Episode 30

“ஏன் சாருக்கு வாய் இல்லையா?” தாரகை பல நாட்கள் கழித்து கோபமாக துரையிடம் பேசினாள். தங்கையின் பேச்சில் கோபம் இருப்பதை உணர்ந்த அரி சட்டென்று அவளை அடக்கினான்.

“தாரா! நாங்க பேசும்போது நீ குறுக்க பேசாத” என்றான் கண்களிலும் கண்டிப்பை காண்பித்து.

“நீ இரு அரி! என்ன சொல்ல வர’ன்னே புரியாம, புரிஞ்சிக்க ட்ரை பண்ணாம தைய தையனு குதிக்கிறார் சார்!” என்று துரையைக் கைகாட்டி சொன்னவள் அவன் முன்னே வந்து நின்று,

“உங்களுக்கு வேணும்னா உங்க அப்பா அம்மா இடத்துல யாராச்சும் நிக்க வைக்கலாம், உங்க பெரிய மனசு உள்ள பெரியப்பா நிக்கிறதுல எனக்கும் இவனுக்கும் நோ அப்ஜெக்ஷன். ஆனா என்னோட அப்பா, அம்மா இடத்துல யாரையும் நிக்க வைக்க எனக்கும் இவனுக்கும் இஷ்டமில்லை. அதனாலதான் பெரியவங்க தாலி எடுத்து கொடுத்து தமிழ் நெறிப்படி நடத்தணும்னு சொல்ல வந்தான் என் அண்ணா. அதுக்குள்ள கத்துற? அப்படி பண்ணாம என் பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை மத்தவங்களுக்கு செய்றதுன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்ற தாரகையின் குரல் உயர்ந்திருக்க, வீட்டிற்கு வந்தவனை இப்படி பேசுவது முறையல்ல என்றுணர்ந்த அரிச்சந்திரன்

“ஷட் அப் தாரா! மரியாதையா பேசு!” என்று கத்தினான். அதில் தாரகையின் முகம் சுருங்க கோபத்துடனும் கண்ணில் சேர்ந்த நீருடனும் வாசலுக்குப் போய்விட்டாள்.

துரைக்கும் தாரகை விளக்கம் சொல்லவும்தான் புரிந்தது. கோபத்துடன் சோஃபாவின் பின் சாய்ந்தவன் இடித்து கொண்டான். தலையில் கைவைத்தபடி தாரகை சென்றதைப் பார்த்தான். அரிச்சந்திரன், பெரியப்பா முன்னின்று நடத்துவதில் உடன்பாடு இல்லை என்று சொல்வதாக அவசரப்பட்டு பேசிவிட்டான். ஏற்கெனவே பெரியப்பா முன்பு போல் இவனிடம் பேசுவதில்லை, ஏதோ கடமைக்காக அவர் நிச்சயத்தில் கலந்து கொண்டதே வருத்தம்.

அருணாவும் சரோஜாவும்தான்,
“அவர் இந்தளவு இறங்கி வந்ததே பெருசு, விடுடா” என்று சமாதானம் செய்திருந்தனர். வரும்போது கூட அவரிடம் திருமணம் பற்றி பேச,

“பொண்ணு பார்த்த உனக்கு தெரியாதா, அதான் உன் சித்தப்பன் எல்லாம் செய்றானே அவனை கேளுடா” என்று திட்டிவிட்டார். இதில் அரிச்சந்திரனுக்கும் தாரகைக்கும் பெரியப்பாவின் மீது பெரிய அபிமானம் இல்லை என்று தெரியும், அதனால் அவன் சொல்லும் முன்னே கோபம் வந்துவிட்டது.

அங்கு நிலவிய அமைதியைக் கலைக்கும் வண்ணம்,
“வேணும்னா உங்க பெரியப்பா பெரியம்மா தாலி எடுத்து கொடுக்கட்டும் துரை! ஆனா இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம் வேண்டாம். நம்ம ஊர்ல இது செய்றதுதானே? உங்க சைட் கட்சி ஆளுங்க, வேற யாரை கூப்பிடலாம் சொல்லிடுங்க. சில டைம் அவங்க டேட் கேட்டுத்தான் டிசைட் பண்ணனும்” என்று அரிச்சந்திரன் சாதாரணமாக பேச,

‘என்னடா இவன்? நான் கத்தினேன், தாரக கத்தினா. இவன் பாட்டுக்கு டென்ஷன் இல்லாம அடுத்த வேலையைப் பார்க்கிறான். அறிவு சொல்றது சரிதான் போல’ என்று மனத்தில் நினைத்த துரைக்கு தாரகை அப்படி கோபத்துடன் சென்றது வருத்தமாக இருக்க, அரிச்சந்திரன் போல் சட்டென்று இயல்புக்குத் திரும்ப முடியவில்லை.

“நான் தாரக கிட்ட அஞ்சு நிமிஷம் பேசணும் அரி” என்று கேட்டிட, துரையின் பக்கம் பார்த்து திரும்பிய அரி

“அவளே கொஞ்ச நேரத்துல நார்மல் ஆகிடுவா, இப்போ போனா சேதாரம் அதிகமா இருக்கும்” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“சாரி அரி! வேற டென்ஷன்”

“இட்ஸ் ஒகே! அவ அப்பா அம்மா பத்தி பேசவும் அப்செட் ஆகிட்டா, உங்க மேல கோவமில்லை. இப்ப பேசினா கத்துவா, அப்புறம் பொறுமையா சொன்னா புரிஞ்சிப்பா” என்று அரி சொன்னவன் துரையின் முகம் தெளியாமல் இருப்பது கண்டு,

“இதுக்கெல்லாம் ஏன் டென்ஷன்? அவளே சரியாகிடுவா. இன்னிக்கு செல்லம் கொடுத்துட்டா நாளைக்கு அதை எதிர்ப்பார்ப்பா… ” என்றும் சொன்னான்.

துரையும் தலையசைத்து, “பேச்சாளர் வச்சே கல்யாணம் வச்சுக்கலாம் அரி. நானும் யோசிக்கல இதை, நீங்க சொல்றது சரிதான்! பெரியப்பா பெரியம்மா, அம்மா அப்பாவுக்குக் கூட அப்படிதான் கல்யாணம் நடந்துச்சு.” என்றான்.

அதன் பின் யாரை அழைக்கலாம் என்று பேச, “அந்த பாண்டியனை கூப்பிடணும்ல” என்றான் அரி கொஞ்சம் கடுப்பாக.

“ஆமா, அவர் நம்ம சைட் இப்ப பெரிய ஆள். நிச்சயம் கூப்பிடாம செஞ்சா நாள பின்ன எதுக்கும் போய் நிக்க முடியாது” என்றான் துரையும்.

“கழுத லவ் பண்ணி வேற கல்யாணம் பண்ணிட்டு கட்சி, ஜாதினு சுத்துது” என்றான் எரிச்சலாக.

“சித்தப்பாவுக்குத்தான் ரொம்ப சரியா யாரை கூப்பிடணும் தெரியும் அரி, நான் அவரோட பேசிட்டு சொல்றேன். கிளம்பவா?” என்று கேட்கும்போதே ராமசாமி தூக்கம் கலைந்து எழுந்து வந்தார்.

“என்னடா? என் பேத்தியை பார்க்க வந்தியா?” என்று கேட்டுக்கொண்டே துரையின் தோளில் துண்டால் அடித்தார்.

“உங்க பேரனை பார்க்க வந்தேன் தாத்தா” என்று துரை சொல்ல

“இந்த தடிப்பயல பார்க்கவா வந்த, எங்க என் ராஜாத்தி?” என்று கேட்க

“அது கொஞ்சம் கடுப்பா இருக்கு, வாசல்ல உட்கார்ந்திருக்கா” என்றான் அரிச்சந்திரன்.

“என்னடா செஞ்ச என் பேத்தி கோச்சுக்கிற மாதிரி?” என்று ராமசாமி அதட்ட

“அவளுக்கு என்ன, கிறுக்கி” என்று சிரித்தவனை தன் கைத்தடியால் அடித்த ராமசாமி,

“என் பேத்தியைக் கல்யாணத்துக்கு அப்புறம் என்னை பார்க்கமும் தெனமும் நீ அழைச்சிட்டு வந்திடனும்” என்று ராஜதுரைக்குக் கட்டளையிட்டார்.

“நான் என்ன அழைச்சிட்டு வரது தாத்தா, அவளே வந்துடுவா” என்று துரை தாத்தாவிடம் கரிசனையாக சொன்னான்.

“எங்க ராஜாத்தி சின்ன வயசுல ரோசாப்பூவாட்டம் இருப்பா. அதுக்குள்ள கல்யாணமாகப்போவுது, அவ போய்ட்டா வீடே வெறிச்சோடி போயிரும். ஏன் ராஜா, நீ உன் கல்யாணம் முடிஞ்சதும் உன் மச்சான் இந்த தடியனுக்கும் ஒரு பொண்ணை பார்த்திடு! நான் நிம்மதியா போயிடுவேன்” என்றார் குரல் கமற,

“ராமசாமி! என் கல்யாணம் முடியற வரை இருக்கணும்னு ஒன்னும் அவசியமில்லை, வீட்ல இருந்து நேரா பத்து நிமிஷம் நடந்து போனா சுடுகாடு, போய் படுத்திரு, வாயை பாரு!” என்றான் அரிச்சந்திரன் கோபமாக.

தாத்தாவை சீண்டி விட்டு பேச அது சரியாக வேலை செய்தது.

“படுவா ராஸ்கல்! நான் ஏண்டா போகணும்? உனக்கு பொண்ணு கிடைக்கறதுக்குள்ள எனக்கு நூறு வயசே ஆகிடும். என் ராஜாத்திக்குப் பொறக்கிற புள்ளையை எல்லாம் பார்த்துட்டு தான் டா போவேன்” என்று ராமசாமி பேச, துரை புன்னகையுடன் பார்த்திருந்தான்.

துரை கிளம்புகிறேன் என்று சொல்லி வெளியே வர, தாரகை வாசற்படியில் உட்கார்ந்திருக்க துரை அவளருகே வந்து நின்றான்.

“சாரி! நீ சொன்னதை நான் யோசிக்கல. உன் அண்ணன் சொல்றது சரிதான். கோவம் போச்சா?” என்று கேட்கவும் முகத்தை நிமிர்த்தி அவனை பார்த்தவள்

“கோவமெல்லாம் இருக்கு. உங்கிட்ட நான் வேற என்ன எதிர்ப்பார்க்க முடியும்? எனக்கு பூ வைக்க வந்தனைக்கு சரோஜாத்த’தான் பூ வச்சாங்க. உன் அம்மா தள்ளி இருந்தாங்க, எனக்கு அது பார்த்தப்ப கஷ்டமா இருந்தது. உனக்காக எவ்வளவு செஞ்சிருப்பாங்க? நம்ம கல்யாணம் நடக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறவங்க. இந்த தேவையில்லாத நம்பிக்கையால ஏதோ ஒரு வகையில கஷ்டம்தானே? இப்போ மேடையில் உன் பெரியப்பா பெரியம்மா செஞ்சாலும் கண்டிப்பா அத்தை மனசுல ஒரு ஏக்கம், வருத்தம் இருக்கும். உன் அப்பா இல்லைன்றதால அம்மாவா அவங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் இல்லாம போகுது இல்லை” என்று தாரகை பேச பேச அம்மாவை, அவரின் உணர்வை இந்த ரீதியில் யோசித்ததே இல்லை துரை.

எப்போதோ ஒரு முறை அம்மாவிடம் இந்த காலத்து பெண் மாமியார் பேச்சைக் கேட்கமாட்டாள் என்று துரை சொல்லியது நினைவு வந்தது. தாரகை அவன் பேச்சை கேட்பவளும் இல்லை, ஆனால் அம்மாவின் பேச்சைக் கேட்காவிட்டாலும் அம்மாவுக்காக பேசுவாள். அவரை காயப்படுத்த மாட்டாள் என்று நிச்சயமாக புரிய மனத்தில் துரை மட்டற்ற நிம்மதி.

துரை, “நீயும் அரியும் ரொம்ப பக்குவமானவங்க தெரியும் தாரக. இந்தளவு எனக்கு யோசிக்க தெரியல, நினைச்சது இல்ல. தேங்க்ஸ்” என்று சொல்ல

“எதுக்கு தேங்க்ஸ்? அப்புறம் இது பக்குவம் கிடையாது, பகுத்தறிவு! இதெல்லாம் நார்மலா யோசிக்கிற விசயம். ” என்றாள் சாதாரணமாக.

“சரி உங்கிட்ட இருந்து அந்த அறிவை நான் வாங்கிக்கிறேன். தேங்க்ஸ் அம்மாவுக்காக யோசிச்சதுக்கு” என்றவன் புன்னகையுடன் கேட்டைத் திறந்து வெளியேறினான். வண்டியை ஸ்டார்ட் செய்து தாரகையைக் கண்ணில் நிறைத்து கிளம்பினான்.

அவனுக்குத் தெரியாத, யோசிக்காத புதிய பாதையினை காட்டும் வீண்மீனாய் இருந்தாள் துரையின் காதல் தாரகை. சில நேரம் காதல் அப்படித்தான், அது காட்டும் வழி அலாதியானது! துரைக்கு தாரகை காட்டிடும் அந்த வழியை ஏற்கும் அன்பு இருக்க, வழி காட்டுமளவு அறிவு இருந்தது தாரகைக்கு.

✅ End of Episode 30
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 weeks ago

Very nice.

❤️ 1 more...
Radhi Reader 1 week ago

Nice 0

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top