Episode 28

“என்னடா பெரியப்பா பெரிய ஆப்பா வச்சாரு போல?” துரை போனை எடுத்தவுடன் அறிவு கிண்டலாகக் கேட்க,

“பக்கத்துல இருந்திருந்தா பல்லைத் தட்டிருப்பேன் அறிவு. வாங்கிக் கட்டிக்காத” என்றான் எரிச்சலாக.

“பின்ன போயும் போயும் எங்கப்பாவை கூப்பிட்டுப் போயிருக்க? எங்கப்பா எத்தனை காதலை சேர்த்து வச்சிருக்கார்? அவெஞ்சர்ஸ் படத்துல அவ்வையார் நடிச்சாங்கனு சொன்னா கூட நம்பலாம், ஆனா உன் பெரியப்பா லவ் மேரேஜுக்கு ஓகே சொல்லுவார்னு எப்படிடா நினைச்ச? மைதிலிலாம் அதான் உஷாரா ஓடிட்டா” என்று அறிவு பேச பேச துரைக்கு டென்ஷன் கூடியது.

“இப்படியே பேசினா உன்னை விட்டுட்டு தேடமாட்டேன்டா , ஒரு மனுஷன் எந்த நிலைமையில இருக்கான் தெரியாம விளையாடுற நீ? வை டா போனை” என்று திட்டி போனை வைத்துவிட்டான், அடுத்து தாரகையிடமிருந்து அழைப்பு. துரை எடுக்கவில்லை.

எப்படியும் கமலா சித்தி மூலமாக தாரகைக்கு வீட்டில் நடந்தது எல்லாம் தெரியும். எதாவது பேசுவாள், வீணாக சண்டை என்று நினைத்தவன் கண்மூடி அமர்ந்திருக்க, வாட்ஸப்பில் வாய்ஸ் நோட் போட்டிருந்தாள்.

“எல்லாம் சரியாகிடும், நோ டென்ஷன்” என்று ஒரு சிரிக்கும் ஸ்மைலியுடன் அனுப்பியிருக்க அந்த குரல் அவனை தேட வைத்தது!

சொல்லவே முடியாத, சொல்லுக்குள் அடங்காத ஒரு பாசம் நேசம் தாரகையின் மீது துரைக்கு எப்போதோ ஏதோவொரு கணத்தில் வந்திருந்தது. இப்போதும் பேச வேண்டாம் என்ற நினைத்தாலும், அந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான அவள் குரலைக் கேட்ட பின் பேசாமல் இருக்கமுடியவில்லை.

அடங்காத ஆவலில் அலைபாயும் காதலில் மீண்டும் தாரகைக்குப் போன் செய்தான்.

“அம்மாடி! சொல்லு?” என்று இவன் ஆரம்பிக்க

“உனக்கு இப்போ பேச வேண்டாம்னா அப்புறம் கூட கூப்பிடு, நான் கோச்சுக்க மாட்டேன்” என்று தாரகை சொல்ல ராஜதுரைக்கு அவள் புரிதல் சந்தோஷம் கொடுத்தது. அதனுடன் பெரியப்பாவின் பேச்சு சங்கடம் தந்தது. இவளுக்காக, இவள் மீதான என் அன்புக்கு ஒன்றும் செய்யாமல் இருக்கிறேனே என்ற குற்றவுணர்வு அதிகமானது.

அதில் குரல் கமற, “எனக்கு எப்பவும் நீ வேணும், உன் குரல் கேட்கணும் போல இருந்துச்சு அதான்” என்றதும் தாரகை முகத்தில் புன்னகை.

“பெரிய ஜானகிம்மா வாய்ஸ் எனக்கு. குரல் கேட்கணுமா?” என்று கிண்டலாய்ப் பேச

“எனக்கு உன்னோட குரல்தான் பெஸ்ட்!” என்றவன் “எங்க இருக்க நீ?” என்று கேட்டான்.

“தியேட்டர்லதான், அக்கவுண்ட்ஸ் பார்த்துட்டு இருக்கேன்”

“ம்ம், கமலா சித்தி ஒன்னும் சொல்லலயா? நார்மலா பேசுற?”

துரை கேட்கவும், “அத்தையை நான் பார்க்கவே இல்லையே, ஏன் என்னாச்சு?” என்றாள் தாரகை.

“அப்புறம் கால் பண்ணின, மெசெஜ் அனுப்பியிருக்க?” புரியாமல் துரை கேட்க,

“அதுவா? அரி காலையில அன்பு மாமா கிட்ட பேசினான். அவர் எப்படியும் உங்க வீட்டுக்கு வந்து பேசியிருப்பார், உன் பெரியப்பா பெரிய பூமர் மானம் போச்சு மருவாதை போச்சுனு கத்தியிருப்பார். நீ ஃபீல் ஆகி உட்கார்ந்திருப்ப, இல்லைன்னா என் போன்கால் எடுத்திருப்பனு தோணீச்சு. அதான் மெசெஜ் பண்ணினேன்” என்று தாரகை சொல்ல

“பெரியப்பா எனக்கு உன்னை பிடிக்கும்ன்ற ஆங்கிள்’ல யோசிக்கவே மாட்டேங்கிறார். அம்மாவுக்கும் அவருக்கும் சண்டை, தலைவலிக்குது எனக்கு” என்று புலம்ப, தாரகை வாய் விட்டு சத்தமாக சிரித்தாள்.

“என்னடி சிரிப்பு?” கடுப்பில் பல்லைக் கடித்தான்.

“இல்லை, உன் பெரியப்பாவுக்கே தெரிஞ்சிருக்கு நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேனு. அதை நினைச்சேனா, சிரிப்பு வந்துடுச்சு” என்றாள் ராகமாக.

“அடியேய்! இப்பதான் உன் அத்தை மவன் என்னை வெறுப்பேத்தினான், நீயும் வம்பிழுக்காத!” என்று அதட்ட

“அக்சுவலி எனக்கு நிறைய அத்தைங்க, எந்த அத்தை மவன்?” என்று தாரகை கேட்க

“அந்த அறிவுக்கெட்ட அறிவு!” என்றான்.

“ச்ச, பாவம் அறிவு மாமா” என்று தாரகை சொல்ல துரைக்குப் பொறாமையாக இருந்தது.

“போதும் போதும்!” என்றவனின் குரலின் உணர்வைப் படித்த தாரகை, “என்ன இப்போ? என்னமோ வருஷக்கணக்கா உருகி காதலிச்சவன் மாதிரி உருட்டுற?” என்று கேட்கவும்,

தலையை பெருவிரல் கொண்டு தேய்த்தவன், “ஏட்டி! காதலுக்கு வருஷக்கணக்கெல்லாம் இருக்கா என்ன?” என்று பதிலுக்குக் கேட்டான்.

“துரை சார்! வயல்ல என்ன பண்ணியிருக்கீங்க?” தாரகை கேட்க

“என்னடி சம்பந்தமில்லாம கேட்குற? நடவு நட்டிருக்கோம்” என்றான்.

“பார்த்து, நீ காதல் பத்தி பேசுற பேச்சுல புயல் மழை எல்லாம் அடிச்சிட்டு ஊத்தப்போகுது” என்று குறும்பாக சொல்லி சிரித்தாள்.

“உன்னை?! போடி, போனை வை” என்று துரை கோபத்தில் சொல்ல,

“என்ன இப்போ? உன் பெரியப்பா உடனே எப்படி ஒத்துப்பாரு? காலையில சொல்லி அவர் உடனே ஒத்துக்கணும்னு நினைக்கிறது உனக்கே ஓவரா இல்லை. இப்படி பேசுறவங்ககிட்ட எல்லாம் எரிஞ்சு விழாம பொறுமையா பேச வேண்டியவங்கட்ட பேசு”

“அதை விட்டு இப்படி எங்கே செல்லும் பாதைன்னு தலையில கை வச்சு உட்காராத!” என்று அழுத்தமாக சொல்ல, துரையின் முகத்தில் புது வெளிச்சம். ஒரு புன்னகையுடன் தலையில் இருந்த கையை எடுத்தான்.

“என்ன புரிஞ்சதா? அப்படியும் உன் பெரியப்பா ஒத்துக்கலன்னா..” என்றவளை முடிக்கவிடாது

“ஒத்துக்கலன்னா நீ சொன்னதை செஞ்சிடு” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“என்ன சொன்னேன்?” தாரகை யோசிக்க, பின்புதான் இரவில் பேசியது நினைவு வர

“ராஸ்கல், டேய்!” என்ற தாரகைக்கு வெட்கத்தோடு ஒரு குறுஞ்சிரிப்பு. துரையோ வாய்விட்டே சிரித்தான்.

“என்ன இவன் தனியா சிரிக்கிறான்” என்று அருணா வந்து மகனை முறைத்துவிட்டு சென்றதை துரை பார்க்கவில்லை.

“அப்பாடா! சிரிச்சிட்டியா? நீ டென்சன் ஆகாம இரு. எனக்கு அது போதும். வேலை இருக்கு, அப்புறம் கூப்பிடுறேன்” என்று தாரகை போனை வைக்க, அதுவரை இதயத்தை எல்லாம் இறுக்கிப்பிடித்திருந்த உணர்வு நீங்கி ஒரு சுதந்திர உணர்வு.

தன்னை புரிந்துகொள்ளும் தாரகையை அவ்வளவு பிடித்தது. தன்னை விட மிகவும் புரிதலுடன் இருக்கிறாள், எதார்த்தத்தை யோசிக்கிறாள் என்று தோன்றியது. சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை ஒரே நேரத்தில் இழந்தவள் அல்லவா? இழப்பு வலியுடன் வலிமையும் சேர்த்து தந்திருக்கிறது என்று நினைத்தான்.

பனியனும் லுங்கியும் அணிந்திருந்தால் மாடிக்கு சென்று உடை மாற்றிவிட்டு வீட்டுக்குள் போக, அருணா மகனிடம்

“என்னடா அப்படி ஒரு சிரிப்பு உனக்கு? உனக்காக நான் உன் பெரியப்பார்ட்ட பேசுறேன். அப்படியே உலுக்கையாட்டம் நிக்கிற?” என்றார் எரிச்சலாக.

“உன் மருமக கிட்டதான் பேசினேன்” என்றான் விரிந்த புன்னகையுடன்.

“மருமகளா? டேய் ராஜா? நிசமாவே உனக்கு அந்த தியேட்டர் விட்டு புள்ளையை பிடிச்சிருக்கா?” என்று சரோஜா ஆச்சரியமாகக் கேட்க,

“பின்ன, நான் ஏன் கா அவ்வளவு பேசுறேன். இவனுக்கு அந்த பொண்ண பிடிக்கும். ஆனா இவங்க பெரியப்பா கிட்ட சொல்லாம நடிக்கிறான்” என்றார் முறைப்புடன்.

“அப்போ அந்த பாமணி ஜோசியன் சொன்னது உண்மைதானா?” என்று சரோஜா வியப்பாகக் கேட்க,

துரையோ, “அட போ பெரியம்மா” என்றவன் அவர்கள் கூப்பிட கூப்பிட நிற்காமல் சென்றுவிட்டான்.

ராஜதுரை நேரே பெரியப்பாவை பார்க்க சென்றான். அவர் அந்த நேரத்தில் ஆற்றங்கரை பக்கமிருக்கும் டீ கடையில்தான் இருப்பார். துரையைப் பார்த்து,

“என்னடா? வீட்ல சாப்பிடமா இங்க வந்திருக்க?” பன்னீர் மகனை கேட்க

“உங்ககிட்ட பேசணும்னுதான் பெரியப்பா” என்றதும் டீ கடையில் வைத்து பேச வேண்டாம் என்று நினைத்தவர் “வாடா, அய்யனார் கோவிலுக்குப் போவோம்” என்று சொல்ல, துரையும் அவரை வண்டியில் ஏற்றி அய்யனார் கோவில் சென்றான்.

கோவிலுக்கு சென்றதும் குதிரை பக்கத்தில் இருக்கும் இடத்தில் பன்னீர் துண்டை உதறிப்போட்டு உட்கார, துரை அவருக்கு எதிரே இருந்த படியில் உட்கார்ந்தான். காற்றில் அங்கிருந்த பூவரச மரத்தின் இலைகள் ஆடியது. அய்யனாரைப் பார்த்த துரை மீண்டும் பெரியப்பாவைப் பார்த்தான்.

“என்னடா?” பன்னீர் கேட்க

அவரை நேராகப் பார்த்தவன், “பெரியப்பா! எனக்கு அப்பா இல்லைன்றது இப்ப வரைக்கும் வருத்தம், ஏக்கம் எல்லாம் இருக்கு. ஆனா அப்பாவை விட உங்க மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு” என்று ஆரம்பிக்க, பன்னீர் சிரித்தவர்

“அது எனக்குத் தெரியும்டா” என்றார். கூடவே தம்பியின் நினைவில் கண்கலங்கியது.

“இந்த சாமி எனக்கு அப்பறம் பொறந்தவனை எனக்கு முன்னாடி கொண்டு போச்சு.” என்று துண்டை எடுத்து கண்ணைத் துடைத்தவர்,

“இப்போ என்னடா சேதி? அதை சொல்லு?” என்று துரையைக் கேட்க

“அந்த பொண்ணு தாரகையை எனக்கு ரொம்ப பிடிக்கும் பெரியப்பா, நீங்க என்னதான் கத்தினாலும் உங்களுக்கு பெரியம்மாவை எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும், உங்களுக்கு பெரியம்மா எப்படியோ எனக்கு அவ அப்படித்தான்” என்றான் துரை தெளிவாக.

அந்த வார்த்தை பன்னீரை அசைத்தது! அதிர்ச்சியடைய வைத்தது!

‘எனக்கு என் மனைவி போலவா?, மனைவியாக நினைக்கும் அளவுக்கு அந்த புள்ளையை நினைக்கிறானா?” என்று அவருக்கு சில நிமிடங்கள் பேச்சு வரவில்லை.

அந்த அமைதியை எதிர்ப்பார்த்த துரையும் பேசாமல் இருந்தான்.

“அந்த புள்ளையை எப்படி ராஜா?” என்று பன்னீர் கேட்க

“அவ ரொம்ப நல்ல பொண்ணு பெரியப்பா” என்று துரை பேச, பன்னீர் அவனிடம்

“நீயும் அந்த ஓடுகாலி மாதிரி செஞ்சு என் மானத்தை வாங்க வேண்டியதுதானே? அதுவும் அந்த வக்கீல் பயதான் எல்லாத்துக்கும் காரணம் தெரிஞ்சும் நீ அந்த பொண்ணை கட்டிப்பேன்னு நிக்குற? காசு பணம் இருந்தா என்ன ஆளுன்றது எல்லாம் கணக்கு இல்லையா?” என்று கோபம் கொண்டார்.

துரை பெரியப்பாவிடம் மனதை மட்டுமே பேசினான். மற்ற பேச்சை தவிர்த்தான்.

“நான் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன் பெரியப்பா, அப்பா இருந்திருந்தாலும் நான் உங்க சம்மதம் கேட்டுருப்பேன். உங்களை கஷ்டப்படுத்தி என்னோட கல்யாணம் வேண்டாம்” என்று சொல்ல பன்னீருக்கு ராஜதுரை தன்னை மதித்து நடப்பதில் சந்தோஷம் இருந்தது.

அதற்காக தாரகையை மருமகளாக்கிக் கொள்ள மனம் வரவில்லை. பதில் பேசாது போய்விட்டார்.

பத்து நாட்கள் சென்றுவிட துரையும் தாரகையும் இயல்பாக பேசிக்கொண்டனர், திருமணம் பற்றிய பேச்சுகள் மட்டும் இல்லை. ராமசாமி மட்டும் பேத்தியின் திருமணத்தை சீக்கிரம் பார்க்க ஆவல் கொண்டார். துரை வீட்டில் அவன் திருமணம் பற்றிய பேச்சை யாரும் எடுக்கவில்லை. அருணாவிடம் துரை பெரியப்பாவிடம் பேசிவிட்டேன், அவராக பேசட்டும் என்று சொல்லியிருக்க அவரும் பேசவில்லை.

இடையே அன்பு செல்வன் மட்டும் பன்னீரிடம் பேசிவிட்டு போனார்.

அன்று தாரகை திரையரங்கில் இருந்தாள். அரிச்சந்திரன் வீட்டில் இருந்தான், அதனால் மதிய உணவை அண்ணனுடன் சாப்பிடலாம் என்று நினைத்தவள் மேனேஜர் புவியை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அவள் லேப்டாப்பை எடுத்து வைத்து நிமிர, அறைக்கதவை வேகமாக திறந்து கொண்டு ராஜதுரை வந்தான்.

அந்த சத்தம் கேட்டு தாரகை மேஜையை விட்டு எட்டி பார்க்க, அவள் அருகே சென்றவன் சட்டென்று அவளை தூக்கி சுற்றினான்.

“ஏய்! அய்யோ! விடு. யோவ் பூமர்!” என்று கத்த

“நம்ம கல்யாணத்துக்கு பெரியப்பா ஒத்துக்கிட்டார் டி” என்று முகமெல்லாம் பூரித்திருக்க, துரை சொல்ல அவன் சிரிப்பு தொற்றினாலும்

“அப்போ ப்ளான் ஏ தானே? நீ என்ன விட்டா ப்ளான் பியை செயல்படுத்திடுவ போல?. விடு என்னை” என்று அவன் தோள் பிடித்து சொல்ல,

“நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று துரை தாராவின் கண்பார்த்து கேட்டான்.

“நீ எட்டாவது வானத்தோட பத்தாவது மாடியில இருக்கன்னு எனக்குத் தெரியுது. அப்புறம் வாயெல்லாம் பல்லா வேற இருக்கு. ஆனா என்னை இறக்கி விடு” என்று மீண்டும் தாரகை சொல்ல, துரை இருந்த சந்தோஷத்தில்

“முடியாதுடி!” என்று இன்னும் உயரே தூக்கினான்.

“கலாச்சார காவலாளி ராசதுரை! நீயா இது?” தாரகை அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்க, அரிச்சந்திரன் தங்கையை அழைக்க வந்தவன் இதனைப் பார்த்துவிட தாரகையை முறைத்தபடி வெளியே சென்றுவிட்டான்.

“கதவ தட்டாம வந்துட்டு என்னை முறைக்கிறான்” என்று தாரகை முணுமுணுக்க, அரிச்சந்திரனைப் பார்க்கவும் அப்படியே தாரகையை இறக்கிய ராஜதுரை

“அய்யோ! உன் அண்ணன் என்ன நினைப்பான்?” என்றபடி கூச்ச உணர்வில் நாற்காலியில் உட்கார்ந்தான்.

“கேட்டு சொல்லவா?”

“போடி”

“விடு விடு சொன்னேன், கேட்காம இப்போ என்ன ஃபீலிங்கு” என்ற தாரா ” என் அண்ணன் மேல சாருக்கு இவ்வளவு பயமா?” என்று கேட்டாள்.

“பயமில்லை, இது மரியாதை! நான் ஒரு அண்ணனா என்ன எதிர்ப்பார்ப்பேனோ அதைத்தான் அவனுக்கு கொடுக்கணும்” என்ற துரையே அடுத்த நாள் அரிச்சந்திரனிடம் சண்டையிடுவான் என்று அவனே எதிர்ப்பார்க்கவில்லை.

✅ End of Episode 28
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 3 weeks ago

Nice 

❤️ 1 more...
Radhi Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top