Episode 26
பயணம் மிகவும் அமைதியாகவே சென்றது. காரின் ஜன்னல் திறந்திருக்க, காற்று மட்டுமே இருவரிடமும் பேசி சென்றது.
ராஜதுரைக்குத் தாரகையிடம், “தாரக! உன்கிட்ட தாத்தா சொல்லியிருப்பார் நினைக்கிறேன், அம்மா எங்கிட்ட பேசினாங்க” என்றதும்
“அப்போ அம்மாதான் தெளிய வச்சிருக்காங்க” என்றாள் தாரகை கொஞ்சம் கோபத்துடனும் கிண்டல் பாவனையிலும்.
“நீ கோவமா இருக்கியா?”
“கோவமா இருந்திருந்தா காரைத்தான் உன் மேல ஏத்தியிருப்பேன், உன்னை கார்ல ஏத்தியிருக்க மாட்டேன்” என்றாள் நக்கலாக.
“என்னால சட்டுனு முடிவெடுக்க முடியல” என்றவன்
“காரை கொஞ்சம் ஓரமா நிறுத்தேன். எனக்கு உங்கிட்ட பேசணும்” என்றான்.
தாரகை அவனை பார்க்க “வண்டி ஓட்டும்போது பேச வேண்டாம். அதான் நிறுத்த சொல்றேன்” என்றான்.
பைபாஸில் இருந்து பிரிந்து அவர்கள் ஊர் வரும் பெரிய சாலையில் வண்டியை செலுத்துக்கொண்டிருந்தவள், மெயின் ரோடிலிருந்து ஊர் வரும் கிளைச்சாலையில் வண்டியை ஓரம்கட்டினாள்.
“இந்த விஷயம் உனக்குப் பிடிக்காதுனு நினைக்கிறேன். ஆனாலும் என்னோட மனசுல இதான் இருக்கு” என்று தயங்கியவன்
“என் பெரியப்பாவுக்கு காதல் கல்யாணமெல்லாம் கொஞ்சமும் இஷ்டம் கிடையாது. ஏன் எனக்கே காதல்.. ப்ச். அதுல விருப்பம் இல்லை.” என்றவனை தாரகை குறுகுறுவென பார்த்தாள்.
“காதல் பிடிக்காது! தாரகையைப் பிடிக்கும்!” என்று அவள் பார்வைக்குப் பதில் சொன்னவனை மெச்சுதலாகப் பார்த்த தாரகை கையைக் கட்டிக்கொண்டு அவன் பேச்சைக் கேட்டாள்.
“என் அப்பா இறந்த அப்புறம் எங்க பெரியப்பா என்னைப் பார்க்காம கூட விட்டிருக்கலாம். ஊர்ல நிறைய பேர் அப்படி இருக்காங்கதானே? ஆனா அவர் அப்படி இல்லை. காலேஜ் ஃபீஸ் கட்டி என்னைப் படிக்க வச்சது எல்லாம் அவர்தான். சொல்லப்போனா அக்காவுக்கும் மைதிலிக்கும் கட்டினதை விட அதிகம் என் ஒருத்தன் ஃபீஸ். வேலைக்குப் போய் என்னால ஏனோ சந்தோஷமா இருக்க முடியல, அப்பா இல்லாத தனிமை! அம்மாவை மிஸ் பண்ணினேன். எல்லாம் சேர்ந்து நான் பிடிச்சு படிச்சாலும் அந்த வேலையில இருக்க விடல. அதை விட்டு வந்தப்ப எங்க பெரியப்பா ஒன்னுமே சொல்லல.”
“இப்ப ஏண்டா இதெல்லாம் சொல்றான்னு பார்க்கிறியா? நம்ம கல்யாணத்துக்கு.. பெரியப்பாவோட சம்மதம் வேணும்” என்று சொல்லி சம்மதம் கேட்டு தாரகையைப் பார்க்க,
பெருமூச்சுடன் அவனைப் பார்த்தவள் புன்னகைத்தாள். ராஜதுரையை விடாது பார்த்தாள், இன்று அடர் நீலத்தில் டீஷர்ட் அணிந்திருந்தான். அதில் இன்னும் இளமையாக இருக்க, பசுமையாக பாவைக்குள் பதிந்து போனான்.
“என்னடி பேசாம பார்த்துக்கிட்டே இருக்க?” என்று அவள் பதிலுக்காக காத்திருந்தவன் கடுப்பாகக் கேட்க,
“சைட் அடிக்கிறேன்” என்றவளை முறைத்தான் ராஜதுரை.
“நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருக்கேன், நீ ஏன் இப்படி பண்ற?” என்றதும் அவனை நேருக்கு நேராக பார்த்தாள் தாரகை.
“எனக்கு எப்பவுமே தெரியும் உனக்கு உன் பெரியப்பா மேல ஓவர் லவ்ஸுன்னு. அவர் சம்மதம் நீ எதிர்ப்பார்க்காம இருந்தாதான் அதிசயம்” என்ற தாரகையை அதிசயமாகப் பார்த்தான் ராஜதுரை.
“என்ன நீ கோவப்படுவ நினைச்சா இப்படி பேசுற?”
“பின்ன உன்னைப் பத்தி தெரிஞ்சுதானே இதெல்லாம். அப்போ யோசிக்காம இருப்பேனா? அது மட்டுமில்லாம உன் பெரியப்பா உனக்கு நல்ல பெரியப்பாதான். அதை நான் ஒத்துப்பேன்” என்றதும் தன்னை தாரகை புரிந்து கொள்கிறாள் என்பதே பெரிய ஆசுவாசமாக இருந்தது துரைக்கு.
அதில் முகமும் மலர்ந்து விட்டது.
“பார்டா! பெரியப்பாவை சொன்னதும் ஒரே மலர்ச்சி” என்ற தாரகையின் முகமும் தலைவனின் முகத்தைப் பார்த்து மலர்ந்தது.
“உங்க பெரியப்பாவை சம்மதிக்க வைக்க ஈசியான்னா வழி ஒன்னு நான் சொல்லவா?” என்று மெல்ல சொல்ல, ராஜதுரைக்கு பேராவல் பெருகியது.
“என்ன? என்ன? சொல்லு சொல்லு?” என்று பரபரத்தான்.
தாரகை அவன் அவசரத்தை ஓரக்கண்ணால் ரசித்தவாறே சாலையைப் பார்த்தபடி,
“பேசாம நான் உன்னை ரேப் பண்ணிடுறேன், அப்புறம் உன் பெரியப்பா மானம் போச்சு, என் மகனோட கற்பு போச்சுனு குடும்ப கௌரவத்தைக் காப்பாத்த உன்னைக் கட்டிக்க சொல்லி எங்கிட்ட கெஞ்சுவார்” என்றாள் குறும்பாக.
ராஜதுரை அவள் பேச்சில் கண்டனமாகப் பார்த்தான்.
“ராங்கி! என்ன பேச்சு பேசுற, இதையே நான் பேசினா தப்பாகிடும்” என்று திட்டியவன் “வண்டியை எடு” என்று அதட்டினான்.
அவன் பேச்சில் மெல்லிய புன்னகையோடு, “என்ன அவ்வளவுதானா?” ஏக்கத்தில் வந்தது தாரகை குரல்.
“என்ன அவ்வளவுதானா?” என்று ராஜதுரையும் கேட்க,
“பேசணும்னு சொல்லிட்டு உன் பெரியப்பாவைப் பத்தி பேசிட்டு வண்டியை எடுன்ற? இந்த தாரகையை எப்படி பிடிச்சது, அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற? பூமர்” என்று திட்டினாள்.
“பிடிச்சதுனாலதானே உன்னோட வரேன். அதெல்லாம் உன்னை மாதிரி எனக்கு சொல்ல வராது. பிடிக்கும்னா பிடிக்கும்தான்! பெரியப்பா விஷயம் முன்னாடியே சொல்லிடுறது நல்லதுன்னு தோணிச்சு.” என்று துரை கூற
“பார்ப்போம், உன் பெரிய அப்பா எப்போ சம்மதம் சொல்றாருனு” என்று சலித்தபடி தாரகை காரை செலுத்தினாள்.
“தெரு பக்கம் நிறுத்து, நான் நடந்து போயிக்கிறேன்” என்று துரை நிறுத்த சொல்ல,
“இன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போ, தாத்தா உன்னை பார்க்கணும் சொன்னார். ஏன் வரமாட்டியா நீ?” என்று அவனை மிரட்டினாள்.
“இந்த நேரத்துல எதுக்கு? உன் அண்ணன் எதாவது நினைச்சுப்பான். வேண்டாம்” என்று மறுத்தான் துரை.
“என் அண்ணா ஒன்னும் பூமர் இல்லை, அவன் ரொம்ப மெச்சூர்ட்! என்னோட கொஞ்ச நேரம் இரு” என்று ஆசையாக கேட்டவள் அவள் வீட்டிற்கே அழைத்துப்போனாள்.
காரை நிறுத்தவும் அரிச்சந்திரன் வந்து கேட் அருகே நின்றான். தாரகை காரை விட்டு இறங்கி வழக்கம்போல் அண்ணனிடம் கார் சாவியைத் தூக்கிப்போட அதனை புன்னகையுடன் பிடித்த அரியின் புன்னகை துரையைப் பார்க்கவும் நின்று போனது.
அரி தங்கையை முறைத்தான்.
“சும்மா உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தார்” என்று துரையைக் காட்ட, அவனும் தாரகையை முறைத்தான்.
“வாங்க துரை!” என்று வரவேற்க, துரையும் மெல்லிய புன்னகையுடன் உள்ளே போனான்.
“உன் அண்ணா இந்த நேரத்துல என்னைப் பார்த்து டென்சன் ஆகிட்டான்” என்றதற்கு
“ச்ச, ச்ச! அப்படியெல்லாம் இல்லைனு சொல்ல ஆசைதான். ஆனா நிஜமாவே டென்ஷன் ஆகிட்டான்” என்று சிரித்து
“இந்தா சாப்பிடு, இவன் வச்ச சட்னி இன்னிக்கு. செமையா சமைப்பான்” என்று ஊட்டிவிட கையை நீட்டினாள் தாரகை.
ராஜதுரைக்கு சட்டென உரிமையாக வாங்க முடியவில்லை. தாரகை இயல்பினை ஏற்க சிரமப்பட்டான். தாரகை விருப்பத்தையும் வெறுப்பையும் வெளிப்படையாகக் காட்ட தயங்கவே மாட்டாள்.
ராஜதுரை தலையை மறுப்பாக அசைத்து,
“நீதான் பசியில இருக்க, சாப்பிடு” என்றவன் “தாத்தா எங்க?” என்று கேட்டான்.
“இந்த நேரத்துக்கு அவர் தூங்கிடுவார்”
“நான் கிளம்புறேன்” என்று ராஜதுரை எழுந்துகொள்ள, அரிச்சந்திரன் சாப்பிட சொல்ல வேண்டாம் என்றதும்,
“சரி பால் காய்ச்சுறேன், பால் குடிப்பீங்கதானே?” என்று கேட்க,
“இல்லை இல்லை நைட்ல அதெல்லாம் பழக்கமில்ல , தண்ணீ கொடுங்க போதும்” என்றான் துரை.
அரிச்சந்திரன் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, குடித்தான். அரி துரையிடம்,
“வாங்க, வெளியே காத்தோட்டமா இருக்கும்” என்று சொல்லி அவனை, அண்ணன் தங்கை எப்போதும் உட்காரும் வெளித்திண்ணைக்கு அழைத்துப்போனான். அண்ணன் தனியே பேச நினைக்கிறான் என்று புரிந்து, தாரகையும்,
“டேய் வக்கீல்! அட்வைஸ் பண்ணி அவரை தூங்க வச்சிராதடா” என்று கத்த, துரை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். அரியோ ஒற்றை விரலை நீட்டி
“பிச்சுருவேன், சாப்பிடு” என்று அதட்டிவிட்டு வெளியே போனான்.
துரை “சாரி, இந்த நேரத்துக்கு வந்திருக்கக் கூடாது. தாரக கேட்கல” என்று அரியிடம் சொல்ல,
“பரவாயில்லை. அப்புறம் என்ன ப்ளான் உங்களுக்கு?” என்று அரிச்சந்திரன் நேராக விஷயத்தைப் பேசினான்.
ராஜதுரைக்குத்தான் சட்டென்று எதையும் சொல்ல முடியவில்லை. தாரகையின் மீதான பிடித்தத்தை உணரவே இத்தனை நாட்கள், மாதங்கள் ஆகியிருக்க, அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஆவல் இருந்தாலும் வீட்டினரை சமாளிப்பதை நினைத்தால் தலைவலியாக இருந்தது.
“அம்மா பேசிட்டு சொல்லுவாங்க அரி” என்றான்.
“எங்களுக்கு இப்ப எதை செய்றதுனாலும் சொல்றதுக்கு அப்பா, அம்மா இல்லை. உங்க வீட்ல எப்படி செய்யணும்னு சொல்லிட்டா சீக்கிரம் கல்யாணம் வச்சுடலாம். கமலா அத்தை கிட்ட கேட்டு செஞ்சுடுவோம்” என்று அடுத்து அடுத்து நடக்க வேண்டியதைப் பேச, ராஜதுரை இன்னும் பெரியப்பாவிடம் பெட்டிஷனே போடவில்லையே.
“உங்க பெரியப்பா இதுக்கு ஒத்துப்பாரா?” என்று கேட்டு ஆராய்ச்சியாகப் பார்த்தான் அரி.
ராஜதுரைக்கு உண்மையை சொல்ல முடியவில்லை. பொய் சொல்ல வரவில்லை.
“அவர் ஒத்துப்பாருனு எனக்குத் தோணல. ஆனா ஒன்னு என் தங்கச்சியை ஏமாத்தவெல்லாம் முடியாது. உங்க பெரியப்பா ஒத்துக்காம வேற பொண்ணு எல்லாம் பார்த்தா தாரா சும்மா இருக்க மாட்டா. அவளோட மட்டும்தான் உங்க கல்யாணம் நடக்க விடுவா” என்றான் அழுத்தமாக.
“என்னை பார்த்தா ஏமாத்துற மாதிரி தெரியுதா உங்களுக்கு?” என்று கொஞ்சம் கோபத்துடனே கேட்டான் ராஜதுரை.
“இத்தனை நாள் தாராவை பிடிச்சும் உங்களை நீங்களே ஏமாத்திட்டு தானே இருந்தீங்க?” என்று அரி சரியாகப் பேச, அவனை ஏன் அறிவு வில்லங்கம் என்று சொல்கிறான் என்ற காரணம் புரிந்தது. ஒரே நொடியில் குற்றவாளியாக உணர வைத்தான் வக்கீல்.
ராஜதுரை அமைதியாக அவனைப் பார்க்க, “தாராவுக்கு உங்களோட செட் ஆகுமா.?. ப்ச் எனக்குத் தெரியல. ஆனா அவ முடிவெடுத்துட்டா. உங்களால அவளை சமாளிக்க முடிஞ்சிட்டா எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை” என்று அரிச்சந்திரன் மனத்தில் உள்ளதை சொன்னான்.
“உங்க தங்கச்சி என் மனைவியான பின்னாடி நான் அவளை நல்லா பார்த்துப்பேன். நீங்க எங்களை நினைச்சு கவலை பட வேண்டாம். நானும் அக்கா தங்கச்சியோட பொறந்தவன்தான்” என்றான் துரை.
“உங்க தங்கச்சி பத்தி ஒன்னும் கேட்கவே இல்லை” அரிச்சந்திரன் புருவம் உயர்த்தி தாடையை தடவிக்கொண்டு ஆராய்ந்து கேட்க
“ஏன்னா நீங்க ஒரு தங்கச்சிக்கு அண்ணன். மைதிலி விட்டுக்கார் மேல எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனா உங்க மேல இருக்கு.” என்று துரை சொல்ல அரியின் கண்கள் புன்னகையில் விரிந்தன.
“அவங்க நல்லா இருக்காங்க” என்றதற்கு துரையிடம் பதில் பேச்சு இல்லை.
“அறிவு அப்பாவை விட்டு உங்க பெரியப்பா கிட்ட எங்க சார்பா பேச சொல்றேன், அவர்தான் சரியான ஆளு” என்று அரி சொல்ல, இவனுக்கு எல்லாரையும் தெரிகிறது என்று பார்த்தான் ராஜதுரை.
“அப்புறம் மாப்ள சார், உங்க மனைவியானாலும் காலத்துக்கும் அவ என் தங்கச்சி!” என்றான் அரிச்சந்திரன். துரை தலையசைத்து சின்ன சிரிப்புடன் ஆமோதித்தான்.
“சரி, லேட் ஆச்சு! நான் கிளம்புறேன்” என்று துரை எழ, அரி
“நீங்க சொல்லாம போய்ட்டா நடுராத்திரி உங்க வீட்டு முன்னாடி வந்து நிப்பா” என்று சொல்லும்போதே தாரகை அண்ணன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவள் வரவும் அரிச்சந்திரன் உள்ளே போய்விட்டான்.
“நான் சொன்னேன்ல என் அண்ணா டீசண்ட்” என்ற தாரகை இப்போது ராஜதுரை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
“அம்மாடி! தள்ளி உட்காரு” என்றதும் இன்னும் நெருங்கி உட்கார்ந்து அவனை டென்ஷன் செய்தாள்.
“என்ன பேசுனீங்க?” என்று தாரகை கேட்க ராஜதுரை எல்லாம் சொல்ல கேட்டுக்கொண்டவள்
“எங்க அண்ணனை இவ்வளவு மரியாதையைப் பேசுற?” என்று துரையிடம் சந்தேகமாகக் கேட்டாள் தாரகை.
“அது உன் அண்ணனுக்கு தைரியம் ஜாஸ்தி, அவன் மேல எனக்கு மைதிலி விஷயத்துல முன்னாடி ரொம்ப கோவம்தான். ஏன் உன் மேல கூடத்தான். ஆனா அது இப்போ இல்லையே, அதைவிட எனக்கு ஆச்சர்யமா இருக்கும். முன்னாடி அறிவு கிட்ட கூட சொல்லியிருக்கேன், என்னால என் அப்பாவோட டெத் இன்னும் மறக்கவே முடியல. நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தாலும் அது மனசுல தேங்கியே கிடக்கும். ஆனா உன் அண்ணா நிலைமை என்னை விட மோசம்.”
“எனக்கு பெரியப்பான்னு ஒருத்தர் இருக்கார். உன் அண்ணா வயசான தாத்தாவை, தங்கச்சியைப் பார்த்துட்டு இருக்கான். அதுவும் இப்ப பரவாயில்லை, அப்போ அவன் காலேஜ்தானே படிச்சிருப்பான். அதனால அவன் மேல எனக்கு மரியாதை எப்பவும் இருக்கு” என்று ராஜதுரை சொல்ல தாரகை
“எஸ்” என்றாள்.
துரை, “லேட்டாச்சு, நான் காலையில் உரம் போடணும். கிளம்புறேன் தாரக” என்று எழுந்து கொள்ள, தாரகையும் மணியைப் பார்க்க பன்னிரெண்டு ஆக சில நிமிடங்கள் இருந்தது.
கோபத்துடன், “ஆக மொத்தம் உன் பெரியப்பாவைப் பத்தி பேச இன்னிக்கு என்னை பார்க்க வந்திருக்க, ஒகே பை” என்று அவளும் வழியனுப்ப, துரைக்கும் தாரகையுடனான பொழுதுகள் எல்லாம் நீளவே எண்ணம்.
தாரகை போல் அவனுக்கிருக்கும் அதிக ஆவலை, அவள் மீதான காதலை வார்த்தையால் வெளிக்காட்டவோ வெளிப்படுத்தவோ வரவில்லை.
கேட் அருகே நின்றவன் தாரகையைப் பார்த்து தனக்குள் நிறைத்தான். தாரகை கேட்டை மூட அங்கேயே நிற்க, ஈரம் சுமந்திருந்தது இரவுக்காற்று. கையெட்டும் தூரத்தில் காதல் தாரகை!
தாரகையின் விழிகளில் இவன் விட்டு செல்கிறான் என்ற கோபம் தெரிந்தது. துரைக்கு எந்த மொழியும் வழியும் தெரியவில்லை அவன் காதலை அக்கணம் சொல்ல. தாரகையின் கையைப் பிடித்தவன், தன்னை கட்டுப்படுத்தாது தலைவியைக் கட்டிக்கொண்டான்.
மிக மிக நெருக்கமான நிலை, இறுக்கமான அணைப்பு. தாரகை துரையின் செயலை எதிர்ப்பார்க்கவே இல்லை.
“பெரியப்பாவுக்காக இல்லை, உனக்காக! உன்னைப் பார்க்கணும்னு எனக்காக வந்தேன். எனக்கு சொல்ல முடியல, அவ்வளவோ இருக்கு மனசுல உன்னை அவ்வளவு பிடிச்சிருக்கு! ஆனா வார்த்தைதான் வரலடி” என்று காதருகே சொன்னவனுக்கு பெண்ணருகே முதல் நெருக்கம்.
இருவருக்கும் முற்றாமல் வற்றாமல் முழு மயக்கம்!
சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது திறந்து
பார்க்க நேரம் வந்தது
இப்போது!
✅ End of Episode 26
Nice
சொல்லுக்கும்
Nice