்குள்ள வர ஐடியா இருக்கா இல்லை, காதல் வந்தா கால் கூட வலிக்காதா?” என்று வாசலில் நின்று குரல் கொடுத்தவன் உள்ளே போனான்.

வெகு நாட்கள் கழித்து மனத்தில் இருந்த வெறுமை நீங்கி குளுமையாக உணர்ந்தாள் தாரகை. ராஜதுரைக்கோ உறக்கம் வரும்வரை தாரகை மட்டுமே நினைவினில். அவளை அணைத்திருந்த நொடிகள் நினைவில் வர, இன்னும் நீடிக்கவே ஆவல். அவளை அப்படியே தனக்குள் பொத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, ராஜதுரைக்கே அவன் எண்ணம் போகும்போக்கில் ஆச்சர்யம்தான். எப்படியோ தாரகையைக் கண்டதில் களித்திருந்த மனம் உற்சாகத்தோடு உறங்கியது.

****
அடுத்த நாள் அவன் அதிகாலை எழுந்து, வயல் வேலை எல்லாம் முடிந்து வரும் நேரத்தில் அறிவு அழைத்தான்.

“சொல்லுடா”

“என்ன சொல்லுடா? ஏண்டா உனக்கு இப்படி ஒரு வீபரீத ஆசை? கடைசியில உனக்குள்ளயும் அந்த காதல் பூ பூக்கணுமா? ஏண்டா மோதலுக்குப் பின் காதல்னா நானெல்லாம் ஆபிஸ்ல டெய்லி நாலு பேரோட மல்லுக்கட்டுறேனேடா. சொல்லு எப்படி? எப்போது? இந்த காதல் பூ பூத்துச்சு?” என்று அறிவு ஆர்வமாகக் கேட்டான்.

“உனக்கு யார்டா சொன்னா?”

“எங்க அம்மாதான், உன் மச்சான் காலையில போய் எங்க வீட்ல பேசினானாம்” என்றான் அறிவு.

“இருந்தாலும் இப்படி ஒரு திருப்பத்தை நான் எதிர்ப்பார்க்கவே இல்லைடா. ஒரு மனுஷன் ஆபிஸ் ப்ராஜெக்ட்ல பிஸீயா இருந்தா, அதுக்குள்ள காதல், கல்யாணம்னு வந்து நிக்கிறியேடா, வருத்தம்பா எனக்கு ரொம்ப வருத்தம். உன்னையெல்லாம் நம்பவே கூடாதுடா”” என்று அறிவு வம்பிழுத்தான்.

“டேய் ஓவரா பேசின தாரகைகிட்ட சொல்லிடுவேன்” துரை சிரிப்புடன் அறிவை மிரட்ட

“அடப்பாவி! ஏதோ நீ நல்லாயிருக்கணுமேனு அக்கறையில பேசினா..ஆனாலும் எப்படிடா? மவனே உண்மையை சொல்லு, உனக்கு தாராவை முன்னாடியே பிடிக்குமா? அதான் என்னை கூட தாராவெல்லாம் கட்டினா நல்லாயிருக்க மாட்டனு ப்ரைன் வாஷ் பண்ண பார்த்தியாடா ப்ராடு பயலே” என்று திட்டினான்.

“அதெல்லாம் இல்லைடா” என்று துரை மறுக்க

“யாருக்கோ பாவம் பார்த்தியேடா பங்காளி, கடைசியில என் மாமன் பொண்ணுக்கிட்ட மாட்டிக்கிட்டியே?” என்ற அறிவு

“டேய், நீ நிஜமாவே அவளை லவ் பண்றியா? இல்லை என்னால நம்பவே முடியல. நீ அவ கிட்ட எப்படி நடந்துக்கிட்டேன் நான் பார்த்துருக்கேன். அந்த ரௌடி எப்படி ஒத்துக்கிட்டா, அந்த வில்லங்கம் எப்படி ஒத்துக்கிட்டான்? சீக்கிரம் சொல்லுடா? எனக்குத் தலை வெடிச்சிரும் போல” என்று பரபரத்தான்.

“நீ ஆர்வமா கேட்கிறியா இல்லை என்னை சந்தேகப்படுறியா? துரைக்குக் கோபம் வந்தது.

“அறிவு இருக்க யார்னாலும் இந்த கேள்வியைக் கேட்கும்போது அறிவு நான் கேட்க மாட்டேனா?” என்று துரையின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் கேட்டான் அறிவு.

“உன் மாமா பொண்ணை எப்படி பிடிச்சதுன்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன், கல்யாணம் பண்ணி கண்டுபிடிச்சிட்டு சொல்றேன்” என்றான் கிண்டலுடன்.

“நக்கல்தாண்டி உனக்கு”

“டேய்! அதெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாதுடா. நீ யாரையாச்சும் லவ் பண்ணு, அப்போ தெரியும்” என்றதும்

“ஆஹ்ன்! நொட்டு! ஏண்டா பங்காளிங்க எல்லாம் என் மாமன் பொண்ணுங்களை கரெக்ட் பண்ணிட்டா நான் என்னடா பண்ணுவேன்? என்ன பண்ணுவேன்?” என்று ராகம் இழுத்தான்.

“ஹாஹா” என்று துரை சிரிக்க,

“உன் பெரியப்பா எப்படிடா ஒத்துப்பாரு?” அறிவு கேட்க, துரையின் சிரிப்பு நின்றது.

“அது உங்கப்பா கையிலதான் இருக்கு, அவரைதான் பேச சொல்றேன்னு அரி சொன்னான்”

“எங்கப்பனா? எங்கப்பாவை நம்பியாடா உன் காதல் கோட்டையை கட்டி வச்சிருக்க? ஆனாலும் வக்கீல் கணக்கு வக்கனையாதான் இருக்கும். பார்ப்போம், இல்லைனா ஓடிப்போயி பண்ணிக்க, அதான் வக்கீல் மச்சான் இருக்கானே அவன் பார்த்துப்பான். சாட்சி கையெழுத்துக்கு தம்பி நான் இருக்கேன்” என்று அறிவு பேசிக்கொண்டே போக,

“வாயை மூடுறா பரதேசி! அப்படியெல்லாம் செஞ்சிர கூடாதுன்னுதான் நான் தவிச்சிட்டு இருக்கேன். ஏற்கெனவே மைதிலி பண்ணின வேலையால பெரியப்பா ரொம்ப உடைஞ்சுப் போய்ட்டார். நான் அப்படி செய்யவே மாட்டேன்” என்றான் துரை உறுதியாக.

“சரிடா, அவசர கல்யாணமா அறுபதாம் கல்யாணமானு முடிவு பண்ணிட்டு வாட்ஸப் பண்ணு. இந்த பரதேசி மேனேஜர் எனக்கு ஓலை அனுப்பிட்டான். பேசிட்டு வரேன், நான் வெளி நாடு போறதுக்குள்ள ஏற்பாடு பண்ணிடுடா” என்று துரை பதில் பேசும் முன்னே அவனுக்கு வேலை வர அழைப்பைத் துண்டித்துவிட்டான் அறிவு.

துரை யோசனையில் இருந்தவன் மாடு கத்த, அதுக்கு தண்ணீர் காட்டி வைக்கோல் போட்டான். வண்டி நிற்கும் சத்தம் கேட்க வாசலை பார்த்தான், அறிவின் அப்பா அன்புசெல்வன் வந்து நின்றார்.

“என்னடா மவனே? உரம் போட்ட போல?” கேட்டபடி வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார் அன்பு.

“ஆமா சித்தப்பா, காலையிலதான்” என்றவனிடம்

“பன்னீரண்ணன் வீட்ல இருக்காரா?” என்று கேட்டபடி அவனுடன் நடந்தார்.

“இருக்கார் சித்தப்பா” என்றான் துரை.

“ஏண்டா உன் சித்தி, அந்த அரிச்சந்திரன் சொல்றது எல்லாம் உண்மையா? நிசமாவே உனக்கு தாரக மேல இஷ்டமா இல்லை இந்த பழிவாங்குற வேலையா?” என்று அன்பு செல்வன் கேட்க துரையின் நடை அதிர்வுடன் நின்றது.

“உனக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு சித்தப்பா? உன் மகன் அப்பவே சொன்னான் என் அப்பனை நம்பாதனு” என்றதும் அன்பு முறைத்தார்.

“பின்ன என்னடா? உன்னை ஜெயில்ல தள்ளுவேன்னு ஒத்தக்கால்ல நின்னது அந்த புள்ள. நீ அவ தியேட்டரை உடைச்ச, அவளை அந்தவாற பேச்சு பேசிட்டு இன்னிக்கு கட்டிக்கிறனு சொன்னா கேட்கத்தான் செய்வேன். அதுவும் அது தாய் தகப்பன் இல்லாத பொண்ணு, நாளை பின்ன பிரச்சனைனா எனக்குத்தானே டா பாவம் சேரும். நானும் ஒரு பொண்ணை பெத்தவன் தானே?” என்று அவர் நியாயம் பேச

“அதெல்லாம் இருக்கட்டும், நீ இதுக்கு எப்படி ஒத்துக்கிட்ட சித்தப்பா?” என்று எதிர் கேள்வி கேட்டான் துரை.

“ஒத்துக்காட்டி உன் சித்தி விடுவாளா? என் அண்ணன் பிள்ளைக்கு என்ன குறைச்சல்னு வந்துடுறா. அதைவிட தயாளன் நம்ம ஆள்தானே?” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, துரைக்கு இது வேறா என்ற எண்ணமே.

தாரகையுடன் பேசிய பழகிய பின் அவனின் யோசனைகள் எல்லாம் இந்த ஜாதி, கௌரவம் என்ற மாயைக்குள் போகவே இல்லை. விருப்பம் என்பது விரும்பியவர் கொள்கையினை ஏற்காவிட்டாலும் மதிப்பது தானே? அப்படி மதிக்க கற்றதால்தான் தாரகைக்கும் இவன் மீது விருப்பம் வந்தது.

துரை யோசனையில் நிற்க, உள்ளே பன்னீர் கத்தும் சத்தம் கேட்டது.

“இல்லண்ணே, தயாளன் நம்ம ஆள்தானே?” என்று அன்பு பேசுவது கேட்க, உள்ளே நுழைந்தான். நடுவீட்டில் பெண்கள் இருவரும் நிற்க, பன்னீரும் அன்புசெல்வனும் மர சோஃபாவில் உட்கார்ந்திருந்தனர்.

அன்பு மெதுவாக வரனிருக்கிறது என்று பேச்சை துவங்க, பன்னீரும் ஆர்வமாகத்தான் கேட்டார். ஆனால் அது தாரகை என்றதும் கொதித்துவிட்டார்.

“இருந்துட்டு போட்டுமே, அவ அம்மா வேற ஆள்தானே? அதைவிட என்னத்துக்கு அவங்க வீட்ல சம்பந்தம் பண்ணனும்? அதுவும் அந்த பொண்ணு சரியான திமிர் பிடிச்சது, இவனை போலீஸ்ல சொன்னவதானே? அவளும் அவ அண்ணனும் கொடுத்த தைரியம்தான் என் வீட்ல உள்ளது என் மானத்தை வாங்க காரணம். அப்படியாப்பட்டவங்க வீட்ல இவனுக்குப் பொண்ணு கட்டணுமா?”

“அந்த வக்கீல் பய அப்படி பேசுவான்? அவன் எப்படி ஒத்துக்கிட்டான்?” என்று பன்னீர் கேட்க, அன்புவின் பார்வை நின்றிருந்த துரையைத் தொட்டது.

“அது என் மாமனார் விருப்பப்படுறார். நம்ம பையனை அவருக்குப் பிடிச்சிருக்காம்” என்று சொல்ல

“அதெல்லாம் சரிவராது அன்பு. பணம் காசு இருந்தா இந்த பன்னீர் பல்லு இளிச்சிட்டு போயிருவேன் நினைச்சாங்களா?” என்று எகிறினார்.

“நீ இதை பேசாத அன்பு. வேற நல்ல வரன் இருந்தா கொண்டு வா” என்றதுடன் பேச்சை முடித்துக்கொண்டார் பன்னீர். அன்புக்கும் வேலை இருக்க, எதுவும் பேசாமல் தலையசைப்புடன் சென்றுவிட்டார்.

அன்பு செல்வன் செல்லவும் அருணா,

“ஏன் மாமா வேண்டாம் சொல்றீங்க?” என்று பன்னீரைக் கேட்க

“அந்த பொண்ணு வேண்டாம், நமக்கு சரிப்பட்டு வரமாட்டா” என்றார் தீர்மானமாக.

“அதை நீங்களே எப்படி முடிவு பண்ணுவீங்க மாமா? இவனை பெத்தவ நான் தானே? என்னைக் கேட்க வேண்டாமா?” என்று அருணா கேள்வி கேட்க, பன்னீருக்குக் கோபம்.

“என்ன கேட்கணும்? வீட்ல பெரிய மனுஷன் நான்? இவனே பேசாம நிக்கிறான். உனக்கென்ன? அந்த பொண்ணால இவன் ஜெயிலுக்குப் போயிருப்பான். அன்னிக்கு அழுதுட்டு நின்னதெல்லாம் மறந்து போச்சா உனக்கு?” என்று பன்னீர் கத்த, துரைக்கு இந்த பேச்சு பெரும் பிரச்சனை ஆகுமோ என்ற கவலை.

உடனே, “பெரியப்பா விடுங்க” என்றவன் அம்மாவிடமும் “விடும்மா” என்றான்.

“ஏன் விடணும்? நீங்க பார்த்த வரனை விட இது நல்ல சம்பந்தம் தானே மாமா?” என்று பன்னீரைப் பார்த்தார் அருணா.

“இவன் ஜெயில் போயிருந்தா காரணம் அந்த பொண்னு இல்லை. நம்ம வீட்டுப்பொண்ணு பண்ணதுக்கு இவன் அவங்க தியேட்டரை உடைச்சா அது யார் தப்பு? இவன் தப்பு, இவனை ஏத்திவிட்ட உங்க தப்பு மாமா” என்றார் அழுத்தமாக.

“என்ன நான் தப்பா?” என்று பன்னீர் முறைத்தார்.

“இவனுக்கு நீங்க பார்த்த பொண்ணை விட அந்த பொண்ணு என்ன குறைஞ்சிட்டா? வசதி இருக்கு, எதாவது ஒன்னுன்னா கேட்க மச்சான் இருக்கான்” என்று அருணா பேச பேச பன்னீருக்கு ரத்தம் அழுத்தம் எகிறியது.

“வசதி இருந்தா என்ன? அவங்க அம்மா என்ன ஜாதி நம்ம என்ன ஆளுங்க? எப்போ இருந்து அருணா இப்படி பேச ஆரம்பிச்ச?” என்று பன்னீர் கத்தவும்

“பேசணும்னு அவசியம் இருக்கு, பேசுறேன் மாமா” என்றார். பன்னீர் டென்ஷன் ஆவது பொறுக்காது சரோஜா உடனே

“என்ன அருணா நீ? அவ்வளவு வசதியான வீட்டுப்பொண்ணு இங்க சரிபடுமா? இவர் சொல்றதுதான் சரி. இந்த பேச்சை விடு” என்று அதட்டினார்.

மகனின் வருந்திய முகம் பார்த்த அருணாவுக்கு அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் இன்னும் பெருகியது.

“என்னக்கா பேச்சை விட சொல்றீங்க? பெத்தவ நான் இருக்கேன், என் புள்ளைக்கு சம்மதமா கேட்கல, என்னைக் கேட்கல. மாமா அவர் இஷ்டப்படி நடந்தா எப்படி? சுமித்ராவுக்கு நிச்சயம் பண்ணப்ப என்னை கேட்டீங்களா? உங்க பொண்ணுக்கு உங்க இஷ்டப்படி பண்ணீங்கதானே?” என்று அருணா கேட்க

“என்ன அருணா உங்க பொண்ணுன்னு பிரிச்சு பேசுற?” சரோஜா வருத்தமாகப் பார்த்தார்.

“பின்ன என்னக்கா? ஒரு வார்த்தை கூட கேட்காம கொள்ளாம மாமாவே முடிவு செஞ்சா எப்படி?” என்று பன்னீரைப் பார்க்க,

“இவனுக்கு நல்லது கெட்டது எதுனு எனக்கு தெரியும். என் தம்பி இருந்தாலும் என் முடிவுதான்னு நிப்பான். நீ என்ன எதிர்த்துப் பேசுற?” என்று அதட்டினார்.

பெரியப்பா அம்மாவைப் பேசுவது பிடிக்கவில்லை, வருத்தமாக இருந்தது துரைக்கு.

“பெரியப்பா விடுங்க, அம்மா ஏதோ தெரியாம பேசிட்டாங்க” என்று ராஜதுரை சமாதானம் செய்ய,

அருணாவுக்கு மகன் விருப்பம்தான் முக்கியமானதாக இருந்தது.
“இவ்வளவு பேசுறீங்களே மாமா, என் புள்ள ஒருவார்த்தை அந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னானா? கட்டிக்க போறவன் விருப்பத்தைக் கூட கேக்காம முடிவு எடுக்காதீங்க” என்றதும் பன்னீர்

“ராஜா என் பேச்சை மீற மாட்டான்” என்றவர் துண்டை உதறிவிட்டு வீட்டை விட்டுப்போனார். அவ்வளவுதான் அவர் பாஷையில் பேச்சு முடிந்தது.

துரை எதுவும் பேசாமல் சோர்வான மனத்தோடு வாசலில் போய் உட்கார்ந்தான். நேற்றைய அந்த ஒற்றை அணைப்பு உயிர்வரை தொட்டிருந்தது. தாரகையை விட்டு முன்பு ஒதுங்கி இருந்தது போல் இனி முடியாது என்று திண்ணமாய் இருந்தான்.

தாரகையைத் தவிர தாரமாய் யாரையும் அவனால் வைக்கவே முடியாது, அதே நேரம் பெரியப்பாவின் பேச்சு அதுவும் படுத்தியது. எதுவும் செய்ய முடியாமல் இயலாமல் உட்கார்ந்திருந்தவனுக்கு அழைத்தான் அறிவு.

✅ End of Episode 27
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 3 weeks ago

Nice 

❤️ 1 more...
Radhi Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top