Episode 20

‘தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு’

யேசுதாஸ் ஜானகி குரலில் இளையராஜாவின் இன்னிசையில் பாடல் ஒலிக்க, ராஜதுரையின் ரசனைக்கு ரசிகையாகிப் போனாள் தாரகை.

அவன் ஸ்டேட்டஸில் பாடல் கேட்டதுமே அவனுக்கு அழைத்துவிட்டாள். அழைப்பதற்குக் காரணம் தேடியது போய் அழைப்பதே காரணமாகிவிட்டது. அரிச்சந்திரன் சொன்னது போல் இவனின் சில குணங்கள் பிடிக்கவிட்டாலும் மனம்

“he is wholesome” என்று பாராட்டியது.

“இந்த பாட்டோட முதல் வரியை எல்லாம் விட நீங்க செலெக்ட் பண்ணி ஸ்டேட்டஸ் வச்சிருக்க லைன்ஸ் இருக்கே, அதோட மியுசிக் பிரமாதமா இருக்கு தெரியுமா?” என்று அழைத்தவுடனே ஆர்ப்பாட்டமாக அவனைப் பாராட்டியது தாரகையின் குரல்.

தாரகையின் பாராட்டில் எப்போதும் போல் ராஜதுரையிடம் புன்னகை.

“என்னமோ நானே எழுதி மியுஸிக் போட்ட மாதிரி என்னை பாராட்டுற?”

“ரசிக்கவும் ஒரு அறிவு வேணுமே!”

“தேங்க் யூ”

“இன்னிக்கு மழை நிக்காது போலயே”

“மழையா?” என்று பதறியபடி அவன் அறையை விட்டு எழுந்து பால்கனியைப் பார்த்தான்.

“பதறாதீங்க! நான் சொன்னது இசை மழை!! வேலை எல்லாம் முடிஞ்சு இந்த பாட்டை இந்த லைன்ஸை கேக்கவும் அப்படியே எனர்ஜி வந்துடுச்சு” என்று தாரகை சொல்ல, அவள் பேச்சைக் கேட்கையில் எல்லாம் அவனுக்கும் அப்படி ஒரு உற்சாகம் உள்ளத்தில் உற்சவம் போவதை யார் சொல்வது அவளுக்கு?

“அம்மாடி! தெளிவா சொல்லு! நான் இன்னொரு தடவ எல்லாம் உளுந்து விதைக்க முடியாது. அழுதுருவேன்” என்றான் விளையாட்டாக.

‘அம்மாடி’ என்ற அவனின் அழைப்பில், அதில் நிலவிய அன்பில் எப்போதும் போல் தாரகையின் உள்ளம் தந்தையை நினைத்தது. துரையிடம் அதனைப் பகிர்ந்தது இல்லை. ஆனாலும் அவன் அப்படி சொல்லும்போது மனத்தில் ஒரு சந்தோஷம்!

“அதெல்லாம் வராது” என்று தாரகை சொல்ல

“ஒகே! இந்த பாட்டு இடையில் வருமே ஒரு வீணை போர்ஷன் அது இன்னும் நல்லாயிருக்கும். ராஜா கிட்ட பிடிச்சதே எதை யாரை செய்ய வச்சா நல்லா வருமோ அதை அவங்களை செய்ய வைப்பார்! அப்படி வேலை வாங்குறதாலதான் அவர் ராஜா!” என்றான் ராஜதுரை.

அந்த இருளில் பால்கனியில் நின்று வானை ரசித்தபடி, தாரகையின் பேச்சில் லயித்தபடி கழியும் நொடிகள் எல்லாம் அவனுக்கு லாளிதமாக இருக்க, நித்தமும் அந்த நொடிகளுக்காக மனம் ஏங்கியது. அந்த நொடிகளுக்காக ஆவலாகக் காத்திருக்கத் தொடங்கியது மனம்.

எத்தனை பேசினாலும் முடியும் போது, ஆவல் மட்டும் தீரவே இல்லை!!!

தோழியா காதலியா என்று உறவின் பெயர் தெரியவில்லை ராஜதுரைக்கு. தாரகை அவனை ஆனந்தித்தாள்!

பேசும் பொழுதுகள் நீள, பேசா பொழுதுகளில் பேசிய பொழுதுகளில் ஞாபகங்களில் மீளாமல் மூழ்கினான்! எப்படியோ அவன் எண்ணங்கள் ஏமுறும்(delight of thoughts) காரணமாக தாரகை இருந்தாள்.

“என்ன டயர்டா இருக்க மாதிரி இருக்கு?” நித்தமும் பேசுவதால் அவன் குரல் மாற்றம் உணர்ந்து தாரகை கேட்க

“இன்னிக்கு உரம் போட்டேன், ஸ்ப்ரேயர்ல. அது முதுகு வலிக்குது” என்று சொல்லிவிட்டான்.

“ப்ச், சரி ரெஸ்ட் எடுங்க” என்று தாரகை வைக்கப்போக, அதில் ராஜதுரைக்கு விருப்பமில்லை. அதை வெளிப்படையாக சொல்லவும் கௌரவம் தடுத்தது.

“தூக்கம் வரல, உடம்பு வலி இருக்குல, அசதிதான்!” மறைமுகமாக பேசு என்றான். தாரகைக்கு அவன் மறைப்பது, நினைப்பது எல்லாம் தெரியாது. அவள் மிகவும் இயல்பாக இருந்தாள், அவனுடன் இருக்கும் அந்த நட்பு, இசையால் வரும் இனிமையை அவள் இழக்க விரும்பவில்லை.

இழந்தால் புரியுமோ??

அவன் வலி என்றதும் அந்த வார்த்தை இவளுக்கும் வருத்தம் தந்தது.

“ஏன் துரை இவ்வளவு கஷ்டப்பட்டு விவசாயம் செய்யனுமா? ஆள் வச்சி உரம் போட்டிருக்கலாமில்லை” என்று கோபமாக அக்கறையாக அவள் குரல் பேசியது.

“நான் என்ன ஏக்கர் கணக்குலயா நிலம் வச்சிருக்கேன் தாரா? எல்லாத்துக்கும் ஆள் வச்சா எனக்கு முதல்லே நிக்காது. நான் ஏன் விவசாயம் பார்க்கிறேன்னு உனக்கு முன்னாடியே சொல்லிட்டனே”

“சொன்னீங்க, ஆனா இவ்வளவு கஷ்டப்பட்டா..” என்றவள் பாதியில் நிறுத்தினாள். அவன் வயலில் கஷ்டப்படுவதை சொல்லும்போது இவளுக்கு வருத்தமாக இருக்கும்.

அதை அவனிடம் சொன்னால் வருத்தப்படுவான் என்று பேசமாட்டாள், அவனைக் கோபம் கொள்ள செய்த போது கூட இத்தனை யோசனை இல்லை.

“சொல்லு, என்னத்துக்குப் பாதியில் நிறுத்துற?” என்று துரை சிரிக்க

“உங்க வெட்டி ரோஷத்துக்காக, இப்படி கஷ்டப்படுவீங்களா? ஏன் யார்கிட்டவாச்சும் வேலைப் பார்த்தா என்ன? அறிவு மாமா எல்லாம் ஏசி ரூம்ல வேலை, மந்த்லி சேலரி, வெயிலுக்கும் மழைக்கும் பயமில்லாத வாழ்க்கை! அப்படி இருக்கறதை விட்டு அட்லீட்ஸ் சந்தோஷமா இருந்தாலாச்சும் பரவாயில்லை. இவ்வளவு கஷ்டம், படிக்கலனா கூட பரவாயில்லை, படிச்சு யாராச்சும் இப்படி செய்வாங்களா?” என்று கோபத்துடன் துரையிடம் கேட்க அவன் அமைதியாக இருந்தான். தாரகையும் அவன் பேசட்டும் என்று அமைதியாக இருக்க, மூச்சுக்காற்றே அங்கே பேச்சாய்ப் பயணித்தது.

“எல்லா விவசாயியும் கஷ்டப்படுறாங்கதான், அப்போ சாப்பிடாம இருப்பியா நீ?” என்று துரை கோபத்தை அடக்கி அவளிடம் கேட்க

“எல்லாரையும் எனக்குத் தெரியாதுல, கண்முன்னாடி என் ப்ரண்ட் கஷ்டப்பட்டா எனக்கு ரசிக்குமா?” என்று தாரகையும் சூடாகக் கேட்டாள்.

“எனக்குப் பிடிச்சுத்தான் பண்றேன் தாரா” அவள் தனக்காகப் பேசுகிறாள் என்பதால் தணிந்து பேசினான். கூடவே அவள் அக்கறை அகக்கரையை நனைத்து இனித்தது!

தாரகை எதுவும் பேசவில்லை. ஒவ்வொரு மழைக்கும் அவன் கண்கள் காட்டும் கலக்கம், முகம் காட்டும் பதற்றம் இவளுக்கு அவை விழியில் நின்றன.

“சரி உண்மையை சொல்றேன், நீ டென்ஷன் ஆகாத! எனக்கு இந்த ஊரை விட்டு போக முடியல. அதனால்தான் எவ்வளவு கஷ்டம், எத்தனை மழை, புயல்னு வந்தாலும் இங்கயே இருக்கேன்” என்று ராஜதுரை மனம் விட்டுப் பேசினான்.

“என் அப்பா காலேஜ் சேரதுக்கு முன்னாடி இறந்துட்டார் சொல்லியிருக்கேன்ல, அவர் போனதை அந்த அதிர்ச்சியைக் கடக்குறதுல நான் காலேஜ் சேந்துட்டேன், அப்பா இனி உலகத்துல இல்லை, அம்மாவும் என் கூட இல்லை. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன் ஹாஸ்டல் சேர்ந்தப்போ என்னால இருக்கவே முடியல, ஆனா பெரியப்பா கஷ்டப்பட்டு பணம் கட்டியிருந்தார். படிச்சுத்தானே ஆகனும், அந்த கட்டாயத்துக்காகப் படிச்சேன், வேலைக்குப் போனேன். அதுவும் எனக்குப் பிடிக்கல, என்னைப் பிடிச்சும் வைக்கலை”

“பிள்ளையாரு, இவனை பிடிச்சு வைக்க” என்று மனத்தில் வறுத்தெடுத்தாள் தாரகை.

“அம்மா புள்ளை நான், எங்கம்மாவை விட்டு போய் லட்சமா சம்பாரிச்சாலும் எனக்கு அது வேண்டாம்னு தோணிச்சு. இங்க தினமும் எங்கம்மா முகத்தைப் பார்த்துட்டு அவங்க கையால் சாப்பிட்டு இருக்கலாம். அதை விட எங்க அப்பா இல்லை, நாளைக்கு என்னோட மனைவி எங்கம்மாவை எப்படி பார்த்துப்பா தெரியல, நான் இருக்கவரைக்கும் அவங்க தேவையை நானே பார்த்துக்கனும். அப்பா இருந்தவரை அவரைக் கேட்டு நிக்குறது வேற, இல்லாதப்போ பெரியப்பா பெரியம்மா கிட்ட நிக்க கூடாது. அம்மா என்னதான் என்னை படிக்க அனுப்பினாலும் வேலைக்கு அனுப்பினாலும் அவங்க தனியா இருந்தாங்க, கஷ்டம் இருந்தாலும் வெளியே காட்ட மாட்டாங்க.” என்று பேச பேச துரையின் அன்பின் குரல் உணர்ந்தாள் தாரகை.

‘பூமருக்கு அறிவுதான் இல்லை, மனசு ரொம்ப பெருசு’ என்று நினைத்தது தாரகை உள்ளம்.

தாரகைக்கும் அப்பா அம்மாவின் ஞாபகம்.

“தாரகை!” என்று ராஜதுரை அழைக்க அவள் சுயத்தில் இல்லை. ஏதோ யோசனைக்குப் போய்விட்டவளுக்கு இவன் குரல் கேட்கவில்லை.

“தாரா! அம்மாடீ! தாரா! இருக்கியா?” என்று ராஜதுரை மீண்டும் அழைக்கவும்தான் பேசினாள்.

“ம்” என்ற குரலில் அவள் துயரம் உணர்ந்தான்.

“இதுக்குத்தான் நான் பேசல, நீ உன் அப்பா அம்மாவை நினைச்சுக் கஷ்டப்படுவனுதான் சொல்லாம இருந்தேன். அழாத” என்றான்.

அவள் மௌனத்தின் அர்த்தம் கூட தெரியுமா என்று ஆச்சரியம் அவளுக்கு.

“சிலதெல்லாம் நிரந்தரம்!” என்ற குரலில் துயரத்தின் சாயல்.

“சரி அதைவிடு! உங்க தியேட்டர்ல அடுத்த வாரம் என்ன படம் ரீலிஸ்” என்று பேச்சை மாற்றினான். அர்த்தமற்ற பேச்சுகள், ஆனந்தமான நொடிகள் என்று கேள்வியின்றி இரவும் பொழுதும் ஓடிப்போனது.

அந்த வாரத்தில் கமலாவின் வீட்டிலிருந்து தாரகை வீட்டிற்கு மீன் குழம்பு வந்தது.

கமலாவிற்கு அழைத்தவள் “என்ன அத்த, தீடீர்னு மீன் குழம்பு அனுப்பியிருக்க, நேத்துதானே வீட்ல சாப்பிட்டேன்?” என்று மீன் குழம்பின் வாசத்தை நுகர்ந்தபடி கேட்டாள்.

“அது குளத்துல மீன் பிடிச்சாங்கன்னு ராஜா கொடுத்து விட்டான், நிறைய இருந்தது உனக்கு வேற கெண்டை மீன்னா இஷ்டம் ஆச்சே, அதாண்டி.” என்றார் கமலா.

“சூடா இருக்கும்போதே சாப்பிடுடி” என்று கமலா சொல்ல

“சரி அத்த, தேங்க்ஸ்” என்று வைத்தவள் உணவை எடுத்து கீழே சாப்பிட வைத்தாள். அரிச்சந்திரன் மதிய உணவுக்கு வந்தவன்

“என்ன அத்த வீட்டுல இருந்து உனக்கு அடிக்கடி விருந்து வருது, பார்த்து தாரா, கடைசியில கமலா அத்த பொண்ணு கேட்டு வரப்போவுதுடி” என்று தங்கையைக் கிண்டல் செய்தான்.

“கமலா இவ மேல உள்ள பிரியத்துல கொடுக்கிறா டா, சும்மா சந்தேகப்படாத” என்று ராமசாமி தாத்தா பேரனைக் கடிந்தார்.

“அரி, ஒருவேளை அத்தை உன்னை ஸ்வாதிக்கு மாப்பிள்ளையாக்க பார்க்குதோ, எங்கிட்ட வேற அடிக்கடி அண்ணன் மவனுக்கு சோறு போடுடின்னு சொல்லும்” என்று அண்ணனைக் கிண்டல் செய்தாள்.

“இது என்ன உளுந்து?” என்று மேஜைக்கு அருகே இருந்த மரக்காவைப் பார்த்து ராமசாமி கேட்டார்.

“அது துரை கொடுத்தது தாத்தா!” என்றதும் அரிச்சந்திரன் தங்கையை முறைத்தான்.

“அவன் கொடுத்தா நீ ஏன் வாங்குன?” என்று அதட்டினான். தாரகை அண்ணனை முறைத்தாள்.

“அவன் ஒரு நாள் எனக்கு உளுந்து நல்லபடியா விளைஞ்சா தரேன்னு சொன்னான். என் ப்ரண்டாகிட்டான், தந்தான் வாங்கினேன். அதுக்கென்ன?” என்று கோபத்தில் கேட்க

“ப்ரண்ட்னு சொல்லி மைதிலி பத்தி அவன் கேட்டானு உளறி வைக்காத!” என்று அரிச்சந்திரன் எச்சரிக்கையாக சொன்னான். அவனை நம்பி நண்பன் இருக்க, எதையும் யாரையும் நம்பபில்லை அவன்.

“மைதிலியைப் பத்தி ஒருவார்த்தைக் கேட்டதில்லை துரை. நீயே ஒரு நாள் எல்லாரையும் நல்லவங்கனு சொல்லு, இன்னொரு நாள் இப்படி பேசு. வக்கீல் புத்திடா!” என்று அண்ணனைத் திட்டினாள்.

துரைக்காக தன்னைப் பேசும் தங்கையை விசித்திரமாக பார்த்தான் அரிச்சந்திரன். அன்றிரவு துரையிடம் பேசிய தாரகை,

“மீன் மிஞ்சினா சித்தப்பா வீட்டுக்குப் போகுது போல” என்று கேட்க

“அத்தை வீட்ல இருந்து மேடமுக்குக் குழம்புப் போயிருக்குப் போல ” என்று அவனும் பதிலுக்குக் கேட்டான்.

“எங்க அத்தை பாசத்துல கொடுத்துச்சு” என்று முறுக்கிக் கொண்டாள் தாரகை.

துரைதான் சித்தப்பா வீட்டில் மீன் கொடுத்தால் எப்படியும் தாரகைக்குக் கொடுப்பார்கள் என்று தெரியும், அதனால் காசு கொடுத்து வாங்கி கூடுதலாவே கொடுத்தான். ஆனாலும் உனக்காகத்தான் கொடுத்தேன் என்ற வார்த்தைகள் வஞ்சியிடம் அவனுக்கு வரவில்லை. தாரகையைப் பிடித்ததால் அவளுக்குப் பிடித்ததை செய்ய விழைந்தான்.

மழையைப் போல் பிடிக்காது என்று முழுமையாக சொல்ல முடியாமல் பிடிக்கும் என்றும் முழுமையாக சொல்ல முடியாமல் இருமுக உணர்ச்சியில் தவித்தான் ராஜதுரை. தாரகை அவன் தவிப்பை உணராது பேச ராஜதுரை அக்கணத்தில் அத்தனையும் மறந்தான். தாரகையின் பேச்சில் எப்போதும் போல் தன்னை தொலைத்தான்.

அவன் மனத்தின் மழையானாள் தாரகை!

எந்த மேகமிது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே’

✅ End of Episode 20
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 4 weeks ago

Nice 

Mrs Beena loganathan Reader 4 weeks ago

இசை இருவரையும்

இணைக்க பாலமாக....
இருவரின் எண்ணமும்
இதயத்தை இளக்க 
இனி என்ன???😘
Radhi Reader 2 weeks ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top