Episode 11
தாரகை பேச பேச ‘இந்த புள்ள இன்னிக்கு பிரச்சனையை இழுத்து விடப்போகுது’ என்று உறுதியாக நினைத்தான் ராஜதுரை.
“தாரக, விடு இதை. நான் பார்த்துக்கிறேன்” என்று துரை சொன்ன போது கூட
“ஊர்ல உலகத்துல ஒருத்தரும் கொடுக்கலன்னா எப்படி இந்த மாதிரி ஆளுங்களுக்கு லஞ்சம் வாங்கத் தோணும்? லஞ்சம் கொடுக்குறது கூட குற்றம்தான்” என்று மிரட்டினாள்.
அந்த விஏஓ “உங்க மிரட்டல் எல்லாம் இங்க செல்லாது. போம்மா நீ” என்றான்.
“என் மிரட்டல் எங்க செல்லும் எனக்குத் தெரியாது. ஆனா நீ லஞ்சம் கேட்ட வீடியோ உலகமெல்லாம் விசா இல்லாம பரவும். அது தெரியும்! அசிங்கமா இல்லை உனக்கு? அடுத்தவங்க உழைப்பைத் திருடுற? சம்பளம் வாங்குறதானே? வெக்கமா இல்லை. இந்த போலீஸ், லஞ்ச ஒழிப்புத் துறை எல்லாம் போகமாட்டேன் நான். உலகம் முழுக்க உன் வீடியோ வைரல் ஆகும். மீம் போட்டு கிழிப்பாங்க உன் மானம் எல்லாம் வானத்துல இண்டர்நெட் வழியா பறக்கும்” என்றதும் அவனுக்கு பதற்றம்.
எது கிடைக்கும் என்றல்லவா இந்த மீம் கிரியேட்டர்கள் இருக்கிறார்கள், நல்லதோ கெட்டதோ trend ஆகிவிடுகிறது. தாரகை சொன்னால் செய்துவிடுவாள் என்று துரைக்குத் தெரியும். அதனால்
“தாரக, வேண்டாம் அப்படி செஞ்சிடாத” என்றான் ராஜதுரை.
“மேடம், அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க” என்று விஏஓ பதறினான். வாட்ஸப்பில் படிக்காமலே ‘ஷேரீங்’ செய்யும் நல்ல பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
“இனிமே இவர்னு இல்லை, ஊர்ல நீ யார்கிட்டவும் லஞ்சம் வாங்க கூடாது.” என்ற தாரகை வெளியே செல்ல, துரையும் அவள் பின்னே வந்தான்.
“என்ன அதிசயம், எனக்கு ஹெல்ப் பண்ற நீ?” என்று வண்டியை எடுத்துக் கொண்டிருந்த தாரகையிடம் கேட்டான்.
“அவன் செஞ்சது தப்பு இல்லை, குற்றம்! இதே நீ இதை தப்ப செஞ்சாலும் கேட்பேன். அண்ட் நான் முட்டாள்தனத்தைக் கூட மன்னிச்சுடுவேன், ஆனா அடுத்தவங்களை ஏமாத்தறவங்களை மன்னிக்க மாட்டேன்” என்று சொல்ல
“என்ன முட்டாள்னு சொல்றியா நீ?” என்றான் துரை கோபமாக.
“தன்னை முட்டாள்னு ஒத்துக்கிறவன் ஒருவகையில புத்திசாலி!” என்றாள் தாரகை கிண்டல் சிரிப்புடன்.
முட்டாள் என்றும் சொல்ல முடியாது, புத்திசாலி என்றும் அவனை சொல்லவிடாத தாரகையின் சாமர்த்தியம் அவனுக்கு வியப்பாக இருந்தது. அந்த நொடி நேர அதிர்ச்சியில் அவன் இருக்க, தாரகை உடனே
“ஒன்னுமில்லாத மேட்டருக்கெல்லாம் வீரம் காட்டினா பத்தாது, எங்க பேசனுமோ, யாரைப் பேசனுமோ அங்க பேசணும்” என்றாள் துரையிடம்.
“அப்படி எங்க நான் தேவையில்லாம பேசினேன்?”
“அட, ஜார்ஜ் புஷ் எங்க ஜாதி! ஜாக்கி சான் எங்க ஜாதினு உருட்டுவீங்களே? அதெல்லாம் என்னவாம். இப்படி ஒருத்தன் உன்னை ஏமாத்துறான், உன் உழைப்பைத் திருடுறான் அவனைப் பேசாம பேரம் பேசுற அவனோட? அப்போ இதான் உன் டக்கா?” என்று தாரகைக் கேட்ட விதத்தில் உண்மையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. அதுவும் ஜார்ஜ் புஷ், ஜாக்கி சான் என்று சொன்னதில் புன்னகை அவனிடம். அதைவிட தாரகை கேட்ட கேள்வி உண்மைதானே? அது சுட்டது!
“எல்லாரும் கொடுக்கும்போது நான் மட்டும் கொடுக்காம எப்படி இருக்கிறது? எனக்கு இதெல்லாம் பிடிக்காது, ஆனாலும் சகஜமாகிடுச்சே, நான் மட்டும் கொடுக்காம இருந்தா வேலை நடக்காது, நெல் செண்டர்ல போட சிட்டாடங்கல் வாங்க ஐநூறு இல்லாம தரமாட்டான் அந்தாளு, நான் சண்டைப்போட்டு நேரம் கடத்தினா நெல்லு வீணாப்போகும், ஐநூறு ரூபாய்க்குப் பார்த்தா எனக்கு நஷ்டம் பத்தாயிரம் மேல ஆகிடும்” என்று அவன் நிலையைப் பொறுமையாகவே அவளுக்கு விளக்கினான். அவன் பொறுமையாகப் பேச, தாரகையும் பொறுமையாகவே பேசினாள்.
“கோடி பேர் சொன்னாலும் செஞ்சாலும் நியாயமில்லாத விஷயம் எப்பவும் நியாயமில்லாததுதான்! உலகமே செஞ்சாலும் தப்புன்னா தப்புத்தான்” என்றாள் தாரகை அழுத்தமாக.
“இந்த நியாயம் எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லை தாரக”
“நியாயத்தை நம்மதான் நடைமுறைப் படுத்தனும், அதை அடுத்தவங்க செய்யணும்னு நினைக்கக் கூடாது”
“தனியா நிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும்! உனக்கு அது இருக்கு! உனக்கு பணம் பிரச்சனை இல்லை, அதனால் இப்படி பேசுற, அதான் இந்த தைரியம்” என்றான். அதுவரை பொறுமையாக இருந்த தாரகை கடுப்பானாள்.
“என்னோட தைரியம் என் மனசுல இருக்கு, பணத்துல இல்லை. பணம் இருக்குனு ஈசியா சொல்ற? அது இல்லைனாலும் நான் நேர்மையாத்தான் இருப்பேன். ஏன் உங்கிட்ட லஞ்சம் வாங்குற அவன் எங்கிட்ட இதுவரை கேட்டதில்லை. அது ஏன்?” என்று துரையைக் கேட்க
“உன் அண்ணன் வக்கீல்னு விஓக்குத் தெரிஞ்சிருக்கும், உன் பெருமை அவனுக்கும் தெரிஞ்சிருக்கும்.” என்றான் துரை நக்கலாக.
“பரவாயில்ல, அந்த பெருமையால எங்கிட்ட லஞ்சம் வாங்காம இருக்கான். ஆனா பேனர் வச்சுப் பெருமை பேசுற உங்கிட்ட வாங்குறானே?” என்று அவனை கிண்டல் செய்தாள் தாரகை. இவளோடு பேசினால் சண்டை வரும் என்று உணர்ந்த ராஜதுரை உடனே
“இப்ப என்ன, நாங்க எல்லாம் ஏமாளி போதுமா? சும்மா என்னோட மல்லுக்கட்டாத” என்றவன் தாரகை பேசுவதற்கு முன் அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து வீடு சென்றான்.
தாரகையும் “நாட்டுல நியாயமா நடக்க சொல்றதே இன்னிக்குப் பெரிய அநியாயம் மாதிரி ஆகிடுச்சு” என்று முணுமுணுத்தவள், அவள் வீடு சென்றுவிட்டாள்.
ராஜதுரை வீட்டிற்கு சென்றதுமே நடுவீட்டில் உட்கார்ந்திருந்த பன்னீர் அவனிடம் “என்னடா ராஜா அந்த சுப்பந்தி போன் பண்றான், விஓ கேட்ட காசைக் கொடுக்க வேண்டியதுதானே? அந்த ராமசாமி பேத்தியோட சேர்ந்து விஏஓவை மிரட்டினியாமே?” என்று கேட்க
“அந்த பொண்ணு அப்போ நாங்க பேசிட்டு இருக்கும்போது வந்துட்டா. எப்படியிருந்தாலும் லஞ்சம் வாங்குறது தப்புத்தானே பெரியப்பா?” என்றான் துரை.
“பொல்லாத தப்பு, எல்லாரும் வாங்கிட்டுத்தானே இருக்காங்க. கொடுக்கலன்னா வேலை ஆகுமா? அந்த புள்ளைக்கு என்ன தேவை இருக்கப்போகுது? பொம்பள புள்ள அடக்கமில்லாம இருக்கு” என்று தாரகையைப் பேச, துரையின் மனமோ ‘இதெல்லாம் அவ கேட்டா பெரியப்பாவுக்குப் பெரிய ஆப்பு வைப்பா’ என்று கிண்டலாக நினைத்தது.
“இந்த மாசத்துல வேலையை முடிக்கலாம்னு பார்த்தா இப்போ என்னைக்கு வேலை ஆகுறதுடா? அந்த விஓவை பகைச்சிட்டு என்ன செய்ய முடியும்? ராமசாமி பேத்திக்குத் தியேட்டர் இருக்கு, விவசாயத்தை நம்பி இல்லை. நமக்கு அப்படியா? ” என்றார் பன்னீர் கவலையாக.
“இல்லை பெரியப்பா, கண்டிப்பா அந்த ஆபிசர் செஞ்சுக் கொடுத்துடுவார். இல்லை அவர் எங்கிட்ட லஞ்சம் கேட்ட வீடியோ அந்த பொண்ணு ரீலீஸ் பண்ணிடும் பயந்தே செய்வான். நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க” என்று துரை சொல்லவும்
“ஆத்துல தண்ணி வந்துடுச்சு துரை, ஆளுங்களுக்கு சொல்லிவிடு. இந்த தடவ எந்த நெல் நல்லா போகுதுனு கேட்டு வை” என்று துரைக்கு வேலைகள் சொல்லிவிட்டு சென்றார். துரையின் மனம் பெரியப்பா சொன்ன வேலைகளைக் குறித்துக் கொண்டாலும் இவ்வளவு பெருமை பேசும் பெரியப்பா, கௌரவம் பார்ப்பவர் ஒரு அதிகாரி, அதுவும் லஞ்சம் வாங்கும் நியாயமற்ற அதிகாரியிடம் பணிந்துபோகும் நிலையில்தானே இருக்கிறார் என்று தோன்றியது.
எப்படியோ வேலை ஆனால் சரி என்று என்று நினைத்தான். அவன் நினைத்தது போலவே அந்த விஓவும் அந்த வாரத்திலே அவர்கள் நிலத்தை அளக்க ஏற்பாடு செய்துவிட்டான். நிலம் அளக்க சர்வேயருடன் வீஓவும் வந்திருந்தான். வந்தவன் துரையிடம்,
“தம்பி, அந்த பொண்ணுகிட்ட வேலை முடிச்சிட்டேன் சொல்லி வீடியோவை டெலீட் பண்ண சொல்லிடுப்பா, தப்பா ஷேர் ஆச்சுன்னா கூட என் வாழ்க்கையே முடிஞ்சிரும்பா, வெளியே தலை காட்ட முடியாது. அதுவும் இப்ப இருக்க பயலுவ கண்டபடி மீம்ஸ் போடுவானுங்க” என்றான் பயத்துடன்.
‘என்னமோ நான் சொல்லி அவ கேட்கிற மாதிரி இவர் நினைச்சிக்கிட்டாரா? யோவ் எனக்கும் அவளுக்கும் ஆகாதுய்யா’ என்று நினைத்தவன்
“இனிமே இப்படி செய்யாதீங்க ஸர், அந்த பொண்ணு நான் சொல்லி எல்லாம் கேட்காது, ஆனா நீங்க தப்பு செய்யாதவரைக்கும் அந்த பொண்ணு வீடியோ கண்டிப்பா வெளியே விடாது ஸர்” என்றான். அந்த வீஓவோ சரி என்று மண்டையை ஆட்டினாலும் மனத்தில் ‘இந்த ஊரை விட்டு போகணும் முதல்ல’ என்று நினைத்துக் கொண்டான்.
அதன்பின் தாரகையும் துரையைப் பார்க்கவில்லை. இருவரும் அடுத்து பார்த்துக் கொண்டது ஊர் திருவிழாவில்.
அன்று துரையின் ஊரில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா. மாலை மூன்று மணி இருக்கும், அறிவும் துரையும் கோவிலுக்குப் பைக்கில் சென்றனர். கோவில் வாசலில் இருந்த ஸ்பீக்கரில் பாட்டு காதைக் கிழித்தது.
குத்த வச்சப் பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம்
இந்த மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே
ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக் கேட்க கேட்க
வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
“பார்டா பங்காளி உனக்கு ஏத்த பாட்டு” என்றான் பைக்கை நிறுத்திய துரை.
“அது என்ன எனக்கு மட்டும், நீ எனக்கு மாமன் மச்சான் ஆகாம பங்காளியானதுல உனக்குத்தான் டா லாபம், இல்லைனா தெருவுக்கு எனக்கு இருக்க மாமன் மக எல்லாம் உனக்கு தங்கச்சி ஆகியிருப்பாங்க” என்று சிரித்தபடி அவனுடன் நடந்தான் அறிவழகன்.
“அது என்னவோ சரிதான்! ஆனா தங்கச்சிங்களை விட மாமன் பொண்ணுங்க இருக்கறதுதான் டா பெட்டர். இந்த தங்கச்சிங்களைப் பாதுகாத்து நமக்கு முடியாது, மாமன் பொண்ணுங்களை ஜாலியா சைட் அடிச்சிட்டுப் போயிடலாம்” என்றான் துரை.
“அதோ பாரு, என் மாமா பொண்ணு. அவளை எவ்வளவு வேணும்னாலும் சைட் அடி, மத்தவங்க எல்லாம் நாந்தான் பார்ப்பேன் பங்காளி” என்று உரிமை கொண்டாட அந்த பக்கம் பார்த்தால் தாரகை அறிவின் தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“அடப்பாவி! இவளா? பங்காளி உனக்குப் பல்லு முக்கியமா இல்லையா?” என்றான் துரை.
“என்னடா தாராவுக்கு என்ன குறை?” என்று கேட்க
“அவ எல்லாம் ஒரு ஆளுனு, சரியான அடங்காதவ!” என்றவன் வீஓவை அவள் மிரட்டியதை சொல்ல,
“உனக்கு ஆறாயிரம் மிச்சம் பண்ணிக் கொடுத்திருக்கா, அவளைப் பேசுற, அவ கேட்டதுல என்ன தப்பு இருக்கு. உன் ஜாதி பெருமையை வச்சுப் பேஸ்ட் பிரஷ் கூட வாங்க முடியாது. அப்புறம் என்னதுக்கு அது? கழுத பேனா பென்சில் ஏன் காலண்ணா பேப்பர் கூட வாங்க முடியாது” என்றான் அறிவும்.
துரை பேசாமல் முறைத்தான். “எப்பவும் நீ அவளுக்குத்தான் சப்போர்ட் செய்வ” என்றான் குற்றச்சாட்டாக.
“டேய் பங்காளி! பன்னீர் பெரியப்பா உன்னை நிறைய ப்ரைன் வாஷ் பண்ணி வச்சிருக்கார் போல, அக்சுவலி ப்ரைனையே வாஷ் பண்ணிட்டார் நினைக்கிறேன்” என்றதும் இன்னும் முறைத்தான் துரை.
“நான் வேலைப் பார்க்கிற கம்பெனில எவன் எந்த ஜாதினு தெரியாது. என்ன வேலை செய்றோமோ அதுக்குதான் சம்பளம், இதுல எங்க சாதி பெருமை வருது. எந்த விஷயமும் செய்யாம வெட்டியா இருக்கவன்தான் சாதியால பெருமைத் தேடிப்பான்” என்றதும்
“ஒரு நாள் வந்து வயல்ல இறங்கி வேலை செய், அட்லீஸ்ட் பாத்திக் கட்டிப்பாரு. நான் வெட்டியா இருக்கேனானு தெரியும்” என்றான் கோபத்துடன்.
“உனக்கு ஏன் கோவம் வருது, அப்போ நீ செய்ற வேலை பெருமையில்லையா?” என்று ஆரம்பித்த அறிவு “விடுடா, திருவிழா அன்னிக்கு சண்டை வேண்டாம்” என்றான். துரையும் ஒரு மாசம் கழித்து அறிவு ஊருக்கு வந்திருக்க, அவன் பேச்சைக் கேட்டான்.
இவர்கள் மாரியம்மனை தரிசித்துவிட்டு மாரியம்மன் கோவில் எதிரே ஒரு மண்டபம் போல் இருக்கும், அங்குதான் கலைவிழா எல்லாம் இரவு நடக்கும். இப்போது ஊரின் பெரிய தலைக்கட்டுகள் இருக்க, இவர்களும் அங்கே ஒரு ஓரமாய் உட்கார்ந்து வருவோர் போவோரிடம் பேசிக்கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து அருணா மகனிடம் வந்தவர் “ஐம்பது ரூபா கொடுடா” என்றார்.
அம்மாவிடம் பணத்தை நீட்டிய துரை “ஏம்மா பணமில்லாமவ வந்தீங்க?” என்று கேட்க “சில்லரை இல்லைடா, அந்த வளையல் கடைக்காரன் தரல” என்றதும் அவர்கள் வீட்டில் இப்போது கண்ணாடி வளையல் யார் அணிய இருக்கிறார்கள். எப்போதும் மைதிலிக்கு வாங்குவார்கள். இன்று சுமித்ரா ஊரிலும் திருவிழா என்பதால் அவள் வரவில்லை.
“யாருக்கும்மா?” என்று கேட்க “தாரகைக்குடா, சரோசாக்கா வாங்கிக் கொடுக்கிறாங்க” என்றவர் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். சரோஜா கமலாவோடும் அவர் மகளோடும் சுற்றிக்கொண்டிருந்த தாரகையைப் பிடித்து நலம் விசாரித்தார். கமலா அண்ணன் மகளான தாரகைக்கு வளையல் வாங்கித்தர, சரோஜாவும் வாங்கித் தர ஆசைப்பட்டார். தாரகை மறுக்க
“கமலா மாதிரி நானும் உனக்கு அத்தைதான் தாரக, வேண்டாம் சொல்லாத” என்று சொல்லி கண்ணாடி வளையல் வாங்கி மாட்டிவிட்டார்.
அம்மா சொல்லிவிட்டு சென்ற திசையில் துரை பார்க்க, இன்று தாரகை புடவை அணிந்திருந்தாள். மஞ்சள் நிறத்தில் தனித்து தெரிந்தாள். தலையில் அரும்பு வைத்திருக்க, கழுத்தில் ஏதோ ஒரு முத்தில் ஆன செயின். கையில் வளையல்கள் என்று எப்போதும் பார்ப்பதை விட வேறாக தெரிந்தாள். அதனால் என்னவோ பாவையிடம் துரையின் பார்வை தேங்கிப்போனது.
✅ End of Episode 11
Very nice.
Nice
Nice 😍😍😍😍