Episode 8

ஆவல் 8  

சுமித்ரா கணவனுடன் சென்ற பின் ராஜதுரைக்கு மனதில் நிம்மதி. அக்காவை அவன் பார்த்துக்கொள்வான் என்றாலும் கூட, அவன் செய்கையை வீட்டினரே ஏற்காமல் இருக்க, இன்னும் பிரச்சனையாகிவிடுமோ என்ற பயம் மனதில் இருக்கவே செய்தது. இப்போது சுமித்ரா சந்தோஷமாக சென்று விட, துரைக்கும் சந்தோஷம்.

ஹாலில் டிவியை ஆன் செய்துவிட்டு அவன் அங்கிருக்கும் மர சோஃபாவில் உட்கார்ந்தான். சரோஜாவும் அருணாவும் இரவு உணவுக்கான வேலையில் இருந்தனர். சரோஜா தேங்காய்த் துருவிக்கொண்டிருக்க, அவரைப் பார்த்த துரை

“என்ன பெரியம்மா? இப்ப சந்தோஷமா? அன்னிக்கு எல்லாரும் என்னைப் பேசினீங்க?” என்று கேட்டான்.

“ஏதோ மாப்பிள்ளை நல்ல மாதிரின்றதால சமாதானமா போயிடுச்சு, இருந்தாலும் நீ இந்த வேலையெல்லாம் இனி வைச்சுக்காத!” என்று மகனிடம் கண்டிப்பாக சொன்னார் அருணா.

“நல்ல மாதிரி இருக்கனும்னுதான் அக்காவை அவருக்குக் கட்டி வைச்சீங்க, உண்மையை சொல்லனும்னா எல்லாரை விடவும் அக்காவை நல்லா பார்த்துக்கிற பொறுப்பு அவருக்கு இருக்கு. அப்பா இருந்தவரைக்கும் உன்னை அடிச்சு நான் பார்த்ததே இல்லை, ஏன் பெரியப்பா கூட பெரியம்மாவை அதட்டுவாரே ஒழிய கை நீட்டினது இல்ல”

துரை இப்படி சொல்ல சரோஜா உடனே “உங்கப்பா வேணும்னா உன் அம்மாவை அடிக்காம இருந்திருக்கலாம், உன் பெரியப்பாரு  கல்யாணம் ஆனா புதுசுல எல்லாம் கை நீட்டினாருதான். அவருக்கு கை ரொம்ப அழுத்தமும் கூட, அடிச்சு கன்னம் வீங்கி வெளியே போனா அவருக்கு அவமானம்னு அடிக்கிறதை விட்டார். எல்லாம் கோவம் என்ன செய்ய?” என்றார் சலிப்பாக.

“இவன் கூட இவங்கக்கானதும் போய் மாப்பிள்ளையைக் கேட்டான், இதே இவங்க பெரியப்பான்னா கேட்பானா க்கா?” அருணா கிண்டலாக மகனைப் பார்த்தபடி சொல்ல,

“ஏன்? பெரியப்பா முக்கியம்னா பெரியம்மா முக்கியமில்லையா? உன்னைப் பெரியப்பா பேசினா எங்கிட்ட சொல்லு பெரியம்மா நான் கேட்கிறேன். அக்காவுக்குத் தம்பின்னா உனக்கு புள்ளை இல்லையா  நான்?” என்றான் சரோஜாவிடம்.

“பார்க்கிறோம் பார்க்கிறோம்!” என்றார் அருணா.

துரை அம்மாவை முறைக்க, “சுமிக்காச்சும் இவன் இருக்கான் கேட்க, அந்த சின்னது எப்படி இருக்கோ, எங்க இருக்கோ?” என்றவரின் கண்களில் கண்ணீர்.

அருணா உடனே, “நல்லா இருப்பா கா” என்று சமாதானம் சொல்ல,

“சின்னதுன்னு பார்த்து பார்த்து வளர்த்தோமே, எங்க எப்படி கஷ்டப்படுறாளோ? கட்டுனவன் எப்படி பார்க்கிறானோ?” என்றார் அழுகையுடன். பெரியம்மாவின் அழுகை பார்த்தவனுக்கு மைதிலி மீது கோபம்.

“அப்படியென்ன நம்ம அவளை கொடுமை செஞ்சிட்டோம்? அவளுக்கு  நம்ம நல்லது செய்ய மாட்டோமா? நீதான் பெரியம்மா அவளை நினைச்சு அழற, அவ இத்தனை மாசமாகுதே ஒரு போனாச்சும் பண்ணினாளா நமக்கு? அழறது நிறுத்து!” என்று அதட்டினான்.

“டேய்! சும்மா இருடா” என்ற அருணா

“அவ போன் செஞ்சா நீயும் உங்க பெரியப்பாவும் சும்மா விடுவீங்களா? உங்களுக்குப் பொண்ணு போனது கவலையில்ல, உங்களை மீறி போனான்னு தான் கோவம்” என்றார்.

“பெத்தவளுக்குத்தான் கஷ்டம் தெரியும்!” என்று அருணா சொல்ல, சரோஜாவோ இன்னும் அழுதார்.

“அவளைப் பத்தி பேசக் கூட இவன் விட மாட்டேங்கிறான். அவ போன் பண்ணினா கூட பெரியப்பன் கிட்ட சொல்லிடுவான். என் புள்ளையை நினைச்சு அழக் கூட இவனுங்க விட மாட்டானுங்க! அவ எப்படி இருக்கான்னு தெரியாம எனக்குத் தூக்கம் கூட இல்லை” என்று அழுதார்.

மைதிலி மீது கோபமிருந்தாலும் பெரியம்மாவைப் பார்க்க மனதுக்கு வருத்தமாக இருந்தது. இந்த மைதிலி இப்படி செய்யாது இருந்திருந்தால் வீட்டில் பிரச்சனை இல்லையே என்ற எண்ணமே அவனுக்கு.

இரண்டு நாட்கள் பொறுத்தவன் பெரியம்மாவுக்காக தாரகையிடம் பேச முடிவெடுத்தான். அரிச்சந்திரனை வில்லங்கம் பிடித்தவன் என்று அறிவு சொல்லியிருக்க, அவனிடம் பேச விருப்பமில்லை. தாரகையை அவள் திரையரங்கில் சந்தித்தான். தியேட்டர் பார்க்க, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி இருந்தது.

‘இவ எங்க வீட்டு விஷயத்துல தலையீடலன்னா நான் ஏன் அப்படி செய்ய போறேன்?’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

தாரகையின் மேனேஜர் புவியரசனை வந்து “உள்ள போ துரை, ஆனா தாரா கிட்ட சண்டை போடக்கூடாது! அரிக்குத் தெரிஞ்சா என்னைத் தொலைச்சிடுவான்” என்றார்.

“ரொம்ப பண்ணாத மாமா, நான் பார்த்துக்கிறேன்” என்றவன் தாரகையின் அறைக்குள் செல்ல,

“உட்காருங்க” என்றாள் தாரகை. இன்று தாரகையைப் பார்க்க புடவையில் இருந்தாள், தலையில் இன்னும் கட்டு இருந்தது.

“தையல் எப்போ பிரிக்கறது?” என்று அவள் தலையைப் பார்த்துக் கேட்க,

தாரகை அவளின் அந்த பெரிய இருக்கையில் தோரணையாக அமர்ந்தவள், கையைக் கோர்த்தபடி மேஜை மீது வைத்து, கிண்டல் பாவனையில்

“இது கேட்கவா என்னைப் பார்க்க வந்த?” என்றாள். அவளின் மரியாதையற்ற பாவனையில் இவனுக்கு உள்ளே பயங்கர கோபம். ஆனாலும் மரியாதையைக் கேட்டா வாங்க முடியும் என்று நினைத்தவன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்.

“இது கேட்க நான் வரல, ஆனா கேட்டா ஒன்னும் தப்பில்லை. இப்படி பேசத்தான் உங்க வீட்ல சொல்லிக்கொடுத்தாங்களா?” என்றவனின் குரலில் கோபம் தெரிந்தது.

“அன்னிக்கு அறிவு மாமாவை விட்டு என்னை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போக சொன்ன ஆள்கிட்ட இப்படித்தான் எனக்கு பேசுவேன்!” என்றவளிடம் அவனுக்கு எதுவும் பேச பிடிக்கவில்லை. வந்த கோபத்திற்கு இவளிடம் பேசாது போக எண்ணம் எழுந்தாலும் பெரியம்மாவுக்காகப் பார்த்தான்.

“இங்க பாரு தாரக! நீ என் தங்கச்சி விஷயத்துல தலையிட்ட, நான் தியேட்டர் டேமேஜ் பண்ணினேன். அது முடிஞ்சு போச்சு, அதை மனசுல வைச்சிட்டு நீ சும்மா என்னை முறைச்சிட்டு திரியாத!” என்று சொன்னவன்

“இப்போ நான் வந்திருக்கிறது என் பெரியம்மாவுக்காக! மைதிலி அம்மா! அவங்க அவளை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க, அவளைப் பார்க்கனும் இல்லை பேசனும்னு நினைக்கிறாங்க. உனக்கும் உன் அண்ணனுக்கும்தான் அவ எங்க இருக்கா தெரியும். என்னை எல்லாம் நினைக்காம என் பெரியம்மாக்காக நீ மைதிலியை அவங்களோட பேச வை”

ராஜதுரை பேசுவதை தாரகை பொறுமையாக கேட்டாள். அவன் சொல்வது புரிந்தாலும், ஏனோ ஏற்கமுடியவில்லை. அவர்களின் ஜாதிப்பற்று அவள் அறிந்ததுதானே? நிச்சயம் அரியும் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று தெரியும்.

“உங்களை எல்லாம் நம்பி என்னால எதுவும் செய்ய முடியாது” என்றவள் ராஜதுரை இடையில் பேச வர, கை காட்டி நிறுத்தினாள்.

“ஆனாலும் மைதிலி மேல எனக்கு அக்கறை இருக்கு, நான் அவ கிட்ட அறிவு மாமா சொன்னதும் பேசினேன். அவ நல்லா இருக்கா” என்றாள் தாரகையும் தன்மையாக.

“உன் பேச்சை எல்லாம் என்னால நம்ப முடியாது” என்றான் துரையும் அவளைப் போல் காட்டமாக.

‘என்ன?’ என்பது போல் தாரகை அவனை முறைக்க,

“உன்னோட கார்ல ஒரு நாள் நான் வந்தேன் தானே? அப்பவே உனக்கு மைதிலி லவ் பண்றது தெரிஞ்சதுதானே? எங்கிட்ட இல்லை அறிவு கிட்ட சொன்னியா நீ? எல்லாம் சேர்ந்துதானே திருட்டு வேலைப் பார்த்தீங்க!” என்று குற்றம் சாட்டினான்.

“இப்பவும் அந்த மோகனுக்குத்தான் நீயும் உன் அண்ணனும் வக்காளத்து வாங்குவீங்க, அதனால்  நீ மைதிலியை அம்மா கூட பேச சொல்லு” என்றான்.

தாரகை உறவுகளை மதிப்பவள் என்று அறிவின் மூலம் அறிந்தவன் ‘அறிவை’ பயன்படுத்தினான். இவனுக்கு மைதிலி விஷயத்தில் உதவ இவளை தவிர ஆளில்லை என்று புரிந்தவன் காரியத்தில் கண்ணாக இருந்தான்.

தாரகையின் அறையில் இருந்த அவள் அம்மா அப்பா படத்தைப் பார்த்தவன்

“என் பெரியம்மா வயசானவங்க, மைதிலி எங்க எல்லாருக்கும் செல்லம்! அவ இப்படி போனது அதிர்ச்சிதானே? அவளை நினைச்சு அவங்க அழறாங்க. புரிஞ்சிக்கோ! உன் அம்மா இப்போ இருந்திருந்த அவங்க உனக்கு எடுத்து சொல்லியிருப்பாங்க” என்று அவன் பேச, அம்மா அப்பாவின் நினைவில் அவளுக்கு மனம் கனத்தது.

தாரகை அமைதியாக இருக்க வழி கிடைத்த திருப்தி அவனுக்கு. பொறுமையாகப் பேசினால் அவள் கேட்பாள் என்று புரிந்தது.

“அவங்க ஒரு முறை அவகிட்ட பேசிட்டா திருப்தியா இருப்பாங்க” என்று சரோஜாவை மையப்படுத்தி பேசினான்.

தாரகை யோசித்தவள் “உங்க பெரியம்மாவுக்குப் பொண்ணூ  மேல பாசம் இருக்கலாம். பட் உன்னையும் உன் பெரியப்பாவையும் நான் நம்ப மாட்டேன்!” என்று தாரகை அழுத்தமாக சொல்ல

‘இவ பொறுமையா இதான் யோசிச்சாளா?’ என்று நொந்துபோனான்.

“உனக்கு மைதிலி மேல கோவமில்லைனு சத்தியம் செஞ்சு சொல்லு!” துரையிடம் தாரா கேட்க,

“கோவம்தான்!” என்று யோசிக்காது உடனே பதில் சொன்னவனைக் கண்டு ஆச்சரியமே அணங்கிற்கு(பெண்).

“ஆனா அதுக்காக அவ என் தங்கச்சி இல்லைனு ஆகிடுமா?  நீ உங்க அண்ணனுக்குப் பிடிக்காததை, அவனை மீறி எதாவது செஞ்சுட்டா கோவப்படுவான் தானே? அதுக்காக உன்னை வெறுப்பானா?” என்று வேகமாக துரை கேட்க

“ஹலோ! உன்னையும் உன் தங்கச்சி மாதிரி நானும் என் அண்ணனும் இல்லை!  உனக்குப் பயந்து அவ லவ் பண்றது கூட சொல்லல உன் தங்கச்சி, நான் அப்படி இல்லை. என் அண்ணா நான் என்ன செஞ்சாலும் சப்போர்ட் பண்ணுவான்” என்றாள் கர்வமாக.

“இப்ப நீ என்னதான் சொல்ல வர?” என்று பொறுமை இழந்து துரை கேட்டான்.

தாரகையினால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. கோபமில்லையா என்ற கேள்விக்கு அவன் பொய் சொல்லவில்லையே, எதுவானாலும் அவன் இதுவரை நேராகத்தான் செய்திருக்கிறான். தியேட்டர் பிரச்சனையின் போது கூட அவன் செய்யவில்லை என்று பொய் சொல்லவில்லை. அவன் செய்வது சரியோ தவறோ ஒளித்து மறைத்து செய்யாது அவன் செயலில் ‘நேர்மை’ இருக்கத்தான் செய்கிறது என்று அவனைப் பற்றிய எண்ணவோட்டமே தாரகையின் மனதில்.

துரையோ அவள் நினைக்கிறாள் என்று தெரியாது அவளையே பார்த்தான். இப்போது அவன் பார்வை அவள் உடையில் பதிய, புடவை அணிந்திருந்தாள். அதில் அவள் தோற்றமே அழகாய் இருந்தது. இன்னும் தோரணையோடு பெரிய பெண்ணாக தெரிந்தாள். இவன் பார்வை பாவையிடம் தேங்கி நிற்க, அவன் முன் சொடக்கிட்டவள்

“உன் பெரியப்பா பொண்ணை மிஸ் பண்ணலையா?” என்று கேட்க

துரையால் பதில் சொல்லமுடியவில்லை. பெரியப்பா நிச்சயம் மைதிலியை ஏற்கமாட்டார். அதுவும் இப்போது உறுதியாகவே இல்லை.

“அவருக்கு இதெல்லாம் என்னைக்கும் பிடிக்காது” என்றான் அதற்கும் உண்மையாகவே.

“அப்போ துரைக்கு மட்டும் ஞானம் வந்துடுச்சா?”   நக்கலாக தாரகைக் கேட்க,

“எனக்கு மைதிலி செஞ்சது ஏத்துக்க முடியல. ஆனா அவ நல்லாயிருக்கனும்னு தான் நினைக்கிறேன். உனக்கு என்னை புரிய வைக்கனும்னு அவசியமில்லை. என் பெரியப்பாவுக்குத் தெரியாமதான் இதை நான் செய்றேன். என் பெரியம்மாவை நான் அனுப்பி வைக்கிறேன், அவங்க பொண்ணுகிட்ட பேச வை” என்றபடி அவன் எழ, தாரகைக்கு அவன் பேச்சில் இருந்த உண்மை புலப்பட்டது.

மைதிலிக்கும் அவள் அம்மாவிடம் பேச ஆவல் இருக்கும்தானே? என்று அவளுக்காக யோசித்தது அகம்.

“ஓகே! நாளைக்கு ஈவினிங் ஷோ ஆரம்பிச்சதும் தியேட்டருக்கு இல்லை வீட்..” என்று தாரகை சொல்ல, துரைக்கு சந்தோஷம்.

உடனே, ” வீடு வேண்டாம்! தியேட்டரே வரோம்” என்றதும் தாரகைக்குக் கோபம்.

‘ஓ! இவன் உயர்ஜாதி, நாங்கள் இவனுக்குக் கீழ் என்ற எண்ணமா?’ என்பது தாரகையின் எண்ணம்.   ‘நீ என்ன பெரிய இவனா?’ என்ற ஆத்திரம் அவளிடம்.

“தியேட்டர் இல்லை வீடு வாங்க” என்றாள் அழுத்தமாக.

“இல்லை தாரக நாங்க தியேட்டர் வரோம், வீட்டுக்கெல்லாம் எதுக்கு?” என்று துரை சொல்ல, அழுத்தமாய் அவன் ஜாதி பார்க்கிறான் என்ற எண்ணம் அகத்தில் வந்தமர்ந்தது.

“ஏன் துரை சார் எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டாரோ?” என்ற கேள்வியில்  நக்கல் நிறைந்திருந்தது.

அதுவும் அவளை மருத்துவமனை கூட அழைத்து செல்லாதது வெகுவாக வெகுண்டெழச் செய்தது. அவள் அம்மா வேறு ஜாதியென்றாலும், அவர்களை யாரும் குறைவாக நடத்தியதில்லை.

எல்லா ஜாதியிலும் ‘பணம்’ என்ற ஒன்று இருந்தால் போதுமே! இங்கு அடிப்படையாக மனிதரோடு உறவு கொள்ள, உறவினை கொல்ல பணம் என்பதே ப்ரதானமாகிறது!

ராமசாமியின் பேத்தி பேரன் என்பதால் அவர்களை யாரும் குறைவாகப் பேசிவிட முடியாது.  தாங்கள் நன்றாகவே வாழ்ந்தாலும் தன் தாய் வழி உறவுகள் கல்வியில், வேலையில் முன்னேறினாலும் அவர்களை ஜாதியை வைத்து கீழிறக்குவதைப் பார்த்திருக்கிறாள், அதனால் கொதித்தும் இருக்கிறாள். ஆனால் இவளிடம் யாரும் அப்படி செய்ததில்லை.

துரை அவளை நடத்தும் விதம் அப்படியொன்றாகப் பட அவன் மீது ஒரு தீரா கோபம் தீயாய் அவளுள். துரைக்கும் ஜாதிய பாகுபாடு இருந்தாலும் இந்த விஷயத்தில் அவன் பெரியப்பாவுக்குத் தெரியாது இருக்க வேண்டும் என்பதால் வீடு வேண்டாம் என்றான்.

“பெரியப்பாவுக்குப் பிடிக்காது” என்றான் உடனே. ஆனால் தாரகை நம்பவில்லை.

‘நாங்க என்ன உனக்குக் கீழ, என் வீட்டுக்கு வர மாட்ட நீ? உன்னை வர வைக்கிறேன் டா!’ என்று நினைத்தவள்

“பெரியப்பாவுக்குப் பிடிக்காததுதான் செய்ற, இதையும் கூட சேர்த்து செய்!” என்றாள் அலட்சிய பாவனையில்.

“புரிஞ்சிட்டு பேசு நீ! அவருக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!”

“ஏன் மழுப்புற. நீதான் உயர்சாதி உத்தமன் ஆச்சே? உண்மையை சொல்லு மேன்! நாங்க எல்லாம் கீழ,  என் வீட்டுக்கு வந்தா உன் கௌரவத்துல கறை படியும். ப்ளடி கேஸ்டீஸ்ட்!” என்று தாரகை பேச

“இவ்வளவு பொறுமையா பேசுறதே என் பெரியம்மாவுக்காகத்தான் தாரக! உன்னிஷ்டத்துக்கு என்னைப் பேசுறதை நான் ஏத்துக்க மாட்டேன்” என்றான் கோபமாக.

ராஜதுரை முன்பே எழுந்திருக்க, தாரகை ராணியாக அமர்ந்துதான் இருந்தாள். அதுவே ராஜதுரைக்கு ஒரு கோபம் கொடுத்தது.

“எனக்கு மத்த ஜாதியில ப்ரண்ட்ஸ் எல்லாம் இல்லன்னு நினைக்கிறியா நீ? அவங்க வீட்டுக்கெல்லாம் நான் போனதில்லையா? உங்களுக்கும் எங்களுக்கும் பிரச்சனை. என் பெரியப்பாவை  என்னால சமாளிக்க முடியாது. கூடவே உன் அண்ணங்காரன், அவனுக்கு அவன் ப்ரண்ட் தான் முக்கியம். அதனாலதான் வர மாட்டேன் சொன்னேன்” என்று விளக்கம் சொல்ல, அது கூட தாரகையைத் தணிக்கவில்லை.

“ஓஹ்! ப்ரண்ட்ஷிப் வைச்சுப்பீங்க, ஆனா கல்யாணமெல்லாம் செஞ்சு உறவா    நினைக்க மாட்டீங்க. அப்படி செஞ்சா உங்க கௌரவத்தைக் காக்கா தூக்கிட்டுப் போயிடும்! சுயசாதி பற்று, பிறசாதி  நட்பு! progressive boomers ஆஹ்?” என்று கிண்டலாகப் பேச, ராஜதுரையின் பொறுமை எல்லைக் கடந்தது.

ஏனோ இவள் தன்னை இப்படி குறைத்துப் பேசுவது, மரியாதையின்றி பேசுவது எல்லாம் தாங்க முடியவில்லை. தாரகை பார்வைக்கு துரை சாதிப்பற்றுள்ளவன் என்றால், துரையின் பார்வையில் தாரகை திமிர் பிடித்த மரியாதையற்ற மங்கையாகத் தெரிந்தாள். இருவரின் பார்வையிலும் அடுத்தவரின்  குறை மட்டுமே பெரிதாகத் தெரிய, வார்த்தைகளும் பெரிதாக விழுந்தது.

“உங்கிட்ட வந்து பேசினேன்ல என்னை சொல்லனும்டி! இனிமே எதுக்காகவும் உங்கிட்ட வந்து  நிக்க மாட்டேன் நான். உன் வீட்டு வாசலை, ஏன் தியேட்டர் வாசலை கூட நான் மிதிக்க மாட்டேண்டி” என்றான் ரோஷத்துடன்.

“நானும் உன்னை வான்னு வரவேத்துட்டு நிக்கல, இனிமே என்ன இப்பவே நிக்காத! கெட் லாஸ்ட்!” என்றாள் ஆத்திரத்துடன்.

ராஜதுரை வேகமாக கதவை தள்ளிவிட்டு செல்ல, தாரகை கோபம் தணியாமல் இருக்க, துரையும் அதே உணர்வில் இருந்தான்.

✅ End of Episode 8
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 6 Replies
Srichitra Reader 1 month ago

Nice

❤️ 1 more...
Surya Palanivel Reader 1 month ago

Progressive boomer

😂 1 more...
Pavithra Narayanan 1 month ago

முற்போக்கான பிற்போக்குவாதி! @Surya Palanivel 

❤️ 1 more...
Sathya Velusamy Reader 2 weeks ago

சில சமயம் பிற்போக்குவாதியா இருக்கிறது நல்லது தான்.... 

❤️ 1 more...
Radhi Reader 2 weeks ago

Nice 

Kavi Natarajan Reader 6 days ago

Nice ud ma 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top