Episode 15

ராஜதுரை பாடல் ஒடவும் பார்வையைப் பாவைப் பக்கம் ஓட்ட, பாட்டு சத்தம் கேட்டு தாரகை விழித்துவிட்டாள். சட்டென தன்னைப் பார்த்த ராஜதுரை பக்கம் பார்த்து என்ன என்று கேட்டாள்.

“ஒன்னுமில்ல பாட்டு வரவும் பார்த்தேன், தூங்கிட்ட நினைச்சேன்” என்றான்.

“பாட்டு கேட்டதும் முழிச்சிட்டேன், இதுவும் எனக்குப் பிடிச்ச பாட்டு. குடும்பமா பாடுவோம்” என்று ராகம் பாடினாள்.

அவன் ஏதோ சொல்ல வந்து, தயங்குவது போல் இருந்தது. தயக்கம் என்பது தாரகைக்குக் கிடையாதே?!

“என்ன ஏதோ சொல்லனும் நினைக்கிறீங்க போல?”

“இல்லை, நீ தூங்கு” என்றான்.

“பாட்டு இவ்வளவு சத்தமா இருந்தா எப்படி தூக்கம் வரும்? பிடிச்ச பாட்டுன்னா கூட சத்தம் அதிகமா இருந்த இசையெல்லாம் இரைச்சல் லிஸ்ட்ல போயிடும். சொல்லுங்க” என்று அவன் முகம் பார்த்தபடி உட்கார்ந்தாள். அவளுக்கு அருகே இருந்த இருக்கை காலியாகி இருக்க, நேரே ராஜதுரை இருந்தான்.

“எங்க நிலம் அளந்து முடிஞ்சாச்சு, நீ அதைப் பத்தி கேக்கவே இல்லை. நான் விஏஓவுக்கு லஞ்சம் கொடுத்தேனா இல்லையானு உனக்கு ஐடியா இருக்கா?” என்று தாரகையிடம் கேட்க

“அதெல்லாம் கொடுத்திருக்க மாட்டீங்க, நிலம் அளந்தது தெரியும். கமலா செய்தியறிக்கை!!” என்றாள் கிண்டலாக.

“எப்படி கொடுத்திருக்க மாட்டேன்னு சொல்ற நீ?”

“ஆறாயிரம் உங்களுக்கு ஈசி இல்லை. அதுக்குத்தானே பேரம் பேசுனீங்க, நான் மொத்தமா இல்லாம ஆக்கினா உங்களுக்கு லாபம் தானே? அண்ட் வீடியோ இருக்கிறதால அந்தாள் கொடுத்தாலும் பயத்துல வாங்கியிருக்க மாட்டான்” என்றதும் ராஜதுரை முகத்தில் புன்னகை.

“கரெக்ட்தான்! ஆனா உங்கிட்ட ஒன்னு சொல்லனும் நினைச்சேன் தாரக! honesty is a luxury, நேர்மை ஒரு ஆடம்பரம். அதை எல்லாராலும் கடைப்பிடிக்க முடியாது! பட்டினியா இருக்க ஒருத்தனுக்கு எதுவுமே இல்லைனா திருடத்தான் செய்வான், நேர்மையா இருந்தா பட்டினியோடத்தானே இருக்கணும். நேர்மையா இருக்க அளவு நமக்கு வசதி இருக்கணும். அதுக்குத் தகுதிப்படுத்திக்கனும்.” என்று பேச பேச மென்னகையுடன் மெச்சுதல் ஒன்று மங்கை முகத்தில் குடியேறியது.

இரவின் நிழலில் இவளின் பாவனை அவனுக்குத் தெரியவில்லை.

“இந்த விஷயத்துல உங்க பாயிண்ட் கரெக்ட்தான்! ஒரு கதை சொல்லட்டுமா ஸார்?” என்று தாரகை துரையிடம் கேட்டாள்.

“சொல்லுங்க மேடம்” என்றான் துரை.

“எங்க தாத்தா சொன்ன கதை, இப்ப மறக்காம இருக்க மாதிரி அடிக்கடி என் அண்ணன் சொல்லுவான். ஒரு ஊர்ல ஏதோ பூஜை பண்றதா இருந்தாங்களாம், எல்லாரையும் பால் எடுத்துட்டு வர சொன்னாங்க. சிலருக்கு ஏன் பாலை வேஸ்ட் பண்ணனும், எப்படியும் மத்தவங்க எடுத்துட்டு வருவாங்கனு தண்ணி எடுத்துட்டுப் போய் பால் ஊத்த சொன்ன தொட்டில ஊத்தினாங்களாம். பார்த்தா ஒரு பயலும் பால் ஊத்தல, எல்லாரும் அடுத்தவங்க செய்வாங்கன்னு நினைச்சு தண்ணீ ஊத்த கடைசியில பார்த்தா முழுக்க தண்ணீ” என்று சொல்லி தாரகை நிறுத்த,

“புரிஞ்சது”

“புரியத்தானே சொல்றது” என்றாள் தாரகை மிடுக்காக.

“நம்மனால முடிஞ்சவரைக்கும் நேர்மை இருக்கணும்தான், ஆனா உன்னோட அளவு வேற, என்னோடது வேற! ராமசாமி தாத்தா தியேட்டர் வச்சிருக்கார், அவரால ஈசியா நேர்மையா இருக்க முடியும்.” என்றதும்,

“எனக்கும் புரியுது, ஆனா மத்த விஷயங்களுக்கு சவுண்ட் விடுற ஆள் இதுக்குப் பேசலைனுதான் சொன்னேன்”

“நானும் உன்னோட சண்டை வேண்டாம்னு பேசாம இருந்தா நீ என்னை வம்புக்கு இழுக்கிற” என்றவன்,

“பொறந்த நாட்டு மேல பற்றா இருந்தா நாட்டுப்பற்று, தமிழ் தமிழ்னு சொல்லி பெருமை பேசி, அடுத்த மொழியை விட பல வருஷமா இருக்கிற மொழி பெருசுனு சொன்னா மொழிப்பற்று, ஆனா பொறந்த ஜாதி பெருமை பேசினா ஜாதி வெறியன்! நல்லா இருக்குல” என்றான் நக்கலாக.

“நான் மொழிப்பற்று, நாட்டுப்பற்றெல்லாம் சரினு சொன்னேனா?” என்று கொஞ்சம் குரல் உயர்த்தியவள் பேருந்தில் இருப்பதால் மெல்ல பேசினாள்.

“யாரையும் ஒதுக்கி, எல்லாரையும் உள்ளடக்காம ஒதுக்கி வைக்கிறது மொழியா இருந்தா என்ன? ஜாதியா இருந்தா என்ன? எனக்கு இரண்டுமே பிடிக்காது. தமிழ்னு நம்ம பெருமை பேசினாலும் அந்த தமிழை இன்னொரு மொழிக்காரங்களோ நாட்டுக்காரங்களோ கொண்டாடினா நமக்கு பெருமையா இருக்கு. அவங்களை நம்மோட சேர்த்து கொண்டாடுறோம். ஆனா உங்க ஜாதிப்பொண்ணை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணினா தப்பு, உங்க ஜாதி கௌரவம் போயிடும், எப்படி எல்லாம் சரியாகும்?” என்றாள் அவனைப் போலவே நக்கலாக.

“அப்போ எல்லாரும் ஒன்னுன்னா ஏன் இந்த ரிசர்வேஷன் எல்லாம்?” என்றான் பட்டென்று.

தாரகை விடாது “இப்ப நம்ம இந்த பஸ்ல இருக்கோம். இந்த பஸ் இங்க இருந்து கிளம்புது வச்சிப்போம், நம்ம பஸ் கிளம்புற இடத்துல இருக்கிறதால் இஷ்டப்பட்ட இடத்துல உட்கார்ந்துக்கலாம். இன்னும் நாலு ஸ்டாப் கழிச்சு வரவங்க எங்க இடம் இருக்கோ உட்காருவாங்க. அப்புறம் இடம் இல்லாதவங்க நிப்பாங்க, இன்னும் கூட்டம் ஆச்சுன்னா ஏறவே மாட்டாங்க. அப்படித்தான் ஜாதியால பிற்படுத்தப்பட்டவங்க, வாய்ப்புகள் கொடுக்கப்படாதவங்க எல்லாம் என்ன செய்வாங்க. பஸ்ல ஏறவே முடியாம நினைச்ச இடத்துக்குப் பயணம் செய்யாம இருக்கனுமா?”

“நமக்கு பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கிறதால எப்பவும் சீட் கிடைச்சிரும், அப்போ மத்தவங்க? மத்தவங்களுக்காக யோசிக்கிற மனசு இருந்தா யோசிங்க” என்றாள் அழுத்தமாக.

“எனக்கு இந்தியன் இத்தாலியன்னு வித்தியாசம் இல்லை பாகிஸ்தான்காரன் கூட எனக்கு பங்காளிதான்!” என்று தாரகை சொன்னவள்,

“நீங்க எல்லாம் ஏன் இந்த ஜாதியைப் பிடிச்சிட்டு சுத்துறீங்க தெரியுமா? எதாவது ஒரு விஷயத்தை வச்சு உங்களை உயர்த்திக்கனும், அது தப்பு இல்லை. அடுத்தவங்களை விட உயர்ந்தவன் நினைக்கிறது, இட்ஸ் ஓகே. பட் என்னை விட அடுத்தவங்க கீழன்னு நினைக்கிறது எப்படி நியாயம்? ஒரு நிமிஷம் நீங்க வேற ஜாதியா இருந்து உங்களை அப்படி நடத்தினா எப்படி இருக்கும்?” என்று பேசியவள்,

“புரிஞ்சிக்கிட்டா புரிஞ்சிக்கோ இல்லை இப்படியே பூமரா இருந்துக்க” என்று கடுப்பாக சொல்லி கனலான மனதை ஜன்னல் காற்றால் ஆற்றினாள்.

எல்லாம் ராஜதுரையின் அறிவினை எட்டியது. அவள் அதுவரை தணிந்த நிலையில் பேசிவிட்டு தகிப்பாய்ப் பேசியதும் அவனுக்கு அவள் கடைசி வார்த்தையில் இந்த முறை சிரிப்பு வந்தது. அவள் கோபத்தில் இருக்க, இவன் ஒன்றும் பேசாது உறங்கிவிட்டான்.

தாரகைக் கண்விழித்தபோது ராஜதுரை இல்லை. அவன் தாம்பரத்தில் இறங்கிவிட்டான். இவள் கோயம்பேட்டில் இறங்கினாள். அவள் வேலையை எல்லாம் முடித்து அடுத்த நாள் ஊர் சென்றாள். ஊர் சென்றவளுக்கு அண்ணனிடம் சொல்ல ஆயிரம் கதைகள் இருந்தன. அதில் துரையும் அடக்கம்.

“டேய் அரி! அந்த துரை பேசினதைப் பார்க்கனுமே வயலும் வாழ்வும் நிகழ்ச்சி பார்த்த மாதிரி இருந்தது தெரியுமா?” என்ற தங்கையின் பேச்சில் அரிச்சந்திரன் வாய் விட்டு சிரித்தான்.

“என்னடா சிரிக்கிற?” என்று தாரகை அண்ணன் தோளில் அடித்தாள்.

“பின்ன அவனுக்கு விவசாயம் தெரியாதா? பெரிய இவ மாதிரி அவனுக்கு அட்வைஸ் பண்ணி பல்ப் வாங்கியிருக்க” என்று கிண்டல் செய்தான்.

“போடாங்” என்று அரியை முறைக்க,

“சரி மேல சொல்லு” என்றான் சிரிப்புடன்.

“அப்புறம் அந்த லூசு வெங்காயம் மொழி பற்று ஜாதி வெறியான்னு கேட்குறான்” என்றாள் கடுப்பாக. அரிச்சந்திரனுக்கு எல்லாவற்றையும் விளக்கி சொல்ல, அரிச்சந்திரன் சிரிப்பை நிறுத்தவில்லை.

“தாரா, நீ சொல்லி அவன் திருந்தப்போறானா? நடுராத்திரியில அவனை தூங்க விடாம மொக்கைப் போட்டிருக்க, ஆனா உனக்குக் காவல் இருந்தானே அதை நினைச்சாத்தான் சிரிப்பா வருது” என்று இன்னும் சிரிக்க

“போடா, எல்லாம் சொன்னா நீ கிண்டல் பண்றியா?” என்று தாரகைக் கோபம் கொண்டாள். தங்கையின் கையைப் பிடித்த அரி

“எங்க ராஜாத்தி எவ்வளவு அறிவா பேசியிருக்கா? ஐ அம் ப்ரவுட் ஆஃப் யூ டா தாரா. நீ சொல்ற மாதிரி துரை கூட மாறலாம். மனுஷங்க ரொம்ப காம்ப்ளக்ஸ். என்னோட சீனியரோட சொந்தக்காரங்க ஒருத்தங்க இருக்காங்க, ரொம்ப ஹெல்ப்பிங் மைண்ட், நிறைய உதவி எல்லாம் செய்வாங்க, நிறைய பேர் படிப்புக்கு எல்லாம் உதவி பண்ணியிருக்காங்க. ஆனா அவங்க ரிலிஜன் பார்ப்பாங்க, மதவாதி!”

“இன்னொரு காமெடி, எங்க சீனியரோட ப்ரண்ட் ஒருத்தர் வீட்டுக்குப் போனோம். அவர் பெரியார் ஃபாலோ பண்றவராம், சாமியெல்லாம் எங்க தம்பி இருக்கு? எல்லாம் நாடகம் அப்படி இப்படினு அடிச்சுவிட்டார். சரி முற்போக்கான ஆள் போலனு நினைச்சா வீட்டு லேடீஸை மதிக்கவே இல்லை அவர். ஜஸ்ட் அரை மணி நேரம் இருந்தோம், அதுல தெரிஞ்சது அவர் எப்படினு, கடவுள் மறுப்பு மட்டுமா பெரியார் சொன்னார்? பெண்களை மதிக்கனும் சொன்னார், அதுக்காகவே அவரை மதிக்காத ஆட்கள் நிறைய உண்டு. இப்படி ஒவ்வொரு கொள்கையிலும் நிறைய பேர் அவங்களுக்குப் பிடிச்சது மட்டும் எடுத்துப்பாங்க”

“சிலர் ரொம்ப நல்ல டீச்சரா இருப்பாங்க, ஆனா அவங்க இனத்து ஸ்டூடன்ட்ஸ் மேல தனிப்பாசம் காட்டுவாங்க. அதெல்லாம் தெரிஞ்சு செஞ்சாங்களா இல்லையானு தெரியல, அந்த வயசுல புரிய கூட இல்லை. வெளி நாட்டுல இருக்க கோஷ்டி, அங்க அமெரிக்காகாரன் பத்து சென்ட்டுக்கு இவனுங்களை மதிக்க மாட்டாங்க, ஆனா அந்த ஊர்ல போய் இவனுங்க ஜாதி சங்கம் வச்சிருப்பாங்க, டேய் அமெரிக்கன்ஸ்க்கு நீங்க எல்லாம் ஏசியன்ஸ் தாண்டானு இருக்கும் எனக்கு. மனுஷங்க வேற்றுமையை விடறதே இல்லை” என்று பெருமூச்சு விட்டான் அரி.

“நீதானே அரி சொன்ன, துரை பெரியப்பா கேஸ்டீஸ்ட்னு, அதான் நான் சொன்னாலாச்சும் அவன் திருந்துறான்னா பார்த்தேன். ஆனா அந்த லூசு சுத்தி சுத்தி மானம் தானே வேட்டி சட்டை மயிரு மட்டைனு சொல்றான்” என்றாள் கடுப்பாக.

தாரகைக்கு துரை தன் கருத்தை ஏற்கவில்லை என்ற கோபம், ஏமாற்றம் நிறைய இருந்தது.

அரியோ “எத்தனையோ நல்ல தலைவர்கள் ஏதோ ஒரு விஷயத்துல மோசமானவங்களா இருந்திருக்காங்க தாரா, ஹிட்லர் ஒழுக்கமானவர் ஆனா மோசமான இனவாதி! எல்லாரும் ஒரே நாள்ல மாறிட மாட்டாங்க. வளர்ப்பு, வழக்கம் எல்லாம் நம்ம செயலை கொள்கையை மாத்தும். இந்த வயசுல சிலதை ரசிப்போம், அஞ்சு வருஷம் கழிச்சு வெறுப்போம். impermanence is permanent!” என்றான்.

“இன்னொன்னு தெரியுமா? ஜாதி எல்லாம் பார்க்காம, சமமா மத்தவங்களைப் பார்த்த ஆளுங்க கூட ஒரு நாற்பது, ஐம்பது வயசுக்கு மேல ஜாதியை அவங்க கௌரவம் ஆக்கிடுறாங்க” என்று சிரித்தான்.

“ஆனாலும் நீ வாங்கின பல்ப்” என்று மீண்டும் தங்கையை கிடல் செய்ய, சிரிப்புடன் கழிந்தது அவர்கள் பொழுது.

ராஜதுரை தன் கருத்தை ஏற்கவில்லை திருந்தவில்லை என்று தாரகை நினைத்திருக்க, அவன் ராஜாங்கத்தில் அவள் சொல்ல எண்ணங்களே ராஜ்ஜியம் செய்தன என்பதை அவள் அறியவில்லை.

அவள் சொன்ன முற்போக்கு சிந்தனைகளை யோசித்த ராஜதுரையும் அவனையும் அறியாது கருத்தோடு கருத்து சொன்னவளையும் நினைத்தான்.

இருவரும் மீண்டும் சந்தித்தது, அய்யனார் கோவிலில். தாரகையின் வீடு ஆற்றங்கரை பக்கம் இருக்கும் சாலையில் இருக்கும். அதன் வழியே சென்றால் பக்கத்து ஊருக்கு மெயின் ரோடு வழியே போகலாம். அங்கு வீடுகள் மிகவும் குறைவு.

தாரகை தன் வீடு பக்கம் இருந்த அய்யனார் கோவிலுக்கு மாலை ஆறரை மணிக்கு மேல் சென்றாள். அந்த நேரம் பெரும்பாலும் யாரும் அங்கே வரமாட்டர்கள். ஆற்றங்கரை அய்யனார் கோவில் என்பதால் இரவு நேரத்தில் கூட்டமே இருக்காது, எதாவது விஷேஷ நாட்களில் மட்டும் பூஜை இருக்கும். மற்றபடி ஆடு மாடு மேய்ப்பவர்கள் இளைப்பாறும் இடம் அது.

தாரகைக்குக் கோவில் என்றால் அமைதியாக இருக்க வேண்டும். இரைச்சலில் இறைவனைத் தேடும் விந்தை அவளுக்குத் தெரியாது. சின்ன வயதில் அவர்கள் விளையாடும் இடம், இப்போது மனம் இளைப்பாறுமிடம். வாரத்தில் ஒரு நாள் அவள் வருவது வழக்கம்.

இன்றும் அது போல் செல்ல, ராஜதுரை அங்கே இருந்தான். அய்யனார் கோவில் ப்ரகாரத்தின் தூணில் சோர்வாய் சாய்ந்திருந்தான்.

“ஹலோ” என்று தாரகை அருகே செல்ல, அவளைப் பார்த்து புன்னகைத்தவன் ஒன்றும் பேசவில்லை. மௌனமாக இருந்தான்.

தாரகையும் கோவிலை சுற்றி வந்தவள் மீண்டும் அவன் இருந்த இடம் அருகே அமைதியாக உட்கார்ந்தாள். ராஜதுரையின் முகம் பார்க்க, அதில் ஏதோ மாறுதல், ஆறுதல் தேடிய பாவம் அதில். அவன் மனம் புரிந்தது போல்

“என்னாச்சு, ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்க,

“ஒன்னுமில்ல, சாமி கும்பிட வந்தேன். அவ்வளவுதான்” என்றான்.

“பொய் சொல்லாதீங்க” என்று தாரகை அழுத்தி சொல்ல, அவனுக்கு அவளிடம் பேச என்ன இருக்கிறது, பேசுமளவு நெருக்கமும் இல்லையே. சந்தோஷத்தைக் கூட தெரியாதவரிடம் சொல்ல முடியும், ஆனால் வருத்தங்களை சேர்ந்தவர்களிடம் கூட பகிர முடியாது.

அவன் தேடி வந்த தனிமையைத் தாரகை களவாடிக் கொள்ள, தனிமையை விட்டு எழுந்தான். நேரம் வேறு ஏழாகிவிட்டது.

“எதுக்கு இப்போ ஒன்னும் சொல்லாம எழுந்திரிக்கிறீங்க?” என்றூ தாரகை கோபமாக அவனை நிறுத்தினாள்.

“எனக்கு வேலை இருக்கு போறேன், எதுக்கு உனக்குப் பதில் சொல்லனும்?”

இவர்கள் பேசும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட, அந்தி நேரம் முடிந்து அந்தகாரம் சூழ்ந்த இரவுப்பொழுது.

அப்போது கூட, ராஜதுரை கோவிலை விட்டு செல்ல பார்க்க

“இருட்டுல ஏன் போறீங்க?”

“பின்ன இருட்டுல உன்னோடு இருக்க சொல்றியா?” என்று தனிமை கெட்ட எரிச்சலில் அவளிடம் எகிறினான்.

“ஏன்? இருட்டுல உன் கையைப் பிடிச்சா இழுத்தேன் நான்” என்று குறையாது கேட்டாள் தாரகை.

“உன்னோடு வம்பு வழக்குப் பேச எனக்கு நேரமில்ல” என்று திட்டியவன் முன்னே இருட்டில் தடுமாறி தூணில் இடித்துக் கொண்டான்.

“அம்மா” என்று கத்தியவன் நெற்றியில் நல்ல அடி.

“அச்சோ, அப்படி என்ன கிழிக்க போய் இப்படி இடிச்சிட்ட?” என்று தாரகை அவனை திட்டினாள். ராஜதுரைக்கு வலியெடுக்க அமைதியாக மீண்டும் கீழே உட்கார்ந்துவிட்டான்.

✅ End of Episode 15
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 month ago

Very nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

அடுப்பு ஊதும் பெண்ணுக்கு அரசியல் எதற்கு என்பது போல அண்ணன் வளர்ப்பில் அரசியலும் சமத்துவமும் அழகாக மங்கை கூற 

ஆண் தான் 
அதில் சறுக்கி விட்டான்....
அருமை 
❤️ 1 more...
Radhi Reader 2 weeks ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top