Episode 1
“காதல் திருமணம் செஞ்சுக்க எல்லாருக்கும் உரிமை இருக்கு, காக்கா, குருவி, குரங்கு, கழுத கூட அதோட இணைய அதுவே தேடிக்குது! ஆறறிவு உள்ள மனுஷங்க, அவங்களா தேடினா என்ன தப்பு?”
“காக்காவும் குருவியும் அதோட குழந்தைகளை பறக்க ஆரம்பிச்சதுமே விட்டுடும், ஆனா மனுஷங்க வாழ்க்கையே அவங்க பெத்த பிள்ளைகள ஆதாரமா வைச்சுத்தானே? அப்போ வளர்ந்த பின்னாடி பெத்தவங்க பேச்சைக் கேட்கிறதுல என்னங்க சார் தப்பு?”
“பேச்சைக் கேட்கிறதுல தப்பில்ல சார். ஆனா அவங்க அதிகாரத்துக்குக் கட்டுப்படனும் நினைக்கிறது எந்த வகையில் நியாயம்?”
“காதலிச்சா வீட்டை விட்டு ஓடாம, பெத்தவங்களைப் பேசி சரி பண்ணனும்ங்க நீங்க, சொல்லி புரியவைக்காம அப்படி என்னங்க அவசரம் உங்க காதலுக்கு?” காட்டமாகக் கேள்வி விழ
“சொல்லி புரிய வைக்க முடிஞ்சா ஏன் ஓடுறாங்க? காதல்னாலே கண்ணுக்குத் தெரியாம கவுரவம்னு ஒன்னைத் தூக்கி வந்து ஆணவக் கொலைப் பண்றாங்க, இதே மாதிரி ஒரு நிகழ்ச்சில எங்க ஜாதி பொண்ணை லவ் பண்ணினான். அதான் கொன்னொம்னு சொன்னாரு ஒரு ஆளு, இங்க அரசியல்ல இருந்து ஆன்மீகம் வரைக்கும் ஜாதி வேணும்ங்க, அதை தடுக்கிற காதலை இவங்க ஒடுக்குறாங்க”
“இரண்டு பக்கமும் அவங்க அவங்க கருத்துகளைப் பதிவு பண்றாங்க, நான் உங்க கோட் கோபால், இது டைகர் டேட்ஸ் வழங்கும் நானா? நீயா?” என்று கோட் கோபால் தொலைக்காட்சியில் பேசிக்கொண்டு இருக்கும்போதே கோபத்துடன் பல்லைக் கடித்தபடி டீவியை ரீமோட் கொண்டு நிறுத்தினான் ராஜதுரை.
“என்ன கண்றாவி இது, காதல்னு இதெல்லாம் பார்க்கிறது பெரியப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான் பெரியம்மா, மைதிலி என்ன இது?” என்று அங்கே மதிய சமையலுக்குத் தேவையானவைற்றை அரிந்தபடி டீவி பார்த்த பெரியம்மா, அவரின் மகள் மைதிலி எல்லாரையும் பேசினான் துரை.
“நான் சும்மா டீவில ஓடுச்சுன்னு பார்த்தேன், ப்ரோக்ராம்தானே ணே?” என்று மைதிலி முகத்தினைப் பாவமாக வைத்துக் கேட்க,
“என்ன சும்மா ஓடுச்சு? இவன் காசுக்காகக் கண்டதையும் போடுவான், இந்த டீவி நிகழ்ச்சி எல்லாம் ஒழிக்கனும். இதாலயும் அந்த போன்’னாலையும் தான் எல்லாரும் கெட்டுப் போறாங்க, எல்லாம் சொல்லி வைச்சுப் பேசுறது, ஜாதியில்ல, காதல் முக்கியம்னு பேசுறவன் வீட்ல வேற ஜாதிக்காரைப் பொண்ணு லவ் பண்ணுது சொன்னா தெரியும். அவனுங்க லட்சணம்” என்று சீறினான் ராஜதுரை.
“விடுடா ராஜா! ஏதோ லீவ்வு. டீவில போட்டதைப் பார்த்துட்டா, என்ன இப்போ? உங்க பெரியப்பன் மாதிரி குதிக்காத” என்று அதட்டினார் பெரியம்மா சரோஜா.
“நமக்குத் தெரியும் பெரியம்மா, நம்ம புள்ளைங்களைப் பத்தி, ஆனா பெரியப்பா அதெல்லாம் யோசிக்க மாட்டாரு. அவரு இதைப் பார்த்தா வீணா தங்கச்சியை சத்தம் போடுவாரு. அதுக்குத்தான் சொன்னேன்” என்ற ராஜதுரையிடம்,
“சரிண்ணா, எனக்குப் புரியுது!” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனாள் மைதிலி. மைதிலி உள்ளே செல்லவும் ராஜா,
“அம்மா எங்க?” என்றான் அந்த பேச்சை விடுத்து.
“இன்னிக்கு காத்தான் கோவில்ல கிடா வெட்டுடா, நம்ம சாவித்திரி வீட்ல பூஜை. அங்க போய்ட்டா” என்றார் சரோஜா.
“வெடி எப்பவோ போட்டாங்களே, இன்னேரம் பந்தி ஆரம்பிச்சிருக்கும்ல” என்ற துரையை முறைப்புடன் பார்த்த சரோஜா,
“உனக்கும் மைதிலுக்கும்தான் இன்னைக்குக் கோழி அடிச்சிருக்கேன், ஒழுங்கா வீட்ல சாப்பிடனும்.” என்றார் மிரட்டலாக.
“அட சும்மா கேட்டேன் பெரியம்மா. அம்மாவை அழைக்கப் போகனுமே..” என்று அவன் யோசனையாக சொல்ல,
“நம்ம தெருவுக்கே வேன் வந்துட்டுப் போச்சு, அவ அதுல வந்துடுவா. நீ இன்னிக்காச்சும் வீட்ல இரு” என்றார்.
“சரி, இருந்துட்டா போச்சு” என்றவன் அவர்கள் நடுவீட்டில் கிடந்த மர சோஃபாவில் அப்படியே படுத்தான்.
“பெரியப்பா எங்க?”
“அவரு என்னைக்குடா சொல்லிட்டுப் போயிருக்காரு” என்று சரோஜா கடுப்பாக சலித்துக்கொண்டார்.
“சரி, குழம்பு வைச்சிட்டு கூப்பிடு பெரியம்மா” என்று சொல்லி அப்படியே கண்ணயர்ந்தான் ராஜதுரை.
ராஜதுரையின் பெரியப்பா பன்னீர்செல்வம். அவரின் தம்பி கலியபெருமாள். துரைக்குப் பதினேழு வயது இருக்கும்போது கலியபெருமாள் உயிர்விட்டார். பன்னீருக்கு இரண்டு பெண்கள், பெரியவள் சுமித்ராவை மன்னார்குடியில் கட்டிக்கொடுத்திருக்க, இவர்கள் இருப்பது திருவாரூர் டவுன் அருகே உள்ள கிராமம். இவன் ஒரே மகன்! அப்போதிலிருந்து ஒரே குடும்பம்தான்.
உறங்கிக் கொண்டு இருந்த துரைக்குப் பன்னீரிடமிருந்து போனில் அழைப்புவர, எடுத்துப் பேசியவன்
“வரேன் பெரியப்பா, வீட்லதான்” என்றவன் லுங்கியிலிருந்து வேஷ்டிக்கு மாறியபடி,
“பெரியப்பா கூப்பிடுறார், வந்துடுறேன் பெரியம்மாவ்” என்று குரல் கொடுத்தவன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
மதியம் பன்னிரெண்டு மணி போல் சென்றவன், வரும்போது மணி மூன்று.
“என்னடா சாப்பிடாம எங்க போன நீ?” உள்ளே நுழையும்போதே திண்ணையில் வைத்துக் கேள்வி கேட்டார் அவன் அம்மா அருணா.
“அது ஒரு பஞ்சாயத்தும்மா, நம்ம சக்ரவர்த்தியண்ணனுக்கும் வடிவேலுக்கும் தகராறு, பெரியப்பா சமரசம் பேச போனார். அதான் என்னையும் கூப்பிட்டார், கிடா விருந்தெல்லாம் எப்படி போச்சு?” என்று கேட்டான்.
“அதெல்லாம் நல்லா சிறப்பா பண்ணிட்டாங்க, உனக்கும் காலாகாலத்துல கல்யாணம் பண்ணீட்டா, நாமளும் ஒரு கெடா விருந்து வைக்கலாம்” என்று அருணா சொல்ல,
“என்ன வயசு எனக்கு? இருபத்தேழுதானே மா, பறக்குற. மைதிலி இந்த வருஷம் படிப்பு முடிச்சிருவா, அப்பறம் நான் கல்யாணம் கட்டிக்கிறேன்” என்றான்.
“இன்னும் பேசிட்டே அங்க நிக்கிற, உள்ளே வாடா ராஜா. உனக்கும் உன் பெரியப்பாருக்கும் ஒரு பிரச்சனைதான். வீட்ல நேரத்துக்கு சமைக்கலன்னா குதிப்பீங்க, ஆக்கிவைச்சிட்டு நான் காவ காக்கனும்” என்றார் சரோஜா கடுப்பாக.
“நீங்க போய் படுங்கக்கா, நாந்தான் இவனுக்கு சோறு போடுறேன் சொன்னேனே” என்றார் அருணா.
“என்னத்த போய் இப்ப நான் படுக்கிறது, கண் அசரும்போது சரோசான்னு சவுண்டுவிட்டு பெருசு வந்துடும், என் தூக்கம் போயிடும்.” என்று புலம்பினார். அம்மாவும் மகனும் சன்னமாக சிரித்தனர். இந்த பேச்செல்லாம் பன்னீர் வரும்வரையே, வந்துவிட்டால் எல்லாரும் அமைதிதான்!
“எங்கடா சாப்பிடாம போற?” என்று அருணா மகனைக் கேட்க,
“இருட்டுன மாதிரி இருக்கு, வெளியே நெல் மூட்டை பால்கனி பக்கம் இருக்கு, ரூமுள்ளார வைச்சிட்டு வரேன்மா” என்று சொல்லி மாடியேறினான்.
அவர்கள் வீட்டில் வெளிப்பக்கம் மாடி, வீட்டின் இடப்பக்கம் மாடிப்படிகள் இருக்க, மாடியில் இரு அறைகள், ஒன்று ராஜதுரையினது. இன்னொன்று குடோன் போல, நெல் மூட்டைகள், சாக்குப் பைகள் எல்லாம் போட்டு வைப்பர். எதிர் எதிர் திசையில் அறைகள் இருக்க, நடுவே பால்கனி. அறைகளின் பாதையில் இரு பெரும் தூண். அறைக்கு வலப்பக்கம் மொட்டை மாடி.
வேகமாக படியேறியதில் வியர்த்திருக்க, அதை நெற்றியில் இருந்து துடைத்தவன்
“என்ன செய்ற மைதிலி?” என்று தங்கையை அதட்டினான்.
“ப்ரண்ட்கிட்டதான் பேசுறேன் அண்ணா” என்று மைதிலி சொல்ல,
“எப்போ பார்த்தாலும் போன்? ம்ம்., அதுவும் பால்கனியில நின்னுட்டுப் பேசுறியே? அக்கம் பக்கம் வீட்ல இருக்கவங்க எல்லாம் பார்க்க மாட்டாங்களா?” என்று கத்தினான்.
“இல்லை ப்ரண்ட்..” என்ற மைதிலிக்கு அண்ணன் பேசியதில் கண்கள் கலங்கியது. ராஜதுரை என்னதான் பாசமானவனாக இருந்தாலும், அவன் பேச்சை மீறினால் அவ்வளவுதான்! அதிலும் பெண்பிள்ளைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிறைய விதிமுறைகள்.
“நான் உன்னைத் தப்பா சொல்லல மைதிலி, தோ பாரு. அங்க கோமதி அத்தாச்சி வீட்ல இருந்து பார்த்தா கூட இந்த பொண்ணு மணிக்கணக்கா போன் பேசிட்டு நிக்குதுனு சொல்லுவாங்க, நம்ம கூட்டாளிங்கட்டதான் சும்மா பேசுவோம். ஆனா அவங்க தப்பா கதை திரிப்பாங்க. உனக்கு அண்ணன் சொல்றது கஷ்டமாதான் இருக்கும். ஏன் நம்ம குணா பெரியப்பா அவரே சந்தடி சாக்குல பெரியப்பாகிட்ட போய் உன் மக என்ன போன் பேசிட்டே இருக்குன்னு பத்த வைப்பார்மா” என்றதும் மைதிலி
“இனிமே பேசல” என்றாள் மெல்ல.
“பேசாதனு சொல்லவே இல்லை நான். உன் ரூம்ல பேசு. பெரியம்மா என்ன சொல்லப்போறாங்க. ரோட்ல வரும்போதே நீ இங்க நின்னு சிரிச்சுப் பேசுறது தெரியுது, பெரியப்பா பார்த்திருந்தா அவ்வளவுதான், போனை சல்லியா நொறுக்கிடுவார்”
இவன் பேச பேச மைதிலி கேட்டவள் அமைதியாகவே இருந்தாள். அண்ணன் இப்படித்தான் என்று தெரிந்தவள்.
“சரி ஏன் முகத்தை இப்படி வைச்சிருக்க, அண்ணன் உன் நல்லதுக்குதான் சொல்றேன்” என்று அதையும் கண்டிப்பாகவே சொல்லி அனுப்பியவன், மூட்டைகளைத் தூக்கி உள்ளே வைத்தான். அவன் அறைக்குச் சென்று குளித்தவன், மீண்டும் கீழே இறங்கி வந்த சமயம் நாட்டுக்கோழி குழம்பு கமகமத்தது.
“வாடா, துரை! எவ்வளவு நேரம்?” என்று பன்னீர் மகனைக் கேட்க,
“நச நசன்னு இருந்தது பெரியப்பா, அதான்” என்றவன் கையில் நாட்டுக்கோழி நர்த்தனம் ஆடியது. அவனுக்குப் பிடித்தது போல் காடை, மிளகு போட்டு அடுப்பில் சுட்டு சுட சுட வைத்திருக்க,
“பெரியம்மா,ம்ம்” என்று கண்களாலே பாராட்டினான்.
“அக்கா…” என்று அருணா சரோஜாவைப் பார்க்க,
“என்னங்க, நம்ம பயலுக்கு வயசாகுது. பொண்ணு பார்க்கனும். சாதகத்தை எடுத்துட்டு நம்ம பாமணி ஜோசியர்ட்ட போவோமா?” என்று கேட்டார். பன்னீர் பதில் சொல்லும் முன்னே
ராஜதுரை, “இல்லை பெரியம்மா, மைதிலுக்கு முதல்ல முடியட்டும்! தங்கச்சி இருக்கும்போது இதெல்லாம் சரிவராது” என்றவன் பார்வை அம்மாவை முறைத்தது.
“இவன் சொல்றதும் சரிதானேடி, வீட்ல புள்ளையை வைச்சிட்டு பயலுக்குக் கல்யாணம் பண்ணினா பிரச்சனைதான். பொண்ணை வைச்சிட்டு பண்ணினா பொண்ணு கொடுக்கவே யோசிப்பானுங்க” என்ற பன்னீர் சரோஜாவிடம்
“நீ இரண்டு பேர் ஜாதகத்தை எடுத்துட்டு ஒரு நாள் போய் பார்த்துட்டு வா, இன்னும் ஒரு மாசம் பரீட்சை இருக்குல்ல புள்ளைக்கு. அதுக்கு அப்புறம் பேசுவோம்” என்றதுடன் உண்டு முடித்து எழுந்துகொண்டார்.
சரோஜாவும் கணவர் பின்னே சென்றுவிட, அருணா மெல்ல மகனிடம்,
“டேய் ராஜா, இனிமே சும்மா பஞ்சாயத்துன்னு பெரியப்பா பின்னாடி சுத்தாத! பொண்ணு பார்க்க போகும்போது அந்த பயலா? பெரியப்பன் கூட பஞ்சாயத்துக்குப் போவான்னு பேச்சாகும்! ஏற்கனவே படிச்ச படிப்புக்கு நல்லா மெட்ராஸ்ல வேலை செய்யாம வயல்ல கிடக்குற, என் பேச்சை மதிக்கல. இதுவாச்சும் கேளுடா” என்றார். தலையைசைத்தாலும் ராஜதுரை நிச்சயம் கேட்கமாட்டான். அவனைப் பொருத்தவரை பெரியப்பா சொல்தான் வேதம்!!
******
‘தாரகை டாக்கீஸ்’ என்று ஜொலித்தது அந்த டிஜிட்டல் பெயர்ப்பலகை.
“டேய் வருவியா மாட்டியா? உன்னை நம்பி டிக்கெட் எடுத்து தொலைஞ்சிட்டேன், நாளைக்கு எனக்கு வேலையிருக்கு” என்று தன் நண்பன் அறிவிடம் பேசிக்கொண்டு இருந்தான் ராஜதுரை.
“வந்துட்டேன் இன்னும் இரண்டு நிமிஷம்” என்று சொல்லி வைத்தான் அறிவு.
துரை பஸ் பிடித்து திருவாரூர் டவுன் பக்கமிருக்கும், ராமசாமி தியேட்டர் வந்து இரவு காட்சி பார்ப்பதற்காக நண்பனுக்காகக் காத்திருந்தான்.
ராமசாமி தியேட்டர்தான் அதன் பழைய பெயர், இப்போதும் அந்த இடத்தின் அடையாளம் அதுவே, ஆனால் ராமசாமியின் பேத்தி தாரகைதான் அதனை நிர்வகிப்பது. அவள் பெயருக்கு எழுதி வைத்த ராமசாமி பெயரையும் கொஞ்சம் புதுமையாக மாற்றிவிட்டார்.
டிக்கெட்களுடன் காத்திருந்த துரை, வாகனங்கள் இருந்த இடத்தில் அறிவிற்காகக் காத்திருக்க அப்போது பார்த்து கறுப்பு நிற ஹோண்டா சிட்டி கார் உள்ளே வர, அதிலிருந்து இறங்கினாள் தாரகை.
அவளைப் பார்த்த துரையின் கண்களின் ஆராய்ச்சி. முட்டி வரை தொட்ட ஒரு டாப், கீழே ஒரு பட்டியாலா பேண்ட். அவள் இறங்கி அவனைக் கடந்து செல்ல, அவனை போல் அல்லாமல் சிலரின் பார்வை அவள் மேல் வேறு விதமாகப் படிய, பார்த்தவனுக்கு கடுப்பு.
விகல்பமாக இல்லாவிடினும் விமர்சனம் செய்யும் பார்வை!
‘ஒழுங்கா டிரஸ் பண்ணினா ஏன் இவனுங்க இப்படி பார்க்கிறானுங்க, ஒரு துப்பட்டா கூட போடல. இவ வீட்டாளுங்களை சொல்லனும், இவ்வளவு பெரிய தியேட்டரை ஒரு பொம்பளையை நம்பிக் கொடுத்திருக்காங்க” என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
தப்பியும் தாரகை எத்தனை திறம்பட அந்த திரையரங்கை நடத்துகிறாள், எவ்வளவு லாகவமாக காரை ஓட்டுகிறாள் என்ற எண்ணமெல்லாம் அவனிடமில்லை. அவனைப் பொறுத்தவரை பெண்கள் வீட்டிற்கு அழகு! பெண்களால் வீடுகள் அழகு!
இப்படி நின்றிருந்தவன் அறிவு வரவும் படம் பார்க்கச் சென்றனர். இருவரும் படம் முடித்து வெளியே வரும் சமயம் தாரகையும் காரை எடுக்க வந்தாள்.
ஹியர்போன் வழியே,
“வந்துட்டேன் டா பக்கி, எல்லா ஷோவும் முடிஞ்சது. நீ எனக்கு சூடா கிச்சடி பண்ணி வை. நோ நோ எனக்குக் கிச்சடிதான் வேணும் அண்ணா” என்று அந்த பக்கமிருந்த அவள் அண்ணன் அரிச்சந்திரனை மிரட்டிக்கொண்டிருந்தாள் தாரகை தயாளன்.
அறிவு வண்டியை உதைத்து உதைத்துப் பார்க்க, அது ஸ்டார்ட் ஆகவே இல்லை. அறிவு வண்டியோடு மல்லுக்கட்ட, தாரகை அவள் காரில் சாய்ந்தபடி அண்ணனிடம் பேசியதைப் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜதுரை.
“என்னடா என் மாமன் பொண்ணை சைட் அடிக்கிறியா? என் முறைப்பொண்ணு” என்று மிரட்ட
“அடிச்சீ! சைட் அடிச்சாலும் எனக்கு இப்படி பொண்ணெல்லாம் வேண்டாம். பொண்ணுன்னா கையெடுத்து கும்பிடற மாதிரி இருக்கனும். ஆளைப் பாரு” என்று பார்வையைத் திருப்பியவன் சலித்துக்கொண்டான்.
“அடப்பாவி, தாராவுக்கு என்னடா குறைச்சல்?” என்று கடுகடுவென்று கேட்டான் அறிவு.
“நீ வண்டியை எடு முதல்ல” என்று துரை அறிவிடம் சொல்ல,
“ஸ்டார்ட் ஆகித் தொலைக்க மாட்டேங்குதுடா பங்கு” என்றவனை முறைத்தான் துரை.
“உன்னை நம்பி நான் வண்டியில கூட வரல, உஸ்ஸ்!” என்று பெருமூச்சுவிட்டபடி துரையும் வண்டியைப் பார்த்தான்.
“சொல்லுடா தாராவுக்கு என்ன?” என்று துரையிடம் மீண்டும் கேட்டான் அறிவு.
“எனக்கு என்னமோ பிடிக்கல, பொம்பளங்க லட்சண்டமா சேலைக் கட்டனும், இல்லையா தாவணி. ஒரு சுடிதார் போடலாம். இவ டிரஸைப் பாரு. நான் வந்தப்பவே பார்த்தேன் பசங்க எல்லாம் ஒரு மாதிரி பார்க்குறாங்க, இவளுக்கு ஒரு அண்ணன் உண்டுதானே? எங்க மைதிலி சுடிதார் தவிர வெளியே இந்த மாதிரி டிரஸ்லாம் போடாது, துப்பட்டா கூட இல்லை” என்றான் ஒரு மாதிரி குரலில்.
“டிரஸை வைச்சு அவளை ஜட்ஜ் பண்ணுவியா?”
“பேச்சு மட்டும் என்னவாம், அண்ணனை அவன் இவன்ன்னு மரியாதை இல்லாம பேசுது. பொம்பளைப் புள்ளை இந்தா மணி பதினொன்னு ஆகப்போகுது, இங்க விட்டுட்டு அவ அண்ணனை கிச்சடி கிண்ட சொல்றா, அவனும் இவளைக் கேட்கல பாரு. பொண்ணா சங்கதியாவா இருக்கா?” என்று துரைப் பேச பேச,
“டேய், என்னடா எந்த காலத்துல இருக்க நீ?” என்று அறிவு நண்பனை முறைக்க,
“பெட்ரோல் போட்டியா டா பரதேசி நீ” என்று கேட்க,
“அது ராஜா, முந்தா நாள் போட்டதுன்னு நினைக்கிறேன்” என்றதும்
“பெட்ரோல் இல்லாம மாயாஜாலத்துலயா வண்டி ஓடும். பங்க் போகனும்னா அஞ்சு கிலோமிட்டர் உன் வண்டியைத் தள்ளனும். நீ எப்படியோ போ, நாளைக்கு நாங்க சோளம் விதைக்கனும். நான் பஸ் பிடிச்சிப் போறேன்” என்று ராஜதுரை கோபத்துடன் செல்ல பார்க்க,
“டேய் பங்காளி, இருடா! இன்னேரம் எல்லா பஸும் போயிருக்கும்” என்றவன் தாரகைக் காரை எடுப்பதைப் பார்த்தான்.
“ஓய்! தாரா” என்று அருகே சென்று அழைக்க,
“அட அறிவு மாமா” என்று தாராவும் புன்னகையுடன் அவளைப் பார்த்தாள்.
“வீட்டுக்குத்தானே போற, எங்களை ட்ராப் பண்ணிடுடி” என்று அறிவு கேட்க,
“ஓகே, வரேன்னு சொல்லவே இல்லை” என்றபடி கார் கதவைத் தாரகைத் திறக்க,
“சொன்னா மட்டும் மாமனுக்கு ஃபீரி டிக்கெட் கொடுக்க போறியா என்ன?” என்று கேட்டான் அறிவு.
“பிஸினஸ்ல நோ மாமா மச்சான்” என்று தாரகை சிரித்தவள் அவனருகே இறுக்கமாக நின்ற ராஜதுரையைப் பார்த்து, யார் என்று கண்களால் கேட்க,
“எங்க பங்காளிதான், மைதிலி தெரியுமா? அவங்க சித்தப்பா பையன்” என்றதும் தலையசைத்துக்கொண்டாள்.
தாரகைக்குத் துரையைப் பற்றி அறிமுகமே இல்லாது இருக்க, துரையோ அவளைப் பற்றி நிறைய அனுமானங்கள் வைத்திருப்பது அவளுக்குத் தெரியவில்லை.
“வா மாமா” என்று அவள் அழைக்க, அறிவின் காதில் துரையோ
“இந்த பொண்ணு வண்டி ஓட்டினா எல்லாம் நான் வரமாட்டேன்” என்று முரண்டு பிடித்தான்.
“டேய், அவ காரை அவதான் ஓட்டுவா. மரியாதையா வா” என்று அறிவு மல்லுக்கட்டி அவனை இழுத்துக் காரில் உட்காரவைத்தான்.
கொஞ்சமும் விருப்பமில்லாமல் அந்த பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கண்கள் மூடியே கடந்தான் ராஜதுரை. அதிலும் அறிவும் அவளும் பேச பேச, இவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அவர்கள் வீடு இருக்கும் தெரு வரவும்,
“நான் இங்கேயே இறங்கிக்கிறேன் அறிவு” என்றான்.
“அவங்க வீடு இங்கதானே? வீட்டுக்கிட்ட இறக்கிவிட்டுடுறேன் மாமா” என்று தாரகை சொல்ல, துரையோ நண்பனை முறைத்தான்.
அறிவும், “அங்க போனா நம்ம மறுபடி சுத்தி வரனும். இங்கேயே இறக்கிவிடு” என்றதும் ராஜதுரை இறங்கியவன்
“தேங்க்ஸ்” என்று சொல்லிப்போய்விட்டான்.
“உனக்கு இப்படி ஒரு ப்ரண்டா அறிவு மாமா? ஷை புள்ளையோ” என்று தாரகை சிரித்தபடி கேட்க,
“அவன் பொண்ணுங்க கிட்ட ரொம்ப பேச மாட்டான். அதுவும் உன்னை மாதிரி பொண்ணுன்னா அவனுக்கு ரொம்ப தூரம்..” என்றான் அறிவு.
“ஏன்?” என்று தாரகை கொஞ்சம் சந்தேகமாய் அறிவைப் பார்க்க,
“ஹேய் தப்பா எல்லாம் இல்லை, நீ மாடர்ன் மங்கை. அவன் ஒரு மண்மணம் மாறாத வாலிபன். அதாண்டி” என்றதும்
“ஓஹ்! தட் துப்பட்டா போடுங்க டோலி க்ரூப்” என்று சிரித்தாள் தாரகை.
‘அய்யயோ கரெக்டா சொல்றாளே, அவனும் இதேதான் சொன்னான் தெரிஞ்சா இந்த ரவுடி வீடு தேடி போய் சண்டை போடுவா’ என்று மனதில் அலறிய அறிவு, அந்த அலறலை அவன் அகத்திலே பூட்டிவைத்தான்.
அறிவின் அறிவுக்கோ அகத்திற்கோ அப்போது தெரியவில்லை, அவன் சொல்லாமலே இருவரும் சண்டையிட போகிறார்கள் என்று!
✅ End of Episode 1
Super 😍
வாங்க வாங்க மிஸ்டர் ராஜதுரை.....என்னோட boomer mate😍😍😍
Good
துப்பட்டா போடுங்க டோலி _ நாயகன்
🤣yes boomer nayagan
எப்படியோ site la vandhutten. Nice.
Welcome ma😍😍😍
Episode okay va padika?
Comfortable ah irka??
Letters konjam small aga therigirathu. Konjam fond perisu pannal thevali.
Sure ma. Will increase size from next episode 😀 @Srichitra
ராஜதுரை தாரகை 💕
Hi suryaa😍😍😍😍