Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 16

ராஜதுரை கண்களை மூடி வலியில் சாய்ந்து உட்கார்ந்தவன் எரிச்சல் மிகுந்த குரலில்

“சும்மா தொண தொணங்கிற! எதுக்கு வந்தேன்னா நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன். எங்கப்பா இறந்த நாள் இன்னிக்கு. அதான் அதுக்கும் நீ விடலையே” என்று கத்தினான்.

அவன் சத்தம் போடவும் தாரகையின் முகம் சுருங்கிவிட்டது. கோபமாக கத்த வந்தவள் அவன் அப்பாவின் நினைவு நாள் என்றதும் அமைதியாகிவிட்டாள். அவனுக்கு ஆறுதலை விட அமைதி தேவை என்று புரிந்தவள் பதில் பேசாது எழுந்து போனாள். இரண்டு அடி வைத்திருப்பாள்.

சடசடவென பெருந்தூறல்! இடி மின்னலுடன் கனத்த மழை. நொடிகளில் பெருமழையாய் இருவரையும் நனைத்தது. மின்னலும் இடியும் நொடிக்கு நொடிக்கு அதிகரித்தது. ராஜதுரையும் மழையினால் எழ, அவனைப் பார்த்தபடி நின்றாள் தாரகை.

“மழை பெய்யுது, போகாம என்ன நிக்கிற நீ?” என்று அவளிடம் கேட்க,

“இந்த மழையில நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க? எங்க வீட்டுக்கு வாங்க” என்றாள். அவள் வீடு அய்யனார் கோவிலுக்கு எதிரில் இரண்டு வீடுகள் தள்ளி இருந்தது. அவன் வீட்டுக்கு பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். அதுவும் அடித்து ஊத்தும் மழையில் அது மிகவும் கடினம்.

மழை மட்டுமென்றால் பரவாயில்லை. காற்று வேகமாக வீசியது. அந்த புயல்காற்றில் மரங்கள் எல்லாம் வேகமாய் ஆடின, எந்த நேரம் வேண்டுமானால் கிளை முறிந்து சாயலாம். அதை உணர்ந்து தாரகை உதவ நினைத்து அவனை அழைக்க, அவனோ வேறு சிந்தனையில்

“வேண்டாம், நீ போ” என்றான்.

“இந்த சமயத்துல கூட எங்க வீட்டுக்கு வர மாட்டீயா நீ? அவ்வளவு..” என்று ஆரம்பித்தவளிடம்

“எதுக்கெடுத்தாலும் மைக் பிடிச்சிருவா, பேசாம வாடி” என்று எரிச்சலுடன் சொல்லி அவள் வீட்டுக்கு நடந்தான். இரண்டே நிமிடங்களில் அவள் வீடு வந்தடைந்தனர். இருளில் மூழ்கி இருந்தது வீடு. மின்சாரம் இல்லா நேரத்திலும் ஒளிரும் ஒரு வெள்ளை பல்ப் மட்டும் எரிந்தது.

தாரகை, “தாத்தா!” என்று குரல் கொடுக்க

“ராஜாத்தி! வாடா” என்றார் ராமசாமி.

“உன்னைத்தான் காணும் நினைச்சேன், நல்ல வேளை வந்துட்ட. எப்படி மழை அடிச்சு ஊத்துது பாரேன்.” என்று புலம்பினார்.

“ஒரு நிமிஷம் தாத்தா, அவர் எங்க?” என்று வெளியே வர, திண்ணையில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தான் ராஜதுரை.

“உள்ள வாங்க” என்று அவள் அழைக்க, அவன் மறுத்தான். இவள் முறைத்தபடி ஏதோ பேச வர

“மொத்தமா நனைஞ்சிருக்கேன், வீடெல்லாம் ஈரமாகிடும். இங்கேயே இருக்கேன் ” என்றான்.

“யாரும்மா தாரா?” என்று ராமசாமி சத்தமாகக் கேட்க ராஜதுரையே

“பன்னீர் தம்பி பையன் தாத்தா” என்று சொன்னான்.

“பெருமாள் மகனா?” என்று தாத்தா கேட்க

“ஆமா தாத்தா” என்றான்.

“உள்ளே வா டா” என்று தாத்தா அழைக்க

“அவர் வீட்டுக்குள்ள வந்தா வெள்ளம் வந்துடுமாம்” என்றாள் தாரகை.

“ஏய்யா, உள்ள வா. அடிச்சு ஊத்துற சாரல்ல வெளியே நிக்கிற, உள்ள வாடாப்பா. வீடு ஒன்னும் கரைஞ்சுப் போகாது” என்றார் ராமசாமி.

“சொன்னா நனைஞ்சுட்டேன், வரலனு சொல்றார் தாத்தா” என்று தாரகை சொல்ல,

“அப்படி என்னடா உனக்கு வீம்பு?” என்று தாத்தா வெளியே எழுந்து வந்தார்.

“ராமசாமி வீட்டுக்கு வந்து ஒருத்தன் மழையில நனையலாமா? உன் அண்ணன் சட்டை எடுத்துக் கொடு. ஏண்டா இப்படி நனைஞ்சிருக்க, சாரல்ல வேற உட்கார்ந்திருக்க? உள்ள வா. தலையைத் துடை” என்று சொல்ல, வயதில் பெரியவர் சொல்ல மறுக்க முடியவில்லை.

“தாத்தா, மழை விட்டா வீட்டுக்கு ஓடிருவேன், எதுக்கு இதெல்லாம்” என்று மறுத்துப் பார்த்தாலும் ராமசாமி அங்கேயே நிற்க, வேறு வழியின்றி வீட்டினுள் வந்தான். தாரகை துண்டு கொடுக்க, தலையைத் துவட்டியவன் திருப்பிக் கொடுத்தான்.

“டிரஸ் மாத்திக்கோங்க” என்று சொல்ல

“ப்ளீஸ், எனக்கு வேண்டாம். காஞ்சிடும், எனக்கு அன்ஈசியா இருக்கும் தாரக” என்றிட, தாரகை அப்படியே விட்டுவிட்டாள். ஹால் செல்ஃபில் தேடி துழாவி கோடாரி தைலம்(axe oil) எடுத்தவள் அதனை அவனிடம் கொடுத்தாள்.

“நெத்தி புடைச்சிப்போயிடும், இதைப் போடுங்க” என்று நீட்ட, வலி தாங்காதவன் வாங்கிக் கொண்டான். ராமசாமி இன்னும் வெளியே நிற்க தாரகை முறைத்தபடி வெளியே வந்தாள்.

“ஏன் தாத்தா உள்ள வரமாட்டீங்களா நீங்க?” என்று அதட்ட

“மழை எப்படி பெய்யுதுனு பார்த்தேன் ராஜாத்தி” என்றார் புன்னகையுடன்.

“வானத்துல இருந்து பெஞ்சு வாய்க்கால்ல போவுது, பெரிய ஆராய்ச்சி பண்றார். வயசான காலத்துல வழுக்கி விழாம வா தாத்தா” என்று சொல்ல

“இந்த பயலை நீ எங்க பார்த்த?” என்று கேட்டார் ராமசாமி.

“அய்யனார் கோவில்ல தாத்தா. இன்னிக்கு அவங்க அப்பா இறந்த நாளாம். தனியா இருந்தார், மழை பெய்யவும் நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டேன்” என்றிட

“சரிடா ராஜாத்தி” என்றவர் மெல்ல அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஹால் சென்றார்.

“தைலம் வாசம் வருது” என்று தாத்தா கேட்டிட,

“கரெண்ட் போனதும் கோவில் தூண்ல இடிச்சிட்டார், அதான்” என்று பதில் சொன்னாள் தாரகை.

“டீ போடேன் ராஜாத்தி” என்று தாத்தா சொல்ல

“டீயா காஃபியா?” என்று தாரகை துரையிடம் கேட்க

“டீயே ஓகே” என்றான்.

தாரகை உள்ளே சென்றிட துரையைப் பார்த்த ராமசாமி, “புள்ளைங்களை வயசான காலத்துல பறிகொடுத்துட்டு வாழ்ற மாதிரி, பெத்தவங்களை வயசு உள்ள காலத்துல பறிகொடுக்கிறது பெரிய கொடுமைடா தம்பி” என்றார் அவனிடம்.

அவன் அமைதியாக அப்பாவின் நினைவில் இருந்தான். அப்பா இருந்தவரை எல்லாவற்றிற்கும் அப்பாவுடன் சுற்றுவான். ஒரே மகன் என்பதால் கலியபெருமாள், பன்னீர் இருவருக்கும் ராஜதுரை மிகவும் ப்ரியமானவன். ஆனால் குடும்பத்தை விட பஞ்சாயத்து என்று பன்னீர் சுற்ற, அப்போதெல்லாம் பெரியப்பாவுடன் பெரிய நெருக்கமில்லை துரைக்கு.

அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரி சேர காத்திருந்த சமயத்தில் அவன் தந்தை சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதுவும் தவறு அவர் மீதுதான், குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருந்ததால் விபத்து.

“இப்ப என்னடா பண்ற நீ? கமலா மவன் கூட தானே படிச்ச நீ?” என்று தாத்தா கேட்க

“ஆமா தாத்தா. இப்ப எங்க வயல்ல விவசாயம் பண்றேன்” என்றான் ராஜதுரை.

“பரவாயில்லையே, இந்த காலத்துல படிச்ச புள்ள விவசாயம் பண்றியே? என்ன போட்டிருக்க?” என்றதும்

“உளுந்து தாத்தா, நேத்துதான் விதைச்சேன்” என்றதும் அவன் மனம் புரிந்தது.

“கவலைப்படாதப்பா, மழை விட்டா தண்ணி நிக்கலன்னா ஒன்னும் ஆவாது” என்று தாத்தா ஆறுதலாக சொல்ல

“இந்த மழை நினைச்சா வராது, நினைக்காதப்ப வந்து வாட்டியெடுக்கும்.” என்றான் வருத்தமாக. ஏற்கெனவே அப்பாவின் நினைவில் வருந்தி வறண்ட மனத்தினை மழை வந்து நனைத்து இன்னும் வாட செய்தது.

ஈரம் தரும் மழைக்கு சில நேரம் ஈரமிருப்பதில்லை என்று நினைத்தான். ராமசாமியின் வேதனை அவனுக்குப் புரிந்தது, உணர முடிந்தது.

சிலரின் கொள்கைகள், கருத்துகள், சந்தோஷங்கள் பிடிபடாமல் போகலாம், பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் சோகம், அந்த பிரிவு தரும் உணர்வினை உணர்ந்தவர்களுக்கு அடுத்தவரினுணர்வு நிச்சயம் பிடிபடும்! ராமசாமி நீர் நிறைந்த அவர் கண்களைத் துடைத்தபடி, ஒற்றைக் கையால் ராஜதுரையின் கன்னம் வருடினார்.

இப்போது துரைக்கு இறந்து போன தாத்தாவின் நினைவு வந்தது, இப்படித்தான் வாழ்வில் நாம் சந்திக்கும் யாரோ ஒருவர் நம்மை விட்டு பிரிந்து போன உறவை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

“தாத்தா, பிஸ்கெட் வேணுமா” என்ற தாராவின் குரலில்

“வேண்டாம்மா” என்ற ராமசாமி ராஜதுரையிடம் ரகசிய குரலில்,

“என் பேத்தி டீ கொஞ்சம் சுமாராத்தான் இருக்கும். என் பேரன் நல்லா போடுவான், ஆனா நீ நல்லாயிருக்குனுதான் சொல்லனும், என்ன?” என்று அவனை மிரட்டினார். அதில் அவ்வளவு நேரம் இருந்த அழுத்தமான மன நிலை மாறி லேசாய் ஒரு சிரிப்பு அவனிடம்.

“உங்க பேத்தி உண்மை நேர்மைனு சொல்லுவா, நீங்க என்ன தாத்தா இப்படி சொல்றீங்க?” என்று கிண்டல் செய்தான். அதற்குள் தாரகை டீயுடன் வர, டீயைப் பருகினான். மோசமில்லை, ருசியும் அதிகமில்லை. குடிக்கும் பக்குவத்தில் இருந்தது.

ராமசாமிக்குக் களைப்பாக இருக்க “என்னை ரூம்ல கொண்டு விடு ராஜாத்தி, அசதியா இருக்கு” என்றதும் அவரை அறைக்கு அழைத்து சென்றாள். ஹாலில் இருவர் மட்டும் இருக்க, அவள் வீட்டுக்கு அழைத்து வந்ததால் தாரகையே பேச்சுக் கொடுத்தாள்.

“கரெண்ட் இருந்திருந்தா இந்த மழைக்கு சூடா எதாவது சாப்பிட்டிருக்கலாம்” என்று வெளியே வேடிக்கைப் பார்த்தபடி தாரகை சொல்ல, ராஜதுரை முறைத்தான் அவளை.

அந்த மெல்லிய வெளிச்சத்தில் ஓரப்பார்வையில் அவன் முறைப்பது தெரிய “ஏன் நீங்க சாப்பிட மாட்டீங்களா?” என்றாள்.

ஹாலில் இருந்து பார்த்தாலே வெளியே கொட்டிய மழை தெரிந்தது. அப்படி ஒரு பெருமழை! அவர்கள் வீட்டு வாசலில் நீர் ஆறாய் ஓடியது. அதையெல்லாம் பார்க்க பார்க்க, அவன் விதைத்த உளுந்தை நினைத்து உள்ளத்தில் பரிதவித்தான்.

“மணிரத்னம் ஃபேன் அஹ் நீ? டிரெயின் ரெயின்னு” என்றான் கடுப்பாக.

“மழையைப் பிடிக்காதா?” என்றாள் ஆச்சர்யமாக.

“வேண்டாத நேரத்தில வந்தா பிடிக்காது”

“இயற்கை சார், அது இஷ்டப்படிதான் வரும்”

“இயற்கை, கருணையே இல்லாதது!” என்றான் கோபத்துடன்.

“ஏன் இப்படி?” என்று தாரகைக் கேட்டாள்.

அவனுக்கு அவ்வளவு கோபமாய் இருந்தது. இந்த மழை விடவில்லையென்றால் அவன் மீண்டும் உழுது பயிர் விதைக்க வேண்டும்.

“நேத்தைக்குத்தான் உளுந்து போட்டோம், இன்னிக்கு இப்படி ஒரு மழை, நினைக்கிற நேரம் வராம படுத்தும். இப்ப யார் அழுதா மழை இல்லைனு” என்றான் ஆதங்கத்துடன்.

“எனக்கு விவசாயமெல்லாம் தெரியாது, மழை பெஞ்சா நல்லதுதானே? விளைச்சல் நல்லா இருக்காதா?”

“மழையோ வெயிலோ நிலத்துக்குத் தேவையானப்ப வந்தாதான் அதுக்கு நல்லது. நேத்துதான் விதைச்சிருக்கு, உளுந்து அழுகிடும் தண்ணீ தேங்கினா. இப்ப திரும்பவும் உழுது விதைக்கனும். ஏழு வேலை..” என்றான் எரிச்சலாக.

“இதுல இன்னும் இந்த மழை விடல” என்றான் தலையைத் தேய்த்தபடி.

“சரி சரி டோண்ட் வரி, மழை நின்னுடும்”

அவள் சட்டென்று அப்படி சொல்லவும் ராஜதுரையிடம் சின்ன புன்னகை.

“சொன்னதும் நின்னுடுமா?” கேலியாக அவன் கேள்வி வர,

“மழை நிக்குதோ இல்லையோ அட்லீஸ்ட் உங்க மனசு ரிலாக்ஸ் ஆகும்ல” என்று தாரகை சொல்ல அவள் மனத்தினால், இவன் மனத்தில் மழை பெய்யச் செய்தாள்.

✅ End of Episode 16
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Mrs Beena loganathan Reader 3 months ago

ஆற்றாமையில் இருப்பவனுக்கு

ஆறுதல் வார்த்தை
ஆயிரம் பலம்.....
❤️ 1 more...
Srichitra Reader 3 months ago

Nice 

❤️ 1 more...
Radhi Reader 2 months ago

Nice 

Kavi Natarajan Reader 2 months ago

Nice ud ma 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top