Episode 34

இரண்டு நாட்களுக்குப் பின்…

பன்னீரும் சரோஜாவும் சரோஜாவின் உறவில் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தனர். தாரகை காலையில் தியேட்டருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அருணாவிடம் “போய்ட்டு வரேன்த்த” என்றவளை நிறுத்தியவர் ராஜதுரையையும் அழைத்தார். மகனிடம் பணத்தை நீட்ட, அவன் புரியாமல் பார்த்தான்.

“எதுக்குமா?”

“வாங்கிட்டு சொல்றதை கேளு” என்றார் அருணா.

“தாரா, நீ ஏன் கொலுசு போடாம இருக்க?” என்ற அருணாவின் கேள்வியில் ராஜதுரை

“இவளை ஏன் கிளப்பி விடுறாங்க” என்று பார்த்தான்.

“மா, அவளுக்கு இஷ்டம் இருந்தா போட போறா” என்று சொல்ல, தாரகை

“இல்லத்த, அம்மா இருக்கும்போது இரண்டு வருஷம் ஒருதடவ மாத்துவாங்க. அப்புறம் அதெல்லாம் நாங்க செய்றதில்லை, கல்யாணத்தப்ப கமலா அத்த சொல்லி ரொம்ப சத்தம் கேட்காம இருக்க மாதிரி ஒன்னு வாங்கினேன்.” தாரகை என் இஷ்டம் என்று பேசுவாள் என பார்க்க, அவளோ அருணாவுக்குப் பொறுமையாக பதில் சொன்னாள்.

“எனக்கு கொலுசு போட ரொம்ப பிடிக்கும், இவன் அப்பா நைட்ல மோகினி பிசாசு மாதிரி ஜல் ஜல் சத்தம் கேட்குது, கழட்டி வைனு சொல்லிட்டார். போட வேண்டிய வயசுல போட முடியல, அப்புறம் போட முடியாம போச்சு. எனக்குப் பொண்ணு பொறந்தா அவளுக்குப் போடணும் நினைச்சேன், இப்ப நீ இருக்கவும் எனக்கு ஆசை. டேய் இப்பவே என்ன வேலை இருந்தாலும் விட்டுட்டு இவள அழைச்சிட்டுப் போய் தாராவுக்குப் பிடிச்ச மாதிரி கொலுசு வாங்கிக் கொடு” என்றார்.

“இப்ப என்ன அவசரம்? உனக்கு ஏதும்மா இவ்வளவு பணம்?”

“கொள்ளையடிச்சேன் டா” என்று நொடித்த அருணா “எனக்கு யாரு காசு கொடுப்பா புருஷனா? புள்ளையா? என் பொறந்த வீட்ல சீருக்குக் கொடுத்த காசு சேர்த்து வச்சிருந்தேன்” என்று திட்டினார்.

“என்னம்மா? எப்ப எது வேணும்னாலும் கேளுன்னு சொல்லியிருக்கேனே, உனக்கு காசும் கொடுக்கிறேன் தானே?” ராஜதுரை வருத்தமாக கேட்டான்.

அருணாவோ “வேணும்ன்றதை நான் வாங்குற அளவு என்னை வைக்கலடா நீ!” என்றவர் சலிப்பாக,

“காலையில எங்கிட்ட பேச்சு வாங்காத, அப்புறம் மூஞ்ச நீட்டுவ நீ. தாரா போய்ட்டுவாம்மா. அப்பறம் உன் பெரியப்பா பெரியம்மா வந்தா நீயே வாங்கிக் கொடுத்ததா சொல்லு. நான் காசு கொடுத்தேன் சொல்லாத” என்றார்.

“ஏன்மா பொண்ணு இல்லைன்ற, சுமித்ராவுக்கு மைதிலிக்கு எல்லாம் செஞ்சிருக்கலாமே, உன் மருமகளுக்காக காத்திருந்தியோ?” ராஜதுரை கேட்க.

அருணா உடனே, “ஏன் அவளுங்களுக்கு செய்ய அப்பா, அம்மா இருக்காங்கதானே? இவ இந்த வீட்டு மருமக தானே என்ன செஞ்சிருக்காங்க இதுவரைக்கும்?” என்று மகனிடம் பேசியவர்

“இவங்க பெரியப்பா பார்த்தா எங்க எல்லாருக்குமே பயம், மனுஷனைப் பார்த்தாலே எதுவும் பேசமாட்டோம். நீ என்னடான்னா அத்தனை ஆம்பிளைங்க முன்னாடி காசு கொடுக்கலன்னா கேஸ் கொடுப்பேன்னு சொன்னியாமே, கமலா சொல்லிச்சு. எனக்கு அப்பவே உன்னை ரொம்ப பிடிக்கும், இவனுக்கு உன்னை பிடிச்சிருக்குனு உன் தாத்தா சொன்னப்போ எனக்கு அவ்வளவு சந்தோஷம்! உனக்கு ரொம்ப நாளா வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன்” என்று தாரகையிடம் சொல்ல அவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் கணவனை பார்த்தாள்.

ராஜதுரையோ “என்ன ஒரு சந்தோஷம்மா உனக்கு? புள்ள மேல கேஸ் போடுவன்னு ஒருத்தி சொல்றா அவளை ரசிக்கிற? அதிசய தாய்மா நீ!” என்று கடுப்பாக சொன்னான்.

பெண்கள் இருவரும் சிரித்தனர். “நீ சீக்கிரம் அவங்க வரதுக்குள்ள வாங்கிட்டு வந்திடு, நல்லா நிறைய முத்து வச்சு வாங்குங்க” என்றார்.

துரையும் தாரகையும் அவள் காரில் சென்றனர். துரை முகம் அமைதியாகவே இருந்தது. ஏதோ ஒரு கவலையில் இருந்தான்.

“என்ன துரை? அத்தை என்னை பத்தி சொன்னதும் அப்செட்டா?” என்று கேட்டாள்.

“இல்லை! அவங்க அப்பவே என்னைதான் பேசினாங்க. எனக்கு எங்கம்மான்னா ரொம்ப பிடிக்கும் தாரக, ஆனாலும் என்னால அதை அவங்களுக்கு உணர்த்தவே முடியல. ஒருவேளை பொண்ணா இருந்தா அவங்க மனச புரிஞ்சிருந்திருப்பேனோ? நான் நிறைய சம்பாதிக்கிறேன் கம்மி அது இல்ல கணக்கு, அம்மாவுக்கு என்ன செலவுனு தான் நான் நினைப்பேன். வயல்ல வர வருமானம் எல்லாம் பேங்க்ல இருக்கும். கை செலவுக்கு பெரியப்பா கிட்ட சொல்லிட்டு நானும் கொஞ்ச எடுத்துப்பேன். வீட்டு செலவுக்குனு மாச மாசம் கொடுப்பேன். பாரு இத்தன வயசுக்கு அப்பறம் பொறந்த வீட்டு சீர் காசை சேர்த்து வச்சிருக்கேன் சொல்றாங்க. எனக்கு ரொம்ப ஹர்ட் ஆவுது” என்றான் காயம்பட்டவனாக.

“அப்பாவை நான் இழந்ததும் அம்மாவை கவனிக்காம விட்டேனோ தோணுது. அப்பவே காலேஜ் போய்ட்டேன், அப்பறம் கொஞ்ச நாள் வேலை. அதுவும் பிடிக்கலனு விட்டு அம்மாவோட இன்னும் சண்டையாகிடுச்சு. பேசினாலே கோவம் வரும், போயிடுவேன். உன்னோட சண்டை வரக்கூடாதுனு நினைப்பேனே அப்படித்தான் அவங்களோடவும்” என்று துரை மிகுந்த மன வருத்தத்தில் பேசினான்.

“அன்னிக்கு நீ சண்டை போட்ட மாதிரி, அப்பா இல்லனா அவங்க மரியாதை இல்லாம போச்சுல? நானும் எதுவும் செய்றதில்லை. ரொம்ப கில்ட்டா இருக்கு” என்றதும்

அவன் வருத்தம் உணர்ந்து “பரவாயில்ல இனிமே நல்லா பார்த்துக்கலாம். இப்படி கஷ்டப்படாதீங்க” என்று தாரகை சொல்ல துரையும் அவள் முகம் பார்த்து தேறினான்.

“அது சரி, எல்லாத்துக்கும் எனக்குப் பிடிச்சாதான் செய்வேன் சொல்லுவ. இங்க என்னடான்னா என் பெரியம்மா வீட்ல விளக்கேத்த சொன்னா செய்ற, எங்கம்மா ஆசைக்குக் கொலுசு போட சொன்னா செய்ற, என்னம்மா ஃபெமினிஸ்ட்?” என்று துரை கிண்டல் செய்யவும்

“மாண்புமிகு பூமரே! அவங்க அன்பா சொல்றாங்க, அதனால் அவங்க நம்பிக்கையை கெடுக்க விரும்பல. அத்தை ஆசையா சொல்றாங்க, எனக்கு அம்மா இருந்தப்ப அதெல்லாம் வாங்க ஆசை இருக்கும்.. அப்புறம் போச்சு, எனக்காக செய்றாங்க. நிஜமா லக்கினு அடிக்கடி ஃபீல் பண்ண வைக்கிறாங்க” என்றாள் தாரகை மனம் நிறைந்த சந்தோஷத்துடன்.

தாரகைக்கு மெலிதான கொலுசு பிடிக்கும் என்றாலும் கூட அருணா சொன்னதுக்காக நிறைய மணி வைத்த கொலுசு வாங்கியவள், கணவனுக்கு மிகுந்த ஆசையுடன் வெள்ளி காப்பு வாங்கினாள்.

“என் க்யூட் ஆனியனுக்கு” என்று சொல்லி அவளே போட்டு விட்டவள் அவனை அநியாயத்திற்கு ரசித்து பார்த்தாள்.

“ஹே! என்ன இது?” துரை ஆச்சர்யமாக கேட்கவும்

“ரொம்ப நாளா ஆசை. பிடிச்சிருக்கா?”

தாரகையைப் பார்த்துக் கொண்டே “ரொம்ப பிடிச்சிருக்கு!” என்று காப்பை முழங்கையில் நன்றாக போட்டு பார்த்தான்.

“எங்கண்ணா கிட்ட காட்டணும். தாத்தா கிட்ட காட்டணும்” என்று ஆசையாக கேட்க இருவரும் தாரகை வீடு சென்றனர்.

அரியிடமும் தாத்தாவிடமும் கொலுசைக் காட்டி “எங்கத்த வாங்கி கொடுத்தது” என்றாள் பெருமையாக.

ராஜதுரைக்கு இவளை திருமணம் செய்ய எவ்வளவு பயந்தேன் என்று இப்போது நினைக்க சிரிப்பு. குடும்பத்தை அனுசரிக்க மாட்டாள் என்று இவனாக ஒரு எண்ணம் வளர்த்திருக்க, இவன் அறியாமல் இவனுக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் உடைத்தாள். அம்மாவை இன்னும் புரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மனத்தில் உறுதியெடுத்தான்.

*****
அன்று தீபாவளி திரு நாள்!!

துரை தாரகைக்கு தலை தீபாவளி. காலையில் வீட்டில் சாமி கும்பிட்டு பூஜை முடித்தவர்கள் தாரகையின் வீட்டிற்கு சென்றனர்.

மூன்றே நிமிடத்தில் வீடு வந்துவிட்டது. பட்டு வேஷ்டியில் துரையும் பட்டுப்புடவையில் இருக்க கமலா வந்து ஆரத்தி எடுத்தார். மதிய விருந்து அரிச்சந்திரனே செய்திருந்தான். தாரகையையும் துரையையும் வரவேற்றவனைப் பார்த்து துரைக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டான். கூடவே ஆச்சரியமும்!

தாரகையோ “என்னடா? இப்படி நிக்கிற? ஹெல்ப்புக்கு யாரையாச்சும் கூப்பிட வேண்டியதுதானே?” என்று அண்ணனைப் பார்த்து கேட்டாள். அரிச்சந்திரன் சாம்பல் வண்ணத்தில் டபுள் கலர் வேஷ்டியை மடித்துக் கட்டியிருந்தவன் கறுப்பு நிற டீ ஷர்ட்டுடன் தலையில் துண்டை கட்டியிருந்தான். இதில் கையில் ஜல்லிக்கரண்டி வேறு.

“ஏன் அரி இப்படி கஷ்டப்படுறீங்க?” என்று துரையும் அக்கறை கொண்டு கேட்க,

“ஹலோ! அவன் ஒன்னும் மாப்பிள்ளைனு உங்களுக்காக செய்யல, எனக்காக செய்றான்” என்ற தாரகையிடம் பெருமிதம்.

“அப்படி ஒன்னுமில்லை, அவருக்காகத்தான்” என்றான்.

“எங்கடி இவன்? வெங்காயம் உரிச்சுத் தரேன் சொன்னா கூட வேண்டாம்ன்றான். வடையை மட்டும் போடு அத்த’ன்றான்” என்று கமலா புலம்பினார்.

“போய் அதை செய் அத்த. டைமாகிடும், நான் இன்னும் பத்து நிமிஷம் முடிச்சிருவேன்” என்று அரிச்சந்திரன் விரட்ட, கமலா சமையல்கட்டுக்குள் போனார்.

தாரகை அண்ணனை கிண்டலாக பார்த்தாள். கமலா நகரவும்

“டேய் அரி! இப்படியெல்லாம் கமலாத்தையை இம்ப்ரெஸ் பண்ணினா அப்புறம் ஸ்வாதியைக் கட்டி வச்சிரும்டா! ஏற்கெனவே மாமாவையும் அறிவு மாமாவையும் கழுவி ஊத்துவாங்க. அத்தையை மாப்பிள்ளை கை விட்டுப் போறான்னு நினைக்க வைக்காத” என்று கிண்டல் செய்தவள் தலையில் குட்டி

“டேபிள்ல பானகம் வச்சிருக்கேன். அவருக்கு எடுத்துக் கொடு” என்று சொல்லி சமையலைப் பார்க்க சென்றான் அரி.

ராமசாமி துரையிடம் அவர் காலத்து ஆட்களை விசாரிக்க தொடங்கிவிட்டார். அவனும் அவனுக்குத் தெரிந்தவர்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தான். தாரகை அலைப்பேசியை எடுத்து டென்ஷனுடன் பேசவும்

“என்னாச்சு?” என்றான்.

“இன்னிக்கு இரண்டு ஹீரோஸ் படம் ரீலிஸ். அதான் எப்படி போகுது கேக்கிறேன், நான் வேற படத்தைப் பார்க்கவே இல்லை. புவி பார்த்துட்டு ஓகே சொல்லிட்டார், அதைவிட இந்த ஹீரோஸ் நின்னாலே படம் பார்ப்பானுங்க, ஆனாலும் இரண்டு பேர் படம் வரப்ப பிரச்சனை ஆகாம இருக்கணும்ல. அதான் டென்ஷனா இருக்கு” என்று தாரகை சொல்ல,

“அதெல்லாம் புவி மாமா பார்த்துப்பார், நீ ரிலாக்ஸா இரு” என்று துரை சொல்ல, தாரகையும் தலையசைத்தாள்.

மதிய விருந்தை ஒற்றை ஆளாய் அசத்தியிருந்தான் அரிச்சந்திரன். தங்கைக்குப் பிடித்த அத்தனையும் சமைத்து வைத்திருந்தான். கமலா வீட்டுக்குச் சென்றுவிட, அரியே மூவருக்கும் பரிமாறினார். ராமசாமி மீண்டும்,

“இவனுக்கும் வயசாகுது ராஜாத்தி, நீதானே இவனுக்குப் பொண்ணு பார்க்கணும்” என்று கேட்க

“சாப்பிட விடு தாத்தா” என்று அதட்டினான் அரிச்சந்திரன்.

“நீ சும்மா இருடா ராஸ்கல்!” என்று அவனை அதட்டிய ராமசாமி துரையிடம்,

“உங்கிட்ட நான் என்ன சொன்னேன்? என் பேரனுக்குப் பொண்ணு பார்க்க சொன்னேன் தானே? வீட்டு மாப்பிள்ளையா நீ செய்ய வேண்டாமா?” என்று அவனையும் அதட்ட

“சீக்கிரம் பார்த்துடலாம் தாத்தா, நீ கவலைப்படாத” என்று தாரகை புன்னகை முகமாக சொல்லவும்தான் அவர் அமைதியானார்.

✅ End of Episode 34
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 weeks ago

Very nice 

❤️ 1 more...
Radhi Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top