Episode 12

தாரகையை அளவீடு செய்த ராஜதுரையின் அகமோ ‘இவ இப்போதான் பொண்ணா சங்கதியா இருக்கா’ என்று எண்ணியது. சில நிமிட பார்வை அது கூட அளவீடு, அகம் உணர்ந்த ரசனை இல்லை. என்னவோ மற்ற பெண்களை சில நொடிகளாவது ரசித்து கடக்கும் அவன் மனம் தாரகையை ரசிக்கவில்லை.

மீண்டும் அறிவிடம் பேச, அறிவோ “என் மாமன் பொண்ணுங்க ஒவ்வொருத்தியும் அழகோ அழகு! பேரழகு!” என்று புகழ, துரை

“டேய் பங்காளி! உனக்கு மாமா பொண்ணுங்களுக்கு ஈகுவளா மாமா பயலுவ இருக்கானுவ, ஸோ நீ இப்படி அவனுங்க தங்கச்சிங்கள சைட் அடிக்கிறது தெரிஞ்சது மவனே குமுறு கஞ்சி காச்சிருவானுங்க” என்றான் கிண்டலாக.

“என் மச்சானுங்க எல்லாம் நல்லவனுங்கடா, என்ன அந்த வக்கீல் பய மட்டும் வில்லங்கம்” என்று அறிவு சொல்ல

“உனக்கும் அந்த அரிச்சந்திரனுக்கும் அப்படி என்னடா பகை? எப்ப பார்த்தாலும் அவனை வில்லங்கம்ன்ற?” என்று துரை யோசனையாகக் கேட்க,

“அது ஒரு ரத்த சரித்திரம் பங்காளி! எனக்குப் பதினாலு வயசு இருக்கும்போது எங்க தெருவுல விளையாடிட்டு இருந்தோம், ஏதோ பேச்சுவாக்குல தாரகையை முறைப்பொண்ணுன்னு சொல்லி வம்பிழுத்துட்டேன் டா. தாரகைக்குப் பத்து வயசுக்குள்ளதான் இருக்கும். அவ சின்னப்பொண்ணு, அழுதுட்டே போய் இந்த அரி பய கிட்ட சொல்ல, அவன் என்னை ஒன்னுமே கேட்கல, கிரிக்கெட் விளையாட வந்தான். பேட்டீங் பண்ணினவன் நல்லா குறி பார்த்து பேட்டால பாலை என் தலையில படுற மாதிரி அடிச்சிட்டான். ஆனா யாருக்குமே அவன் வேணும்னு செஞ்சான்னு தெரியாது. ஏதோ விளையாடும்போது பட்டதுனு நினைச்சாங்க. ஏன் நானும் அப்படிதான் டா பங்கு நம்பினேன்”

“அந்த பாவியா ஒரு நாள் என் தங்கச்சியை வம்பிழுத்து இன்னும் நாலு தையல் போடுவன்னு சொன்னான் பாரு, அப்போ தெரிஞ்சது அவனைப் பத்தி. ஊமைக் குசும்பண்டா அவன்” என்று அறிவு சொல்ல, துரைக்கு ஒரே சிரிப்பு.

“அன்னிலேர்ந்து அரினாலே நான் தள்ளி நிப்பேன். ஆனாலும் இன்னிக்குத் தாரகை லட்சணமா இருக்காடா” என்று சொல்ல,

“அவ காதுல விழுந்தா பங்காளி, உனக்குப் பல்செட் கன்ஃபார்ம்” என்றான் துரை நக்கலாக.

“ச்ச, தாரா அப்படியெல்லாம் தப்பா எடுக்கமாட்டா” என்று அறிவு சொல்ல

“யாரு அவளா? சரியான ராங்கி! எங்க அவளைக் கூப்பிட்டு சொல்லு” என்று துரை கிண்டலாக அறிவிடம் கேட்க

“என்னடா என்னை விட தாராவை உனக்குத் தெரியுமா? அவ ஈசியா எடுத்துப்பா, அரி போல இல்லை” என்று வாதாடினான் அறிவு. துரையின் சீண்டலில் தாரகையை அறிவு அழைத்துவிட்டான் அறிவு. துரை இன்னும் கிண்டலாகவே பார்க்க

அறிவு ரோஷத்துடன் “தாரா! இன்னிக்கு நீ புடவையில அழகா இருக்க” என்றான். பல் உடையும் என்று துரை பகல் கனவு காண, அவளோ பற்கள் எல்லாம் தெரியும் வண்ணம் புன்னகைத்தபடி

“தேங்க்ஸ் ஃபார் தி காம்ப்ளிமெண்ட் மாமா” என்றாள். அத்துடன்

“நீ கூட இந்த ஷர்ட்ல நல்லாதான் இருக்க” என்றவள் அவன் அருகே நெருங்கி

“ஆமா இந்த துப்பட்டா போடுங்க டோலி என்ன பேண்ட் ஷர்ட்ல சுத்துறார்? இவரெல்லாம் வேஷ்டி கட்டி கலாச்சாரத்தைக் காப்பாத்த மாட்டாரா?” என்றாள் நக்கலாக. அது துரையின் காதில் தெளிவாக விழுந்தது.

“என் பங்காளியை வேஷ்டி சட்டையில பார்க்க உனக்கு அவ்வளவு ஆர்வமா தாரா?” என்று அறிவு அவளை வம்பிழுக்க துரை, தாரா இருவருமே முறைத்தனர்.

இருவரும் முறைக்க, விட்டால் வில்லங்கமாகிடும் என்று புரிந்த அறிவு “பாரேன், பொண்ணுங்கன்னா திருவிழாவுல வளையல் எல்லாம் வாங்கித் தராங்க, எங்களை தேர் இழுக்கவும், ரோட்டைக் கூட்டவும் யூஸ் பண்றாங்க” என்றான்.

“உனக்கு என்ன வேணும் சொல்லு, வாங்கித் தரேன்” என்று தாரா சொல்ல, இவர்கள் பேசும்போது தான் எதற்கு என்று துரை அவன் வேறு நண்பர்களோடு பேச சென்றுவிட்டான்.

தாரா சென்றதும் அறிவு துரையிடம் போக, அவனுக்குத் தம்பி முறையில் இருக்கும் சுரேஷிடம் வேலை சொல்லிக்கொண்டிருந்தான். அறிவை அவன் கண்டுகொள்ளாமல் இருக்க, சுரேஷ் சென்றதும் “டேய் தாரா அப்படி பேசினதுக்கு நான் என்ன செய்வேன்?” என்று பாவமாக அறிவு கேட்க

“அவ ஏன் அப்படி பேசினா? அவளுக்கு என்னைப் பத்தி ஒன்னும் தெரியாது. நீதான் என்னைப் பத்தி அவகிட்ட அப்படி சொல்லி வச்சிருக்க” என்று அறிவை குற்றம் சொல்ல

“நான் என்னடா சொன்னேன்? அவ உன்னை முதல் தடவ பார்த்தப்ப நீ சரியா பேசல, என்னைக் கேட்டா நான் நீ கொஞ்சம் கன்சர்வேடிவ்னு சொன்னேன். உண்மைதானே? இல்லாததை சொல்லலயே நான்? என்றான் அறிவும் கோபத்துடன்.

“சொன்ன அழகு தெரியுதுடா. அவளுக்குத் தெரியல அவ அண்ணன் மாதிரி, அவ பார்க்குற பசங்க மாதிரி எல்லாம் நல்லவனுங்க நினைக்கிறா, அன்னைக்குத் தியேட்டர்ல இவளை பசங்க எப்படி பார்க்கிறானுங்க, அவனுங்களை நம்ம மாத்த முடியுமா? அதை சொன்னா இவ என்னை பூமர்னு சொல்றா. நீயும் மாமா மகளுக்கு ஜால்ரா போடுற” என்று பொரிந்தான் ராஜதுரை.

“டேய் இப்போ எதுக்கு நீ டென்ஷன் ஆகுற? தாரா உன்னை தப்பா நினைச்சிட்டான்னா?” என்றதும் துரை அறிவை இன்னும் முறைத்தான்.

“என்னை வளர்த்த என் பெரியம்மாவே என்னைப் புரிஞ்சிக்கல, இவகிட்ட நல்ல பெயர் எடுத்து நான் என்ன செய்யப் போறேன்?” என்ற துரை

“நீ என்னோட வரியா இல்லை நான் போட்டுமா?” அறிவிடம் கேட்டான்.

“எனக்கு டயர்டா இருக்கு, நீ வீட்ல இறக்கிவிட்டுட்டு போடா” என்றான் அறிவு.

துரையும் அறிவை வீட்டில் விட்டு வேலைகளை முடித்து அவன் வீடு சென்றான்.
அருணா அவனை அழைத்து,

“ராஜா, இன்னிக்கு திருவிழா, பசங்க குடிச்சிட்டு சண்டை போடுவாங்க. நீ எதுக்கும் போகாத, உன் பெரியப்பாரு கூப்பிட்டாலும் போவக்கூடாது” என்று கண்டிப்பாக சொல்ல

“நான் குடிக்க மாட்டேன்,குடிச்சிட்டு சண்டை போடுறவங்க கூட சேர மாட்டேன். நீ நிம்மதியா இரும்மா” என்றான் புன்னகையுடன். அருணாவும்

“சரிடா, சட்டுனு வந்துடு” என்று சொல்லி வேலையைப் பார்க்க போனார். அன்று திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. அடுத்த நாள் காலை பத்து மணி போல் துரைக்கு வேறு ஒரு பஞ்சாயத்து வந்தது.
இரவு வழக்கம்போல் தாரகை பத்து மணி காட்சி துவங்கியதுமே வீடு வந்துவிட்டாள். எப்போதும் கார் வரும்போது கதவைத் திறந்து வைத்திருக்கும் அரிச்சந்திரன் வீடு வரவில்லை. அதனால் தாரகையே இறங்கி, கேட்டினைத் திறந்து காரை உள்ளே நிறுத்தினாள்.

ஹாலில் ‘பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு
இல்லை என்னென்று
நான் சொல்லலாகுமா
என்னென்று
நான் சொல்ல வேண்டுமா?’ என்று சிவாஜிகணேசனும் பாலாஜியும் நீந்திக்கொண்டிருக்க, ராமசாமி ரசித்து டீவியைப் பார்த்து பாடினார்.

“தாத்தா!” என்று தாரகை அவர் அருகே போய் நிற்க,

“மறைக்காத ராஜாத்தி” என்று அவளை தள்ளி நிற்க சொன்னார்.

“அரி எங்க இன்னும் அவனைக் காணும்?” என்றாள் கவலையாக.

“வந்துடுவான், ஏதோ ஒரு சின்ன பிரச்சனைன்னு சொல்லிட்டுப் போனான்.” என்று அவர் சொல்லி டீவியில் கவனம் வைக்க

“பொறுப்பே இல்லை தாத்தா உனக்கு, மணி பத்தரை ஆச்சு அவனைக் காணும்னு நான் சொல்லிட்டு இருக்கேன், நீ படம் பார்த்துட்டு இருக்க?” என்றாள் கோபமாக.

“என்ன தாரா நீ? நீயும் தெனைக்கும் இந்த நேரம் தானே வருவ. அப்போ கவலைப்பட்டா கார்ல வரேன், எனக்கென்ன பயம்னு பேசுவ. அந்த ஆம்பளைத் தடியன் பத்திரமா வந்துடுவான். இட்லி இருக்கு, நீ முதல்ல சாப்பிடு, அவன் வந்துடுவான்” என்றார் ராமசாமி.

தாரகைக்குத்தான் அண்ணன் இன்னும் வரவில்லையே என்ற கவலையில் உணவு கூட சரியாக உள்ளே இறங்கவில்லை. அவனுக்குப் போன் செய்தால் கட் செய்துகொண்டே இருந்தான். பின் எடுக்கவுமில்லை.

“உன் பேரனுக்குக் கொழுப்பு தாத்தா. பெரிய பின்லேடன் பிரச்சனை, என்னன்னு சொல்லிட்டுப் போனா நானும் நிம்மதியா உன்னோட படம் பார்ப்பேன்ல. போன் எடுத்துப் பேசாம என்னை டென்ஷன் பண்றான். ஒரு நாள் நானும் அவனை இப்படி செஞ்சு பழிவாங்குறேன்” என்ற தாரகைக் கோபத்துடன் தாத்தாவின் அருகே தரையில் உட்காரந்துகொண்டாள்.

ராமசாமி சோஃபாவில் உட்கார்ந்திருக்க, இவள் சோஃபாவில் தலை வைத்து, அப்படியே உறங்கிவிட்டாள். பதினொரு மணி போல் பைக் சத்தம் கேட்டு தாரகை எழ, ராமசாமி இன்னும் படம் பார்த்துக்கொண்டிருந்தார்.

அரிச்சந்திரன் பைக்கை நிறுத்த, தாரகை கேட்டைப் பூட்டிவிட்டு வர அவன் அறைக்குப் போய்விட்டான். டீஷர்ட் லுங்கிக்கு மாறியவன்

“தாரா! டயர்டா இருக்கு. இட்லி எடுத்துட்டு வா” என்று சொல்ல அரிக்கு சாப்பாடு வைத்தாள் தாரகை.

“என்னடா பிரச்சனை?” என்று ராமசாமி கேட்க, தாரகையும்

“ஒரு மெசெஜ் போட்டு போனா என்னடா? நைட் அப்படி என்ன பிரச்சனை? நான் டென்ஷன் ஆகிட்டேன் தெரியுமா?” என்ற அவள் குரலிலே கலக்கம் உணர்ந்தான் உடன்பிறந்தவன்.

“பசங்க பிரச்சனை, அதான் நான் போக வேண்டியதாகிடுச்சு” என்ற அரி

“பேசி பேசி பயங்கர பசி, கொஞ்சம் சாப்பிட்டு பேசுறேன்” என்றவன் சாப்பிட, தாரகை வழக்கம்போல் திண்ணையில் இருக்கும் பெஞ்சில் போய் உட்கார்ந்து வானத்தை வேடிக்கைப் பார்த்தாள்.

அரிச்சந்திரன் உண்டு முடித்து, எல்லாம் எடுத்து வைத்து தங்கையிடம் வந்தான்.

“என்னாச்சு?” என்று அவள் கேட்க

“காலையில இந்த ராஜேஷ் இருக்கானே அவன் கூட படிக்கிற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்துட்டான் போல. அதை அந்த பொண்ணோட சொந்தக்கார பையன் அவங்க கூட படிக்கிறவன் பார்த்துட்டு, மதியம் காலேஜ் விட்டதும் வீட்ல சொல்லி ப்ராப்ளம். அத்தோட அந்த பொண்ணோட சொந்தக்கார பசங்க எல்லாம் அவன் வேற ஜாதிக்காரன் நம்ம பொண்ணுக்கு எப்படி லவ் லெட்டர் கொடுக்கலாம்னு ஆள் சேர்த்துட்டு பசங்களுக்குள்ள சண்டையாகி, இரண்டு சாதிக்கட்சிக்காரங்க எல்லாம் சேர, பெரிய பிரச்சனை”

“லவ் லெட்டர் கொடுத்து பிடிக்கலன்னா விட்டிருக்கலாமேடா? ஏன் இதை இவ்வளவு பெருசா ஆக்கனும்?” என்று தாரகை கேட்டாள். அரியோ சிரித்தபடி

“இதோட முடியல, அந்த பாண்டியன் பசங்களை தூண்டி விட்டு அந்த பொண்ணோட அப்பாவை ராஜேஷ் மேல ஈவ் டீசிங்னு கேஸ் ஃபைல் பண்ண சொல்லிட்டான். போதாக்குறைக்கு இந்த ராஜேஷ் ப்ரண்ட்ஸ், அவன் சித்தப்பா அவர் கட்சி ஆட்களை அழைச்சிட்டு ஜஸ்ட் ஒரு லவ் ப்ரோபோஸலை ஒரு நாள்ல ஜாதிக்கலவரமா மாத்த பார்த்தாங்க. அதனால் பாண்டியன் வீட்ல உட்கார்ந்து பேசி, இரண்டு சைடும் ப்ராப்ளம் வராம முடிச்சோம்” என்றான் பெருமூச்சுடன்.

“சூப்பர்டா அரி! உன்னை மாதிரி ஒரு லாயர்தான் தேவை” என்று தாரகை அண்ணனைப் பெருமையுடன் நோக்க,

“ஹாஹா! நான் இன்னிக்குப் பெருசா ஒன்னும் செய்யல, எல்லாம் உன் ப்ரண்ட்தான்” என்றான் பெருஞ்சிரிப்புடன்.

“என் ப்ரண்டா யாருடா?” என்று தாரகை முகம் சுருக்கி யோசித்தாள்.

“இங்க பசங்க யாரும் ப்ரண்ட் இல்லையே, பொண்ணுங்க கூட..” என்று தங்கை யோசிக்க, அரிச்சந்திரன் கிண்டலாக சிரித்தான்.

“என்னடா?”

“பூமர் ப்ர்ண்ட்” என்றான் அரி சிரிப்பை அடக்கி.

“அவன் என் ப்ரண்டா?” என்று அண்ணன் தோளில் இரண்டு கையையும் வைத்து அடித்தாள்.

“இருடி” என்று தங்கை கையைப் பிடித்துத் தடுத்தவன்

“சீரியஸ்லி அவன் இன்னிக்குப் பேசலன்னா இன்னும் இந்த ப்ராப்ளம் முடிஞ்சிருக்காது” என்றான்.

“என்னடா அரி பூமர் என்ன புரட்சி செஞ்சாரு? ஆனா ஒன்னுடா, அந்த துரை எதையாவது செஞ்சுட்டு அப்புறம் மாலதி எங்க மைதிலி எங்கன்னு வந்து நிப்பான் பாத்துக்க” என்றதும்

“அவனுக்கு மரியாதைக் கொடுத்துப் பேசுனு முன்னாடியே சொல்லிட்டேன் தாரா!” என்று கண்டித்து சொன்ன அரிச்சந்திரன்

“ஜெயகாந்தன் ஒன்னு சொல்வார், மனுஷங்களை நல்லவிதமா புரிஞ்சிக்கிறதுல ஒரு சந்தோஷம் இருக்குனு, இன்னிக்கு அதை ஃபில் பண்றேன். துரை நல்ல மனுஷன்! அவங்க பெரியப்பா சகவாசத்தைக் கட் பண்ணினா ரொம்ப நல்ல மனுஷனாகிடுவான்!” என்றான் உறுதியாக.

“என்ன செஞ்சாருன்னு இப்படி பேசுற?” என்று தாரகை கடுப்பாகக் கேட்க, கால்களை நீட்டி உட்கார்ந்தவன் வானத்தைப் பார்த்தவண்ணம்

“அக்சுவலி அங்க இருந்த அத்தனை ஆளுங்களும், ஏன் அறிவு அப்பா கூட வந்துட்டார் எல்லாரும் எப்படி எங்க வீட்டுப்பொண்ணை, எங்க சாதிப்பொண்ணை லவ் பண்ணலாம்னு அதை சாதி வச்சே பேசினாங்க. துரை தான் நான் எதிர்ப்பார்க்காத நேரத்துல பாண்டியன்ட்ட ‘என்ன அண்ணா நீங்களே லவ் மேரேஜ் தானேன்னு?’ கேட்டான் பாரு. எனக்கு ஷாக்! அதைவிட அவன் பொறுமையா பேசினான். இது சின்ன விஷயம் நாளைக்கே நம்ம சொந்தக்கார பசங்க அவங்க வீட்டுப் பொண்ணுங்களை லவ் பண்ணலாம், கேஸ்லாம் கொடுத்தா பசங்க மனசுல வன்மம் தான் வளரும். இத்தோட விடலாம்னு ஒரே அட்வைஸ்” என்றதும் தாரகைக்கு ஆச்சரியம்.

“என்ன இருந்தாலும் பூமரால அட்வைஸ் பண்றதை நிறுத்த முடியாது” என்று தாரகை சிரித்தாலும்

“ஆனாலும் இது நான் எதிர்ப்பார்க்கல” என்றாள்.

“நானும் எதிர்ப்பார்க்கல, நானே அவங்கிட்ட பேசலாம் நினைச்சா அவனே வந்து பேசினான். படிக்கிற வயசுல என்ன காதல் வேண்டி இருக்குனு கேட்டான்.”

“அதானே காதல்னு சொன்னாலே காதை மூடிப்பாரே அவர்” என்று தாரா கிண்டல் செய்ய,

“இல்லை, அவன் எங்கிட்ட ‘காலேஜ் பசங்க இந்த வயசுல இப்படி இருக்கிறது சகஜம் தான், ஆனா பொண்ணுங்களுக்கு யார் வீட்டுப் பொண்ணா இருந்தாலும் படிக்கிற பிள்ளைங்களைத் தொந்தரவு செய்யக் கூடாதுனு’ சொன்னான். அவன் சொல்றது ரைட் தானே?அப்புறம் பசங்களைக் கூப்பிட்டு வார்ன் பண்ணினேன். படிச்சுட்டு அப்புறம் காதல் எல்லாம் செய்யலாம்னு ” என்றான் அரிச்சந்திரன்.

“பாண்டியன் கூட துரையை முறைச்சான், இந்த ரத்னவேல் அந்தாளும் அவன் ஆதாயம் தேடுறான் தவிர யாரும் பிரச்சனையைப் ப்ராக்டிகலா பார்த்து அதை சால்வ் பண்ண நினைக்கல” என்று அரி வருத்தமாக சொல்ல

“ரத்னவேல் கூட அப்படியா? அவர் என்னமோ நம்ம மக்களுக்காக பாடுபடுறேனு சொல்வாரு?” என்று தாரகை அதிசயமாகக் கேட்க

“அந்த காலத்துல நிறைய கட்சிகள் ஜாதியை ஒழிக்கிற Cause காக ஆரம்பிச்சாங்க, இப்போ காசுக்காக கட்சி. எல்லா ஜாதிக்கும் கட்சி இருக்கு, ஆனாலும் சமத்துவமில்லை ஏன்? இவங்க எல்லாம் கட்சி ஆரம்பிச்சு மக்களை உயர்த்துறாங்களா இல்லையே? எல்லாம் சுயநலம்” என்றான் சலிப்பாக.

“இதுல துரை மாதிரி ஆளுங்க எல்லாம் எதாவது ஒரு குருப்ல சேரனும்னு இருக்காங்க. அவனும் அறிவு மாதிரி வேற வெளியுலக பார்வை இருந்தா மாறிருப்பான். எப்படியோ பசங்க படிப்பு கெடாம இன்னிக்குப் ப்ராப்லம் சால்வ்ட். வா தாரா போகலாம், லேட் ஆச்சு” என்று தாராவிடம் சொல்லிவிட்டு உறங்கப்போனான் அரிச்சந்திரன்.

தாராவின் மனமோ ‘அந்த வெட் ஆனியன் இவ்வளவு விவரமா இந்த மேட்டரை சால்வ் பண்ணிட்டானே?’ என்று இன்னும் அதிர்ச்சியில் இருந்தது. அரிச்சந்திரன் தாரகையிடம் துரையைப் பற்றி பெருமையாகப் பேச, அவனோ பெரியப்பாவிடம் திட்டு வாங்கிகொண்டிருந்தான்.

“உன்னை யார்டா பாண்டியனை எல்லார் முன்னாடியும் கேள்வி கேட்க சொன்னது? அந்த பயலுவள இன்னிக்கு விட்டா நாளைக்கு நம்ம பொண்ணுங்க பின்னாடி சுத்த மாட்டானுங்களா?” என்று பன்னீர் அவனை அரை மணி நேரமாகக் கத்திக் கொண்டிருந்தார். பாண்டியன் பன்னீருக்கு அழைத்து துரையைப் பற்றி குறை சொல்லியிருந்தான்.

“என்ன பெரியப்பா? எல்லார் முன்னாடியும் என்னை கேள்வி கேட்கிறான் ராஜா? நான் அப்போ காதலிச்சு கல்யாணம் பண்ணினா, அதுக்குன்னு கண்ட சாதிக்காரன் நம்ம பொண்ணைக் கட்டலாமா?” என்று தூண்டிவிட்டிருந்தான். அவனுக்கு சாதி பலம் வேண்டும், அதனை வைத்துதான் அவனுக்குக் கட்சியில் பலம்! அதனை விட்டால் அவன் அரசியலே ஆட்டம் கண்டுவிடும். அதனால் உள்ளூர் பிரச்சனை அத்தனையிலும் தலையீட்டு ஆதாயம் பார்ப்பான்.

ராஜதுரை எதார்த்தவாதி, அவனுக்கு சூழ்ச்சிகள் தெரியாது, அரசியல் தெரியாது! தாரகை சொல்வது போல் அவன் தந்திரங்கள் தெரியாத தற்குறி!

“பெரியப்பா நம்ம அந்த பசங்க மேல பாண்டியண்ணா சொன்ன மாதிரி கேஸ் கொடுத்தா அது பெரிய பிரச்சனை ஆகும், காலேஜ்ல இதெல்லாம் சகஜம். சும்மா காதல்னு வயசுக்கோளாறுல சுத்துறவனை கேஸ் போட்டு உள்ள தள்ளினா பகைதான் வளரும்.”

“நீயே இவ்வளவு யோசிச்சா பாண்டியனுக்குத் தெரியாதா?” என்று பன்னீர் அப்போதும் துரையைத் திட்டினார்.

“அவருக்குத் தெரிஞ்சா ஏன் நமக்காக அன்னிக்கு அவர் பணம் கொடுக்கல? அவர் சொல்லித்தானே நாங்க தியேட்டர்ல பிரச்சனை பண்ணினோம்?” என்று அறிவு அவனிடம் கேட்ட கேள்வியை இன்று அறிவுடன் பெரியப்பாவைக் கேட்டான் ராஜதுரை.

பன்னீருக்கு பதில் சொல்ல முடியவில்லை. துரையும் அவரிடம் கோபமாகப் பேசியவன் அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.

✅ End of Episode 12
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 month ago

Very nice.

❤️ 1 more...
Radhi Reader 2 weeks ago

Nice 

Kavi Natarajan Reader 3 days ago

💞💞💞💞💞💞

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top